(சென்ற இதழ் தொடர்ச்சி)

ஜெர்மானியர்களான சீகன்பால்க், குருண்டவர் ஆகியோரின் கடின உழைப்பால் அச்சு வடிவம் பெற்ற தமிழ் விவிலிய மொழிபெயர்ப்பு முற்றுப்பெறாப் பணியாக அவர்களுக்குப் பின்னரும் தொடர்ந்தது. Ôகத்தோலிக்கம்Õ, Ôசீர்திருத்தக் கிறித்தவம்Õ என்ற இரு கிறித்தவப் பிரிவுகளைச் சேர்ந்த அய்ரோப்பியக் குருக்களும், இவ்விரு பிரிவுகளைச் சேர்ந்த தமிழ்க் கிறித்தவர்களும் இப்பணியில் ஈடுபட்டனர். மொழி என்பதன் அடிப்படையில் சிரிலங்காவின் தமிழ்க் கிறித்தவர்களும் அங்குப் பணியாற்றிய அய்ரோப்பியக் குருக்களும் இதில் அடங்குவர்.

தமிழ் விவிலிய மொழிபெயர்ப்பில் பரவலாக அறிமுகமானவர்களை மட்டுமின்றி அவ்வளவாக அறியப் படாதவர்களையும் இந்நூல் அறிமுகம் செய்கிறது.

பிரான்சிஸ்கோ-டி-பொன்சேகா என்ற யாழ்ப் பாணத் தமிழ்க் கிறித்தவர் மத்தேயூ எழுதிய நற்செய்தி ஏட்டை போர்ச்சுக்கீஸ் மொழியில் இருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 17-ஆம் நூற்றாண்டில் வெளியான இம்மொழிபெயர்ப்பு இலங்கைத் தமிழர் களால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கி.பி.1736-இல் டச்சு நாட்டினர் சிரிலங்காவில் அச்சாக்கத்தை அறிமுகம் செய்தனர். அடால்ப் கிராமர் என்பவர் புதிய ஏற்பாட்டின் சில பகுதிகளை 1732-இல் தமிழில் மொழி பெயர்த்திருந்தார். டச்சு ஆளுநரின் ஆதரவு இவருக்கு இருந்தது. தரங்கம்பாடியில் சீகன்பால்க் அச்சிட்ட தமிழ் விவிலியத்தை இப்பகுதியில் பயன்படுத்தி வந்தனர். கிரேக்க மொழி மூலத்தைத் தழுவியே கிராமரின்  மொழிபெயர்ப்பு  இருந்தது. டச்சு ஆளுநரின் வேண்டுதலின் பேரில் தரங்கம்பாடியில் இருந்து அச்செழுத்து வார்ப்பவர் ஒருவர் கொழும்பு நகருக்கு 1737-இல் வந்து புதிய அச்செழுத்துக்களை உருவாக்கித் தந்தார். இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்தி 28 ஏப்ரல் 1739-இல்  மன்றாட்டு நூல் ஒன்று அச்சானது.

1741-இல் கிராமர் மொழி பெயர்த்திருந்த மத்தேயூ நற்செய்தி 120 பக்கங்களாக கொழும்பு நகரில் டச்சு நாட்டினர் நிறுவியிருந்த அச்சகத்தில் அச்சானது. தரங்கம்பாடியில் அச்சான புதிய ஏற்பாட்டை ஓரளவுக்கு ஒத்திருந்த இந்நூலின் தலைப்பு டச்சு மொழியில் இருந்தது. தமிழிலும் தலைப்பு அச்சிடப்பட்டிருந்தது.

தரங்கம்பாடியில் அச்சான விவிலியத்தில் வசனங் களின் தொடக்கத்தில், வசனஎண் இடம் பெற்றிருந்தது. கொழும்பு நகரில் அச்சான விவிலியத்தில் வசனங்களின் இறுதியில் வசனஎண் இடம் பெற்றிருந்தது. (தரங்கம் பாடியில் தொடக்கத்தில் அச்சான புதிய ஏற்பாட்டிலும் இம்முறையே பின்பற்றப்பட்டிருந்தது.) வடமொழித் தாக்கம் இம் மொழிபெயர்ப்பில் மிகுந்திருந்தது. சான்றாக தரங்கம்பாடி மொழிபெயர்ப்பில் ‘பிறந்தார்’ என்றிருப்பது கொழும்பு நகரில் வெளியான மொழி பெயர்ப்பில் ‘செனிப்பித்தார்’ என்றிருந்தது. யகோவா என்பது ‘யகோவாகிய சர்வேஸ்வரன்Õ என்று குறிப்பிடப் பட்டிருந்தது. இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்ற வகையில் தரங்கம்பாடிப் பதிப்பு மாறுதல் செய்யப்பட்டிருந்தது. வீரமாமுனிவர் மேற்கொண்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தங்கள் இப்பதிப்பில் பின்பற்றப்பட்டிருந்தது. (இந்நூலின் ஒரு படி கொழும்பு அருங்காட்சியகத்தில் உள்ளது).

