1. ஐரோப்பாவிலிருந்து அலிப்பூர் சிறை நோக்கி

அரவிந்த கோஷ் ஸ்ரீ அரவிந்தராகப் பரிணமித்ததில் அவரது ஓராண்டு அலிப்பூர் சிறைவாசம் ஒரு முக்கியப் பங்கு வகித்துள்ளது. அரவிந்தரின் மாணிக்டோலா தோட்டத்தில் நடந்த அந்தப் புகழ்பெற்ற வெடிகுண்டு விபத்து, அங்குச் சிதறிக் கிடந்த கீதைப் பிரதிகள் ஆகியன குறித்து நான் நிறைய எழுதியுள்ளேன்.

அன்று பெரிய அளவில் பிரிட்டிஷ் அதிகாரிகள் வெடிகுண்டுகள் வீசிக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்படியான ஒரு தாக்குதலில் முஜபர்பூர் என்னும் இடத்தில் இரண்டு ஐரோப்பியப் பெண்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்குகளின் பின்னணியில்தான் அரவிந்த கோஷ§ம் அவரது தம்பி பரீன் கோஷம் இன்னும் பலரும் கைது செய்யப்பட்டனர். பிரதான குற்றவாளி அரவிந்த கோஷ்தான்.

gandhi and arvindhar

அலிப்பூர் சிறையில் அவர் இருந்த ஓராண்டு சிறை அனுபவங்கள், ஆங்கிலேய அரசு அவர்களின் வழக்கை நடத்திய விதம், சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்ட அன்றைய புகழ் பெற்ற வழக்குரைஞர் நார்டன் துரை அவ்வழக்கைக் கொண்டு சென்ற விதம், அரவிந்தரின் தனிமைச் சிறைவாசம் அவரிடம் ஏற்படுத்திய மாற்றங்கள் ஆகியவற்றைச் சொல்லும் ஒரு க்ரவுன் சைஸ் 131 பக்க நூல்தான் ஸ்ரீ அரவிந்தரின் 'எனது சிறைவாசம்'.

எப்போதோ புதுவையில் அரவிந்தாசிரமம் சென்றபோது வாங்கி வைத்த நூல். எதையோ தேடும்போது எதுவோ கிடைப்பதும், தேடியதை மறந்து விட்டு அதையே படிப்பதும் வழக்கமாகிப்போன நிலையில் ஒரே மூச்சில் இன்று அதைப் படித்து முடித்தேன்.

என்னைப் பொருத்தமட்டில் அது ஒரு மிகச் சுவையான நூலாக மட்டுமல்ல, மிக முக்கியமான நூலாகவும் பட்டது. அரவிந்தரை மட்டுமின்றி அவரது கால தேச பக்தர்கள் "இந்திய தேசம்" என்கிற கருத்தாக்கத்தை எவ்வாறு புனைந்து கொண்டார்கள், இந்தியாவின் தனித்துவத்தை அவர்கள் எவ்வாறு உணர்ந்து கொண்டனர். இந்திய தேசப் பெருமை இங்கு எவ்வாறு மனங்கொள்ளப்பட்டது என்பவற்றை எல்லாம் புரிந்து கொள்ள ஒரு முக்கிய ஆவணமாகவும் அது எனக்குப் பட்டதால் அதை இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

பிரிட்டிஷ் அரசு அளித்த அந்த ஓராண்டுச் சிறைவாசம் தனக்குத் தீமையை விளைவிப் பதையே உள்நோக்கமாகக் கொண்டாலும் தனக்கு விளைந்ததென்னவோ நன்மையே என்கிறார் அரவிந்தர். அது வேறொன்றுமில்லை. தான் இறைவனை அடைந்ததுதான் அந்தச் சிறைவாசத்தின் 'ஒரே பயன்' என்கிறார்.

