“செப்பு மொழிபதி னெட்டுடையாள் எனில்

 சிந்தனை ஒன்றுடையாள்"

எனும் தன் கூற்றுக்கேற்பவே இந்திய இலக்கியத் தன்மை களைத் தன் இலக்கியத்தில் கைக்கொண்டவர் பாரதியார்.

பாரதியார் தமிழ், ஆங்கிலம் போன்றவற்றோடு சமஸ்கிருதம், இந்துஸ்தானி, வங்காளி, தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட இந்திய மொழிகளை நன்கு அறிந்தவர். இதனால் தான் இந்திய மொழிகளில் தலைசிறந்த தொன்மங்களாக மிளிரும் கிருஷ்ணன், பாஞ்சாலி போன்ற பாத்திரங்களைத் தன் படைப்புக் களில் பயன்படுத்தினார். வங்க மொழியிலிருந்து தாகூரின் சில கதைகளையும், பங்கிம் சந்திரரின் வந்தே மாதரத் தையும், அரவிந்தரின் வேத வாக்குகளையும் (கடல் கவிதை) மொழிபெயர்த்துள்ளார். மேலும், இந்தியத் தத்துவ மரபுகளை நன்கறிந்து அவற்றைத் தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பயன்படும் வகையில் எடுத்தியம்பி யுள்ளார். இத்துடன் பாரதியார் தன் கதைகளில் இந்திய மரபார்ந்த கதைத் தன்மையையும் பின்பற்றக் காணலாம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பாரதியார் இந்திய வேதங்களைக் கற்றுத்தேர்ந்து அவற்றின் அறிவார்ந்த (கீதை போன்ற) பகுதிகளைத் தன் எழுத்துக்களில் கையாண்டு, தமிழ் மக்களை நெறிப்படுத்தவும் செய் துள்ளார். இத்தகைய பாரதி தன் எழுத்துக்களில் இடம்பெற்றுள்ள இந்திய இலக்கிய மரபுகளைச் சுட்டிக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகிறது.

கண்ணன் பாட்டு - கீதை

‘கண்ணன் என் தந்தை’ கவிதையில் கீதையின் கருத்துகள் பல விதங்களில் காணப்படுகின்றன. கண்ணனாகிய தந்தை “பாழிடத்தை நாடியிருப்பான்” என்று சொல்லப்படுகிறது. கீதையில், தனியிடத்தை நாடுதல் ஒரு ஞானியின் செயலாகும் என்கிறார் கண்ணன். கீதையின் சாங்கிய யோகக்கருத்து “துன்பத்தில் துடியாத, இன்பத்தில் நாட்டமில்லாத உள்ள முடையவன் முனி எனப்படுகிறான்”. இதே கருத்து தான் கண்ணன் என் தந்தையில்,

“இன்பத்தை இனிதெனவும், துன்பம்

இனிதில்லையென்றுமவன் எண்ணுவதில்லை”

என்று காணப்படுகிறது.

கண்ணன் கீதையில் வேதங்களையும், நான்கு குலங்களையும் தான் படைத்ததாகக் கூறுகின்றார். இதையே பாரதியார்,

“வேதங்கள் கோத்துவைத்தான்” என்றும்

“நாலு குலங்கள் அமைத்தான்”

என்றும் குறிப்பிடுகிறார்.

பாரதியாரின் ‘கண்ணன் என் சீடன்’ என்னும் கவிதை கீதையின் மையக்கருத்தை உள்ளடக்கிய கவிதை யாகத் திகழ்கிறது. “நான் ஒன்றையும் செய்கிறேனில்லை என்பதை உணர்ந்து, உள்ளளி காண்பவன் பிரம்ம நிர்வாணத்தை அடைகிறான்” என்ற கீதையின் கருத்தை ஆணவம்மிக்க ஆசானுக்குச் சீடன் உணர்த்துவதான பாரதியாரின் கவிதை இது.