பிலிப்பிஸ்-டி-மெல்லா என்ற யாழ்ப்பாணத் தமிழர் கொழும்பு நகரில் இருந்த டச்சு ஆளுநரிடம் பணி யாற்றியவர். இவர் ஹீப்ரு, கிரேக்கம், லத்தீன், டச்சு, போர்ச்சுக்கீஸ், தமிழ் ஆகிய மொழிகளில் புலமைமிக்க வராய் இருந்தார். அத்துடன் கொழும்பில் இறையியல் பயின்றார். இதன் அடிப்படையில் லீடன் நகரில் மறைக் கல்வி பயின்று இலங்கையின் மறைப்பணியாளராகும் வாய்ப்பைப் பெற்று ஹாலந்து திருச்சபையின் முதல் உள்நாட்டுக் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

கிரேக்க மொழியில் இருந்து பழைய ஏற்பாட்டின் பதிமூன்று சங்கீதங்களை இவர் மொழிபெயர்க்கத் தொடங்கி 1755-இல் யாழ்ப்பாணத்தில் இதை அச்சிட்டார். நூலின் தலைப்பு டச்சு மொழியிலும், தமிழிலும் அச்சிடப்பட்டது. இராச தீர்க்க தரிசியாகிய தாவிதுனுடைய சில சங்கீதங்கள் என்று தமிழில் தலைப்பு இடப்பட்டிருந்தது. மொத்தம் 112 பக்கங் களைக் கொண்ட இந்நூல், மூலநூலில் உள்ளபடியே கவிதை வடிவில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. அய்ரோப்பிய இசைக்கு ஏற்ப இவற்றைப் பாடமுடியும். இந்நூலின் மறுபதிப்பு 1776-இல் வெளியானது.

தரங்கம்பாடியில் அச்சான தமிழ் விவிலிய மொழிபெயர்ப்பு, பிலிப்ஸ் - டி - மெல்லாவுக்கு நிறை வளிக்காத நிலையில் புதிய ஏற்பாட்டை கிரேக்க மூலத்தைப் பின்பற்றி மொழிபெயர்க்கலானார்.

1746-இல் அவர் தொடங்கிய இப்பணி முற்றுப் பெற்று டிசம்பர் 1759-இல் அச்சு வடிவம் பெற்றது. டச்சு மொழி பேசுவோரின் உதவியால் அச்சிடப்பட்ட இந் நூலின் தலைப்பு டச்சு மொழியிலும் அமைந்திருந்தது. தற்போது வெளியாகும் விவிலியப் பதிப்புகளைப் போன்றே ஒவ்வொரு பக்கமும் இரண்டு பத்திகளாக (காலம்) பகுக்கப்பட்டிருந்தது.

புதிய ஏற்பாடு என்றே தமிழில் தலைப்பிடப்பட்ட இந்நூல் 256 பக்கங்களைக் கொண்டிருந்தது. இலங் கையில் அச்சான முதல் தமிழ்ப் புதிய ஏற்பாடு இதுதான்.

புதிய ஏற்பாடு அச்சாக்கத்தை அடுத்து டச்சுக் காரர்கள் பழைய ஏற்பாடு அச்சாக்கத்தில்  ஈடுபாடு காட்டலாயினர். தரங்கம்பாடியில் 1723, 1726, 1727, 1728-ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட ‘பழைய ஏற்பாடு’ குறைபாடுடையதாகக் கருதப்பட்டது. சிறிலங்காவிலும், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்திய டச்சு நாட்டினர் இப்பகுதிகளில் வாழும் தமிழ்க் கிறித்தவர்களுக்காக பழைய ஏற்பாடு நூலின் திருத்திய வடிவத்தை அச்சாக்க விரும்பினர்.

இதை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்கனவே விவிலிய மொழி பெயர்ப்பில் ஈடுபட்டிருந்த பிலிப்ஸ்-டி-மெல்லாவிடம் ஒப்படைத்தனர். அவரும் ஹீப்ரு மொழியில் இருந்து  சில பகுதிகளை மொழிபெயர்த்தார். இம் மொழிபெயர்ப்பு தொடர்பாகத் தரங்கம்பாடியில் இருந்த கிறித்தவ மறைப்பணியாளர்களுக்கும், கொழும்பில் இருந்த டச்சு நாட்டு அதிகாரிகள், மறைப்பணியாளர் களுக்கும் இடையே கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன.

19 ஆகஸ்டு 1790-இல் டி-மெல்லோ இறப்பதற்கு முன் அவரது மொழிபெயர்ப்புப் பணி நிறைவடைந்து விட்டது.

