எங்கள்

போராட்டத்துக்கான காரணம்:

நாங்கள் விளைவித்த அரிசியால் பண்ணையார்களுக்குச் சோறிடுவதை எதிர்க்கிறோம்.

எங்கள்

போராட்டத்துக்கான காரணம்:

எங்களது சொத்துக்களை இங்கிலாந்துக்கு

அனுப்புவதை எதிர்க்கிறோம்.

(கம்பலாத் கோவிந்தன் நாயர்)

இந்திய விடுதலைப் போராட்ட வரலாறானது நீண்ட பாரம்பரியம் கொண்ட ஒன்று. இப்போராட்ட வரலாற்று வரைவின் பொருட்டு போராட்ட நிகழ்வுகள், அதில் பங்கேற்றோர், நிகழ்ந்த காலம் என்பனவற்றின் அடிப்படையில் சில கட்டங்களாகப் பகுத்துக் கொள்ளும் மரபு உள்ளது. இம் மரபில் பரவலாக இரண்டு கட்டங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. இவற்றுள் முதற் கட்டமானது இந்தியாவின் மன்னர்கள், குறுநில மன்னர்கள், பாளையக்காரர்கள், ஆங்கில இராணுவத்தில் பணியாற்றிய இந்தியர்கள் என்போர் பங்கேற்று நடத்திய நிகழ்வுகளை உள்ளடக்கியது. இந்தியாவின் பரந்துபட்ட நிலப்பரப்பு முழுவதிலும் இவை நிகழவில்லை. ஏதேனும் ஒருபகுதியில் நிகழ்ந்த எழுச்சிகளாகவே இவை அமைந்தன. ஆங்கில அரசின் ஆவணங்கள் இவற்றைக் கலகம் என்றே குறிப்பிடும்.இவற்றுள் 1857இல் நிகழ்ந்த பெரிய எழுச்சியானது ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக்கு முடிவு கட்டி நேரடியான ஆங்கில அரசின் ஆட்சிக்கு வழிவகுத்தது.

இரண்டாவது கட்டமாக இந்திய தேசியக் காங்கிரசின் தோற்றம் (1885) அமைந்தது. தொடக்கத்தில் உயர்கல்வி பெற்ற இந்தியர்களின் நலனை முன்நிறுத்திய அமைப்பாக விளங்கிய இவ் அமைப்பு சுதேசி இயக்கம் என்ற இயக்கத்தை உருவாக்கிய பின்னர் பல்வேறு தரப்பினரையும் ஈர்த்த அமைப்பாக மாற்றம் பெற்றது. ஆனால் நகர்ப் புறங்களிலேயே இதன் தாக்கம் மிகுந்திருந்தது. காந்தியின் தலைமை ஏற்பட்ட பின்னரே கிராமப்புறங்களில் இவ்வியக்கம் கால்கொண்டதுடன் வெகுமக்கள் இயக்கமாக மாறியது.Uprising in Malabarஇவ்இரு கட்டங்களும் பாடநூல்களில் பரவலாக இடம் பெற்றவைதான். ஆயினும் இவை இரண்டின் சமூகப்பார்வை என்னவாக இருந்தது என்பது குறித்துப் பாட நூல்கள் பெரிதாக ஆராய்வதில்லை. தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் (2011:18) இவ் இரண்டு கட்டங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை இவ்வாறு மதிப்பிட்டுள்ளார்:

“இந்திய தேசிய இயக்கப் போராட்டத்தின் முதற் கட்டத்தில் நிலவுடைமை சார்ந்த மன்னர்கள் தலைமை ஏற்றார்கள்.

இரண்டாவது கட்டத்தில் பூர்ஷ்வாக்கள் தலைமை ஏற்றார்கள். ஆனால் முதலாளித்துவ சமூக அமைப்பு தோன்றுவதற்கு முன்பிருந்த சமூக அமைப்பை இப் பூர்ஷ்வாக்கள் புறந்தள்ளவில்லை. மாறாக அதனுடன் இணக்கம் காட்டினார்கள்.