“மகனே! ஒன்றையாக்குதல் மாற்றுதல்

அழித்திடலெல்லாம் நின்செயலன்று காண்”

என்கிறான் கண்ணனாகிய அறிவுள்ள சீடன். இதே கீதையின் கருத்தை கண்ணனாகிய அரசனும் முன் வைக்கக் காணலாம்,

“ஒன்றுங் கவலையில்லாமலே - சிந்தை

ஊன்ற நிறுத்திக் களிப்பற்றே - தன்னை

வென்று மறந்திடும் போழ்தினில் - அங்கு

விண்ணையாக்கும் அறிவுதாம்”

இக்கருத்துக்களை நோக்க பாரதியாரின் இலக்கி யத்தில் கீதையின் சாயல் நிறைந்திருக்கக் காண்கிறோம். தமிழ் மக்களுக்குக் கீதையின் மொழிபெயர்ப்பைத் தந்த பாரதியாரிடம் இந்திய இலக்கிய மரபான கீதையின் தாக்கம் அமைவது இயல்புதானே.

கண்ணன்பாட்டு - கீத கோவிந்தம்

பாரதியாரின் கண்ணன் பாடல்கள் தொகுப்பில் காணப்படும் காதல் பாடல்களைக் காணும் பொழுது, முதலில் நினைவுக்கு வருவது ஜெயதேவரின் கீத கோவிந்தமே யாகும். “கண்ணன், ராதை, கோபியர்” இணைப்பு வடஇந்திய மொழிகளில் பல இலக்கியங் களை உருவாக்கித் தந்துள்ளது என்றாலும், இந்த வகையில் ஜெயதேவர் வடமொழியில் இயற்றிய ‘கீதகோவிந்தம்’ மிகுந்த புகழ் வாய்ந்தது எனலாம். கீதகோவிந்தம், கண்ணனும் ராதையும் சேர்ந்து மகிழ்வதையும் பிரிந்து வருந்துவதையும் மையக் கருத்தாகக் கொண்ட பல பாடல்களைக் கொண்டது. தூது, இராக, தாளங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுவதும் இந்த இலக்கியத்தின் ஒரு பகுதி. பாரதியாரும் கண்ணனைப் பற்றிய காதல் பாடல்களை மகிழ்வு, துயரம் என்று இருவகைப்படுத்தியுள்ளார். கீதகோவிந்தம் போலவே இராகம், தாளம் குறிப்பிடுவதும் எண்ணத் தக்கது.

புருவம் தீட்டிப் பூச்சூட்டி, வைரமாலைகள் அணிவித்து கண்ணன், ராதையை அலங்கரித்து மகிழ் வதைக் கீத கோவிந்தம் கூறுவதைப் போல், “கனிகள் கொண்டு தரும் கண்ணன்” என்ற பாரதியாரின் பாடலும் கூறுகிறது. “நான் காதலால் வேகின்றேன்” என்று வருந்தும் கீத கோவிந்தக் கண்ணனுக்கும் “மேனி கொதிக்குதடி” என்று வருந்தும் பாரதியாரின் கண்ணனுக்கும் வேறுபாடில்லை.

இந்திய இலக்கிய மரபில் நிலைத்துவிட்ட கண்ணன் தொன்மம் பாரதியாரின் இலக்கியத்திலும் நிலைத்துவிட்டது. பாரதியாரின் கண்ணன்பாட்டு தெய்வீக மானுடக் காதல் தத்துவக் கலை வடிவமே. எல்லா உறவுகளும்  - தந்தையும் நீ, தாயும் நீ என்று இறைவனை எல்லா உறவுக்கும் முதற்படிவ உறவாகக் காண்பது இந்திய மரபு. ஆனால், இவை அனைத்திலும் தலையாவது நாயகன் நாயகி பாவத்தில் இறைவனுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள உறவைப் பேசுவது என்பார் மகாதேவன். இந்த இந்திய இலக்கிய மரபு தான் பாரதியாரின் கண்ணன் பாட்டில் பின்பற்றப்பட்டுள்ளது என்பதைக் காணமுடிகின்றது.

