படித்துப் பாருங்களேன்...

வி.ரவிவைத்தீஸ் (2015) தென்இந்தியாவில் சமயம் சாதி இனம்: மறைமலை அடிகளும் நவீன சைவ மற்றும் தமிழ்த் தேசிய இயக்கங்களும் 1876-1950

V. Ravi Vaithees, Religion, Caste and Nation in South India, Maraimalai Adigal, the Neo-Saivite Movement and Tamil Nationalism, 1876-1950 (2015), OUP.

maraimalai adikal bookதமிழ் இலக்கிய வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டில் முதல் நான்கு சகாப்தங்கள் முக்கியமானவை. சமயம், இலக்கணம் என்ற வகைமைகளுடன் நின்றுவிடாமல், சமூக சீர்திருத்தம், அரசியல், அறிவியல், இதழியல் என்ற துறைகளில் தமிழ் மொழி அழுத்தமாகத் தடம் பதித்தது இக்காலத்தில்தான். மேற்கூறிய அறிவுத்துறைகளில் இதற்கு முன்பே சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன என்றாலும்; இக்காலம்தான வளர்ச்சிக் காலமாக அமைந்தது.

இக்கால கட்டத்தில் தமிழ் சார்ந்து உருவான ஒரு முக்கிய இயக்கம் தனித்தமிழ் இயக்கமாகும். வடமொழியின் துணையின்றி தனித்து இயங்கும், ஆற்றல் தமிழுக்கு உண்டு என்பதை நிறுவும் நோக்கில் இவ்வியக்கம் தொடங்கியது. இதன் வெளிப்பாடாக, தமிழ் மொழியில் இடம் பெற்றிருந்த பிறமொழிச் சொற்களைக் களைந்து விட்டு, தமிழ்ச் சொற்களைப் புழக்கத்திற்குக் கொண்டுவரும் போக்கு உருவானது.

இம்முயற்சியில் முன்நின்றவர்களுள் மறைமலை யடிகள் (1876-1950) தலையாய இடத்தைப் பெற்றுள்ளார். ‘தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை’ என்றும் இவரைக் குறிப்பிடுவர். வேதாச்சலம் என்ற தன் பெயரையே தனித்தமிழ் ஆர்வத்தினால் மறைமலை (மறை-வேதம், மலை - சலம்) என்று மாற்றிக்கொண்டார். இவருடைய சமயம் சார்ந்த கருத்துக்களையும், தனித்தமிழ்ப் பற்றையும் ஏற்றுக் கொள்ள விரும்பாதோரும் கூட இவரைப் புறக்கணிக்க இயலாது. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் இவரது பங்களிப்பு அழுத்தமாகப் பதிவாகியுள்ளது.

இங்கு அறிமுகம் செய்யும் இந்நூல், வரலாற்றுப் பின்புலத்தில் தமிழ்த் தேசியத்திற்கு அவரது பங்களிப்பை ஆராய்கிறது.

நூலாசிரியர்

நூலாசிரியர் வி. ரவிவைத்தி கனடா நாட்டின் மனிடோபா பல்கலைக்கழகத்தில், தற்காலத் தெற்கு ஆசிய வரலாறு மற்றும் உலக வரலாறு கற்பிக்கிறார். தற்போது இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் கனடாவின் டொரோண்டோ பல்கலைக்கழகத்திலும் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இப்பல்கலைக்கழகத்தில் தான் இவர் நவீனத் தெற்காசிய வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

நூலின் நோக்கம்

20-ஆம் நூற்றாண்டுத் தமிழ்நாட்டு வரலாற்றில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் திராவிட இயக்கமானது புறக்கணிக்க இயலாத இயக்கமாக இடம் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் இவ்வியக்கம் குறித்து மிகுதியான அளவில் ஆய்வுகள் நடந்துள்ளன. நடந்தும் வருகின்றன.

இதுவரை நடந்துள்ள ஆய்வுகளை இடதுசாரி அணுகுமுறையில் உருவானவை; கேம்பிரிட்ஜ் வரலாற்றுப் பள்ளியில் உருவானவை என இரண்டாக இந்நூலாசிரியர் பகுத்துள்ளார். நூலாசிரியரது கருத்துப்படி இவ்விரு வரலாற்றுப் பள்ளி சார்ந்த ஆய்வாளர்களும், திராவிட இயக்கத்தின் தோற்றம் குறித்து ஒருமித்த கருத்துக் கொண்டவர்கள். அவர்கள் முன்வைக்கும் கருத்து:

பணம் படைத்த பிராமணரல்லாத, மத்தியதர வர்க்க அறிவாளிகள், நிலவுடைமையாளர்கள், தரகு முதலாளிகள் ஆகியோரால் திராவிட இயக்கம் உருவானது.

இக்கருத்தை முன்வைக்கும் இவர்கள் சமயம், பண்பாடு என்ற இரண்டின் தாக்கம் குறித்துக் குறைந்த அளவிலேயே கவனம் செலுத்தினார்கள் என்பது ஆசிரியரின் குறைபாடாக உள்ளது. இது தவிர ஆசிரியர் முன் வைக்கும் சில விமர்சனங்கள் வருமாறு:

திராவிட இயக்கம் குறித்த தொடக்க கால ஆய்வுகளில் அதன் சமயச் சார்பின்மை, பகுத்தறிவுவாதம், வெகுசன அடித்தளம் என்பனவே மிகுந்த செல்வாக்குச் செலுத்தின. அதன் சமய பண்பாட்டு வேர்களை, இவை கண்டுகொள்ளவில்லை. ஆங்கிலக் காலனியமும், அய்ரோப்பியக் கீழைத்தேயவாதமும் தமிழர்களின் மொழியியல், சமயப் பண்பாட்டுணர்வில் ஏற்படுத்திய தாக்கம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

