rajagopalachariஇந்திய விடுதலைக்கு முன் 1911 – 1920 களில் வட்டார மொழிகளின் வாயிலாக அறிவியல் கல்வியை பள்ளிகளில் வழங்க அரசு முடிவெடுத்தது. இதனைத் தொடர்ந்து தனியார் பாடநூல் விற்பனையாளர்கள் தயாரித்து வெளியிட்ட நூல்களையே அரசுப் பள்ளிகளுக்குப் பரிந்துரை செய்தது.

இக்காலகட்டத்தில் பள்ளிப் பாடத்தை அடிப்படையாகக் கொண்டு பல பாடநூல்கள் வெளிவந்தன. பாடநூல்களை ஆக்கம் செய்பவர்களுக்கு, கலைச் சொற்கள் தேவைப்பட்டன. இதனால் தனிமனித முயற்சியில் தோன்றிய தமிழ்க் கலைச் சொல்லாக்கம் புதிய உள்ளடக்கத்துக்கு மாறியது.

தமிழ் உள்ளிட்ட வட்டார மொழிகளில் பாடநூல்களைத் தயாரிக்கும் பணியில் தனியார் நிறுவனங்கள் மட்டுமல்லாது தனிமனிதர்கள் சிலரும் ஈடுபடத் தொடங்கினர். இதனால் கலைச் சொல்லாக்கம் பற்றிய பரவலான விவாதம் எழுந்தது.

ஆங்கிலேய எதிர்ப்புணர்வின் காரணமாக அவர்களிடம் சொந்த மொழிகளான வட்டார மொழிகளில் ஐரோப்பிய அறிவியலைத் தரும் முயற்சி தீவிரம் அடைந்தது. இக்காலகட்டத்தில் பாரதியாரிடமும், இராஜகோபாலாச்சாரியாரிடமும் இத்தகைய தாக்கத்தைக் காணமுடிகிறது.

கலைச்சொல் சங்கம்

சேலத்தில் இராஜாஜியும் வெங்கட சுப்பையரும் இணைந்து 1916ஆம் ஆண்டு “விஞ்ஞானத் தமிழ் பதங்கள்” (The Tamil Scientific Terms Society) என்ற அமைப்பைத் தொடங்கினர். சேலம் கல்லூரியில் இயற்பியல் துறையின் பேராசிரியராகப் பணியாற்றிய இராமநாதய்யர் இச்சங்கத்தின் செயலராக இருந்துள்ளார்.

சங்கத்தின் நோக்கம்

கலைச்சொல் சங்கத்தின் முதல் இதழ் அக்டோபர் 1916இல் வெளியிடப்பட்டது. அந்த இதழில் இடம் பெற்றுள்ள சங்கத்தின் நோக்கங்கள் வருமாறு: “ஒரு நாட்டின் மொழியில் நூல்கள் வெளியிட விரும்புவோர் சந்திக்கும் மிகப் பெரும் சிக்கல் என்று நாங்கள் கருதுவது என்னவெனில்... அறிவியல் கலைச்சொற்கள் இல்லாமையும் கலைச்சொற்களை உருவாக்கும் பணிகள் ஏற்படுத்தியுள்ள குழப்பமான நிலையுமாகும்.

இக்குழப்ப நிலையை மாற்றியமைத்து ஒரு முறையைக் கொண்டு வர முயல்வதே இப்பத்திரிகையை ஓர் அங்கமாகக் கொண்ட இச்சங்கத்தின் குறிக்கோள். தமிழில் அறிவியல் கலைச்சொற்களையும், இணைச் சொற்கள் தேவைப்படும் மற்ற சொற்களையும் தேர்ந்தெடுத்து வெளியிடவும், கற்றவர்களால் (Learned Public) பரிந்துரைக்கப்படும் இணைச் சொற்களை விவாதிக்கவும், அந்த விவாதங்களின் முடிவில் “ஏற்றுக் கொள்ளப்படும் சொற்களைத் தொகுத்து ஒரு தரப்படுத்தப்பட்ட சொல்லகராதி உருவாக்கி வெளியிடவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு தமிழில் தரப்படுத்தப்பட்ட அறிவியல் சொற்களின் அகராதி வெளியிடுவதென்ற இச்சங்கத்தின் நோக்கத்தைப் பூர்த்தி செய்வோம் என்று நம்புகிறோம்.” (Gregory James 1991: 158)

