இந்தியாவில் உயிருடன் பிறக்கும் குழந்தைகளில் 46% குழந்தைகள் குறைந்த எடையுடன் இருக்கின்றன. 5 அகவைக்குட்பட்ட சிறுவர்களில் 50% பேர் ஊட்டச் சத்துக் குறைபாடுகளுடன் உள்ளனர். ஊட்டச்சத்துக் குறைவு காரணமாக ஏற்படும் நோய்களால் ஆண்டிற்கு இருபது இலட்சம் சிறுவர்கள் இறக்கின்றனர். மூன்றில் இரண்டு பங்குப் பெண்கள் இரத்த சோகையுடன் இருக்கின்றனர். சகாரா பாலைவனத்தைச் சுற்றியுள்ள - கொடிய வறுமை தாண்டவமாடும் நாடுகளில் கூட இந்தியாவில் இருப்பது போன்ற அவல நிலை இல்லை. பசி, பட்டினி மிகுந்த நாடுகள் எனப் பட்டியலிடப்பட்டுள்ள 88 நாடுகளில் இந்தியா 66 ஆவது இடத்தில் உள்ளது.

ஆனால், மத்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் 178 இலட்சம் டன் கோதுமை மற்றும் அரிசி சரியான பராமரிப்பு இல்லாததால், மக்கிக் கொண்டிருக்கின்றன. இதில் 61 ஆயிரம் டன் தானியம் எதற்கும் பயன்படுத்த முடியாத அளவுக்குக் கெட்டு வீணாகிவிட்டது. 178 இலட்சம் டன் தானியம் 14 கோடி ஏழை எளிய மக்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான உணவாக அமையும் என்று மதிப்பிடப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் 13 இலட்சம் டன் தானியங்கள் மத்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் எலிகளாலும், பூச்சி நோய் தாக்குதலாலும், சரியான பராமரிப்பின்றியும் வீணாகி விட்டன.

ஒருபுறம் மக்கள் பட்டினியால் வாடிக் கொண்டிருக்க, மறுபுறம் இலட்சக்கணக்கான டன் தானியம் மக்கி வீணாகிக் கொண்டிருப்பதை அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டிப் பொது மக்கள் உரிமைக்கான மக்கள் இயக்கம் 2001ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. பொது வழங்கல் முறையை சீர் செய்து நியாய விலைக் கடைகள் மூலம் தானியங்கள் வீணாகாதவாறு மக்களுக்கு வழங்க வேண்டும் என்று நடுவண் அரசுக்கு உச்ச நீதி மன்றம் அறிவுறுத்தியது.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகும், இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் பெருமளவில் தானியங்கள் மக்கி வீணாவது குறித்து 2010இல் பொது மக்கள் உரிமைக்கான மக்கள் இயக்கம் மீண்டும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொகுத்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி தீபக்வர்மா, 12.08.2010 அன்று, கிடங்குகளில் தானியங்கள் மக்கி வீணாவதற்கு முன், அவற்றை ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுங்கள் என்று நடுவண் அரசுக்கு அறிவுறுத்தினர்.

நடுவண் அரசின் உணவு மற்றும் வேளாண் துறை அமைச்சர் சரத்பவார், ‘அரிசி, கோதுமையை இலவசமாக வழங்க இயலாது; உச்சநீதிமன்றம் கூறியது ஒரு அறிவுரைதானே தவிர, ஆணையல்ல’ என்று சொன்னார். சரத்பவாரின் கூற்றால் எரிச்சலடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் 31.08.2010 அன்று, ‘நாங்கள் கூறியது யோசனை அல்ல; குறைந்த விலையில் அல்லது இலவசமாக ஏழைகளுக்கு தானியங்களை வழங்கவேண்டும் என்று நாங்கள் கூறியது எம் ஆணைதான்’ என்று கூறினர்.