பின்னைக் காலனியம், அடித்தள மக்கள் வரலாறு என்ற புதிய கருத்துப்பள்ளிகளின் தாக்கத்திற்கு ஆட்பட்ட ஆய்வுகள், திராவிட இயக்கம் குறித்து நிகழ்ந்துள்ளன. காலனியம் அறிமுகப்படுத்திய கீழைத்தேயவாத எழுத்துக்களின் தாக்கத்திற்கு இவ்வியக்கம் ஆட்பட்டதாக இவ் ஆய்வுகள் குறிப்பிட்டன. இதன் அடுத்தகட்டமாக 1926-இல் பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தைக் குறிப்பிடுகின்றனர். இவ்வியக்கம் தொடக்ககால திராவிட இயக்கத்தின் மேட்டிமைத் தன்மையில் இருந்து விலகி நின்றது. சைவ மேட்டிமையோரிடம் இருந்து திராவிட இயக்கம் விடுபட்ட நிலையாக இந்நிகழ்வு குறிப்பிடப்படுகிறது.

மொழி, மதச்சார்பின்மை என்ற இரண்டையும் முன்நிறுத்தி தேசியம் குறித்த ஆய்வுகள் நடைபெறுகின்றன. இப்போக்கிற்கு மாறாக தமிழ்த் தேசியத்தின் சமயப் பண்பாட்டுத்தளத்தை இந்நூல் ஆராய்கிறது. பிராமணர் அல்லாதாரின் தமிழ்த்தேசியம் திராவிட இயக்கம் என்ற இரு இயக்கங்களும் ‘தமிழ்ச் சமயம்’ என்ற சமய உருவாக்க முயற்சியை வேர்களாகக் கொண்டுள்ளன என்பது ஆசிரியரின் கருதுகோளாக உள்ளது.

சமூக மாறுதலுக்கான போராட்டத்தில் சமயம், தேசியம் என்ற இரண்டின் பங்களிப்பு குறித்த ஆய்வை ஆசிரியர் வலியுறுத்துகிறார். மறைமலையடிகளின் புதிய சைவ இயக்கமானது பிராமணர் அல்லாதாரின் தமிழ்த் தேசிய, திராவிட இயக்கத்திற்கும் முக்கிய பங்காற்றி உள்ளது என்பது ஆசிரியரின் கருத்தாக உள்ளது.

இக்கருத்தை நிலைநிறுத்துவதே இந்நூலின் அடிப்படை நோக்கமாக உள்ளது.

சைவமும் நவீனரும்

கிறித்தவம், இஸ்லாம் போன்று, சைவம் ஒரு நிறுவன சமயம் அல்ல என்றாலும் இது தனக்கென சில வழிபாட்டு முறைகளையும், சாத்திர நூல்களையும் கொண்டு தனித்துவமான அடையாளத்தைக் கொண்டிருந்தது. இந்து சமயம் என்ற பொது அடையாளத்துக்குள் இது செயல்பட்டு வந்தது. சாதியப் படிநிலை, தீண்டாமை, வடமொழிச் சார்பு என்பனவற்றை இது உள்வாங்கி இருந்தது. தமிழ்நாட்டில் வழக்கில் இருந்தாலும் தமிழ்மொழி தமிழர் என்ற அடையாளங்களுடன் இது இணைந்து நோக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் ஒரு சமயப் பரப்பாளர் என்ற நிலையில், ஜி.யூ. போப் என்ற தமிழ் கற்ற அய்ரோப்பிய மறைப்பணியாளர், தமிழர்களின் சமயமாக சைவசமயத்தை அடையாளங் கண்டார்.

மறைமலை அடிகளும் இத்தகைய சிந்தனைப் போக்குக்கு ஆட்பட்டார். தமிழர் சமயம் என்ற ஓர் அடையாளத்தை சைவத்திற்கு வழங்கினார். அத்துடன் நால்வருணக் கோட்பாட்டை சைவ எல்லைக்குள் அவர் அனுமதிக்கவில்லை. சூத்திரர் என்று நான்காம் நிலையில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு சாதியினரை, வேளாளர் என்ற ஒற்றை அடையாளத்துடன் இணைத்தார். தம்மை உயரியோராகக் கருதி வந்த பிரிவினரின் ஆதிக்க உணர்வுக்கு எதிரான செயலாக இது அமைந்தது. தீண்டாமையையும் அவர் எதிர்த்தார். தீண்டாமையினால்தான் மக்கள் கிறித்தவர்களாக மதம் மாறுகிறார்கள் என்பது அவரது கருத்தாகும். தீண்டாமையை ஒழிப்பதன் வாயிலாக, மதம் மாறுதலைத் தடுக்க முடியும் என்பது அவரது நம்பிக்கையாக இருந்தது. புலால் உண்ணாமையை வலியுறுத்தினார்.

தமிழ் அறிஞரின் என்ற முறையில் சைவ சமயத்திற்குள் வடமொழியின் மேலாண்மையை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

சுருங்கக் கூறின், ‘தமிழ்’, ‘தமிழர்’ என்ற அடையாளங்களை சைவத்துடன் அவர் இணைத்தார். சைவமே தமிழர்களின் சமயம் என்பது அவரது கருத்தாக இருந்தது. கடுத்த சைவர்களால் கடிந்தொதுக்கப்பட்ட இராமலிங்க அடிகளாரை அவர் ஏற்றுக் கொண்டார். மறைமலை அடிகளார் என்ற ஆளுமையை உருவாக்கியதில் சோமசுந்தர நாயகர் (1846-1901) என்ற சைவ சித்தாந்த அறிஞருக்கு முக்கிய பங்களிப்பு உண்டு என்பதால் அவரைக் குறித்தும் அறிந்து கொள்ளுதல் அவசியம்.