ஜோனான் பிலிப்ஸ் பெப்ரிஷியஸ் (1711-1791) என்ற ஜெர்மானியர், ஹாலே நகரில் இறையியல் கல்வி பயின்றவர். 1740-இல் தரங்கம்பாடி வந்த இவர் அங்கு சிலகாலம் மறைபரப்புப்பணி மேற்கொண்டு வந்தார். 1743-இல் ஆங்கில அதிகாரத்தில் இருந்த சென்னை நகருக்கு இடம்பெயர்ந்தார்.

சென்னை நகரில் முத்து என்ற தமிழ் அறிஞரின் துணையுடன் சீகன் பால்குவின் தமிழ் விவிலிய மொழி பெயர்ப்பை, திருத்தி அமைக்கும் பணியில் ஈடுபட்டார். சீகன்பால்குவின் தமிழ் மொழிபெயர்ப்பு ஹீப்ரு மொழி மூலத்தை அடிப்படையாகக் கொண்டது. இவர் கிரேக்க மூலத்தை அடிப்படையாகக் கொண்டு திருத்தி எழுதும் பணியில் ஈடுபட்டார். இப்பணியில் முப்பது ஆண்டுகள் செலவிட்டார்.

இறுதியாகச் சென்னை வேப்பேரி அச்சகத்தில் நான்கு நற்செய்தி ஏடுகளையும், அப்போஸ்தலர் நடபடிக்கைகளையும் உள்ளடக்கிய புதிய ஏற்பாட்டின் தமிழ் மொழிபெயர்ப்பு 1772-இல் ஆயிரம் படிகள் அச்சிடப்பட்டு வெளியானது. இந்நூலின் பின்னிணைப்பில் முக்கிய கிறித்தவப் பண்டிகைகளின் பட்டியல் இடம் பெற்றிருந்தது. இந்நூலின் தலைப்பு நமது கர்த்தரும் இரட்சகருமாகிய யேசு கிறிஸ்துவினால் உண்டான கிருபையின் உடன்படிக்கையாகி புதிய ஏற்பாடு என்பதாகும்.

ஹீப்ரு மொழியில் வெளியான விவிலியத்தின் பழைய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணியிலும் பெப்ரிஷியஸ் ஈடுபட்டார். இதற்காக

அவர் இருபதுஆண்டுகள் செலவிட்டுள்ளார். இம் முயற்சியில் ஏற்கனவே தரங்கம்பாடியில் வெளியான பழைய ஏற்பாடு தமிழ் மொழிபெயர்ப்பைப் பயன் படுத்திக் கொண்டாலும், அதை அப்படியே பின் பற்றாமல் சுயேச்சைத் தன்மையுடன் செயல்பட்டார். அவரது மொழிபெயர்ப்பு கடலூரில் இருந்த மறைப் பணியாளர்களுக்கு, கருத்தறியும் நோக்கில் அனுப்பப் பட்டது. அவர்கள் அதைப்படித்து டேனிஷ் அரசின் தமிழ் மொழிபெயர்ப்பாளராக இருந்த டேனியல் பிள்ளையிடம் அனுப்பினார்கள். இவர்கள் செய்த திருத்தங்கள் பெப்ரிஷியசின் மொழிபெயர்ப்பைச் செழுமைப்படுத்தின.

தமிழை நன்கறிந்த ஜோனான் பீட்டர்ராட்லர் என்பவரின் சிறப்பான மேற்பார்வையில் தரங்கம்பாடியி லுள்ள மறைத்தள அச்சகத்தில் நான்கு தொகுதிகளாக 367 பக்கங்களில் அச்சிடப்பட்டது. அச்செழுத்துக்கள் பெரிய அளவில் இருந்தமையால் அச்சிடும்போது பக்கங்கள் கூடின. இக்காரணத்தால் நான்கு தொகுதி களாக அச்சானது. முதல் தொகுதி 1777-இல் மனுஷசாதி ரட்சிக்கப்படுவதற்காக சர்வோகத்தய பராபரனான கர்த்தர் அருளிச் செய்த சத்திய வேதம் முதலாம் பங்கு என்ற தலைப்புடன் வெளியானது. நூலின் தலைப்பு இலத்தீன் மொழியிலும் அச்சாகியிருந்தது.

இரண்டாவது தொகுதி 1782-இல் தரங்கம்பாடியில் 320 பக்கங்களில் வெளியானது. மூன்றாவது தொகுதியும், நான்காவது தொகுதியும் அதே தரங்கம்பாடி அச்சகத்தில் முறையே 1791, 1796-ஆம் ஆண்டுகளில் அச்சாயின. முதல் தொகுதியைப் போன்றே, ஏனைய மூன்று தொகுதி களுக்கும் ஒரே தலைப்பு இடப்பட்டிருந்தது. மூன்றாவது தொகுதி 130 பக்கங்களையும் நான்காவது தொகுதி 287 பக்கங்களையும் கொண்டிருந்தன.

