பள்ளிப் பருவ வயதில், விடியற்காலைப் பொழுதில் என்னை எழுப்புவதற்காக வாசலில் சாணி தெளித்த வாறே அதட்டும் என் அம்மாவின் குரல் கால இடை வெளிகள் கடந்தும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக் கின்றது. விவசாயத் தொழிலை அடிப்படை ஆதாரமாகக் கொண்டது எங்கள் குடும்பம். இருக்கும் கொஞ்ச நிலத்தில், பெரும்பகுதியில் பூக்கள் பயிரிடப்படும். மீதமுள்ளவற்றில் குடும்பத்திற்கு (ஆடு மாடுகளும் இதில் அடங்கும்) தேவையான உணவிற்கு நெல் பயிரிடப் படும். கொஞ்சம் மலாட்டையையும் பயிரிடுவார்கள். மலாட்டைப் பயிரில் ஊடுபயிராக வீட்டிற்குத் தேவையான காராமணி, பச்சைப் பயிறு, துவரை போன்ற தானியங்களை விதைத்து வைப்பார்கள். தமிழர்களின் அறிவார்ந்த பயிரிடும் முறைகளுள் ‘ஊடுபயிர்’ முறை முக்கியமானதாகும். 

குடும்பத்திற்குரிய பெரும்பகுதி வருமானம் பூக்களிலிருந்து மட்டுமே கிடைக்கும் என்பதால் பூப் பயிர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் நிலை எங்கள் வீட்டில் இயல்பாக இருந்தது.  பூக்களைப் பறிப்பதற்கு அதிகாலைப்பொழுதில் கொல்லைக்குச் செல்ல வேண்டியிருப்பதால் அம்மா எங்களை எழுப்பு வதற்குப் படாத பாடு படுவார்கள். அதிகாலைப்பொழுதில் அம்மாவின் வசைமொழிகள் தினமும் ஒலிக்கும். கேட்டுக் கேட்டுப் பழகிப் போன சூழல் எங்களுக்கு அளித்த அனுபவமாகும். ஊரில், உறவுகளில் (காலையில்) நடைபெறும் எந்த நல் நிகழ்ச்சியாயினும் குடும்பத்தில் யாராவது ஒருவர் மட்டுமே கலந்துகொள்ள முடியும். குடும்பத்தோடு கலந்துகொள்வது அரிதாகவே இருக்கும். பூப்பறிப்பதை விட்டுவிட்டுச் செல்ல முடியாத சூழல். பூப்பறித்து முடிந்தவுடந்தான் எங்களால் பள்ளிக்கும் செல்லமுடியும்.

மல்லி, ஜாதிமல்லி, கனகாம்பரம், காக்கட்டான், கேந்தி, கோழிக்கொண்டை, வாடாமல்லி ஆகிய பூக்கள் எங்கள் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ளன. மல்லி, ஜாதி மல்லி, காக்கட்டான் ஆகியன நீண்டகாலப் பூ வகை களாகும். குறிப்பிட்ட பருவத்தில் பூத்து முடித்தவுடன் அப்பூச்செடிகள் வெட்டிவிடப்படும். பின்னர் அது துளிர்த்து வளர்ந்து பருவ காலத்தில் மீண்டும் பூக்கத் தொடங்கும்.  இந்தச் சுழற்சி முறையில் நீண்ட காலத்திற்கு அப் பூச்செடிகள் பராமரித்துப் பாதுகாக்கப்படும்.  கேந்தி, கோழிக்கொண்டை, வாடாமல்லி ஆகியன ஒரு முறை பூத்து முடித்தவுடன் ஆண்மாறிப் போகக்கூடிய பூப் பயிர்களாகும்.

பல்வகைப் பூக்களுடன் நிலத்தின் வேலி ஓரத்தில் எப்போதும் இருக்கும் ‘டிசம்பர் பூ’ச்செடிகள். ஒவ்வொரு ஆண்டும் பருவத்தில் பூத்துமுடித்தவுடன் இவையும் வெட்டிவிடப்படும். மிகவும் மெல்லிய தன்மை கொண்ட இப்பூச்செடிகள் (பூக்களே மென்மைதான். அவற்றுள்ளும் இது இன்னும் மென்மைத் தன்மை கொண்டது) ஒரு மனிதனின் ஆயுளைக் கடந்தும் இந்தப் பூச்செடி நீடித்து நிலைத்திருக்கக்கூடியதாகும்.