தமிழ்நாட்டின் சைவம் என்பது தனக்கென ஒரு தத்துவத்தைக் கொண்டிருந்தது. இதுவே ‘சைவசித்தாந்தம்’ என்றழைக்கப்பட்டது. நடைமுறையில் இத்தத்துவத்திற்கு அப்பாற்பட்டு சாதி மேலாண்மை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. சைவமடங்களின் தலைவர்களாகவும், சைவசித்தாந்த அறிஞர்களாகவும் சைவவேளாளர் சாதியினரே விளங்கினர். சைவம் என்ற சமய அடையாளம் சாதியுடன் பிணைக்கப்பட்டிருந்த சமூகச் சூழலில், இதைக் கடந்து நின்ற சைவசித்தாந்த அறிஞரே சோமசுந்தரநாயகர்.

இவரது இயற்பெயர் அரங்கசாமி என்பதாகும்.

1846-இல் வன்னியர் சமூக, வைணவக் குடும்பம் ஒன்றில், சென்னையின் ஒருபகுதியான சூளையில் பிறந்தார். ஆங்கிலத்தையும், தெலுங்கையும் பள்ளியில் பயின்ற இவர், தொடக்கத்தில் அப்பகுதி வேதாந்திகளுடன் சமயச்சாரியர்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார்.

அத்வைத வேதாந்த நெறிக்கு ஆட்பட்டிருந்த இவர் 1870-இன் தொடக்கப்பகுதியில் சைவசித்தாந்தியாக மாறினார். இம்மாறுதலுக்கான காரணத்தை இவரது வாழ்க்கை வரலாறை எழுதிய மறைமலை அடிகள் விளக்கியுள்ளார்.

பிரம்மம் என்பது மட்டுமே உண்மையானது. மற்றையவை அனைத்தும் உண்மையற்றவை என்று கூறும் பிராமண வேதாந்திகள், ஆரியவேதங்கள் உயர்வானவை; தமிழ் வேதங்கள் தாழ்வானவை என்று கூறுகின்றனர். ஆரிய வேதங்கள் கடவுளிடம் இருந்து தோன்றியவை என்றும், தமிழ் வேதங்கள் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு தாழ்ந்தவர்களான சூத்திரர்களால் ஓதப்படுபவை. கிருஷ்ணன், இராமன் என்ற கடவுளர்கள் பிராமண தெய்வங்களாகவும் சிவன் சூத்திர தெய்வமாகவும்; பிராமணர்களால் சுட்டப்பட்டனர்.

இச்சிந்தனையை ஏற்றுக் கொள்ள விரும்பாத தால்தான் நாயகர் சைவசித்தாந்தியாக மாறினார் என்பது மறைமலை அடிகளாரின் கருத்தாகும். இறுக்கமான சாதியப்பிடிக்குள் இருந்த சைவசமயத்தை அதில் இருந்து விடுவித்து பிராமணர் அல்லாதாரின் சமயமாகக் காண்பதே நாயகரின் பார்வையாக அமைந்தது. இவரை ஒத்த சிந்தனையுடையவர்கள், இதை ஏற்க மறுப்பவர்கள் என தமிழ்ச் சைவம் இரு கூறானது. இவ்விரு பிரிவினருள் சோமசுந்தர நாயகர், மறைமலையடிகளாரின் பிரிவு நவீனர் என்றழைக்கப்படலாயிற்று. நவீனர் என்போர் குறித்துப் பின்வரும் வகையில் சுருக்கமான வரையறையை வகுத்துக் கொள்ளலாம்.

1.            சாதியப் பாகுபாட்டையும், தீண்டாமையையும் புறந்தள்ளி, சைவர் என்ற பொது அடையாளத்துக்குள் சைவசமயத்தினரை உட்படுத்தல்.

2.            வடமொழி, வடமொழி வேதங்களை ஏற்காமை

3.            பிராமணிய மேலாண்மையை மறுத்தல்.

4.            தமிழ்மொழியை முதன்மைப்படுத்தல்.

இச்சிந்தனைப் போக்குடைய நவீனர்களின் சிறப்பான அடையாளமாக விளங்கியவர் மறைமலை அடிகள். இதற்கான தகுதிகளாகப் பின்வருவன அவரிடம் அமைந்தன.

                சைவம் உள்வாங்கியிருந்த சைவ வேளாளர் மேலாண்மையில் இருந்து பிறப்பிலேயே விடுபட்டவர். அவரது தந்தை சொக்கநாதபிள்ளை சைவவேளாளர் மரபினர் அல்லர். சோழியர் வெள்ளாளர் சாதியைச் சேர்ந்தவர். தாய் சின்னம்மாள், சேனைத் தலைவர் செட்டியார் சாதியைச் சேர்ந்தவர்.

 ஆன்மீக வழிகாட்டியான சோமசுந்தரநாயகர் வன்னியர் சமூகத்தினர். இவை இரண்டும் வேளார் அடையாளத்தில் இருந்து அவரை விலகி நிற்கச் செய்தன.

 நவீனச் சிந்தனைகளை உள்வாங்க உதவும் வகையில் ஆங்கில மொழிப்புலமை உடையவராய் இருந்தார்.

                வடமொழி ஊடுறுவதைப் புரிந்து கொள்ள உதவும் வகையில் வடமொழிப் புலமையும் பெற்றிருந்தார்.

                தமிழரின் பாரம்பரியத்தை உணர்ந்து கொள்ளத் தேவையான செம்மொழித் தமிழ் அறிவு இருந்தது. தமிழ் ஆசிரியராக சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் பணியாற்றியவர் என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.

இவைதவிர, தொடர்ச்சியான நூல்வாசிப்பும், திராவிட மற்றும் சைவசித்தாந்த அறிவும் கொண்ட மனோன்மணீயம், பெ.சுந்தரம்பிள்ளை யின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.

