அகநானூற்றிற்கு, இதுவரை 20 உரைகள்1 கிடைத்துள்ளன. இவ் உரைகளுள் குறிப்பிட்ட 56 பாடல் களுக்கான குறிப்புரையும், 1 முதல் 90 பாடல்களுக்கான பழைய உரையும் அச்சாக்கக் காலத்திற்கு முன்னர் தோன்றிய உரைகளாக அமைகின்றன. பிற, அச்சாக்கக் காலத்திற்குப் பின்னர் தற்காலத்தில் தோன்றியனவாகத் திகழ்கின்றன. இவ் உரைகள் தவிர்த்து, அகநானூற்றிற்கு எழுதப் பெற்றுக் கிடைக்கப்பெறாமல் போன உரைகள் பற்றிய குறிப்புகளும் நமக்குக் கிடைக்கின்றன. அவை,

1. பால்வண்ண தேவனான வில்லவதரையன் உரை

2. பழைய உரை வழிக் கிடைக்கின்ற உரைக் குறிப்புகள்

3. பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் உரை

என்பனவாகும்.

பால்வண்ண தேவன் - வில்லவதரையன் உரை

இவ் உரை பற்றிய குறிப்பை அகநானூற்றின் பாயிரம் தெளிவுபடுத்துகிறது. அப்பதிவு வருமாறு:

“முன்னினர் தொகுத்த நன்னெடுந் தொகைக்குக்

கருத்தெனப் பண்பினோ ருரைத்தவை நாடி

னவ்வகைக் கவைதாஞ் செவ்விய வன்றி

வரியவை யாகிய பொருண்மை நோக்கிக்

கோட்ட மின்றிப் பாட்டொடு பொருந்தத்

தகவொடு சிறந்த வகவ னடையாற்

கருத்தினி தியற்றி யோனே பரித்தேர்

வளவர் காக்கும் வளநாட் டுள்ளு

நாடெனச் சிறந்த பீடுகெழு சிறப்பிற்

கெடலருஞ் செல்வத் திடையள நாட்டுத்

தீதில் கொள்கை மூதூ ருள்ளு

மூரெனச் சிறந்த சீர்கெழு மணக்குடிச்

செம்மை சான்ற தேவன்

றொன்மை சான்ற நன்மை யோனே”

-  (அகம்.பாயிரம்:14-27)

இந்தப் பாயிரச் செய்தியைப் பின்பற்றி அக நானூற்றின் முதல் பதிப்பாசிரியரான கம்பர் விலாசம் ராஜகோபாலார்யன் பின்வரும் பதிவைத் தருகிறார்.

“தேவன்: இவர் பால்வண்ண தேவனான வில்லவதரையனார் எனவும் கூறப்படுவார். வளவன் நாட்டுள்ளதான இடையளநாட்டு மணக்குடியினர். இடையனாடென்றும் பாடம். இம்மணக்குடி, முதிய ஊரென்றும், இவர் மரபு தொன்மை சான்றதென்றும் அறியலாவது. பண்டையோர் அகப்பாட்டிற்குக் கூறிய உரை செவ்வியதல்லா திருத்தலைக்கண்டு, இவர் பாட்டொடு பொருந்த அகவல் நடையாற் கருத்து இயற்றினார் எனப்பாயிரம் கூறாநின்றது.” (1923:61)

கம்பர் விலாசம் ராஜகோபாலார்யனின் அகநானூற்றுப் பதிப்பைப் பரிசோதித்து உதவிய ரா.இராகவையங்கார்,

“இனி, இவ்வேட்டி னெழுதப்பட்ட “நின்றநேமி” என்னும் ஒரு பாயிரச் செய்யுளானும் அதன் பின்னுள்ள வசனத்தாலும் சோணாட்டைச் சேர்ந்த இடையளநாட்டு மணக்குடி என்னும் ஊரிலிருந்த பால்வண்ண தேவனான வில்லவ தரையன் என்று பெயர் சிறந்தவர் இந்நெடுந் தொகைக்குக் கருத்து அகவற்பாடினார் என்பது புலனாவது. அவர் கருத்தினால் புலப்படுத்திப் பாடிய அகவல் இப்போது கிடைத்திலது” (1923:61) 

என்றும் பதிவு செய்கிறார். இப்பதிவுகள் அக்காலத்தி லேயே கவிதை நடையில் உரை எழுதப்பெற்றுள்ள தன்மையை உணர்த்துகின்றன.

