tha.pandiyan6உசிலம்பட்டி, கீழவெள்ளைமலைப் பட்டி, தாவீது பண்ணையில் பிப் 27 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த பெருமகனார், தோழர் தா.பாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நூற்றுக்கணக்கான சகவயது கொண்ட மூத்த தோழர்கள், ஆயிரக் கணக்கான நடுவயதுத் தோழர்கள், இன்னும் பல ஆயிரம் இளம் தோழர்கள் கண்ணீர் மல்கத் தங்களின் தங்கத் தலைவனுக்கு காலை முதல் பிற்பகல் வரை அஞ்சலி செலுத்தினர். பின்னர் வழி அனுப்பி வைத்தனர்.

குறைந்தது, மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த தோழர்கள் பிசிறில்லாத அவரது சிம்மக்குரலைக் கேட்டுத் தம்மில் தமிழ் பயின்றவர்கள்.

கட்சியின் அனைத்திந்திய பொதுச் செயலாளர் தோழர் து. ராஜா உட்பட இன்றைய தோழர்கள் பலர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தோழர் தா.பாவின் உற்சாக உரைகளைக் கேட்டு உணர்ச்சி வயப்பட்டவர்கள்.

பேராசிரியர், வழக்குரைஞர், பேச்சாளர், கட்டுரையாளர், எழுத்தாளர், பதிப்பக இயக்குநர், கலை இலக்கியவாதி, கட்சித் தலைவர், பத்திரிகை ஆசிரியர், விமர்சகர், கட்சிப் பள்ளி ஆசிரியர், போராளி எனப் பல வண்ணங்களில் தனது ஆற்றல்களைத் தோழர்களுக்கு அள்ளி அள்ளி வழங்கிய மாமனிதர் தோழர் தா.பா.

மதுரையில் வீட்டுக்கு வந்து சேர்ந்த அந்த விநாடியிலிருந்து, அவரது ஆயுளின் கடைசி பத்து ஆண்டுகள், அவற்றில் நான் அறிந்த அவரது எழுத்துக்கள், உரைகள், உரையாடல்கள், சந்திப்புகள், அவற்றில் சில குறிப்பாக என் எண்ணங்களைப் பற்றிப் பிடித்தன.

பிடல் காஸ்ட்ரோ,
நெல்சன் மண்டேலா
பெரியார் எனும் இயக்கம்
இந்தியாவில் மதங்கள்
பொதுவுடைமையரின் வருங்காலம்
கொரோனாவா, முதலாளித்துவமா?

இந்தப் பத்து ஆண்டுகளில் அவர் எழுதியவை வெறுமனே புத்தகங்களாகத் தெரியவில்லை. மாநாடுகளில் பேசியவை, கட்சியின் அரசியல் எழுச்சி மாநாட்டில், “பெரியார் விருது” பெற்ற விழாவில், இன்னும் பல சிறிய பெரிய அரங்குகளில் அவர் ஆற்றிய உரைகள், அவை வெறுமனே உரைகளாகத் தெரியவில்லை.

தெளிவான, தீர்க்கமான ஒரு வேலைத் திட்டத்துடன், சர்வதேசச் சூழல்களில், இந்தியச் சூழல்களில், தமிழகச் சூழல்களில் கம்யூனிஸ்டுகளின் அரசியலை எண்ணிப் பார்த்து, எதிர்காலத்தை மனதில் நிறுத்தி, ஒரு விமர்சன நோக்குடன் தனது வேலை நிமித்தங்களை அமைத்துக் கொண்டார் என்றே தோன்றுகிறது. இந்தப் பத்து ஆண்டுகள் அவருக்கு மிகவும் அபூர்வமானவையாக, மதிப்புக்கு உரியனவாக இருந்திருக்க வேண்டும்.

இனியும் எனக்கு நேரம் கிடைக்காமல் போகலாம், சொல்ல வேண்டியனவற்றை எனது தோழர்களிடம் இப்போதே சொல்லி விடவேண்டும் என அவர் கருதியிருக்கலாம். இத்தனைக்கும் பிறகு இன்னும் அவர் சொல்ல விரும்பியவை ஏராளமாக இருந்திருக்கலாம்.

