சென்ற இதழின் தொடர்ச்சி…

கிராவுக்கு தம் மண்ணின் மீது இருந்துள்ள பற்றை அவருடைய எழுத்துகளின் மூலை முடுக்குகளில் எல்லாம் அறியலாம். நல்லவர், கெட்டவர் என எல்லோரையும் இனங்கண்டுள்ளார். ஒட்டுமொத்தமாகக் கரிசல் காட்டு மக்களைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

ki rajanarayanan 267"என்னுடைய இந்த மக்களிடத்தில் அன்பு இருக்கின்றது. பிரியமிருக்கிறது. பூமி வறண்டிருந்தாலும் மனசில் ஈரம் இருக்கிறது. வேட்டி கருப்பாக இருந்தாலும் மனசு வெள்ளையாக இருக்கின்றது. உடம்பு அழுக்காக இருந்தாலும் நாக்கு சுத்தமாக இருக்கின்றது" (கரிசல் கதைகள், ப.4)

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்கள். கிராவுக்குத் தம்முடைய பூமியாகிய கரிசல்காடு காவிரி பாயும் புண்ணிய பூமியாக இல்லையே என்னும் வருத்தம் ஆழ் மனதில் இருப்பதைக் கரிசல் கதைகள் முன்னுரை வழி அறிய முடிகின்றது. இப்படியான ஒரு புனித நதி ஓடும் பாக்கியம் செய்யவில்லை இந்தக் கரிசல் மண் (ப.5). மேலும் காவிரி பாய்வதால் சோழ நாட்டில் எவ்வளவு செழிப்பாக உள்ளது என்பதை தி.ஜானகிராமனின் எழுத்தை மேற்கோளாகக் காட்டுகின்றார். ‘தண்ணீர் குழாயிலும் தான் வருகின்றது, ஆனால் ஒரு ஆற்றில் ஓடும் போது இப்படியா பாட்டாகக் கேட்கும், கோயிலாக உயரும், கூர் அறிவாக வளரும்' (ப.4)

தி.ஜானகிராமன் நாணயத்தின் ஒரு பக்கத்தைக் குறிப்பிடுகின்றார். காவிரி ஆற்றில் நீர் ஓடும் போது பாட்டு முதலிய ஆய கலைகளும் வளர்ந்தன. இருகரைகளிலும் காவிரித் தொடக்கம் முதல் கடைமடை வரை கோயில்கள் உயர்ந்தன, ஒரு குலத்துக்கு ஒரு நீதியும் வளர்ந்தது. எல்லாமே உண்மைதான்.

நிலவுடைமை முழுவதும் யாரிடம் இருந்தது? கதிரோன் தோன்றினான் / கவலை கொண்டு ஏங்கினோம் / உடையோ கோவணம் / உணவோ நீராரம். நிலவுடைமையோடு பண்ணைத் தொழிலாளர்கள் பல நூற்றாண்டுக் காலம் பிணைக்கப்பட்ட சங்கிலியைப் பொதுவுடைமைச் சித்தாந்தம் நொறுக்கித் தள்ளியது. திராவிடச் சித்தாந்தம் விழிப்புணர்வு, கல்வி, வேலை வாய்ப்பைக் கொடுத்தது.

கரிசல் மண்ணில் காவிரி போன்ற வளமான நதி பாய வேண்டும் என கிரா ஏன் விரும்பினார் என்றே தெரியவில்லை. அப்படிப் பாயும் சூழல் ஏற்பட்டிருந்தால் வழக்கமாக எல்லா ஆற்றுக் கரைகளிலும் புற்றுக்களைப் போல வழிபாட்டுத் தலங்கள் வளர்ந்திருக்கும். காவிரியாற்று மக்கள் போலக் கரிசல் மண் மக்களும் கதிரோன் தோன்றினான்... என்று ஒப்பாரி வைத்து இருப்பார்கள்.