பால்வண்ண தேவனுக்கு முன்பு அகநானூற்று உரைகள் இருந்திருக்கின்றன என்றும், அவை பொருந்தாது அமைந்தமையால் பால்வண்ண தேவன் வேறோர் உரையைக் கருத்து அகவலால் பாடினார் என்றும் குறிக்கப்பெற்றிருப்பதால், இவ் உரைக்கு முன்னரேயே வேறுசில உரைகள் இருந் திருக்கின்றன என்ற செய்தியையும் அறியமுடிகிறது. அவை பற்றிச் சிறு குறிப்புகள் கூட நமக்குக் கிடைக்கா திருப்பது வேதனையளிக்கக் கூடியதாக அமைகிறது. இவ் உரைகள் உரைநடையில் அமைந்தனவா? அல்லது செய்யுளில் அமைந்தனவா? என்பதைக்கூட அறிய இயலவில்லை. இச்சூழலில், பால்வண்ண தேவன் உரை செய்யுளில் அமையக் காரணம் என்ன என்பது குறித்துச் சிந்திக்கும்போது, தமிழ்க் கல்விச்சூழல் இதற்குக் காரணமாகலாம் என்று குறிப்பிடத் தோன்றுகிறது.

தமிழ்க் கல்விச் சூழல் மனனக்கல்வியை அடிப்படையாகக் கொண்டதாக இருந்துள்ளது. இதனை, இறையனார் களவியல் உரை வரலாறும் நமக்குத் தெளிவுபடுத்துகிறது. எனவே, மனனக்கல்வியை அடிப்படையாகக் கொண்டு, அதனை மையமிட்டு, மனனம் செய்வதற்கு வசதியாக இருக்கும் என்ற எண்ணப் பின்னணியில் இவ் அகவல் நடையிலான உரை தோன்றி யிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. காலப் போக்கில் உரைநடைத் தன்மையிலான புலமைத்துவ உரைகள் தோற்றம் பெற்ற பின்னர் இச்செய்யுள் வடிவ உரை அதன் செல்வாக்கை இழந்து மறைந்திருக்கலாமோ என்று கருதுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

இவ் உரை பற்றிய பதிவை அகநானூற்றின் பாயிரம் தருவதே இதன் காலப் பழைமையை உணர்த்துவதாக அமைகிறது. பாயிரம், பனுவல் தொகுக்கப்பெற்ற காலத்தை ஒட்டி எழுதப்பெற்றிருக்க வேண்டும். சங்க இலக்கியத் தொகுப்புச் செயல்பாட்டில் குறுந்தொகை, நற்றிணைக்கு அடுத்ததாகத் தொகுக்கப்பெற்ற நூல் அகநானூறு ஆகும். அகநானூற்றின் பாடல் வைப்பு முறை இதனைத் தெளிவுபடுத்துகிறது.

அகநானூற்றின் முப்பெரும் பிரிவுகளான களிற்றி யானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை பற்றிக் கருத்துரைக்கும் அ.பாண்டுரங்கன், 

“மூலச்சுவடிகளில் உள்ள இப்பகுப்புகளை உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தம் தொல் காப்பிய உரையில் ஆளுகின்றார். எனவே இம் முத்திறப் பகுப்பு நச்சினார்க்கினியருக்கும் முற்பட்டது என்பதில் ஐயமில்லை. இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன் என்பான் நெடுந்தொகைக்குக் கருத்து அகவலால் பாடினான் என்னும் குறிப்பும் மூலச்சுவடிகளில் உள்ளது. எனவே, இப்பகுப்பை அமைத்தவன் பால்வண்ண தேவன் வில்லவ தரையன் என்று கருதவும் இடமுண்டு.

