bharathi 350சுதந்திரம் வந்துவிட்டது, பாரதி கண்ட கனவு நனவாகிவிட்டது என்று எழுதாத பத்திரிகை இல்லை.  பேசாத மக்கள் இல்லை.  இன்று எந்தப் பக்கம் திரும்பினாலும் கேட்கிறது “சுதந்திரப் பள்ளு.”

பாரதியை, அவர் வாழ்ந்த காலத்தில் அனேக வைதிக விமர்சகர்கள், தற்கால நல உரிமைகளைக் குறிக்கோளாகக்கொண்டே கவி புனைந்திருக்கிறார் என்று குறை கூறினர்.

இலக்கணம் அறியாத கவிஞன் என்று நன்னூல் பண்டிதர்கள் அகம்பாவ வெறியில் வாய்க்கொழுப் போடு ஆதாரமின்றி அர்த்தமற்றுப் பேசினர்.  வெறும் தேசியக் கவி என்று பலர் அவமதிப்போடு பார்த்தனர்.

பெண் விடுதலைப் பித்தன் என்று சிலர் ஆத்திரப் பட்டனர்.  கஞ்சாப் புலவன் என்று இளக்காரமாக ஏசினவர்களும் உண்டு.

அவர் காலஞ்சென்றபின், கொஞ்ச காலத்திற்கு முன் கூட, பாரதி மகா கவியா? என்ற விவாதம் அமர்க்களப்பட்டது எழுத்தாளர்களிடையில்.

மக்களின் முன்னோடி

“பாரதியார், பார்ப்பான்தானே?” என்று பழிக்கக் கூட தூய தனித்தமிழ்க் குருதி நரம்புகளில் பீறிட்டுப் பாய்கிற, ‘செங்குட்டுவன், வளவன், செழியன்’ வழிவழி வந்தோரும் தமிழகத்தில் இல்லாமலில்லை.

பாரதி தேசியக் கவியாக இருந்து, மகாகவியாக மாறி, புதுமைக் கவியாகப் பொலிந்து, புரட்சிக் கவியாகவும் பொதுமக்கள் கவியாகவும் புகழ்மாலை சூட்டப்படுகிறார் இன்று.  அன்று ஒதுக்கப்பட்டவர் இன்று துதிக்கப்படுகிறார் - மக்களின் அரசியல், பொருளாதார, சமூக அறிவு வளர்ச்சியின் விளைவாக.

பாரதியின் எழுத்துக்கள் நமது தேசிய இயக்கத்தின் பல திறப்பட்ட போக்குகளையும் நடமாட்டங் களையும் கருத்தோட்டங்களையும் சிறந்த முறையில் படம்பிடித்துக் காட்டுகிறது.  ஒவ்வொரு தலைசிறந்த கலைஞனையும்போல் தன் காலத்தில் ஏற்பட்ட சமூக, அரசியல் மறுமலர்ச்சியையும் புது விழிப்பையும் கூர்மையாகக் கவனித்தான் பாரதி.

நிகழ்கால நலன்களைப் பற்றித்தானே பெரு மிதமாப் பாடியிருக்கிறார் என்று, மதிப்பீட்டில் பாரதியாருக்குக் குறைவாக ‘மார்க்’ போடுகிறவர் களுக்கு ஒரு உண்மை விளங்கவில்லை.  தற்காலிகமாகத் தோன்றும் அல்லது காட்சியளிக்கும் சமுதாய, அரசியல் பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்ட, நிரந்தர உண்மைகளென்று சொல்லத் தக்கவை ஒன்றுமில்லை யென்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.

பாரதியின் பெருமை - தனிச்சிறப்பு - தேசிய இயக்கத்தின் மகத்துவத்தை அல்லது விரிந்து பரந்த தேசிய இயக்கத்தை - அதனுடைய பன்முகங் களிலும் கண்டதிலேயே அடங்கியிருக்கிறது.

அரசியல் சுதந்திரத்தைப் பற்றி அருமையாகப் பாடிய கவிஞன் என்றே, பொதுப் படையாக அடிக்கடி பாராட்டப்படுகிறான் பாரதி.  அவனுடைய எழுத்துத் திருப்பணியில் ஒரு பகுதிதான் இது.

பாரதியைப் பற்றி அறிய வேண்டுமானால், தேசிய இயக்கம் பூராவையும், அதன் எல்லாத் துறைகளையும் சகல அம்சங்களையும் அதன் வலு, வலுவின்மைகளையும் இறுதியாக அது எத்திக்கை நோக்கி முன்னேறி வந்துள்ளதென்பதையும் அறிந்து தீரவேண்டும்.