அக்கால கட்டத்தில் நிலவிய கலைச்சொல் தட்டுப்பாடு கலைச் சொல்லாக்கத்தில் குழப்பநிலை ஆகியனவற்றைக் களையும் பொருட்டே இச்சங்கம் தொடங்கப்பட்டது. கலைச்சொற்களை உருவாக்கி, விவாதித்து “தரப்படுத்தப்பட்ட கலைச்சொல் அகராதியை” உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இச்சங்கம் செயல்பட்டது. சங்கத்தின் இப்பணிகள் தமிழ்க் கலைச் சொல் வரலாற்றில் குறிப்பிடத்தக்கவையாகும்.

சங்கத்தின் முதல் இதழ் இச்சங்கத்தின் நோக்கத்தைத் தந்துள்ளதுடன் இதழின் நோக்கங்களையும் தெரிவிக்கிறது.

அ) தமிழில் இணைச் சொற்கள் தேவைப்படும் சொற்கள் சொற்றொடர்களின் பட்டியல்

ஆ) தற்காலிக இணைச் சொற்கள் ஆலோசனைகள்

இ) பாடம் தொடர்பான கட்டுரைகள், கடிதங்கள் தொடர்புகள், பாடம் தொடர்பான சில பகுதிகளை வெளியிடுதல் (Gregory James 1991: 159)

பாரதியார் சாடல்

இவ்வாறு விரிவான நோக்கங்களுடன் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட இந்த இதழைப் பற்றி பாரதியார் “தமிழில் சாஸ்திர பரிபாஷை மாஸப் பத்திரிக்கை” என்ற சேலத்துப் பத்திரிகையின் முலாவது சஞ்சிகை இங்கிலீஷில் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆரம்பத்திலேயே தமிழில் எழுதாமல் தமிழர்களுக்கு வேண்டிய இக்காரியத்தை இங்கிலிஷ் பாஷையிலே தொடங்கும்படி நேரிட்டதற்கு ஸ்ரீராஜகோபாலாச்சாரியார் சொல்லும் முகாந்திரங்கள் எனக்கு முழு நியாயமாகத் தோன்றவில்லை. ஆனால் கூடிய சீக்கிரத்தில் தமிழ்ப் பகுதியன்று வரும் என்று கேள்விப்படுகிறேன்.

அங்ஙனம் தமிழ் சேர்த்து நடக்கும் சாஸ்திரப் பத்திரிகையினால் தமிழ்நாட்டாருக்கு மிகப் பெரிய பலன் விளையுமென்பதில் சந்தேகமில்லை” (பாரதி 1997: 208) எனக் கருத்துத் தெரிவித்தார்.

பா.வே.மாணிக்க நாயக்கர் கருத்து

இவ்விதழைக் கண்ணுற்ற தமிழறிஞர் பெரிஞர் பா.வே.மாணிக்க நாயக்கர். இவ்விதழில் கலைச்சொல் தேர்வு முறையை எதிர்த்து பின்வரும் கருத்தை முன் வைக்கிறார். “சேலத்தில் அந்தண மரபினரின் பன்னிரண்டிற் பாதியர் எனது நண்பர்கள். தமிழைத் தூக்கிவிடும் ஆர்வத்தோடு புதுக் கொள்கைகளையுணர்த்தப் புதுச் சொற்களைக் கோடற்கு ஒரு கழகம்

“தி டமில் சையின்டிபிக் டெர்ம்ஸ் சொசைட்டி” என்று பெயரிட்டு உண்டாக்கினர். அதனை நாட்டியவர்கள் மிகவும் கல்வியாளர்கள் என்பதும், நுண்ணறிவினர்கள் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். ஆகையால் அவர்கள் வடமொழி மேற் சாய்ந்த நோக்கினராக நேர்ந்தனர்.

