village peopleகுஜராத் மாநிலம் அமுல் என்ற மகத்தான நிறுவனம் இயங்கிவரும் ஆனந்த் என்ற ஊரில் இந்திய பால் மனிதர் என்று அழைக்கப்பட்ட டாக்டர் வர்கீஸ் குரியானால் உருவாக்கப்பட்ட கிராமிய மேலாண்மைக் கல்விக் கழகத்திற்கு குரியன் அவர்களின் 100வது ஆண்டு பிறந்த தின நிகழ்வில் பங்கேற்று பேச அழைக்கப்பட்டிருந்தேன். நவம்பர் 2021, 21ஆம் தேதி நிகழ்ந்த கருத்தரங்கில் ‘கிராமிய மேம்பாட்டிற்கான நிபுணத்துவச் செயல்பாடுகள்' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம் தான் இந்தக் கட்டுரை.

‘கிராமிய மேம்பாடு' என்பது ஓர் அறிவார்ந்த மக்கள் செயல்பாடு. இந்தச் செயல்பாடு மூன்று நிலைகளில் நடைபெற வேண்டும். ஒன்று, கிராமிய மேம்பாட்டுக்கான அடிப்படை வசதிகள் கட்டமைக்கப்படல் வேண்டும். இரண்டு, கட்டமைத்த வசதிகள் மற்றும் அமைப்புக்களை மக்கள் முறையாகப் புரிந்து, கண்காணித்து தங்கள் பங்களிப்பைச் செய்து பயன்படுத்தப்படல் வேண்டும். மூன்று, கிராம மக்களை மேம்பாட்டுச் செயல்பாடுகளில் பங்கேற்கத் தேவையான புரிதலை, விழிப்பை ஏற்படுத்தி பொறுப்புமிக்க குடிமக்களாக செயல்பட வைத்தல் வேண்டும். அத்துடன் கிராமங்கள் என்பது ஒரு நாகரீகத்தின் அடையாளமாக விழுமியங்களுடன் ஓர் உன்னதமான வாழ்க்கை வாழ்ந்த வரலாற்றை மீட்டெடுத்து உலகுக்கு முன்மாதிரியாக வாழத் தேவையான சூழலை உருவாக்க வேண்டும்.

இந்தக் கிராமிய வாழ்க்கையின் அடிப்படை என்பது இயற்கையைப் புரிந்து, இயற்கையுடன் இயைந்து வாழும் ஓர் உன்னதமான உயர் மானுட வாழ்வு முறையைக் கட்டமைத்திட வேண்டும். இந்தச் செயல்பாடுகள் அத்தனையும் ஒரு மக்கள் இயக்கச் செயல்பாடாக உருவாக்க வேண்டும். இந்தச் செயல்பாடுகளை கட்டமைக்கத் தேவையான ஒரு மக்கள் கல்வியை உருவாக்கி அதை மக்களிடம் கொண்டு சேர்த்து மக்களை தங்கள் வாழ்க்கைக்கு பொறுப்பேற்க வைத்துச் செயல்பட வேண்டும். இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு புதிய சமூகத்தை உருவாக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட வேண்டும். இந்தச் செயல்பாடுகளின் மூலம் ஒரு சமத்துவ சமூகத்தை உருவாக்கி மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகளையும் விழுமியங்களையும் பின்பற்றி செயல்படும் குட்டிக் குடியரசுகளை உருவாக்குதலாகும். இந்த மாபெரும் மாற்றங்களைக் கொண்டுவரத் தேவையான புதிய தலைமைத்துவத்தை உருவாக்கி செயல்பட வைக்க வேண்டும்.

இந்த மாற்றத்திற்கான பாதை என்பது எதை அடித்தளமாகக் கொண்டிருக்க வேண்டுமென்றால் உலகில் தலைசிறந்த நாகரீகங்களோடு தலைசிறந்த நாகரீகமாக விளங்கிய நம் நாகரீகத்தின் விழுமியங்களைக் கொண்டிருக்க வேண்டும். இதற்கான பார்வையை உருவாக்கியவர்கள் சுவாமி விவேகாநந்தர், பகவான் அரவிந்தர், ரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி, ஜே.சி.குமரப்பா, மகாகவி பாரதி போன்றோர்கள். இந்தக் கிராமிய வாழ்வில் அரசியல் சமத்துவம் மட்டுமின்றி, சமூக சமத்துவம், பொருளாதார சமத்துவம், கலாச்சார சமத்துவம் அனைத்தும் இருந்திடல் வேண்டும். இந்தச் செயல்பாடுகள் என்பது அரசை முன்னிறுத்தி செயல்படுவது அல்ல, மக்களை முன்னிறுத்திச் செயல்படுவது. சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவது தான் தலையாயப் பணி என்று மேற்கூறிய அனைவரும் கருதினார்கள்.