"சிறைவாசத்தில் என் அகவாழ்வின் வரலாற்றை எழுதுவது இக்கட்டுரையின் உத்தேசமில்லை. புற விவரங்கள் சிலவற்றையே தரப் போகிறேன்" என அவர் முன்னுரைத்த போதும், அந்தச் சிறைவாசம் எப்படித் தனக்கொரு அகமாற்றத்தைத் தந்தது என்பதை அவர் விரிவாகச் சொல்கிறார்.

மிகப் பெரும் ஆன்மீகவாதியாக அறியப் பெறும் அரவிந்தர் மிகவும் நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் இதில் வெளிப்படுகிறார். தமது குழுவில் ஒருவர் அரசுத் தரப்புச் சாட்சியாக மாறியுள்ளதைப் புரிந்து கொண்ட அவர்கள் அந்த நபரை எவ்வாறு கையாண்டனர் என்பதை அத்தனை நகைச்சுவையுடன் அறிமுகம் செய்யும் அரவிந்தர், இறுதியில் அந்த வழக்குத் தீர்ப்பு எவ்வாறு அமைந்தது என்பது குறித்தெல்லாம் எழுதுவதற்குச் சிரத்தை காட்டவில்லை. மாறாக இந்தியர்கள் எவ்வாறு ஐரோப்பியர்களிடமிருந்து சாராம்ச ரீதியாக வேறுபட்டுள்ளனர் என்பதைத் தான் உணர்ந்த அனுபவத்தை விரிவாகச் சொல்வதோடு இக் குறு நூல் நிறைவுறுகிறது.

இந்தியர்களின் மேன்மைகளையும், தனித்துவங் களையும் குறித்து அரவிந்தர் சொல்பவற்றைச் சற்று விரிவாகக் காண்போம்.

2. குறி தவறிய குண்டுகளும் கொல்லப்பட்ட அப்பாவிப் பெண்களும்

ஸ்ரீ அரவிந்தர் தனது சிறைவாச அனுபவங்கள் மற்றும் அதனூடாக அவர் அடைந்த ஆன்மீக அனுபவங்கள் ஆகியன குறித்துச் சொல்வதைப் பார்க்குமுன் அன்று இந்தியத் துணைக்கண்டத்தை மட்டுமல்ல, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையே அதிர்ச்சிக் குள்ளாக்கிய அந்த வெடிகுண்டு வழக்கு குறித்து வரலாறு என்ன சொல்கிறது என்பதைத் தொகுத்துக் கொள்வோம்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான சுதந்திர வேட்கை இங்கு ஒரு பண்பு மாற்றத்தை எட்டிய நிகழ்வு குறித்து மகாகவி பாரதி கூறிய அந்தப் புகழ்பெற்ற வாசகங்களை அவ்வளவு எளிதாக நாம் மறந்துவிட இயலாது. 1906ல் அன்றைய பிரிட்டிஷ் ஆளுநர் கர்சான் வங்கத்தை மேற்கு வங்கம் (இந்து வங்கம்) எனவும், கிழக்கு வங்கம் (முஸ்லிம் வங்கம்) எனவும் பிரித்ததை ஒட்டி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கடுமையான எதிர்ப்பும் மிகப் பெரிய எழுச்சியும் இந்தியத் துணைக் கண்டம் முழுமையும் ஏற்பட்டது.

“சென்ற சுபகிருது வருஷத்திலே பாரத நாட்டில், ஸர்வ ... மூலாதாரமாகிய தேசபக்தி என்ற நவீன மார்க்கம் தோன்றியது.. நல்லோர்கள் சிந்தையை எல்லாம் புளகிக்கச் செய்தது” என பாரதி இதைக் கொண்டாடுவதை நீங்கள் வாசித்திருக்கக் கூடும்..

பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த ஒரு தீவிரமான போராட்டம், அதற்காக உயிர், உடைமை அனைத்தையும் இழத்தல் என்பதெல்லாம் ஒரு இலட்சிய நோக்கமாக மட்டுமல்லாமல் ஒரு புனிதக் கடமையாகவும் உருப்பெற்றது இந்தப் பின்னணியில்தான். அயர்லாந்து மற்றும் இத்தாலிய தேசியவாதங்கள் இதற்கு முன்னோடியாக அமைந்தன. பெருந்திரளாக மக்களைத் திரட்டிப் போராடுவது என்பதாக அல்லாமல் எழுச்சிமிக்க ஓரு இளைஞர் கூட்டம் ஆயுதங்களைத் தயாரித்துக் கொண்டு உயிரைப் பணயம் வைத்து ஆங்கிலேய அதிகாரிகளைக் கொன்று அச்சுறுத்தி, இங்கிருந்து விரட்டுவது என்பதாக அது உருக்கொண்டது.

இதனூடாக தேசபக்தி, தெய்வபக்தி, மதபக்தி என இம்மூன்றும் பிரிக்க இயலாத ஒருமையாகக் கட்டமைக்கப்பட்டது. இந்தியா உலகிற்கே வழிகாட்டும் என்கிற நம்பிக்கை கிளர்ந்த காலம் அது. இப்படி இந்தியத் தத்துவங்கள், வேதங்கள், நம்பிக்கைகள், வழமைகள் எல்லாம் புனிதப்படுத்தப் பட்ட அதே நேரத்தில் அதன் இன்னொரு பக்கமாய் மேலைப் பண்பாட்டின் எல்லா அம்சங்களும் ஒப்பீட்டளவில் இழிவாக அணுகப்பட்டன.

கிறிஸ்தவர்களுக்கு பைபிளும், முஸ்லிம்களுக்குத் திருக்குரானும் இருப்பதுபோல இந்தியர்களுக்கு ஒரு ஒற்றைப் புனிதநூல் இல்லாத குறையைப் போக்க இந்துக்களின் புனித நூலாக பகவத்கீதை கண்டெடுக்கப் பட்டது. இன்னொரு பக்கம் தனிநபர் வீரசாகசம், உள்ளத்தை மட்டுமின்றி உடலையும் உறுதியாக்கல் என்பவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

அப்படியான ஓரு உடல் உறுதிக்கான பயிற்சியகமாகவும் தேச விடுதலையை நோக்கிய தங்களின் கருத்தைப் பரப்பும் ஒரு அரை இரகசிய இயக்கமாகவும் உருவானதுதான் ‘அனுஷீலன் சமிதி’. அரவிந்த கோஷ§ம் அவரது சகோதரர் பரீன் கோஷ§ம் இந்த அமைப்பின் ஊடாகவே தேச விடுதலையை நோக்கிய தங்களின் பணியைத் தொடங்கினர்.

அரவிந்த கோஷ் (15, ஆக 1872 - 5. டிச, 1950) கொல்கத்தாவில் ஒரு மதிப்பிற்குரிய காரியஸ்தர் குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தந்தை கிருஷ்ண துன் கோஷ் எடின்பரோவில் மருத்துவம் பயின்று கொல்கத்தாவில் உள்ள ராங்பூரில் உயர் மருத்துவராகப் பணியாற்றியவர். ராஜாராம் மோகன்ராயின் பிரும்ம சமாஜத்தில் பங்கேற்றுச் செயல்பட்டவர். கேம்ப்ரிட்ஜில் படித்து ஐ.சி.எஸ் தேர்வில் சிறப்பாக வெற்றி பெற்று இந்தியா திரும்பிய அரவிந்த கோஷ் ஆங்கிலம் மட்டுமின்றி பிரெஞ்சு மொழியிலும் ஆழ்ந்த புலமை உடையவர். பரோடா சமஸ்தானத்தில் உயர் சிவில் பதவி ஒன்றில் இருந்த அவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் ஃப்ரெஞ்ச் மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியப் பணியையும் செய்தார். அவருடைய 28 வயதில் 14 வயது மிருனாளினியை அவருக்குத் திருமணம் செய்வித்தனர். ஓராண்டில் மிருனாளினி நோய்வாய்ப் பட்டு இறந்தார்