திணைப் பகுப்பைத் தொகுத்தவரான உருத்திரசன்மனே செய்திருத்தல் வேண்டும். திட்டமிடப்படாத தொகுப்பு முயற்சிகளிலிருந்து ஒரு திட்டமிடப் பட்ட தொகுப்பு நெறிகளாக நெடுந்தொகைத் தொகுப்பு வளர்ந்துள்ளமை இதிலிருந்து தெளிவாகின்றது. தொகுப்பு நெறிகளில் இது இரண்டாவது கட்ட நிலையைக் காட்டுகிறது எனலாம். களிற்றியானைநிரை மணிமிடைபவளம் நித்திலக்கோவை என்னும் முத்திறப்பகுப்பு அகவலால் உரைவரைந்த பால்வண்ண தேவன் வில்லவதரையன் பணியாகலாம். ஆக மூலம் திணைப்பகுப்பு நூல் உட்பிரிவு என மூன்று படிநிலை வளர்ச்சிகளை நெடுந் தொகை காட்டுகிறது” (2008:53)

என்று குறிப்பிடுகிறார். அகநானூற்றின் முப்பகுப்பைச் செய்தவர் பால்வண்ண தேவனான வில்லவதரையன் என்ற கருத்து மீளாய்விற்குரியதாகும். ஏனெனில், பாயிரப்பகுதியிலோ அல்லது அகநானூறு தொடர்பான வேறு எந்தப் பதிவுகளிலோ இது பற்றிய எந்தக் குறிப்பும் காணப்பெறவில்லை. ஆனால், இவரின் கருத்து பால்வண்ண தேவனின் அகவல் நடையிலான உரை காலப்பழைமையானது என்பதனைத் தெளிவுபடுத்து கிறது என்பது இங்குக் குறிக்கத்தக்கது. இதனை, மேற் கண்ட பாயிரப் பதிவின் வழியும் அறிந்துகொள்ள முடிகிறது.

இதனடிப்படையில் பார்க்கும்போது, பழந்தமிழ்ப் பனுவல்களின் உரையாக்க காலத்திற்கு முன், தொகுப்புக் காலத்தை ஒட்டி இவ் உரை தோற்றம் பெற்றிருக்க வேண்டும் என்று கருதலாம்.

அக்காலத்திலேயே அகவற்பாவால் எழுதப் பெற்ற இவ் உரை, தற்காலத்தில் தோன்றும் கவிதை வடிவ உரைகளுக்கு முன்னோடி என்றாலும், இக்கவிதை

வடிவ உரை கற்றல், கற்பித்தலை அடிப்படையாகக் கொண்டது என்பதும் இக்காலக்கவிதை வடிவ உரைகள் இரசனை முறையை அடிப்படையாகக் கொண்டவை என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். எனவே, இக்காலக் கவிதை வடிவ உரைகளை விட முற்காலக் கவிதை வடிவ உரைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதும் இங்கு நினைவில் கொள்ளத் தக்கதாகும்.

பழைய உரைவழிக் கிடைக்கின்ற உரைக்குறிப்புகள்

அகநானூற்றின் பழைய உரை இடைக்காலத்தில் தோன்றிய உரை என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்காது. இவ் உரையைப் பரிசோதித்துப் பதிப்பிக்க உதவிய ரா.இராகவையங்கார் அப்பதிப்பின் முகவுரையில்,

“இந்நூலுரை முழுதிற்குமில்லாது கடவுள் வாழ்த்திற்கும் நூன் முதற்கண்ணுள்ள தொண்ணூறு செய்யுள்கட்குமே உள்ளது. இவ்வுரை ஒவ்வொரு செய்யுளிலுமுள்ள திரிசொற்கும் அருந்தொடர்க்கும் பொருள் புலப்படுத்தியும், அகத்திணைக்குச் சிறந்த உள்ளுறையுவமம் இறைச்சிப்பொருள் இவற்றை ஆங்காங்கு இனிது விளக்கியும், வேண்டிய விடங்களிற் சொன்முடிபு பொருண் முடிபு காட்டியும், முக்கியமானவை சிலவற்றிற்கு இலக்கணக் குறிப்புகள் கூறியும், கதை பொதிந்த விடத்து அவ்வக் கதைகளை எடுத்துணர்த்தியுஞ் சேறலாற் பலவழியானுஞ் சிறந்து இனிது விளங்கு வதாகும்.