பாஞ்சாலி சபதம்

இந்திய இதிகாசக் கதைக்கூறு ஒன்றைத் தழுவி இயற்றப்பெற்றதே பாரதியாரின் ‘பாஞ்சாலி சபதம்’, அந்நூலின் முகவுரையில் பாரதியாரே பின் வருமாறு கூறியிருக்கிறார். “எனது சித்திரம் வியாசர் பாரதக் கருத்தைத் தழுவியது. பெரும்பான்மையாக, இந்நூலை வியாச பாரதத்தின் மொழிபெயர்ப்பென்றே கருதி விடலாம். அதாவது, ‘கற்பனை’ திருஷ்டாந்தங்களில் எனது ‘சொந்தச் சரக்கு’ அதிகமில்லை; தமிழ் நடைக்கு மாத்திரமே நான் பொறுப்பாளி”. இக்கருத்தை நோக்கு மிடத்து பாரதியார் தன் ‘பாஞ்சாலி சபத’த்தில் இந்திய இதிகாச மரபைப் பின்பற்றியுள்ளார் என்பது புலனாகிறது.

வடமொழியில் வியாசபாரதம், பாலபாரதம் முதலியவை இருக்க, தமிழிலும், பெருந்தேவனார், வில்லி, அரங்கநாதர், நல்லாப்பிள்ளை முதலியோர் எழுதியிருக்க, அப்பாரதத்தின் ஒரு சிறிய பகுதியை எடுத்தியம்ப பாரதியார் முற்படக்காரணம் என்ன, என்பதை இங்கு ஆராய்வோம்.

‘பாஞ்சாலி சபதம்’ எழுதியதன் காரணத்தைப் பாரதியாரே கூறிவிடுகிறார். பாஞ்சாலி சபதத்தின் முகவுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

“எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியம் ஒன்று தற் காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்”.

இவ்வரிகளை நோக்க, தமிழ்மொழிக்குப் “புதிய உயிர்” கொடுப்பதற்காகவே பாரதியார் பாஞ்சாலி சபதத்தைப் படைத்துள்ளார் என்பது அறிய வருகின்றது. மேலும், ‘பாஞ்சாலி சபத’த்தைப் படைத்ததில் பாரதியாருக்கு வேறுவொரு நோக்கமும் உண்டு. அவை,

“இந்நூலிடையே திரிதராட்டிரனை உயர்ந்த குணங்கள் உடையவனாகவும், சூதில் விருப்பம் இல்லாதவனாகவும் துரியோதனிடம் வெறுப்பு உள்ளவனாகவும் காட்டியுள்ளேன்”

என்ற கூற்றே பாரதியாரின் உள்ளக்கிடக்கையைத் (பாத்திரப்படைப்பு) தெள்ளத்தெளிவாக விளக்குகின்றது.

மேற்கண்ட நோக்கங்களுக்காக, பாரதியார் தன் பாஞ்சாலி சபதத்தில் இந்திய இதிகாச (பாரத) மரபைப் பின்பற்றியுள்ளார் என்பது புலனாகிறது.

இந்தியக் கதை மரபு

இந்தியாவில் நாட்டுப்புற வாய்மொழி மரபாக வழங்கிவந்த பழங்கதைகள் யாவும் அறக்கோட் பாட்டை உணர்த்துவதற்காகக் கூறப்பட்டவைகளாகும். இவை தவிர கதைக்குள் கதை அமைதல், சூழ்நிலையை அமைத்துக் கதை கூறுதல், இயற்கைப்பொருட்கள், பறவைகள், விலங்குகள் வழி கதை அமைதல், அறிவுரைப் பகர்தல் ஆகிய யாவும் சிறப்பான இந்தியக் கதை மரபு களாக இடம்பெற்றுள்ளன. இவ் இந்தியக் கதை மரபு பாரதியாரின் கதைகளிலும் பயின்று வந்துள்ளது எண்ணத்தக்கது.