ஆகையால் இவ்விரு போராட்டக் கட்டங்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இதில் முதலாவது 1857இல் முடிவுற்றது.இரண்டாவது கட்டம் 1947இல் முடிவுற்றது.”

இ.எம்.எஸ், குறிப்பிடும் இவ் இரு போராட்டக் கட்டங்களில் வட்டார அளவில் நடந்து முடிந்த தன்னியலார்ந்த போராட்டங்களும் அடங்கும். ஒரு பெரிய அளவிலான திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட போராட்டங்களில் இவை இணைந்து கொள்வதும் உண்டு. இவை பெரும்பாலும் நம் கல்விப்புல வரலாற்றியலாளர்களால் கண்டுகொள்ளப் படுவதில்லை. அப்படியே பதிவானாலும் “நாமரூப" என்பது போல மேலோட்டமான பதிவாகவே அமையும். சில நேரங்களில் திரித்தும் எழுதப்படும்

இதற்கு எடுத்துக்காட்டாக அமைவது இன்றையக் கேரளத்தின் மலபார்ப் பகுதியில் 1921இல் நிகழ்ந்த மாப்பிள்ளை முஸ்லிம் விவசாயிகளின் கிளர்ச்சி அமைகிறது. ஆனால் காலனிய அரசின் ஆவணங்களும், அவர்கள் சார்பான நம்மவர்கள் உருவாக்கிய பதிவுகளும் இக் குடியானவர் எழுச்சியை இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் நிகழ்ந்த மதக் கலவரமாகவே சித்தரிக்கின்றன.

1921இல் நிகழ்ந்த இவ் எழுச்சியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஒரு வர்க்கப் போராட்டத்தை மதக் கலவரமாக அறிமுகம் செய்யும் முயற்சியில் இந்துத்துவா அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

ஒரு நூற்றாண்டுக்கு முன் நிகழ்ந்த எழுச்சி என்பதால் இது சமூக மறதிக்கு ஆளாகியுள்ளது. இதன் உண்மையான வரலாற்றுப் பின்புலத்தை அறியாமல் இந்துக்கள் மீதான இஸ்லாமியர்களின் கும்பல் வன்முறை என்ற பரப்புரைக்கு சிலர் ஆளாகி விடுகின்றனர். இத்தகைய சூழலில் இந்நூல் வெளிவந்துள்ளது.

நூல்

இது ஒரு தொகுப்பு நூலாகும். முகவுரை, அறிமுக உரை நீங்கலாக ஆறு கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இக் கட்டுரைகளில் ஒன்றாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1946 ஆகஸ்ட் 18, 19, நாட்களில் கோழிக்கோடு நகரில் கூடியபோது மாப்பிள்ளை எழுச்சி குறித்து நிறைவேற்றிய தீர்மானம் இடம் பெற்றுள்ளது. ஒரு முக்கிய வரலாற்றாவணம் என்ற முறையில் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

எஞ்சிய ஐந்து கட்டுரைகளில் நான்கு கட்டுரைகள் மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர்களான இ.எம்.எஸ்(1943), ஏ.கே.ஜி(1946)அபினி முகர்ஜி (1922), சுமேந்திரநாத் தாகூர் (1937), ஆகியோர் எழுதியவை. (அடைப்புக் குறிக்குள் இவை வெளிவந்த ஆண்டு இடம் பெற்றுள்ளது). இறுதிக் கட்டுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரான சுபாஷினி அலி 2021இல் எழுதியது. இதன் அடிப்படையிலேயே இந்நூலின் முகப்பில் “கம்யூனிஸ்ட் எழுத்துக்களின் தொகுப்பு” (A Collection of Communist Writings) என்ற குறிப்பு இடம் பெற்றுள்ளது.

நூலின் முகவுரையை கேரள முதலமைச்சர் தோழர் பினாராய் விஜயன் எழுதியுள்ளார்.மலபார் பகுதியை உள்ளடக்கிய கேரளத்தின் முதலமைச்சர் என்பதன் அடிப்படையில் கேட்டுப் பெற்ற மரியாதை அடிப்படையிலான முகவுரை என்று யாரும் கருதினால் அவர்கள் ஏமாற்றம் அடைவார்கள்.. இம் முகவுரையும் ஓர் ஆய்வுக் கட்டுரையாகவே அமைந்துள்ளமை சிறப்புக்குரிய ஒன்று.