இவை அனைத்தும் எதிர்கால இந்தியா எப்படி உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையின் கருத்தாக்க வெளிப்பாடுகள். இந்த சிந்தனைப்போக்கு வலுவாக இருந்தாலும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் விளைவுகளும், சுதந்திரப் போராட்டம் முடிவுறும் நிலையில் இந்திய சமூகம் சந்தித்த சவால்களும், இந்தியா என்ற நாட்டை கட்டமைப்பதற்கு அரசு என்ற இயந்திரம் வலுவாக கட்டமைக்கப்பட வேண்டிய தேவையை உருவாக்கிவிட்டன. ஒரு வலிமையான இந்தியா உருவாக்கப்பட வேண்டும் என்ற பார்வையில்தான் அனைத்து நடவடிக்கைகளும் இந்திய சுதந்திரம் அடைந்தவுடன் மேற்கொள்ளப்பட்டன. இந்திய நாடு உருவாக்கம், தேசம் கட்டுதல், இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாப்பதும் ஒருமைப்பாட்டை உருவாக்குவதும், அரசு அமைப்புக்களை உருவாக்கி வலுப்பெறச் செய்வதுதான் இந்தியாவின் அன்றைய தேவையாக இருந்தது என்பதை யாரும் மறுக்க இயலாது.

சுதந்திரம் அடைந்து இந்தியா உருவானபோது, இந்தியா என்ற ஒரு நாடு மக்களாட்சியில் நிலைத்து நின்றுவிடும் என்று எந்த மேற்கத்திய அறிஞரும் எதிர்பார்க்கவில்லை. அந்த அளவுக்கு குழப்பமும், ஏற்றத்தாழ்வுகளும், அறியாமையும் இந்த நாட்டை ஆக்கிரமித்து இருந்தன. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது வலிமையான பாரத அரசாங்கத்தை வலிமையாக கட்டமைத்து உருவாக்க எண்ணிய நம் தலைவர்கள் நம் சமூகத்தின் வலிமையை குறைவாக எடை போடவில்லை என்பதனையும் நாம் மறந்துவிடக்கூடாது. அதேபோல் சமூகத்தை பலமிழக்கச் செய்ய வேண்டும் என்றும் எண்ணவில்லை. மாறாக வலிமையான பாரதம் கட்டமைத்து எழுப்பப்படும்போது அதுவும் மக்களாட்சி முறையில் செயல்பட வைக்கப்படும்போது, அரசாங்கத்தை மக்கள் தங்கள் கண்காணிப்பின் மூலம் மக்களின் மேம்பாட்டுக்கு செயல்பட வைத்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில்தான் அரசைக் கட்டமைத்தார்கள் நம் தலைவர்கள்.

ஆனால் இந்தியா என்ற நாடு பாகிஸ்தான் பிரிவினையைச் சந்தித்து, அடுத்து இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை சுதந்திர இந்தியாவுடன் இணைக்கும் பணி நடைபெறும் சூழலில்; இந்திய மக்களின் சமூகப் பொருளாதார வாழ்க்கை என்பது தாழ்வுற்றிருந்தது. இதை மனதில் கொண்டு வலுவான அரசாங்கத்தை உருவாக்கி அதன் மூலம் சமூகப் பொருளாதார செயல்பாடுகளை முன்னெடுத்து புதிய இந்தியாவை உருவாக்கிட முனைந்தனர் நம் தலைவர்கள். அவர்களின் தூய்மையான எண்ணத்தை யாரும் சந்தேகிக்க முடியாது. புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய அரசானது மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு பொறுப்பேற்று மக்களை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விட்டது.

