கொரோனா வியாதியின் பாதிப்பு ஆரம்பித்து மூன்று மாதம் கடந்திருக்கும். ஒரு நாள் மாலையில் தோல் பாவைக்கூத்து கலைஞர் கலைமாமணி பரமசிவராவ் தொலைபேசியில் அழைத்தார். அவரை நான் சந்தித்த 45 வருடங்களில் அப்படிப் பேசியதில்லை. அவர் பசியும் பட்டினியையும் அனுபவித்தவர் தான். ஆனால் என்னிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார் கலைஞர் என்ற திமிர் அவருக்கு உண்டு.

எனக்குத் தெரிந்து தோல்பாவைக்கூத்து கலைஞர்களில் உச்சத்தைத் தொட்ட உன்னதமான கலைஞர் பரமசிவராவ். அந்தக் கலை மரபில் கடைசி கண்ணி அவர். செல்பேசியில் "சார் நாளையுடன் வீட்டில் அரிசி தீர்ந்துவிடும். கையில் பணம் இல்லை; கடன் கேட்க ஆள் இல்லை; உயிரை விடவும் துணிவில்லை" என்று சொன்னார். அவரது மனைவி கோமதி பாய் இன்னும் கொஞ்சம் சற்று இரங்கிப் பேசினாள். நான் அவரிடம் "எப்படியும் நாளை யாரையாவது அனுப்புகிறேன் உதவ வருவார்கள் பேசிப் பார்க்கலாம் தைரியமாக இருங்கள்" என்று சொன்னேன்.

நாகர்கோவில் இந்துக் கல்லூரி பேராசிரியர் ஜெகதீசனிடம் பேசினேன். அவர் ஒரு அமைப்பு நிர்வாகியிடம் கலந்தார். அடுத்த நாளே ஒரு மாதத்திற்குரிய அரிசி. பலசரக்கு பொருட்களை அவருடைய வீட்டிற்குக் கொண்டு சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்தார். இன்னொருவர் காய்கறி பழம் கொடுத்தார். அன்று இரவு பரமசிவராவ் குரல் தழுக்க என்னிடம் பேசினார். பழைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

தோல்பாவைக் கூத்து நிகழ்வில் அதிகமான பார்வையாளர்கள் நல்லதங்காள் கூத்துக்குக்தான். சில ஊர்களில் பார்வையாளர்களின் வேண்டுகோளுக்காக இந்தக் கூத்தை இரண்டாம் நாளும் நடத்தப்படுவதுண்டு. நல்ல தங்காளுக்கும் அவளது அண்ணிக்கும் நடக்கும் உரையாடல் பார்வையாளர்களிடம் சலனத்தை உண்டாக்கி விடும். அதில் சமகால குடும்பப் பிரச்சனைகள் உண்டு. வயதான பெண்கள் தங்கள் அனுபவத்தை அதில் இணைத்து பார்த்துக் கொள்வார்கள்.nalla thangaal 530அண்ணனின் மனைவி அலங்காரியால் அவமானப்படுத்தப்பட்டு தன் ஏழு குழந்தைகளுடன் அண்ணனின் வீட்டை விட்டு வெளியேறுவாள். காட்டு வழி செல்லுகிறாள். அவள் குழந்தைகளுடன் சேர்ந்து தற்கொலை செய்ய முடிவு செய்கிறாள். காட்டு வழி போகிறாள். குழந்தைகளுக்கும் பசி. ஏழு குழந்தைகளும் அழுகின்றன.

மூத்த மகன்,

பசிக்குதே அம்மா பசிக்குதே

வாழும் வயிறு துடிக்குது

என்று பாடுகிறான். நல்லதங்காள்,

பசித்த மக்களா பொறுத்துக் கொள்ளுங்கள்

பழுத்த கனிகளைப் பறித்து தருகிறேன்

மக்களா என் மக்களா

என்று பாடுகிறாள். பரமசிவராவ் நல்லதங்காள் கூத்தை நடத்தும்போது ஒவ்வொரு முறையும் இந்தக் காட்சியை உருக்கமாகப் பாடுவதாகச் சொன்னார். அவர் சொல்லிவிட்டு ஆரம்ப காலத்தில் இந்தக் கூத்தின் காட்சிகளை உணர்ந்துதான் பாடினேன். என் மக்களில் ஒருத்தி அலுமினிய வாளியை எடுத்துக்கொண்டு பகலில் வீடு வீடாக பழைய சாதம் கேட்டு வாங்கி வந்த நிகழ்ச்சியை மறக்க முடியவில்லை. அப்போது படாத பாட்டை இந்த கொரோனா பட வைத்து விட்டது என்றார்.