நாற்காலி

கிரா கதையாக எழுதினாலும் கட்டுரையாக எழுதினாலும் கடுதாசியாக எழுதினாலும் அவை கரிசல் மண்ணில் வாழ்பவர்களை மட்டுமல்லாமல் எல்லா வட்டாரங்களிலும் வாழ்பவர்களின் நினைவுகளையும் கிளறி விடுகின்றன.

பெஞ்சுகள் இல்லாத காலத்தில் செத்தவர்களை நார்க்கட்டிலில் போட்டு அழுவார்கள். பெஞ்சு வந்த பிறகு அதில் கிடத்தினார்கள். பெரும்பாலான வீடுகளில் நார்க்கட்டில் கிடக்கும். தெருவுக்கு ஒன்று இரண்டு வீடுகளில்தான் விசிப்பலகை எனப்படும் பெஞ்சு இருக்கும். ஒதியம் பலகையால் செய்ததில் படுத்தால் குளிர்ச்சியாக இருக்கும் என்று செய்து வைத்திருப்பார்கள். அதைப் போய்த் தூக்கி வருவார்கள்.

காரியம் முடிந்ததும் இனி இழவு நேரக்கூடாது என்பதற்குக் குறியீடாக அந்தப் பெஞ்சை உதைத்துச் சாய்த்து விடுவார்கள். ஈரம்பட்ட அது ஒன்று இரண்டு ஆண்டுகளிலேயே சட்டம், கால் கழன்று விடும்.

உட்கார்ந்து பிள்ளை படிக்கட்டும், எழுதட்டும் என்று பெற்றோர் ஆசையாக ஒரு மேஜை, நாற்காலியைச் செய்து போட்டார்கள். பிணத்தை உட்கார வைக்கும் பழக்கத்தை எந்த ஊருக்கோ துக்கத்துக்குப் போனவர்கள் பார்த்து விட்டு இங்கேயும் ஆரம்பித்து விட்டார்கள்.

பிணத்தை உட்கார வைக்க ஆரம்பிக்கும் பழக்கம் உருவான பிறகு பெரியவர்கள் அடிக்கடி இறந்தார்கள். ஆடு, மாடு மேய்ப்பவர்களிடம் அவற்றின் வாடை ஒட்டிக்கொள்வதைப் போல அந்த நாற்காலியிலும் பிணவாடை படிந்துவிட்டது.

‘நாற்காலி’ சிறுகதையைப் படித்த போது வியப்பாக இருந்தது. நாற்காலியில் உட்கார வீட்டில் உள்ளோர் காட்டிய ஆர்வம், பிணம் உட்கார வைத்த பிறகு ஏற்பட்ட பயம் போன்றவற்றைக் கிரா எதார்த்தமாக எழுதியுள்ளார். எல்லோருக்கும் நடப்பியலுடன் தொடர்பு இருக்கும். படைப்பாளரே உருவம் கொடுப்பர்.

இப்படி ராயங்கல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயணப் பெருமாள் என்னும் பல அடைமொழிகள் பெற்ற இயற்பெயரை உடைய கிராவைப் பற்றி நிறைய எழுதலாம். அவர் தொகுத்துள்ள வழக்குச் சொல்லகராதி (அன்னம், 2008) குறிப்பிடத் தக்க பணியாகும். முக்கியமான அகராதித் தொகுப்பாக உள்ள தமிழ்ப் பேரகாதியில் (Tamil Lexicon 1-6, Suppliment) காணப்படாத நூற்றுக்கணக்கான வழக்குச் சொற்கள் காணப்படுகின்றன. நாட்டுப் புற வழக்காறுகளில் இருந்துதான் அகராதிகளில் இல்லாத வழக்குச் சொற்களைப் பெற முடியும். அரசு, பல்கலைக்கழகங்கள் வழக்குச் சொற்கள், நன்கு புழக்கத்திற்கு வந்துள்ள கலை, அறிவியல் சொற்களைத் திரட்டித் தமிழ்ப் பேரகராதியை மேலும் செழுமைப்படுத்த வேண்டும்.