மொழிக் குன்னத் பிராமதன் நம்பூதிரிபாட் எனபவர் கிலாபத் போராட்டத்தில் கைதாகி நீண்டகாலம் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டவர். மலபார் எழுச்சிக்குப் பின்னர் அவர் எழுதிய சுயசரிதையில் இருந்து பின்வரும் தொடர்கள் இம் முன்னுரையில் இடம் பெற்றுள்ளன:

“இவ் எழுச்சிக்கு வகுப்புவாதப் பூசல் மூல காரணமல்ல.அரசியல் ஒடுக்கு முறையும் காவல் துறையின் மூர்க்கத்தனமான நடவடிக்கைகளும் அமைதியின்மையைத் தோற்றுவித்தன. இவ்எழுச்சியானது விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதிதான்.”

நூலின் பதிப்பாசிரியர்கள் இருவரில் ஒருவரான நிதிஷ் நாராயணன் சமூக ஆய்வு நிறுவனம் ஒன்றில் (Tricontinental Institute for Social Research) ஆய்வாளராகப் பணியாற்றுவதுடன் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராகவும் பணியாற்றி வருகிறார். மற்றொரு பதிப்பாசிரியரான விஜயபிரசாத் மேலே குறிப்பிட்ட ஆய்வு நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக உள்ளார். "லெஃப்ட் வேர்டு” வெளியீடுகளின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளின் சாரமாகவும் ஆழமும் தெளிவும் கொண்டதாகவும் இருவரும் இணைந்து எழுதியுள்ள அறிமுக உரை அமைந்துள்ளமை பாராட்டுதலுக்குரியது.

இந்நூலை அறிமுகம் செய்து கொள்ளும் முன் பின்வரும் மூன்று அடிப்படைச் செய்திகளை அறிந்துகொள்வது அவசியமாகிறது. (1) இப் போராட்ட காலத்தில் மலபார் பகுதியில் நடைமுறையில் இருந்த வேளாண் உறவுகள்.(2)மாப்பிள்ளை முஸ்லிம்கள். (3) கிலாபத் இயக்கம்.

வேளாண் உறவுகள்:

Uprising in Malabar 1921மாப்பிள்ளை முஸ்லிம்களின் கிளர்ச்சி நடந்த காலத்தில் இன்றைய மலபார் மாவட்டம் அன்றையச் சென்னை மாநிலத்தில் (Madras Presidency) இணைந்திருந்தது. நிர்வாக அடிப்படையில் சென்னை மாநிலத்தில் இணைந்திருந்தாலும் மொழி, பண்பாடு அடிப்படையில் கேரளத்தின் தாக்கத்தைக் கொண்டிருந்தது. அப்போதையக் கேரளமானது மன்னர் ஆட்சிப் பகுதியாக விளங்கியதுடன் மட்டுமின்றி நிலமானியச் சமூகத்தின் எதிர்மறைக் கூறுகளையும் சனாதனச் சிந்தனைகளையும் உள்வாங்கி இருந்தது.இப்போக்கு மலபார் பகுதியிலும் நிலவியது.

இதன் அடிப்படையில் கேரளத்தின் சாதியப் படிநிலையில் முதலாவது இடத்தில் நம்பூதிரிப் பிராமணர்களும் இரண்டாவது இடத்தில் நாயர் சமூகத்தினரும் இருந்தனர்.பெரும்பாலான சாகுபடி நிலங்களும் தோப்புகளும் இவர்களுக்கே உரியதாக இருந்தன. "ஜன்மிகள்” என்றழைக்கப்பட்ட இப் பெரு நிலக்கிழார்களின் உழுகுடிகளாகவும், குத்தகையாளர்களாகவும் ஏனைய சமூகத்தினர் விளங்கினர். இவர்களுக்குப் பணிவழங்குதல், குடிஇருப்பு மனையில் வாழ அனுமதித்தல், குத்தகையாளராகத் தொடரச் செய்தல் என்பன ஜன்மியின் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்பட்டதாகவே இருந்தது. (மலையாள மொழியின் கவிஞர்களில் ஒருவரான சங்கம்புழா என்பவர் எழுதியுள்ள “செவ்வாழை” என்ற நெடுங்கவிதை இந்நிலை குறித்த சிறந்த இலக்கியப் பதிவாகும்) நிலவெளியேற்றம் செய்தல், வேலை தர மறுத்தல் என்பன அவர்களை அச்சுறுத்தும் ஆயுதங்களாக அமைந்தன. இந்த வேளாண் உறவு நிலைதான் மலபார்ப்பகுதியிலும் நிலவியது.