அதிகாரம் மிக்க பெரும் பதவிகளில் தொடர்வது என்பதைக் காட்டிலும் இந்திய விடுதலையை நோக்கிய செயல்பாடுகளில் அதிக நாட்டம் கொண்ட அரவிந்த கோஷம் அவர் சகோதரர் பரீன் கோஷம் அனுஷீலன் சமிதியின் ஊடாக தேச விடுதலைப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதில் அதிக நாட்டம் கொண்டனர். அன்றைய தேச பக்தி இயக்கத்தின் தீவிரத் தலைவர்களாக அறியப்பட்ட பாலகங்காதர திலகர், விபின் சந்திரபாலர், அன்னை நிவேதிதா ஆகியோருடன் அவர்களுக்கு நெருக்கமும் எற்பட்டது. ‘வந்தே மாதரம்’, ‘யுகாந்தர்’ எனும் வங்க மொழி இதழ்களின் ஊடாக அரவிந்தர் எழுதிய எழுத்துக்களில் ஆன்மீகமும் தேசியமும் பிரிக்க இயலாமல் பின்னிக் கிடந்தன. முதலில் தனது சிவில் அதிகாரப் பதவியையும், பின் ஃப்ரெஞ்ச் மொழி பயிற்றுவிக்கும் கல்லூரி ஆசிரியப் பணியையும் விட்ட அரவிந்தர் பரோடாவிலிருந்து கொல்கத்தாவுக்கு வந்து முழு நேரமாக அனுஷீலன் இயக்கப் பணியில் ஈடுபட்டனர்.

அரவிந்தரின் எழுத்துக்கள் பெரிய அளவில் வரவேற்பிற்குள்ளாயின. விரைவில் 7,000 பிரதிகளும் அடுத்த சில ஆண்டுகளில் 20,000 பிரதிகளும் விற்பனையாயின. பத்திரிகைகளுக்கு ஆதரவு பெருகப் பெருக பிரிட்டிஷ் அரசு மற்றும் அதன் உளவுத் துறையின் கவனமும் அனுஷீலன் சமிதி மற்றும் கோஷ் சகோதரர்களின் மீது குவிந்தது.

வந்தேமாதரம் இதழில் வெளிவந்த கட்டுரைகளின் அடிப்படையில் விபின் சந்திரபாலர் மற்றும் அரவிந்தர் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டு (1907) அவர்கள் விசாரிக்கப்பட்டனர், அரவிந்தர் அவ்வழக்கில் விடுதலை செய்யப்பட்ட போதும் விபின் தண்டிக்கப்பட்டார். யுகாந்தர் அலுவலகம் அடிக்கடி சோதனைக்குள்ளாகியது. கொல்கத்தாவில் உள்ள மாணிக்டோலா தோட்டத்திம் 36, முராரிபுரா வீதியில் இருந்த அரவிந்தர் - பரீன் ஆகியோரின் இல்லத்தை ஒத்த கருத்துள்ள தேசபக்தர்கள் தங்குவதற்கான ஒரு ஆசிரமமாக மாற்றினார் பரீன்.

1906 தொடங்கியே பரீன் வெடிகுண்டு தயாரிக்கும் நுட்பங்களில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார். 1907ல் சொந்தமாகவே வெடிகுண்டு தயாரிக்கும் கலையைக் கற்றுக்கொண்ட உலாஸ்கர் தத் எனும் இளைஞர் யுகாந்தர் கட்டுரைகளால் ஈர்க்கப்பட்டு பரீனுடன் நட்பானார். அவர்களின் முதல் இலக்கு வங்கத்தின் லெப்டினன்ட் கவர்னர் ஆன்ட்ரூ ஃப்ரேசராக இருந்தது. இரண்டு முறை அவரைக் கொல்ல அவர்கள் முயன்றும் ஃப்ரேசர் அந்தத் தாக்குதல்களிலிருந்து தப்பினார். இரண்டாம்முறை இரயில் பெட்டியையே உடைக்கும் அளவிற்கு வலிமையான குண்டு ஒன்றை விபூதி பூஷன் சர்க்காரும் பிரபுல்லா சகியும் ஃப்ரேசர் அமர்ந்திருந்த ரயில் பெட்டி மீது வீசியபோதும் அவர் தப்பித்துக் கொண்டார்.