உயர் அதிகாரம் கொண்டது உச்சநீதி மன்றமா? நாடாளுமன்றமா? என்கிற விவாதம் எழுந்தது. 06.09.2010 அன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்குப் நேர்காணல் அளித்தபோது பிரதமர் மன்மோகன்சிங், “அரசின் கொள்கைகளில் உயர்நீதித்துறை தலையிடுவது சரியல்ல என்று சொன்னார். அந்நேர் காணலின்போது, மன்மோகன்சிங், ‘வறுமையிலிருந்து மக்களை மீட்பதற்கான ஒரே வழி, வேளாண்மையிலிருந்து அதிகமானோர் வெளியேறித் தொழில்துறைக்கு வருவதேயாகும்’ என்று கூறினார். அமெரிக்காவில் 2 விழுக்காட்டினரும், அய்ரோப்பிய நாடுகளில் 5% - 10% பேரும் வேளாண்மையில் ஈடுபட்டிருப்பது போன்ற நிலையை இந்தியாவில் உண்டாக்க வேண்டும் என்று ‘பொருளாதாரப் புலி’ பிரதமர் மன்மோகன்சிங் நினைக்கிறார். கடந்த இருபது ஆண்டுகளாக ஆண்டிற்கு ஆண்டு நலிந்து வரும் வேளாண்மையை ஒரேயடியாகக் குழி தோண்டிப் புதைத்து விட நினைக்கிறார் மன்மோகன்சிங்.

அரசமைப்புச் சட்டத்தின் விதி 21, அனைத்துக் குடிமக்களின் உயிர் வாழ்க்கைக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. உயிர்வாழ்வதற்கு முதன்மையாக வேண்டப்படும் உணவை அளிக்க வேண்டியது அரசின் கடமையாகும். அரசமைப்புச் சட்டத்தை அரசு செயலாக்குவது பற்றி ஆராய நீதிமன்றத்துக்கு உரிமை இருக்கிறது. இதைப் போலவே பாதிக்கப்படும் மக்களுக்கும் நீதிமன்றத்தை நாடுகின்ற உரிமை உள்ளது. அணு இழப்பீட்டுச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாவிட்டால், பிரதமர் பதவியிலிருந்து விலகுவேன் என்று மிரட்டிய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் வாடிக் கொண்டிருக்கும்போது மலைபோல் தானியங்கள் மக்கி வீணாவது பற்றிய கவலை இல்லை.

1966 இல் இந்திய உணவுக் கழகம் எற்படுத்தப்பட்ட பின்னர், அறுவடைக் காலங்களில் கோதுமை, நெல்லை அரசே கொள்முதல் செய்து சேமிப்பது என்பது தொடங்கியது. இதனால் அறுவடைக் காலத்தில் நெல், கோதுமை விலை ஒரேயடியாக வீழ்ச்சியடைவது தடுக்கப்பட்டது. குறைந்த அளவு கொள்முதல் விலை என்பது ஏற்பட்டது. மேலும் சந்தையில் தானியங்களின் விலை உயரும் போது, அரசு தன் இருப்பிலிருந்து வெளிச் சந்தையில் தானியங்களை விற்பதன் மூலம் விலை உயர்வைக் கட்டுப்படுத்துகிறது. இது தவிர, ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் நியாய விலைக் கடைகள் மூலம் மாதந்தோறும் அரிசி, கோதுமை வழங்கும் திட்டம் உருவானது. குறிப்பாகப் பொது வழங்கல் திட்டம் தென் மாநிலங்களில் பெருமளவில் வளர்ந்தது.

1991 முதல் தாராளமயம், தனியார்மயம், உலக மயம் என்கிற கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் நலத் திட்டங்களுக்கு அரசு செலவிடும் தொகையை - அளிக்கும் மானியத்தைக் குறைக்க வேண்டும் என்பது இதன் குறிக்கோள். பன்னாட்டு நிதியமும், உலக வங்கியும் கடன் தருவதற்கு இதை நிபந்தனையாக விதித்தன.

நியாய விலைக் கடைகள் மூலம், மானிய விலையில் வழங்கப்படும் அரிசியும் கோதுமையும் உண்மையில் ஏழைகளாக இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படவேண்டும் என்பது 1997 இல் அரசின் கொள்கையாக ஏற்கப்பட்டது. அதன்படி வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பவர்கள் வறுமைக்குக் கோட்டிற்கு மேல் இருப்பவர்கள் என்கிற இரு பிரிவினருக்கு வெவ்வேறு விலைகளில் தானியம் வழங்கப்பட்டது.

2005ஆம் ஆண்டில் திட்டக்குழு இந்தியாவில் 6.5 கோடிக் குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்குக்கீழ் இருப்பதாக மதிப்பிட்டது. இக்குடும்பங்களுக்கு ஒரு கிலோ அரிசி ரூ. 5.65 விலையிலும் கோதுமை ரூ. 4.15 விலையிலும் வழங்கப்படுகிறது. மாதத்திற்கு 35 கிலோ அரிசி அல்லது கோதுமை பெறலாம். வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 6.5 கோடிக் குடும்பங்களில், எளிய வறுமையில் 2.5 கோடிக் குடும்பங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த 2.5 கோடிக் குடும்பங்களுக்கு, அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின்கீழ் அரிசி கிலோ ரூ. 3, கோதுமை கிலோ ரூ. 2 விலையில் மாதத்திற்கு 35 கிலோ வழங்கப்படுகிறது. இவ்வாறு குறைந்த விலையில் தானியங்களை வழங்குவதற்காக நடுவண் அரசு கடந்த ஆண்டு ரூ. 45,000 கோடியை உணவு மானியமாகச் செலவிட்டது.

