prof.ramaelango 350நான் பாரதிதாசனைப் பற்றி முனைவர் பட்ட ஆய்வு செய்து கொண்டிருந்த போது காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் ஆங்கிலத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த பேராசிரியர் மணவாளன் அவர்களைச் சந்தித்தேன். பாரதிதாசனைப் பற்றி நான் ஆய்வு செய்வதாகக் கூறினேன். பேராசிரியர் மனம் மகிழ்ந்து Convention and revolt என்னும் நூலை நூலகத்திலிருந்து எடுத்துக் கொடுத்து இந்நூலை உங்கள் ஆய்வுக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். முன்பின் தெரியாத எனக்கு அவருடைய செயல் வியப்பூட்டியது. புத்தகத்தை எப்போது திருப்பித் தரவேண்டும் என்று கேட்டேன். உங்கள் ஆய்வு முடித்தபிறகு தாருங்கள் என்றார் பேராசிரியர்.

என் ஆய்வை முடித்தபின் அந்நூலைப் பேராசிரி யரிடம் திரும்ப ஒப்படைத்தேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமைமிக்க ஒருவரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தேடிக் கொண்டிருந்தபோது பேராசிரியர் மணவாளன் அவர்கள் அந்நிறுவனத்தின் பார்வையில் பட்டார்.

பேராசிரியர் அவர்கள் கோவை பேரூர் கல்லூரியில் புலவர் பட்டமும், திருச்சி சமால் முகமது கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியமும், முதுகலைத்தமிழ் இலக்கியத்தைத் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்திலும், முனைவர் பட்டத்தை சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையிலும் பெற்றவர். பேராசிரியர் அவர்கள் ஒரு பன்மொழிப்புலவர். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு,  இந்தி முதலிய மொழிகளில் பேசவும் எழுதவும் வல்லவர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித் துறையில் விரிவுரையாளராகவும், இணைப்பேராசிரி யராகவும், பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் 1978 - 1996 ஆம் ஆண்டுகளில் பணிபுரிந்தவர்.

நான் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியமர்த்தம் செய்யப்பட்டபின் முதுநிலைப் பேராசிரியர் மணவாளன் ஐயாவைப் பார்க்கச் சென்றேன். மகிழ்ச்சி தெரிவித்துக் கை குலுக்கினார். நல்லது செய்வதற்கு இடதுபக்கம்  போகக் கூடாது என விதியிருந்தால் அதை மீறுங்கள் என்று கூறினார். அறிவுடைமையும் துணையுடைமையும் கொண்ட பேராசிரியர் எனக்கு வழங்கிய அறிவுரை.

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நான் இயக்குநராக இருந்தபோது பேராசிரியர் அவர்களைப் பதிப்புக்குழுவில் உறுப்பினராகப் பணியமர்த்தம் செய்தேன். நிறுவனத்தில் ஆய்வுத் திட்டப்பணிகளை எழுதும் தகைசால் பேராசிரியராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். உடன் அவர் என்னிடம் வந்து ஒருவர் இரு பதவிகளில் இருக்கக்கூடாது. எனவே பதிப்புக் குழுவிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன் என்று கடிதம் எழுதித் தந்துவிட்டார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழக அரசின் ஆய்வுத் திட்டத்தின் ஒரு பகுதியான உலகத் தமிழ் இலக்கிய வரலாறு (901 முதல் 1300 வரை) என்னும் பகுதியை எழுதியுள்ளார். அந்நூலை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பதிப்பித்து வெளியிட்டு உள்ளது. தொல் காப்பியப் பொருளதிகாரத்தை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார். புகழ் பெற்ற அம்மொழி பெயர்ப்பு நூலுக்குப் பேராசிரியர் வ.ஐ.சுப்பிரமணியம் நடத்துகின்ற DLA விருது கிடைத்தது. தமிழக அரசின் கபிலர் விருது பெற்று உள்ளார். இராம காதையும் இராமாயணங்களும் (2005) என்னும் நூலுக்குப் பிர்லா அறக்கட்டளையின் சரஸ்வதி சம்மான் விருது பெற்றுள்ளார். தமிழகத்தில் சரஸ்வதி சம்மான் விருது இருவர்தான் பெற்றனர். ஒருவர் இந்திரா பார்த்த சாரதி, பிறிதொருவர் நம் மனதில் வாழும் பேராசிரியர் அ.அ.மணவாளன் அவர்கள் ஆவர். 1988-89 ஆம் ஆண்டில் புல்பிரைட் உதவித்தொகை பெற்று இந்தியானா, சிகாகோ, இவான்சுடன், கொலம்பியா, வாசிங்டன், நியூயார்க்குப் பல்கலைக்கழகங்களில் ஒப்பாய்வுத் துறையில் மதிப்புறு பேராசிரியராகப் பணியாற்றியவர்.