கிராவின் வழக்குச் சொல் அகராதியைப் போல இன்னும் பலர் வட்டார வழக்கு அகராதிகளை வெளியிட் டுள்ளார்கள். ஒலி திரிந்து எல்லா வட்டாரங்களிலும் பேச்சு மொழியில் பயன்படுபவற்றையும் வழக்குச் சொல்லாகக் கருதுகின்றார்கள். அகராதியியல் கோட்பாடு அடிப்படையில் தொகுக்க வேண்டும். ஒரு வழக்குச் சொல் என்பது குறிப்பிட்ட ஒரு வட்டாரத்தில் உள்ளவர்களின் மொழியில் பயன்படுவதாக இருக்க வேண்டும். பொதுச் சொல்லாக இருந்தாலும் பொருள் வேறுபாடுமாயினும் அதனையும் வட்டார வழக்காகக் கொள்ளலாம். ‘வட்டார வழக்குச் சொற்களின் தேர்வு’ என்னும் கட்டுரையில் (பழந்தமிழில் சொல்லியல் சிந்தனைகள் 2018, 177-193) விளக்கப்பட்டுள்ளது.

தமிழ் தோன்றி, தமிழரின் தொன்மையையும் முற்போக்குச் சிந்தனையையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சங்க இலக்கியங்களை நாம் மேலும் மேலும் புதிய தரவுகளுடன் மதிப்பீடு செய்ய வேண்டும். தமிழின் தொன்மையான வட்டார இலக்கியங்கள், பழந்தமிழகத்தில் ஐவகை நிலத்தில் வாழ்ந்த மக்கள், உயிரினங்கள், தாவரங்கள் போன்றவற்றை வியந்து பார்க்கும் வகையில் பதிவு செய்துள்ளன.

சங்க காலத்திற்கும் தற்காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றியவை இலக்கிய வகையில் மாறுபட்டுத் தோன்றியமையால் தொன்மைத் தொடர்பு நிறைய அறுபட்டு விட்டன எனலாம். ஆனால் இக்காலத்தில் வட்டார வழக்கு சார்ந்து தோன்றிய படைப்புகளில் சங்க இலக்கியச் சாயல் தெரிகின்றது. பொதுவாக எழுதப்படும் புதுக்கவிதைகளில் சங்ககாலப் பாலை நிலம் தெரிகின்றது. கிராவின் கோபல்லபுரத்து மக்கள் என்னும் புதினத்தைப் பற்றித் திறனாய்வாளர் வெங்கட்சாமிநாதன் பின் வருமாறு குறிப்பிடுகின்றார்.

‘அவருடைய சொந்த கிராமத்து மக்கள் வாழ்ந்த வாழ்க்கை தான் அவருக்குத் தெரியும். அவர்களை உள்ளடக்கியிருந்த பிரதேச சட்டம்தான் அவருடைய உலகம். அந்த வட்டத்தை விட்டு வெளியே அடியெடுத்து வைத்திராதவர் அவர். அவருக்குத் தெரிந்ததை மட்டுமே, அவர் தெரிந்து கொண்ட முறையில் எழுதினார். தமிழ் இலக்கிய உலகில் இது புதிய தடங்களைப் பதித்ததோடல்லாமல் தமிழ்மொழிக்கும் பெருமை சேர்த்தது. இந்தக் கரடுமுரடான, அப்பாவித்தனமான, சுவாரஸ்யமான, மனத் தடைகளற்ற மண்வாசனையுள்ள மனிதர்கள் நிரம்பிய உலக த்தை த் தமிழ் அறிந்ததில்லை' (கோபல்லபுரத்து மக்கள், 1993:5).

மீரா தொகுத்துப் பதிப்பித்துள்ள ‘ராஜநாராயணீயம்' (1985) என்னும் ஆய்வு நூலிலும் பல ஆய்வாளர்களும் படைப்பாளர்களும் கிராவைப் பற்றி நிறைய எழுதியுள்ளார்கள்.