ஒவ்வொரு கம்யூனிஸ்டின் வாழ்க்கையும் மிக அபூர்வமானது, மதிப்புக்கு உரியது. சொந்த வாழ்க்கை, தனது குடும்பம், உற்றார் உறவினர், சொந்த வாழ்க்கை நலன்கள், வளர்ச்சி நலன்கள் என எத்தனையோ விஷயங்களைப் புறக்கணித்து, கம்யூனிஸ்டுகள் தம்மைச் சமூகத்திற்காக, உழைக்கும் மக்களுக்காக அர்ப்பணித்துக் கொள்கிறார்கள்.

இன்றைய கொடூரமான சமூகச் சூழல்களில், எப்போதுமே தனிப்பட்ட முறையில் கம்யூனிஸ்டுகள் வெற்றி பெறுகிறார்கள் என்பதில்லை. பல வேளைகள் அவர்களைத் தோற்கடித்து விடுகின்றன.

குறிப்பாகத் தோழர் தா. பாண்டியன் போன்றவர்கள்; அவர் இளைஞராக இருந்த போது எப்படி இருந்திருப்பார்? எத்தனை உற்சாகமாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியிருப்பார்? சோசலிசம் என்றால், கம்யூனிசம் என்றால் எவ்வளவு குதூகலம் அவரது மனதில் கொந்தளித்திருக்கும்? எத்தனைச் சொற்கள் இடி போல் வெடித்து அவர் வாயிலிருந்து வெளிக்கிளம்பியிருக்கும்? கம்யூனிஸ்டுகளின் போராட்டங்களைப் பொதுக்கூட்டங்களில் அவர் கம்பீரமாக வருணித்துக் கேட்டிருக்கிறீர்களா? ஏன், மதுரையில் அவரது கடைசி உரையில் அவர் உச்சரித்த சொற்கள்:

“சாகும் வரை எனது பேச்சால் இந்த நாட்டைத் தட்டி எழுப்புவேன்!
கம்யூனிஸ்டுகளை எந்தக் கொம்பனாலும் தோற்கடிக்க முடியாது!

வகுப்புவாதத்தை எந்தச் சூழலிலும் தமிழ் மண்ணிற்குள் நுழைய விடாதீர்கள்! கால் மிதிக்க விடாதீர்கள். நாட்டை அடிமைப்படுத்த அனுமதியாதீர்கள்!”

பற்களைக் கடித்தபடி, கண்களைச் சுருக்கி, கன்னச் சதைகளை நெருக்கிச் சொற்களை அவற்றின் சொந்த உச்சரிப்புடன் அவர் வெளிக்கொண்டு வரும்போது, அச்சொற்கள் முழு அர்த்தத்தையும் பேசித் தீர்ப்பது புலப்படும்.
கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் எப்போதுமே அவர் வகுப்புவாதத்தைக் குறிவைக்காமல் பேசியது கிடையாது.

காங்கிரசின் பொறுப்பற்ற அரசியல் இந்திய தேசியவாதத்தின் தோல்வியை அனுமதித்த பிறகு, இந்து தேசியவாதம் ஆட்சிக்கட்டிலைக் கைப்பற்றியது. சர்வதேசச் சூழலில் சோவியத்துக்களின் தகர்வு உலகமெங்கும் கார்ப்பரேட் முதலாளியத்திற்கும் மதவாத பாப்புலிசங்களுக்கும் இடமளித்தது. இது ஒரு புதிய கூட்டு.

இந்தியாவும் இந்தத் துருப்புச் சீட்டை விளையாடிப் பார்க்க முடிவு செய்து விட்டது. இந்து வாக்கு வங்கி ஒன்றை மட்டும் முன்வைத்து ஆட்சியைக் கைப்பற்றமுடியும் என்று இந்துத்துவ பெரும்பான்மைவாதிகள் கணக்குப் போட்டுள்ளனர்.