மலபார்ப் பகுதியின் ஜன்மிகளாக நம்பூதிரிப் பிராமணர்களும் நாயர்களும் இருந்தனர். மத அடிப்படையில் இவர்கள் இந்துக்கள். இவர்களைச் சார்ந்து நிற்கும் உழுகுடிகளாகவும் குத்தகைதாரர்களாகவும் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்தனர். மலபார்ப்பகுதிக்கு உரித்தான இவ் வேளாண் உறவு முறையானது இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் எதிர் எதிர் நிலையில் நிறுத்தும் தன்மை கொண்டதாக இருந்தது.

மன்னர் ஆட்சிக் காலத்தில் நிலவிய இவ்வேளாண் உறவுமுறையானது ஆங்கிலக் காலனிய ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்தது. மன்னர்களைப் போன்று இவர்களும் நிலவுடைமையாளர்களின் நலனைப் பேணுபவர்களாகவே விளங்கினர். தாம் விதிக்கும் வரியை ஒழுங்காகச் செலுத்திவரும் வரையில் உழுகுடிகள் மீது அவர்கள் நிகழ்த்தும் அத்துமீறல்களை ஆங்கில அரசு கண்டு கொள்ளாதிருந்தது.

காலனிய ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பம் போல் நிலவரியை உயர்த்தும் போதெல்லாம், நில உடைமையாளர்கள் இதை நிலக் குத்தகைதாரர்கள் மீது சுமத்தினர். இதனால் பாதிக்கப்பட்ட குத்தகை விவசாயிகள் காலனிய எதிர்ப்பாளர்களாயினர். இவர்களின் எதிர்ப்பு சிலநேரங்களில் வன்முறையாகவும் மாறியது. இதனால் 1836க்கு முன் கலகம் ஒன்று நிகழ்ந்தது. இது ஆங்காங்கே தொடர்ந்தது. ஆங்கில உயர் அதிகாரிகள் சிலர் கொலை செய்யப்பட்டனர். இவர்களைத் தண்டிப்பதற்கென்றே புதிய சட்டங்களும் இயற்றப்பட்டன. எவரையும் கைது செய்யும் அதிகாரம் காவல் துறைக்கு வழங்கப்பட்டது. உழுகுடிகள் குத்தகைதாரர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிலர் நாடு கடத்தலுக்கும் ஆளாயினர்.

மாப்பிள்ளை முஸ்லிம்கள்

மலபார் எழுச்சியில் குறிப்பிடப்படும் முஸ்லிம்கள் மாப்பிள்ளை முஸ்லிம்கள் என்றழைக்கப்படுவதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் உண்டு. அரேபிய நாட்டு முஸ்லிம் வணிகர்கள் மலபார்க் கடற்கரையில் இறங்கி அங்கும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் சிறிது காலம் தங்கி வாணிபம் மேற்கொண்டு திரும்புவது வழக்கம். அரேபியாவிலிருந்து இங்கு வருவதற்கும் இங்கிருந்து அங்குத் திரும்பிச் செல்லவும் சிறிது காலம் பிடிக்கும். ஏனெனில் கடல் வாணிபம் என்பது ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த ஒன்று. எனவே விற்பனை, கொள்முதல் என்ற இரண்டையும் மேற்கொள்ள வேண்டும். மேலும் காற்றின் துணையுடன்தான் கப்பல்கள் இயங்கியதால் பயணகாலம் நீண்டதாய் அமைந்தது. இதனால் குடும்பத்தை விட்டு அதிககாலம் பிரிந்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

