1986ம் ஆண்டு வாக்கில் விடுதலை புலிகளின் தலைவர் திரு. வே. பிரபாகரன் / அதன் அரசியல் பிரிவின் தலைவராக இருந்த திரு.ஆண்டன் பாலசிங்கம்/மற்றும் தமிழீழப் பிரிவினர்களுக்குமாக, நவீன இலக்கியவாதியும், தேர்ந்த படைப்பாளியுமான பிரமிள் எழுதி, உரியவர்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக அறியப்படும் 'இரண்டு கடிதங்கள்' சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. விடுதலைப் புலிகளின் தலைமைக்கு அவர்களின் பெயர்களில் திருத்தம் வேண்டி, நியூமராலஜியின் அடிப்படையில் அறிவுரை கூறுகிற கடிதங்கள் அவை! இந்தக் கடிதங்கள் குறித்த தகவல் நேற்றுவரை யாரொருவரின் கவனத்திற்கும் வந்ததில்லை! சமீபத்தில் வெளிவந்த பிரமிளின் 'பாதையில்லா பயணம்' என்கிற கட்டுரைத் தொகுப்பின் மூலம் இந்தக் கடிதங்கள் இன்றைக்கு வாசகர்களின் கவனத்திற்கு வந்திருக்கிறது. பிரமிளின் இந்தக் கடிதங்களையும், இன்னும் பிற கட்டுரைகளையும் தொகுத்திருப்பவர், பிரமிளின் நண்பரும், லயம் சிற்றிதழின் ஆசிரியருமான கால சுப்ரமணியம்.

Pramilபடைப்பாளி பிரமிள் குறித்து, என்னில் இரண்டு கருத்தில்லை. ஒரே கருத்துதான். அது, அவரது நுட்பம் சார்ந்த எழுத்துகளை வியந்ததிலான உயர்ந்த மதிப்பீடுகளைக் கொண்டது. நவீன இலக்கிய வட்டத்தில் அவரது இயங்குதளம் ஒத்த சீர் கொண்டது அல்ல. இதன்பொருட்டு என்னுள் அவர் சமநிலையற்று, சில நேரங்களில் உயர்ந்தும் / சில நேரங்களில் தாழ்ந்தும் போய் இருக்கிறார். படைப்பாளியாக அவர் சாதித்திருந்தபோதும், அவருக்கே உரிய 'தான்' என்கிற தம்பட்டமும் கொண்டாட்டமும் முகச்சுழிப்பை தருவதாகவே இருந்தது. ஜே.கிருஷ்ணமூர்த்தியை முன்நிறுத்தியும், ஐக்கியபட்டுப்போயும் பேசுகிறவர் இப்படி 'தான்' பாட்டுப் பாடுவதை சகிக்க இயலாது. அதே மாதிரி அவரது கோபமும் கவனம் கொள்ளத்தக்கது.

நியூமராலஜி/ஜோதிடம் முதலியவற்றில் பிரமிள் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவரது ஜோதிட கீர்த்திகள் குறித்து நான் மிகுதியாய் அறியவந்தது இல்லை. ஆனால், அவரது நியூமராலஜி விசேசங்களை நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். கேள்விபட்ட நேரங்களில் எல்லாம் சிரித்தும் இருக்கிறேன். சிற்றிதழ்களில் அவர் தனது பெயரை, பிரமிள் / தர்மு சிவராம் / சிவராம் / தர்மோ ஜீவராம் பிரமிள் என்பதான தினுசுகளில் மாற்றி மாற்றி உபயோகித்து வந்ததைக் கண்டபோது சிரிப்புதான் வரும்.

நியூமராலஜிபடி பிரமிள், தனது பெயரை இப்படி பல தினுசுகளில் மாற்றி அமைத்துக் கொண்டதற்கு மூன்று காரணங்களைப் பிரதானப்படுத்தலாம். 1. வாழ்வின் வெற்றிக்காக / 2. சக எழுத்தாளர்களை மிரட்டுவதற்காக / 3. கிறுக்குத்தனம் அல்லது மூடப் பழக்கவழக்கங்களில் சிக்கிக் கொள்பவராக. இத்தனை பெயர்களை அவர் மாற்றி மாற்றி இட்டு தன்னை அடையாளப்படுத்திக் காட்டிய பிறகும், அவர் தனது வாழ்வின் வெற்றிகளை உள்ளங்கைகளில் ஏந்தினாரா? தமிழ்ப் பரப்பில் நவீனக் கவிதைகள் எழுதும் கவிஞர்களுக்கு என்ன முடிவு கிட்டுமோ(?) அதுதான் அவருக்கும் கிட்டியது.