1967 சட்டமன்றத் தேர்தலின்போது அண்ணா தொடங்கி வைத்த ‘அரிசி அரசியல்’ தமிழ்நாட்டில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களைவிட நியாயவிலைக் கடையில் குறைவான விலையில் அரிசி வழங்கப்படுவது வழக்கமாகிவிட்டது. 2006 இல் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் நியாயவிலைக் கடையில் ஒரு கிலோ அரிசியின் விலை ரூ. 3-50 ஆக இருந்தது. 2006 தேர்தல் அறிக்கையில் தி.மு.க. ஒரு கிலோ அரிசியை ரூ. 2க்குத் தருவதாக வாக்குறுதி அளித்தது. அதேபோல் கலைஞர் கருணாநிதி தலைமையில் ஆட்சியில் தி.மு.க. அமர்ந்ததும் இந்த வாக்குறுதி அரசின் முதல் ஆணையாகப் பிறப்பிக்கப்பட்டது. அண்ணா நூற்றாண்டையொட்டி 2008 செப்டம்பர் முதல் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்துக்கு மாதத்திற்கு இவ்வாறு 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்குமேல் இருப்பவர்கள் - கீழ் இருப்பவர்கள் என்று பிரிக்கப்படாமல் அனைவருக்கும் ஒரே விலையில் அரிசி வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தற்போது பொது வழங்கல் முறையில் மாதத்திற்கு 3.17 இலட்சம் டன் அரிசி வழங்கப்படுகிறது. மத்திய தொகுப்பிலிருந்து ஒரு கிலோ அரிசி ரூ. 5.65 விலையில் 2.96 இலட்சம் டன் அரிசியைத் தமிழக அரசு வாங்குகிறது. மீதி தேவைப்படும் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழத்திடமிருந்தோ, வெளிச் சந்தையிலோ கிலோ ரூ 11-50 முதல் 15.70 வரை விலை கொடுத்து வாங்குகிறது. தமிழ்நாட்டு அரசின் உணவு மானியத் தொகை 2003-04 இல் ரூ. 735 கோடியாக இருந்தது. 2008-09ஆம் ஆண்டில் இது ரூ. 2796 கோடியாக உயர்ந்தது. தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் 31,439 பங்கீட்டுக் கடைகள் உள்ளன. 1.97 கோடி குடும்பப் பங்கீட்டு அட்டைகள் உள்ளன. (தி இந்து 11.08.2010).

இந்தியாவிலேயே பொது வழங்கல் முறையில், வறுமைக் கோட்டிற்கு மேல் இருப்பவர் - கீழ் இருப்பவர் என்கிற பாகுபாடு தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் இல்லை. பொது வழங்கல் முறையில் முன்னோடி மாநிலங்களாக இவை விளங்குகின்றன. மொத்த மக்கள் தொகையில் 90 விழுக்காட்டினருக்கு மேல் நியாய விலைக்கடைகளில் வாங்குகின்றனர். இவ்விரண்டு மாநிலங்களில் மட்டுமே நியாய விலைக்கடைகள் அரசின் முழுக்கட்டுப் பாட்டில் செயல்படுகின்றன. வடமாநிலங்களில் 30 விழுக்காட்டினர் மட்டுமே நியாய விலைக்கடைகளில் வாங்குகின்றனர். நியாய விலைக்கடைகள் முழுவதும் உரிமமம் பெற்ற தனியாரிடம் உள்ளன. அதனால் 60ரூ தானியம் மக்களுக்குச் சென்றடைவதில்லை. தமிழ்நாட்டிலும் 30ரூ அளவுக்கு வெளிச் சந்தையில் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

நியாய விலைக் கடைகளில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்போர் - மேல் இருப்போர் என்ற பகுக்கப்பட்டதால் முறை கேடுகளும் ஊழலும் மேலும் அதிகமாகிவிட்டன. உண்மையான ஏழைகளில் 58 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டிற்குக்கீழ் உள்ளவர் இன்னும் குடும்ப அட்டையைப் பெற முடியவில்லை என்று திட்டக்குழுவே கூறுகிறது. நியாய விலைக் கடைகளில் விற்பனையில் இருவேறு விலைகள் என்பது நீடிக்கின்ற வரையில் முறைகேடுகளைத் தடுக்க முடியாது என்று ஆய்வாளர்கள் அறுதியிட்டு உரைக்கின்றனர்.