வன்முறை, மக்களின் ஒப்புதல் என்ற இரண்டு வழிகளையும் ஒருசேரப் பயன்படுத்தி முதலாளியம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுகிறது என்று அந்தோனியோ கிராம்சி என்ற இத்தாலிய மார்க்சியர் எழுதினார்.

ஆனால் இந்து சனாதனத்தின் வழிமுறைகள் இன்னும் பல: “சாம, பேத, தான, தண்டம்” என்று அது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்திருக்கிறது; நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறது.

“சாம” எனில் கூடிக்குலவிக் கூட்டணிகளை அமைத்துக் கொள்வது;
“பேத” எனில் வேறுபாடுகளைப் பயன்படுத்தி, பிளவுகளை உண்டாக்குவது;
“தான” எனில் காசு, பணம், வெகுமானங்களைக் கொடுத்து விலைக்கு வாங்குவது;
“தண்டம்” எனில் ஆயுதங்கள், அதிகாரத்தைப் பயன்படுத்துவது, அப்பட்டமான வன்முறை.

இந்த நான்கு முறைகளிலும், எப்படியாயினும் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே நோக்கம். எங்குமே லட்சியம், கொள்கை, கோட்பாடு, அறம், நீதி, நியாயம் என்பவற்றுக்கெல்லாம் இடம் கிடையாது.

தோழர் தா.பா இந்தியாவில் மதங்கள், பெரியார் எனும் இயக்கம் என்ற இரண்டு நூல்களில் மதங்களின் போலித்தனங்களைத் தோலுரித்துக் காட்டுகிறார். மதங்கள் எவ்வகையானும் அற உணர்வு கொண்டவை அல்ல, அவை அறிவு பூர்வமானவையும் அல்ல என்று தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறார்.

மதம் அறத்தையும் அறிவையும் எப்போதுமே தோற்கடிக்க விழைகிறது. பெரியாரின் இயக்கம் பற்றி எழுதும்போது, மதத்திற்கும் சாதி அமைப்பிற்கும் உள்ள அடிப்படையான உறவுகளை அவர் எப்போதுமே எடுத்துக் காட்டி வந்துள்ளார்.

ஒன்று மற்றொன்றைப் பேணிப் பாதுகாக்கிறது. சாதி ஒழிப்பின்றி வர்க்கப் போராட்டங்களை எண்ணிப் பார்ப்பது கூட சாத்தியமில்லை என்று குறிப்பிடுகிறார். மார்க்சின் “சமயங்கள் குறித்த விமர்சனமே சமூக விமர்சனத்தின் முதல்புள்ளி” என்ற வாக்கியம் நினைவுக்கு வருகிறது.

ஒரு சமூகத்தின் சொந்தப் பிரச்சினைகள் எவையோ, சொந்த வலிகள் எவையோ அவற்றிலிருந்தே அச்சமூகம் அதன் சமத்துவம், சமூகநீதி போன்ற லட்சியங்களையும் வரையறுத்துக் கொள்ள வேண்டும். பெரியார் சொந்த மண்ணின் பிரச்சினைகளைக் கொண்டு சிந்தித்தார். தூரம் போகவில்லை.

தமிழ் மண்ணில் பெரியாரின் இயக்கமும் கம்யூனிச இயக்கமும் ஒன்றாகத்தான் தோற்றம் பெற்றன என்ற வரலாற்றுத் தகவலையும் தோழர் தா. பா ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சுட்டிக்காட்டுகிறார். இன்றைய காலக்கட்டத்தில் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் ஆகியோர் ஒன்றுபடுவது அவசரத் தேவை. கறுப்பு, நீலம், சிவப்பு என்ற சேர்க்கை அவசியமாகிறது.

தோழர் தா.பாவின் இரண்டு அற்புதமான நூல்கள் இரண்டு அற்புதமான போராளிகளைப் பற்றியது. மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் என்ற சென்ற நூற்றாண்டின் புரட்சிக்காரர்களைத் தாண்டி தோழர் தா.பா சமகாலத்தை நெருங்கி வருகிறார்.