வாழ்வின் ஓட்டத்தில், அதன் பல்சக்கரங்களில் சிக்கி, சிதைபவர்களை மனதளவில் திடப்படுத்த, தேர்ந்ததோர் வித்தைக்காரன் நிகழ்த்தும் மற்றுமோர் மனோவைத்தியம் என்கிற அளவில்தான் நியூமராலஜியையும்/ஜோதிடத்தையும் நாம் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும். பாதிப்பிற்கு உள்ளாகுபவர்கள் ஆன்மீகம் சார்ந்தவர்களாக இருப்பின் இந்த வைத்தியம், ஜரூராய் வேலைச் செய்ய வாய்ப்புகள் உண்டு. மறைவான ஒன்றின்மேல் நம்பிக்கை கொள்ளும் சுபாவம் ஆன்மீகவாதிகளிடம் எப்பவுமே திடமாக இருக்கும். 'நாம் இந்த எண் மாற்றத்தின் மூலம் சரியாகிவிடுவோம்' என்கிற இன்னொரு நம்பிக்கையும் அவர்களிடம் சேர, அது இரட்டிப்பாகி அவர்களது மனோகட்டுகள் தெறிக்க, சிதைவுகளில் இருந்து எளிதாக கரை சேர்வார்கள்!

கீழே தரப்பட்டுள்ள அவரது இரண்டு கடிதங்களும் பல கோணங்களில் முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், வேலுப்பிள்ளை பிரபாகரன் என்றும்/ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் தலைவராக இருந்த பாலசிங்கம், பாலசிங்கன் என்றும் / LTTE, LTTஎன்றும் அவ்வப்போது வழங்கப்பட்டு வந்ததையும், வழங்கப்பட்டு வருவதையும் காண்கிறபோது பிரமிளின் நியூமராலஜி கணிப்புகளை அந்த அமைப்பு ஏற்றுக்கொண்டிருப்பதையே காட்டுகிறது. தவிர, அந்த அமைப்பினர் இப்படியான கணிப்பைக் கேட்காமல் பிரமிள் தானே முன்வந்து தந்திருக்கவும் வாய்ப்பில்லை.

உடல் நலம்கெட்டு மருத்துவமனைக்கு போகிற போதும் ஜோசியக்காரனை நாடும் நம் நாட்டு அப்பாவி மக்களைப்போல், சிங்கள ராணுவத்தை எதிர்த்து போர்முனையைச் சந்திக்கத் தயங்காத ஓர் இயக்கம் இப்படி நியூமராலஜியை நாடியிருப்பது வேடிக்கை. இந்த இயக்கத்தில் உள்ளவர்களை பிற்போக்குவாதிகள் என்பதாகச் சாடும் ஷோபா சக்தியும், அவர்களை ஒத்தவர்களின் கூற்றும், இந்தக் கடிதங்களின் வழியே மிகைப்பதாகவே படுகிறது. தவிர, தமிழகப் பகுத்தறிவுவாதிகளான பலரும் விடுதலைப் புலிகளை மேல் விழுந்து ஆதரிப்பதையும் யோசிக்க வைக்கிறது.