இதில் ஒன்றை மட்டும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்திய அரசாங்கம் எதன்மேல் கட்டப்பட்டது என்றால் வெள்ளையர்கள் தங்களின் ஆதிக்கத்தை செலுத்த உருவாக்கப்பட்ட கட்டமைப்பின் மேல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த நிர்வாகக் கட்டமைப்பு மக்களை சுரண்டும் தன்மை கொண்டது, ஆதிக்கம் செலுத்தும் தன்மை கொண்டது. அந்த அரசுக் கட்டமைப்பை வைத்து இந்திய மக்களின் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்த முனைந்ததுதான் பல சிக்கல்களுக்குக் காரணம் என்று மேம்பாட்டுச் சிந்தனையாளர்கள் தங்கள் ஆய்வின் மூலம் தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும் திட்டங்கள் மேல் திட்டங்களைப் போட்டு மக்கள் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு செயல்பட்டது நமது மத்திய மாநில அரசுகள் என்பதையும் மறுக்க இயலாது. இப்படி அரசு இயங்கி வந்ததன் மூலம் மக்களின் சிந்தனைப் போக்கில் ஒரு மாற்றம் குறிப்பாக பெரும்பகுதி ஏழை மக்களிடையே வந்துவிட்டது. அனைத்தும் அரசாங்கத்தின் பொறுப்பு. நாம் அரசு தரும் பயன்களைப் பெறும் பயனாளிகள். பயன்கள் கிடைக்கவில்லை என்றால் அரசிடம் மனுச் செய்து சலுகைகளைப் பெறும் மனுதாரர் என்ற நிலைக்கு மக்கள் வந்ததன் விளைவு அரசு இயந்திரம் எஜமானாக மாறிக்கொண்டு விட்டது. மக்கள் ஏவல்புரிவோராக மாறி சுயத்தை இழந்து அரசாங்கத்தை சார்ந்து வாழும் மனோபாவத்தைப் பெற்று விட்டனர். அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பெரும் இடைவெளி ஏற்பட்டு விட்டது. அரசாங்கத்தின் திட்டங்களுக்கு குறைவில்லை.

இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து ஒரு 50 ஆண்டு காலத்தில் 2000க்குமேல் திட்டங்களை கிராமப்புறங்களில் நடைமுறைப் படுத்தியிருக்கின்றன; மத்திய மாநில அரசு என்று உலக வங்கி தன் ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளது. திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதிக்கும் குறைவில்லை. இருந்தும் கிராம மக்களின் வாழ்க்கை அறிவியல்பூர்வமாக மானுட வாழ்வு எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ வேண்டிய சூழலில் அவர்கள் வாழ்க்கை இல்லை என்ற நிதர்சனமான உண்மையை அரசு புரிந்து கொண்டது. சுதந்திரம் பெற்றபோது 42 கோடியில் இருந்த மக்கள் தொகை 136 கோடிக்கு இன்று வந்துவிட்டது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது 8% வந்தபோது 80 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்புக்கு அரசை நம்பும் சூழலில் வாழ வேண்டிய நிலையில் இருந்து கொண்டிருக்கின்றனர் என்றால், நாம் அடைந்த வளர்ச்சி எங்கு சென்றது? என்ற கேள்விக்கு விடை தேட வேண்டிய நிலைக்கு அரசாங்கம் வந்துவிட்டது. இந்தச் சூழல்தான் ஒரு புதிய உள்ளாட்சி அமைப்பை அரசாங்கமாக ஏற்படுத்தி அதில் மக்களை பங்கேற்க வைத்து ஆளுகையையும், மேம்பாட்டுச் செயல்பாடுகளையும் மக்களே தீர்மானிக்க வேண்டும் என்பதற்கான புதிய முயற்சியில் ஈடுபட்டது. அதன் விளைவு தான் 73வது மற்றும் 74வது அரசியல்சாசனத் திருத்தச் சட்டங்கள். அது மட்டுமல்ல, அதனைத் தொடர்ந்து சமூகப் பொருளாதார மேம்பாட்டை உரிமைகளாக அரசு சட்டபூர்வமாக்கித் தந்து விட்டது. இதன் அடிப்படை நோக்கம் விளிம்புநிலை மக்கள் எல்லா உரிமைகளையும் வென்றெடுக்க இந்த உள்ளாட்சிச் செயல்பாடுகள் உதவிகரமாக இருக்கும் என்ற அடிப்படையில் செய்யப்பட்டவைகள்.

