ஆயிரக்கணக்கான தற்கொலை மையங்கள்
ஆணையத்தின் கண்காணிப்பில்
ஆயத்தமாக உள்ளன.
மின்னணுத் தற்கொலை இயந்திரங்கள்
தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வாக்காளர்கள் வரிசையில் வந்து
எந்தவித அச்சமுமின்றி
அடையாளச் சீட்டுக் காட்டி
அடமானச் சீட்டில் கையொப்பமிடலாம்.
விரல்களின் கற்பு
விருப்பத்தோடு கெடுக்கப்படும்.
மறைவாக நின்று ஒவ்வொருவரும்
உரிமைத் தற்கொலையை
உற்சாகமாகச் செய்து கொள்ளலாம்.
அறிவைக் கொடுக்கும் பள்ளிக் கூடங்களே
அறிவைக் கொல்லும் கசாப்புக் கடைகளாகவும்
அவதானிக்கின்றன இந்நாட்டில்.
நேரம், தூரம், பேரம் இவைகளுக்கெல்லாம்
எல்லையும் கட்டுப்பாடும் கெடுபிடியும் செய்து
மக்களை மகிழ்விக்கும் தேர்தல் ஆணையம்
டாஸ்மாக்கிற்கு மட்டும் தடைவிதிக்கவில்லை.
அய்ந்தாண்டுகளாக
பட்டப்பகலில் நட்டநடு வீதியில் நடக்கும்
கொலை, கொள்ளை, லஞ்சம், ஊழல்,
குடி, கூத்தி, விபச்சாரங்களைக்
கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு...
தலைவர்களின் சிலைகளைப் போய்த்
துணிபோட்டு மூடுவதன் மூலம்தான்
வாக்காளர் சுயமாய்ச் சிந்திக்க
வழியமைத்துக் கொடுக்கிறதாம்.
உரிமை மலர்த்தோட்டத்தைப்
பன்றிகளும் எருமைகளும்
மிதித்து மேய விட்டுவிட்டு
“வாக்கு மலக் குப்பைகளைப்
பேணிப் பாதுகாக்கிறது தேர்தல் ஆணையம்”
எவனாவது எக்கேடாவது
கெட்டுப் போங்கள்...
நான் யோக்கியன் என்பதே
ஆணையக் கொள்கை
சரி.....
ஏப்பிரல் பதிமூன்றில்
“யார்யாருக்காக எந்தெந்தத் தொகுதியில்
எத்தனைபேர் செத்தார்கள்” என்ற கணக்கை
மே மாதம் எண்ணிச் சொல்லிவிடுவார்கள்.
ஆடுகளுக்கு உகந்த மாதம்
“மே” தானே.
ஆயிரம் பேரைக் கொன்றவன்
அரை மருத்துவன்
அத்தனை பேரையும் கொன்றவன்
அடுத்த முதல்வ(ன்) (ள்).

Pin It