‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்’ பசு. கவுதமன் தொகுத்துள்ள தந்தை பெரியாரின் எழுத்துக்களடங்கிய ஐந்து தொகுப்பு நூல்கள் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தால் வெளியிடப்படவுள்ளன. சுமார் 4000 பக்கங் களுக்கு மேலுள்ள இந்த நூல்களின் மொத்த விலை ரூ. 4000/- இவற்றை முன்வெளியீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ. 2000/- என மிகக் குறைந்த விலையில் தரும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் அறிவிப்பு, வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இது குறித்த பரப்புரை விழா, பிப்ரவரி 25 மாலை, கோவை கமலம் துரைசாமி அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் என்.சி.பி.எச். நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சண்முகம் சரவணன் முன்னிலை வகித்தார். மண்டல மேலாளர் அ.கணேசன் வரவேற்புரை நல்கினார். பல்வேறு அமைப்புகளின் சார்பில், முன்வெளியீட்டுத் திட்டத்தை வரவேற்று வாழ்த்துரை வழங்கினர்.

யு.கே. சிவஞானம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர், தற்போதைய தமிழக சூழலில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்செயல்கள், சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிரான கொலை வெறி அதிகரித்து வருகிறது. சாதீயம், மூட நம்பிக் கைகளுக்கு எதிராக நெடும் போர் புரிந்த தந்தை பெரியாரின் சிந்தனைகளை இன்றைய தலைமுறை யினருக்குக் கொண்டு செல்ல, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் எடுத்துள்ள முயற்சி பாராட்டத்தக்கது. “தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் முதல் கட்டமாக 25 சந்தாக்களுக்கு முன்பணம் வழங்குகிறோம்” என்று தெரிவித்தார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் இராமகிருட்டிணன், தனது உரையில், “தமிழர்களின் சுயமரியாதைக்காகப் போராடியவர் பெரியார். காரைக்குடி சிவக் கொழுந்து சிறந்த நாதசுரக் கலைஞர். ஆனால் உயர்சாதியினர் அவர் தோளில் துண்டணிந்து வாசிக்கக்கூடாது என்று தடைவிதித்தபோது, பெரியார் அவரது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து துண்டணிந்து வாசிக்கச் செய்தார். அவரது பெருந் தன்மையைப் புரியாதவர்கள்தான் அவரைக் கஞ்சன் என்று கூறுவார்கள். சமூகத்தின் புறக்கணிக்கப் பட்ட பகுதி மாணவ, மாணவிகளின் கல்விக்காக, தனக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தையும், நிதியாக ஐந்து லட்சத்தையும் தமிழ்நாடு அரசுக்கு வழங்கியவர் தந்தை பெரியார்.

தனது தத்துவமும், புத்தகங்களுமே தனது வாரிசு என அறிவித்தார். கம்யூனிஸ்ட் அறிக்கையையும், பகத்சிங் எழுதிய “நான் ஏன் நாத்தி கனானேன்” நூலை ஜீவா மொழிபெயர்ப்பில் தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

new century book 600தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநிலப் பிரச்சாரச் செயலாளர் சீனி. விடுதலை அரசு தனது வாழ்த்துரையில், “தோழர் தா.பா. இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஈரோட்டில் தந்தை பெரியார் பற்றிப் பேசிய உரை, 15 பக்கங் களைக் கொண்ட சிறு பிரசுரமாக வெளியிடப் பட்டது. அதைப்படித்தபிறகுதான் எனக்கு தந்தை பெரியாரிடம் ஈர்ப்பு ஏற்பட்டது. சுரண்டலை ஒழிக்க வேண்டி நடத்தப்படும் வர்க்கப் போராட்டமும், சமூக ஒடுக்குமுறையை ஒழிக்க வேண்டி நடத்தப் படும் சமூக விடுதலைப் போராட்டமும் ஒருங் கிணைந்து ஒரே புள்ளியில் இயங்க வேண்டிய தருணம் இது. நமது எதிரி மதவேடமிட்டு வரு கிறான். பிள்ளையாராக, ராமனாக வலம் வரு கிறான். இந்த மூடநம்பிக்கைகளைச் சாடியவர் புத்தர். அவருக்குப் பிறகு சமூகப்புரட்சியை வலிமை யாக முன்னெடுத்த சிந்தனைச் செயலர் வீரர் தந்தை பெரியார்” என்றார்.

சூலூர் பாவேந்தர் பேரவையின் தலைவர் புலவர் செந்தலை கவுதமன், பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரைச் சேர்க்காத வரலாற்றைப் படைத்தவர் பெரியார். அவரது விடாமுயற்சியால் விளைந்ததே சாதிமறுப்புத் திருமணத்தை அங்கீகரித்த சட்டம். பெரியார் நூல்களைத் தொகுத்துள்ள பசு. கவுத மனுக்கும், செந்தலை கவுதமனுக்கும், கவுதமன் என்ற பெயரைச் சூட்டியவர் தந்தை பெரியார். ஜீவாவை கோவைக்கு அழைத்து வந்தவர் மற்றும் “பகுத்தறிவின் எல்லை பொதுவுடமை” என்றவர் பெரியார். “இந்தியப் பொதுவுடமைக் கட்சி

26. 12. 25ல் துவக்கப்பட்டது. சுயமரியாதைக் கட்சி 26. 12. 26ல் துவக்கப்பட்டது” என்றார்.

