படித்துப் பாருங்களேன்...

லெப்டினண்ட் ஜெனரல் ஜாக்கப்பின் சுயசரிதை

(An odyssey in war and peace, An autobiography. Lt.Gen.J.F.R Jacob)

ராணுவத்தினர், வேட்டையாடிகள், கடலோடிகள் ஆகியோரின் அனுபவங்களைப் படிப்பதென்பது பரபரப்புணர்வையும், திகிலையும் ஊட்டுவதாக அமையும். இதன் பொருட்டே இதை விரும்பிப்படிக்கும் வாசகர்கள் உண்டு. அதே நேரத்தில் சமூக நிகழ்வுகள், சமூகச் சிக்கல்கள் குறித்த பதிவு இந்நூல்களில் அருகியே காணப் படும். இதற்குச் சற்று மாறாக, தம்காலச் சமூக நிகழ்வுகளையும் சில அரசியல் தலைவர்களையும் குறித்த பதிவு லெப்டினண்ட் ஜெனரல் ஜாக்கப்பின் சுயசரிதையில் இடம்பெற்றுள்ளது.

பாக்தாத்திலிருந்து இடம்பெயர்ந்து கொல் கத்தாவில் குடியேறிய யூதக்குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஜெ.எஸ். ஆர். ஜாக்கப். இவரது தந்தை வணிகர். கொல்கத்தாவில் பெரிய வீடும், இரண்டு குதிரைவண்டிகளும் இரண்டு கார்களும் கொண்ட வளமான இவரது குடும்பம் இருந்தது.

டார்ஜிலிங்கில் உள்ள உறைவிடப் பள்ளியில் பயின்ற ஜாக்கப், தன் உயர்கல்வியை கல்கத்தாவில் பயின்றார். இரண்டாவது உலகயுத்தம் தொடங்கி யதும் யூத அகதிகள் கொல்கத்தாவிற்கு வரத் தொடங்கினர். ஹிட்லரின் நாசிசத்தை எதிர்க்கும் யூதக் கவிஞர்களின் கவிதைகள் ஏற்படுத்திய தாக்கத்தால் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற உணர்வுமீதூர, தம் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கா மலேயே 1941 இல் ராணுவத்தில் சேர்ந்தார்.

இதன் பின்னர் அவர் பெற்ற பயிற்சிகள், அமெரிக்கா சென்று பயிற்சி பெற்றது, கள அனுபவங்கள், இராணுவ அதிகாரிகள் குறித்த செய்திகளை நூலின் இரண்டாவது இயலில் இருந்து ஆறாவது இயல் முடிய எழுதியுள்ளார்.

ஜாக்கப்பின் சிறப்பான அனுபவம் பங்களா தேஷ் போரை நடத்தியதாகும். இது குறித்து அவர் மிக நுணுக்கமாகவும் விரிவாகவும் ஏழாவது இயல் தொடங்கிப் பத்தாவது இயல் முடிய எழுதியுள்ளார். போர் தொடர்பான செய்திகளை விரும்பிப் படிப்போருக்கு இது மிகவும் பயன் தரும்.

பங்களாதேஷை உருவாக்க இந்திராகாந்தி காட்டிய ஆர்வம், இலங்கை வழியாக மேற்குப் பாகிஸ்தானில் இருந்து, பங்களாதேஷ் பகுதிக்கு பாகிஸ்தான் இராணுவம் அனுப்பப்பட்டமை, பாகிஸ்தான் ராணுவத்தின் அடக்குமுறை, பத்து மில்லியன் மக்கள் மேற்கு வங்கத்திற்குள் அகதி களாக வந்தமை, இந்திய ராணுவத்தினரின் போர் தந்திரம் ஆகியன இவ்வியலிலும் அடுத்து வரும் இயல்களிலும் விவரிக்கப்படுகின்றன. இவ்வியலில் அவர் குறிப்பிடும் ஒரு செய்தி வருமாறு:

‘ஆர். எஸ். எஸ் சிலிருந்து, ஒரு தூதுக்குழு உதவி செய்ய முன் வந்து என்னைப் பார்த்தது. அவர்களது பங்களிப்பு மதிப்பிட முடியாது. பதுங்கு குழிகள் வெட்ட நமது படைவீரர்களுக்கு உதவினர். யுத்தம் முடிந்த பின்னர், அகதிகளை இடம் பெயரச் செய்வதில் உதவினர் (பக்கம்: 68-69).
இச்செய்தி ராணுவத்தினரும், காங்கிரஸ் கட்சியும், ஆர். எஸ். எஸ்சுடன் கொண்டிருந்த இணக்கத்தைப் புலப்படுத்துகிறது.

