குழந்தை இலக்கியத்தை வாழ வைப்பவர் யார்? என்ற கேள்வியை நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 

பெற்றோர்கள்தான் என்று நான் பதில் சொன்னேன்.

பதிப்பகங்கள் புத்தகங்களை வெளியிடவில்லை என்றால் பெற்றோர்கள் எப்படி வாங்குவார்கள்? குழந்தைகள் எப்படிப் படிப்பார்கள்? என்று அவர் என்னை மடக்கினார்.

வாங்குதல் என்பது நடந்தால்தான் புத்தகம் வெளியிடுதல் நடக்கும் என்று நான் என் கருத்தை வலியுறுத்தினேன்.

children library 600எழுத்தாளர் எழுத வேண்டும். எழுதியதை பதிப்பாளர் வெளியிட வேண்டும். வெளியிட்டதை பெற்றோர் வாங்க வேண்டும். வாங்கியதை குழந்தை படிக்க வேண்டும். இந்த நான்கு நிலைகளும் முக்கியமானவைதான் என்றார் நண்பர்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒழுக்கமுள்ளவர்களாக வளர்க்க விரும்புகிறார்கள். அதனால் அறிவுரை கூறும் நூல்களையே வாங்கித் தருகிறார்கள். பதிப்பகமும் அறிவுரை நூல்களையே வெளியிட ஆர்வம் காட்டுகின்றன.

பொதுநூலகமும் பள்ளி நூலகமும் நூல்களை வாங்குவதால் கதை, பாடல் நூல்களையும் கல்வி சார்ந்த நூல்களையும் பதிப்பகங்கள் வெளியிடுகின்றன.

புத்தகங்கள் யாருக்காக? குழந்தைகளுக்காகத்தான். குழந்தைகளின் விருப்பம், தேவை சார்ந்து அல்லவா புத்தகங்கள் வெளியிடப்படவேண்டும். பதிப்பகங்கள் பெற்றோர் சார்ந்தும் அரசு சார்ந்தும் புத்தகங்களை வெளியிடுவது சரியா? என்று கேள்வி எழுகிறது.

சோவியத் ரஷ்யாவில் குழந்தை இலக்கிய நூல்களை வெளியிடும் பதிப்பகத்திற்கு மாக்சிம் கார்க்கி தலைவராக இருந்தார். குழந்தைகளின் விருப்பங்களைக் கேட்டறிந்தே நூல்களை வெளியிட ஏற்பாடு செய்தார். அதனால் உள்ளடக்கத்தில் மட்டுமல்ல வடிவத்திலும் குழந்தைகளைக் கவரும் விதத்தில் நூல்களை ரஷ்ய பதிப்பகங்கள் வெளியிட்டன.

அந்நூல்கள் வண்ணத்திலும் பல வடிவங்களிலும் வயதிற்கேற்ப வெளிவந்தன. அரண்மனை பற்றிய புத்தகம் என்றால் அரண்மனையைக் கண் முன் பார்ப்பதுபோல் இருந்தது. முயலைப் பற்றிய புத்தகம் என்றால் முயல் வடிவத்தில் இருந்தது. இவை குழந்தைகளை ஆச்சரியப்படுத்தின.

தமிழில் இத்தகைய முயற்சிகள் உள்ளனவா?

தமிழ்க் குழந்தை இலக்கியப் பதிப்புகளிலும் துவக்க காலத்தில் ஆச்சரியங்கள் நடந்துள்ளன.

நன்றாகத்தான் தொடங்கி இருக்கிறோம்.

ஆம், சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பே ‘ஒரு யானையின் சரித்திரம்’ என்ற நூல் அற்புதமான படங்களுடன் எளிமையான நடையில் வெளிவந்தது.

1950-60 கால கட்டங்களில் குழந்தைகளஷளைக் கவரும் விதத்தில் நூல்களை வெளியிட பதிப்பகங்கள் முனைப்பு காட்டியிருக்கின்றன. புத்தகங்களை குழந்தைகள் வாங்கும் வகையில் மலிவு விலையில் வெளியிட்டனர். பல வடிவங்களில் தீப்பெட்டி அளவில், தபால் அட்டை அளவில் கூட நூல்கள் வெளிவந்தன.