வடமொழியில் தேர்ந்த புலமை ஏதேனும் வாய்த்ததால் அன்று, வேறு என்ற பொருட்டென்பது அவர்களுக்கே தெரிந்தது. இவர்கள் வெளியிட்ட தாள்களில் டமில் சையின்டிபிக் டெர்ம்ஸ்க்குத் தமிழ்ச் சொற்கள் இயற்றுவதா? அல்லது ஆரியத்தில் இயற்றுவதா? என்ற கேள்வி கிளம்பிற்று. தமிழ் மொழிக்கு அரபியில் இயற்றுவதா? ஹீப்ருவில் இயற்றுவதா? என்பதாக ஏனோ இவர்கள் கருதவில்லை” என்று எழுதினார்.

இக்காட்டமான விவாதங்களுக்குப் பின் பாரதியின் கோரிக்கையை ஏற்று சங்கத்தின், இதழைத் தமிழில் வெளியிட்டனர். 1917இல் கலைச்சொல் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட இதழில் தாவர இயல், ரசாயனம், பௌதீகம், உடற்கூறு சாஸ்திரம், வான சாஸ்திரம், கணிதம் ஆகிய பிரிவுகளில் கலைச்சொற்கள் தரப்பட்டுள்ளன.

இச்சங்க முயற்சிகளின் விளைவாகக் கலைச்சொல் இதழ்கள் நான்கு மட்டுமே வெளிவந்தன. இச்சங்கத்தின் முயற்சிகள் சில மாதங்களிலேயே தோல்வி அடைந்து, இதழும் நின்று விட்டது.

சங்கத்தின் இதழ்களில் வெளிவந்த கலைச் சொற்களைத் தமிழர் நேசன் (இதழ்: 1 மலர்: 3) வெளியிட்டது. Atom - பரமாணு, Centre of Gravity _ குருத்துவ கேந்திரம், stress - பீடனம், Strain - விகாரம், Volum - கனபரிமாணம், Viscosity - ஸ்நிகத்துவம்.

மொழித் தூய்மைக்கான அடிக்கல்

இராஜாஜி கலைச்சொல் இதழை நடத்திய கால கட்டத்தில் சுதேச இயக்க ஆதரவாளராக இருந்தார். எனவே அவருடைய கலைச் சொற்களில் ஆங்கிலச் சொற்களை எதிர்க்கும் போக்கும் சமஸ்கிருத ஆதரவுப் போக்கும் காணப்பட்டது.

இதன் பின்னர் அரசு கலைச்சொல் நூற் பட்டியலை வெளியிட்டது. இதில் மிகையாக வடசொல் காணப்பட்டதால் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் கலைச்சொல்லை உருவாக்கத் திட்டமிட்டது(1934). இது மொழித் தூய்மை வாதத்திற்கான அடிக்கல்லாக அமைந்தது.

இச்சங்கத்தினரால் தொகுக்கப்பட்ட சொற்களைத் துறை வாரியாகப் பிரித்து நூலாக்கம் செய்து 1938இல் கலைச்சொற்கள் என்ற தலைப்பில் வெளியிட்டனர். இந்நூலினை அச்சிட நிதி கொடுத்தவருடன் சென்னை மாகாண முதலமைச்சர் இராஜாஜியும் ஒருவர். மேலும் இந்நூலுக்கு முன்னுரை வழங்கியவரும் இராஜாஜியே ஆவார்.

முன்னுரையில் மொழிந்தது

“தமிழில் கலைநூல்களனைத்தையும் எழுதவும் விளக்கவும் முடியும் என்பதைச் சிலர் இன்னும் ஒப்புக் கொள்வில்லை. இதற்கு முக்கிய காரணம் பௌதீக சாஸ்திர ஆராய்ச்சிக்கு வேண்டிய சொற்கள் புழக்கத்தில் இல்லாமையே ஒழிய வேறில்லை.

எந்த பாஷையும் அதன் வாயிலாகப் பொருள்களை விளக்க முயன்றால் ஒழிய நூல்களுக்கு வேண்டிய மொழிகளும் தொடர் மொழிகளும் அதன்கண் அமைவில்லை. மொழிகள் தானாகவே அமைந்து பொங்கும்.