பங்களாதேஷ் யுத்தம் தொடர்பாக அவர் மேற்கொண்ட ஒரு தந்திரமான செயலை நூலின் பின்னிணைப்பில் கொடுத்துள்ளார். அதன் சுருக்கம் வருமாறு:

ஜியார்ஜ் கிரிஃபின் என்பவர் அமெரிக்கத் தூதரகத்தில் அரசியல் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். பங்களாதேஷ் போரின்போது அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தது. இதனால் அவ்வதிகாரி இந்திய ராணுவத்தின் அசைவுகளைக் கண்டறிவதில் ஆர்வமாயிருந்தார். அவரையும் அவரது மனைவியையும் தன் வீட்டிற்கு விருந்துண்ண வரும்படி ஜாக்கப் அழைத்தார்.

தன் படுக்கையறையில் இந்திய ராணுவத்தின் போர்த் தாக்குதல் தொடர்பான வரைபடத்தை மாட்டி வைத்திருந்தார். கழிப்பறைக்குச் செல்ல விரும்பிய அவ்வதிகாரியை, தன் படுக்கையறையி லுள்ள கழிப்பறைக்குச் செல்ல அனுமதித்தார். படுக்கை அறைக்குள் சென்று அவ்வரைபடத்தைப் பார்த்த அவ்வதிகாரி, இந்திய ராணுவம் நுழை வதற்குக் குறிப்பிடப்பட்ட வழிகள், உண்மை யானவை என்று நம்பி, அது குறித்துத் தன் மேலதி காரிகளுக்குத் தெரிவித்தார். அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்திற்கு அச்செய்தியை அனுப்பி வைத்தனர்.

அச்செய்தியின் அடிப்படையில், வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வழிகளில் இந்திய ராணு வத்தை எதிர்கொள்ள பாக்ராணுவம் ஆயத்தமா யிருந்தது. ஆனால் அவ்வழிகளை விட்டு விட்டு எதிர்பாராத வழிகளில் முன்னேறிய இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தி பங்களாதேஷ் பகுதிக்குள் நுழைந்துவிட்டது. (பக்கம் 187-189). யுத்தம் முடிந்த பின்னர் உருவான பாகிஸ்தான் ராணுவ ஆவணம் ஒன்றில் பிரமோத் மகாஜன் குறித்த பின்வரும் அவரது பதிவுகள் எதிர்மறை யாகவே உள்ளன.

“கிழக்குப் பாகிஸ்தானுக்கு எதிரான தாக்கு தலை நன்கு திட்டமிட்டு சீராக நடத்தி முடித்தனர். முழுமையான திட்டமிடல், நுணுக்கமான கூட்டுச் செயல்பாடு, தைரிய மாகச் செயல்படுத்துதல் ஆகியவற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு. இந்த வெற்றிக்குக் காரணம் இந்தியப் படையில் கிழக்குப் பிரிவின் தலைவர் ஜேக்கப் மற்றும் அவரது தலைமையில் செயல்பட்ட படைத் தலைவர்கள்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

31 ஜூலை 1978 இல் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பின் 1991 இல் பாரதிய ஜனதா கட்சியில் ஜாக்கப் சேர்ந்துள்ளார். அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர்கள் சிலரைக் குறித்த தமது மதிப்பீட்டைப் பின்வருமாறு பதிவு செய்துள்ளார். (பக்கம்: 147-149).

“அடல் பிகாரி வாஜ்பாய் தனக்கெனப் பலவற்றை வைத்துக் கொண்டவர்; வெளி விவகாரத் துறை அமைச்சராக இருந்த போது பிரிஜேஷ் மிஸ்ராவுடன் நெருக்கமாக இருந்தவர்; நாளடையில் அவரைச் சார்ந்தே வாஜ்பாய் இருந்தார். அப்போது ஐக்கிய நாடுகள் சபையில் இருந்த மிஸ்ரா, வாஜ்பாய் அங்குச் சென்ற போது அவரை நன்றாகக் கவனித்துக் கொண்டார். வாஜ்பாய் அரசியலை நன்கு புரிந்தவர்; நல்ல பேச்சாளர்; பிரபல மான பிரதமர். வாழ்க்கையின் அனைத்து சுகங்களையும் விரும்புபவர். சுகமான சௌகரியங்கள், நல்ல மது, சுவையான உணவு, இனிமையான இசை இவை போன்ற எல்லாமே அவருக்குப் பிடிக்கும். வெற்றி கரமாகப் பிரதமராக இருந்தவர். ஆனால் துரதிருஷ்டவசமாக பிரமோத் மகாஜனை சார்ந்து அரசியல் செய்தவர்; மகாஜனை செல்லமாக ‘முண்டா’ என்றே அழைத்தார்; பிரமோத் மகாஜனின் தொழில் தொடர்புகள் பெரும்பாலும் கேள்விக்குரியவை.”

