lakshmana mudhaliyarதமிழைப் பயிற்று மொழியாக்க மெட்ராஸ் பல்கலைக்கழகம் துணை போகவில்லை

சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆரம்ப காலத்திலிருந்தே தமிழ் பயிற்று மொழிக்கான ஆதரவு இல்லை. 1924இல் சத்தியமூர்த்தி அவர்கள் உயர்நிலைப் பள்ளிகளில் வட்டாரமொழி பயிற்று மொழியாக்கப்பட வேண்டுமென்று தீர்மானம் கொண்டு வந்தார்.

இத்தீர்மானம் மாவட்டக் கல்விக் கழகங்களுக்கு அனுப்பப்பட்டது. அத்தீர்மானத்திற்கு ஒருமித்த கருத்து உருவாகவில்லை. இதனால் 1925இல் கல்வி இயக்குநர் சென்னைப் பல்கலைக்கழகக் குழுவோடு இணைந்து ஓர் அறிக்கை தயாரித்து அந்த அறிக்கையின்படி உயர்நிலைப் பள்ளிகள் ஆங்கிலத்தையோ வட்டார மொழியையோ தெரிவு செய்து கொள்ளலாம் என்று கூறியது. ஆகையால் உயர்நிலைப் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வி மெதுவாக நடைபெற்றது.

1938இல் அன்றைய சென்னை இராஜ்யத்திலிருந்து உயர்நிலைப் பள்ளிகள் அனைத்திலும் பயிற்சி மொழியாக இருந்த ஆங்கிலத்தை அகற்றி எல்லாப் பாடங்களும் தாய்மொழியிலேயே போதிக்கப்பட வேண்டும் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது. அப்போது கல்வித்துறை அலுவலரான ஆங்கிலேயர், ‘உயர்தரக் கல்வி’ தாய்மொழியில் அளிப்பதற்கான முதற்படி இது.

அடுத்தபடியாக கல்லூரிகளில் பாடங்கள் தாய்மொழியிலே போதிக்க ஏற்பாடாகும் என்று அதிகாரபூர்வமாக அறிக்கை விடுத்தனர். அதன் பிறகு சென்னைப் பல்கலைக்கழகம் தன் கடமையை உணர்ந்து அரசினர் ஆணைக்கேற்ப தமிழைப் பயிற்று மொழியாக்க முன் வந்திருக்க வேண்டும். ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்தவில்லை.

பல்கலைக்கழக பயிற்சி மொழியைப் பொறுத்த கருத்தின்படி பாடநூல்கள், குறிப்பு நூல்கள் முதலியவற்றை வட்டார மொழியில் தேவையான அளவில் கிடைக்க ஏற்பாடு செய்து கொண்டு, பிற ஏற்பாடுகளையும் தக்கபடி செய்துகொண்டு, வட்டார மொழியையோ பயிற்சி மொழியாக்க வேண்டும் என்ற பொதுவான கருத்து இருந்து வந்துள்ளது.

இந்தியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் அறிக்கை

1939 மார்ச்சில் பம்பாயில் நடைபெற்ற இந்தியப் பல்கலைக்கழகத்தின் நான்காவது மாநாடு (ஐந்தாண்டுக்கொரு முறை நடைபெறுவது) கீழ்க்காணும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

“பல்கலைக்கழகப் பட்டப் படிப்பும் அதற்குட்பட்ட மற்ற வகுப்புகளுக்கான பல்வேறு கட்டங்களிலுள்ள (கீழ் வகுப்புக்கள்) மாணவரின் தாய்மொழியிலேயே இருக்கவேண்டும் என்பதை இந்த மாநாடு கருதுவதாகத் தீர்மானிக்கப்படுகிறது”

அடுத்து 1948 முதல் ஐந்தாண்டு கால அளவிற்குள் பல்கலைக்கழக மட்டத்தினுள் பயிற்சி மொழி ஆங்கிலத்திலிருந்து இந்திய மொழிகளுக்கு மாற்றப்பட வேண்டும். அந்தக் கால கட்டத்திற்குப் பிறகு பயிற்சிமொழியாகவும், தேர்வு மொழியாகவும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தாமல் நீக்கிவிட வேண்டும் என்று 1948இல் இந்தியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் குழு ஒன்று பரிந்துரை செய்து உள்ளது.

இது குறித்துப் பல்கலைக்கழகக் குழு தனது ஆய்வினை வெளியிட இருந்ததன் காரணமாக இந்தத் துணைவேந்தர் குழுவின் பரிந்துரையைப் பரிசீலனை செய்த மத்தியக் கல்வி ஆலோசனைக் குழுவும் எவ்வித முடிவும் எடுக்காதிருந்தது.