சமய தேசியம்

திராவிட இயக்கத்தின் தொடக்க கட்டத்தில், மறைமலையடிகள் தம் பங்கை ஆற்ற இத்தகுதிகள் துணை நின்றன. இந்திய தேசியம் என்ற பரந்து பட்ட தேசியம் ஆங்கில ஆட்சியினால் உருவான ஒன்று. பல்வேறு மொழிகளையும், பண்பாடுகளையும் கொண்ட இந்திய நிலப்பரப்பில் தனித்தனி தேசிய அடையாளங்கள் உண்டு. இவ்வுண்மை உணரப்படாத சூழலில் இதை முன் எடுத்துச் சென்றோர் சமய எல்லைக்குள் இந்திய தேசியத்தைக் குறுக்கினர்.

தமிழ்நாட்டில் தமிழர் என்ற பொது அடையாளம், ‘தமிழர் சமயம்’ என்ற சமய அடையாளமாக்கப்பட்டு, தமிழர் சமயம் என்பது சைவம் என்று அடையாளங் காட்டப்பட்டது. இதன் அடிப்படையில் தொடக்ககால தமிழ்த் தேசியத்தை சமய தேசியம் என்றழைப்பதில் தவறில்லை. இதை உருவாக்குவதில் ‘நவீனர்’ என்ற அடைமொழியால் அழைக்கப்பட்ட சைவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்தது.

இச்சைவர்களில் மறைமலை அடிகள் தலைமைப் பாத்திரம் ஏற்றிருந்தார். இவருக்கு முன்னர் மனோன் மணீயம் சுந்தரம் பிள்ளை இதற்கு வித்திட்டி ருந்தார் என்றாலும் இதைப் பரவலாக்கிய பெருமை அடிகளாருக்கே உரியது. இம்முயற்சியில் அவர் சில கருத்துக்களை வலியுறுத்தினார். அவற்றை இவ்வாறு வரிசைப்படுத்தலாம்.

                சூத்திரர் என்ற வகைப்பாட்டிற்குள் இடம் பெறும் சாதிக்குள் ஒன்று வேளாளர்கள். இச்சாதிப்பிரிவுக்குள் சைவ வேளாளர் மட்டுமே இடம் பெறுவதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. வேளாளர் என்ற சாதிப்பிரிவை விரிவுபடுத்தி பல்வேறு சாதியினை இப்பிரிவுக்குள் கொண்டு வந்தார். புலால் உண்ணாமை என்பதை இவர்களின் பொது அடையாளமாக்கினார். புலால் உண்டுவந்தோர் அதைக் கைவிட்டால் போதும் என்பது இவரது கருத்தாக இருந்தது.

                மனு தோற்றுவித்த சூத்திரர்கள் என்ற வகைமைக்குள் வரும் வேளாளர்களை, உயர்வான சூத்திரர்கள் என்ற பொருளில் ‘சத்சூத்திரர்’ என்று அடையாளப்படுத்திக் கொண்ட ஆறுமுக நாவலரின் மேட்டிமை உணர்வில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டது பரந்துபட்டது.

                தமிழர் நாகரிகம் ஆரிய நாகரிகத்தை விடத் தொன்மையானது, உயர்வானது என்ற கருத்தை தம் நூல்கள், சொற் பொழிவுகள் வாயிலாக வெளிப்படுத்தி வந்தார்.

                தீண்டாமைக் கருத்தியலே மதமாற்ற நிகழ்வுகளுக்குக் காரணமாய் இருந்துள்ளது என்று கூறியதுடன், உண்மைச் சைவமானது சாதிவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்ற கருத்தை முன்மொழிந்தார்.

                தமிழர்களை, சைவம் என்ற மத அடையாளத்துக்குள் இணைக்கும் முகத்தான் தமிழர் மதம் சைவம் என்ற கருத்தை வலியுறுத்தியதுடன், அடித்தள மக்களின் நாட்டார் தெய்வ வழிபாட்டையும், உயிர்ப்பலியிட்டு வணங்குதலையும் கண்டித்தார். சைவம் என்ற ஒற்றை அடையாளத்தை வழங்கும் முயற்சியின் வெளிப்பாடே இச் செயல்.

இவ்வாறு சைவ சமயத்தை தமிழர்களின் தேசிய அடையாளமாக்க முயன்றதுடன் தமிழ் மொழியை அரசியல் அடையாளமாக்கும் பணியிலும் துணை நின்றார்.

அடிகளின் அரசியல்

‘நவீனர்’ என்றழைக்கப்பட்ட சைவசித்தாந்தவாதி யாகவும், தமிழ் அறிஞராகவும் விளங்கிய அடிகளார் அவர் கால அரசியலிலும் ஆர்வம் காட்டியுள்ளார். அவர் காலத்திய இந்திய அரசியல் காந்தியின் செல்வாக்கிற்கு ஆட்பட்டிருந்தது. தமிழகத்தில் அதன் தாக்கம் வலுவாக இருந்தது. மற்றொரு பக்கம் நீதிக்கட்சியின் தாக்கமும் வலுவாக இருந்தது.

அடிகளாரின் காலத்திய தேசிய இயக்கத்தின் தலைவர்கள் சிலருடன் அவருக்கு நட்புறவு இருந்துள்ளதை அவரது நாட்குறிப்புப் பதிவுகள் வாயிலாக அறியமுடிகிறது. திரு.வி.க., வ.உ.சி. ஜீவானந்தம் ஆகியோர் இவரைச் சந்தித்து உரையாடி யுள்ளனர். காங்கிரஸ் இயக்கத்திற்கு எதிரான நீதிக் கட்சியுடனும் அவருக்கு உறவிருந்தது. சுயமரியாதை இயக்கத்துடனும் அவர் தொடர்பு கொண்டிருந்தார்.