வெங்கட்சாமிநாதன் குறிப்பதைப்போல, தற்காலத்தில் மண்வாசனையுள்ள மனிதர்கள் நிரம்பிய உலகத்தைத் தமிழ் அறியச் செய்ததில் கிரா ஓர் அண்ணல் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஈரா- யிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் மண் வாசனையை நிறையவே அறிந்துள்ளது. தற்காலமும் பொற்காலமும் என்னும் நூலுக்காகச் சங்க காலத்தையும் தற்காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவ்வளவு செய்திகள் இரண்டுக்கும் தொப்புள் கொடி உறவு அறுபடாமல் காணப்படுகின்றன. இரண்டு, மூன்று தொகுதிகள் எழுதும் அளவிற்குக் கிடைத்துள்ளன.

இடைக்காலங்களில் தோன்றிய இலக்கிய வகைகளில் மக்களின் வாழ்க்கையும் வழக்காறுகளும் அதிகம் பதிவாகவில்லை என்பதை அறிய முடிகின்றது. ஒன்றே ஒன்றைச் சான்றுக்குக் கூறலாம். சிறுவர்கள் நீர்நிலைகளில் குளித்து விளையாடும் போது மரங்கள், மதகு, பாலத்தில் ஏறிக் குதித்து அடியில் போய் மண் அள்ளி வருவது அண்மைக் காலத்தில் அறுகிப்போனாலும் அறுபது-எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் அதுதான் விளையாட்டு. அழுக்குப் போகக் குளிக்கப் போனால் மணிக்கணக்கில் நீரில் விளையாண்டு சேடை படிந்த உடம்புடன்தான் சிறுவர்கள் வீட்டுக்கு வருவார்கள்.

புனை பெயர் கொண்ட சங்கப் புலவர் தொடித்தலை விழுத்தண்டினார் நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து / குளத்து மணற் கொண்ட கல்லா இளமை (புறம் 243: 9-10) எனத் தம் இளமைக் காலப் பசுமை நினைவைப் பதிவு செய்துள்ளார்.

கிரா எந்த அளவிற்கு விரிவாகச் சங்க இலக்கியங்களைப் படித்துள்ளார் என்பது தெரியவில்லை. ஆனால் கிராவைப் படிக்கும்போது சங்க கால மாந்தர்களும் வருணனைகளும் ஆங்காங்கே அவர் எழுத்துகளோடு ஒட்டி உறவாடுகின்றமையைக் காண முடிகின்றது.

இப்படிப் பார்க்கும்போது கிராவின் பதிவு கரிசல் மண் பற்றியதாக இருந்தாலும் அமைதியான குளத்தில் வீசப்பட்ட கல் வட்ட அலைகளைக் குளம் முழுவதும் பரப்புவதுபோல அவர் படைப்புகளும் செய்துள்ளன. எனவேதான் கிரா வட்டார வழக்கிற்கு ஓர் அண்ணல்.

சங்க காலத்தைத் தற்காலத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது போல கிராவின் கரிசல்மண் பதிவுகளையும் பிற வட்டார வழக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். குடம், ஆரக்கால், பட்டகை, கட்டு அமைப்பில் சக்கரம் உள்ள கட்டை வண்டி தற்போது முற்றிலுமாக இல்லை. வெளியூர் போய்விட்டு வரும்போது பூமியின் சூடு, வெயில் போன்றவற்றால் கட்டுக் கழன்று விடும். கட்டுக் கழன்றால் வண்டி விழுந்து நொறுங்கி விடும். முன்னெச்சரிக்கையாக வரும் அல்லது போகும் வழியில் நீர் நிலையில் இறக்கிச் சக்கரத்தை நனைப்பார்கள். குளம், குட்டை இல்லாவிட்டால் கிணற்றுநீரை மொண்டு ஊற்றியாவது ஈரப்படுத்துவார்கள். எங்கும் நடக்கும் இந்த நிகழ்வைக் கிரா நினைவு கூர்ந்து நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளார். (கோபால கிராமம் 2014:24)

கிராவை இனங்கண்டு புதுச்சேரிப் பல்கலைக் கழகம் சிறப்புப் பேராசிரியர் என்னும் பதவியை வழங்கியது பாராட்டத்தக்கது; அவரது தேடலுக்குக் கிடைத்த பெருமை. முனைவர் பட்டம் பெற்றும் நிரந்தரப் பதவி கிடைக்காமல் எண்ணற்றோர் இருக்கும் நாட்டில் மழைக்காக மட்டும் பள்ளிக்கூடத்துப் பக்கம் ஒதுங்கிய கிராவை இனங்கண்டு பெருமைப் படுத்திய அன்றைய புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகத்தைப் போற்ற வேண்டும்.