ஒரு சூழ்நிலையை அமைத்துப் பாத்திரத்தின் மூலம் கதை கூறுவதாகப் பாரதியாரின் ‘நவ தந்திரக் கதைகள்’,  ‘சில வேடிக்கைக் கதைகள்’ ஆசிரியரே கதை கூறுவதாக விளங்குகின்றன. ஒரு கதைக்குள் சங்கிலித் தொடர்ச்சி யாகப் பல கதைகள் இடம்பெறும் ‘கதைக்குள் கதை மரபு’ பாரதியாரின் ‘நவதந்திரக் கதை’களில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக, பாரதியாரின் நவதந்திரக் கதைகளில் வரும் “விவேகசாஸ்திரி” என்ற பாத்திரம் கூறும் கதைகள் அவ்வாறு அமைந்துள்ளன. பாரதியாரின் நவதந்திரக் கதைகளில் வரும் கிளைக்கதைகள் பஞ்ச தந்திரக் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் போன்ற இந்தியப் பழங்கதைகளின் மூலக்கதையோடு உயிரோட்ட மான தொடர்பு உள்ளதும் எண்ணத்தக்கது. இயற்கைப் பொருட்கள், பறவைகள், விலங்குகள் வழி கதை அமைதல் என்பதற்கேற்ப பாரதியாரின் சில வேடிக்கைக் கதைகளும், நவதந்திரக் கதைகளும் அவ்வாறு அமைந் துள்ளன.  சில வேடிக்கைக் கதைகளில் ‘குதிரைக்கொம்பு’ என்ற கதையில் இயற்கைப் பொருளான சூரியன் பாத்திரமாக அமைந்துள்ளது. நவதந்திரக் கதையான ‘காட்டுக் கோயிலின் கதை’, ‘ஸங்கீதம் படிக்கப்போன கழுதையின் கதை’ ஆகிய இரு கதைகளிலும் விலங்குகள் பாத்திரங்களாக இடம்பெற்றுள்ளன. சில வேடிக்கைக் கதைகளில் வரும் ‘கிளிக் கதை’, ‘காக்காய் பார்லி மெண்ட்’ என்ற இரண்டு கதைகளில் பறவைகள் பாத்திரங்களாக வருகின்றன.

அறிவுரைப் பகர்தல் என்ற முறையிலும் பாரதி யாரின் கதைகள் அமைந்துள்ளதையும் காண முடிகிறது. குறிப்பாக ‘நவதந்திரக் கதை’களில் இடம்பெறும் ‘ஸங்கீதம் படிக்கப்போன கழுதையின் கதை’யில் கழுதை என்ற பாத்திரத்தின் அறிவுரையான “எந்த தொழிலும் யாருக்கும் வரும். வருந்தினால் வாராததொன்றுமில்லை” என்பதும், ‘சில வேடிக்கைக் கதை’களில் இடம்பெறும் ‘வண்ணான் தொழில்’ என்ற கதையில் வரும் குள்ளச் சாமியாரின் அறிவுரையான “நாக்கை வெளுக்க வேண்டும். பொய் சொல்லக் கூடாது. முகஸ்துதி கூடாது. தற்புகழ்ச்சி கூடாது. பயந்து பேசக் கூடாது” என்பதும் குறிக்கத்தக்கது. பாரதியாரின் கதைகளில் பல்வேறு இடங்களில் பழமொழிகளும் இடம் பெற்றுள்ளன.