பெப்ரிஷியசின் மொழி குறித்தும் இலக்கணப் பிழைகள் குறித்தும் சில விமர்சனங்கள் வெளிவந்தன. ஆயினும் மூல மொழியை அவர் நன்றாகப் பின்பற்றி யுள்ளார் என்பதைப் பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கல்கத்தா அருகிலுள்ள சிராம்பூரில் டேனிஷ் மறைத்தள அச்சகத்தில் புதிய ஏற்பாடு தமிழ் மொழி பெயர்ப்பு 1813-இல் அச்சானது. இதே அச்சகத்தில் கிறிஸ்டியான் டேவிட் என்பவர் மொழிபெயர்த்த ‘சங்கீதங்கள்’ 1818-இல் வெளியாகியுள்ளது. சென்னையில் பணியாற்றிய ஜோனான் பீட்டர்ராட்லர் என்பவரும் ‘சங்கீதங்கள்’ பகுதியை மொழி பெயர்த்தார். 1819-இல் சென்னையில் இது வெளியாகியுள்ளது.

* * *

தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் ஆங்கிலக் காலனியம் நிலைப்பெற்ற பின்னர் ஆங்கில மொழியில் விவிலியத்தை மொழிபெயர்க்கும் பணி நடைபெற லாயிற்று. யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட மெதாடியஸ்ட் மறைத்தளத்தைச் சேர்ந்த பீட்டர் பெர்சிவல் என்ற ஆங்கிலேயக் குரு ஆங்கிலத்தில் இருந்து தமிழில் விவிலியத்தை மொழிபெயர்த்துள்ளார். இம்மொழி பெயர்ப்புப் பணியில் அழுத்தமான சமயவாதியான ஆறுமுக நாவலர்  என்பவரை உதவியாளராக அமர்த்தி யிருந்தார்.

1840-இல் இம் மொழிபெயர்ப்புப் பணித் தொடங்கியது.  மெதாடியஸ்ட் பிரிவு இப்பணியை மேற் கொண்டிருந்தாலும், ஆங்கிலிகன் திருச்சபையையும் இணைத்துக் கொண்டது. 1611இல் வெளியான அதிகாரப்பூர்வமான ஆங்கில மொழிபெயர்ப்பையே சொல்லுக்கு சொல் அப்படியே பின்பற்றவேண்டும் என்றும் மரபுச் சொற்களும், நிறுத்தற்குறியீடுகளும் கூட மாறாதிருக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.

1850-இல் அச்சான இம் மொழிபெயர்ப்பை, இங்கிலாந்து & வெளிநாட்டு விவிலியச் சங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை.

மூலநூலைப் பின்பற்றவில்லையென்றும் இந்தியத் தமிழ் நடையானது யாழ்ப்பாணத் தமிழ் நடையில் இருந்து வேறுபட்டது என்றும் அவ்வமைப்பு சுட்டிக் காட்டியது. அத்துடன் ஏராளமான வடமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளதையும் கூறியது.

விவிலியக் கருவி நூல்கள்

விவிலிய மொழி பெயர்ப்பையட்டி விவிலிய அகராதிகள் சிலவும் உருவாயின. விவிலிய மொழி பெயர்ப்பின்போது அவர்கள் உருவாக்கிப் பயன்படுத்திய விவிலியச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு அகராதிகளை உருவாக்கியுள்ளனர்.

பெஞ்சமின் சுவோட்ஸ் என்பவர் 1728-இல் தமிழ், தெலுங்கு மொழிகளுக்கான புதிய ஏற்பாடு அகராதியை உருவாக்கி உள்ளார். 1722-இல் வெளியான புதிய ஏற்பாடு தமிழ் நூலில் பயன்பட்ட சொற்களை தமிழர்கள் புரிந்துகொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டது. ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள ஃபிராங்கே ஃபவுண்டேஷன் ஆவணக்காப்பகத்தில் இந்நூலின் படி ஒன்றுள்ளது.

இதே ஆசிரியர் 1728-இல் பழைய ஏற்பாட்டிற்கான அகராதி ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளார்.

பல நூல்களைத் தொகுத்து உருவாக்கப்பட்டதே விவிலியம். இவ்வாறு தொகுக்கும்போது சில பகுதிகளை நீக்கியுள்ளார்கள். இப்படி நீக்கியுள்ள பகுதி அப்போ கிரைபா எனப்பட்டது. இது சராசரிக் கிறித்தவர்களின் பயன்பாட்டிற்குரியதல்ல. கிறித்தவக் குரு மாணவர்கள் மற்றும் குருக்கள் பயன்பாட்டிற்குரியதாக மட்டுமே அப்போகிரைபா விளங்கி வருகிறது. ஆயினும் இதற்கும் அகராதி தயாரித்து 1728-இல் வெளியிட்டுள்ளார்கள். பிலிப்-டி-மெல்லா விவிலியத்தில் வரும் பொருள் விளங்காச் சொற்களை அகரவரிசைப்படுத்தி அகராதி போன்று தமது தமிழ் விவிலிய மொழிபெயர்ப்பில் அச்சிட்டிருந்தார். இது 1790-இல் வெளியானது.