செடியைப் பெயர்த்து இன்னோர் இடத்தில் நட்டாலும் அதன் இயல்பு மாறாது என்பதற்கு கிரா ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துள்ளார்.

க.பஞ்சாங்கத்திற்கு அளித்துள்ள பேட்டி பின்வருமாறு உள்ளது.

‘பிறந்த வீட்டையும் மண்ணையும் துடைத்தெறிந்து விட்டுப் புகுந்த வீட்டோடு ஒட்டிவாழும் நமது பெண்டிரைப் போல வாழக் கற்றுக் கொண்டுவிட்டோம். என்றாலும் எழுதிப் பார்க்கலாமே.' (கி.ராஜநாராயணன் புனைகதைகளும் இயற்கையை எழுதுதலும், 2012, 159-160).

வானம் பார்த்த பூமியில் வாழ்ந்த கிரா புதுச்சேரிக்கு இடம் பெயர்ந்தாலும் இறுதி மூச்சை விடப்போகும் காலத்திலும் கரிசல் மண்ணின் வறட்சியே கனவில் கூட வந்திருக்கும்.

‘மழை இறங்கவிடாமல் செய்தது எது? ஊடங்காடு அழிப்புதான். அது அப்படியே இருந்திருந்தால் மழை ஒண்ணுக்குப்பாதியாவது பெய்திருக்கும். கரிசல் விவசாயத்துக்குச் சிறு மழைகளே போதும்' (மிச்சக் கதைகள், 2021: 103)

கிரா எல்லா வட்டார வழக்கிற்கும் அண்ணல். எனவே, இந்தக் கருத்தைக் காட்டை அழித்ததால் மழையை இழந்த எல்லாப் பகுதிகளுக்கும் கடன் வாங்கிக் கொள்ளலாம்.

புகழஞ்சலி

ஒருவர் இறந்து பாடையில் போகும்போதுதான் அவரைப் பற்றிய நல்லது கெட்டதை மக்கள் நினைத்துக் கொள்வார்கள், பேசுவார்கள் என்று கிராமங்களில் கூறுவார்கள். அப்படி, புதுச்சேரி அரசு எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு அரசு மரியாதை செய்தது போலத் தகுதி இருந்தும் கிடைக்காத நோபல் பரிசு, ஞானபீட விருதைவிடப் பிறந்த மண்ணில் தகுதி அறிந்து தமிழக அரசு அளித்த இறுதி மரியாதையும் அமையப் போகும் மணிமண்டபமும் கிரா எழுத்துக்கு கிடைத்த மகுடங்கள். அவற்றுக்காகத் தமிழக அரசுக்கு நன்றி கூறிப் பாராட்ட வேண்டும்.

கிராவுக்குப் புகழஞ்சலி செய்வதற்காகப் பலர் தங்கள் கருத்துகளையும் பதிவு செய்துள்ளார்கள். ஒவ்வொரு பதிவும் ஏதாவது ஒருவகையான பண்பை விளக்கும் வகையிலேயே உள்ளது. சில பதிவுகளைக் குறிப்பிடலாம்.

இந்த மண் உள்ளவரை, அதில் கரிசல் இலக்கியம் உள்ளவரை, ஏன் தமிழ் உள்ளவரை நமது உள்ளங்களில் அவரது புகழ் வாழும். அவர் மறையவில்லை. எழுத்துக்களால் நம் உயிரில் கலந்து வாழ்கிறார். (தினமணி, 19.05.2021, ப.50)

எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியோடு கிராவை நினைவு கூர்கின்றார்.