மேலும், ‘பாரதியியல்: கவனம்பெறாத உண்மைகள்’ என்ற நூலில் ய.மணிகண்டனின் கூற்று இங்கு எண்ணத்தக்கது,

“பாரதியின் உரைநடைகளில் ஏராளமான பழமொழிகளும், வழக்கில் உள்ள கதைகளும் இடம் பெற்றுள்ளன. சாதாரண மக்கள் பல்வேறு பழமொழிகளை, கதைகளை வாழ்க்கையில் பயன்படுத்துவது போலப் பாரதி தமது கட்டுரை களில் எண்ணற்ற பழமொழிகளையும் வழக்குக் கதைகளையும் போகிற போக்கில் நினைவி லிருந்து பொருத்தமான நிலையில் குறிப்பிட்டுச் சென்றிருக்கிறார். இவற்றுள் உலகளவிலான கதைகள், இந்திய அளவிலான கதைகள், தமிழ் மண்ணில் வழங்குகின்ற கதைகள் முதலிய அனைத்தையுமே காணமுடிகிறது... இந்திய அளவிலான மகாபாரதக்கதை, இராமாயணக் கதை, பஞ்சதந்திரக்கதை, பர்த்ருஹரி கதை, காளிதாசன் பற்றிய கதை, ஜகந்நாத மகாகவி கதை, தெனாலிராமன்கதை, எல்லாம் நன்மைக்கே கதை, இராமகிருஷ்ணர் கதை முதலியவற்றையும்... பாரதியின் உரைநடையில் ஆங்காங்கு காண முடிகிறது”. (மணிகண்டன், 2014:10,11)

இதைநோக்க பாரதியாரின் உரைநடையிலும் இந்தியப் பழமரபுக் கதைகள் இடம்பெற்றுள்ளதை அறியமுடிகிறது.

வங்க இலக்கியம்

பாரதியாரின் இலக்கியத்தின் பல்வேறு கருத்துக் களுக்குக் கருக்கொடை வழங்கிய பெருமை வங்காளி இலக்கியத்தைச் சாரும். அரவிந்த கோஷ், தாகூர், சகோதரி நிவேதிதா தேவி, பங்கிம் சந்திர சட்டோ பாத்தியாயர் ஆகியோரின் தேசிய, பெண்ணிய முன்னேற்றச் சிந்தனைகள் பாரதியாரின் இலக்கியங் களில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன எனலாம். வந்தே மாதரம், பகவத்கீதை உரை, பெண்களின் உரிமை, தேசத்தையே சக்தி வடிவில் காணல் என்பன போன்ற கருத்துக்கள் இவரது இலக்கியங்களில் படியலாயின.

பாரதியாரின் வேத இலக்கிய ஈடுபாடானது அரவிந்தரால் வளர்த்து விடப்பட்டது. அரவிந்தரின் ‘தர்மா’, ‘கர்மயோகி’ என்ற இதழ்கள் கீதாவேசங் கொண்ட சுதந்திர வேகத்தை நாடெங்கும் பரப்பியதை உணர்ந்துகொண்ட பாரதியார் அவற்றைத் தமிழில் மொழி பெயர்த்து வழங்கினார். மேலும், அரவிந்தருடனான நட்புறவினால் வேத வாக்குகளிலும், வேதப்பாசுரங் களிலும் கருத்தூன்றினார். இதன் பயனாக, ‘பகவத் கீதை’யை ஆராய்ந்து தூய தமிழில் வழங்கினார். வேதப் பாசுரங்களையும், நம்மாழ்வார், ஆண்டாள் பாசுரங்களில் சிலவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வழங்கினார். இவ்வாறு புதிய புதிய எண்ணங்களை அள்ளிக் கொட்டிய அரவிந்தரின் கருத்துக்கள், பாரதியாரின் இலக்கியத்தில் கருக்கொண்டு உருக்கொண்டன. பாரதியார் - அரவிந்தர் இடையே புதுச்சேரியில் மலர்ந்த ஆன்மீக - இலக்கிய உறவின் விளக்கத்தை ‘அரவிந்தர் யோகம்’ எனும் பாடல் தெள்ளத்தெளிவாகக் காட்டிவிடுகிறது.

