‘உழவற உழுதவன் ஊரில் பெரியவன்’ என்ற சொல்வழக்கு வேளாண் குடிகளிடம் வழங்குகின்றது. செய்யும் தொழிலில் ஆழ்ந்த ஈடுபாடு, கடுமையான உழைப்பு இருத்தல் வேண்டும் என்பதை இந்தச் சொல்வழக்கு வேண்டிநிற்கின்றது. நிலத்தை நன்கு மீண்டும், மீண்டும் ஆழ உழுது பண்படுத்தப்பட்ட பின்னர் அந்நிலத்தில் பயிரிடும்பொழுது விளைச்சல் நன்றாகச் செழித்து விளையும் என்பது வேளாண் குடிகள் கண்ட உண்மை அனுபவமாகும். இந்த உண்மை அனுபவத்தை உணர்த்தும் வகையில் மேற்கண்ட பழமொழி வெளிப்பட்டிருக்கின்றது.

நம்முடைய உழவுத்தொழில் முறைகள் முற்றிலுமாக உருமாறிவிட்ட இன்றைய காலச்சூழலில், பழைய உழவுத்தொழில் முறைகள் பற்றிச் சிந்திக்கையில் பல்வேறு குறிப்புகள் மனதில் முன்வந்து நிற்கின்றன. இலக்கியத் தரவுகள் சிலவும் கிடைக்கப்பெறுகின்றன. இதற்குச் சம அளவில், விவசாயத் தொழிலொன்றையே (சிறு விவசாயம்) ஆதாரமாகக் கொண்டியங்கும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததன் காரணமாகப் பெற்ற பட்டறிவு களும் நினைவில் வந்துபோகின்றன. அந்த நினைவுகளுள் ஒன்றை இங்குப் பதிவு செய்துவிட்டு அந்தப் பதிவிற்கு இணையான நமது சங்கப் பாடலுள் பயின்றுவரும் குறிப்பொன்றை ஒப்பிட்டுக் காட்டுவது இந்தக் கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

farmer with bullls

திருவண்ணாமலை வட்டத்திற்கு உட்பட்ட எங்கள் கிராமத்து விவசாய நிலங்களுள் செம்பாதி வானம் பார்த்த மானாவாரி நிலமாகும். ஏனைய செம்பாதி கிணற்றுப் பாசனமுறையை அடிப்படை ஆதாரமாகக் கொண்டவையாகும். எங்கள் ஊருக்குத் தெற்கே (சுமார் முப்பது கிலோமீட்டர் தொலைவு) தென்பெண்ணை ஆறும், அந்த அணையை இடைமறித்துக் கட்டப் பட்டுள்ள சாத்தனூர் அணையும் அமைந்திருக்கின்றன. எங்களது கிராமம் தென்பெண்ணை ஆற்றிற்கு மேட்டுப் பகுதியில் (வடக்கு) அமைந்திருப்பதால் ஆற்றின் குறுக்கே அணைகட்டிய நிலையிலும் அந்த அணையின் நீர் எங்களுக்குக் கிடைக்க வழியில்லாமல் ஆகிப் போனது.

எங்கள் ஊரின் வடக்கே ஜவ்வாது மலைத் தொடரில் உற்பத்தியாகிப் பாய்கின்ற ‘செய்யாறு’ ஓடுகிறது. ஊருக்கும் அந்த ஆற்றுக்குமான இடைவெளி சுமார் முப்பது கிலோமீட்டர் அளவு என்பதால், செய்யாற்றின் நீரும் கிடைக்க வழியில்லாத சூழல் எங்களுக்கு இயற்கையாக அமைந்துவிட்டது. இதனால் எங்கள் கிராமத்து வேளாண் குடிகள் ஆற்றுப் பாசன முறையை முற்றிலுமாக அறிந்திராதவர்களாக ஆகிப் போனது இயற்கையின் எதார்த்த நிலையாகும். இதனால், பல ஆண்டுகளாகக் காவிரி, முல்லைப் பெரியாறு, கிருஷ்ணா நதிநீர் வேண்டி தம்மையத்த வேளாண் இனத்தினருள் ஒருபகுதியினரின் போராட்ட வரலாற்றை, உணர்வை முற்றிலுமாக எங்கள் ஊர் மக்கள் அறிந்திருக்க வாய்ப்பு ஏற்படாமல் போனது. ஆற்றுப் பாசனத்தை ஆதாரமாகக் கொண்ட இடங்களில் பெருவிவசாய முறைகளைக் காணமுடியும். குறு, சிறு விவசாய முறைகள் உள்ள இடங்களில் பெரும்பாலும் கிணற்றுப் பாசனமுறை வழக்கிலிருக்கும். எங்கள் ஊர் வேளாண்மை முறை செம்பாதியாகக் கிணற்றுப் பாசனத்தையும், பருவ மழையையும் (வானம்பார்த்த பூமி) ஆதாரமாகக் கொண்டதாகும்.