இதில் மிக முக்கியமானது என்னவென்றால் அடிப்படையில் புதிய சூழலில் உருவாக்கப்பட்ட உள்ளாட்சியின் அடிப்படைகளையும், மேம்பாட்டு உரிமைகள் அனைத்தும் சட்டங்களாக உருவாக்கப்பட்டிருப்பதும், இவைகளைத் தாண்டி உரிமைகள் சட்டத்துடன் திட்டங்களையும் பெரிய அளவு நிதி ஒதுக்கீட்டில் புதிய வாய்ப்புக்கள் உள்ளாட்சிக்கு வருகின்றன என்ற செய்திகளை யாருக்குச் சென்று சேர்க்க வேண்டுமோ அவர்களுக்கு கொண்டு சேர்க்கவில்லை. அது மட்டுமல்ல, புதிய சூழலில் இந்தப் புதிய உள்ளாட்சியை எப்படிப் பார்க்க வேண்டும், அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் பெரும்பான்மை மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் குறிப்பாக விளிம்புநிலை மக்களுக்கும் கிடையாது. ஆகையால்தான் புதிய உள்ளாட்சி அரசாங்கமாக உருவாக்கப்பட்டு இருபத்து ஐந்தாண்டுகளைக் கடந்தும், அது என்னென்ன விளைவுகளை உருவாக்க வேண்டுமோ அவைகளை உருவாக்க இயலவில்லை. இருந்தும் புதிய உள்ளாட்சியால் பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் நல்ல தலைமைத்துவமும், நல்ல சமூகங்களும் இருக்கின்ற இடங்களில் மிகப் பெரிய மாற்றங்கள் நடைபெற்றுள்ளதை ஆய்வுகள் நமக்குக் கொண்டு வந்து தந்துள்ளன.

இந்தக் காலக்கட்டத்தில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டியவைகள் பல உள்ளன. ஒன்று அரசாங்கத்திட்டப் பயனாளியாக இருந்த மனோபாவத்திலிருந்து உரிமைகள் சார்ந்து செயல்படத் தேவையான புதுச் சிந்தனையை மனோபாவத்தை மக்களிடம் உருவாக்கி, அரசுத் திட்டங்களை மக்கள் தேவைகளில் பொருத்திட மக்கள் திட்டங்களை உருவாக்கிச் செயல்படுதல் என்பது முதன்மையானது. இதற்குத் தேவையான புரிதலை முதலில் உள்ளாட்சியில் செயல்படும் தலைவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அடுத்து அந்தப் புரிதலை பொதுமக்களிடம் மக்கள் பிரதிநிதிகள் ஏற்படுத்த வேண்டும். இந்தப் புரிதலுடன் செயல்பட்டால்தான் மக்கள் அதிகாரப்படுத்தப்படுவார்கள். புதிய உள்ளாட்சி என்பது பொதுவாக மக்களை குறிப்பாக விளிம்புநிலை மக்களை அதிகாரப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டது என்பதையும் நாம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

அடுத்து இன்னொரு மிக முக்கியமான புரிதல் நம் உள்ளாட்சித் தலைவர்களுக்கும், மக்களுக்கும் தேவைப்படுகிறது. அது இன்று யாரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்திய அரசியல்சாசனம்தான் மூன்று அரசாங்கங்களுக்கும் அதிகாரங்களைத் தருகிறது. மத்திய அரசும் இந்திய அரசியல் சாசனம் தரும் அதிகாரங்களை வைத்துத்தான் செயல்படுகிறது. மாநில அரசாங்கங்களும் இந்திய அரசியல்சாசனம் தரும் அதிகாரங்களை வைத்துத்தான் செயல்படுகின்றன. அதேபோல்தான் உள்ளாட்சிகளும் அரசியல்சாசனம் தருகின்ற அதிகாரங்களை வைத்துச் செயல்பட வேண்டும். ஆனால் உள்ளாட்சிகள் அப்படிச் செயல்படுவதாகத் தெரியவில்லை. மாநில அரசுகள் கொண்டு வந்திருக்கும் உள்ளாட்சிச் சட்டங்கள் என்பது அரசியல் சாசனம் தந்த வரையறைக்குட்பட்டுத்தான் உருவாக்கப் பட்டுள்ளன. எனவே இதற்கு அரசியல் சாசனத்தின் பின்புலம் இருக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டால் நம் உள்ளாட்சித் தலைவர்கள் தங்கள் பார்வையையும் செயல்பாடுகளையும் விரிவாக்கிக் கொண்டு செயல்படுவார்கள்.

ஊரக வளர்ச்சிக்கு அடிப்படை வசதிகளை உருவாக்க வேண்டும். நல்ல சாலை வசதிகள் வேண்டும், நல்ல பள்ளிக்கூடம் தேவை, நல்ல சுகாதார நிலையங்கள் தேவை, நல்ல கூட்டுறவு அமைப்புக்கள் தேவை, நல்ல சத்துணவுக் கூடங்கள் தேவை, கிராமங்களுக்கு மின்சார வசதி தேவை, தூய்மையான குடிதண்ணீர் தேவை, பிராணிகள் நலம் பேண பிராணிகள் சுகாதார நிலையங்கள் தேவை, நல்ல பஞ்சாயத்து அலுவலகம் தேவை, மழை பெய்தால் மழைநீர் சேமிக்க நல்ல குளங்கள், குட்டைகள் போன்ற நீர்நிலைகள் பராமரிப்புத் தேவை, அந்த நீர்நிலைகளுக்கு பெய்யும் மழைநீர் சென்றடைய தேவையான வரத்துக் கால்வாய் தேவை, அதேபோல் உபரி நீர் வெளியேற போக்குக் கால்வாய் தேவை, இதன் வழியே தங்குதடையின்றி நீர் செல்ல சிறு பாலங்கள் தேவை, கழிப்பிடம் இல்லாக் குடும்பங்களுக்கு பொதுக் கழிப்பிடம் தேவை. இதுபோன்று இன்ன பிற வசதிகள் கிராம மேம்பாட்டிற்கு அடிப்படை என்பதை எவரும் மறுக்க இயலாது.

