தமிழ்ச்சூழலில் கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக மரபுப்பாவலராக ஊக்கமுடன் இயங்கிவரும் தங்கப்பா தொடக்ககாலத்திலிருந்தே குழந்தைகளுக்கான பாடல்களையும் எழுதி வருகிறார். எங்கள் வீட்டுச் சேய்கள் அவருடைய தொடக்ககாலத் தொகுதிகளில் மிக முக்கியமானது. குழந்தையோடு குழந்தையாக வாழ்ந்த அனுபவங்களை அத்தொகுதியில் நாம் காணலாம்.

thangappa 257குழந்தைகளின் உலகத்துக்குள் செல்வது மிகப் பெரிய வரம். அது ஒரு கவிஞனுக்குக் கிடைக்கிற இரண் டாவது குழந்தைப் பருவம். சொற்களோடு பழகி, சொற்களை அறிந்து, சொற்களைக் கலைத்துப் போட்டு, சொற்களாகவே வாழ்கிற குழந்தைகளை இன்னும் கூர்மையாக அறிந்துகொள்ள உதவும் காலம் அது. குழந்தைச் சொற்களுக்கான களஞ்சியமே வேறு. அது மொழியில் இல்லாதது. ஓசையோடும் உடலசைவோடும் கனவோடும் கலந்த புதுமைக்கலவை. அதை உற்றறிவதும் எடுத்துரைக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்வதும் குழந்தைப்பாடல்கள் எழுதும் கவிஞர்களுக்குரிய அடிப்படைத்தகுதிகள். ஒரு நிமிடத்துக்கும் மேல் ஒரு இடத்தில் நிற்கமுடியாதபடி வேகமும் ஓட்டமும் பரபரப்பும் கொண்டிருப்பவர்கள் குழந்தைகள். சிந்தனைகளிலும் பேச்சுகளிலும் தொடர்ச்சியான ஒழுங்கு கொண்டதல்ல, அவர்கள் உலகம். பெரும் பாலும் தொடர்பற்றவை. சிதைந்தவை. ஆனால் கற்பனைகளால் நிறைந்தவை. மகிழ்ச்சி ததும்பும் தன்மையுடையவை. அவற்றை அள்ளியெடுத்துக் கொண்டு தம்மை நிறைத்துக்கொள்பவையே உண்மையான குழந்தைப் பாடல்கள். தங்கப்பாவின் பாடல்களில் தென்படும் உலகம், குழந்தையின் உலகமாக இருப்பதும், குழந்தையின் கண்களால் பார்க்கப்படும் உலகமாக இருப்பதும் மிக முக்கியமான தகுதிகள். சுட்டிக்காட்டும் பொருளால் அல்ல, கும்மாளம் நிறைந்த மனநிலையைக் காட்சிப்படுத்தும் தன்மையாலேயே குழந்தைப் பாடல்கள் விரும்பத்தக்கவையாக உள்ளன. கருத்து களாலும் உண்மைகளாலும் நிறைந்து குவிந்து காணப் படும் இன்றைய பாடல்களுக்கு நடுவில் விளையாட்டும் வேடிக்கையும் நிறைந்த தங்கப்பாவின் பாடல்கள் மிகப்பெரிய ஆறுதல்.

சிப்பிக்குள்ளே முத்திருக்கு

தன்னா னானே னானே

செப்புக்குள்ளே மணியிருக்கு

தன்னா னானே னானே

பத்துக்குள்ளே எட்டிருக்கு

தன்னா னானே னானே

பட்டுச்சட்டை கிழிஞ்சிருக்கு

தன்னா னானே னானே

இது தொகுதியில் காணப்படும் ஒரு பாடல். மேலோட்டமான வாசிப்பில் பாடலின் வரிகளுக் கிடையே இணைப்பு கிட்டாததால் சிறிது நேரம் தடுமாற்றம் நேரக்கூடும். ஆனால் மீண்டும் மீண்டும் வாசிக்கும்போது, ஒரு குழந்தை பேசிக்கொண்டோ அல்லது துள்ளிக்கொண்டோ ஓடும் ஒரு காட்சியை உணரலாம். ஒரு பாடல் என்பது எப்போதும் சொல் வதல்ல, உணர்த்தும் கலை. உணர்த்தப்படும் அக் காட்சியில் குழந்தையின் மனசில் ததும்பும் இசையையும், அந்த இசைக்குத் தகுந்த விதத்தில் தன் மனத்தில் பொங்கியெழும் சொற்களைப் போட்டு நிரப்பி விளையாடும் தன்மையையும் காணலாம். ஒரு குழந்தை மீண்டும் மீண்டும் ஒரு வரியைச் சொல்வதன் வழியாக, அது தான் கண்டடைந்த மகிழ்ச்சியை இரு மடங்காக, மூன்று மடங்காகப் பெருக்கிக்கொண்டே செல்கிறது. அதை உணர்த்துவதில் இப்பாடல் வெற்றியடைந் திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