 பரமசிவராவ் தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சியை நடத்துவதை. 2002 லேயே விட்டுவிட்டார். ஒரு காலத்தில் கூத்து தன் ஜீவனத்துக்காக மட்டுமல்ல ஆத்ம திருப்திக்காகவும் என்று சொல்லியிருக்கிறார். அப்போது அவருக்கு ஆனந்தமும் பெருமிதமும் இருந்தது. ராமன் பேரைச் சொல்லி ஊரு ஊராகச் செல்வது எங்களுக்கு புண்ணியம் தான் என்றார். கூத்தைவிடும்போது அவருக்கு வயது 67 தான். 75 வயதிலும் கூத்து நடத்தும் மராட்டிய கலைஞர்களை நான் அறிவேன்.

பரமசிவராவின் அண்ணன் சுப்பையா ராவ் 80 வயதிலும் தோல்பாவைக் கூத்துப் பாடல்களை அடி பிசறாமல் பாடுவார். எண்பதுகளில் கூட பாவைக் கூத்து பாடல்களை ராகவிஸ்தாரம் பாட்டின் ஏற்ற இறக்கம் என்ற தன்மையுடன் பாடி. காட்டினார் தோல்பாவைக்கூத்திலும் சங்கீத மரபு இருந்தது என்பதற்கு அவர் கடைசி அடையாளம் ஆக இருந்தார்.

பரமசிவராவ் 50 வயதில் படித்த ஜோதிடம் 65 வயதிற்குப் பின்னர் அவருக்குக் கை கொடுத்தது. அவரிடம் ஜோதிடம் பார்க்க வருகின்றவர்களிடம் ஜோதிட மொழியில் பேசி தன்னை அந்நியனாக காட்டிக் கொள்ள மாட்டார். சாதாரண மொழியில் உண்மையைச் சொல்லி பரிகாரமும் சொல்லுவார். அந்தப் பரிகாரம் பொதுவான கடவுள் பக்தி சார்ந்ததாகத் தான் இருக்கும்.

 பரமசிவராவிற்கு குலசேகரப்பட்டினம் முத்தாரம்மனிடம் அதிக பக்தி உண்டு. அவரது ஜாதிக்காரர்கள் எல்லோருக்குமே அவள் குலதெய்வமாக இருந்தாள். அது அண்மையில் உருவானது. அந்த தெய்வத்தின் அருளும் சக்தியும் தனக்கு இருப்பதாக தனிப்பட்ட முறையில் என்னிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் ஜோதிடம் பார்க்க வருகின்றவர்களிடம் அப்படி ஒரு சக்தி தனக்கு இருப்பதாக சொல்லவே மாட்டார். ஜோதிடத்தை ஒரு கலையாக மட்டுமே அவர் பார்த்தார்.

அவர் அடிக்கடி என்னிடம் சொல்லுவார் " உங்க முயற்சியால் அரசு ஓய்வூதியம் எனக்கு வருகிறது; மக்கள் எல்லோரும் செட்டில் ஆகி விட்டார்கள்; வசதியான சொந்த வீடு; எனக்கு இது போதும்; ராமனின் பெயரைச் சொல்லி ஊர் ஊராக கதை பாடி வாழ்ந்த காலம் எல்லாம் போய்விட்டது; அந்த ஒரு குறை தான் எனக்கு" என்று சொல்லுவார்.

ஒருமுறை ஆங்கில இந்து நாளிதழ் சென்னை நகரின் மூத்த நிருபர் கோலப்பனைப் பரமசிவராவிடம் அழைத்துச் சென்றேன்; முன் ஏற்பாடு இல்லை பரமசிவராவ் வீட்டில் இருந்தார்; நான் ஆங்கில இந்து நாளிதழ்; கோலப்பன் கவர் ஸ்டோரி; என்பதெல்லாம் விவரமாய் சொல்லிவிட்டு சில கேள்விகளுக்கு மட்டும் பதில் சொன்னால் போதும்" என்றேன்.

எந்தச் சலனமும் இல்லாமல் பேசினார். "எனக்கு அதெல்லாம் எதற்கு? என் படமோ பேரோ பேப்பர்ல வர்றதுல எனக்கு என்ன வந்து சேரப் போகிறது ஒன்றும் வேண்டாம் சார்" என்றார். வெறுப்பும் விரக்தியும் கலந்து பேசினார். நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டதால் கொஞ்சம் பேசினார். படம் எடுக்கவும் இணங்கினார். நானே அவரைப் பற்றி பேசி பேட்டியை முடித்தேன்.

தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் கலை நிகழ்த்த சென்றபோதும் ஏற்பட்ட அனுபவத்தாலும் அவருக்கு மனக்கசப்பு உண்டு. முக்கியமாக அவரது மனைவியால் அவருக்கு பாதிப்பு அதிகம். மனைவி அவரைப் படுத்திய பாட்டை அடிக்கடி சொல்லுவார். தெருக்கூத்துக் கலைஞர் புரிசை கண்ணப்ப தம்பிரானின் மறைவுக்குப் பின்னர் வந்த அவரது நினைவு மலரில் படித்த ஒரு கட்டுரை பரமசிவராவுக்கு பொருந்தும் என்று தோன்றியது. ஒரு வகையில் பரமசிவராவ் கலையின் உச்சத்தை அடையாததற்கு அவரது குடும்பச் சூழல் காரணமாக இருந்திருக்கலாம்.

 தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சியில் மூன்றாம் நாள் பரதன் பட்டாபிஷேக நிகழ்ச்சி ராமனை காட்டுக்கு அனுப்பாதே என்று தசரதன் கைகேயியிடம் கெஞ்சி கெஞ்சி பேசுவான். இந்த காட்சி தோல்பாவை கூத்தில் விரிவாகவே காட்டப்படும். இந்த உரையாடலில் சமகாலப் பிரச்சனையின் சாயல் இருக்கும். தசரதன் கையேயிடம் உருக்கமாகப் பேசும் பேச்சை பரமசிவராவ் உணர்ந்தே பேசுவார். கொஞ்சம் கொஞ்சமாக உருக்கம் கோபமாகும்.

 தசரதன் கைகேயியைப் பழித்து பேசுவான். அந்தப் பேச்சும் வேகமும் படிப்படியாக கூடும். பேச்சின் உச்சத்தில் பரமசிவராவ் தன் மனைவியை பார்த்து பேசுவது மாதிரி தோற்றத்தை உருவாக்கி விடுவார். நன்றாகத் தெரிந்தவர்களுக்கு அது தெரியும். பாதகி வஞ்சகி சண்டாளி பிறந்ததுமே நாக்கில் விஷத்தை உனக்குத் தடவி விட்டார்களா? ஒரு மொழியில் நல்ல வார்த்தைகள் உண்டு என்பது அறிய மாட்டாயா? என்று சொல்லிக் கொண்டே போவார் அப்போது.

ஆலகால விஷத்தை நம்பலாம்

ஆற்றையும் பெரும் காற்றையும் நம்பலாம்

கோலை மா மத யானையை நம்பலாம்

கொல்லும் வேங்கைப் புலியை நம்பலாம்

காலனார் விடுதூதரை நம்பலாம்

கள்ள வேடர் மறவரை நம்பலாம்

சேலை கட்டிய மாதரை நம்பினால்

தெருவினில் நின்று தயங்கி தவிப்பாரே

என்று பாடுவார்.

இந்தப் பாடல் அவரது அடிமனத்தில் இருந்து வருவது. இதே பாடலை அவரது அப்பா கோபாலராவும் பாடினாராம். இது விவேக சிந்தாமணியில் உள்ள பாடல் என்பதை பிறகு நான் கண்டுபிடித்தேன்.

பரமசிவராவின் மூத்த அண்ணன் சுப்பராவ் பற்றி காலச்சுவடு இதழுக்கு ஒரு கட்டுரை எழுத செய்தி சேகரித்த போது பரமசிவராவ் தகவலாளியாக என்னிடம் நிறையப் பேசினார். அப்போது அவர் தன்னைப் பற்றிப் பல விஷயங்களை என்னிடம் சொன்னார்.

பரமசிவ ராவ் தன் தந்தை கோபால் ராவிடம் தங்களின் பூர்வீகம் குடிப்பெயர்ச்சி பற்றி நிறைய கேட்டிருக்கிறார். தென்திருவிதாங்கூர் பகுதியில் தோல்பாவைக் கூத்துக்காரர்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் குடியேறினர். அது சுவாதித்திருநாள் என்ற அரசர் திரு.விதாங்கூரில் அரசராய் இருந்த காலமாய் இருக்கலாம்.

இங்கு முதலில் குடியேறியவர் கிருஷ்ணராவ் (1800- 1882) அவரது மகன் சாமிராவ் (1830 1900) இவரது மகன் கிருஷ்ணராவ் (1860 - 1940) இவரது மகன் கோபாலராவ் 1882 - 1976) இவரது மகன் பரமசிவராவ், (1945---) கோபாலராவின் மூத்த மகன் சுப்பையா ராவ் (1908 - 1999) எனக்கு அவர் மரபு! வழியாக கேட்ட நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறார். பரமசிவராவ் இவரிடம் பாடுவதற்கும் மிருதங்கம் அடிப்பதற்கும் கற்றிருக்கிறார். கோபாலராவ் கடைசியாக கன்னியாகுமரி அருகே உள்ள பஞ்சலிங்கபுரம் என்னும் சிறு கிராமத்தில் இருந்தார். கோபாலராவுக்கு 11 குழந்தைகள். பரமசிவராவ் ஐந்தாவது மகன்.