பூக்கள் நிறைந்த ஊரில் இருந்த காலத்தில் பூக்களின் பெருமைகளை அறிந்துகொள்ளும் பக்குவ மில்லாமல் இருந்தது. ‘உள்ளூர் குளத்து நீர் தீர்த்தம் ஆகாது’ என்பதுபோல எங்கள் வாழ்வின் அங்கமாக இருந்த பூக்களைப் பற்றிய புரிதல் அப்போது தெரியா மலிருந்திருக்கிறது. பூவிற்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை இப்போது எண்ணிப்பார்க்கின்றேன். வியப்பளிக்கும் வரலாற்றுப் பின்புலங்கள் புலப்படு கின்றன. மனிதச் சமூகத்தின் பிறப்பு முதல் இறப்பு வரையில் பூவுடனான பிணைப்பு இருந்துகொண்டே இருப்பது வியப்பை அளிக்கின்றது.

பூ வைத்துத் தெய்வத்தை வழிபடுவது நாம் அறிந்த வழக்கமாகும். ஆனால் பூப் பயிர்களைப் பயிரிடும் உழவுக் குடிகள் பூக்களையே தெய்வமாக வழிபடும் வழக்கத்தைக் கொண்டிருப்பர். இதைப் பொதுச் சமூகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். பருவத்தில் பூக்கள் பூக்கத் தொடங்கும்போது முதல் பூவை வணங்கி மகிழ்ந்த பின்னரே அப்பூக்களைப் பறிப்பார்கள். பின்பு குலதெய்வத்திற்கு வைத்து வழிபடும் வழக்கம் உண்டு. இங்கே பூக்கள்தான்

முதல் தெய்வம். இவ்வகை வழக்கம் மட்டுமின்றிப் பூக்களுக்கும் மனித இனத்திற்குமான தொடர்பு குறித்துச் சிந்திக்கையில் பல்வேறு சிந்தனைகள் மனதுள் எழுகின்றது.

தமிழ்ச் சமூகம் பூக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு, அறிவார்ந்த நிலையில் பூக்களை அணுகி யிருக்கின்ற குறிப்புகள் பல நமது இலக்கியங்களில் உள்ளன. மக்கள் வழக்கிலுள்ள பூ சார்ந்த பல பண்பாட்டுக் கூறுகள் இலக்கிய, இலக்கணங்களில் பதிவாகிக் கிடக்கின்றன.

வழிபாட்டுச் சடங்குகளிலும் வளமைச் சடங்கு களிலும் பூக்களுக்கு முக்கியப் பங்குண்டு. மங்களச் சடங்குகள் அனைத்தும் பூக்கள் இல்லாமல் நடைபெறு வதில்லை. பூக்களில்லாமல் மனித வாழ்க்கையே இல்லை எனும் நிலை இங்கு உண்டு. பெண்ணிற்கும் பூவிற்குமான தொடர்பு இன்னும் முக்கியத்துவமானதாக இருக்கின்றது. ஒரு பெண் பருவ வயதை அடைந்ததும் ‘பூப்படைந்து’ விட்டாள் என்று கூறுவது, அதைக் கொண்டாடும் வகையில் ‘பூப்புனித நீராட்டு விழா’ எடுப்பது போன்ற பூவுடன் தொடர்புற்றிருக்கும் வழக்கங்கள் பல தமிழர் களிடம் உண்டு. கணவனை இழந்த பெண் பூச்சூடும் வழக்கத்தையும் இழக்கும் நிலையும் நம்மிடம் உண்டு. ‘பூ’ எனும் சொல்லுடன் தொடர்புகொண்டிருக்கும் வளமைச் சடங்குகள் பல தமிழர்களிடம் உள்ளன.

‘பூ முடித்தல்’, ‘பூப் புனித நீராட்டுதல்’ அவற்றுள் சிலவாகும்.