எனினும், எவ்வளவு குறுகிய காலத்தில் செயல்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவில் ஆங்கிலத்திலிருந்து இந்திய மொழிக்குப் பல்கலைக்கழகம் பயிற்சி மொழியை மாற்றுவதே பல்கலைக்கழகங்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும்; அதே வேளை கல்வியின் தரத்திலும், விஞ்ஞானம், தொழில் நுட்பம் போன்ற பாடங்களிலும் அவற்றிற்குத் தேவையான இந்திய மொழி நூல்கள் தயாரிப்பதிலும் சிறப்புத்திறன் அமைந்திருக்க வேண்டும் என்று மத்தியக் கல்வி ஆலோசனை வாரியம் கருத்தறிவித்திருந்தது.

டாக்டர் இராதாகிருஷ்ணன் குழு

அண்மை ஆண்டுகளில் பல்கலைக்கழகக் கல்வி குறித்துக் கேள்விக்கிடமில்லாமல் ஆய்வு நடத்திய டாக்டர் இராதாகிருஷ்ணன் தலைமை­யிலான பல்கலைக்கழகக் கல்விக் குழு 1948இல் கீழ்க்கண்டவாறு முடிவு எடுத்தது.

வட்டார மொழியின் மூலம் கல்வி கற்பிக்கப்படுவதே ஜனநாயக சமுதாய நலத்தின் பொதுவான அடிப்படையிலும் கல்வியின் அடிப்படையிலும் அவசியமான ஒன்றாகும்.

இயல்பாக வட்டார மொழியில் கல்வி கற்பதன் மூலம் கல்வியின் உயர்ந்த தரத்தையும், சிந்தனையையும் அவர்கள் பெறுவதோடு, கல்வியின் விரிந்த எல்லை வரை சென்று ஆய்வு முறையில் ஈடுபாடு காட்டவும் தூண்டுகோல் உண்டாகிறது.

ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்திய மொழியை எவ்வளவு விரைவில் கொண்டு வர முடியுமோ அவ்வளவு விரைவில் கொண்டு வரவேண்டும் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். ஆனால் அந்தப் பயிற்சி மொழி (செயல் சாத்தியம் இல்லாத காரணத்தால்) வடமொழியாக (சமஸ்கிருதம்) இருக்க முடியாது. உயர்கல்வி இரண்டொரு பாடங்களோ, எல்லாப் பாடங்களுமோ இணைப்பு (பெடரல்) மொழியில் கற்பதற்கான விருப்ப நோக்கத்தையும் ஏற்கவேண்டும் என்பதையும் நாங்கள் அங்கீகரிக்கின்றோம் என்று குழு கூறியது.

இக்குழு கல்லூரிப் பாடங்கள் பிரதேச மொழியில் போதிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை வெளியிட்டது ஏகமனதாக எல்லோராலும் ஒத்துக் கொள்ளப்பட்டது. இக்குழுவின் ஒரு உறுப்பினர் டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார். இருப்பினும் இவர் தான் துணைவேந்தராகப் பணியாற்றிய சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழைப் பயிற்சி மொழியாக்கும் திட்டத்தை அமல்படுத்தவில்லை. ஆனால் இந்தியாவில் மற்ற பல பல்கலைக்கழகங்கள் செயல்படுத்தின.

உயர்நிலைப் பள்ளிக்கல்வி நிலை பற்றி ஆராய 1952ஆம் ஆண்டு டாக்டர் லட்சுமணசாமி முதலியார் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது. இக்குழுவும் உயர்நிலைப் பள்ளிகளில் தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்று பரிந்துரை வழங்கியுள்ளது. இக்குழுவானது தொடக்கநிலையில் கல்வியில் ஆங்கிலம் அல்லது இந்தி இவ்விரு மொழிகளுள் ஒன்றினைக் கற்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது.

அதற்கு அடுத்த நிலையில் தாய்மொழி அல்லது இந்திய மொழிகளுள் ஒன்றினைக் கற்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது. இக்காலத்தில் மைய அரசால் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு மும்மொழித் திட்டம் ஒன்றினைப் பரிந்துரை செய்தது. மைய அரசானது கல்வி ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று நடைமுறைப்படுத்தியது. டாக்டர் லட்சுமணசாமி முதலியார், கல்விக் குழுவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

மேலும், இதே துணைவேந்தர் சென்னை அரசு மேல் சபையில் பயிற்சி மொழிப் பீடத்திலிருந்து ஆங்கில மொழியை அனுவளவும் அகற்றக்கூடாது என்று பேசினார்.