வறுமைக் கோட்டிற்குக்கீழ் இருப்பவர் எவ்வளவு பேர் என்பதைத் திட்டவட்டமாகக் கணக்கிட முடியாது என்பதே உண்மையாகும். இவர்களின் எண்ணிக்கை 27% என்று திட்டக்குழு கூறுகிறது. சுரேஷ் டெண்டுல்கர் குழு 37% - அதாவது இந்தியாவில் உள்ள 24 கோடிக் குடும்பங்களில் 8.14 கோடிக் குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்குக்கீழ் இருப்பதாகக் கூறுகிறது. என். சி. சக்சேனா குழு 50 விழுக்காட்டினர் என்று சொல்கிறது. அர்ஜுன் சென் குப்தா தலைமையிலான அமைப்புசாரா தொழில்களுக்கான தேசிய ஆணையம் இந்தியாவில் 77% மக்கள் ஒரு நாளைக்கு ரூ. 20க்கும் குறைவாகவே செலவிடக் கூடிய வாழ்நிலையில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் நடுவண் அரசு அமைத்த குழுக்கள் அளித்தவைகளாகும்.

வறுமைக் கோட்டிற்குக்கீழ் இருப்பவர் எண்ணிக்கை 27ரூ என்று இதுவரை கூறிவந்த பிரதமர் மன்மோகன்சிங் இப்போது இது 37ரூ என்று சொல்கிறார். 1991 முதல் 5 ஆண்டுகள் நிதி அமைச்சராக இருந்த ‘பொருளாதார மேதை - நேர்மையின் மொத்த உருவமான’ மன்மோகன்சிங், 1996ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக தயாரித்த தேர்தல் அறிக்கையில், ‘1991இல் வறுமைக் கோட்டிற்குக்கீழ் 35 விழுக்காடாக இருந்த மக்கள் எண்ணிக்கை, கடந்த 5 ஆண்டுகள் (1991-96) 24 விழுக்காடாகக் குறைந்துவிட்டது’ என்று தெரிவித்திருந்தார். 06.09.2010 அன்று இல்லத்தில் செய்தியாளர்களிடம் வறுமைக்கோட்டுக்குக் கீழ் 37% பேர் இருப்பதாகக் கூறினார். கடந்த இருபது ஆண்டுகளின் வளர்ச்சியெல்லாம் முதலாளிகளுக்கும், பணக்காரர்களுக்கும், உயர்கல்வி பெற்ற சிறு கூட்டத்தாருக்கும் மட்டுமே கிடைத்துள்ளது. ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகவே உள்ளனர் என்பதையே இது மெய்ப்பிக்கிறது.

கடந்த இருபது ஆண்டுகளாக உணவுதானிய விளைச்சல் 20 கோடி டன் என்கிற அளவிலேயே இருந்து வருகிறது. இதனால் தனி ஒருவருக்குக் கிடைக்கும் தானியத்தின் அளவு - மக்கள் தொகைப்பெருக்கத்தின் காரணமாகக் குறைந்து வருகிறது. தானிய உற்பத்தியை மேலும் பெருக்கி, அதிக அளவில் தானியங்களைக் கொள்முதல் செய்து, முறையாகச் சேமித்துப் பொது வழங்கல் முறை மூலம் வெகு மக்களுக்கு நியாயமான விலையில் வழங்க வேண்டும். என்பதில் அரசு அக்கரையற்றுக் கிடக்கிறது. மாறாக இலட்சக்கணக்கான நல்ல விளை நிலங்களைச் சிறப்புப் பொருளியல் மண்டலங்கள் அமைப்பதற்காக என்ற பெயரில் பெருமுதலாளிகளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தானியக் கொள்முதலில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித்து உள்ளது. முன்பேர ஊக வணிகத்துக்கு இடமளித்துத் தானிய - உணவுப் பொருள் சந்தை முதலாளிகளின் ஆதிக்கத்தின்கீழ்ச் செல்ல வழிவகுத்துவிட்டது.