மார்கழி மாதத்தில் அதிகாலைப் பொழுதில் வாசலில் கோலமிட்டு கோலத்தில் ‘சாணி உருண்டை’ வைத்து அதில் ‘பூசணிப் பூவை’ செருகி வைக்கும் வழக்கம் தமிழர்களிடம் உண்டு. அம்மை நோய் நீங்க, ஒரு பாத்திரத்தில் நீரெடுத்து அதில் வேப்பம் இலையுடன் சில பூக்களையும் போட்டு ஒருநாள் முழுவதும் வெய்யிலில் வைத்துக் குளிப்பது தமிழர் வழக்கமாகும்.  தமிழர்கள் பூக்களின் மருத்துவ குணத்தை நன்றாக அறிந்து வைத்திருந்தமையை இவ்வகை வழக்கங்கள் வெளிப்படுத்துகின்றன.

பிங்கள நிகண்டு நிலத்தில் பூக்கும் பூ வகைகளைக் ‘கோட்டுப்பூ’, ‘கொடிப்பூ’, ‘நீர்ப்பூ’, ‘புதற்பூ’ என நான்காகப் பகுத்திருக்கும் பகுப்புமுறை பண்டைத் தமிழர்கள் பூக்களை அறிவார்ந்து அணுகி நோக்கிய குறிப்பதைத் தருகின்றது. இதற்கும் முன்னர் தோன்றிய நாலடியார் பாட்டும் அதற்குத் தோன்றிய உரைகளும் பூக்களின் பகுப்பை நன்கு விளக்குகின்றன. 

கோட்டுப்பூப் போல மலர்ந்துபின் கூம்பாது

வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி - தோட்ட

கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை

நயப்பாரும் நட்பாரும் இல்     (நாலடியார், 215)

நட்பிற்கு இலக்கணம் கூறவந்த நாலடியார் புலவர் பூக்களின் இயல்புகளோடு நட்பை ஒப்பிட்டிருக்கின்றார். ‘கொம்பில் மலர்ந்த பூப் போல முன் மலர்ந்து பிறகு கூம்பாது; தலைநாளில் விரும்பி உடன் கொண்ட கோட்பாடே விருப்பமாகக் கொண்டு நட்பு செய்தலாம்; தோண்டின குளத்தில் பூக்கும் பூப் போல முன்மலர்ந்தும் பின்பு குவிந்தும் இப்படி ஒழுகுவாரை விரும்புவாரும் இல்லை அவருடன் நட்புக் கொள்வாருமில்லை’  என்கிறது மேற்கண்ட நாலடியார் பாட்டு.

செடியில் பூக்கும் பூக்கள் காலையில் மலர்ந்து மாலையில் குவியும் தன்மையைக் கொண்டிருப்பதில்லை. ஒருமுறை மலர்ந்தது மலர்ந்ததுதான். குளத்தில் பூக்கும் அல்லிப் பூ இரவில் மலர்ந்து காலைப் பொழுதில் குவிந்துவிடும். தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவிந்துவிடும். நேரத்திற்கு ஏற்றாற்போல் இயல்பை மாற்றிக் கொள்ளும் தன்மை நீரில் பூக்கும் பூக்களுக்கு உண்டு. அதனால் நட்பின் இலக்கணத்திற்கு நில, நீர்ப் பூக்களின் இயல்புகளோடு ஒப்பிட்டுக்காட்டப் பட்டுள்ளது. உயர்ந்தோர் நட்பு என்பது ‘குளத்துப் பூப் போல வேறுபடாது கோட்டுப் பூப் போல ஒருநிலையே பெற்றிருக்கும்’ என்பது இப்பாடல் உணர்த்தும் பொருளாக உள்ளது. நாலடியாருக்கும் முன்னர் தோன்றிய சங்க இலக்கியங்களில் பூ பற்றிய பல குறிப்புகள் பதிவாகிக் கிடக்கின்றன.

பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பூச் சூடுகின்ற வழக்கம் இருந்திருக்கிறது. முற்காலத்தில் போருக்குச் செல்லும் வீரர்கள் தலையில் பூச் சூடி சென்றது பற்றிய குறிப்புகளைச் சங்கப் புற இலக்கியங்களிலும் இலக்கண நூல்களிலும் காணமுடிகின்றன. புற இலக்கியத் துறை களுக்கு வெட்சி, கரந்தை, உழிஞை, தும்பை, வாகை என்று பூக்களின்  பெயர்களைச் சுட்டியிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது (தொல்காப்பியம் பொருளதிகாரம், 57;  புறப்பொருள் வெண்பாமாலை, 8. 1; தொன்னூல் விளக்கம், 283, உ¬ர் புறப்பொருள் வெண்பாமாலை, 6, 1).