சென்னைப் பல்கலைக்கழகச் செனட் சபையும் வெகு காலத்திற்கு தமிழைப் பயிற்சி மொழியாக்க முடியாது என முடிவெடுத்தது.

தென் இந்திய துணை வேந்தர்கள் மாநாடு - வட்டார பயிற்று மொழிக்கு எதிர்ப்பு

தென்னிந்திய துணைவேந்தர்களின் மாநாடு சென்னைப் பல்கலைக்கழகத்தில் 19-11-1961ஆம் நாள் நடைபெற்றது. அம்மாநாட்டை அன்றைய சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ.லட்சுமணசாமி முதலியார் தொடங்கி வைத்தார். அம்மாநாட்டில் டி.எம்.நாராயணசாமிபிள்ளை (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), வி.எல்.கிருஷ்ணர் (ஆந்திரப் பல்கலைக்கழகம்), டி.எஸ்.ரெட்டி (உஸ்மானியா) போன்ற ஆறு துணை வேந்தர்கள் பங்கேற்றனர். அம்மாநாட்டில் பயிற்று மொழிச் சிக்கல் விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முக்கியமானது.

  1. போதுமான பாதுகாப்பு முறைகளின்றி பல்கலைக்கழகங்களின் பயிற்று மொழியை மாற்றுவதென்பது மிகவும் ஆபத்தான சோதனையாகும்.
  2. இதுவரை நடைபெற்று வந்துள்ள அறிவியல், தொழில் சார்ந்த பரப்புகளைப் பொறுத்தமட்டில் பயிற்றுமொழி மாற்றம் என்பது பிற்போக்கான முயற்சியாகும்.

இது போன்ற தீர்மானங்கள் பயிற்சி மொழிச் சிக்கலுக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றியது, பயிற்றுமொழி ஆதரவாளர்களைக் கவலை கொள்ளச் செய்தது.

காமராஜ் அமைச்சரவை தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு வர நினைத்த பொழுது தமிழ் பயிற்று மொழிக்கு ஆட்சிக்குழு ஆதரவு தெரிவித்தாலும் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார் தான் ஆதரவு தராது காலம் கடத்தினார். இதைக் கண்டு அரசு ஒரு புதிய கொள்கையை வகுத்து தானே தமிழை வளர்க்க நினைத்தது.

இதனைத் தொடர்ந்து சென்னை அரசினர் 1959இல் தமிழ் வளர்ச்சிக் குழுவை நிறுவினர். இதைத் துவங்கி வைத்த நாளன்று கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் தன் வரவேற்புரையில் தமிழைப் போதனா மொழியாக்க வேண்டுவது இன்றியமையாதது. ஆயினும் பல இடர்பாடுகள் உள்ளன.

சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்கள் இதற்கான முயற்சி செய்து திட்டம் வகுக்க முன்வரவில்லை. எனவே, அவற்றை நம்பிக்கொண்டிருந்தால் இச்செயல் நிறைவேறுமா? நிறைவேறாதா? என ஐயுற வேண்டியிருக்கிறது. தமிழிலே பாடம் போதிக்க முடியாது என்று சிலர் பேசுகின்றனர். அதில் உண்மை இல்லை என்பதை விளக்கத்தான் இக்குழு துவக்கப்பட்டுள்ளது என்று பேசினார்.

தமிழ்நாட்டில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு தமிழக அரசு துணிந்த காலத்தில் 1960ஆம் ஆண்டில் கோவை அரசுக் கல்லூரியில் பி.ஏ.பாடத்திற்கு மட்டும் தமிழைப் பயிற்சி மொழியாக்க வேண்டும் என்று தீர்மானித்தது.

1963இல் மாநிலத்திலுள்ள எல்லாக் கலைக் கல்லூரிகளிலுமே தமிழைப் பயிற்சி மொழியாக்க இக்குழு முழுமனதாக ஒப்புக் கொண்டது.

1970ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பல கல்லூரிகளில் தமிழ் பயிற்று மொழித் திட்டத்தை விரிவுபடுத்தும் ஆணையை சிண்டிகேட் காங்கிரஸ்காரர்களும் டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார் போன்றவர்களும் எதிர்த்தனர். மதுரையில் இவ்வாணையை எதிர்த்து மாநாடு ஒன்று நடந்தது. மாணவர்கள் பெரும் போராட்டத்தில் குதித்தனர்.