இவ்வரிய உரையை இயற்றியுதவிய நல்லாசிரியர் பெயர், ஊர் முதலிய வரலாறு ஒன்றும் இப்போது அறிதற்கிடனின்று. இவ்வுரை யெழுதிய பழையதோர் ஏட்டின்கட் கொல்லம் 460 என்று வரையப்பட்டிருந்தது கொண்டு இவ்வுரையாளர் இற்றைக்கு அறுநூற்று முப்பத் தெட்டு வருடங்கட்கு முற்பட்ட காலத்தவ ரென்பது மட்டிலறியலாவது. நச்சினார்க்கினியர் காலம் கி.பி.14ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தாகாமையால் இவ்வுரைகாரர் நச்சினார்க் கினியர்க்கு முந்தியவர் என்று கொள்ளலாகும்” (1923:7-8)

என்று பதிவு செய்கிறார். இப்பதிவு தவிர வேறு எந்தப் பதிவும் இவ்வுரையின் காலம் பற்றி அறிவதற்குக் கிடைக்கவில்லை. இருப்பினும் கம்பர் விலாசம் ராஜகோபாலார்யன், 

“இவ்வகத்தின் முதல் தொண்ணூறு பாட்டிற்குக் குறிப்புரை எழுதியவர் இன்னாரென்று தெரிய வில்லை. இவரது உரையிற் காணப்படும் பல சொன்னயங்களால் இவரை வைணவராகக் கருதலாகும்” (1923:61)

என்று குறிப்பிடுகிறார். இது குறித்துத் தொடர்ந்து சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது. இருப்பினும் இவர் உரை கி.பி.14ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பது ஏற்கத்தக்கதாகவே அமைகிறது. கி.பி.14 இக்கு முன் எந்தக்காலத்தில் தோன்றியது என்பதைத் தெளிவாகத் தீர்மானிக்க இயலாத சூழலில், இவ் உரை தோன்றிய காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ வேறு சில உரைகள் இருந்திருக்கின்றன என்பதற்கான குறிப்புகள் இப்பழைய உரையில் 5 இடங்களில் (அகம்.க.வா.:2,46: 15,54:12,59:6,90:7) காணப்பெறுகின்றன. அவை முறையே வருமாறு:

“தார் ஓர் விசேடமாக இடுவது; மாலை அழகுக்கு இடுவது; கண்ணி போர்ப்பூ.

இனித் தார் சேர்ப்பதாகவும், மாலை கட்டு வதாகவும், கண்ணி தனித்துத் தொடுப்பதாகவும் இவ்வேறுபாடுகளென உரைப்பாளரும் உளர்” (1920:2)

“ஒண்டொடி என்று ஆகுபெயரால் தலைவியை ஆக்கி அவள் மெலியினும் மெலிக வென்பாரு முளர்” (1920:75)

“மனைதொறும் படரும் என்க. மனை எனச் சேர்ப்பாருமுளர் ” (1920:87)

“ஆயர் பெண்கள் குறியாநின்றார்களாக, அவர் இட்டுவைத்த துகிலெல்லாம் பின்னை எடுத்துக் கொண்டு குருந்தமரத்தேறினாராக, அவ்வகையில் நம்பி மூத்தபிரான் வந்தாராக, அவர்க்கு ஒரு காலத்தே கூட மறைதற்கு மற்றொரு வழி யின்மையின் ஏறிநின்ற குருந்தமரத்துக் கொம்பைத் தாழ்த்துக் கொடுத்தார், அதற்குள்ளே அடங்கி மறைவாராக. அவர் போமளவுந் தானையாக வுடுக்கத் தாழ்த்தா ரென்பாருமுளர்” (1920:94)

“வருந்தும் நின் என முடிக்க. வருத்தாள் என்னும் பாடத்திற்கு வருமுலை வருத்தப் பண்ணாள் வருந்தும் பகட்டு மார்பினையுடைய நின் என்று சேர்த்துரைக்க. வருமுலை தெருமரலுள்ளமொடு வருத்தப் பண்ணாள் வருந்தும் பகட்டு மார்பின் நின் என்று பிரித்துப் பொருளு ரைப்பாருமுளர் ” (1920:136).

இவ்வுரைக்குறிப்புகளில் வரும், ‘உரைப்பாருமுளர், என்பாருமுளர், சேர்ப்பாருமுளர்’ எனும் சொல்லாட்சிகள் இவ்வுரை தோன்றிய சமகாலத்திலோ அல்லது இதற்கு முன்போ வேறுசில உரைகள் அகநானூற்றிற்கு இருந் திருக்கின்றன என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. அகநானூற்றிற்கான பழைய உரையின் காலத்தை ரா.இராகவையங்கார் கருத்துப்படிக் (மறுப்பதற்கு வேறு சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை) கி.பி.14ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்று எடுத்துக் கொண்டால் இவ்வுரைக் குறிப்புகள் அதற்கும் முந்தியதாக இருக்க வேண்டும் என்று குறிக்கலாம். இவ்வுரை (இவ்வுரைகள்) கிடைக்காததும் வருத்தத்திற்குரியதே ஆகும்.

பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் உரை

அகநானூற்றின் முதல் பதிப்பு 1918இல் கம்பர் விலாசம் ராஜகோபாலார்யனால் களிற்றியானை நிரை மட்டுமானதாகப் பதிப்பிக்கப்பெற்று வெளிவந்துள்ளது. இருப்பினும் இதற்கு முன்னதாக, உ.வே.சாமிநாதையர் (1894 முதல்), சி.வை.தாமோதரம் பிள்ளை (1897 முதல்), ரா.இராகவையங்கார் (1903 முதல்), பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் (1908 முதல்) ஆகிய நால்வர் அகநானூற்றைப் பதிப்பிக்க முயற்சித்துள்ளனர் (இப்பதிப்புகள் எதுவும் வெளிவரவில்லை). இவர்களுள் முதல் மூவரின் பதிப்பு முயற்சி மூலத்தைக் கவனத்தில் கொண்டனவாகவும் பின்னத்தூராரின் பதிப்பு முயற்சி உரையுடன் கூடியதாகவும் அமைகின்றன.

இவ் உரை முயற்சியை அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியரான கம்பர் விலாசம் ராஜகோபாலார்யன், 1923இல் பதிப்பித்த தம் அகநானூற்றுப் பதிப்பில் ‘ஸ்ரீ : ஒரு விஞ்ஞானம்’ எனும் தலைப்பிலான தம் முகவுரைப் பகுதியில்,

“இற்றைக்கு ஒரு பதினைந்து யாண்டுகட்கு முன் நற்றிணையுரையாசிரியரும் என் மனத்தே ஸர்வகாலங்களிலும் உரைந்து, “நீ ஸர்வா பீஷ்டமும் அடைந்து சேமமாக நீடுழி வாழ்க” என்று என்னை அநுக்கிரஹித்து வருபவருமான காலஞ்சென்ற பின்னத்தூர் அ.நாராயணஸ்வாமி ஐயரவர்கள் இந்நூலைச் சோதித்து உரை வரைந்து கொண்டிருந்த காலத்து எனக்கு இதன் கண்ணுள்ள பலவகையான சிறப்புக்களையும் எடுத்துச் சொல்லிக்கொண்டு வருவதுண்டு. யானோ அக்காலத்து இச்சிறந்த நூலின் இன்பப் பகுதியையாவது, தடையின்றியழுகும் நடைப் போக்கினையாவது மனத்தைக் கவருமியற்கை வருணனைகளையாவது பிற பெருமைகளையாவது பாராட்டுந் திறத்தேனல்லேனாய், இதன்கண்ணே பொதிந்து கிடக்கும் கதைக் குறிப்பினை மட்டும் பாராட்டி, அவற்றைத் தொகுத்தும் விரித்தும் சிறுசிறு கதைப்புத்தகங்களாக எழுதி வந்தேனாக...” (1923:12)

என்று பதிவு செய்கிறார். இக்குறிப்பு, பின்னத்தூரார் நற்றிணைக்கு உரை எழுதிப் பதிப்பிப்பதற்கு முன்பே அகநானூற்றிற்கான உரை முயற்சியை மேற்கொண் டிருக்கின்றார் என்பதனைத் தெளிவுபடுத்துகிறது. 1923இல் எழுதப்பெற்ற இம்முகவுரைக் குறிப்பில், ‘இற்றைக்கு ஒரு பதினைந்து யாண்டுகட்குமுன்’ என்ற குறிப்புக் காணப்பெறுவதால், இவ் உரை முயற்சி 1908ஐ ஒட்டிய காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. பின்னத்தூராரின் நற்றிணை உரைப்பதிப்பு 1915இல் வெளிவந்துள்ளது என்பதும் இங்குக் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