1960ஆம் ஆண்டில் மட்டும் கெட்டியான அட்டையில் பெரிய அளவிலான புத்தகங்கள் 300 வந்ததாக டாக்டர் பூவண்ணன் குறிப்பிடுகிறார்.

‘கல்வி’ கோபால கிருஷ்ணன் எழுதிய ‘மணி என்ன?’ நூல் கடிகாரம் வடிவத்திலும், ரத்னம் எழுதிய ‘பூனையார்’ நூல் பூனையின் வடிவத்திலும். மதிஒளியின் ‘இளந்தளிர்கள்’ பாடல் நூல் இலை வடிவத்திலும் அந்தக் காலத்தில் வெளியிடப்பட்டன.

ஆங்கிலத்தில் வெளிவரும் குழந்தை நூல்களோடு ஒப்பிடும்போது அருகில் கூட நெருங்க முடியாது என்பது உண்மைதான். என்றாலும் தொடக்கக் காலத்திலேயே ஆச்சரியமூட்டும் முயற்சிகள் இருந்திருக்கின்றன. ஆனால், தொடர்ச்சியாக இல்லாமல் ஏன் போயிற்று? குழந்தைகளுக்கான புத்தகம் தயாரிக்கும் முறை பெரியவர்களுக்கான புத்தகம் தயாரிக்கும் முறையிலிருந்து வேறுபடுகின்றன என்பதை எத்தனை தமிழ்ப் பதிப்பகங்கள் புரிந்து வைத்திருக்கின்றன? 

ஆங்கில குழந்தை நூல்கள் வயதின் அடிப்படையில் பல வகைமைகளில் (Categorized by age range) வெளியிடப்படுகின்றன.

2 முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு விளையாட்டு புத்தகங்கள் (Toy books) வெளியிடப்படுகின்றன. இவ்வயது குழந்தைகளுக்கு புத்தகம் ஒரு விளையாட்டுக் கருவி. குழந்தை முதலில் புத்தகத்தோடு விளையாடும். பிறகு படிக்க ஆரம்பித்துவிடும். குட்டி குழந்தைகள் ஒலிகளை விரும்புகிறார்கள். ஒலி எழுப்பும் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. பாடும் புத்தகங்கள் கூட வந்து விட்டன.

3 முதல் 4 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு படப்புத்தகங்கள் (Picture books) வெளியிடப்படுகின்றன. அவை நிறைய படங்களுடன் பல வண்ணங்களில் Multi Colours அச்சிடப்படுகின்றன. மாடு படம் இடம் பெறுகிறதென்றால் படத்தில் ரோமங்கள் ஒட்டப்பட்டு உண்மை போல் தெரிகின்றது. குழந்தைகளை வியப்பில் ஆழ்த்துகின்றது.

5 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எளிய வாசிப்பிற்கான (Easy reading) புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. வயதிற்கேற்ப சொற்களின் எண்ணிக்கை, புதிய சொற்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. போதிய படங்கள் இடம் பெறுகின்றன.

6 முதல் 7 வயது வரை உள்ள குழந்தைகள் எளிய வாசிப்பிலிருந்து கடின வாசிப்பிற்கு (Transition book) மாறுவதற்குத் தேவையான புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.

7 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகள் நீண்ட வாசிப்புக்கு தயாராகி விடுகின்றனர். அவர்களுக்குரிய அத்தியாயம் (Chapter books) உள்ள புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.

8 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் நடுத்தர (Middle grade) வாசிப்புத் திறன் கொண்டவர்கள். அதற்கேற்ற புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. இப்புத்தகங்கள் 100 முதல் 150 பக்கங்கள் கொண்டவையாக இருக்கும்.

12 வயதிற்கு மேலே உள்ள குழந்தைகள் முதிர்ந்த வாசிப்பு நிலைக்கு தயாராகிறவர்கள் (young adult) அகன்ற வாசிப்பிற்கு ஏற்ப 200 பக்கங்கள் வரை உள்ள புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.