“வங்காளச் சிங்கமவன் ‘எண்ணம்’ செய்வான்

வரிப்புலி பாரதி அதைத் தமிழாய்ச் செய்வான்”

மேலும் அரவிந்தரும் திலகர் அணியைச் சேர்ந்தவர் என்பதால், அவருடைய அரசியல் ஆன்மீகக் கோட்பாடு களைப் பரப்பும் முயற்சியிலும் பாரதியார் விரும்பி ஈடுபடலாயினார். இதன் பிறகே புதுயுகம், புது வாழ்வு, புதிய மாறுதல், சத்திய யுகம், தேவ சங்கம் முதலிய கருத்துக்கள் பாரதியாரின் பாடல்களில் இடம்பெறக் காணலாம்.

இந்திய மறுமலர்ச்சிக் குயில்கள் என்று போற்றப் படும் தாகூர், பாரதியார் ஆகிய இருவரும் இலக்கணக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து விடுதலை முழக்க மிட்டவர்கள். இருவரது பாடல்களும் இந்திய மண்ணிற்குப் புதிய சக்தியைத் தந்தன. தாகூர், உபநிடதத்திலிருந்து ஆவேசம் பெற்ற வேதாந்தக் கவியாகையால் அவரின் நாட்டுப் பாடல்கள் கூடத் தெய்வப் பாடல்களாகவே காட்சி அளித்தன. இருப்பினும், தாகூரின் நாட்டுப் பாடல்களிலிருந்தும் புரட்சிமிக்க தேசிய ஆவேசக் கருத்தாக்கத்தைப் பாரதியார் பெறலானார். மேலும் அவர், தாகூரின் சிறுகதைகள் சிலவற்றையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடலானார்.

பொதுநலப் பணிகளில் ஈடுபாடு கொண்டும், இந்திய நாட்டின் மீது பற்றுக் கொண்டுமிருந்த நிவேதிதா தேவியைப் பாரதியார் 1906-இல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்றபோது சந்தித்தார். அவரைச் சந்தித்து, சுதேச பக்தி உபதேசத் தையும் அவரிடம் பெறலானார். அதிலிருந்து புதிய உத்வேகத்துடனே சமூகச் சீர்திருத்தக் கோட்பாடுகளைத் தமது கவிதைகளில் கைக்கொண்டார். தேவி நிவேதிதா, பெண்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டு பெரிதும் பாடுபட்டு வந்ததையும், வங்கப் பெண்களுக் குள்ளே சுயராஜ்ஜியத் தாகத்தை மிகுதியாக  ஏற்படுத்தி வந்ததையும் கண்ட பாரதியார் அவரைத் தமது குருவாக ஏற்றுக் கொண்ட நிலையினையும் காண முடிகிறது.

தேசபக்தி தெய்வபக்தியாக மாறிய ‘புதிய மார்க்கம்’ இந்தியாவில் வேகமடைவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது ‘ஆனந்தமடம்’ என்னும் நாவலில் இடம் பெற்ற பங்கிம் சந்திரரின் ‘வந்தே மாதரம்’ என்னும் பாடலாகும். சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில், வங்காள மாகாணத்தில் ஒவ்வொருவராலும் பக்தியோடும் உற்சாகத்தோடும் ‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்பட்டு வந்தது. பங்கிம் சந்திரரின் இப்பாடலில் பாரதியார் தனது மனதைப் பறிகொடுத்துத் தமிழ் மக்களும் பொருள் உணர்ந்து பாடவேண்டும் என்பதற்காகவே அதனை இரண்டு முறை மொழிபெயர்த்து வழங்கினார். தொடர்ந்து ‘வங்கமே வாழிய’ என்பதையும் தமிழுக்குப் பாரதியார் வழங்கலானார். மேலும், வங்காள மக்கள் காளி என்ற பெயருடன் சக்தி தெய்வத்தை மிகுதியாகக் கொண்டாடி வந்தது பாரதியாரின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. அதன் விளைவாகத் தமது கவிதைகளில் சக்தியையே தனது ஆதர்ச தெய்வமாக வைத்துப் பாடியுள்ளார். காளிதாசன், சக்திதாசன் என்கின்ற புனைபெயர்களைத் தனக்குச் சூட்டிக் கொண்டதி லிருந்து பாரதியாரின் காளி மீதான ஈடுபாட்டினைக் காணலாம்.