இவ்வாறே ஆங்கிலத்திலும் பிற மேல்நாட்டு மொழிகளிலும் கலைச் சொற்கள் உண்டாகி அம்மொழிகள் வளர்ச்சியடைந்து வருகின்றன." (கலைச் சொற்கள் 1938: முன்னுரை) என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதே காலகட்டத்தில் இராஜாஜி இந்தியைக் கட்டாயப் பாடமாக்கி தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு அடித்தளமிட்டார். இருப்பினும் வடசொல் கலந்து கலைச்சொற்களை உருவாக்குவதை எதிர்த்து சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் நடத்திய கலைச் சொல்லாக்கக் குழுவில் தானும் ஓர் உறுப்பினராக இருந்து கலைச் சொற்களை உருவாக்கினார் இராஜாஜி.

சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத் தொடர்புக்குப் பிறகு வெளிவந்த தமிழால் முடியுமா? திண்ணை இரசாயனம் ஆகிய நூல்களில் இடம் பெற்ற கலைச் சொற்களில் நல்ல தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றிருந்தன.

இவை அவரது மொழிக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தின் அறிகுறி எனலாம். இந்நிலையில் கலைச் சொல்லாக்கத்தில் இந்திக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்த அவர் தமிழ் அறிவியல் மொழியாக வேண்டும் என்ற உணர்வு கொண்டவராகவும் செயல்பட்டுள்ளது விரிவான ஆய்வுக்குரியது.

சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தினர் அரசு இம்முயற்சியில் ஈடுபட்டு, சங்கத்துக்கு ஆதரவு தரவேண்டும் என வேண்டினர். மேலும், கலைச்சொற்களைச் சீர்திருத்த சுவாமி விபுலானந்தர் தலைமையில் ஒன்பது நபர் குழுவையும் உருவாக்கினர். இதில் இயற்பியலுக்கு இராஜாஜி (அன்றைய சென்னை மாகாண முதல் அமைச்சர்) நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இராஜாஜி கலைச் சொல்லாக்கக் கோட்பாட்டில் ஒரு புதிய நிலைப்பாடு தெரிகிறது. கலைச் சொற்கள் பெரும்பாலும் தமிழிலேயே அமைய வேண்டும் என்பதற்கான காரணங்களாக “என் அபிப்பிராயம் பௌதீக ஆராய்ச்சி நூல்களைத் தமிழில் எழுதும்போது கூடிய வரையில் தமிழ் மொழிகளையே தேடி எடுத்துக் கொண்டு விளக்க வேண்டும் என்பது.

தமிழ் மொழியாக இருந்தால் சார்பு மொழிகள் செய்து கொள்வது எளிதாகும். தமிழர்கள் காதுக்கு இனிமையாக இருக்கும் இனிமையில் பெரும் சக்தி உண்டு” (இராஜாஜி 1946) என்று தெரிவிக்கிறார்.

மேலும் கலைச்சொற்களின் பொருட்டு, சண்டையிடுவதில் தமக்கு உடன்பாடில்லை எனவும் தகுதியான சொற்களே வழக்கில் நிலைக்கும் என்றும் கூறுகிறார். இதனை, “தமிழ் வளர்ச்சிக்கு யாரும் வரம்பு கட்ட முடியாது; வரம்பு கட்டிப் பார்ப்பதும் தவறாகும். எது நல்லதோ அது நிலைக்கும் என்று விட்டுவிடுவதே நல்லது. கலைச்சொற்கள் பற்றியும் இதுவே எண்ணம்” (இராஜாஜி. 1946:IV) எனும் பகுதியில் அறிய முடிகிறது. கலைச் சொற்களின் தகுதிப்பாட்டைப் பொருத்தே ஒரு கலைச்சொல் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதால் அறிஞர்கள் ஆராய்ந்து எழுதவேண்டும் எனவும் அறியாதவர்கள் சும்மா இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கிறார்.

இராஜாஜி சுதந்திரம் அடையுமுன் பிரிதொரு கட்டுரையில் “சிற்பம் எவ்வளவு அழகு வாய்ந்ததாயிருந்தாலும் உடல் எவ்வளவு ஆரோக்கியம் கொண்டதாயிருந்தாலும், சரிவரக் கவனித்துப் போற்றாமல் விட்டுவிட்டால் கெட்டுப் போகும். பாஷையும் இவ்வாறேதான்.