ஆனால் அதைவிட மிக முக்கியம் எது என்றால் இந்த வசதிகளைப் பற்றிய புரிதல், அவைகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல், அந்த வசதிகளை எப்படி சமூகம் தக்க வைத்து, அந்த வசதிகளுக்கு சொந்தக்காரராக மாறுவது என்ற புரிதலும் உருவாக்கப்பட்ட வசதிகளை அந்த சமூகம் பொறுப்பேற்று கவனித்து, பராமரித்து, உபயோகப்படுத்தத் தேவையான விழிப்புணர்வும், பார்வையும், தெளிவும் தேவை. இவைகள் இல்லை என்றால் அந்த வசதிகளால் அந்தச் சமூகத்திற்கு எந்தப் பலனும் கிடையாது. அந்த வசதிகள் உருவாக்க வேண்டிய விளைவுகள் எதுவும் மக்களுக்குக் கிடைக்காது. கிராமத்தில் உள்ள மக்கள் அத்தனை வசதிகளுக்கும் பொறுப்பேற்று, அவைகளை தமதாக்கி, பராமரித்து உபயோகப்படுத்தக் கற்றுக் கொண்டால் கிராமங்கள் உண்மையிலேயே உன்னதமான வாழ்விடமாக மாறிவிடும். அதற்கு கிராமத்தில் கூட்டுப் பொறுப்பு உருவாக்கப்படல் வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இன்றுவரை இந்த வசதிகளை மத்திய அரசும் மாநில அரசும் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே வருகின்றன. ஆனால் இந்த வசதிகள் கிராமங்களில் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா, முறையாக பயன்படுத்தப்படுகின்றனவா அதற்கான பொறுப்புக்களை கிராமங்களில் ஏற்க மக்கள் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளனவா, உருவாக்கப்பட்ட வசதிகளின் முக்கியத்துவம் அவசியம், பயன்பாடு பற்றிய புரிதல் மக்களிடம் உருவாக்கப்பட்டதா என்பது இன்றுவரை கேள்வியாகவேதான் இருக்கின்றது. இருந்தபோதும், இந்த வசதிகள் உருவாக்குவதை அரசாங்கம் நிறுத்தவில்லை. இன்று அந்த வசதிகள் உருவாக்கும் பணி என்பது இன்று எங்கு வந்து நிற்கிறது என்றால் ஜல்லி, மண், இரும்பு, சிமெண்ட் கொண்ட வேலைகள் தான் கிராம மேம்பாட்டுச் செயல்பாடுகள் என்ற சிந்தனையில் அனைவரும் செயல்பட்டு வருகின்றனர். இந்தச் செயல்பாடுகளில் ஒரு லாபம் ஒரு சிலருக்கு கிடைத்துக் கொண்டே இருக்கிறது. இதன் விளைவு கிராமங்களில் பொதுச் சொத்துக்கள் நிறைய உருவாக்கப்படுகின்றன, ஆனால் அவற்றிற்கு யாரும் பொறுப்பேற்றுக் கொள்வதில்லை, அவைகள் அனைத்தும் அரசாங்கச் சொத்துக்கள் என்ற சிந்தனையில் வாழ்வதுதான் பெரும் சோக நிகழ்வு. எனவே அவைகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படுவதும் கிடையாது, பயன்படுத்துவதும் கிடையாது. இதன் விளைவு பொதுப்பணம் விரயம், பெருமளவில் வசதிகள் உருவாக்கம் என்ற பெயரில் நடைபெறுகின்றன.