தொகுப்பாசிரியர் பசு.கவுதமன், “இந்தப் பணியை நிறைவேற்ற ஐந்தாண்டு கால அவகாசத்தையளித்த என்.சி.பி.எச் நிறுவனத்துக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். பெரியாரின் கருத்துக்களைப் படிப்பது சமூக முன்னேற்றத்திற்குத் திறவுகோலாகும். இந்த நூல்களை வாங்கி வைத்திருப்பதே உங்களுக்கு பலமளிக்கும். வாங்கி அன்பளிப்பாகவும் வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

தா.பாண்டியன் நிறைவுரை

கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்ட அறிஞர்கள் உலக வரலாற்றில் பலருண்டு. அறிஞர் இங்கர்சால் பகுத்தறிவுக் கருத்துக்களை பரப்பியவர். இந்தியாவில் கவுதம புத்தர் அறிவுப் புரட்சிக்கு வித்திட்டார். ஆனால் அவரது வழித் தோன்றல்கள், புத்தமதத்தையும் சடங்குகளுக்குள் புதைத்து விட்டனர். அவருக்குப் பிறகு பகுத்தறிவு இயக்கத்தை மக்கள் இயக்கமாக நடத்தியவர் தந்தை பெரியார். சோவியத் யூனியன் சென்ற போது அங்கு, அறிவியல் பார்வையை வளர்க்க தனி அமைச்சரவை நிறுவப்பட்டுள்ளதைக் கண்டார். பெரியார், இந்தப் பணியை அரசால் செய்ய முடியாது எனப் புரிந்து, தனி இயக்கமாகவே நடத்திக் காட்டினார். நாட்டின் அரசியல் சாசனம் 1950ல் அமுலுக்கு வந்தபோது, அதில் முதல் திருத்தம், தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு தொடர வேண்டி செய்யப்பட்டது. அப்போது திராவிட இயக்கம் அரசியல் கட்சியாக மாறியிருந்தாலும், மாநிலத்திலோ, மத்தியிலோ சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் களைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், பெரியார் 1950ல் கடையடைப்பு போன்ற போராட்டங்களை நடத்த அறைகூவல் விடுத்தார். தமிழ்நாடெங்கும் கூட்டங்களை நடத்தினார். அதன் விளைவாக, அன்றைய பிரதமர் நேரு, அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர உடன்பட்டார். தமிழ் நாட்டில் இடஒதுக்கீடு தொடர, அடிப்படை உரிமை சரத்தில் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான பெருமை தந்தை பெரியாரைச் சாரும்.

45 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் ஆதர வற்றோருக்கு பள்ளியை துவக்கினார். அங்கு படிக்கும் பிள்ளைகளுக்கு தந்தை யார் என்று கேட்ட போது, தனது பெயரையே முன்னெழுத்தாகப் பதிவு செய்யச் சொன்னார். இங்கு படித்தவர்களில் 35 பேர் உலக நாடுகளில் உயர்பதவிகளில் அமர்ந் துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 17 பேர் உயர் பதவிகளிலுள்ளனர்.

நான் உ.பி. மாநிலம் மதுராவிற்குச் சென்ற போது, ஆயிரக்கணக்கான பெண்கள் அங்குள்ள பல மடங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டேன். விசாரித்தபோது, அவர்கள், கணவனை இழந்த விதவைகள். இந்து சமூக வழக்கப்படி, மறுமணம் செய்து கொள்ளக்கூடாது என அகதிகளாக அங்கே விடப்பட்டுள்ள கொடுமையைக் கண்டேன். இதைக்கண்டு, அவர்களை விடுவித்து, கல்கத்தாவிற்கு அழைத்துச் சென்று மறு வாழ் வளிக்க முன்வந்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாராட்டுக்குரியவர்.

இத்தகைய சமூக கொடுமைக்கெதிராக சீர்திருத்த இயக்கத்தை நடத்திய பெருமை பெரியாருக்குண்டு. பெண்களின் உரிமைக்காக வலிமையாகக் குரல் கொடுத்தவர் பெரியார்.

சாதியின் பெயரால் ஆதிக்க எண்ணங்கள் தொடர்வதற்கு முடிவு கட்டிய பெரியாரின் சிந்தனைகள் மக்களிடையே சென்று சேர வேண்டும். சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் தாழ்வு மனப்பான்மை நீங்கி, அதேபோல உயர் சாதியினரின் அகந்தையும் அகன்றால்தான் உண்மை யான சமத்துவம் நிலவும். மூடநம்பிக்கைகளும், மூடப்பழக்கவழக்கங்களும் ஒழிய வேண்டுமானால், பெரியாரின் புரட்சி தொடர வேண்டும்.

நிகழ்ச்சியின் இறுதியில், என்.சி.பி.எச் பொது மேலாளர் திரு. தி.ரெத்தினசபாபதி நன்றி கூறினார். பல்வேறு அமைப்புகள் தனிநபர்கள் மூலம் சேர்ந் துள்ள 115 முன்வெளியீட்டு சந்தா பட்டியலை, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலப் பொருளாளர் ப.பா. ரமணி அறிவித்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, என்.சி.பி.எச் கோவை கிளை மேலாளர் ஆர் ரங்கராஜன் சிறப்பாக செய்திருந்தார் நிகழ்ச்சிகளை. மறைந்த கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் அவர்களின் பேத்தி செல்வி அகிலா ஒருங்கிணைப்பு செய்தார்.

தொகுப்பு: ப.பா.ரமணி