ஊரில் உள்ள எல்லா வேளாண் குடிகளுக்கும் இரண்டு முதல் ஐந்து ஏக்கருக்கு மேலளவு யாருக்கும் வேளாண் நிலம் கிடையாது. இந்த நிலங்கள், குடும்பத்தில் ஆண் வாரிசுகள் பிறப்பிற்கு ஏற்ப

அளவு பாகப்பட்டுக்கொண்டே போகும். இதனால் குடும்பத்திற்குரிய நிலப்பரப்பு அளவு குறைந்து கொண்டே போகும். மானாவாரி நிலங்களும் இதே கணக்கீட்டு முறையில் உள்ளடங்குகின்றன.

மழையை எதிர்நோக்கி நிற்கும் மானாவாரி நிலத்தில் பருவ காலத்தில் மட்டுமே பயிரிட முடியும் என்பதால், பெரும்பாலும் சித்திரை மாதப் புதுமழையில் முதல் உழவெடுத்து ஆனி, ஆடி மாதங்களில் விதைப்பு நடைபெறும். சில ஆண்டுகளில் வைகாசி மாதத்தில் கூட விதைப்பு நடைபெறுவதுண்டு. உரிய நேரத்தில் மழை பெய்யவில்லை என்பதால் இந்த ஆண்டு இன்னும் முதலுழவுகூட நடைபெறவில்லை. மானாவாரி நிலத்தில் பெரும்பாலும் மலாட்டையைப் (வேர்க் கடலை) பயிரிடுவார்கள்.

மலாட்டையைப் பயிரிடும் சூழலற்ற வேளாண் குடிகளுள் சிலர் கம்பு, சோளம், துவரை, மொச்சை போன்ற தானியங்களைப் பயிரிடுவார்கள். மானாவாரி நிலத்தில் ஆனி, ஆடியில் விதைத்த பயிர்கள் ஆவணி, புரட்டாசி மாதங்களில் வளர்ந்து செழித்துக் காணப் படும். இந்த மாதங்களில் மானாவாரி நிலங்களைப் பார்க்க கொள்ளைப் பசுமையாக இருக்கும். மலாட்டை, அதனுள் சாலை சாலையாக ஊடுபயிராக விதைத்த துவரை, காராமணி போன்ற பயிறு வகைகள் அனைத்தும் ஒன்றாகச் செழித்து வளர்ந்து பச்சைப் பசேல் என்று எங்கும் பச்சை நிறமாகக் காட்சி அளிக்கும்.

உழைத்து விதைத்த பயிர், செழித்து வளர்ந்து நிற்பதைக் காணும்பொழுது ஏற்படும் உள்ள உணர்வு களைச் சொல்ல வார்த்தைகள் இருக்காது. விளைந்து நிற்கும் பயிரைக் கண்டு, ஒரு விவசாயி காணும் இன்பத்திற்குப் பின்னால் அந்த விவசாயி பட்ட பாட்டை, உழைப்பைப் பிறர் அறிந்திருக்க வாய்ப் பில்லை. அவற்றிலும் சிறு விவசாயி படும்பாடு சொல்ல முடியாதவையாக இருக்கும். கிடைக்கும் கொஞ்ச வசதியைக் கொண்டு பருவம் தப்பாமல் பயிரிட்டாலன்றி சிறு பலனைக்கூட அந்த உழவனால் பெறமுடியாமல் போகும்.