மக்களுக்குத் தேவையான வாழ்க்கை மேம்பாடு பற்றிய பெருமளவு விழிப்புணர்வை ஏற்படுத்த தவறி விட்டோம். இதன் விளைவு தனிமனித மேம்பாட்டுக்கான அரசின் நலத் திட்டங்கள் அரசு தரும்போது அதைப் பெற்று பயன்பெறும் பயனாளிக் கூட்டமாக மக்கள் தங்களை உருவாக்கி பழக்கிக் கொண்டு விட்டார்கள். இந்தப் பயனாளிச் சிந்தனை என்பது சுயமரியாதைக்கு எதிர்மறையானது. இந்தச் சிந்தனை தன்மானத்தை இழக்கச் செய்யும் சிந்தனை. இந்த சொல்லாடல்கள் முன்னேற்றச் சிந்தனைக்கு எதிரானது என்பதை நாம் எவரும் புரிந்து கொள்வதில்லை. இதன் விளைவுதான் மக்களை முன்னிலைப்படுத்துவதற்குப் பதில், அவர்களை கடைசி நிலையில் பயன்கள் பெறுவோராக வைத்துவிட்டோம்.

அதே நேரத்தில் நாம் இன்னொரு முக்கியமான நிகழ்வையும் பார்க்கத் தவறிவிடக் கூடாது. எங்கெல்லாம் சமூகம் விழிப்புடன் இருந்ததோ அங்கெல்லாம் இந்த வசதிகளைப் பயன்படுத்தி சிறந்த கிராமமாக மாற்றப்பட்டு நல்ல மேம்பட்ட சமூக பொருளாதார வாழ்க்கை நடைபெறுகிறது பல கிராமங்களில் என்பதையும் நாம் கணக்கில் எடுக்கத் தவறக் கூடாது. இதன் விளைவுதான் ஒருசில மாவட்டங்கள் முன்னேறிய மாவட்டங்களாக மாறிவிட்டன. மற்றவை பின்தங்கியவைகளாகக் காட்சியளிக்கின்றன. இன்னொரு முக்கியமான காரணத்தை நாம் பார்க்கத் தவறக்கூடாது. எங்கெல்லாம் ஒரு நல்ல தலைமை கிடைத்ததோ அங்கு மேம்பாடு என்பது வெள்ளிடைமலை. கிராமத்திற்கான தலைமையாக இருக்கலாம், சமூகத்திற்கான தலைமையாக இருக்கலாம், கட்சிக்கான தலைமையாக இருக்கலாம், நிர்வாகத்திற்கான தலைமையாக இருக்கலாம், வணிகத்திற்கான தலைமையாக இருக்கலாம், தொழிலுக்கான தலைமையாக இருக்கலாம், கல்விக்கான தலைமையாக இருக்கலாம், அந்தந்த இடங்களுக்குக் கிடைக்கும் சட்டமன்ற உறுப்பினராக இருக்கலாம், பாராளுமன்ற உறுப்பினராக இருக்கலாம். இந்தத் தலைமைகள்தான் மற்றொரு காரணியாக விளங்குகின்றது. அதைவிட முக்கியமாக இந்த தலைமையை எப்படி சமூகங்கள் உபயோகப்படுத்திக் கொள்கின்றன என்பதையும் பொறுத்ததுதான் முன்னேற்றம் என்பது நடைபெறுகிறது.

இவற்றையும் தாண்டி மக்கள் ஆங்காங்கே உழைப்புக்கு எப்படித் தயாரிக்கப்படுகிறார்கள், மேம்பாடு அடைவதற்கு எப்படி உணர்வு பெற்று செயல்படுகின்றார்கள் என்பதைப் பொறுத்தும் வளர்ச்சியும் மேம்பாடும் சமூகங்களுக்குக் கிடைக்கின்றன.

காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்ட நாடுகள் தேசிய அரசாங்கத்தை பெரிதாக வலுவாகக் கட்டி அனைவருக்கும் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் கொண்டுவர எண்ணிய செயல்பட்ட பெரும்பாலான நாடுகளில் ஒரு நிலைக்குமேல் சமூக மேம்பாட்டையும் பொருளாதார வளர்ச்சியையும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்க முடியவில்லை என்பதை ஆமோதித்து மாற்றுப்பாதைக்கு முனைந்தன. அந்த நேரத்தில்தான் பொருளாதார புதிய பாதை தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்ற முழக்கத்துடன் செயல்பட உருவாக்கப்பட்டது. அதே காலக்கட்டத்தில் வளரும் பொருளாதாரம் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். அதற்கு அதிகாரங்களை பரவலாக்கி மக்களை அதிகாரப்படுத்தி மக்களை பயனாளி என்கின்ற நிலையிலிருந்து, மேம்பாட்டில் பங்குதாரர், பங்காளி என்கின்ற நிலைக்கு தயார் செய்து அனைத்து மேம்பாட்டுச் செயல்பாடுகளிலும் பங்கெடுக்க வைக்க வேண்டும், அதற்கு ஆளுகை அதிகாரத்தை பரவலாக்கி மக்களுக்கு அருகாமையில் ஒரு அரசாங்கத்தை உருவாக்கினார். இது ஏறத்தாழ 80 நாடுகளில் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த முன்னெடுப்புகளுடன் அடுத்த ஒரு செயல்பாடு பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்டது. அதுதான் சமூகத்தை ஜனநாயகப்படுத்துவது. மக்களாட்சியை விரிவுபடுத்தாமல், ஆழப்படுத்தாமல், அகலப்படுத்தாமல் முன்னேற்றத்தை மேம்பாட்டை, வளர்ச்சியை அனைவருக்கும் கிட்டிட செயல்பட முடியாது என்ற அடிப்படையில் மக்களாட்சியை விரிவுபடுத்தும் விரிவாக்கப் பணியும் பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் புதிய முன்னெடுப்புக்களைப் பற்றிய புரிதலுடன் மக்கள் பிரதிநிதிகள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி செயல்பட வேண்டும். அப்படிச் செயல்பட்டால் இந்தப் புதிய முன்னெடுப்புக்களினால் வரும் புதிய வாய்ப்புக்களை மக்கள் பயன்படுத்திக் கொண்டு வளர்ச்சியை அனைவருக்கும் பங்கிட்டு அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவார்கள். அப்படி எல்லா நாடுகளிலும் நடந்ததா என்று ஒரு கணம் உலகத்தை ஆய்ந்து பார்த்தால் சீனாவைத் தவிர வேறு எந்த நாடும் பெருமளவில் பயன்பெற்றதாகத் தெரியவில்லை.

இந்தப் பின்னணியில் இந்தியாவை ஆய்வு செய்து பார்த்தால் நமக்கு ஒரு புரிதல் கிடைக்கும். இந்தியா என்பது ஒரு துணைக் கண்டம். பல நாடுகளின் தொகுப்பு என்றுதான் கூறவேண்டும். இதில் இருக்கும் வேறுபாடுகள், வித்தியாசங்கள், ஏற்றத் தாழ்வுகள் அனைத்தும் மக்களாட்சிக்கு எதிராகச் செயல்படும் காரணிகளாகும். இந்த நாடு ஒன்றுபட்டு மக்களாட்சியில் 75 ஆண்டுகாலம் இருப்பதே மிகப்பெரும் சாதனை. இந்திய நாட்டில் 8% பொருளாதார வளர்ச்சி அடைந்தபோது 80 கோடி மக்களுக்கு அரசின் உதவி இல்லாமல் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்றால் வளர்ச்சி எங்கே சென்றது என்பதுதான் நம் கேள்வி.

எனவே இந்திய நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு கிராமத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு இன்றியமையாதவை. உலக வங்கியின் ஆய்வின்படி 2017ல் 66.5% மக்கள் இந்தியக் கிராமங்களில்தான் வாழ்கின்றனர். அதில் வேலைக்குத் தகுதியானவர்களில் 69% மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்க்கை நடத்துகின்றனர். கிராமங்களில் வாழும் மக்களில் பெரும்பகுதி ஆரோக்கியமான வாழ்க்கை வாழத் தேவையான அடிப்படை வசதிகளுடன் வாழ இயலவில்லை. பெரும்பகுதி விளிம்புநிலை மக்கள் தொடர்ந்து பாதிப்புக்களுக்கு உள்ளாகி அதிலிருந்து மீளமுடியாமல் வாழ்ந்து வருகின்றனர். கிராமத்தின் உற்பத்தித்திறன் குறைவதும், கிராமத்திலுள்ள மக்களின் திறன் வளர்க்கப்படாமல் அல்லது தேவைக்கு ஏற்ற அளவில் திறன் கூட்டப்படாமல் இருப்பதும் கிராமத்திலுள்ள குடும்பங்களின் முடிவெடுக்கும் திறனையும் ஆற்றலையும் குறைத்துள்ளது. அதுமட்டுமல்ல, கிராமத்தில் பொருளாதாரச் செயல்பாடுகள் என்பது முற்றிலும் நலிவடைந்து அவைகள் வாழ்வாதாரமாக செயல்படும் நிலைக்கு வந்துவிட்டன.

கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் பெரும்பகுதி செப்பனிடுவதற்குப் பதில், அவைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாவதும் குப்பை கொட்டும் குப்பைக் குளங்களாக மாறுவதும் எதார்த்தமான நிலை. அத்துடன் கிராமங்களில் உள்ள கனிம வளங்கள் அரசின் ஆசியுடன் சுரண்டப்படுவதும், அதன் விளைவாக எங்குப் பார்த்தாலும் கிராமங்கள் மேடு பள்ளங்களாகக் காட்சியளிப்பதும் அடுத்து நாம் காணும் எதார்த்த நிலை. அளவற்ற நுகர்வு கிராமங்களில் குவிகின்ற குப்பைகள், கிராமச் சுகாதாரத்தை கெடுப்பதுடன் சுற்றுச் சூழலையும் கெடுத்து வருகின்ற நிலையை நம்மால் உணர முடியும். பல்லுயிர் பெருக்கம், துப்புரவு, தூய்மை, உயிர்ச்சூழல் பாதுகாப்பு இவைகளெல்லாம் விவாதத்தில் இருக்கின்றன. செயலில் குப்பை மட்டும் கூட்டப்பட்டு ஓரிடத்தில் குவிக்கப்படுகின்றன. எல்லா வீடுகளிலும் ஆன்ராய்டு மொபைல் போன் இருக்கிறது, மோட்டார் சைக்கிள் இருக்கின்றது. ஆனால் கழிப்பிடம் இல்லை. அளவற்ற உடைகள் விதவிதமாக அணிய பழகிக் கொண்டுள்ளனர். ஆனால் அடிப்படைத் தேவையான கழிப்பறைக் கலாச்சாரத்தைப் பார்க்க

முடியவில்லை. விதவிதமான உணவு வகைகள் நெகிழிப் பையில் அடைக்கப்பட்டு சந்தையில் விற்கப்படுவதை மக்கள் வாங்கி ருசித்து உண்ணுகின்றனர். ஆனால் சமீபத்தில் வந்த ஆராய்ச்சி அறிக்கையின்படி 55% கிராமப்புறக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 52% வளர் இளம் பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமங்களில் உற்பத்தியாகும் பொருள்களுக்கு சந்தைப்படுத்தும் வாய்ப்பு உருவாக்கிக் கொள்ளாமையாலும், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் இணைந்த செயல்பாடாக, கிராமத்தில் உற்பத்தியாகும் பொருள்கள் மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தாததன் விளைவு தங்கள் உற்பத்திக்கு உண்டான லாபமும் மரியாதையும் கிடைக்கவில்லை. ஆனால் கிராமங்களில் மின்சாதனப் பொருள்களின் பயன்பாடு என்பது அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. கான்கிரிட் வீடுகள் வளர்ந்த வண்ணம் இருக்கின்றது. எனவே இன்று கிராமங்கள் என்பது ஒரு கலாச்சாரம் சார்ந்த விழுமியங்களுடன் இயைந்த கிராம தற்சார்பு வாழ்க்கையாக இல்லாமல் அரசு தரும் திட்டப்பயன்களைச் சுவைக்கும் பயனாளிக் கூட்டம் வாழும் இடமாக மாற்றிவிட்டன. எனவே கிராமங்களில் மக்கள் நகர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், கிராம வாழ்க்கையின் முக்கியத்துவம் உணராமல்.

இந்தச் சூழலை மாற்றுவதற்காக வந்ததுதான் இன்றைய உள்ளாட்சிகள். இந்த உள்ளாட்சியின் அடிப்படையை புரிந்து கொண்டு, கிராமப் புனரமைப்புக்கான ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டி, கிராம வளங்களையும் வசதிகளையும் மீட்டெடுத்து கிராம வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் மக்களைத் திரட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி ஒரு கிராமக் குடியரசை உருவாக்குவது தான் இதன் அடிப்படை. இதற்கான பார்வையையும், விழிப்புணர்வையும் இன்றுள்ள உள்ளாட்சித் தலைவர்களுக்கும் மக்களுக்கும் ஏற்படுத்தி கிராம மேம்பாட்டை நிபுணத்துவம் மிக்க செயல்பாடாக மாற்றி கிராம வாழ்க்கை நாகரீகத்தின் சின்னம் என்ற செய்தியை உலக மக்களுக்கு தந்தாக வேண்டிய கடமையில் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் அத்தனை பேருக்கும் பொறுப்பும் கடமையும் இருக்கிறது. எனவே இந்தப் புதிய பாதையில் பயணிக்க நம் மக்களும் தலைவர்களும் கிராமங்களில் தயாராக வேண்டும். அதுதான் இன்றைய நமது தேவை.

- க.பழனித்துரை