தமிழ் விவிலியத்தில் பயன்படுத்தப்பட்ட கலைச் சொற்களின் உண்மையான பொருளை உணர்ந்து கொள்ளும் வகையில் வேத அகராதி என்ற பெயரில் அகராதி ஒன்றை 1841-இல் ஹென்றிபவர் வெளியிட்டார்.

இதுவரை அறியாத சமய, இறையியல் சொற்களின் அறிமுகம் விவிலிய மொழிபெயர்ப்பினால் தமிழ் மொழிக்குக் கிட்டியது. இச்சொற்களுக்குப் பொருத்த மான பொருளை அறிய மேற்கூறிய அகராதிகளின் உருவாக்கம் நிகழ்ந்துள்ளது.

கத்தோலிக்கர்களின் விவிலிய மொழிபெயர்ப்பு

அய்ரோப்பாவில் உள்ள கத்தோலிக்கத் தேவாலயங் களில் வழிபாட்டின்போது விவிலியம் உரக்க வாசிக்கப்படும். போர்ச்சுக்கீசியர்களால் தமிழ்நாட்டில் அறிமுகமான கத்தோலிக்கத்திலும் இம்முறையே கடைப் பிடிக்கப்பட்டது. கிறித்தவ சகாப்தத்தின் தொடக்கத்தில் மக்களால் பேசப்பட்ட இலத்தீன் மொழியிலேயே விவிலியம் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டிலும் போர்ச்சுக்கீசியர் இலத்தீன் விவிலியத்தையே பின் பற்றினர்.

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் அவர்கள் ஆதிக்கம் செலுத்தியபோது அவர்களால் கத்தோலிக்க ராக்கப்பட்ட மக்களுக்கு விவிலியத்தை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கிருந்தது. தமிழ் மொழி மட்டுமே அறிந்திருந்த மக்களுக்கு விவிலியத்தில் இருந்து தேர்ந்தெடுத்த சில பகுதிகளை மட்டுமே லத்தின் விவிலியத்தில் இருந்து தழிழில் மொழி பெயர்த்துக் கற்றுக் கொடுத்தனர்.

இம்முயற்சியில் யேசுவின் சீடர்களில் ஒருவரான மத்தேயூ எழுதிய நற்செய்தி ஏட்டில் இடம்பெறும் ‘பரலோக மந்திரம்’ (மத்தேயூ: 9-13) எழுத்து மொழி பெயர்ப்பாக ‘கார்த்தியா’ என்ற தலைப்பில் 1554-இல் போர்ச்சுக்கல் நாட்டு லிஸ்பன் நகரில் அச்சானது. இதனையடுத்து சேசுசபைத் துறவியர் விவிலியத்தில் இருந்து தேர்ந்தெடுத்த பகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்து பனை ஓலைச் சுவடிகளில் எழுதி, புதிய கத்தோலிக்கர்களிடம் சுற்றுக்கு விட்டனர். அண்ட்ரிக் அடிகளார் என்ற சேசுசபைத் துறவி புதிய ஏற்பாட்டில் இருந்து சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து தமிழில் மொழிபெயர்த்து, அவர் அச்சிட்ட நூல்களில் இடம் பெறச் செய்தார். 1578-இல் அச்சிட்ட ‘தம்பிரான் வணக்கம்’ என்ற நூலின் இறுதியில் மத்தேயூ நற்செய்தி ஏட்டில் இடம்பெறும் யேசுவின் மலைப்பொழிவில் இருந்து சில பகுதிகள் இடம் பெற்றுள்ளன.

1586-இல் அண்ட்ரிக் அடிகளார் அச்சிட்ட அடியார் வரலாறு என்ற நூலில் புதிதாகக் கிறித்தவத்தைத் தழுவிய தமிழர்களுக்குப் பயன்படும் நோக்கில், யேசுவின் பிறப்பு தொடங்கி அவர் சிலுவையில் அறை யுண்டது வரையிலான நிகழ்வுகளை எழுதியுள்ளார். இப்பகுதிகள் புதிய ஏற்பாட்டைத் தழுவியே எழுதப் பட்டுள்ளன. போர்ச்சுக்கீசிய மொழிச் சொற்களை எழுத்துப் பெயர்ப்பாக இம் மொழிபெயர்ப்பில் பயன்படுத்தியுள்ளார்.