எனவேதான் நற்றிணை உரைக்கு முன்னதாகவே அகநானூற்று உரை முயற்சியைப் பின்னத்தூரார் மேற் கொண்டுள்ளார் என்பதனைப் பதிவு செய்ய இயலுகிறது. நற்றிணைக்கு முன்னர் தாம் எழுதிய அல்லது எழுத முயற்சித்த அகநானூற்று உரையை நிறைவு செய்யாதது ஏனென்று தெரியவில்லை. அது குறித்துச் சிறு பதிவைக் கூடப் பின்னத்தூரார் செய்திருக்கவில்லை என்பதும் வருத்தத்திற்குரியதாக அமைகிறது. அவ் உரைக் குறிப்புகள் என்னாயிற்று என்பதனையும் அறிய இயலவில்லை.

பொருட்புரிதலில் பல்வேறு விதமான சிக்கலை ஏற்படுத்துகின்ற இன்றைய செவ்விலக்கிய உரைத்தோற்றச் சூழலில், நாம் இழந்த மேற்கண்ட உரைகள் நமக்குப் பேரிழப்பைத் தருகின்றன. அவை கிடைத்திருந்தால் இன்னும் கூடுதலான செய்திகளை, ஆராய்ச்சிக் குறிப்புகளை நாம் பெற்றிருக்க இயலும் என்பது இங்குப் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

துணை நின்றவை

இராஜகோபாலையங்கார் வே.(பதி.), ஸ்ரீ: எட்டுத் தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு மூலமும் பழைய உரையும், இவை ஸேதுசமஸ்தான வித்வான் ஸ்ரீ உ.வே.ரா. இராகவையங்கார் ஸ்வாமிகள் பரிசோதித்துத் தந்தன, கம்பர் விலாசம், மைலாப்பூர், சென்னை, 1923

பரமசிவன் மா., அகநானூறு:பதிப்பு வரலாறு (1918-2010), காவ்யா, சென்னை, 2010

பாண்டுரங்கன் அ., தொகை இயல், தமிழரங்கம், இலாசுப்பேட்டை, புதுச்சேரி, 2008

குறிப்பு - 1

1. குறிப்புரை (குறிப்பிட்ட 56 பாடல்கள்)

2. பழைய உரை (1-90 பாடல்கள்)

3. 1926, 33 : ராஜகோபாலார்யன் உரை (91-160 பாடல்கள்)

4. 1943, 44 : ந.மு.வேங்கடசாமி நாட்டார் & கரந்தைக் கவியரசு இரா.வேங்கடாசலம் பிள்ளை உரை (நூல் முழுமையும்)

5. 1938 : ந.சி.க. வசன உரை (நூல் முழுமையும்)

6. 1953-58 : சி.கணேசையர் உரை (களிற்றியானை நிரை)

7. 1959 : மா.சிவஞானம் வசன உரை (களிற்றியானை நிரை)

8. 1959 : வே.வடுகநாதன் வசன உரை (மணிமிடை பவளம்)

9. 1959 : சு.அ.இராமசாமிப் புலவர் வசன உரை (நித்திலக்கோவை)

10. 1960,62 : புலியூர்க்கேசிகன் உரை (நூல் முழுமையும்)

11. 1968-70 : பொ.வே.சோமசுந்தரனார் உரை (நூல் முழுமையும்)

12. 1987 : மு.ரா.பெருமாள் முதலியார் - கவிதை வடிவம் (களிற்றியானை நிரை)

13. 1990 : மயிலம் வே.சிவசுப்பிரமணியன் பதிப்பின் பழைய உரை, பொழிப்புரை, குறிப்புரைகள்

14. 1999 : அ.மாணிக்கனார் தெளிவுரை (நூல் முழுமையும்)

15. 2004 : இரா.செயபால் உரை (நூல் முழுமையும்)

16. 2004 : நா.மீனவன் & தெ.முருகசாமி உரை (களிற்றியானை நிரை)

17. 2004 : நா.மீனவன் & சுப.அண்ணாமலை உரை (மணிமிடை பவளம்)

18. 2005 : தமிழண்ணல் & நா.மீனவன் உரை (நித்திலக்கோவை)

19. 2006 : ச.வே.சுப்பிரமணியன் தெளிவுரை (நூல் முழுமையும்)

20. 2009 : வ.த.இராமசுப்பிரமணியம் தெளிவுரை (நூல் முழுமையும்)