குழந்தைகளின் வயது, வாசிப்பு நிலைகளுக்கு ஏற்ப நூல்களை வெளியிடும் பொறுப்பு பதிப்பகங்களுக்கு இருக்கிறது. இப்பொறுப்பை குறைவின்றி நிறைவேற்றுவதற்கு எழுத்தாளர் (author) ஓவியர் (illustrator),, பதிப்பாசிரியர் (editor) ஆகிய மூவரின் ஒத்துழைப்பும் முயற்சியும் அவசியம். தமிழ்ப் பதிப்பகங்கள் இப்பொறுப்பைக் குறித்து சிந்தித்து செயலாற்றும்போது தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் போதாமைகள் மாறும். காலத்திற்கேற்ற மாற்றங்கள் ஏற்படும்.

தமிழ்க் குழந்தை இலக்கிய வளர்ச்சியில் பதிப்பகங்கள் ஆற்றிய பணிகள் கவனத்திற்குரியன. அவை குறிப்பிட்ட சாதனைகளை செய்திருக்கின்றன. 

திரு.வ.சுப்பையா பிள்ளை தலைமையில் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் தென்னாட்டு பழங்கதைகளைத் திரட்டி 8 தொகுதிகள் வெளியிட்டன. ஒவ்வொரு தொகுதியும் 320 பக்கங்கள் வீதம் மொத்தம் 2500 பக்கங்களாகும். ஒரு கதைச் சுரங்கம் தமிழுக்குக் கிடைத்தது. மேலும் இப்பதிப்பகம் பெரிய எழுத்தாளர்களை கா.அப்பாத்துரையார், மா.இராசமாணிக்கனார், டாக்டர் மு.வரதராசனார், மயிலை சிவமுத்து ஆகியோரை சிறுவர் நூல்கள் எழுதச் செய்து பதிப்பித்தது.

பாரிநிலையம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் இளைஞர் இலக்கியம் இசைப்பாடல் நூல்களை வெளியிட்டது. அழ.வள்ளியப்பாவின் மலரும் உள்ளம் உள்பட குழந்தை நூல்கள் அனைத்தையும் வெளியிட்டது. ஆலிவர் டுவிஸ்ட் போன்ற குழந்தை இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டது.

வானதி பதிப்பகத்தின் நிறுவனர் ஏ.திருநாவுக்கரசு ஒரு குழந்தை எழுத்தாளரும் கூட குழந்தை எழுத்தாளர் சங்கம் ஆண்டுதோறும் நடத்திய இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களின் கையெழுத்துப் பிரதிகளை வானதி பதிப்பகம் வெளியிடுவதைக் கடமையாகக் கொண்டிருந்தது, பிரபலமான குழந்தை எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டது.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தமிழகத்தின் ஞானரதம், சோவியத் ரஷ்யாவின் ஒப்பற்ற குழந்தை இலக்கிய நூல்களை தமிழுக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியது. அன்று குழந்தையாக இருந்தவர்கள் மாறாத நினைவலைகளை இன்றும் நெஞ்சில் வைத்திருக்கிறார்கள். என்.சி.பி.எச்.யின் முன்னாள் இயக்குநர் திரு.இராதாகிருஷ்ண மூர்த்தி நூல்களை மக்களிடம் கொண்டு செல்ல பெரிதும் உழைத்தவர். நூல்களை தலையில் சுமந்து சென்று விற்பனை செய்தவர். ஆராய்ச்சி அறிஞர்கள் நா.வானமாமலை, எஸ்.தோதாத்ரி, ‘கல்வி’ கோபால கிருஷ்ணன் போன்றோரை எழுதச் செய்து குழந்தைகளுக்கான அறிவியல் நூல்களை வெளியிட்டவர். 

குழந்தைகளிடம் படிக்கும் பழக்கத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியது என்பதால் என்.சி.பி.எச். நிறுவனம் குழந்தை எழுத்தாளர் சங்கத்திடம் விருது பெற்றது.

