கர்நாடகா:

ஒரே ஒரு பணக்காரக் குடும்பம் நினைத்தால் ஒரு மாநில ஆட்சியையே கவிழ்த்து விட முடியும் என்பதை நமக்கு அண்மையில் கர்நாடகத்தில் கண்ட நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன. எடியூரப்பா ஆட்சியை சில ஆயிரம் கோடி செலவழித்துக் கொண்டு வந்ததே ரெட்டி சகோதரர்கள்தான். இந்த ரெட்டி சகோதரர்கள் கர்நாடகாவின் இரும்பு, கிரானைட் இயற்கை வளங்களை ஏகக் குத்தகைக்கு எடுத்துக் கொள்ளையடிப்பவர்கள். பி.ஜே.பி.யை நட்டமாய் நிறுத்தியவர்கள். இவர்கள் இருவரும் அமைச்சர்கள் வேறு.

தங்கள் சக பெண் அமைச்சர் ஒருவரே தங்கள் தொழிலுக்கு வரியை உயர்த்தியதை எதிர்த்து 69 எம்எல்ஏக்களைப் பிடித்து ஆட்சியைக் கவிழ்ப்பதில் இறங்கினர் ரெட்டி சகோதரர்கள். எடியூரப்பா, எலியூரப்பா ஆகி டில்லிக்கு ஓட்டம் பிடித்தார். பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைமையும் ஆடிப் போனது. தென்னிந்தியாவில் கிடைத்த ஒரே ஒரு மாநிலமும் பறிபோய் விடுமே என்று பயந்து ரெட்டி சகோதரர்களிடம் சரணாகதியடைந்தனர். வரியை அதிகரித்த பெண் அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டது. ஆட்சி நிலைத்தது. இந்திய அரசியலில் இது ஒரு புதிய போக்குதான். பணம் பதினென்றும் செய்யுமோ?

ஆந்திரா

ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த போது அந்த மாநிலமே கண்ணீர் விட்டு அழுதது. 366 பேர் துக்கம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டனர். தொலைக்காட்சி மற்றும் செய்தி ஊடகங்கள் துக்கத்தையும் கண்ணீரையும் வரவழைத்தன. அந்த அளவுக்கு ராஜசகேர ரெட்டியின் மக்கள் நலத்திட்டங்களை மக்களைக் கவர்ந்துள்ளது. அது அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியையே வாரிசு முதல்வராக்க வேண்டும் என்ற அளவுக்குப் போனது.

இப்போது வரும் செய்திகள் ஆந்திராவை மட்டுமல்ல, நாட்டையே உலுக்குகிறது. ஆம்! ராஜசேகர ரெட்டி குடும்பத்தின் சொத்து எழுபத்தெட்டாயிரம் கோடி ரூபாய் என்று கண்டுபிடித்துள்ளனர். இந்தக் குடும்பமும் கிரானைட், இரும்பு மற்றும் கனிம வளங்களைக் கொள்ளையோ கொள்ளை என்று கொள்ளையடித்துள்ளது. சத்யம் கம்ப்யூட்டர் வரை அதன் ஆக்டோபஸ் கரங்கள் நீண்டுள்ளது. முதல்வர் பதவியில் சில ஆண்டுகள் இருந்தாலே இத்தனை ஆயிரம் கோடியா? மக்கள் நலத்திட்டங்களுக்குப் பின்னால் நடக்கும் கொள்ளையா? ஐயோ! மலைக்க வைக்கிறது.

ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டே ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த மதுகோடா 4,000 கோடி சுருட்டியுள்ளார். மிகக் குறுகிய காலத்தில் இது சாதனைதான். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் சாதாரணத் தொழிலாளி. பிஜேபியில் ஆதிவாசி மக்களின் செல்வாக்கோடு உயர்ந்தார். அமைச்சராகி சுரங்க அமைச்சராகி, முதல்வராகி இப்போது வருமானவரித்துறையிடம் சிக்கினார். பிஜேபியிலிருந்து விலகி காங்கிரசிலும் சேர்ந்து கொண்டவர்.

தற்போது இந்தியாவின் முக்கிய நகரங்களில் 70 மாளிகைகள் மதுகோடாவுக்குச் சொந்தமாக உள்ளதை வருமானவரித்துறை கண்டுபிடித்துள்ளது. ரூ.375 கோடி சுவிஸ் வங்கியில் போட்டிருப்பதையும் பிடித்துள்ளனர். அமைச்சராய் இருந்தபோது, 35 லட்ச ரூபாய் மட்டுமே சொத்துக் கணக்கு காட்டியவர், இன்று நாலாயிரம் கோடிக்கு அதிபதி. ஆனால் இந்த ஆதிவாசித் தலைவருக்கு அடித்த பணத்தை மறைக்கத் தெரியாமல் சிக்கியிருக்கிறார். அறக்கட்டளைகள், பள்ளிகள், கல்லூரிகள் என்று துவங்கியிருந்தால் வள்ளலாய் பவனி வந்திருப்பார் மதுகோடா.

