தாமரைக்குளம் மட்டுமில்லை. தமிழ்நாட்டின் தொண்ணூற்று ஒன்பது சதவிகித கிராமங்கள் காளமேக வாத்தியாரின் மண்டை மாதிரி தான். தங்கள் ஒரிஜினல் நிறத்தை இழந்து வெளிறிக் கொண்டு இருக்கின்றன. அவற்றை இயல்புப்படி மாறவிடாமல், முடிந்தவரை சாயம் பூசிப்பூசிப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் மாற்றமோ அவ்வப்போது வெளிவந்து கண்ணாமூச்சி காட்டுகிறது.

இப்படியாகத்தான் துவங்குகிறது பாஸ்கர்சக்தி எழுதிய அழகர்சாமியின் குதிரை சிறுகதை. இந்தக்கதை அவரது வசனத்திலும், சுசீந்திரன் இயக்கத்திலும் அழகானதொரு சினிமாவாக வந்திருக்கிறது. கதையை சினிமாவாக்குவது லேசுப்பட்ட காரியமில்லை. ஒரு ஊரில் பாட்டி வடை சுட்டார், அதை மரத்திலிருந்து காக்கா தூக்கிக் கொண்டு போனது என கதை எழுதி விடலாம்.

ஆனால், கதையை சினிமாவாக்கும் போது, பாட்டி என்றால் அவருக்கு என்ன வயது, அறுபதா, எழுபதா, எண்பதா காதில் தங்கட்டி உண்டா - சேலை என்னது, - மரம் என்றால் வேப்பமரமா, புளியமரமா, வடை என்றால் ஆமவடையா, உளுந்து வடையா, காக்கா என்றால் சாதா காக்காவா அண்டங்காக்காவா - இப்படியாகப் பல நுட்பமான விசயங்களை பிரேமுக்குள் கொண்டுவர வேண்டியதிருக்கிறது.

சிரம அனுபவங்களை கலை தாகத்தோடு வெகுசிலரே ஏற்பர். நல்ல கதையை நல்ல சினிமாக்காரன் கண்டடைந்த பிறகு அவனால் சும்மா இருக்க முடிவதில்லை. அழகர்சாமியின் குதிரை சிறுகதையும் சுசீந்திரன் வாசித்தபிறகு, அவரை பாடாய்ப்படுத்தியிருக்க வேண்டும். குதிரை கனைத்துக் கொண்டே சதா சர்வகாலமும் அவரை சுற்றிச் சுற்றி வந்திருக்க வேண்டும். அவரைச் சுற்றி வந்த குதிரை இப்போது தமிழகத்தை சுற்றி வருகிறது. அழகான குதிரையாக.

மல்லையாபுரத்து கடவுளான அழகர்சாமியின் வாகனமான மரக்குதிரை காணாமல் போகிறது. ஊரே பதறிப்போகிறது. ஊர்ப் பெருசுகள் ஒன்று கூடி பூசை பரிகாரம் எல்லாம் செய்து மரக்குதிரையை தேடுகிறார்கள். நிஜக்குதிரையை வைத்து பிழைப்பு நடத்தும் வட்டப்பாறை அழகர்சாமியின் வெள்ளை நிறக்குதிரை பாதை தவறி, மல்லையாபுரத்துக்கே வந்து விடுகிறது. கோடாங்கி குறி சொன்னதால் வெள்ளைக்குதிரை தாமரைக்குளத்து வாகனமாக கொண்டாடப்படுகிறது. அது சமயம் வட்டப்பாறை அழகர்சாமி வந்து தனது சொந்தக் குதிரையை மீட்க நடத்தும் போராட்டமாக மீதிக்கதை.

ஏமாந்து தவிக்கும் நேர்மையான கிராமத்து மக்களிடம் மிதமிஞ்சிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை விமர்சித்துத் தான் கதை நகர்கிறது. படித்த வாத்தியார் முதல், பஞ்சாயத்துத் தலைவர் உள்பட கோடாங்கியிலிருந்து ஏட்டய்யா வரை சாமி சமாச்சாரம் என்று தனிமனித ஆளுமையை பின்னுக்கு இழுக்கும் ஆழமான விசயம் படமெங்கும் விவாதிக்கப்படுகிறது. சாமி வாகனமான மரக்குதிரைக்கும், அதன் மீதான பக்தியும் -நிஜக்குதிரையும் அதன் உணர்வுகளுமாக படம் செல்கிறது.

மரக்குதிரையையும் நிஜக்குதிரையையும் நேரெதிராக நிறுத்தி விவாதத்தை நடத்துகிறது. சினிமா, நுட்பமான, ஏகடியம் நிறைந்த நவீன தமிழ்ச் சினிமாவாக அருமையாக மிளிர்கிறது அழகர்சாமியின் குதிரை.