இந்த நியூமராலஜியை 1986ல் பிரமிள் கணித்துக் கொடுத்த பிறகுதான், தமிழீழத்தில் புதுப்புது பிரச்சனைகள் முளைத்தது. இந்திய ராணுவத்தை விடுதலைப் புலிகள் சந்திக்க வேண்டியிருந்தது. அன்றைய இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியை (ராஜிவ் காந்திக்குகூட நம் பிரமிள் நியூமராலஜி கணித்து கொடுத்ததாக இந்தத் தொகுப்பின் முன்னுரை சொல்கிறது) விடுதலைப் புலிகளின் வீரர்கள் வெடிவைத்து கொல்கிறார்கள். தமிழகத்தில் அவர்களுக்கு இருந்த பொதுமக்களின் முழுமையான ஆதரவு நிலை சிதைகின்றன. தமிழீழத்தில் அப்பாவி பொதுமக்கள் அன்று தொட்டு இன்றுவரை அதிகத்திற்கதிகமாக படுகொலைக்கு ஆளாகின்றார்கள். விடுதலைப் புலிகளின் வெற்றியும்கூட சொல்லிக்கொள்ளும்படி இல்லை!

இந்த இரண்டு கடிதங்களிலும், நியூமராலஜி பகுத்தறிவுக்கு ஒத்துவராதது என்பதான கணிப்பு சிலருக்கு இருப்பதை அறிந்த பிரமிள் அதை அசட்டை செய்துவிட்டு நியூமராலஜியை ஏற்கும்படி தர்க்கம் புரிகிறார். இங்கே அந்த தர்க்கமும் கவனம் கொள்ளத்தக்கது. மொத்தத்தில், பிரமிளின் இந்த இரண்டு கடிதங்களும் விசேசங்கள் பல கொண்டதாகவும் / கவனிப்பிற்குறியதாகவுமே இருக்கிறது.

******************

பெயர் மாற்றம் குறித்து விடுதலை இயக்கத்தினருக்கு இரு கடிதங்கள்.
--------------------------------------------------------------------------------------------

( 1 )


தர்மோ ஜீவ ராம் பிரமிள்,
50, திருவீதியம்மன் கோவில் தெரு
திருவான்மியூர், சென்னை 600 041.
(1986)

திரு. வே. பிரபாகரன் மற்றும்
தமிழீழப் பிரிவினர் ஆகியோரின் பார்வைக்கு,

அன்புடையீர்,

உங்கள் குழுவைச் சார்ந்த அன்பர்கள் சிலரிடம், நேரில் கூறிய விஷயங்கள் இவை. நீங்கள் பரிசீலிக்கக்கூடியவாறு, அது உங்கள் முன் இருக்க வேண்டுமென்றே, அதனை இந்த எழுத்து வடிவில் தர முன்வந்துள்ளேன்.

ஒவ்வொரு விநாடியும், தூக்கத்தில்கூட, ஏதோ தூரத்துக் கதவு தட்டப்படும் ஓசையிலேயே திடுக்கிடும் இலங்கை வாழ் தமிழர் இன்றைய காலகட்டத்தில் அவர்கள் இங்கு வரும்போது, சந்தித்துப் பேசுகிறோம். அவர்கள் அறிவுலகத்துப் பொழுது போக்குகளில் ஈடுபடமுடியாத அப்பட்டமான பயங்கரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள், கடவுளையும் நம்பவில்லை கார்ல் மார்க்ஸையும் நம்பவில்லை. அவர்களுக்கு ஒரே உண்மைதான் உண்டு; எந்தக் கணமும், ராணுவமோ சிங்களக் காடையரோ தங்களை நிர்மூலமாக்கிவிடுவர். இதுதான் அவர்கள் கண்ட, கண்டுகொண்டிருக்கிற, காணப்போகிற வாழ்வு. இந்த நிலையின் தீவிரத்தன்மையை நாம் முதலில் ஏற்றுக்கொண்டே, பின்வரும் விஷயத்தைப் பரிசீலிக்க வேண்டும். பின் வரும் விஷயத்தை, மேலுள்ள தீவிரத் தன்மையினாலேயே உங்களுக்குத் தரப்படுகிறது.