இத்தொடர்புகள் இருந்ததால் சைவ சமயப்பற்று தமிழ் மொழி உணர்வு பிராமணிய வடமொழி எதிர்ப்பு என்பன அவரிடம் அழுத்தமாக இடம் பெற்றிருந்தன. அவரது அரசியல் இவற்றை மையமாகக் கொண்டே வெளிப்பட்டது.

1937-ஆம் ஆண்டில் சென்னை மாநிலத்தில் நிகழ்ந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதன் பிரதம அமைச்சராக இராஜாஜி பொறுப்பேற்றார். தமது அரசின் கல்விக் கொள்கையாக, இந்தியைக் கட்டாயப் பாடமாக அறிவித்தார். சுயமரியாதை இயக்கம் இதை எதிர்த்துப் போராடியது. இந்தி எதிர்ப்புச் சொற்பொழிவுகளில் அடிகளார் ஈடுபட்டதுடன் ‘இந்தி பொதுமொழியா’ என்ற குறுநூலையும் ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளியிட்டார்.

அவரது அரசியல், மொழி சார்ந்தும் பிராமணர் அல்லாதாரையும் சார்ந்தும் வெளிப்பட்டதற்குச் சான்றாக அவர் எழுதிய ‘தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும்’ என்ற கட்டுரை அமைகிறது. இக்கட்டுரை 1931-ஆம் ஆண்டில் அவர் வெளியிட்ட ‘அறிவுரைக் கொத்து’ என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. இக்கட்டுரையில் இருந்து மேற்கோள்களாகச் சில பகுதிகளை நூலின் முடிவுரையில் இந்நூலாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார். அப்பகுதிகள் பின்வருமாறு:

தமிழ் மக்களுக்குச் சிறிதும் புலனாகாத வடமொழிச் சொற்களை மந்திரங்களென உயர்த்திச் சொல்லி, அவற்றைக் கொண்டே கோயில் வழிபாடு முழுதுஞ் செய்கின்றார்கள். ஈதென்ன கொடுமை பாருங்கள்! தமிழ்மொழி வழங்கும் தென்னாட்டில், தமிழ் அரசர்களாலுந் தமிழர்களாலும் அமைக்கப்பட்டுச், சைவ சமயாசிரியர்களால் தமிழ்மொழியிலேயே சிறப்பித்துப் பாடப் பெற்ற திருக்கோயில்களிலேயே, தமிழ் மந்திரங்களை வழங்காமற் செய்து, இத்தமிழ் நாட்டுக்கும் இங்கு வணங்கப்படுஞ் சிவபிரானுக்கும் அவனை வணங்குத் தமிழ் மக்களுக்கும் ஏதொரு தொடர்பும் இல்லாத, அவர்களுக்குச் சிறிதுந் தெரியாத வடமொழிச் சொற்களைக் கொணர்ந்து அவற்றைக் கொண்டே அத்திருக்கோயில்களில் எல்லா வழிபாடும் நடக்கும்படி செய்துவிட்ட பார்ப்பனர்தம் சூழ்ச்சியையும் அஞ்சாநெஞ்சையும் ஆண்மையையும் எண்ணிப்பாருங்கள்!

***

தேவார திருவாசகச் செந்தமிழ் மாமறைகளைச் ‘சூத்திரப் பாட்டு’ என்று இழித்துப் பேசும்

பார்ப்பனர்கள், எந்தக் காலத்திலாயினும் இந் நாட்டுக்குக் குடியரசு வருவதாயிருந்தால், அதன் கண்ணுந் தமக்கு ஆட்சியையும், ஆக்கத்தையும் நிலைப்படுத்தி, ஏனை மக்களையெல்லாம் அறிவில்லாத குருடர்களாக்கித் தமக்கு அடிமைப் படுத்தி வைத்திருப்பரேயல்லாமல், அவர்கட்கு ஏதொரு சிறிய உரிமையேனுங் கொடுப்பர் அல்லது கொடுக்க விரும்புவர் என்று கனவிலும் நினைக்கின்றீர்களா? நினையாதீர்கள்?

***

நமக்கு உயிரினுஞ் சிறந்த திருக்கோயில் முதல் அரசியல் நிலைகள் கல்விக் கழகங்கள் கைத்தொழிற் சாலைகள், புகைவண்டி நிலையங்கள் உணவு விடுதிகள் மணக்களங்கள், பிணக்களங்கள் ஈறான எல்லா இடங்களிலும் ஆரியப் பார்ப்பனர்களே ஆட்சியுந் தலைமையும் உடையவர்களாயிருந்து, ஏனை வகுப்பினரின் முன்னேற்றத்திற்குப் பெருந்தடை விளைவிப்பவர்களாய் இருக்கின் றார்கள். ஏனை வகுப்பினர் எல்லாரும் ஒன்று சேர்ந்துவிடாதபடி அவர்கட்குள் பல்வேறு சமயப்பிரிவு சாதிப்பிரிவுகளையுண்டாக்கி, அவ்வொவ்வொரு பிரிவினருந் தத்தஞ் சமயமே தத்தஞ் சாதியே யுயர்ந்ததென்று சொல்லி ஒருவரையருவர் பகைத்துப் போராட வைத்து, அப்போராட்டத்திற்கு இடமாக இராமன் கதை, கண்ணன் கதை, கந்தன் கதை, விநாயகன் கதை, காளி கதை முதலிய பல்வேறு கட்டுக் கதைகளைத் தமது வடமொழியில் உண்டாக்கி வைத்து, அவற்றை இராமாயணம் பாரதம், பாகவதம் காந்தம் முதலிய புராணங்களாக உயர்ந்து வழங்கி, அவை தம்மை மற்றையெல்லா வகுப்பினருங் குருட்டு நம்பிக்கையால் விடாப்பிடியாய்ப் பிடித்துக் கொள்ளும்படி செய்துவிட்டார்கள்.