மஞ்சள் சட்டை போட்டிருக்கும்

மாடி வீட்டு மங்கம்மா

பந்தல் போட்ட முற்றத்திலே

பாடம் படிக்க வந்தாளாம்

அங்கே ஒரு கரப்பான்பூச்சி

அவளைப் பார்த்து முறைத்ததாம்

மங்கம்மா பதறி நடுங்கி

மயக்கம் போட்டு விழுந்தாளாம்

பாடலாக்கத்தில் இது இன்னொரு விதம். குழந்தையின் பொழுதுகளில் நேர்ந்த ஒரு சின்ன நிகழ்ச்சியின் விவரணையே பாடல். ஆனால் நிகழ்ச்சியைப் பார்க்கும் ஒரு பெரியவரின் பார்வையில் விவரிக்கப்படுகிறது. நடந்தது என்ன என்பதை உணர்த்தும் குரல் மட்டுமே அவர் வரிகளில் ஒலிப் பதைப் பார்க்கலாம். சுட்டிக்காட்டும் தன்மையோ, திருத்தும் தன்மையோ, விமர்சிக்கும் தன்மையோ எதுவுமே இல்லை. இது முக்கியமானதொரு கட்டுப் பாடு. இந்தக் கட்டுப்பாட்டின் தன்மையாலேயே இது சிறந்ததொரு பாடல். அந்தப் பெரியவர் சொல்லும் பாடல் நிகழ்ச்சியோடு தொடர்புடைய குழந்தைக்கும் கூட பாடிப்பாடி மகிழத்தக்க ஒரு பாடலாக இருக்கலாம்.

‘வெள்ளையான அப்பம் - எனக்கு

விருப்பமான அப்பம்

கள்ளமாக யாரோ -கொஞ்சம்

கடித்துத் தின்று விட்டார்

பொள்ளலாகிப் போச்சே - அதைப்

பூனை கவ்விச் சென்றே

வானத்து நடுவில் - அதோ

வைச்சிருக்குது பாரு’

பாடலாக்கத்தில் இது இன்னுமொரு விதம். முழுக்க முழுக்க இது குழந்தையிடம் பேசும் ஒரு பெரியவரின் குரல். ஆனால் அறிவியலுக்குரிய குரலிலோ, சமூகவியலுக்குரிய குரலிலோ அல்லது உண்மையை உணர்த்தும் குரலிலோ அந்தப் பெரியவரின் குரல் இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். அவர் குரலில் குழந்தைக்கு ஒரு கதையைச் சொல்லி கவர்ந்திழுக்கும் ஆசை மட்டுமே புலப்படுகிறது. அந்தக் குழந்தையின் கவனத்தைத் தன்னை நோக்கித் திருப்பவேண்டும் என்னும் விழைவில், ஒரு கற்பனையான சூழலை குழந்தை நம்பும் விதத்தில் முன்வைக்கிறது. அக்கதையை நம்பிவிடும் குழந்தை, அதே கதையை தன் குரலில் ஒருமுறை சொல்லிப் பார்க்கிறது. அந்த நடிப்பு அதற்குப் பிடித்திருப்பதாலும் தன் மகிழ்ச்சியைப் பல மடங்காக அது பெருக்குவதை உணர்வதாலும் மெல்ல மெல்ல அந்தக் கதையை குழந்தை தனது கதையாகவே மாற்றிக்கொள்கிறது. பெரியவரின் கதையை சொல்லிச் சொல்லிப் பழகிய குழந்தை மீண்டுமொரு முறை அந்த வரிகளைச் சொல்லும்போது, அந்தக் குரலில் தொனிப்பது குழந்தையின் குரலா அல்லது பெரியவரின் குரலா என்று கண்டடைய முடியாதபடி மாறும் அதிசயம் நிகழ்கிறது. அதுவே கலையின் பேரழகு.

இத்தொகுதியில் உள்ள கனவுலகில் பிறந்தநாள் என்னும் பாடலும் குழந்தைகளிடம் பெரியவர் முன் வைக்கும் குரலில் அமைந்திருக்கிறது. இளவேனில் பொம்மைகளை வைத்து விளையாடும் ஒரு சிறுமி. இளவேனில் பொம்மைகளோடு பேசுவாள். பாடல்கள் சொல்லிக்கொடுப்பாள். அவற்றைச் சிரிக்கவைப்பாள். ஆடவைப்பாள். ஒவ்வொரு பொம்மைக்கு ஒரு பெயரைச் சூட்டுவாள். அந்தப் பெயரைச் சொல்லித்தான் அதை அழைப்பாள். பொம்மைகள் அனைத்தும் அவளுக்கு விளையாட்டுத் தோழிகளாக உள்ளன. ஒருநாள் இளவேனில் உறங்கத் தொடங்குகிறாள். அந்த உறக்கத்தில் ஒரு கனவு வருகிறது. அக்கனவில் எல்லாப் பொம்மைகளும் வருகின்றன. அவளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்கின்றன. அதைச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்கின்றன. கனவில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவைக் காட்சிப்படுத்துகிறது தங்கப்பாவின் பாடல். எந்த இடத்திலும் பெரியவர் என்னும் சாயல் விழுந்து விடாமல், விழாவில் கலந்துகொண்ட ஒரு பொம்மையின் குரலிலேயே அமைந்திருக்கிறது. அதுவே இப்பாடலின் சிறப்பு.