(இதை நாம் ஏற்றுக் கொண்டால், எவ்விதத்திலேனும் அந்த மக்களுக்கு நிவாரணம் தரவேண்டும் என்ற மனோநிலை உடனடியாகப் பிறக்கும். ஆயுதத்தின் மூலமேனும் இதைச் செய்தாக வேண்டும். அதுதான் மனிதன் தேர்ந்துகொள்ள இறுதித் தீர்ப்பு. ஆனால், அதை ஒரு சித்தாந்தமாக்க முடியாது. அதுதான் நிரந்தரமான சக்தி என்றோ, ஒரே ஒரு சக்தி என்றோ முடிவு கட்ட முடியாது. அதற்குச் சரித்திரமும் சரி, தத்துவமும் சரி இடம் தராது. எனவே, ஆயுதத் தீர்வுக்கு இடமே இல்லை என்று கூறுவதும், சரித்திரத்துக்கோ தத்துவத்துக்கோ உடன்படாத ஒன்றுதான். இங்கே எங்கள் பிரச்னை, இந்த அடிமுடிகளை முழுதாக நிர்ணயித்துவிட்டுத் தீர்வுக்கு வரவேண்டும் என்ற வகையான பிரச்னை அல்ல.)

இந்நிலையில், ஆயுதத்துக்குப் புறம்பான எவ்வித உபகரணமும் கூட, இயக்கத்தின் வெற்றிக்கு உந்துதல் தரும்படி வருமானால், அதைப் பற்றி அறிவு வாதம் பண்ண இது நேரமல்ல என்பதையே நான் இங்கு கூற முன்வருகிறேன். திட்டமிட்டுச் செயலாற்றும்போதே, திட்டங்களை மீறி வேலை செய்யக்கூடிய சக்திகளைப் பற்றிய முன்னெச்சரிக்கையும் கிடைக்குமானால், மூடநம்பிக்கையாக அது தோன்றுனாலும்கூட, அதை உபயோகித்தே ஆகவேண்டும். 'நாம் மூடநம்பிக்கை எதையுமே ஏற்கக்கூடாது,' என்ற விதமாகச் சிந்திக்க, இன்றைய இலங்கைத் தமிழரின் நிலை இடம் தராது.

மரணத்தின் பிரசன்னத்தில், மிகக் கடினமான யுத்தகள அநுபவங்களைப் பெற்றவர்கள்கூட, மற்றவேளைகளில் தாங்கள் மூடநம்பிக்கை என்று கொள்கிற ஒன்றை ஏற்றுக் கொள்கிறார்கள். தீவிர மார்ஸீயவாதியும் கியூபப் புரட்சி அனுபவம் பெற்ற போர் வீரருமான, மேஜர் எர்னெஸ்டோ செ குவேராவின் நாள்குறிப்பைப் பாருங்கள். ஒரு மான்குட்டியை அவர், பொலீவிய கொரில்லாக் களத்தில் அதிர்ஷ்டக்குறியாக வைத்திருந்த விபரத்தை அறிவீர்கள். அது ஒரு போராளி செய்த தவறினால் உயிரிழந்தமையும்கூட, செ குவேராவினால் குறிப்பிடப்படுவது கவனத்துக்குரியது.

(மனிதனது மிகத் தீவிரமான கணங்களில், அவனது சகலவிதமான தளங்களும் விழிப்படைய முடியும். அதனை அவன் பின்பற்றுவது, அந்தத் தீவிர நிலையில், 'மூடநம்பிக்கை' அல்ல. தீவிரமற்ற நிலையில், மனிதனது ஆழ்ந்த தளங்கள் விழிப்படைவதில்லை. வெறும் நம்பிக்கையும் மனசின் அலையும்தான் அப்போது இருக்கும். செ குவேராவினது அதிர்ஷ்டக்குறியான மான்குட்டி இறந்தமை, அவரது மரணத்தையே சூசகப்படுத்தியிருக்கிறது. இது, சாதாரண நிலைக்குப் பொருந்திவராத வாதம். ஆனால், செகுவேராவின் பொலீவிய கொரில்லாக் களத்தில் இதற்குரிய இடமே வேறு. பொலீவியாவில், செ குவேராவுக்கும் அவரது கொரில்லா அணிக்கும் ஏற்பட்ட முடிவை நாம் அறிவோம்.