ஒரேயடியாக, காலத்தைத் தாண்டி எந்த மனிதனும் வாழமுடியாது.  எத்துணை தீர்க்கதரிசி யாயினும் கால வரம்புகளை முற்றும் மீறிச் சென்று விட முடியாது.  கவிஞனும் மனிதன்தானே! இந்த உண்மையை மறந்து விடாமல் பாரதியை ஆராய்ந்தால், பாரதியின் பெருமை இன்னும் அதிகரிக்கும்.

ஆதிகபவன் முதற்றே உலகு

என்று தொங்கினான் வள்ளுவன்.

அலகிலா விளையாட்டுடையாரவர்

தலைவரன் னவர்க்கே சரணங்களே

என்று வணங்கினான் கம்பன்.

எங்கள்

மாநிலத் தாயை வணங்குது மென்போம்

என்று பாரதி ஆரம்பித்தான்.  தெய்வ பக்தியின் இடத்தில் தேச பக்தியை ஏற்றி வைத்துப் போற்றி நின்ற முதல் தமிழ்க்கவி பாரதிதாசன்.

“நாட் டன்பில்லா நடைப்பிணம்” என்று ‘மனோன்மணியம்’ சுந்தரம் பிள்ளை கூறுகிறாராயினும்,

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்

நற்றவ வானினும் நனிசிறந்தனவே

என்று தேசபக்திக்கு முதல் வரிசை அளித்தவன் பாரதியே.

பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்

பாரத நாடு

என்று போற்றி நாட்டன்பை மக்களிடம் தட்டி எழுப்பி,

சொந்த நாட்டில் பரர்க்கடிமை செய்தே

துஞ்சிடோம் - இனி - அஞ்சிடோம்

என்று ஆவேசக் கனலே மூட்டி,

பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் - பிடிப்

பயங்கொல்லுவார் துயர்ப்பகை செல்லுவார்

என்று நம்பிக்கை ஊட்டுகிறான்.

வீர சுதந்திரம் விரும்பினான்

தேச பக்தியை எழுப்ப, அடிமைத்தனத்தில் வெறுப்பை மூட்டுகிறான்.

புல்லடிமைத் தொழில் பேணி - பண்டு

போயின நாட்களுக் கினிமனம் நாணி

தொல்லை யிகழ்ச்சிகள் தீர; - இந்தத்

தொண்டு நிலைமையை ‘தூ’வென்று தள்ளி

வந்தே மாதர மென்போம்

என்று நாட்பட்ட அடிமைத் தனத்தால் தடித்துப் போன தோலிலும் ‘சுரீர்’ என்று தைக்கும்படிச் சாட்டை கொடுத்து எழுப்புகிறான்.  “இளந்தமிழா! பள்ளி எழுந்தருளாயே” என்ற பாட்டு கேட்கிறது.

அடிமை வாழ்வில் அருவருப்பையும் ஆத்திரத்தையும் ஊட்டி,

குப்பை விரும்பும் நாய்க்கே - அடிமை

கொற்றத் தவிசு முண்டோ?

என்று ஆங்கிலேயன் மூலம் இந்தியனின் - தமிழனின் ஆத்திர நெருப்பில் எண்ணெய் வார்த்து, மான உணர்ச்சியைக் கிளறி,

மானிட ஜென்மம் பெறுவதற் கரிதெனும்

வாய்மையை உணர்ந்தாரேல் - அவர்

ஊனுடல் தீயினும் உண்மைநிலை தவற

உடன்பாடு மாறுளதோ?

என்று வினவி, வீர சுதந்திர வேட்கையைக் கிளப்புகிறான் பாரதி.

பாரதி வேண்டிய சுதந்திரம், பாரதி தூண்டிய சுதந்திரம், மிகப் பெரிது அது ‘ஆரமுது’, புளித்த கள் அல்ல, அது ‘விண்ணில் இரவி’ மின்மினி அல்ல. ‘கண்ணினு மினியது அந்தச் சுதந்திரம்’ பாரதி கருத்தில் இந்தச் சுதந்திரம் ‘கண்ணீரும் செந்நீரும்’ பாய்ச்சி வளர்க்கப்பட்டது.  படுவதேயன்றி, ‘தண்ணீர் விட்டு வளர்க்கப்பட்டதோ, படுவதோ அல்ல.  ஆகவே, இதை ‘வீரசுதந்திரம்’ என்று வீறுகொண்டு பாடுகிறான். ‘வேண்டும்’ என்று சுயாட்சி கேட்ட திலகர் பெருமானை விட அழுத்தமாகக் கேட்கிறான் பாரதி. பெருவாழ்வுக்கு இன்றியமையாத இந்தச் சுதந்திரத்தைப் போராடி, ‘ஏதும் நல்கி இங்கெவ்வகை யானும்’ செல்ல முயலாமல், அற்பச் சுகத்தில் மூழ்கிக் காலத்தைத் தள்ள முயல்வோரை நினைத்துத் தான் பாரதி:

மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்

மாண்பினை இழப்பாரோ?

கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்

கைகொட்டிச் சிரியாரோ?

என்று கேட்கிறான்.  கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவதும், சுதந்திரத்தை விற்றுச் சுகவாழ்வு பெறுவதும், கைகொட்டிச் சிரிக்கத்தக்க மகாமடத்தனம் என்று என்ன அழகாகச் சொல்கிறான் பாருங்கள்!

சுதந்திர தேவியைத் தொழுதான்

நரகவாதனைகளும், ஹிட்லர் கொலைப் பாதகங்களும், முசோலினி அட்டகாசங்களும் ‘விச்வரூப’மெடுத்து வெம்புலி போல் பாய்ந்தாலும்,

சுதந்திர தேவீ! நினைத்

தொழுதிடல் மறக்கிலேனே

என்று சுதந்திர வேட்கையோடு இரண்டறக் கலந்து நிற்க வேண்டிய உடும்புப் பிடிப்பையும் உருக்கு உறுதியையும் இசை முழக்குகிறான்.

எத்தனை டால் டமாரமடித்து, மினுக்கிப் பிலுக்கிப் போக போக்கியத்தில் திளைப்பவராயினும் சுதந்திரம் இல்லாதவராயின் அவர்களுடைய வாழ்க்கை ‘அணிகள்வேய் பிணம்’ (அலங்காரப் பிரேதம்) போல் பாழானதே என்று ‘நெட்டை நெடு மரங் களுக்கும்’ மண்டையில் உறைக்கும்படி அடித்துக் கூறுகிறான்.  சுதந்திரமில்லா நாட்டில்,

ஆவியங்குண்டோ? செம்மை

அறிவுண்டோ? ஆக்கமுண்டோ?

என்று உலகம் அதிர வினவுகிறான்; அடிமை நாட்டில், காவிய நூல்களும் ஞானக் கலைகளும் விளையாதென்கிறான்.  விடுதலை விழையாத, சுதந்திரத்தைப் பரிபாலிக்காத மக்களைப் ‘பாவிகள்’ என்று சபிக்கிறான்.  சுதந்திரம் இல்லாத நாடு நாடன்று.  நடைபிணங்கள் திரியும் காடு என்று கூறி தமிழகத்தின் கும்பகர்ணத் தூக்கத்தை இரும்புலக்கை கொண்டு கலைக்கிறான்.  சுதந்திரத்தின் பெருமையை நன்றாக உணர்ந்த பாரதி,

கூற்றினுக்குயிர் கோடி கொடுத்தும் நின்

பேற்றினைப் பெறுவோம்

என்று குரல் எழுப்புகிறான்.  இதோடு நிற்கவில்லை.

சுதந்திரம், ஜனநாயகம் என்னும் ‘பேரறத்தினைப் பேணும் நல்வேலி’ என்றும், ‘சோர வாழ்க்கை, துயர் மிடி’ ஆகிய காரிருட் படங்களைக் கிழித்தெறியும் ‘சோதி’ என்றும், ‘வீரருக்கு அமுது’ என்றும் அமுதத் தமிழில் பொழிகிறான்.

இவ்வாறு, பல பாட்டுகள், கண்ணிகள், விருத்தங்கள் மூலம், பொதுப்படையாகச் சுதந்திரத்தின் மாண்புகளை, உலக இலக்கியத்தில் இடம் பெறத் தக்கவாறு தமிழனுக்கு விளக்கி விட்டு, இந்நாட்டுக்கு ஏற்ற ரீதியில் சுதந்திரத்தையும் விடுதலையையும் பற்றிப் பாடுகிறான்.  எல்லோரும் பாடத்தக்க பண் களில் பாடுகிறான் - ‘சுதந்திரப்பள்ளு,’ ‘விடுதலை’ என்ற இரண்டு பாடல்களில்.

ஆனந்த சுதந்திரம் அமைத்தான்

‘ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று’ பாரதி ஆனந்த சுதந்திரப்பள்ளுப் பாடும்போது, ‘வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே’ என்று மாத்திரம் பாடவில்லை.