போராட்டத்தைத் தொடர்ந்து தமிழக அரசு 1970 டிசம்பர் 28இல் டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியாரைத் தலைவராகக் கொண்டு நெ.து.சுந்தரவடிவேல், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், சந்திரன், தேவநேசன், ஜி.ஆர்.தாமோதரன் ஆகியோரை உறுப்பினராகக் கொண்டு பயிற்று மொழி குறித்து ஆராய ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது.

இவ்வல்லுநர் குழு, ஆய்விற்குப் பின் அரசுக்குப் பின்வரும் பரிந்துரைகளை முன் வைத்தது.

  1. பயிற்று மொழியைத் தேர்வு செய்யும் உரிமையை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.
  2. தமிழ் மட்டும் கற்க வாய்ப்பளிக்கப்படும் அரசுக் கல்லூரிகளில் ஆங்கில வழியில் பயில விரும்பும் மாணவர்களுக்குத் தக்க வழிகளைச் செய்து தரவேண்டும்.
  3. தமிழ் பயிற்று மொழியாக்கப்படாத தனியார் கல்லூரிகளில் தமிழ் வழிக் கல்வியை மாணவர்கள் விரும்புவார்களாயின் தக்க நடவடிக்கைகளைச் செய்யுமாறு தனியார் கல்லூரி நிருவாகத்தினரை அரசு பணிக்க வேண்டும்.

மேலும் அக்குழு கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் ஆங்கிலம் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படும் தற்போதைய நிலை தொடரப்பட வேண்டும். பள்ளி மட்டங்களில் ஆங்கிலம் கற்பித்தலைக் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்ற வேண்டும்.

இதற்கு ஏற்ற வகையில் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் நாட்டம் உண்டாகக் கூடிய அளவில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். தமிழ் வழியில் பயிலும் மாணவர்களும் ஆங்கிலத்தில் மேற்பார்வை நூல்களைப் படித்தறியுமளவிற்குத் திறன் பெறுதல் வேண்டும். இது ஆங்கிலத்திலுள்ள பரந்துபட்ட அறிவைப் பெற்றுத் தமிழில் கருத்துக்களை வெளிப்படுத்த உதவும் என்று ஆங்கிலத்தில் இன்றியமையாமையைச் சுட்டிக் காட்டியது.

இதுபோன்று பல குறிப்புகள் இருப்பினும் மேற்கண்ட குறிப்புகள் முக்கியமானவைகள். இக்குழு அறிக்கையை உற்றுப் பார்த்தால் ஆங்கிலத்திற்கான ஆதரவும், ஆங்கிலம் நீட்டிக்க வழி செய்யும் ஆணைகளும், மேலும் பயிற்று மொழித் தேர்வு மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற ஒரு தெளிவற்ற ஆணையும் தமிழைப் பயிற்று மொழியாக்க முடியாத ஒரு சூழ்நிலையையும் உருவாக்கி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

1970இல் கலைஞர் தமிழைப் பயிற்று மொழியாக்கிய பொழுது பெரும் போராட்டம் நடந்தது. அரசு இறுதியில் அரசாணையை ஆராய டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார் தலைமையில் சென்னை, மதுரை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டது.

இக்குழுவிற்குத் தலைவராக ஏ.லட்சுமணசாமி முதலியாரை அமைத்தது. ஒரு தலைசிறந்த கல்வி அறிஞரை நியமித்தது சரியென்று பட்டாலும் இவரும் இவருடைய சகோதரருமே (ஏ.ராமசாமி முதலியார்) சிண்டிகேட் காங்கிரசின் ஆதரவுடன் ஆங்கிலத்தை ஆதரித்து மாநாடுகளையும், கடை அடைப்புகளையும் நடத்தியது இக்காலகட்டத்தில்தான்.

இப்போராட்டத்தின் பொழுதுதான் தலைமைச் செயலகம் முன் மாணவர்கள் சுமார் ஈராயிரம் பேர் போராட்டம் நடத்தினர். இதனையும் தாண்டி ஈரோட்டுப் பள்ளிகளில் 1,400 பேர் தமிழ்க் கல்வியை எதிர்த்து தமிழ்த் தேர்வுகளை எழுத மறுத்தனர் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டதாகவும் அறிவித்தது. இக்குழுவின் பரிந்துரைகள் தமிழ் வழிக் கல்விக்குக் கேடாக அமைந்தது.

1980இல் சென்னைப் பல்கலைக்கழகம் முந்திய பரிந்துரைகளை உறுதிப்படுத்தி பல்கலைக்கழக வகுப்புகளில் வட்டார மொழியில் கற்பிக்கும் ஏற்பாடுகளை விரைந்து செயல்படுத்தும் அவசியத்தையும், சிண்டிகேட் வலியுறுத்தியது. ஆனால் நடைமுறைப் படுத்தவில்லை.