சிறு விவசாயிகளிடம் பெரும்பாலும் ஒற்றை ஏரு மட்டுமே இருக்கும். புதுமழை வந்தவுடன் காலம் கடத்தாமல் நிலத்தை உழுது பண்படுத்த வேண்டிய நிலை ஒற்றை ஏருடைய விவசாயிக்கு அமைந்திருக்கும். மழையின் ஈரம் உழுமளவு இருப்பதற்குள் உழுதுவிட வேண்டும். ஈரம் காய்ந்துவிட்டால் உழுவதற்கு வழியில்லாமல் போய்விடும். பின்னர் மறுமழை வரும்வரையில் உழுவதற்குக் காத்திருக்க வேண்டும். முதல் மழையின் ஈரத்திலேயே முதலுழவை (முதல்

சால் என்பார்கள்) உழுதுவிட வேண்டும். உழத் தவறினால் அடுத்த மழையில் மறு உழவை உழ முடியாமல் மீண்டும் முதல் உழவையே உழவேண்டிய நிலை ஏற்படும். மறுமழையில் முதலுழவை உழுது, மறு உழவை உடனே உழமுடியாமல் விதைப்பிற்கு ஏற்ற பருவத்தைப் பறிகொடுக்க வேண்டிவரும். பருவ காலங்களில் மழை வந்தவுடன் ஒற்றை ஏருள்ள உழவன் படும்பாட்டை அனுபவத்தால் பெற்றாலன்றி வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.

ஒற்றை ஏருகொண்டு உழுவதற்குள் மழையின் ஈரம் காய்ந்து; உழமுடியாத நிலை ஏற்பட்டுவிடும்; அந்நிலை விதைப்பதற்குரிய பருவத்தையே போக்கிவிடும். விதைப்புத் தவறிப்போனால் உழவனின் வாழ்வையே தவறிப்போகச் செய்யும். குடும்பத்திற்கான ஒரே ஆதாரமாக இருக்கும் விதைப்புப் பருவத்தைப் பக்குவ மாகப் பயன்படுத்திக் கொள்ள பயனுள்ள முறைகளையும் தமிழக வேளாண்குடிகள் அனுபவத்தால் பெற்றிருக் கிறார்கள். மழை வந்தவுடன் அதைப் பக்குவமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ‘மாத்தேரு’ எனும் முறையைக் கைக்கொண்டிருக்கிறார்கள் தமிழக உழவர்கள். ‘மாற்று ஏரு’ என்பது ‘மாத்தேரு’ என மருவி வழங்குகின்றது.

ஒரு ஏரு உள்ள உழவர் தம் நிலத்தை உழுவதற்குப் பலநாள் ஆகும் என்பதால், இன்னோர் ஒரு ஏரு உள்ள உழவரை அழைத்து இரு ஏரு கொண்டு உழவை உழவு செய்வது. உழ வருபவருக்கு ஊதியம் தரும் வழக்கம் இங்கு இருக்காது. மீண்டும் அந்த ஒற்றை ஏரு உள்ள உழவருக்குச் சென்று உழுது தரவேண்டும். மாத்தேரு கேட்டவரின் நிலத்தை உழுது முடித்தவுடன் மாத்தேரு வந்தவரின் நிலம் அடுத்து உழப்படும். இரு ஏரு கொண்டு உழுவதால் ஈரம் காய்வதற்குள் வேகமாக உழுது விடமுடியும்; பருவத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். சில நேரங்களில் இரு மாத்தேருகளைக் கொண்டும் உழுகின்ற வழக்கமும் உண்டு. இந்த வழக்கம் இன்னும் விரைவாக உழுவதற்கான சூழலை ஏற்படுத்தும். விதைப்புக் காலத்தில் இந்த வழக்கம் வெகுவாகக் கைக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழக வேளாண் குடிகளுக்குள் கொண்டும் கொடுத்தும் நடைபெற்ற உழவுமுறைகளை ‘மாத்தேரு’ எனும் வழக்கம் வெளிப்படுத்துகின்றது.