தமிழீழ விடுதலைப்புலியினர், இன்றைய நிலையில் ஏதோ ஒரு 'மூடநம்பிக்கை'யை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால், அது செ குவேரா செய்தததை ஒத்ததாகவே இருக்கும். இன்றைய அநுபவத்தை நாளை ஞாபகத்தில் வைத்திருக்கப் போகிற இலங்கைத் தமிழருக்கு, இதை விளக்க வேண்டியதில்லை. தங்களை ரட்சிப்பதற்காக விடுதலைப்புலியினர் மூடநம்பிக்கைகளைக்கூட ஏற்றனர் என்றுதான், அவர்கள் கணிப்பார்கள். இதன் காரணம் தேவைதான். நேற்றைய தேவைகள் இன்று இல்லை. எனவே, நேற்றைய மூடநம்பிக்கைகள் இன்று தேவையில்லை, ஆனால் நவீன தேவைகள் வந்துவிட்டன. இது நவீன மூடநம்பிக்கைகளையும் கொண்டு வந்துள்ளன.

(ஜனசக்திக்கும் முன்னணி விஞ்ஞானத்துக்கும் முடிச்சுப் போட்டு, ஒரு செயல் ரீதியான அரசியல் சித்தாந்தத்தை உருவாக்க முடியாது. பொதுவாக உலகில் இன்று அது, மார்க்ஸீய அறிஞர்களாலும் தீரங்களாலுமே உயிர்த்திருக்கிறது. அதைத் தளமாகக் கொண்ட அரசுகளின் பிரச்சாரச் சக்திகளின் மூலமும் மக்களது முடிவுக்கு புறம்பான கருவிகள் மூலமும்தான் ஜீவித்து வருகின்றன. ஓட்டெடுப்பின் வழியில் ஜனங்களால் நிர்ணயிக்கப்படுகிற மார்க்ஸீய அரசுகள், தங்களது விஞ்ஞானப் பார்வைகளைத் துறந்தே, அதைச் சாதித்துக் கொள்கின்றவை; அல்லது மிக இக்கட்டான நிலையில் மிகப் பெரிய வாக்குறுதிகளை - பொருளாதார விஞ்ஞானத்திற்கு எதிரான மூட நம்பிக்கைகளை எழுப்பும் வாக்குறுதிகளை - உபயோகித்தே, அந்த அரசுகள் ஜனசக்தியின் ஆதரவைப் பெறுகிகின்றன. இதற்குச் சரித்திரப் பிரசித்தமான அத்தாட்சி, ரஷியப் புரட்சி வீரர்களின் கையிலிருந்து லெனினைத் தலைவராகக் கொண்ட போல்ஷவிக் குழுவினர் அதிகாரத்தைக் கைப்பற்றியமை.)

(எனவே மார்க்ஸீயம், அதிகாரப் பொறுப்பேற்றிற்காக நவீனதேவைகளிலிருந்து பிறக்கும் மூடநம்பிக்கைகளை உபயோக்கிற ஒன்று தான். நிலைமை இப்படி இருக்கையில் ஒரு ஜனசமூகத்தை ரட்சிப்பதற்காக மூடநம்பிக்கையை உபயோகிக்கக்கூடாது என்பது பொருத்தமற்றது. கையில் அகப்படும் துரும்பைக்கூடப் பிடிக்க வைக்கிற பிரளய நிலைக்கு இயக்கம் வந்துவிடவில்லை என்பதையே இது காட்டும். அப்படி யோசித்துதான் முடிவு கட்டுவோம் என்றால் இத் துறை சம்பந்தமான பரிசீலனைகளிலும் இறங்க வேண்டும்.)

இன்றைய விஞ்ஞானம் என்பது, தொழில்நுட்ப ரீதியாகவும் அழிவுக்கருவி ரீதியாகவும்தான் வளர்ந்திருக்கிறது. இது, வெளிப்படையுலகின் துறைகளைச் சார்ந்த வளர்ச்சி மட்டுமே. நான் குறிப்பிடும் விஷயம், இந்த வெளிப்படை உலகைவிட நுட்பமானது. மன உலகம் சம்பந்தமானது. இந்த நுட்ப உலகத்தைப் பற்றிய ஆய்வுகள் நடந்திருக்கின்றன - நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், கல்வி முறைகள் மூலம் இவை பரவவில்லை. இதற்காக, நான் குறிப்பிடும் விஷயம் விஞ்ஞானப் பூர்வமானதல்ல என்று முடிவு கட்ட ஆதாரமில்லை.