சின்னச் சின்ன பூனைக்குட்டி

எனக்கு மிகவும் பிடிக்கும்

மென்மையான பஞ்சு உடம்பு

வெதுவெதுப்பாய் இருக்கும்

தொல்லை கொடுத்தால் பூனைக்குட்டி

தொலைவில் ஓடிப் போகும்

மெல்ல அதை அன்பாய் அழைத்தால்

மேலே வந்து உராயும்

வாலைப் பிடித்து இழுக்கமாட்டேன்

வம்பு பண்ணமாட்டேன்

பூவைப்போல போற்றிக்கொள்வேன்

பூனை என்னைக் கொஞ்சும்

பக்கத்திலே வந்து உட்காரும்

பண்டம் தின்னக் கொடுப்பேன்

நக்கி அன்பைக் காட்டும் பூனை

நல்ல பிள்ளை நானே

இந்தப் பாடல் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையிடம் பேசும் குரலில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம். தன்னோடு விளையாடும் பூனையைப்பற்றி தான் அறிந்ததை மட்டும் முன்வைத்து அக்குழந்தை உரையாடுவது மிக முக்கியமான அம்சம். எந்த இடத்திலும் ஒரு பெரியவரின் குரல் இடையில் புக வில்லை. இந்த வகையிலான ஆக்கத்திலும் தங்கப்பாவின் பாடல்கள் இனிமையாக உள்ளன.

குழந்தைகள் இலக்கியத்தில் உரையாடல் அமைப்பில் அமையும் பாடல்களுக்கு எப்போதும் ஒரு முக்கியமான இடமுண்டு. குழந்தைமை வெளிப்படும் வரிகளோடு அமையும் தருணத்தில் அத்தகு பாடல்களுக்குக் கூடுதலான முக்கியத்துவம் உருவாகிறது. இத்தொகுப்பில் உள்ள சிட்டுக்குருவிக் குடும்பம் பாடலை அவ்வகையிலான பட்டியலில் சேர்க்கலாம்.

“சிட்டுக்குருவி அம்மா அப்பா

எங்கே போனீங்க?

இத்தனை நாள் காணலையே

எப்போ வந்தீங்க?”

“பானைக்குள்ளே குஞ்சு பெரித்தோம்

பாழாகிப் போச்சே

பூனை வாய்க்குள் எங்கள் குஞ்சு

பொக்குன்னு போச்சே”

“அப்புறம் ஏன் மறுபடியும்

இங்கே வந்தீங்க?

தப்புபூனை மீண்டும் கொன்றால்

என்ன செய்வீங்க?”

“பூனை தெருவில் செத்துக் கிடக்கப்

பார்த்தோமே நேற்று

தூணிடுக்கில் கூடு கட்ட

துணிந்து வந்தோமே”

குழந்தைமைக்கே உரிய கேள்விகள். குழந்தை ஏற்றுக்கொள்ளும் விதமான கச்சிதமான பதில்கள். ஒன்றுடன் ஒன்று இசைவாக அமைந்துள்ளன. இந்த இசைவொழுங்கே இப்பாடலின் மிகப்பெரிய வலிமை.

பூம்பூம் மாட்டுக்காரன் தொகுதியில் மொத்தத்தில் முப்பத்தெட்டுப் பாடல்கள் உள்ளன. படிக்கப் படிக்க ஒவ்வொரு பாட்டும் இனிதாக உள்ளது. எல்லாப் பாடல்களிலும் கள்ளமற்ற குழந்தைமையின் வெள்ளை மனம் வெளிப்படுகிறது. அறிவு என்றும், உண்மை என்றும் எதையும் அறிந்துகொள்வதற்கு முந்தைய பருவத்துக்குரிய உலகமே குழந்தைப்பாடல்களுக்குரிய பொன்னுலகம். அத்தகு பொன்னுலகத்தில் வாழ்ந்து நிறைந்த அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே குழந்தைமொழி வசப்படும். அது தங்கப்பாவுக்கு மிக எளிமையாக வசப்பட்டிருக்கிறது.

பூம்பூம் மாட்டுக்காரன்

குழந்தைப்பாடல்கள்

ஆசிரியர்: தங்கப்பா

வெளியீடு: வானகப் பதிப்பகம்

7, 11வது குறுக்கு, அவ்வை நகர்,

புதுவை-8.

விலை : ரூ.80.00