பங்கிம் சந்திரர் தனது வாழ்வின் இறுதிப் பகுதியில் வெளியிட்ட நூல் ‘கிருஷ்ண சரிதம்’ என்பதாகும். பங்கிம் சந்திரரின் இந்நூலில் வரும் கிருஷ்ணன் கடவுள் அல்ல. ஆனால், எக்காலத்துக்கும் உரிய இலட்சிய மனிதன் அல்லது அதிமனிதன். போராடிக் கொண் டிருக்கும் இந்திய மக்கள் கண்ணன் என்னும் பாத்திரம் மூலமாக, அவனது கொடியின் கீழ் ஒற்றுமைப்பட்டுத் தேசிய ஒருமைப்பாடு காண முடியும் என்று எண்ணி உருவாக்கிய இலட்சிய மனிதன். இங்கு பங்கிம் சந்திரர் கண்ணன் என்னும் பாத்திரத்தைத் தேசிய ஒற்றுமைக்குச் சின்னமாகப் போற்றி மதித்தார் எனலாம். இவ்விடத்தில் தெரிவிக்க விரும்பும் கருத்து, பங்கிம் சந்திரரின் கிருஷ்ண சரிதத்தாலும் பாரதியார் பாதிக்கப்பட்டிருத்தல் கூடும்.

மேற்கண்ட கருத்துக்களை நோக்க, பாரதியாரின் இலக்கியத்தில் இன்றியமையாத சில கொள்கைகளுக்கு அடித்தளமாக வங்க இலக்கியம் அமைந்து செயல் பட்டுள்ளதைக் காண முடிகிறது. சுதேசிய முயற்சி களுடனான சமூக சீர்திருத்தங்களுக்கும் பெண்கள் மேம்பாட்டிற்கும் வங்க அறிஞர்கள் ஆற்றிய பணிகளை ஏற்று, நெஞ்சம் மலர வாழ்த்திப் பாடினார் பாரதியார். இத்துடன் அதனைத் தமிழ் மக்களின் செயல்பாடு களோடு ஒப்பிட்டுப் பார்த்து அதன் மூலமாகத் தமிழர்கள், இந்திய தேசியத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகளையும் தமது பாடல்களின் வழியாகப் பரவ விட்டார். இவ்வாறாக, பாரதியாரின் எழுத்துக்களில் வங்க இலக்கியம் ஏற்படுத்திய தாக்கத்தினை உணர முடிகின்றது.

மேலும், பாரதியாரின் பாடலுக்கு முதற் பதிப்பிற்காகப் பாரதி பிரசுராலயத்தாரால் எழுதப்பட்ட முன்னுரையில்,

“முன்னோர்க ளெவ்வுயிருங் கடவு ளென்றார் 

முடிவாக அவ்வுரையை நான் மேற்கொண்டேன்

அன்னோர்க ளுரைத்த தன்றிச் செய்கையில்லை

அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ?”

என்ற வரிகளைச் சுட்டிக்காட்டிப் பாரதியார் அத்வைதக் கொள்கையில் பூர்ண நம்பிக்கை உள்ளவர் என்று காட்டுவர்.