இந்த மாற்றங்கள், ஜனங்களின் கண்களுக்கு விசித்திரமாகப் படமாட்டா என்பதில், இவற்றைக் கடைபிடிப்பதில் ஏதும் சிக்கல் ஏற்பட இடமில்லை. இத்தகைய விஷயங்கள், விஞ்ஞானரீதியாகப் பரீட்சிக்கப்படாமலே ஒதுக்கப்படுமானால், அது முரட்டுப் பிடிவாதமேயாகும். உலகம் தட்டையானது என்பது கண்கூடு. ஆனால், மிகுந்த நுட்பத்துடன் நாம் அவதானித்தால்தான், இது தவறு, உலகம் உருண்டையே என்பதை அறியலாம். இந்த நுட்ப அவதானம் அல்லாத பார்வையே, பிடிவாதப் பார்வை. இன்றும் மேனாடுகளில், உலகம் தட்டையானது என்ற நம்பிக்கையை ஆதரிப்போரின் சங்கங்கள் உள்ளன. பிரத்யட்சமாகக் காணக் கூடியதை மட்டுமே நம்புவோம் என்ற கோட்பாடு அவர்களுடையது. தங்களை அவர்கள், விஞ்ஞானப் பூர்வமானவர்களாகவே நம்பிக்கைக் கொள்கிறார்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுக் குழுவைச் சார்ந்த அன்பர்கள் சிலரிடம், நான் தந்த விபரங்கள் பின் வருமாறு; ஆங்கிலத்தில் PRABHAKARAN என்று எழுத்துக் கூட்டப்படல் வேண்டும். அவர் பிரபா, அதாவது PRABHA என்று அழைக்கப்பட வேண்டும். LTTE என்பதை LTT என்று கொள்ள வேண்டும். LIBERATION TIGER OF TAMIL - EELAM என்பதை முதலில் கூறிப் பின்பு LTT என்ற சுருக்கத்தைச் செய்திச் சுருள்களில் தருவது இதற்கு உபாயமாகும்.

பிரபாகரனின் கையெழுத்து, தமிழில் வே. பிரபாகரன் என்றிருப்பதை ஒட்டி, அவரது கடிதங்கள் முதலியவற்றில் அவரது பெயர், ஆங்கிலத்தில் VE. PRABHKARAN என்றிருக்கவேண்டும். பாலசிங்கம் தமது பெயரை, BALASINGHAN பாலசிங்கன் என்று உபயோகிக்க வேண்டும். இதில் எதுவுமே விசித்திர மாற்றமல்ல. PRABHKARAN தான் சரியான எழுத்துக் கூட்டல். LTTயின் இறுதி தமிழீழம் என்ற ஒரே பெயரைக் குறிக்கும். பாலசிங்கம், பாலசிங்கன் என்பவை வேறுபாடானவையல்ல. இதனால், எவ்வித நம்பிக்கைக்கும் ஏற்ப நடக்கும்படி இந்த ஆலோசனைகள் தரப்படுவதாக நீங்கள் நினைக்க வேண்டியதில்லை. சரியான எழுத்துக் கூட்டல் என்ற காரணமே போதுமானது.

உங்களின் நலனை நாடுவதன் மூலம்
இலங்கை வாழ் தமிழரின் நலம் நாடும்,
பிரமிள்


தொகுப்பாசிரியர் குறிப்பு: அனுப்பப்பட்ட கடிதத்தில் சாய்வெழுத்தில் (இங்கே, அடைப்பு குறிக்குள் - தாஜ்) உள்ள வரிகள் நீக்கப்பட்டிருக்க வேண்டும். கையெழுத்திலுள்ள மூலப்பிரதியில் இவை அடிக்கப்பட்டுள்ளன.

*******************

( 2 )

16.11.1986

உயர்திரு வேலுப்பிள்ளை பிரபாகரன்,
தலைவர், தமிழீழ விடுதலைப் புலிகள்.

அன்புடையீர்,

ஏற்கனவே பின்வரும் விஷயம் பற்றி, உங்களுக்கும் அரசியல் பிரிவு நண்பர்களுக்கும் எழுதியுள்ளேன். இது, எனது இரண்டாவது வேண்டுகோள். இதற்கு ஆதாரமாக, இரண்டு முக்கிய நிகழ்ச்சிகளை முதலில் பார்க்கலாம்.