பலதார மணத்தை அவர்களது மதம் தடை செய்யவில்லை என்பதால் அவர்கள் மலபார்ப் பகுதியில் தங்கியபோது அங்கு வாழ்ந்துவந்த இந்து சமூகப் பெண்களை அவர்களது குடும்பத்தின் இசைவுடன் மதம் மாற்றம் செய்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினர். இத் திருமண உறவில் பிறந்து வளர்ந்தவர்களே மாப்பிள்ளை முஸ்லிம்கள் என்ற சமூகமானார்கள் என்ற கருத்து உண்டு. தீண்டாமைக்கு ஆட்பட்டிருந்த மக்கள் பிரிவினரும் தம்மீதான சமூக ஒடுக்குமுறைகளிலிருந்து வெளிவரும் வழிமுறையாக இஸ்லாமியர்களாக மதம் மாறியுள்ளனர். வாணிப மரபினர்களாக மாறியதால் இவர்கள் வாணிபம் மேற்கொண்டு வளம் பெற்றார்கள்.

15, 16 ஆவது நூற்றாண்டுகளில் போர்ச்சுக்கீசியர்கள் இப்பகுதியில் வாணிபம் மற்றும் அரசியல் ஆதிக்கம் செலுத்தியபோது அவர்களை எதிர்த்துத் தீரமுடன் போராடினார்கள். இவ்வகையில் இவர்கள் முதல் காலனிய எதிர்ப்புப் போராளிகளானார்கள். குஞ்சாலி மரக்காயர் என்பவர் குறிப்பிடத்தக்க விடுதலைப் போராளியாக விளங்கினார். இதனால் இவரது மறைவையடுத்து வந்த போராளிகளும் குஞ்சாலி என்றே அழைக்கப்பட்டனர்.

ஆங்கில ஆதிக்கம் தொடங்கியதும் இவர்களது வாணிபம் சிதைவுற்றது. ஒரு சிலரால் மட்டுமே வாணிபத்தில் தாக்குப் பிடிக்க முடிந்தது. வாணிபத்தை முழுமையாக மேற்கொள்ள முடியாதவர்களில் பெரும்பாலோர் நாயர், நம்பூதிரி நில உடைமையாளர்களிடம் குத்தகை விவசாயிகளாகவும் உழுகுடிகளாகவும் மாறினர். இவர்களில் பெரும்பாலோர் ஏழைகளாகவே இருந்தனர். எரநாடு பகுதியில் வாழும் மாப்பிள்ளைகள் மரவியாபாரம் செய்பவர்கள். ஓரளவு வளம்படைத்தவர்கள். ஆனால் இவர்களது எண்ணிக்கை குறைவுதான். நீலாம்பூர் வண்டு ஊர் ஆகிய மலையடிவார ஊர்களில் வாழும் ஒரு சில மாப்பிள்ளைகள் அரசு நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து வளமானவர்களாக உள்ளனர்.

முதல் உலகப் போரின் போது இவர்களில் பலர் ஆங்கில இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினர். நாடு கடந்து உலகின் பல பகுதிகளுக்கும் சென்றதால் இவர்களது அறிவு விரிவடைந்ததுடன்.சுயமரியாதை உணர்வும் உருப்பெற்றது. போர் முடிந்த பின்னர் 1915 இல் படைப் பிரிவுகள் கலைக்கப்பட்டதால் இவர்கள் நாடு திரும்பினர். நன்கு பயிற்சி பெற்ற படைவீரர்கள் என்பதால் நம்பூதிரி, நாயர் ஜென்மிகளின் சுரண்டலையும் ஆதிக்கத்தையும் எதிர்த்துப் போராடும் திடம் இவர்களிடம் இருந்தது.