மில்டன் - கம்பனின் காப்பிய மாந்தரின் தலைமைப் பண்பு (1984), இருபதாம் நூற்றாண்டின் இலக்கியக் கோட்பாடுகள் (1995), பக்தி இலக்கியம் (2004), இலக்கியப் பண்பாட்டு ஒப்பாய்வு (2010) போன்ற நூல்கள் இவரின் பெயர் சொல்லும் பெருமை மிக்க படைப்புகளாகும்.

Tamil Research in Journal Dr. Mu. Va.

Tamil Research in Journal Dr. Mu. Va.Tholkappiyam – Porulathigaram ofTholkappiyar in English

Essays and Tribute in Thirukkural

Comparative Study in Literature and Culture

Translation of Thirukkural in English, 3 volumes(செம்மொழி வெளியீடு)

பொருள் புதிது (உலகத்தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு)

அரிஸ்டாட்டிலின் (poetries) கவிதையினைத் தமிழில் மொழிபெயர்த்த பெருமை இவருக்குண்டு.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிடும் "உங்கள் நூலகம்" என்னும் இதழுக்கு ஆசிரியராக விளங்கிய பெருமைக்குரியவர். புகழ் பூத்த பேராசிரியர் மணவாளன் அவர்கள் உடல்நலம் குன்றி வீட்டில் இருப்பதாக அறிந்தேன். பேராசிரியர் சுந்தரமூர்த்தி அவர்களிடம் மணவாளன் அவர்களைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலை எடுத்துரைத்தேன். அவரும் போகலாம் என்றார். அவரை மீண்டும் நான் சந்தித்தபோது பேராசிரியர் மணவாளனைக் காண வேண்டும் என்ற என்னுடைய கருத்தை நினைவு படுத்தினேன். அவரை இரண்டு நாட்களுக்கு முன் தான் நான் சந்தித்தேன். அவர் என்னிடம் தெலுங்கில் பேசினார் என்றார். நான் அவரிடம் கன்னடத்தில் பேசினால் என்ன? மலையாளத்தில் பேசினால் என்ன? யாருக்கும் புரியாத சமஸ்கிருதத்தில் பேசினால் என்ன? நான் அவரைக் காணவேண்டும் என்ற என் ஆவலை அவரிடம் வலியுறுத்தினேன்.

தொல்காப்பியம், பக்தி இலக்கியம், மொழி பெயர்ப்பு, இலக்கியக் கோட்பாடு, இலக்கிய ஒப்பாய்வு போன்ற துறையில் ஆழங்கால்பட்ட பேராசிரியர் மணவாளன் அவர்களை உயிரோடு இருக்கும்போதே சந்திக்கும் வாய்ப்பு கிட்டாமல் போயிற்று என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவரிடம் பயின்ற மாணவர்களுக்கும் ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்கிறேன். நாட்டில் அறிஞர்களைப் பார்ப்பது எளிது. ஆனால் நல்ல மனிதர்களைப் பார்ப்பது என்பது அரிது. பேராசிரியர் மணவாளன் அவர்கள் நல்ல மனிதராக - மாமனிதராக விளங்கினார். அந்த மாமனிதரின் புகழ் வாழ்க.