அதிகம் அறியப்பட்ட மேற்கு நாடுகளைத் தாண்டி, அண்மையில் நம்மைச் சூழ்ந்துள்ள ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க கண்டங்களை நோக்கி நம் கவனத்தை ஈர்க்கிறார் தோழர் தா. பா. பிடல் காஸ்ட்ரோ, சே குவாரா, நெல்சன் மண்டேலா ஆகிய போராளித் தோழர்களின் புரட்சிகர வாழ்க்கைகளை இந்நூல்களில் தோழர் விவரிக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகின் பெரும்பகுதியைத் தமது ஆயுதம் தாங்கிய இயக்கச் செயல்பாடுகளால் ஆகர்ஷித்தவர்கள் அவர்கள். தோழர் தா.பாவின் அடங்காத இளமை உணர்வுகளை அடையாளம் காட்டும் புரட்சிக்காரர்கள் அவர்கள்.

சென்ற நூற்றாண்டின் கொடுமுடியாகத் தமிழரின் போராட்ட அனுபவங்களைப் பதிவு செய்த இயக்கம் ஈழத்தமிழரின் விடுதலை இயக்கம். பொதுவுடைமை இயக்கங்களின் பல வட்டாரங்களில் சலனங்களை ஏற்படுத்தியது இவ்வியக்கம். எனினும் ஈழம் குறித்த மறுக்கமுடியாத ஒரு கொள்கைநிலையை ஆழப் பதிய வைத்ததில் தோழர் தா. பா அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு.

தோழர் தா.பா அவர்களின் தலைமைப் பண்பும் போராளிப் பண்பும் குறிப்பிட்ட அக்காலத்தின்போது வீறு கொண்டு தொழில்பட்டன; செயல்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் (ஈழத்) தமிழ் மக்கள் விடுதலை நோக்கிக் கையிலெடுத்த ஒரே போராளி இயக்கம் அவ்வியக்கமே.

21 ஆம் நூற்றாண்டுக்குள் உலகம் நுழைந்த காலத்தில் உலகு தழுவிய அளவில் ஏற்பட்ட மிகப்பெரிய சவால் கொரோனா நோய்த் தொற்றுடன் தொடர்பு கொண்டது. பொருளாதார நெருக்கடி, போர் நெருக்கடி, அரசியல் நெருக்கடி, பண்பாட்டு நெருக்கடி, சுற்றுச் சூழல் நெருக்கடி போன்ற நெருக்கடிகளை அடுத்து உயிரியல் நெருக்கடியாக இவ் அபாயம் உலகைப் பற்றிப் பிடித்தது.

தோழர் தா. பாண்டியன் “கொரோனாவா? முதலாளித்துவமா?” என்ற நூலை எழுதி வெளியிட்டார். ஒரு தொற்று நோயின் தோற்றத்தை, பரவலை அரசியல் வாசிப்புக்கு உட்படுத்திய அபூர்வமான நூல் என்று இதனைச் சொல்ல வேண்டும். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து, மனித உயிர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கும் நோயாக இன்றும் அது வேகமாகப் பரவி வருகிறது.

இத்தனை பெரிய அழிவைப் படிப்படியாக உருவாக்கி வளர்த்துள்ள முதலாளித்துவம் எனும் சமூக அமைப்பை அடையாளப்படுத்தாமல், வெறுமனே ஏதோ தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வு போல அதனைக் காட்ட முயலும் அரசியல் சக்திகளை தோழர் தா. பா கடுமையாகச் சாடுகிறார்.

அனைவரையும் அச்சப்படுத்தும் அழிவுகளின் கொடூரங்களை எடுத்துக் காட்டுகிறார். விஞ்ஞானம் சார்ந்த தொழில்துறைகளுக்கும் மூலதனத்திற்கும் இடையிலான உறவு மிகவும் நுட்பமானது.