1908 ஜனவரியில் இக்குழுவினர் இன்னும் சக்திவாய்ந்த ஒரு பிக்ரிக் அமிலக் குண்டைத் தயாரித்து டியோகார் எனும் இடத்தில் சோதனை செய்தபோது நடந்த விபத்தில் அவர்களின் குழுவில் இருந்த பிரஃபுல்ல குமார் சக்கரவர்த்தி என்கிற இளைஞன் கொல்லப்பட்டான்.

இந்த நடவடிக்கைகளின் பின்னணியில் அனுஷீலன் சமிதிக்குள் உளவுத் துறையினரும் ஊடுருவத் தொடங்கினர்.

இதற்கிடையில் ஹேமசந்திர கனுங்கோ எனும் இன்னொரு இளைஞனைப் பாரிசுக்கு அனுப்பி அங்கிருந்த ருஷ்யப் புரட்சியாளனான நிகோலஸ் சஃப்ரான்ஸ்கி என்பவரிடம் வெடிகுண்டு செய்யும் பயிற்சியைப் பெற்றுவரச் செய்தார் பரீன். இப்போது அவர்கள் அலிப்பூர் மாநில நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டக்ளஸ் கிங்ஸ்ஃபோர்டைத் தீர்த்துக்கட்டுவது என முடிவு செய்தனர். தேசபக்தர்கள் தொடர்பான இம்மாதிரியான வழக்குகளில் கடும் தண்டனை கொடுப்பவராக அந்த நீதிபதி இருந்தார் என்பதால் அவர் இலக்காக்கப்பட்டார்.

இந்தப் பணியைச் செய்ய ஆறு அவுன்ஸ்கள் டைனமைட் பயன்படுத்தித் தயாரித்த சக்திவாய்ந்த ஒரு வெடிகுண்டை பிரஃபுல்லா சகியிடம் தந்தார் பரீன். குதிராம் போஸ் எனும் இன்னொரு இளைஞனுடன் சகி முசாஃபர் நகர் புறப்பட்டார். ட்க்ளஸ் கிங்ஸ் தினமும் முசாஃபர் நகரில் உள்ள ஒரு சீட்டாடும் கிளப்பிற்கு வருவதை அறிந்து அவர் வெளியே வரும்போது தீர்த்துக் கட்டுவது என அவர்கள் முடிவு செய்தனர். பள்ளி மாணவர்களைப் போலச் சென்று முதல் நாள் அவர்கள் நோட்டம் விடும்போதே அங்கிருந்த காவலர்கள் அவர்களைக் கவனித்து விட்டனர். அடுத்த நாள் அவர்கள் தயாராக வந்து ஒரு மரத்தின் பின் ஒளிந்து கொண்டனர். கிங்ஸ்ஃபோர்டும் அவரது மனைவியும் கிளப்பிலிருந்து இறங்கி வந்து குதிரை வண்டியில் ஏறினர். அதற்குப் பின் நின்றிருந்த இன்னொரு வண்டியில் பிரிங்லே கென்னடி என்கிற ஒரு வழக்குரைஞரின் மனைவியும் மகளும் ஏறினர். வண்டி புறப்பட்ட சில நிமிடங்களில் மறைந்திருந்த பிரஃபுல்லா சகியும் குதிராம் போசும் குறிபார்த்துத் தம் கைகளில் இருந்த அந்த சக்திவாய்ந்த குண்டை வீசினர்.

அது பின்னால் வந்த வண்டியில் வீழுந்து வெடித்துச் சிதறியது. அவர்கள் யாரைக் கொல்ல நினைத்தார்களோ அந்த கிங்ஸ்ஃபோர்டும் அவரது மனைவியும் சிறு காயமும் இன்றித் தப்பித்தனர். பின்னால் வந்த வண்டியில் இருந்த இரண்டு அப்பாவி ஐரோப்பியப் பெண்கள் சிதறிச் செத்தனர்.