பார்ப்பானை ஐயரென்ற காலம் போகவேண்டும் (அதாவது வருணாசிரம தர்மம் அல்லது சாதி முறையின் ஆதிக்கம் தவிடு பொடியாக வேண்டும்); எல்லாரும் சமமென்பது உறுதியாக வேண்டும் (அக்கிரகாரங்களும் சேரிகளும் அழிந்து ஒழிந்து, புதிய நகரங்களும் புதிய கிராமங்களும் எழுந்து, வாழ்வில் எல்லாருக்கும் சம சந்தர்ப்பமும், சம உரிமையும் கிடைக்கப்பெற வேண்டும்).  எல்லாரும் ஒன்றெனும் காலம் வரவேண்டும்.  கெட்ட நய வஞ்சகக்காரர்களுக்கு நாசம் வரவேண்டும்.  உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்து, வீணில் உண்டுகளித்திருப்போரை நிந்தனை செய்து, விழலுக்கு நீர் பாய்ச்சியும், வீணருக்கு உழைத்தும் ‘மாய மாட்டோம்’ ‘உடலம் ஓயமாட்டோம்’ என்ற நிலைமை ஏற்படவேண்டும்.  நாமிருக்கும் நாடு நமது என்ற அறிவும், அது நமக்கே உரிமை என்ற போதமும் ஏற்படவேண்டும் என்றெல்லாம் பாடுகிறான்.  பரங்கியைத் துரை என்ற நிலைமை மாறுவதோடு மேற்சொன்ன அத்தனை காரியங்களும் நிறைவேறினால் தான், ஆனந்த சுதந்திரப் பள்ளு பூரணத்துவம் அடையுமென்பது பாரதி கருத்து.

விடுதலை முழங்கிய வீரன்

‘விடுதலை’ப் பாட்டு இன்னும் விளக்கம் தருகிறது.

வெள்ளை அதிகார வர்க்கத்திலிருந்து விடுதலை பெறுவதோடு பாரதி திருப்தி கொள்ளவில்லை.  ‘சாதியால் வந்த சிறுநெறி’யால் தாழ்த்தி மிதிக்கப் பட்ட மக்கள் விடுதலை பெற்றால்தான் உண்மையான விடுதலை வரும் என்று முற்றுத் தெளிகிறான்.  அதனாலேயே, ‘பறையர்க்கு விடுதலை வேண்டும், தீயர்க்கு விடுதலை வேண்டும், புலையர்க்கு விடுதலை வேண்டும்.  பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை வேண்டும்’ என்று அழுத்தந் திருத்தமாகக் கோருகிறான்.  வெறும் விடுதலை மாத்திரமல்ல; அவர்கள் ‘திறமை கொண்ட தீமையற்ற’ தொழிலும் (சுரண்டல் கொள்ளையும் ஒட்டுண்ணிப் பிழைப்புமல்ல, ‘தேர்ந்த கல்வி ஞானமும்’ எய்தி நல்வாழ்வு வாழ்வதே) உண்மை யான விடுதலை என்கிறான்.  ஏழையென்றும் அடிமையென்றும் எவனும் இல்லை என்றும், ஜாதியில் இழிவு கொண்ட மனிதன் இந்தியாவில் இல்லையென்றும், சமூக வாழ்வு அமைந்தால்தான் உண்மையான விடுதலை மலரும் என்றும் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறான்.  கல்வியும் செல்வமும் சகலரும் எய்தி, எல்லாரும் மன மகிழ்ந்து கூடி மனிதர் யாவரும் ஒரு நிகராக வாழவேண்டுமென்கிறான்.  மாதர்களும் ‘தாதரென்ற’ நிலைமை மாறி சரிநிகர் சமானமாக வாழவேண்டுமாம்.

‘ஒரு நாட்டை மற்றொரு நாடு அடிமை கொள்ளும் வரையிலும், முதலாளிகள் தொழிலாளிகளைக் கொடுமை செய்யும் வரையிலும், ஆடவர் பெண்டிரை அடக்கி ஆளும் வரையிலும் நான் நிம்மதியாக இருக்கமாட்டேன்’ என்றான் ரோமன் ரோலண்ட் அவன் பிரெஞ்சுக்காரன்.  பாரதி இந்திய நாட்டான்; அதிலும் தமிழன்.  ஆகவே பாரதி ரோலண்டு மாதிரி மட்டும் போராடவில்லை.  இன்னும் ஒருபடி மேற் சென்று, பார்ப்பானை ஐயரென்ற காலத்தைப் போக்கவும், பறையனும், புலையனும் விடுதலை பெறப் பார்க்கவும் அதாவது சாதி முறையை வேரொடு கில்லி எறியவும் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறான்.

பொய்மை தீர மெய்மை நேர

வருத்த மழிய வறுமை யழிய

வைய முழுதும் வண்ணம் பொரிய

வேண்டுமடி யெப்போதும் விடுதலை அம்மா!

என்ற பாரதி விடுதலை முழக்கத்தை என்றேனும் மறக்க இயலுமா!

நன்றி : ப.ஜீவானந்தம் ஆக்கங்கள்,

பதிப்பு : வீ.அரசு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்