மணிவாசகர் பதிப்பகத்தின் ‘நிறுவனர்’ ச.மெய்யப்பன் தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் மீது ஈடுபாடு கொண்டவராக இருந்தார். குழந்தை எழுத்தாளர்களை இறைவனுக்கு சமமாக மதித்தார். தமிழ்க் குழந்தை இலக்கியத்திற்கு வரலாற்றை டாக்டர் பூவண்ணனைக் கொண்டு எழுதச் செய்து நூலாக வெளியிட்டார். மேலும் மணிவாசகர் பதிப்பகம் குழந்தை இலக்கிய நூல்களை வெளியிடுவதில் தனிக்கவனம் கொண்டிருந்தது. அறிவியல் ஆயிரம் நூல் வரிசை அதில் குறிப்பிடத் தகுந்தது.

தமிழ்க் குழந்தை நூல்களை வெளியிடுபவர்களாக முன்னணிப் பதிப்பகங்கள், சிறு பதிப்பகங்கள், குழந்தை எழுத்தாளர்களின் சொந்த வெளியீடுகள் என்று மூன்றாகப் பிரிக்கலாம்.

தமிழ்ப் பதிப்புத் துறையில் என்.சி.பி.எச்., பாரதி புத்தகாலயம், கிழக்குப் பதிப்பகம், பழனியப்பா பிரதர்ஸ், மணிமேகலைப் பிரசுரம், விகடன் பிரசுரம் ஆகியவை முன்னணிப் பதிப்பகங்களாகத் திகழ்கின்றன. இப்பதிப்பகங்கள் குழந்தை நூல்களை வெளியிடுவதற்கு தனிப் பிரிவுகளைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

என்.சி.பி.எச். நெஸ்லிங் என்ற தனிப் பிரிவைக் கொண்டுள்ளது. உலகப் புகழ்ப் பெற்ற சிறுவர் இலக்கிய நூல்களின் சுருக்கத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடுவது இதன் நோக்கமாகும். இதுவரை நூற்றுக்கணக்கான தலைப்புகளில் குழந்தை நூல்களை நெஸ்லிங் வெளியிட்டுள்ளது. உலக நாடோடிக் கதைகளை பெரிய அளவில் பக்கத்திற்குப் பக்கம் படங்களுடன் வண்ணத்தில் வெளியிட்டு சாதனை புரிந்துள்ளது.

என்.சி.பி.எச்.யின் துணை நிறுவனங்களான அறிவுப் பதிப்பகம், தாமரை நூலகம், பாவை ஆகியன குழந்தைகளின் வாசிப்பு உலகில் இடம் வகிக்கும் பஞ்ச தந்திரக் கதைகள், ஈசாப் கதைகள், முல்லா கதைகள் தெனாலிராமன் கதைகள், மரியாதை ராமன் கதைகள், தமிழ்நாட்டு நாடோடிக் கதைகள் ஆகியவற்றை பல பதிப்புகளாக வெளியிட்டுள்ளன.

முற்போக்கு இலக்கியத்தை வெளியிட்டு வந்த பாரதி புத்தகாலயத்தின் பார்வை குழந்தை இலக்கியத்தின் பக்கம் திரும்பியது நல்ல நிகழ்வு. ‘சில்ரன் பார் புக்ஸ்’ என்ற தனிப் பிரிவைத் தொடங்கி குறுகிய காலத்திற்குள் 200க்கும் மேற்பட்ட குழந்தை இலக்கிய நூல்களை வெளியிட்டது. மலையாள மொழியிலுள்ள சிறந்த குழந்தை இலக்கிய நூல்களை யூமா.வாசுகி, உதயசங்கர் ஆகியோர் மூலம் மொழிபெயர்த்து வெளியிட்டது. குழந்தைகளைக் கவரும் விதத்தில் ஓவியங்களுடன் வண்ணத்தில், அவைகள் இருந்தன, ‘குட்டி இளவரசன்’, ‘டாம் மாமாவின் குடிசை’ போன்ற உலகப் புகழ்ப் பெற்ற குழந்தை இலக்கிய நூல்களையும் வெளியிட்டுள்ளது.