உழவுத் தொழிலில் காணப்படும் ‘மாத்தேரு’ வழக்கத்தைப் போன்று ‘மாத்தாளு’ எனும் வழக்கமும் உண்டு. இதுவும் கொண்டும் கொடுத்தும் நடைபெறும் வழக்கமாகும். ஒற்றை ஏருள்ள உழவர் படும்பாடு குறித்துச் சங்கப் பாட்டொன்றில் வரும் குறிப்பு உழவனின் நிலைகுறித்த பின்னோக்கிய சிந்தனைக்கு இட்டுச்செல்கிறது. ‘ஓரேருழவனார்’ எனும் புலவர் தலைமகன் கூற்றாகப் பாடிய ஒரு குறுந்தொகைப் பாட்டில் உழவனின் நிலை உவமையாக ஆளப்பட்டுள்ளது. அந்தப் பாட்டு

ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோட்

பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே

நெடுஞ்சேண் ஆர் இடையதுவே; நெஞ்சே,

ஈரம்பட்ட செவ்விப் பைம் புனத்து

ஓர்ஏர் உழவன் போலப்

பெருவிதுப்பு உற்றன்றால் நோகோ யானே (131)

என வருகின்றது. காதலனைப் பிரிந்துவந்த காதலன், தான் மேற்கொண்ட பயணம் முடிவுற்ற பின்னர் காதலியிடம் சென்றுசேர எண்ணி, “காதலியின் ஊர் நெடுந்தூரத்தில் உள்ளது; அவளிடம் செல்வதற்கு என் நெஞ்சம் மிக விரைகின்றது” என்ற கூற்றுவகையில் இந்தப் பாட்டு பாடப்பட்டுள்ளது. இதை ‘வினைமுற்றிய தலைமகன் பருவ வரவின்கண் சொல்லியது’ எனும் துறை வகையில் அடக்கிக் கூறுவது பழைய வழக்காகும். இந்தப் பாட்டின் பொருள்,

‘அசையும் மூங்கிலைப் போன்ற அழகினையும், பருத்த தோளினையும், பெரிதாய் ஒன்றுடன் ஒன்று பொருவது போன்ற அமர்த்த கண்களையும் உடையவள் என் காதலி. அவள் இருக்கும் ஊர்தான் அடைவதற்கு அரிய நீண்ட தூரத்திலுள்ளது (அவளைக் காண, வினை முடித்துப் புறப்பட்ட நான், நெடுந்தூரம் சென்றாக வேண்டும்). என் நெஞ்சு, மழை பெய்து ஈரம் பட்ட, உழுது விதைத்தற்கு ஏற்ற செவ்வியையுடைய பசுமை யான நிலத்தில் உழுவதற்குச் செல்லும் ஒற்றை ஏருடைய ஓர் உழவன்போல், விருப்பமிகுதியால், விரைவுடன் துடிக்கின்றது. அதனால் நானும் வருந்துகின்றேன்’ என்பதாகும்.

‘ஓரேருழவன், ஈரம் காய்வதற்கு முன்பாக உழுவதற்கு விரைந்து செல்வதைப் போல என் மனமும் பருவம் மாறுவதற்கு முன்பாகக் காதலியைச் சென்றடைவதற்கு விரைகின்றது’ என்று காதலன் பேசுவதாக வருகின்றது. பல ஏருடைய உழவன் விரைவாக உழுதுவிடமுடியும்; ஓரேருழவனோ, ஒரு ஏரைக் கொண்டே ஈரம் காய்வதற்குள் உழவேண்டும் என்பதால் விரைந்துசெல்ல வேண்டும். அதனால் காதலியைக் காணச் செல்லும் தலைமகனுக்கு ‘ஓர் ஏர் உழவன்’ நிலை உவமை கூறப்பட்டுள்ளது. ‘பருவம் வந்தவுடன் பயன்கொள்ளும் நிலை உழவனுக்கும், காதல் கொண்ட ஆண்மகனுக்கும் ஒத்த இயல்பாகும்’ என்பதைச் சங்கப் பாடல்கொண்டு அறிய முடிகின்றது.