***

ஆதலால், இந்நாட்டுக்கு நலந்தேடுபவராக வெளிவந்த தலைவர்கள் உண்மையாகவே தாம் நலஞ் செய்பவர்களாயிருந்தால், இப்போதுள்ள மிக இரங்கத் தக்க நிலையில் நம் குடிமக்களை, நம் ஆங்கில அரசுக்கு மாறாகக் கிளப்பிவிட்டு, அவர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் பாழ்படுத்துஞ் செயலை விடுத்து.

இந்நீண்ட மேற்கோள் அடிகளாரின் ஆங்கில ஆட்சிச் சார்பை வெளிப்படுத்துவதாகத் தோன்றினாலும் அவரது சமூகப் பார்வையை வெளிப்படுத்தி நிற்கிறது. இவ்வகையில் பிற சைவர்களிடம் இருந்து அவர் வேறுபட்டுக் காட்சியளிக்கிறார். அவரது இச்சிந்தனைகளைக் கடசி அரசியலாக இன்றிப் பார்த்தால் இது புலனாகும்.

சுயமரியாதை இயக்கம்

1926-ஆம் ஆண்டில் பெரியாரால் தோற்றுவிக்கப் பட்ட சுயமரியாதை இயக்கம் பகுத்தறிவுவாதத்தை முன் வைத்துச் செயல்படலாயிற்று. வேதாந்தம், வைணவம் என்பனவற்றிற்கு எதிரான கருத்துக்களை இவ்வியக்கம் முன்வைத்தது. ‘நவீனர்கள்’ என்றழைக்கப்பட்ட சைவசமயக் குழுவினர், சுயமரியாதை இயக்கத்துடன் நட்புணர்வு கொண்டவர்களாகத் தொடக்கத்தில் விளங்கினர். இராமாயணம் பாரதம் ஆகிய வடமொழிக் காப்பியங்களையும், வடமொழி வேதம் சார்ந்த சடங்குகளையும் சுயமரியாதை இயக்கம் எதிர்ப்பதும் தம் இயக்கத்தின் குடிஅரசு இதழில் இது தொடர்பான கட்டுரைகளை வெளியிடுவதும் நவீனர்களுக்கு உவப்பாய் இருந்தது.

இதன் அடுத்தகட்டமாக, சைவர்களின் புராணங் களைக் குறித்த எதிர்மறையான கருத்துக்கள் இடம் பெற்ற கட்டுரைகள் ‘குடிஅரசு’ இதழில் 1927-ஆம் ஆண்டு தொடங்கி வெளிவரத் தொடங்கின. இது நவீனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன் பின்னர் சுயமரியாதை இயக்கத்தையும் அதன் தலைவரான பெரியாரையும் பகைஉணர்ச்சியுடன் பார்க்கத் தொடங்கினர். இது எந்த அளவுக்கு இருந்ததென்றால் ‘சுத்த சைவ இரத்த ஓட்டம் உள்ளவர்கள் இன்னமும் இவர்களைக் கொல்லாமல் இருக்கலாமா?’ என்று தம் உரையில் மறைமலை அடிகள் குறிப்பிடும் அளவுக்குச் சென்றது (குடிஅரசு, 29.7.1928). பின்னர் இக்கூற்றை மறுத்து பெரியாருக்கு எழுதிய கடிதத்தில் “தமிழ் மக்கள் முன்னேற்றத்தின் பொருட்டுத் தாங்கள் செய்துவரும் நன்முயற்சிகள் இனிது நடைபெறுக” என்று மறைமலை அடிகள் வாழ்த்தி உள்ளார். (குடிஅரசு, 27.8.1928)

சைவசமயம் குறித்த குடிஅரசு இதழின் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு சைவம் சார்ந்த அறிஞர்கள் ஆளாயினர். இது தொடர்பான கலந்துரையாடலை 1928 மே 27 ஆம் நாள் அன்று மறைமலை அடிகளாரின் இல்லத்தில் திரு.வி.க. நிகழ்த்தியுள்ளார். தம் நாட்குறிப்பில் இச்சந்திப்பை, பதிவு செய்துள்ள அடிகளார் காலை 11 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை இச்சந்திப்பு தொடர்ந்ததாக எழுதி உள்ளார். சைவசமயம், சைவ சமயப் புனிதர்களுக்கு எதிராக இராமசாமி நாயக்கரும் அவரது இயக்கத்தினரும் மேற்கொண்டுள்ள குறும்புகளைக் குறித்து உரையாடியதாகக் குறிப்பிட்டுள்ள அடிகளார், தென் இந்தியாவின் முக்கிய பகுதிகளில் இவ்வியக்கத்தினரை எதிர்த்து தொடர் சொற்பொழிவு ஆற்ற தாம் விரும்புவதாகவும் அதற்கு ஏற்பாடு செய்யும்படிக் கேட்டுக் கொண்டதாகவும், அவ்வாறு ஏற்பாடு செய்வதாகக் கூறிவிட்டு அவர் மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றதாகவும் எழுதியுள்ளார்.

16 ஜுன் 1928-இல் திரு.வி.க. அவரது சகோதரர் ஆகியோருடன், ‘தமிழ்நாடு’ பத்திரிகை ஆசிரியர் சொக்கலிங்கம் பிள்ளையும் உடன் வந்து தம்மைச் சந்தித்ததாக தம் நாட்குறிப்பில் அடிகள் பதிவு செய்துள்ளார். இராமசாமி நாயக்கரின், நாத்தீக அழிவுப்பூர்வமான இயக்கத்திற்கு எதிராக, திட்டமிட்ட தாக்குதல் தொடங்குவது குறித்து அடிகளாருடன் அவர்கள் ஆலோசித்துள்ளனர்.