அறிவுத் தேடலுக்கு... என்ற அறிவிப்புடன் கிழக்கு பதிப்பகம் திட்டமிட்ட சந்தை நோக்கத்துடன் தமிழ் பதிப்புத் துறைக்குள் வந்தது. வரம், நலம், தவம் என்று பல பிரிவுகளில் ஆயிரக் கணக்கான தலைப்புகளில் நூல்களை வெளியிட்டது. ‘புக்ஸ் பார் சில்ரன்’ என்று ‘ப்ராடிஜி’ என்ற தனிப் பிரிவை குழந்தை நூல்களை வெளியிட ஏற்படுத்தியது. ‘மேதை’ என்ற சிறுவர் இதழையும் வெளியிட்டது. 

‘ப்ராடிஜி’ (Prodigy) ஆங்கில குழந்தை இலக்கியத்தில் உள்ளதுபோல் வயது வாரியாக குழந்தைகளுக்கு நூல் வெளியிடுவதில் கவனம் கொண்டிருந்தது. 1 - 4 வயது குழந்தைகளுக்கு படப்புத்தகங்களை (Picture books) வெளியிட்டது. 4 - 9 வயது குழந்தைகளுக்கு கதைப் புத்தகங்களை (Stories) வெளியிட்டது. வாழ்க்கை வரலாற்று நூல்களை அரசியல், சரித்திரம், விஞ்ஞானம், சமயம் என்று பிரித்துகொண்டு 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 300 தலைப்புகளில் நூல்களை வெளியிட்டது. ரூ.25 என்று ஒரே விலையில் அந்நூல்கள் இருந்தன. பெரிய ஊர்களிலுள்ள பிரபல கடைகளில் நூல்கள் விற்பனைக்குக் கிடைத்தன. தமிழ், ஆங்கிலம் ஆரிய இருமொழிகளில் நூல்கள் வெளியிடப்பட்டன. உலகப் புகழ்ப் பெற்ற இலக்கியங்கள், காப்பியங்கள் அவற்றுள் அடங்கும். குழந்தைகளுக்கான ‘புக் கிளப்’பும் நடத்தப்பட்டது.

குழந்தை இலக்கிய நூல்களை வெளியிடுவதில் பாரம்பரியம் கொண்டது பழனியப்பா பிரதர்ஸ். கிழக்கு பதிப்பகத்தின் ‘ப்ராடிஜி’க்கு முன்பாகவே நூற்றுக்கணக்கான வாழ்க்கை வரலாற்று நூல்களை ‘நாட்டுக்குழைத்த நல்லவர்கள்’ என்ற வரிசையில் வெளியிட்டு, நல்லவர்களின் வாழ்க்கையைப் படித்தால்தான் குழந்தைகள் நல்லவர்களாக வளருவார்கள் என்று கூறி பெற்றோரின் உள்ளங்களைக் கவர்ந்தது.

அழ.வள்ளியப்பா, பூவண்ணன், ரேவதி, கூத்தபிரான், செல்லகணபதி, ரத்னம் போன்ற புகழ்ப்பெற்ற குழந்தை எழுத்தாளர்களின் பாடல், கதை, கட்டுரை நூல்களை பழனியப்பா பிரதர்ஸ் நிறைய வெளியிட்டது.

மணிமேகலைப் பிரசுரம் தமிழ்வாணனின் ‘சங்கர்லால் துப்பறிகிறார்’ சாகசக் கதைகளை சிறுவர்களுக்காக வெளியிட்டது. பிற குழந்தை எழுத்தாளர்களின் நூல்களையும் அது வெளியிட்டது.

விகடன் பிரசுரம் குழந்தைகளுக்காக ‘சுட்டி விகடன்’ இதழை நடத்துகிறது.  ‘Hid club’யையும் நடத்தியது. சில முக்கிய நூல்களையும் அவ்வப்போது குழந்தைகளுக்காக வெளியிட்டது.