இவரையடுத்து வந்த சேசுசபைத் துறவிகள் சிலரும் விவிலியத்தில் இருந்து தேர்வு செய்த சில பகுதிகளைத் தழிழில் மொழிபெயர்த்துள்ளனர். தத்துவ போதகர் என்றழைக்கப்படும் தே.நோபிலி ‘நித்திய ஜீவன சல்லாபம்’ என்ற தலைப்பில் விவிலியத்தின் சில பகுதிகளை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலில் போர்ச்சுக்கீஸ், லத்தீன், வடமொழிச்சொற்கள் இடம் பெற்றுள்ளதுடன், கத்தோலிக்க வழிபாடு கத்தோலிக்க இறையியல் என்பனவற்றை மையமாகக் கொண்ட புதிய கலைச்சொற்களையும் உருவாக்கிப் பயன்படுத்தியுள்ளார்.

இவரை அடுத்து, இம்மானுவேல் மார்டின் (1597-1656) என்ற சேசுசபைத் துறவி உரைநடை வடிவில் விவிலியச் செய்திகளைக் கற்பிக்கும் சல்லாபச் சுவடி களை (சல்லாபம் - உரையாடல்) தே. நொபிலியைப் பின்பற்றி எழுதியுள்ளார். ‘பத்து சல்லாபம்’, ‘உபதேச சல்லாபம்’, ‘சிலுவையின் விசேஷ சல்லாபம்’. ‘சத்திய லட்சண சல்லாபம்’ என்ற சுவடிகளை, புதிய ஏற்பாட்டைத் தழுவி எழுதியுள்ளார். வினா-விடை வடிவில் எழுதப் பட்ட இச்சல்லாபச் சுவடிகள் விவிலியத்தை மையமாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளன. சான்றாக, மத்தேயூ நற்செய்தியில் (5:23-24) இடம்பெறும்,

ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்போது உங்கள் சகோதரர், சகோதரியர் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினை வுற்றால் (23) அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் அவரிடம் நல் உறவு ஏற்படுத்திக் கொள். திரும்பிவந்து உன் காணிக்கையைச் செலுத்து (24) 

என்ற விவிலியத் தொடர்கள் வினாவிடையாக மாற்றப் பட்டுள்ளதைக் குறிப்பிடலாம். 23-வது வசனம் வினாவடிவில் அமைக்கப்பட்டு 24-ஆவது வசனம் விடைவடிவில் இடம்பெற்றுள்ளது.

விவிலியம் என்பது குறித்த செய்திகள் தொடக்க காலத் தமிழ்க் கத்தோலிக்கர்களுக்கு சல்லாபச் சுவடிகள் வாயிலாகவே கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.  சல்லாபச் சுவடி ஒன்றில் விவிலியம் என்றால் என்ன? என்ற வினாவும் விடையும் இடம் பெற்றுள்ளன. 

மேலும் தேவாலயங்களில் ஞாயிறு வழிபாட்டின் போது விவிலியம் வாசிக்கப்பட்டுள்ளது.  இது லத்தின் மொழியில் இருந்து மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  பனை ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட விவிலியச் சுவடிகள் சல்லாபம் என்ற சொல்லை தலைப்பின் இறுதியில் கொண்டுள்ளன.  கத்தோலிக்கர் களால் மொழிபெயர்க்கப்பட்டு கத்தோலிக்கர்களிடம் புழக்கத்தில் இருந்த விவிலிய மொழிபெயர்ப்புகளை, சீர்திருத்தக் கிறித்தவ மறைப்பணியாளர்கள் நன்கு அறிந்திருந்தனர்.  அவர்கள் அறிந்திருந்த சுவடிகள் வருமாறு:

1.            பழைய ஏற்பாட்டின் வேதப் புத்தகங்கள் கோர்வைப்படுத்தி உத்தமமாய் விஸ்தரிக்கப் பட்டது.

2.            மத்தேயூ சுவிஷேசம் : தெக்கத்தி பாஷை.

3.            லூக்கா சுவிஷேசம்

4.            யோவான் சுவிஷேசம்

5.            அப்போஸ்தலர்களுடைய நடபடிக்கைகள்

6.            திருநாட்களிலே வாசிக்கப்படுகிற சுவிஷேசங்கள்

1725இல் லத்தீன் மொழியில் இருந்து தமிழ் மொழி பெயர்க்கப்பட்ட பழைய ஏற்பாடு ‘தேவ அருள் வேத புராணம்’ என்ற தலைப்பைக் கொண்டிருந்தது. இதன் தொடக்கத்தில் ‘சர்வேஸ்ரயா நம’  என எழுதப் பட்டிருந்தது.

