Attack on womenகிரிஷாந்திக்கு..

பதினொரு ஆண்கள்
ராணுவ உடையில்
ஒருவர் பின் ஒருவராக...
உன் குருதி உறையும்வரை
நீ இறந்துவிட்டாய்
உன்னை மீண்டும்
கொன்றனர் ஆயுதத்தால்
தம் பாதுகாப்பை
உறுதிசெய்வதற்காக.
மேலும் யாழில் இருந்து மட்டுவரை
பெண்களும் சிறுமிகளும்...
காக்கிச்சட்டை வக்கிரகங்களைப்
பாதுகாக்கும் அரசில்
ஆண் ஆண்டாலென்ன
பெண் ஆண்டாலென்ன
பெண்தின்னும் சாஸ்த்திரங்கள் ..

றஞ்சனி(ஜேர்மனி)

ஜெர்மனியில் வசிக்கும் நண்பர் றஞ்சனி இதை மகளிர் தினத்திற்கு முந்தைய நாள் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். நாம் பெண்களில்லை ஆண்கள். அதிலும் பார்க்க கௌரவமான சமையல்காரிகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆண்கள். அதனால் உருவாகும் அசட்டையாகக் கூட இந்த தாமதம் இருக்கலாம். ஆனாலும் புகலிடச் சூழலில் போரின் துன்பத்தை, அது உருவாக்கும் தனிமையைச் சுமந்து வாழ்வது எவ்வளவு கொடுமையானது என்பதை றஞ்சனியின் வரிகளில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.

உலகப் பெண்கள் தினம் (8.3.09)

இன்றுள்ள போர்ச் சூழலில் ஈழத்திலும், உலகெங்கிலும் பெண்கள் சிறுமிகள் மிக இரட்டிப்புத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். பாலியல் பலாத்காரம், பாலியல் துஸ்பிரயோகங்கள், சித்திரவதைகள் என்று சிறுமிகள் சிறுவர்கள் பெண்கள் என்ற வித்தியாசமில்லாமல் உலக ராணுவம் வெறித்தனமாக பெண்கள்மீது இத்தகைய கொடுமைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஈழத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ள மக்களை தெரிவு செய்து இளம் பெண்கள் தனியாகவும் ஆண்கள் தனியாகவும் குழந்தைகள் பெண்கள் தனியாகவும் பிரிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்படுபவர்கள் பெருமளவானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், பெருமளவு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என அறிகிறோம். அதுமட்டுமல்ல சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இராணுவத் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் மத்தியில் உளரீதியாக சோர்வடைந்துள்ள படையினரை உற்சாகப்படுத்தும் வகையில் ஆற்றிய உரையில் “இனிமேல் முல்லைத்தீவில் அகப்படும் பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும் அங்கு அகப்படும் ஆண்களின் இரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும்’’ என்று கூறி படையினரை உற்சாகப்படுத்தியுள்ளார். ஒரு நாட்டின் பாதுகாப்புத்துறையில் இருக்கும் ஒருவர் வெளிப்படையாக இப்படியொரு தகவலை சொல்லியிருந்தும் யாரும் இதுபற்றி பெரிதாக கவனத்தில் எடுத்து பேசாமல் இருப்பது அதிர்ச்சியடைய வைக்கிறது. இவ்வறிக்கையை வன்மையாகக் கண்டிப்பதோடு அங்கும், உலகெங்கும் நடக்கும் போர்களுக்கெதிராகவும், பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராகவும் மனித நேயமுள்ள அனைவரும் ஓங்கிக் குரல்கொடுப்போம்.. அன்புடன் றஞ்சினி.

யுத்த காலங்களிலும் பேரினவாதிகளின் அழிக் கலவரங்களின் போதும் பெண்ணுடல் எப்போதும் கலவரத்தின் மையக்களமாக மாற்றப்படுகிறது. ஆதிக்க வெறி வரலாற்றின் வழிநெடுகிலும் உதிரம் சிந்த சிதைக்கப்பட்டும் குதறப்பட்டும் வீதிகளில் வெட்டி வீசப்பட்ட பெண்ணுடலின் வழியாகவே ஒடுக்கப்பட்ட மக்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்த நினைக்கிறது பேரினவாதம். புணர்ந்து வெறி தீர்த்த பின் பெண்ணின் யோனியில் வெடிவைத்தே சிதறடித்த கொடூரத்தின் சாட்சியாய் ஈழப் பெண்கள் இன்றும் யுத்த முனைகளில் வாழ்கிறார்கள். புனிதப்படுத்தப்பட்ட சடங்குகள் இந்த வன்முறைகள் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. பண்பாட்டு பாசிசமோ பெண்ணை கலாச்சாரத்தின் பிணையக் கைதியாய்ப் பார்க்கிறது.