ஒவ்வொரு கட்டத்திலும் தமிழைப் பயிற்றுமொழியாக இருக்க அரசு நினைத்த பொழுதும் சென்னைப் பல்கலைக்கழகம் நடைமுறைப்படுத்தவில்லை. மாறாக ஆங்கிலப் பயிற்சி மொழி வளர்ச்சிக்கு ஆதரவு காட்டியது. மேலும் தமிழைப் படிக்க வசதி செய்து தரவில்லை. தமிழ் படித்து இப்பல்கலையில் வேலை பார்த்தவருக்கும் மற்றவரை விட குறைந்த சம்பளமே கொடுத்தது. தாய்மொழிப் படிப்புக்கு ஏற்றதொரு சூழ்நிலையை ஏற்படுத்தித் தராத சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் வித்துவான் பட்டம் பெற இடர்பாடுகளைச் செய்தது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வித்துவான் பட்டம் பெற தமிழேயன்றி பிரிதொரு மொழியும் அவசியம்

19ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டம் பெற விரும்பும் ஒரு தமிழ் மகன் தமிழேயன்றி வடமொழியிலும் தேர்ச்சி பெறவேண்டும் என விதி இருந்தது. அல்லது வடமொழியை ஒதுக்கிப் ரிதொரு மொழியில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பயனாகத் தமிழ்நாட்டில் வாழும் பிற மொழியாளர்கள் வித்துவான் ஆவதற்கு இருந்த எளிய வாய்ப்பு தமிழர்க்கு இல்லை.

வித்துவான் பட்டம் பெற்றவர்களும் அச்சொல்லின் வடிவுக்கேற்பப் பெரும்பாலும் வடமொழி பயின்றவர்களே. வடமொழியும் கற்றவர் என்று கூறுவது பொருந்தாது. தமிழும் கற்றவர்கள் எளிதாகத் தமிழ் வித்துவான்கள் ஆனார்கள். உண்மையான தமிழ்ப் புலமையுடையார் பலரும், வித்துவான் பட்டம் பெறுவதற்குக் கருதவே இடமில்லாத நிலை.

பேராசிரியர் நமச்சிவாயனார் 1920ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் தமிழ் கல்விக்குழுத் தலைவராக அமர்ந்த பின்னரே பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் புலமையும் அமர்வதாயிற்று. அதன் பயனாகவே தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் முறையாகக் கற்ற அளவில் வித்துவான் பட்டம் பெறலாம் என்ற நீதி பிறந்தது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் மற்றைய மொழிப் புலவர்களைவிட தமிழ்ப் புலவருக்குச் சம்பளம் குறைவு

தமிழ்ப் பண்டிதர் கா.நமச்சிவாய முதலியாருக்குக் கிடைத்த சம்பளம் மற்ற மொழிப் புலவர்களுக்கு, மொழிப் பண்டிதர்களுக்குக் கொடுக்கப்பட்ட சம்பளத்தைவிடக் குறைவான சம்பளமாக இருந்தது. இந்தச் செய்தி தெரிந்தவுடனே அப்பொழுது ஆட்சி­யிலிருந்தவர்கள் தந்தை பெரியாரிடம் சொல்லி இதைப் பற்றி ஒரு தலையங்கம் எழுதுங்கள் என்று சொன்னார்கள்.

அதற்கு ஒப்ப தமிழ்நாட்டில் தமிழ் படித்தவர்களுக்கு ஏன் குறைந்த சம்பளம் கொடுக்கிறீர்கள் என்று கேட்டு, வடமொழி படித்தவர்களுக்கும், ஆங்கிலம் படித்தவர்களுக்கும் சமமாகவே சம்பளம் கொடுக்க வேண்டும் என்று தலையங்கம் எழுதிய பிறகுதான் பல்கலைக்கழகம் மற்றைய மொழிப் புலவர்களுக்கான சம்பளத்தைப் போலக் கொடுத்தது.

கூட்டிக் கழித்துப் பார்க்கையில் தமிழைப் பயிற்று மொழியாக்க பல்கலை ஆட்சிக்குழுவும் அரசும் நடவடிக்கை மேற்கொண்டாலும், பல்கலைக்கழகம் தமிழைத் தழைக்கவிடாது செய்தது போல் தோன்றுகிறது.

- டாக்டர் சு.நரேந்திரன் எம்எஸ்., பிஎச்.டி.,