ஒரு சிறிய மாநிலத்தில் முதலமைச்சராக இரண்டே ஆண்டுகள் முதல்வராயிருந்து 4,000 கோடி சம்பாதித்தால் வளமான பெரிய மாநிலங்களை ஆளுவோர் எவ்வளவு சம்பாதிப்பார்கள்? கொள்ளையடித்த பணத்தால் மக்களை ஏமாற்றி ஜனநாயகத்தைச் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை

கொலைகாரர்களிடையே பிளவு:

இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்து, ஒன்றரை லட்சம் தமிழர்களை முள்வேலி முகாம்களில் அடைத்து, இன்று வரை தமிழக மீனவர்களின் வாழ்வைச் சூறையாடி வருபவர்கள் அதிபர் ராஜபக்சேவும், ராணுவத் தளபதி பொன்சேகாவும். இருவரும் கொலைகாரர்கள்தான். இப்போது கொலைகாரர்களுக்குள்ளேயே வெட்டாகி தளபது பொன்சேகா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் அதிபர் தேர்தல் வந்தால் ராஜபக்சேயை எதிர்த்து பொன்சேகா போட்டியிடப் போவதாகவும், அவரை அமெரிக்கா ஆதரிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

விவசாயம் பாழாகிறது!

உலகமயத்தால் இந்திய விவசாயம் பாழாகி வருகிறது. தொழிற்சாலைகள், ரியல் எஸ்டேட்டுகளால் விளை நிலங்கள் சுருங்கி வருகின்றன. ஆளுவோரும், அமைச்சர்களும், முதலாளித்துவ அரசியல் பிரமுகர்களும் மண்ணாசை வெறிபிடித்து நிலங்களை விழுங்கி வருகிறார்கள். தாதாக்கள் மூலமும், பத்திரப்பதிவு மோசடிகள் மூலமும் விவசாயிகளின் நிலங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

விவசாயிகள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. நாடு உணவு தானியங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியை நம்பி வாழ வேண்டிய நிலையை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கி விட்டன. விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்களை அதைவிடப் படுகுழிகளில் தள்ளப் போகிறார்கள். தெருவில் இறங்காமல் தீராது மக்கள் துயரம்.

தமிழ்ச் செம்மொழி மாநாடு

உலகத் தமிழ் மாநாடு என்று அறிவிக்கப்பட்டு பின்பு தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஜூனில் கோவையில் நடைபெறும் என்று கலைஞர் அறிவித்துள்ளனர். இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்டு பலரும் இதை வரவேற்றுப் பங்கேற்பதாய் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கம் போன்ற அமைப்புகள் மாநாட்டில் தங்களுக்குரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டுமென்று அரசைக் கோரியுள்ளன.

முதல் உலகத் தமிழ் மாநாடு 1966-ல் மலேசியாவிலும், 2-வது மாநாடு 1968-ல் சென்னையிலும், 3-வது மாநாடு 1970-ல் பாரிசிலும், 4-வது மாநாடு 1974-ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலும் நடைபெற்றது. 5-வது மாநாடு 1981-ல் மதுரையிலும், 6-வது மாநாடு 1987-ம் ஆண்டு கோலாலம்பூரிலும், 7-வது மாநாடு 1989-ல் மொரிஷியசிலும் நடந்தன. 1995-ல் 8-வது உலகத் தமிழ் மாநாடு தஞ்சையில் நடைபெற்றது. இதில் 21-ம் நூற்றாண்டுக்கு தமிழ்ப் பண்பாட்டின் பங்களிப்பு பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வுக் கட்டுரைகள் 1000 பக்கங்களில் 5 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டதாய்க் கூறப்படுகிறது. ஆனால் இந்த ஆய்வு மலர்கள் 14 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் யாருக்கும் படிக்கக் கிடைக்காமல் கிடப்பது தமிழனைப் பிடித்த துரதிருஷ்டம். 

பேராண்மை

அந்தக் காலத்தில் ஜெமினியின் ``இரும்புத்திரை'' திரைப்படத்திற்குப் பிறகு தொழிலாளர் இயக்கம், பொதுவுடைமை பேசிய திரைப்படங்கள் வெற்றியடையவில்லை. அக்காலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ``பாதை தெரியுது பார்'' முதல் பல படங்கள் வந்திருந்தாலும், அவை வெற்றி பெறவில்லை. ஆனால் அண்மையில் தோழர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வெளிவந்துள்ள பேராண்மை திரைப்படம் வெற்றியடைந்திருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விசயமாகும்.

படம் உலகத் தரத்துடன் எடுக்கப்பட்டிருப்பதால் இது ஆங்கிலத்தில் `டப்' செய்யப்பட்டு ஏற்றுமதியாகவுள்ளது என்பதும் மகிழ்ச்சிக்குரியது. இந்த வெற்றிப் படத்திற்கு ஆதர்சமாக இருந்திருப்பது பரீஸ் வாசிலியேவ் எழுதிய ``அதிகாலையின் அமைதியில்'' என்ற சோவியத் நூலாகும். பெண்களின் வீரம், தியாகம் இப்படத்தில் போற்றப்பட்டுள்ளது. புரட்சி, பொதுவுடைமை போன்ற சொற்கள் படத்தில் செவிகளை அதிர வைக்கின்றன. ஜனநாதனை நெஞ்சதிரப் பாராட்டுவோம்.

Pin It