சிறு பதிப்பகங்களில் அரும்பு, அநுராகம், வனிதா, சூடாமணி, தென்மொழி, நீலவால் குருவி, குட்டி ஆகாயம், வையலி, கிறிஸ்தவ இலக்கிய சங்கம், அருணோதயம், குமரன், கலைமகள் காரியாலயம், வானம் ஆகியன முக்கியமானவையாகும்.

அரும்பு பதிப்பகம் கதை, கட்டுரை, அறிவியல் நூல்களை சிறுவர்களுக்காக வெளியிட்டது. ‘வானவில்’வரிசை என்று சிறுவர்களின் ஆளுமைப் பண்புகளை வளர்ப்பதற்கான நூல்களை தொகுதிகளாக வெளியிட்டது.

‘அநுராகம்’ குறைந்த விலையில் சிறு வெளியீடுகளை நூற்றுக் கணக்கான தலைப்புகளில் சிறுவர்களுக்காக வெளியிட்டது. நூல்களின் விலை ரூ.5, ரூ.10 என்பது பெற்றோர்களை இழுத்தது.

‘வனிதா பதிப்பகம்’ கோ.பெரியண்ணன் குழந்தை இலக்கியத்தில் ஈடுபாடு உடையவரென்பதால் நிறைய சிறுவர் இலக்கிய நூல்களை வெளியிட்டது,

‘சூடாமணி பிரசுரம்’ அருணகிரி நல்ல விற்பனையாளர் என்பதால் சிறுவர்களுக்கான நூல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

‘தென்மொழி பதிப்பகம்’ மொழி சார்ந்த நூல்களை குழந்தைகளுக்காக வெளியிட்டுள்ளது. பெருஞ்சித்திரனாரின் தனித்தமிழ் சார்ந்த பாடல் நூல்களையும் வெளியிட்டுள்ளது.

‘நீலவால்குருவி’ ரமேஷ் வைத்யாவின் ‘இருட்டு எனக்குப் பிடிக்கும்’ என்ற நூலை வெளியிட்டு குழந்தை இலக்கிய வெளியீட்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

சி.எல்.எஸ். கலைமகள், அருணோதயம், குமரன் ஆகியன குழந்தை இலக்கிய நூல்களை வெளியிட்டு வரும் பதிப்பகங்களாகும்.

‘வானம்’ பதிப்பகம் குழந்தைகளின் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் விதமாக நூல்களை வடிவமைத்து வெளியிடுவதில் கவனம் செலுத்துகிறது. ‘மாயக் கண்ணாடி’ என்ற சிறுவர் கதை நூல் அட்டையில் கண்ணாடியைப் பதித்து இப்பதிப்பகம் வெளியிட்டது. குழந்தைகளை மயக்கியது, மரப்பாச்சி சொன்ன ரகசியம், ஜெமீமா வாத்து, கிச்சா பச்சா, ஏணியும் எறும்பும் ஆகிய நூல்களை வெவ்வேறு வடிவங்களில் வெளியிட்டது குழந்தைகளைக் கவர்ந்தது. உலகப் புகழ்ப் பெற்ற ஆங்கில குழந்தை இலக்கிய நூல்களின் மொழி பெயர்ப்புகளையும் வெளியிட்டு குழந்தைகள் தொட்டுவிடும் தூரம்தான் வானம் என்பதையும் நிரூபித்துள்ளது.

பெரும்பாலும் குழந்தை எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் மூலமாக தங்கள் படைப்புகளை வெளியிடுகிறார்கள். சில காரணங்களால் எழுத்தாளர்களே பதிப்பகம் ஆரம்பித்து சொந்தமாக தங்கள் நூல்களை வெளியிடுகிறார்கள். தமிழ்க் குழந்தை இலக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

குழந்தை எழுத்தாளர் சங்கத் தலைவர் நெ.சி.தெய்வசிகாமணியும் செயலாளர் சௌந்தரும் தங்கள் நூல்களை சொந்த பதிப்பகத்தின் மூலமாக வெளியிட்டார்.