பரமசிவம் படித்தது கொட்டாரம் ஊரில் பள்ளி இறுதி படிப்பு வரை படித்தார். பள்ளிப்படிப்பு முடிந்ததும் திருமணம். மனைவிக்கு வயது 14 சொந்த அக்காள் மகள். இதன் பிறகு நிகழ்ச்சி நடத்த ஆரம்பித்து விட்டார். பரமசிவராவின் அண்ணன்மார்கள் ராமச்சந்திரன் கணபதி சுப்பையா ராவ் என மூன்று பேரும் கோவில்பட்டி மதுரை திருநெல்வேலி இன்னும் இடங்களுக்குக் குடி பெயர்ந்து விட்டனர். அதனால் அப்பாவுக்கு உதவியாகவோ தனியாகவோ நிகழ்ச்சி நடத்தினார்.

அறுபதுகளின் ஆரம்ப காலத்தில் நாஞ்சில் நாட்டு கிராமங்களில் கோபால் ராவ் நிகழ்ச்சி நடத்தி இருந்திருக்கிறார். அப்போது பரமசிவராவ் துணைப்பாடகர். 60களின் பாதியில் பரமசிவராவ் தனியாக கதை நடத்த ஆரம்பித்தார். அப்போது கோபாலராவ் துணைப்பாடகர் எல்லாம் 1973 வரை தான். இதன் பிறகு கோபால் ராவினுடைய உடல் தளர்ந்து விட்டது.

பரமசிவராவ் என்னிடம் நான் கூத்து நடத்துவதை விட்டுவிடுவேன் என்று அடிக்கடி சொல்லுவார் ஜோதிடம் பார்ப்பதில் கிடைக்கும் வருமானமே எனக்கு போதும் என்றார். நான் அவரது நிகழ்ச்சிகளை முழுதும் பதிவு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன் அதற்கான நேரத்திற்கு காத்திருந்தேன். என்பதுகளில் (பெரும்பாலும் 1988 ஆக இருக்கலாம்)நாகர்கோவிலில் ராமன்புதூர் என்ற இடத்தில் ஒரு சிறு கிராமத்தில் பத்து நாள் நிகழ்ச்சி நடத்தப் போவதாக என்னிடம் சொன்னார். நான் முன் தயாரிப்புடன் பதிவு செய்யப் போனேன் அப்போது சுப்பையா ராவ் துணையாகப் பாடினார். இதற்குப் பிறகும் சில ஊர்களிலேயே நிகழ்ச்சி நடத்தினார்.

2017ல் அவரைச் சந்தித்தபோது மனம் நொந்து பேசினார். ஜோதிடம் பார்ப்பதால் வருமானம் நிறையவே வந்தது. ஆனால் உறவில் விரிசல். அவரை வாட்டியெடுத்த மனைவியுடனான உறவு மோசமானது ஒருமுறை நான் அவரிடம் விடைபெறும் போது ஒரு பாடலைப் பாடினார். அது ராமாயணக் கூத்து மூன்றாம் நிகழ்ச்சியில் பாடப்பட்ட பாடல். தசரதனுக்கு வயதாகி விட்டது. ராமனுக்கு பட்டாபிஷேகம் நடத்த வேண்டும் என்கிறான் தசரதன். வசிட்டன் அது சரி மகனிடம் நாட்டை கொடுத்துவிட்டு வானப்பிரஸ்தம் சென்று விடு என்று சொல்லுகிறான். அப்போது ஒரு அசரீரிப் பாடல் கேட்கிறது.

பிள்ளை தான்வயதில் மூத்தால்

பிதாவின் சொல் புத்தி கேளான்

கள்ளி நற் குழலால் மூத்தாள்

கணவனை கருதிப் பாராள்

தெள்ளற வித்தை கற்றால்

சீடனும் குருவைத் தேடான்

உள்ள நோய் பிணி தீர்ந்தால்

உலகோர் பண்டிதரை நாடார்

என்ற அந்தப் பாடலை ராகவிஸ்தாரத்தோடு பாடினார் இதுவும் விவேக சிந்தாமணியில் உள்ள பாடல் என்பதை பின்னர் அறிந்தேன்.

- அ.கா.பெருமாள், ஓய்வுபெற்ற பேராசிரியர். நாட்டார் வழக்காற்றியல் மற்றும் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.