“டாக்டர் முரளி மனோகர் ஜோஷி உண்மை யுள்ளவர்; கொள்கைகளுக்கு முக்கியத்துவம் தருபவர்; யதார்த்தமானவர். சண்டிகரில் நான் நிர்வாகப் பெறுப்பேற்ற போது அங்கு 550 ஆசிரியர் தேவை என்பதை டாக்டர் ஜோஷியிடம் தெரிவித்தேன். ஐ. ஏ.எஸ் அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி 550 ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கினார்.

பிரமோத் மகாராஜன் வாஜ்பாயிக்கு நெருக்க மானவர்; கட்சிக்கு நிதிதிரட்டியவர். எளிய குடும்பச் சூழலில் இருந்து வந்தாலும் ஆடம் பரமான வாழ்க்கை வாழ்ந்தவர்; பல தொழில் நிறுவனங்களுடன் நெருங்கிய உறவு வைத்திருந்தார். நான் கோவாவின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தபோது,

“சட்டத்திற்குப் புறம்பான” ஒரு செயலைச் செய்ய நிர்ப்பந்தித்தார். நான் மறுத்து விட்டேன். அதன் பின்னர் நாங்கள் சந்தித்துக் கொண்ட போதெல்லாம் எங்கள் வெறுப்பை மறைக்கவில்லை. வி. ஹச். பி. என்னைக் குடியரசுத் தலைவராக்க விரும்பியபோது அதை வீழ்த்தியவர். மகாராஜனின் அரசியல் வளர்ச்சி திடீரென முடிந்து போனது. அவருடைய சகோதரர் அவரைச் சுட்டுக் கொன்றார்.

பி.ஜே.பி. யின் இளந் தலைவர்களில் முக்கிய மானவர் அருண்ஜெட்லி, அறிவாளி; நல்ல வாதத் திறன் கொண்டவர்; சிறந்த பேச்சாளர்; பிரபல மான வழக்கறிஞர். ஆனால் மற்றவருக்குக் கீழே பணியாற்ற விரும்புவதில்லை.

1998 இல் கோவாவின் ஆளுநராக இவர் நியமிக்கப்பட்டபோது அங்கு நடந்த முதலமைச்சர் போட்டிகள், குடியரசுத் தலைவரின் ஆட்சி நடை முறைப்படுத்தப்பட்டது, அரசு இயந்திரத்தை சீராக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள், கோவா அரசியல்வாதிகளுக்கும், சுரங்க நிறுவனங்களுக்கு மிடையிலான நெருக்கமான உறவு ஆகியனவற்றை விரிவாக எழுதியுள்ளார். (பக்கம் 149-153). கார்கில் யுத்தம் குறித்து அவரது பதிவுகளும் இடம்பெற்று உள்ளன.

1999 நவம்பரில் பஞ்சாப் ஆளுநராக ஜாக்கப் நியமிக்கப்பட்டார். பஞ்சாப் அரசியல்வாதிகள், குறித்தும் சண்டிகர் சேரிகளில் அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் குறித்தும் அவர் எழுதியுள்ளார்.

பி.ஜே.பி. கட்சியில் இருந்தவர் என்பதன் அடிப்படையில், பஞ்சாபின் பி.ஜே.பி கட்சித் தலைவர் ஒருவர் ஜாக்கப்பைச் சந்தித்து, எந்தக் கொள்கை முடிவு எடுப்பதாக இருந்தாலும், தன்னை அழைத்து அது குறித்து விளக்கவேண்டும் என்று கேட்டார். இதை ஜாக்கப் பொருட்படுத்த வில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும், பி.ஜே.பி யின் வளர்ச்சிக்கு ஜாக்கப் உதவவில்லை என்று கடிதங்கள் எழுதினார். இந்நிகழ்ச்சி குறித்து ‘அரசியல் என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் என்ற கூற்று நினைவுக்கு வந்தது’ என்று ஜாக்கப் எழுதியுள்ளார்.

நூலின் இறுதிப் பகுதியில் தன்னுடன் பணிபுரிந்த, இராணுவ அதிகாரிகள் குறித்து வெளிப்படையாகச் சில செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.

போர்க்கள அனுபவங்களும், சிவில் நிர்வாக அனுபவங்களும், அரசியல்வாதிகள் குறித்த பதிவுகளும் நூலில் விரவிக் காணப்படுகின்றன.

தீரமும், நேர்மையும், நிர்வாகத்திறனும் கொண்ட ஓர் இராணுவ அதிகாரியின் வலதுசாரி அரசியல் சார்பு இந்நூலில் வெளிப்படுகிறது.