தேனி வட்டாரத்து மலைகளையும், காடுகளையும் தேனி ஈஸ்வர் அற்புதமாக படம்பிடித்துள்ளார். பாடல் காட்சிகளும் கதைக் காட்சிகளும் காட்சி பூர்வமாக கண்களில் விரிகிறது. இளையராஜாவின் இசையில் காட்சிகள் அழுத்தம் பெறுகின்றன. முத்தான மூன்று பாடல்கள் குதிக்கிற குதிக்கிற குதிரைக் குட்டி பாடலில் குதிரைக்காரனும் நாமும் குதிக்கிற இசையும், காட்சியமைப்பும் அற்புதமான அற்புதம்.

சிறுகதையில் ஏராளமான கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகளை அருமையாக திரைக்கதை வடிவத்திற்கு சுசீந்திரன் கொண்டு வந்து சேர்த்துள்ளார். குதிரைக்காரனின் சிரிப்பும், அழுக்கும், பரட்டைத்தலையும், அவனது காதலும், குதிரையுடனான உயிரான சினேகமும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதிமறுப்பு, காதலாக பஞ்சாயத்து தலைவர் மகன் ராமகிருஷ்ணன் - கோடாங்கி மகள் மாரியின் காதல் போலிஸ் ஸ்டேஷனில் திருமணத்தில் முடிகிறது. குதிரை மிதித்த மைனர், எல்லார் மீதும் பிரியம் கொண்ட தாயாக குதிரைக்காரனுக்கு உணவு கொடுக்கும் பெண், கண்ணு ஆசாரி, உண்மையைச் சொல்ல புரோட்டா திங்கும் சிறுவன் (தம்பிக்கு தனியாக 3 புரோட்டா) அவனே தன் தம்பிக்கு பள்ளிக்கூட சத்துணவை எடுத்துப்போகும் கிராமத்து ஏழ்மை என திரைக்கதையில் படம் தொய்வின்றி செல்கிறது.

கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். குதிரைக்காரன், கோடாங்கி, வாத்தியார், இன்ஸ்பெக்டர், என பொருத்தமான, திறமையான நடிகர்கள், கதையை மையமாகக் கொண்ட இயக்குநர்கள் யாவரும் புதுமுகங்களை நடிக்க வைப்பதில் கை தேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். சுசீந்திரனும் அவ்விஷயத்தில் மிகவும் கெட்டி.

மழை தண்ணி இல்லாமல் விவசாயம் பொய்க்கையில் மினி லாரி ஏறி ஊர்ப்பிள்ளைகள் எல்லாம் திருப்பூர் வேலைக்கு போக, ஊரே குழந்தைகளின் அவயக்காடு ஏதுமின்றி மயான அமைதியோடு கிடப்பதெல்லாம் படத்தில் அழுத்தமாக பதிவு செய்யப்படுகிறது.

பாடாய் உழைத்தாலும் ஓடாய் தேய்ந்தாலும் ஒரு அடி உசரம் கூட வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை. பள்ளிக்கூடம் போக வேண்டிய பிள்ளைகள் வேலை தேடி ஊரைவிட்டு போகிறார்கள். மண் சுமக்க வெளியூர் போகிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் குறையைச்சொல்லி நிவர்த்தி வேண்டுமென கேட்க சாமியும், திருவிழாவும் தேவைப்படுகிறது. அப்படியான ஒரு திருவிழாவைப் பார்க்க தேனி வட்டாரத்து மலைக் கிராமத்திற்கு நம்மை அழகர்சாமியின் குதிரை அழைத்துச் செல்கிறது.

மூனு நாலு வருஷமாக பல காரணங்களால் தடை பட்டுப்போன திருவிழா ஜெகஜோதியாக நடக்கத் துவங்க, குதிரையேறி அழகர்சாமியும் ஊர்வலமாக புறப்பட, போலிஸ் வந்து பஞ்சாயத்து தலைவரிடம் சொல்கிறது. உங்க பையனும் கோடாங்கி மக மாரியும் கல்யாணம் பண்ணி ஸ்டேஷன்ல நிக்காக என்று. பஞ்சாயத்து தலைவர் தலையில் இடி இறங்கியது போலானது. படுபாவி இப்படிப் பண்ணிட்டானே! சாதி விட்டு சாதி கல்யாணம்! கலி முத்திப் போச்சி! பஞ்சம் வந்து அழியப்போகுது ஊரு! என அவர் சாபமிட, அச்சமயம் பெருத்த இடியோசை! மின்னலின் கீற்று! வானமே கிழிந்தது மழை கொட்டத் தொடங்குகிறது. சிறுகதையும், சினிமாவும் இப்படியாக முடிவுக்கு வருகிறது.

நல்ல கதையை தேடும் சினிமாக்காரர்கள் நம்பிக்கையோடு தமிழ்ச் சிறுகதை நாவல்! பக்கம் தலைகாட்ட வேண்டுமென்று அழகர்சாமியின் குதிரை அறைகூவி அழைத்துள்ளது.

(இளைஞர் முழக்கம் ஜூன் 2011 இதழில் வெளியானது)

Pin It