இவ்வாறு விவிலிய மொழிபெயர்ப்பில் கத்தோலிக் கர்கள் பங்காற்றியிருந்தாலும் அவர்களுக்குப் பின்னால் வந்த சீர்திருத்தக் கிறித்தவ மறைப்பணியாளர்கள் விவிலிய மொழிபெயர்ப்பில் மட்டுமின்றி அதை அச்சாக்கம் செய்வதிலும் வேகம் காட்டினர்.  இவர்கள் அச்சிட்ட விவிலிய நூல் கத்தோலிக்கர்களிடமும் அறிமுகமாயிற்று.

புதுச்சேரியில் செயல்பட்டு வந்த அந்நிய வேதபோதகச் சபையினர் இது குறித்துக் கவலையுற்றனர்.  1844 இல் புதுச்சேரியில் கூடிய மறை மாவட்ட மாமன்றம் (சினாடு) கத்தோலிக்கர்களின் பயன்பாட்டிற்காக விவிலிய மொழிபெயர்ப்பு நூலை அச்சிடுவது குறித்து விவாதித்தது.  தரங்கம்பாடியில் அச்சான விவிலிய மொழிபெயர்ப்பு கத்தோலிக்கர் களிடம் பரவுவதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் தமிழ் விவிலியத்தை அச்சிட முடிவெடுத்தனர்.

இதை நிறைவேற்றும் நோக்கில் லூயிஸ் மாரே முசோர் (1808-1888) என்ற குருவை இப்பணியை மேற்கொள்ளும்படி புதுச்சேரி ஆயராக இருந்த கிளாமண்ட் பொன்னான்ட் கூறினார்.  இப்பணியில் இவருக்கு உதவ அருளா என்ற தமிழ்க் குருவை நியமித்தார்.  இரு குருக்களும் இணைந்து இப்பணியைத் தொடங்கினர். 

இவ்விருவரது முயற்சியால் நான்கு நற்செய்தி ஏடுகளும் அப்போஸ்தலர் நடவடிக்கைகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.  தமிழ் அறிந்திருந்த லூயிஸ் சவேனியன் துபயிஸ் என்ற பிரெஞ்சு நாட்டுக் குரு புதுச்சேரியில் இயங்கிவந்த கத்தோலிக்க அச்சகத்தின் மேலாளராக இருந்தார். இம்மொழிபெயர்ப்பைச் சரிபார்க்கும் பணியை அவர் மேற்கொண்டார்.  பின்னர் 1859இல் புதிய ஏற்பாட்டின் அச்சுப்படி புதுச்சேரியில் இருந்து வெளியானது. 

மொத்தம் மூவாயிரம் படிகள் அச்சிடப்பட்டன.  நூலின் தலைப்பில் இவ்வாறு அச்சிடப்பட்டு இருந்தது:

சேசு கிறிஸ்து நாதருடைய பரிசுத்த சுவிஷேசம்: இது அந்நிய தேசத்து போதகர் சபையிலுள்ள அப்போஸ்தலிக்கு குருக்களில் சிலரால் மொழி பெயர்க்கப்பட்டு புதுவையில் எழுந்தருளியிருக்கும் மகாகணம் பொருந்திய ஆண்டவராகிய கிளமென்சு பொன்னான்ட் துருசிபேர் என்னும் நாமத்தைக் கொண்டிருக்கிற மேற்றிராணியார் - ஆயர் அனுமதியில் ரோமாபுரியினின்று வந்த உத்தரத்தின் படி 1857-ஆம் வருஷம் புதுவையிற் சென்மராக்கினி மாதா கோயிலைச் சேர்ந்த அச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.

இந்நூலின் முன்னுரையில் உயரிய இலக்கியத் தமிழ் நடையில் அன்றி பொதுத் தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.  விவிலிய வசனங்களுக்கு தமிழ் எண்களே இடப் பட்டிருந்தன.  ஒவ்வொரு இயலின் தொடக்கத்திலும்  அவ்வியலின் சுருக்கம் அய்ந்து அல்லது ஆறு வரிகளில் கொடுக்கப்பட்டிருந்தது. யேசுவின் திருமுழுக்கு, இறுதி விருந்து, கல்வாரிமலைக்கு யேசு சிலுவை சுமந்து செல்லல், சிலுவையில் அவரது மரணம் எனப் படங்கள் சில அச்சிடப்பட்டிருந்தன.