தற்போது ஓராண்டில் 9.5 கோடி டன் அரிசி, 7.5 கோடி டன் கோதுமை - ஆக மொத்தம் 17 டன் விளைகிறது. இவைத்தவிரக் கம்பு, கேழ்வரகு, சோளம், மக்காச்சோளம் முதலான சிறு தானியங்கள் 3 டன் முதல் 4 டன் வரை விளைகிறது. எனவே நெல், கோதுமை கொள்முதல் செய்யப்படுவதுபோல் சிறு தானியங்களும் அரசால் கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலைக் கடைகளில் வழங்கவேண்டும்.

தற்போது 6.5 கோடியாக உள்ள - வறுமைக்கோட்டிற்குக்கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் 35 கிலோ மேனியில் ஆண்டிற்கு 2.74 கோடி டன் தானியம் வழங்கப்படுகிறது. டெண்டுல்கர் குழுவின் மதிப்பீட்டின் படி 8.14 கோடி குடும்பங்களுக்கு மாதம் 35 கிலோ வழங்கிட நடுவண் அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ஆண்டிற்கு 3.5 கோடி டன் தானியம் தேவைப்படும். தற்போது வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டிற்கு 1.6 கோடி டன் வழங்கப்படுகிறது. ஆக ஆண்டிற்கு 5.1 கோடி டன் தேவைப்படுகிறது. இது தவிர, மதிய உணவுத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றுக்கு 50 இலட்சம் டன் தேவைப்படுகிறது. மேலும் வெளிச் சந்தையில் தானியப் பற்றாக் குறையோ, அதிக விலை ஏற்றமோ ஏற்படும் காலங்களில் வெளிச் சந்தையில் விற்பதற்காகவும் தானியம் கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. ஆகவே, 7 டன் அளவுக்குத் தானியம் கொள்முதல் செய்ய வேண்டியிருக்கும்.

நடுவண் அரசு, மாநில அரசுகள், தனியார் வாடகைக் கிடங்குகள் ஆகிய அனைத்தும் சேர்த்து 4.5 கோடி டன் தானியத்தைச் சேமிக்கும் அளவுக்கு மட்டுமே வசதி உள்ளது. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை திறந்தவெளிக் கிடங்குகளாகவே இருக்கின்றன. நெல்லைக் கொள்முதல் செய்வது முதல் அரிசியாக்கி, நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு வழங்கும் வரை இதன் தரத்தைப் பற்றிக் கவலைப்படாத போக்கு எல்லா மட்டங்களிலும் நீடிக்கிறது. நடுவண் அரசும் மாநில அரசுகளும் சிறப்புப் பொருளியல் மண்டலங்கள், நான்குவழி - ஆறுவழி தேசிய நெடுஞ்சாலைகள், தொழில்நுட்பப் பூங்காக்கள், விமானதளங்கள், கார் தொழிற்சாலைகள் முதலானவற்றை இந்திய மற்றும் அயல்நாட்டுப்பெரு முதலாளியக் குழுமங்கள் அமைப்பதற்குப் பல இலட்சம் ஏக்கர் நிலத்தையும், கோடிக்கணக்கான ரூபாய்க்குப் பலவகையான வரிச் சலுகைகளையும் அளித்து வருகின்றன. ஆனால், வெகுமக்கள் உண்பதற்கான தானியங்களைச் சேமித்து வைக்க நவீன சேமிப்புக் கிடங்குகளை ஏற்படுத்த வேண்டும் என்கிற அக்கறை இல்லாமல் இருக்கின்றன.

இந்த அவலநிலையில், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவரப் போவதாக நடுவண் அரசு கூறிவருகிறது. ஆனால் இதை அனைவருக்கும் பொதுவானதாக ஆக்குவதா? வேண்டாமா? என்கிற விவாதம் சோனியாகாந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக மிகவும் பின் தங்கியுள்ள 150 மாவட்டங்களில் அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் 35 கிலோ அரிசி அல்லது கோதுமை கிலா ரூ 3 விலையில் வழங்குவது என்று எடுக்கப்பட்ட முடிவும் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ‘பணக்காரர்களுக்கும் குறைந்த விலையில் தானியம் வழங்குவது நியாயமா? என்று ஏழைகள் கேள்வி கேட்பார்கள்’ என்று சோனியா சொல்கிறார். (தி இந்து 24.09.2010)

அனைவருக்கும் மானிய விலையில் அரிசி, கோதுமை வழங்குவதால் ஆண்டிற்கு ரூ 1,30,000 கோடிச் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2010-11ஆம் ஆண்டில் மட்டும் 5 இலட்சம் கோடி ரூபாய் முதலாளிகளுக்குப் பல்வேறு வரிச் சலுகைகள் மூலம் வழங்கப்படுகிறது. எனவே 70% மக்களுக்கு மானிய விலையில் அரிசி, கோதுமை வழங்குவதற்கு ரூ. 1,30,000 கோடியை செலவிட முடியாது என்று அரசால் கூற முடியாது.