TELO=19. இந்த எண்ணிக்கை, குற்றவாளிகளுக்குப் பயன்படாது. இறுதியில் உள்ள 'O' மக்களுக்கு இசைய நடந்துகொள்ள அநுமதிக்காது.

EPRLF=26, இந்த எண்ணிக்கை, குற்றவாளிகளை உடனே பிடிபடவைத்துவிடும். அது மட்டுமல்ல, இந்த எண் உள்ள நல்லோரும், தாம் செய்யாத குற்றத்துக்காகத் தண்டிக்கப்படுவார்கள். கட்டுப்பாடு அற்ற ஒலியுமாகும்.

V. PIRABHAKARAN= 6+26 = 32.

இந்த வடிவில் முக்கியமான எண்கள் 26, 32 இரண்டுமே செயல்படும், EPRLF செய்த காரியங்களின் விளைவு நேரடியாக உங்களையும் முழு இயக்கத்தையும் பாதித்துள்ளது. காரணம், 26 எண்ணின் தொடர்பு.

பொதுவான கணிப்பில் நீங்களே தமிழீழ இயக்கத்தின் தலைவராதலால், உங்களைப் பாதிப்பது எதுவும் இயக்கத்தின் பொதுமையினுள் அடங்குகிற யாவரையும் பாதிக்கும். எனவே, இதரக் குழுக்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

32 எண், கவர்ச்சியையும் வீரச் செயலையும் புகழையுமே குறிக்கும். மற்றபடி அது, மேலேறும் சாத்யத்தை அளிக்காது.

உங்களது பிறந்த எண்கள் பற்றி நீங்கள் அறிவீர்கள் எனத் தெரிகிறது. 26ந்தேதி, 2+6 = 8 எண் உள்ள பெயரின் மூலம் நன்மை செய்யாது. நிறைவேற்ற முடியாத, அல்லது அசாத்தியமான நிலைமைகளையே உருவாக்கும். இப்பொழுது, தமிழக மக்களின் கசப்பு என்ற பெருமதில் உங்கள் எதிரே நிற்கிறது. இதற்கு நேரடிக் காரணங்களுள் ஒன்று, உங்கள் பெயரின் உள்ளே இருக்கும் 26.

உங்கள் மீது தமிழக மக்கள் கசப்புக் கொள்வது, மத்திய அரசுக்கு 'தீர்வு' காண 'வசதி' தரும் என்பதை எல்லாம் விளக்க வேண்டியதில்லை.

எளிதாகப் பெயர் மாற்றப்பட இரண்டு வழிகள் உள்ளன; V. PIRABHAKARAN = 6 + 31 = 37.

இதில், 31 சற்றே சிரமம் தரும். ஆனால், 26 நிர்மூலமாக்காது. 37க்கு 32ன் குணங்கள் இருந்தாலும், அதைவிட உறுதியான ஆதரவுகளையும் படியேற்றத்தையும், வெகு அதிர்ஷ்டகரமான மாற்றங்கள் மூலம் ஏற்படுத்தும். ஏற்கெனவே, உங்கள் பெயரை முழுவதுமாக எழுதும்போது VELUPILLAI இதே எண்ணாக உதவி செய்தும் இருக்கிறது. எதிர்பாராத நட்பையும் உதவியையும் இது தரும்.

இரண்டாவது, முழுப் பெயர் வடிவம் இயங்குமாதலால், VELUPILLAI PIRABHAKARAN = 37 + 31 + 68. இந்த 68 அபூர்வமான வழிமுறைகள் மூலம் உங்களுக்கு உதவும். இதற்கு முந்திய, இப்போது உள்ள முழுப்பெயர். சூழ்ச்சிகளுக்கும் ஆபத்துக்களுக்கும் வாழ்வை இரையாக்கக் கூடியது. வணக்கம்.

அன்பு,
பிரமிள்.

***************************************
நன்றி: பாதையில்லா பயணம் / கட்டுரைத் தொகுப்பு / பிரமிள்.
வடிவம் & தட்டச்சு : தாஜ்

Pin It