விவிலிய மொழிபெயர்ப்பின் பயன்

ஐரோப்பாவில் இருந்து இங்கு பரவிய சமயம் கிறித்தவம்.  அவர்களது சமய நூலான விவிலியத்தை, தமிழில் மொழிபெயர்த்து புதிய கிறித்தவர்களுக்கு வழங்கியதென்பது அவர்களது சமயப் பணி சார்ந்தது தான். ஆயினும், விவிலியத்தைத் தமிழாக்கம் செய்து அச்சிட்ட அவர்களது செயல்பாடு தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க பணியாக அமைந்துள்ளது.  ஏனெனில் கவிதை, செய்யுள், இலக்கண. இலக்கிய உரைகள் என்பனவற்றின் பயன்பாடே தமிழ் இலக்கிய உலகில் மிகுந்திருந்தது. இத்தகைய அறிவுச் சூழலில் தமிழ் உரைநடை வளர்ச்சியில், விவிலிய மொழி பெயர்ப்பு ஓரளவுக்கேனும் உதவியுள்ளது.  கி.பி.16 வது நூற்றாண்டில் மத்தேயூ நற்செய்தியில் இடம் பெற்றுள்ள பரலோக மந்திரம் மொழிபெயர்ப்பில் தொடங்கி, விவிலிய மொழிபெயர்ப்பு, தொடர்ச்சியாக நிகழ்ந்து வந்துள்ளன.

அறிவியல் வளர்ச்சி பெற்ற இன்றைய சூழலிலும் கூட நம்மை ஆண்ட காலனியவாதிகளான ஆங்கிலேயரின் ஆங்கில மொழியில் இருந்தே மொழிபெயர்ப்புகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். ஆனால் விவிலியம் ஹீப்ரு, கிரேக்கம், லத்தீன், போர்ச்சுக்கீஸ் எனப் பல்வேறு மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இம்மொழிபெயர்ப்புகள் ஒரே காலத்தில் நிகழவில்லை.  ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் பல்வேறு காலங்களில் நிகழ்ந்துள்ளன.  திரும்பத் திரும்ப இம்மொழி பெயர்ப்புகள் நிகழ்ந்தமைக்கு மொழிபெயர்ப்பால் நிறைவடையாமையே காரணமாகும்.

ஒவ்வொரு விவிலிய மொழிபெயர்ப்பும் அவை மொழிபெயர்க்கப்பட்ட காலத்தின் சமூக வரலாற்றுச் சூழலைப் பிரதிபலிப்பதாக நூலாசிரியர் குறிப்பிடுவது (பக்கம் 107) முற்றிலும் பொருத்தமான கணிப்பாகும்.

புதிய ஏற்பாட்டில் உள்ள மத்தேயூ நற்செய்தி ஏட்டில் (6 : 9 - 13) காணப்படும் பரலோக மந்திரமானது ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதை நூலாசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார்.  அதிலிருந்து முதல் மூன்று வரிகளின் மொழிபெயர்ப்பை மட்டும் காண்போம்.

பிதா எங்களுடே நீ ஆகாசத்தில் இருக்கிறாய்

உன் திருநாமம் புண்ணியம் ஆகவேணும்

உன் ராஜ்ஜியம் வரவேணும்  (கி.பி.1554)

                                                * * *

வானங்களில் இருக்கிற எங்கள் பிதாவே

உம்முடைய நாமம் எல்லார்க்கும் சுத்தமாக

உம்முடைய வீராச்சியம் வர   (1578)

* * *

வானங்களில் இருக்கிற எங்கள் பிதாவே

உன்னுடைய நாமம் எல்லாத்துக்கும் சுத்தமாக

உன்னுடைய ராச்சியம் வர (1644)

* * *

வானங்களில் இருக்கிற எங்கள் பிதாவே

உன்னுடைய நாமம் எல்லாத்துக்குஞ் சுத்தமாக

உன்னுடைய இராச்சியம் வர ( 1692)

* * *

பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே

உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக

உம்முடைய ராச்சியம் வர (1714)

இவ்வாறு பரலோக மந்திரம் மட்டுமின்றி விவிலியமும் ஒவ்வொரு மொழிபெயர்ப்பிலும் மாற்றங்களை அடைந்து வந்துள்ளது. தமிழில் மொழிபெயர்ப்புக் கலை வளர இம்மாற்றங்கள் துணைபுரிந்துள்ளன.

மேலும் அவர்கள் அச்சிட்ட தமிழ் விவிலியமானது சமய எல்லையைக் கடந்து கிறித்தவர் அல்லாதவரிடமும் சென்று, வாசிப்புப் பழக்கத்தைப் பரவலாக்கியது. பெருமாள் நாயக்கர் என்ற பாளையக்காரர் 1742 டிசம்பரில் பொறையாரில் இருந்த மிசினறிகளின் பள்ளிக்குச் சென்று, அவர்கள் அச்சிட்ட நூல்களைத் தமக்கும் தமது நண்பர்களுக்கும் இரவல் வாங்கிச் சென்றுள்ளார். விவிலிய அச்சாக்கம் பாடநூல்கள் அச்சாக்கமாக விரிவடைந்தது. இதனால் நவீன அறிவுச் சிந்தனை நம்மிடையே வேர்விடத் தொடங்கியது.

நூல் பிரதி கிடைக்குமிடம்:

Louis Sabinien Dupuis Research Centre

IMMACULATE GENERALATE

19, St. Therese Street,

Pondicherry - 605 001