பழைய திரைப்படங்களில் மனைவி கணவனைப் பிராணநாதா என்று விளிப்பார். தொடக்ககாலப் புதினங்களிலும் விவரிப்பது பேசுவது எல்லாமே செந்தமிழில்தான் இருக்கும். பிறகு பேசும் உரையாடலுக்கு வழக்குமொழியும் விவரிப்புக்குத் செந்தமிழும் பயன்படுத்தப்பட்டன.

புதினங்களில் உரையாடலுக்கு மட்டும்தான் பேச்சுவழக்கைப் பயன்படுத்துவது என்று எழுதாத விதி ஒன்று கடைப்பிடிக்கப்பட்டு வந்த காலத்தில் ஒட்டு மொத்த படைப்பையும் பேச்சு வழக்கிலேயே எழுதி, புதிய தடத்தை உருவாக்கியவர் கிரா அவர்கள் (இந்து-தமிழ்- திசை, 21.05.2021, ப.6).

எனத் தொல்.திருமாவளவன் குறிப்பதும் படைப்பிலக்கியத்தில் ஏற்பட்ட ஒரு குறிப்பிடத் தக்க மாற்றமாகும்.

கரிசல் மண்ணையும் அதன் மனிதர்களையும் அவரைப்போல விரிவாக எழுதியவர் வேறில்லை. உலகம் கண்டு கொள்ளாத அந்தச் சம்சாரிகளை, விவசாயக் கூலிகளை, ஏழை எளிய மனிதகளைத் தமது கதைகளின் முக்கியப் பாத்திரங்களாக்கி உலகறியச் செய்தவர் கிரா. அயிரக்கா, தொட்டண்ணா, பிச்சங்கை ராமசாமி, கோமதி, தோழன் ரங்கசாமி, அண்ணாரப்ப கவுண்டர், பப்பு தாத்தா நாச்சியார் துங்க நாயக்கர், பேரக்காள், தாசரி நாயக்கர், பிள்ளையாரப்பன், ராமசுப்பா நாயக்கர், மங்கத்தாயார் அம்மாள், சென்னம்மா தேவி, ஜோஸ்யம் எங்கட்ராயலு, மண்ணுதின்னி ரெங்கநாயக்கர், பச்சை வெண்ணெய் நரசய்யா, பயிருழவு பங்காரு நாயக்கர், வைத்தி மஞ்சையா, வாகடம் புல்லையா போன்ற கதாபாத்திரங்களை யாரால் மறக்க இயலும். (இந்து-தமிழ்-திசை, 21.05.2021, ப.6)

என எஸ்.இராமகிருஷ்ணன் தொகுத்துக்கூறும் கதை மாந்தர்களை நினைத்துப் பார்க்கும் போது ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள உழைக்கும் மக்கள் நினைவுக்கு வருவார்கள்.

கட்டைக் கோவிந்தன், நெட்டைக் கோவிந்தன், வத்தல் கோவிந்தன், அழுக்குக் கூத்தா என உருவத்தாலும் கைகாட்டி மாணிக்கம், மோசடிப்பிச்சை, விரச்சீப்பி வீரப்பன் எனச் செய்கையாலும் பெயர் பெற்றவர்கள் நினைவுக்கு வருகின்றார்கள். பசுக்காரன் வீடு, ஆட்டுக்காரன் வீடு, எழுத்துக்காரன் வீடு, பள்ளிக் கொடத்தான் வீடு, முனிசீப்பு வீடு, சிப்பாய் வீடு, கொட்டாக்கார வீடு, மச்சுவீடு, மாடிவீடு என வீட்டுப்பெயர்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன. இப்படி எண்ண வைத்ததற்கும் வாய்ப்புள்ள இடங்களில் பயன்படுத்துவதற்கும் நினைவூட்டியவர் கிரா. எனவே தான் அவர் வட்டார வழக்கின் அண்ணல்!

- ச.சுபாஷ் சந்திரபோஸ்