போற்றப்படாமல் போனால் நாளாவட்டத்தில் எந்த பாஷையும் அழகு இன்றி, சொல்வளம் குன்றி, லாவகமும் குன்றியதாகத் தோன்றும், உண்மையில் குன்றியும் போகும். பிறமொழிகளைக் கடன் வாங்கி உள்ள மொழிகளை மறக்கவும், தாய்மொழியை வெறுக்கவும் ஏற்பட்டு விடும்.

இப்போது நாம் சுதந்திரமும் பெருமையும் நீங்கி அடிமையும் சிறுமையும் அடைந்துள்ளோம் என்பதை அனைவரும் காணக்கூடியபடி, ஒரு தோல்விக் கொடி போல் எப்போதும் ஆங்கில மொழிகளை உபயோகிக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருக்கிறோம். ‘மொழிப் பிச்சையில்லா விட்டால் வாழ்க்கையேயில்லை’ என்று முடிவு கட்டிவிட்டதுபோல் நடந்து கொள்கிறோம்.

ஆங்கிலத்தின் நரம்புக்கட்டும், லாவகமும், பொருட் செறிவும் தமிழில் கிடையாது என்று தமிழை மறந்த தமிழர்கள் எண்ணுகின்றார்கள். இவர்கள் புதிய சொற்களும் சொற்றொடர்களும் ஆக்கினால் அல்லது தமிழில் எதையும் இக்காலத்தில் சொல்ல முடியாது என்பார்கள். பழைய சொற்களையும், புராதனக் கலைகளையும் மறந்து விட்டதே இவ்வாறான எண்ணங்களுக்குக் காரணம்.

வீட்டிலுள்ள பழைய பெரிய பெட்டியில் கிடக்கும் பட்டாடைகளை மறந்து, கந்தல் துணியுடன் கடைக்குப் போய்க் கடனுக்குச் சேலை வாங்குவதைப் போன்றது இந்த “மொழிப் பிச்சைக் கொள்கை” என்று கூறிய பிறகு இராஜாஜி முடிவாகக் கூறுவது “தமிழ் மொழியால் ஒன்றைக் குறித்தவுடன், தமிழனுக்கு அது மனதோடு மனதாகக் கலந்து மகிழ்ச்சி தருகிறது. மற்ற இரவல் மொழிகளால் தமிழனுக்கு அந்த மகிழ்ச்சி உண்டாக மாட்டாது. இந்தக் காரணமே போதும்” என்கிறார்.

இக்காலகட்டத்தில் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் பாடநூல்களைத் தயாரிக்க குழுக்கள் அமைந்துள்ளதாக, கி.மு.சுப்பிரமணியத்தின் கடிதம் மூலம் தெரிவித்தது. இக்கடிதத்தை அன்றைய முதல் அமைச்சராக இருந்த இராஜாஜி ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை “இப்போதைக்குத் தற்காலிகமாக இதிலிருந்து ஒதுங்கி இருக்கலாம் (Perhaps we may keep aloof for the time being) என்று தனக்கே உரிய பாணியில் அரசாணையில் இராஜாஜி குறிப்பெழுதினார் (வெங்கடாஜலபதி 1999: 153) என்று வெங்கடாஜலபதி தெரிவித்துள்ளார்.

முடிவுரை

இராஜாஜி அவர்கள் கலைச்சொல் இதழை நடத்திய காலகட்டத்தில் சுதேசி இயக்க ஆதரவாளராக இருந்தார். எனவே அவருடைய கலைச் சொற்களில் ஆங்கிலச் சொற்களை எதிர்க்கும் போக்கும், சமஸ்கிருத ஆதரவுப் போக்கும் காணப்படுகின்றன. சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத் தொடர்புக்குப் பிறகு வெளிவந்த ‘தமிழால் முடியுமா?’ ‘திண்ணை இரசாயனம்’ ஆகிய நூல்களில் இடம்பெற்ற கலைச் சொற்களில் நல்ல தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றிருந்தன. இவை அவரது மொழிக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தின் அறிகுறி எனலாம்.

- டாக்டர் சு.நரேந்திரன்