இந்நிகழ்வுகளின் விளைவாக ‘சைவ சமயமும் சுயமரியாதை இயக்கமும்’, ‘சைவ சமயத்தின் நெருக்கடியான நிலை’ என்ற கட்டுரைகளை அடிகளார் எழுதினார்.

சென்னையில் செயல்பட்டுவந்த பாலசுப்பிரமணிய பக்த சபையின் ஆண்டுக்கூட்டத்தில் (1928 ஜுலை) நிகழ்த்திய தலைமை உரையில் சுயமரியாதை இயக்கத்தை விமர்சித்து அடிகளார் உரையாற்றினார். இவ் உரை குறித்து சுயமரியாதை இயக்கத்தினரான தண்டபாணி பிள்ளை என்பவர் சில வினாக்களை எழுப்பினார். இதன் தொடர்ச்சியாக இருதரப்பினருக்கும் இடையே வாத பிரதிவாதங்கள் பத்திரிகைகளில் நிகழ்ந்தன. இந்நிகழ்வுகள் அடிகளாரை மிகவும் பாதித்தன. 1928 ஜுலை 31ஆம் நாள் எழுதிய நாட்குறிப்பில் அடிகளார் இவ்வாறு எழுதியுள்ளார்.

கடந்த நான்கு நாட்களாக இரவும் பகலும் நன்றாக உறங்க இயலவில்லை. அத்துடன் என் கனவில் கூட நாத்தீக சுயமரியாதை இயக்கம் என் சிந்தனையில் இடம் பெறுகிறது. இதன் சித்தாந்தங்களையும், எப்படி மறுப்பது, இதன் பரவுதலை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பது குறித்து நான் எப்போதும் சிந்தித்துக் கொண்டுள்ளேன்.

பெரியாருக்கும் அடிகளாருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு அதிகரித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே சந்து செய்விப்பராக திரு.வி.க. செயல்பட்டார் (இது வேடிக்கையான ஒன்று).

திரு.வி.க. பாலசுப்பிரமணிய முதலியார் கி.ஆ.பெ. விஸ்வநாதம் ஆகியோர் அடிகளாரைச் சந்தித்து நட்புறவு அடிப்படையிலான கடிதம் ஒன்றை ஈ.வெ.ராவுக்கு எழுதும்படி வேண்டினார். அடிகளாரும் அதற்கு உடன்பட்டு கடிதம் ஒன்று எழுதி கி.ஆ.பெ. விசுவநாதத்திடம் கொடுத்தார். இதன் பின்னர் ஈ.வெ.ராவின். ‘ரிவோல்ட்’ என்ற ஆங்கில வார இதழுக்கு ‘The Story of Ramayana’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதி அனுப்பினார்.

இருந்தபோதிலும் சுயமரியாதை இயக்கமானது எரிச்சலூட்டும் இயக்கமாகவே அடிகளாருக்கு இருந்துள்ளது என்பதை 1929 பிப்ரவரி 14ஆம் நாள் அவர் எழுதிய நாட்குறிப்புச் செய்தி வெளிப்படுத்துகிறது:

கடவுள் மறுப்பு இயக்கம் எல்லாப் பகுதிகளிலும் பரவிவருகிறது. வேதங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள், சமஸ்கிருத இதிகாசங்கள் அதன் தமிழ்வடிவங்கள் மீதான கருணையற்ற விமர்ச னங்களை நான் வரவேற்கிறேன். இருந்தாலும் அருளாளர்களான மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் ஆகியோர் மீதும் இவர்களை ஒத்தவர்கள் மீதும் நிகழ்த்தும் குறும்புத்தனமான முறையற்ற தாக்குதலை நான் விரும்பவில்லை என்பதோடு அதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். இவர்களுக்கு நல்லறிவையும், கருணையையும், அச்சத்தையும் இறைவன் அருள்வாராக.

கி.ஆ.பெ. விசுவநாதம் வழங்கிய கடிதம் பெரியாரால் குடிஅரசு இதழில் வெளியானது. ஆயினும் பெரியார் தம் கொள்கையில் உறுதியாக நின்றுள்ளார் என்பதை 1928 செப்டம்பர் 2-ஆம் நாள் அவர் எழுதிய குறிப்பு உணர்த்துகிறது. அதன் ஒரு பகுதி வருமாறு:

முடிவாக திரு. வேதாசலம் அவர்களுக்கும் அவரது குழாத்தினர்களுக்கும் ஒன்று சொல்லுகிறோம். அதாவது நாமும் நமது இயக்கமும், புராணங்களுக்கும் அப்புராணங்களில் காணப்படும் சமயங்களுக்கும், அச்சமயத்தில் காணப்படும் ஆச்சாரியார்களுக்கும், அச்சமய ஆச்சாரியர்களால் காணப்படும் சாமிகளுக்கும், அச்சாமிகளின் பெண்டு பிள்ளைகளுக்கும் வெளிப் படையான விரோதிகள்தான். இதில் ஒன்றும் ஒளிமறைவு இல்லை என்பதோடு ‘இதற்கு அப்படி அருத்தம்’, ‘அதற்கு இப்படி அருத்தம்’ என்கின்ற பண்டிதப் புரட்டுகள் ஒன்றும் இனி கூடாது என்றும் கண்டிப்பாய்ச் சொல்லுகின்றோம்.

இதைப் பற்றி எச்சமயவாதியாயினும் எப்பண்டி தராயினும் செய்யும் அறப்போருக்கும், அறிவுப் போருக்கும் தலைகொடுக்க மகிழ்ச்சியுடன் தயாராய் இருக்கிறோம்.

