தோழர் அருணன் கடந்த அக்டோபர் மாதம் லண்டன் சென்று ஒரு மாத காலம் தன் மகளுடன் தங்கியிருந்த நாட்களில் கிடைத்த அனுபவங்களை இந்நூலில் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். பொதுவாக தோழர் அருணன் எங்கு சென்றாலும் போனோமா, பார்த்தோமா, வந்தோமா என்று இல்லாமல் அங்கு பார்த்த காட்சிகளை சரித்திர, அரசியல், பொருளாதார பின்னணியோடு விவரித்து கட்டுரைகள் எழுதி விடுவார். லண்டனில் ஒரு மாதம் இருந்தால் கேட்கவா வேண்டும், பல தகவல்களை உள்ளடக்கி ஒரு புத்தகமே தந்துவிட்டார்.

லண்டன் என்றதும் நமக்கு நினைவில் வருவது தேம்ஸ் நதி. அதில் அமைந்துள்ள லண்டன் பிரிட்ஜ், வின்ட்சர் கோட்டை, பக்கிங்காம் அரண்மனை, கேம்பிரிட்ஜ், ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகங்கள், நூலகம், அருங்காட்சியகம், கோகினூர் வைரம், எல்லாவற்றிற்கும் மேலாக மாமேதை மார்க்ஸ் கல்லறை இவை எல்லாவற்றிற்கும் நம்மை அழைத்துச் செல்கிறார் அருணன். இவை பற்றிய சரித்திர குறிப்புகளை விவரிக்கிறார். நாமும் நேரில் போய் பார்ப்பது போல் உணர்வு ஏற்படுகிறது. கோகினூர் வைரம் பற்றியும் திப்பு சுல்தான் சிம்மாசனத்தில் உள்ள புலித்தலை பற்றியும், கடைசி மொகலாய மன்னன் பகதூர்ஷா அணிந்த மகுடம் என வரலாற்று காட்சிகளை விளக்குகிறார்.

ஹைகேட் சிமிட்ரிக்கு சென்று மார்க்சின் கல்லறையை காண்பது உணர்வு பூர்வமானது, நூலகத்தில் மார்க்ஸ் அமர்ந்து படிக்கும் ஓ 7 மேஜையை கூட நமக்கு அறிமுகப்படுத்தி விடுகிறார்.

லண்டனில் வெளிவரும் கார்டியன், டைம்ஸ் போன்ற பத்திரிகைகளை அவர் படித்து அதில் வரும் செய்திகளோடு நம்நாட்டு நிலைமைகளையும் இங்கிலாந்தின் தற்போதைய நிகழ்வுகளையும் விவரிக்கிறார். 44 லட்சம் பேர் வேலையில்லாமல் இருப்பதையும், மேலும் 5 லட்சம் பேர் வேலை இழக்கப் போகிறார்கள் என்பதையும் நாளிதழ்கள் தெரிவிக்கின்றன. முதலாளித்துவம் பிறந்த நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் அதை சமாளிக்க மார்கரெட் தாட்சர் அறிமுகப்படுத்திய தாட்சரிசம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

போப்பிற்கும் பிரிட்டிஷ் அரச வம்சத்திற்கும் முரண்பாடு வந்த பின்னணி. அரசன் எட்டாம் ஹென்றி தன் மனைவியை விவாகரத்து செய்ய போப் அனுமதிக்காததால் தன் நாட்டையே போப்பின் அதிகாரத்திலிருந்து விடுவித்துக் கொள்கிறான். - லத்தின் மொழிக்கு பதில் ஆங்கிலம் தேவாலயத்தில் வருகிறது. தமிழ் நம் நாட்டுக் கோவில்களில் வரவில்லையே என பொருத்தமான இடத்தில் கேள்வி எழுப்புகிறார்.

கோரிக்கை சாசன இயக்கம் நடைபெற்ற டிராபல்கர் சதுக்கத்தில் இன்று வரை ஆர்ப்பாட்டங்கள் நடப்பதையும் இன்னும் பல அரிய செய்திகளும் இந்நூலில் அடங்கியுள்ளன. பொருத்தமான இடங்களில் படங்களும் இடம் பெற்றுள்ளன. சிறிய நூல் என்றாலும் பல செய்திகளை சொல்கிறது. அருணனுடன் சேர்ந்து லண்டன் போய் வந்த அனுபவம் கிடைக்கிறது.

-

வெளியீடு

வசந்தம் வெளியீட்டகம்

69/24-ஹ, அனுமார் கோவில் படித்துறை

மதுரை-625001

விலை ரூ.

Pin It