விஞ்ஞானத் தொழில்நுட்பங்களின் மீதே ராணுவ வியாபாரிகள் உலகமெங்கும் தமது மூலதனத்தைப் பரப்பினார்கள். மருத்துவ விஞ்ஞானமும் மருந்து உற்பத்தித் தொழிலும் தொற்று நோய் (உயிரியல்) முதலாளியத்தின் அடிப்படைகள் ஆகின்றன. இது மனித குலத்திற்கு மிக மிக அபாயமான ஒரு புதிய துறை ஆகும்.

ஒரு நாட்டின் ராணுவத்தை விட மக்களின் உடல் நலமே அதிகக் கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று என்ற கருத்தை தனது நூலில் தோழர் தா.பா வலியுறுத்தி விவாதிக்கிறார். இந்த முன்வைப்பு மிகவும் தீவிரமானது.

நாடுகளின் மக்களின் உடல் ஆரோக்கியத்தை சர்வதேசப் பிரச்சினையாக வளர்த்தெடுக்கும்போது, நாடுகளின் எல்லைகளைக் கடந்த மருத்துவ (வலையங்கள்) முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பது ஒரு மக்கள் நலத் திட்டமிடலாக உருவெடுக்கிறது. கல்வியும் மருத்துவமும் அரசுத் துறைகளாக முழுதும் மாற்றப்படக் கூடிய நிலை உருவாக வேண்டும்.

இறுதியாக மற்றுமொரு நூல்: “பொதுவுடைமையரின் வருங்காலம்?” என்ற தலைப்பைக் கொண்ட நூல். நூல் அளவிலும் ஆழத்திலும் பெரிய நூல் என்பதில் சந்தேகமில்லை. பலரைக் கோபப்படுத்தும் நூல்.

ஆனால் யோசித்துப் பார்த்தால், மிகவும் முக்கியமான நூல். நூலின் தலைப்புக்கு ஏற்றாற் போல, மார்க்சியக் கோட்பாடு, சர்வதேச கம்யூனிச இயக்கம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் ஒட்டுமொத்த நிலைப்பாடுகள், அரசியல் கூட்டணிகள், அவற்றின் வெற்றி தோல்விகள் ஆகியன இந்நூலில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. கட்சிக்குள் மிக நீண்ட காலமாகவே ஒரு தீவிர இடதுசாரிவாதம் இருந்து வந்திருக்கிறது என்று தோழர் தா. பா குற்றம் சாட்டுகிறார்.

கட்சியின் கூட்டணி அரசியலில் சனநாயகச் சார்பு போதாது என்ற உணர்வு அவரது எழுத்துக்களில் தென்படுகிறது. காங்கிரஸ் கட்சி, சோசலிஸ்ட் கட்சிகள், அம்பேத்கரின் கட்சி, திராவிடக் கட்சிகள் ஆகியவற்றைப் புரிந்து கொள்வதிலும் அணிசேர்வதிலும் சனநாயகம் என்ற வேலைத்திட்டம் இல்லை என்று அவர் வாதிடுகிறார்.

இதனாலேயே கட்சி வளர்ச்சி அடையாமல் தனிமைப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு அவர் வந்து சேர்கிறார். அவரது முடிவுகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் இங்கு வாதிட வரவில்லை.

ஆயின் கட்சி இயக்கம் குறித்த பல உயிருள்ள வாதங்களை அடையாளப்படுத்தி அவரால் முன்னெடுக்க முடிகிறது. அவரால் பேசாமல் இருக்க முடியாது. பேசும்போது, காட்டமாகவே பேசுவார். இன்றும் கூட, கூடுதலாக விவாதிக்க வேண்டிய பல பிரச்சினைகளை அந்நூல் கொண்டுள்ளது.

தோழர் தா. பா அவரது வாழ்வின் இறுதி ஆண்டுகளில் எழுதிய நூல்களும் ஆற்றிய உரைகளும் அவர் தனது தோழர்களுக்கும் அன்பர்களுக்கும் அவர் சொல்ல விரும்பிய செய்திகளைத் தம்மில் கொண்டிருந்தன என்றே எண்ணவைக்கின்றன. அவற்றை நினைவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

- ந.முத்துமோகன்