மாப்பிள்ளைகள் முக்கியமான தொழில் வேளாண்மைதான். காடு திருத்தி கழனியாக்கும் கடினமான உழைப்பாளிகளாக விளங்கினர். இன்றும்.மூங்கில் காடுகளிலும் ரப்பர் தோட்டங்களிலும் பணியாற்றுகிறார்கள,

கிலாபத் இயக்கம்

ஜன்மிகள், குத்தகை விவசாயிகள், உழுகுடிகள் என வர்க்க முரண்பாடு நிலவிய மலபார்ப் பகுதியில் ஜன்மி எதிர்ப்புப் போராட்டம் ஒரு பேரியக்கமாக மாறியதில் கிலாபத் இயக்கம் ஒத்துழையாமை இயக்கம் என்ற இந்திய அளவிலான இரு இயக்கங்களுக்கும் குறிப்பிடத்தக்க அளவிலான பங்களிப்பு உண்டு. இவை இரண்டும் அடிப்படையில் தனித்தனி இயக்கங்கள் என்றாலும் ஒன்றுடன் ஒன்று இந்திய அளவில் இணைந்திருந்தன. இவற்றுள் கிலாபத் இயக்கத்தின் தாக்கம் 1921 மலபார் எழுச்சியில் மிகுந்திருந்தது.

இஸ்லாத்தை அறிமுகப்படுத்திய முகமது நபி இஸ்லாமியர் வாழும் பகுதிகளில் இஸ்லாமிய சமய ஆட்சியை நிறுவினார். அவரது மறைவிற்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தியவர்கள் 'கலிபாக்கள்' என்று அழைக்கப்பட்டனர். இவர்களது ஆட்சி இஸ்லாமிய சமயம் சார்ந்த ஆட்சியாக இருந்தமையால் இவர்கள் மன்னர்களாக மட்டுமின்றி உலக இஸ்லாமியர்களின் தலைவர்களாகவும் கருதப்பட்டனர்.

முதல் உலகப்போரில் அணிசேர்ந்த நாடுகள் அச்சு நாடுகள், நேசநாடுகள் என இரு பிரிவுகளாகப் பிரிந்து நின்று போரிட்டன. இவற்றுள் இங்கிலாந்து தலைமை ஏற்றிருந்த நேச நாடுகள் அணி வெற்றி பெற்றது. தோல்வியுற்ற அச்சுநாடுகள் அணியில் உதுமானியப் பேரரசு என்ற பெயரில் துருக்கி இணைந்திருந்து. போரில் துருக்கி தோற்றமையால் அதன் பலபகுதிகளை வெற்றியடைந்த இங்கிலாந்து கைப்பற்றியது.அத்துடன். அதன் கலிபாவாவை (மன்னர்) வீட்டுச் சிறையில் வைத்தது. தங்கள் சமயத் தலைவரைக் காவலில் வைத்ததைக் கண்டித்து உலக முஸ்லிம்கள் கிளர்ந்தெழுந்தனர். அவரை விடுவிக்க ஆயுதப் போராட்டத்திற்கும் ஆயத்தமானார்கள். இவர்களுள் இந்திய முஸ்லீம்களும் அடங்குவர். இவர்களது எதிர்ப்புணர்வின் அமைப்பு வடிவமாக கிலாபத் இயக்கம் அமைந்தது (கிலாபத்:எதிர்த்தல்).

மற்றொரு பக்கம் 1920 செப்டம்பரில் சிறப்பு மாநாடு ஒன்றை இ.தே.காங்கிரஸ் கொல்கத்தாவில் நடத்தியது. காந்தியின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்குவது என்று அதில் முடிவெடுக்கப்பட்டது. இவ்இயக்கத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் கிலாபத் இயக்கத்தை ஆதரிப்பது என்ற முடிவை இ.தே. காங்கிரஸ் எடுத்தது. இம்முடிவின் வழி இரு அமைப்புகளும் நெருக்கமாகி தத்தம் வலிமையை வலுப்படுத்திக் கொண்டன. இது மலபார்ப் பகுதியிலும் வெளிப்பட்டது

1920 இல் மலபாரின் எரநாடு வட்டத்தில் உள்ள மஞ்சேரியில் இ.தே.காங்கிரஸ் மாவட்ட மாநாடு நடத்தியது. இப் பகுதியில் காங்கிரஸ் அமைப்பானது நம்பூதிரி, நாயர் ஆதிக்கத்தில் இருந்தது.இவர்கள் கனம்தார் என்றழைக்கப்படும் பெரு நிலக்கிழார்களாகவும் வழக்கறிஞர்களாகவும் இருந்தனர்.