மற்றொரு பக்கம் அடிகளாரும் தம் நிலையை விட்டுக்கொடுக்கவில்லை. சுயமரியாதை இயக்கத்திற்கு எதிராக ‘சைவப்பெரியார் தனிக்கூட்டம்’ என்ற பெயரில் திருநெல்வேலியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

***

அடிகளார் எழுதிய அறிவுரைக் கொத்து என்ற கட்டுரைத் தொகுப்பு நூல் 1935-ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக இடம் பெற்றது. இதில் இடம் பெற்றிருந்த ‘தமிழ் நாட்டவரும், மேல்நாட்டவரும்’ என்ற கட்டுரைக்கு எதிராக பிராமண அறிவாளிகளும், தேசியவாதிகளும் எதிர்க்குரல் எழுப்பினர். ‘தினமணி’, ‘சுதேசமித்ரன்’, ‘இந்து’ ஆகிய நாளேடுகள் பாடத்திட்டத்தில் இருந்து இதை நீக்குமாறு எழுதின. அடிகளாரின் நூலை ஆதரித்து, பெரியாரின் ‘விடுதலை’ ஒரு தலையங்கம் எழுதியது.

இவ்வாறு “ஒன்றுபடுதலும் போராடுதலும்” என்ற நிலையில் சுயமரியாதை இயக்கத்துடனான அடிகளாரின் உறவு விளங்கியது. இதே நிலைப் பாட்டையே தொடக்ககால திராவிட இயக்கம் புதிய சைவர்கள் மீது எடுத்தது. இது ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற தொடரை நினைவூட்டுகிறது.

நூல் வெளிப்படுத்தும் செய்தி

·             கால்டுவெல், ஜி.யூ.போப் ஆகிய கிறித்தவ மறைப்பணியாளர்களும் காலனிய சொல்லாராய்ச்சி மற்றும் இனவரைவியலாளர்களும் உருவாக்கிய படைப்புக்களையடுத்து மறைமலைஅடிகளாரின் நவீன சைவம் பிராமணர் அல்லாத தமிழ்த் தேசியம் உருவாகத் துணை நின்றுள்ளது.

·             யாழ்ப்பாண சைவ இயக்கமானது கிறித்தவ மறை பரப்பாளர்களுக்கு எதிராக இயங்க, நவீன சைவம் புதிய வேதாந்த, வைணவ சமயப்போக்குகளுக்கு எதிராகச் செயல்பட்டது.

·             ஆரிய எதிர்ப்பு, வடமொழி எதிர்ப்பு வேதாந்த எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு, என்பனவற்றை நவீன சைவம் முன் வைத்தது.

·             இக்கருத்துக்களின் அடிப்படையில் சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டது.

·             சைவ அடியார்கள், புராணங்களுக்கு எதிரான கருத்துக்களை சுயமரியாதை இயக்கம் முன் வைத்தபோது அதனுடன் முரண்பட்டது.

·             அய்ரோப்பியர் அறிமுகம் செய்த நவீனத்துவத்தை ஏற்றுக் கொண்டது.

இச்செய்திகளின் அடிப்படையில் நவீன சைவர் கள் தொடக்ககால திராவிட இயக்கத்துடன் கொண் டிருந்த உறவைப் புரிந்துகொள்ளலாம். ஆயினும் தொடக்ககாலத் தமிழ்த் தேசியத்தில் இதன் பங்க ளிப்பை ஆசிரியர் மிகைப்படுத்திப் பார்க்கிறாரோ என்ற அய்யம் தோன்றுகிறது.

இன்றைய லத்தீன் அமெரிக்க கத்தோலிக்கர்களின் அரசியல் பங்களிப்பைப் போல் இதைக் கருத இடமில்லை. இலத்தீன் அமெரிக்கக் கத்தோலிக்கர்களில் பெரும்பாலோர் அடித்தள மக்கள் பிரிவினர். மறைமலை அடிகளின் நவீன சைவம், சாதியம், தீண்டாமை, என்பவற்றிற்கு எதிராகக் குரல் எழுப்பினாலும், தமிழை முதல்நிலையில் வைத்துப் பேசினாலும் இவர்களில் பெரும்பாலோர் மேட்டிமையோர்தான்.

இவ்வகையில் பிராமணர் அல்லாத மேட்டிமை யோரின் நலனை முன்வைத்த இயக்கம் என்று கருதவும் இடமுள்ளது. இவை எல்லாம் மேலும் ஆய்வுக்குரியன. அற்பமானவை என்று பொருள் தரும் வகையில், நாட்டார் தெய்வங்களை, ‘சிறுதெய்வம்’ என்று அடைமொழியிட்டு, அவற்றைக் கண்டிப்பதும் உயிர்ப்பலியை நிறுத்தும்படிக் கூறுவதும், இரட்டைச் சமய வாழ்க்கையினரான அடித்தள மக்கள் பிரிவு சைவரை ‘சைவம்’ என்ற ஒற்றை அடையாளத்திற்குள் அடக்கும் முயற்சியின் வெளிப்பாடுதான்.

ஆசிரியர் திரட்டியுள்ள தரவுகள் குறிப்பிடத்தக்கவை. ‘தமிழ் அறிஞர்’, ‘தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை’ என்று பரவலாக அறிமுகமாகியுள்ள மறைமலை அடிகளின் மற்றொரு முகத்தை அறியும்படி இந்நூல் செய்துள்ளது. இது இந்நூலின் சிறப்புக் கூறாகும். ஆசிரியரின் ஆய்வு முடிவுகளில் மாறுபாடு கொள்வோரும் புறக்கணிக்க முடியாதபடி பல வரலாற் றுச் சான்றுகளை ஆசிரியர் முன்வைத்துள்ளனர்.