மேற்கண்ட கருத்துக்களின் வழி பாரதியார் இந்தியத் தத்துவ மரபை முழுவதுமாக அறிந்து, அவற்றின் சாராம் சத்தைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு எடுத்தியம்பியுள்ளார். 

நிறைவாக

இந்திய இதிகாச, புராண, பழமரபுத் தொன்மங் களின் வண்ணம் சேர்த்து குழைத்துத் தருவதில் தான் இந்தியத் தன்மையைக் காணவியலும். அதுதான் “இந்திய இலக்கியம்” என்று அடையாளம் காட்டப்பெறும். இத்தகு புராண, இதிகாச பழமரபுத் தொன்மங்களே இந்திய இலக்கியத்தைப் பிறநாட்டு இலக்கியங்களி லிருந்து வேறுபடுத்திக் காட்டும் ஆற்றல் உடையன. இத்தகைய “இந்திய இலக்கியம்” என்று அடையாளப் படுத்தப்படும் தொன்மக் கூறுகளைத்தான் பாரதியார் தன் இலக்கியத்தில் கையாண்டுள்ளார். இந்திய இலக்கிய மரபார்ந்த கூறுகளாகப் புலப்படும் கிருஷ்ண தொன்மம், பாஞ்சாலி தொன்மம், இந்தியக் கதை மரபு, இந்தியத் தத்துவ மரபு, வேத இலக்கிய மரபு, வங்க இலக்கிய மரபு போன்றவற்றை மரபாகப் பின்பற்றியுள்ளார். மேற்கண்ட வகைகளில் பாரதியார் இந்திய இலக்கிய மரபுகளைப் பின்பற்றினாலும், “இந்தியத் தொன்மங் களை, மாறி வருகின்ற இந்தியச் சூழ்நிலைக்கேற்பப் புதிய நோக்கில் அணுகுதல்” ((reinterpretation of the old myths in terms of the new and changing situation in India) (இராசா, 1996:142) என்ற தன்மைக்கேற்பத் தன் இலக்கியத்தில் மரபார்ந்த இந்தியத் தொன்மங்களில் மாறுதலைச் செய்துள்ளார் என்பதும் இங்கு எண்ணத் தக்கது.

பயன்பட்ட நூல்கள்

1) இராசா. கி.,(1996), பாரதியின் கனவும் இன்றைய நிகழ்வும், சரசுவதி. வி., வேங்கடராமன். சு., மணிவேல். மு.,(பதிப்)., தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.

2) குருசாமி, ம.ரா.போ.(பதிப்).,(2013) பாரதி பாடல்கள் (ஆய்வுப் பதிப்பு), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். நான்காம் பதிப்பு

3) சண்முகம். இராம., ஆண்டியப்பன். தே., சொக்கலிங்கம். ந., மோகன். இரா.,(பதிப்)., (1982), பாரதி இயல், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்.

4) சுப்பிரமணிய பாரதியார், சி.,(1987), பாரதியார் கவிதைகள், வானவில் பிரசுரம், சென்னை.

5) சுப்பிரமணிய பாரதியார், சி.,(2003), பாரதியார் கட்டுரைகள், கவிதா பப்ளிகேஷன், சென்னை.

6) சுப்பிரமணிய பாரதியார், சி.,(2003), பாரதியார் கதைகள், வானதி பதிப்பகம், சென்னை.

7) செண்பகம். மா.,(1976) கண்ணன் பாட்டு (சில கட்டுரைகள்), பெரியநாயகி அச்சகம், மதுரை.

8) பொன்னீலன்.,(பதிப்).,(2008), பாரதி என்றென்றும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், சென்னை.

9) மணிகண்டன். ய.,(2014), பாரதியியல்: கவனம்பெறாத உண்மைகள், பாரதி புத்தகாலயம், சென்னை. 

10) ஸ்ரீனிவாசன். மு., (2007), பாரதியின் பார்வையில், விகடன் பிரசுரம், சென்னை, 2007.