காஸாவிலும், அபுகிரைபிலும், ஈழத்திலும் இன்று பெண்களுக்கு எதிராக நடந்தது அல்லது நடப்பது நாளை நமக்கும் நடக்கலாம். இலங்கையில் சிங்களப் பேரினவாதமாக வடிவம் பெற்று பெண்ணின் உதிரம் குடிக்கும் பாசிசம் இந்தியாவில் மதவெறிப் பாசிசமான வடிவம் பெற்றிருக்கிறது. குஜராத்தில் தீயில் எரிக்கப்பட்டும், கருப்பையில் இருந்து எடுக்கப்பட்டு கொளுத்தப்பட்டும், காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் சித்திரவதைகளிலும், கொல்லப்பட்ட பெண்களின் உயிர் என்பது ஈழத்தில் தமிழ் பெண்கள் சந்தித்தவை. அரசு இயந்திரத்தின் ஆதரவோடும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆசீர்வாதத்தோடும் நடைபெறும் பெண் வன்முறை என்பது யுத்தக் களத்தில் களிப்பூட்டும் பெரும் கொண்டாட்டமாக சிங்கள படைகளால் கொண்டாடப்படுகிறது. இறந்த பிணங்களை புதைக்கவோ வெடித்துச் சிதறிக்கிடக்கும் குழந்தைக்கு இறுதிச் சடங்குகளை நடத்தவோ சூழலில்லாமல் நிற்க ஒரு நிழல் வேண்டி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் ஈழத்து தாய்மார்கள்.

எவ்வளவோ ஆதாரங்கள் திரட்டியாயிற்று. எத்தனையோ புகைப்படங்களை நாம் கண்டாயிற்று. ஆனாலும் என்ன? என்ன செய்தால் போர் நிற்கும். ஒரு வேளை அத்தனை தமிழச்சிகளின் சதைகளையும் உண்டு பிணங்களைப் புணர்ந்து வாழ்ந்து பழகிய இடங்களை அழித்து பின் தானாக ஓயுமோ இந்த சிங்களப் பேரினவாதம்.
அதுவரை நாம் வேடிக்கை பார்க்கும் மக்கள் மட்டும்தானா? சாதீய அடக்குறைகளுக்கு எதிராக தங்களின் முலைகளை வெட்டி வீசிய போர் வரலாறு தென்னக்கத்துக்கு, தமிழ் பெண்களுக்கு உண்டு. பாலியல் வன்முறை செய்த கொடிய போலீசை பதின்மூன்றாண்டு காலம் போராடி சிறைக்கனுப்பிய பழங்குடிப் பெண்களும் இங்குதான் வாழ்கிறார்கள். ஆனால் நம் கண்ணெதிரே நடக்கும் இந்த மனிதப் பேரவலத்தை நாம் கண்டிக்க முன்வரவேண்டும். ஈழத்தின் மீது இன்று கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இந்தப் போரில் கொல்லப்பட்டும் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டும் கொல்லப்படும் குழந்தைகளுக்காகவும் பெண்களுக்காகவும் நமது வருத்தங்கள் உண்மையானது என்றால் நம்மால் அமைதியாக வாழ முடியாது. நாம் வீதிக்கு வந்து குரல் கொடுப்போம்!

றஞ்சனியின் இந்த வேண்டுகோள் என்பது ஏற்கனவே தமிழகத்தின் இருக்கும் எதிர்ப்பலைகளோடு இன்னும் தீவீரமாக ஒலிக்க வேண்டிய ஒன்றாகவும் போராடி வெல்ல முடியாத எது ஒன்றும் இல்லை என்பதையும் நமக்குக் காட்டுகிறது. நம்மால் என்ன செய்ய முடியும்? போராடுவது ஈழ மக்களுக்கு ஆறுதலைக் கொடுக்கிறது என்றால் அதை நாம் செய்ய வேண்டும். ஆறுதலுக்காக அல்ல நாளையும் கொல்லப்படப் போகும் பாலியல் வன்முறைக்குள்ளாகப் போகும் ஏதோ ஒரு பெண்ணுக்காக, 

- பொன்னிலா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It