ஒரு குடும்பத்துக்கு மாதத்திற்கு 60 கிலோ தானியம் தேவை என்பது உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குடும்பத்துக்கு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் விலையில் 20 கிலோ வழங்கப்படுகிறது. ஆந்திராவில் ஒரு கிலோ அரிசி ரூ. 2 விலையில் தரப்படுகிறது. அந்தியேதயா அன்ன யோஜனா திட்டத்தின்கீழ் இந்தியாவில் 2.5 கோடிக் குடும்பங்களுக்கு அரிசி கிலோ ரூ. 3, கோதுமை கிலோ ரூ. 2 விலையில் வழங்கப்படுகிறது. ஆனால், வெளிச்சந்தையில் முதல்தரமான அரிசி கிலோ ரூ 30க்கு மேலும், இரண்டாம்தர அரிசி ரூ. 20க்கு மேலும், விற்கப்படுகிறது. எனவே நியாய விலைக் கடைகளில் கிலோ அரிசி ரூ 1க்கு என்று, ரூ. 2-க்கு என்று வழங்குவதால், முறைகேடுகள் மிகுந்து வருகின்றன. மேலும் இது ஒரு நல்ல வேளாண் பொருளாதாரமும் ஆகாது. எனவே ‘அரிசி அரசியல்’ கண்ணோட்டத்தைக் கைவிட்டு, நல்ல அரிசியை கிலோ ரூ 5 விலையிலும், கோதுமையை ரூ 4 விலையிலும் வழங்குவதே பல சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். வேளாண்மையை வளர்க்கும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும்.

ஊட்டச் சத்துக் குறைபாட்டினை பால், முட்டை, இறைச்சி ஆகியவற்றை உண்பதன் மூலமே போக்கமுடியும். தானியங்களை உணவாகக் கொள்ளும் கால்நடைகள், பறவைகள், மூலம் கிடைக்கும் உணவை உண்பது அதிகமாக இருக்கிறது. மறைமுகமாகத் தானியத்தை உண்பது என்று இதைக் கூறுகிறார்கள். (தி இந்து 13-09-2010 உத்சா பட்நாயக் கட்டுரை)

பசிக்கின்ற வயிற்றுக்குப் போதிய சோறு கிடைக்காத நிலையில், மற்ற நாடுகளைப் போல் மக்கள் அனைவருக்கும் ஊட்டமான உணவு எப்போது கிடைக்கும்? மறைமுகமாகத் தானியங்களை நுகர்வது - அதாவது பால், முட்டை, இறைச்சி என உண்பதில் ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியா பின் தங்கியுள்ளது. நேரடியாகத் தானியம் உண்பதில் ஒருவரின் நுகர்வு இந்தியாவிலும் சீனாவிலும் 152 கிலோவாக இருக்கிறது. ஆனால், மறைமுக நுகர்வில் சீனாவில் இது இரண்டு மடங்காக உள்ளது. அய்ரோப்பிய ஒன்றிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் தனி ஒருவர் மறைமுகத் தானிய நுகர்வு 557 கிலோ, 889 கிலோ என்று இருக்கிறது. இன்னும் நூறு ஆண்டுகளானாலும் இந்தியாவால் இந் நிலையை எட்ட முடியாது என்பது உறுதி!

இந்தியாவில் இன்று மக்கள் தொகை 120 கோடி. இவர்களில் 70 விழுக்காட்டினர்க்கு வயிறார உணவு கிடைக்காத நிலையில், பொது வழங்கல் முறையை அனைவருக்கும் பொதுவானதாக ஆக்குவதா? வேண்டாமா? என்று ஆளும் வர்க்கம் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருப்பது வெட்கக்கேடாகும்.

எனவே, அனைவருக்கும் பொது வழங்கல் முறையில் - நியாயவிலைக் கடைகளில் தானியங்கள் வழங்கப்படும் வகையில் உணவுப் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். தானியங்கள் தவிர, மக்களுக்குத் தேவையான பிற உணவுப் பொருள்களும் நியாயவிலைக் கடைகளில் கிடைக்குமாறு செய்வதன் மூலமே வெகுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்.

Pin It