சங்க கால ஆடவர்கள் காதலியைச் சந்திக்கச் செல்லும்பொழுது காதலிக்குப் பரிசாகக் கொடுப் பதற்குப் பூச்செண்டினைக் கொண்டுசெல்லும் வழக்கம் இருந்துள்ளது. குறுந்தொகையின் முதல் பாட்டு அந்தக் குறிப்பை வெளிப்படுத்துகின்றது.

செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த

செங்கோல் அம்பின் செங்கோட்டு யானை,

கழல் தொடி, சேஎய் குன்றம்

குருதிப் பூவின் குலைக்காந் தட்டே (குறுந்தொகை, 1)

 ‘திப்புத்தோளார்’ எனும் புலவர் பாடியுள்ள இப்பாடல் ‘காதலன் காதலிக்குக் கொடுப்பதற்காகக் ‘காந்தள்’ பூவினாலான ‘பூச்செண்டினை’க் கொண்டு வருகின்றான். இதைக் கண்ட காதலியின் தோழி எங்கள் ஊரிலேயே இப்பூக்கள் நிரம்ப உள்ளன. இதையே நீயும் கொண்டுவந்திருக்கிறாயா?’ என்று பகடியாகச் சொல்லி மறுப்பதாக பாடப்பட்டுள்ளது. இதைக் ‘கையுறை மறுத்தல்’ என்று சுட்டுவது முற்கால வழக்கு. இதுபோல ‘கையுறை ஏற்றல்’ (திருக்கோவையார், 91), ‘கையுறை புகழ்தல்’ (திருக்கோவையார், 114) போன்ற துறைகளும் அக இலக்கியங்களில் உள்ளன. ‘கையுறை’ என்பது பூச்செண்டினைக் குறித்திருக்கிறது. காதலர்கள் அன்பின் அடையாளமாக ‘பூ’ வினைப் பரிமாறிக்கொள்வது நெடுங்கால வழக்கமாகும்.

சங்கத் தொகுப்பிலுள்ள குறிஞ்சிப்பாட்டில் மகளிர் வைத்து விளையாடியதாக 99 வகை பூக்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளமையும் (குறிஞ்சிப்பாட்டு, 62 - 94), பண்டை இலக்கண நூலாசிரியர்கள் இலக்கண விதி கூறவரும்பொழுது ‘பூ’ என்ற சொல்லை இணைத்துச் சொல்லியிருப்பதும் மிகவும் சிந்தனைக்குரியது. யாப்பிலக்கணக் கூறுகளுள் உள்ள தேமாந்தண்பூ (நேர்-நேர்-நேர்-நேர்), தேமாநறும்பூ (நேர்-நேர்-நிரை-நேர்), புளிமாந்தண்பூ (நிரை-நேர்-நேர்-நேர்), புளிமாநறும்பூ (நிரை-நேர்-நிரை-நேர்), கூவிளந்தண்பூ (நேர்-நிரை-

நேர்-நேர்), கூவிளநறும்பூ (நேர்-நிரை-நிரை-நேர்), கருவிளந்தண்பூ (நிரை-நிரை-நேர்-நேர்), கருவிளநறும்பூ (நிரை-நிரை-நிரை-நேர்) ஆகியன ஆழ்ந்து சிந்திக்கத் தக்கச் சொற்குறிப்புகளாகும்.

மக்கள் வழக்கிலும், இலக்கிய, இலக்கண ஆக்க முறைகளிலும் ‘பூ’ சார்ந்த இப்படியான பல வழக்கங்கள் பரவலாகப் பதிவாகிக் கிடக்கின்றன. பிறப்பு முதல் இறப்புவரையில் பூக்களின்றி எந்தச் சடங்கினையும் தமிழர்கள் நிகழ்த்தியிருக்கவில்லை என்பது அரியக் கிடக்கின்றது. தமிழர்களிடமிருந்த இவ்வகை வழக்கங்கள் ‘பூ’வை வளமையின் அடையாளமாக; தலைமுறையின் தொடக்கமாகக் கருதியிருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதாகவே உள்ளன.