மழலைக் கவிஞர் குழ.கதிரேசன் ஐந்திணைப் பதிப்பகத்தை துவக்கித் பாடல்களை வெளியிட்டார். அவருடைய மழலைப் பாடல்கள் ஒலிப் பேழைகளாகவும் வந்தன. அவருடைய நூல்கள் பெரிய அளவில் வண்ணத்தில் வந்தன.

குழந்தைக் கவிஞர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் வசந்தா பதிப்பகத்தை ஆரம்பித்து தன் நூல்களை வெளியிட்டு வருகிறார். பேராசிரியர் ஏ.சோதி, ‘சக்தி’ வை.கோவிந்தன், பூவை அமுதன், ஏ.ஜி.எஸ். மணி, பி.வி.கிரி, முல்லை முத்தையா, சுகுமாரன் ஆகியோரும் தங்கள் படைப்புகளை சொந்த பதிப்பகத்தின் மூலமாகவே வெளியிட்டனர்.

அரசு நிறுவனங்களான நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்ய அகாதெமியும் தமிழ்க் குழந்தை வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருக்கின்றன. குழந்தை இலக்கிய நூல்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் தரமான வெளியீடுகளை குறைந்த விலையில் என்.பி.டி. தந்தது. சாகித்ய அகாதெமியும் குழந்தைப் பாடல்களுக்கும் கதைகளுக்கும் இரண்டு தொகுதிகளை வெளியிட்டுள்ளது.

தூளிகா, தாரா புக்ஸ் ஆகியன உயர்ந்த தரத்தில் குழந்தைகளுக்கு கதை நூல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பூவுலகின் நண்பர்கள் குழந்தைகளுக்காக அறிவியல், சூழலியல் நூல்களை வெளியிடுகின்றனர்.

தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பதிப்பகங்களின் செயல்பாடும் முக்கிய காரணியாக இருக்கிறது. குழந்தைகளை மையமாக வைத்து பதிப்பகங்கள் நூல்களை தயாரிக்கவேண்டும் அவ்வாறு தயாரிப்பதில் தனிக்கவனம் செலுத்த பதிப்பாசிரியர் (Editor) வேண்டும். பெரும்பாலான பதிப்பகங்களில் அப்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. சிறுவர்களின் விருப்பம், தேவை அறிந்து நூல்களை வெளியிடவும் நூல்களின் தரம், எண்ணிக்கையை உயர்த்தவும் அமெரிக்காவில் நூலகத் துறை (American Library Association) பதிப்பகங்களோடு இணைந்து செயல்படுகிறது. நம் அண்டை மாநிலமான கேரளாவில் கூட அத்தகையதொரு அமைப்பு (பால சாகித்ய இன்ஸ்டியூட்) இருக்கிறது. தமிழ்நாட்டில் இல்லை. இங்கு நூலகத் துறைக்கு பதிப்பகங்களுக்கும் உள்ள உறவை வெளியே கூட சொல்ல முடியாது.

குழந்தைகளுக்கான வெளிவரும் நூலின் எண்ணிக்கை, தரம் இவற்றைப் பொறுத்தே குழந்தை இலக்கியத்தின் வளர்ச்சியை அளவிட முடியும் என்கிறார்கள். இங்கு ஆண்டுக்கு 200 சிறுவர் நூல்கள் கூட வரவில்லை. அவை 1000 பிரதிகள் கூட அச்சிடப்படுவதில்லை. விற்பனை செய்ய மூன்றாண்டுகள் பிடிக்கிறது. தமிழில் குழந்தை இலக்கியத்தின் பதிப்பு நிலை இதுதான். 90% நூல்கள் மறுபதிப்பைப் பார்ப்பதில்லை.

2019ஆம் ஆண்டில் நடந்த சென்னை புத்தகக்காட்சியில் 800 அரங்குகள், 12,00,000 தலைப்புகளில் புத்தகங்கள். குழந்தை நூல்களுக்கென்று தனி அரங்கு இல்லை. 100 குழந்தை புத்தகங்கள் கூட புதிதாக வரவில்லை.

தமிழ்க் குழந்தை இலக்கியத்தை எப்படி வாழ வைக்கப் போகிறோம் என்ற கேள்விக்கு விடை தேடுவோம்.