1920 கிலாபத் இயக்கத்துடன் காந்தியும் காங்கிரசும் மேற்கொண்ட ஆதரவுப் போக்கின் அடிப்படையில் மாப்பிள்ளைகள் ஒத்துழையாமை இயக்கத்துடன் நெருங்கிவரத் தொடங்கினர். இதன் அடிப்படையிலேயே இவர்கள் மிகுதியாக வாழும் மஞ்சேரி நகரை மாநாடு நடத்தும் இடமாகத் தேர்வு செய்திருந்தனர்.

1920 ஆகஸ்டில் மலபாரின் கோழிக்கோடு நகரில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் காந்தியும் கிலாபத் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவருமான சௌகத் அலியும் கலந்து கொண்டு உரையாற்றினர். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பில் காங்கிரசின் ஒத்துழையாமை இயக்கமும் இஸ்லாமியர்களின் கிலாபத் இயக்கமும் ஒன்றிணைவதன் அவசியம் இப் பொதுக்கூட்டத்தின் வழி உணர்த்தப்பட்டது. இருப்பினும் கிலாபத் இயக்கத்துடன் இணக்கம் காட்டும் போக்கிற்கு எதிரான கருத்துடையோரும் காங்கிரசில் இருந்தனர்.

தமது உரையில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான நட்புறவின் அவசியத்தை காந்தி வலியுறுத்தினார்.

காந்தியின் இம்முயற்சிக்கு மாப்பிள்ளைகளிடம் வரவேற்பு உருவானது. இவர்களது தலைவர்களும் மலபார்ப் பகுதி காங்கிரஸ் தலைவர்களும் ஒருவருக் கொருவர் நெருக்கம் காட்ட ஆரம்பித்தனர்.ஒத்துழையாமை இயக்கம் முன்வைத்த அந்நியப் பொருள்கள், அந்நிய நிறுவனங்களைப் புறக்கணித்தல், காலனிய அரசுப் பதவிகளைத் துறத்தல் என்பனவற்றை அவர்கள் நடைமுறைப் படுத்தத் தொடங்கினர்.

இச்செயல்கள் சமயம் சார்ந்தவை அல்ல என்பதையும் வேளாண் உறவுச் சிக்கலை மையமாகக் கொண்டவை என்பதையும் ஆங்கில அரசு உணரலாயிற்று. மலபார் மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக இருந்த இ.இ. தாமஸ் என்பவர் 1821 சனவரியில் எழுதிய குறிப்பில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

எழுச்சியின் வெளிப்பாடு

சுயராச்சியம் என்ற சிந்தனை அவர்களிடம் வலுப்பெறத் தொடங்கியது. மலபாரின் எரநாடு, வள்ளுவநாடு என்ற பகுதிகளை முற்றுகை இட்டதுடன் அவற்றை விடுதலை பெற்ற சுயேச்சையான பகுதிகள் என்று அறிவித்தனர். மூன்று மாதங்கள் வரை இந் நிலைமை நீடித்தது. காலனிய ஆட்சி அதிகாரிகள் மக்களின் தாக்குதலுக்கு ஆளாயினர். வரியை ஒழித்ததுடன் விவசாயிகள் வாங்கிய கடன்களைப் பதிவு செய்திருந்த அரசு ஆவணங்களையும் அழித்தனர். புதிய கடவுச் சீட்டுக்களை வழங்கினர். சமய வேறுபாடில்லாத சுதந்திரக் குடியரசாக அப்பகுதியை அறிவித்தனர்.

மலபார் விவசாயிகள் எழுச்சியின் (1921) தொடர் நிகழ்வுகளை அடுத்த இதழில் காண்போம்.

Nidheesh Narayanan and Vijay Prashad. (Editors) (2022). 1921 Uprising in Malabar, A Collection Of Communist Writings. LeftWord Books, New Delhi 110008.

(தொடரும்...)

- ஆ.சிவசுப்பிரமணியன், தமிழர் சமூக வரலாற்று ஆய்வாளர், மார்க்சிய சிந்தனையாளர்