பயங்கரவாதத் தாக்குதல்கள் பல நேரங்களில் இப்படித்தான் ஆகிவிடுகின்றன. பகத்சிங்கும் தோழர்களும் துப்பாக்கியால் சுட்டபோதும் கூட இன்னொரு அப்பாவி அதிகாரிதானே கொல்லப்பட்டார். அறைக்கு வந்து முதல்நாள் எழுதி வைத்த போஸ்டர்களைக் கிழித்துவிட்டுப் பெயரை மாற்றிப் புதிய போஸ்டர்களை எழுதிச் சென்றுதானே அவர்கள் ஒட்டினார்கள்.

ஏதோ ஒரு பிரிட்டிஷ்காரர் செத்தார் என்று வேண்டுமானால் நாம் திருப்திப்பட்டுக் கொள்ளலாம்.

குண்டு வீசிய குதிராம்போசும் பிரஃபுல்லா சகியும் வெவ்வேறு திசைகளில் ஓடினர். இரவு முழுவதும் நடந்து சென்ற குதிராம்போஸ் வைனி எனும் ஒரு சிறு நகரை அடைந்தார். ரயிலைப் பிடித்து கொல்கத்தா செல்லத் திட்டம். தடுமாறி நின்றவனைச் சந்தேகப்பட்டு விசாரித்தபோது அவர் அடையாளம் தெரிந்தது. கைது செய்யப்பட்டார்.

பிரஃபுல்லா சகி அதேபோல இன்னொரு ரயிலில் ஏற முயற்சித்தபோது நந்தலால் பானர்ஜி எனும் ஒரு போலீஸ்காரர் சந்தேகப்பட்டு உயர் அதிகாரிக்குத் தந்தி அடித்துள்ளார். உடன் அவரைக் கைது செய்ய உத்தரவு வந்துள்ளது. சகியைக் கைது செய்ய முயற்சித்தபோது அவர் தன் கையிலிருந்த துப்பாக்கியை வாயில் வைத்துச் சுட்டுக் கொண்டு வீழ்ந்தார்.

குதிராம் போஸ் அடுத்த சில வாரங்களில் தூக்கிலேற்றப்பட்டார். “உன்னுடைய கடைசி ஆசை என்ன” என அதிகாரிகள் கேட்டபோது சாகும்போது கைகளில் பகவத்கீதையை வைத்துக் கொள்ள வேண்டும் எனப் பதிலளித்தார் குதிராம் போஸ்.

இப்படியாக இரண்டு வெள்ளைப் பெண்கள் வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்ட வழக்கில்தான் அரவிந்தர், பரீன் உட்பட 49 பேர்கள் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வரலாறு இத்தோடு முடியவில்லை. நவீன ஆக் ஷன் சினிமாக்களைக் காட்டிலும் அச்சமூட்டும் திருப்பங்களுடன் அது தொடர்கிறது.

3. சிறைக்குள் நடந்த கொலை

முசாஃபர்பூரில் இவ்வாறு தாயும் மகளுமாய் இரண்டு அய்ரோப்பியப் பெண்கள் வெடி குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதை ஒட்டி முதல் இரு நாட்களில் அரவிந்தர், பரீன் உட்பட 33 பேர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் மேலும் பலர் கைது செய்யப்பட்டு, இறுதியில் 49 பேர்கள் அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வெடிகுண்டுத் தாக்குதலுக்கு அடுத்த நாள் காலை 5 மணிக்கு பிரிட்டிஷ் போலீஸ் அரவிந்தரின் வீட்டைச் சுற்றி வளைத்து அவரைக் கைது செய்தது. அந்தக் கணத்திலிருந்து அடுத்த ஓராண்டு சிறைவாசத்துக்குப் பின், மே 6,1909 அன்று அவர் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை அரசால் நிறுவமுடியவில்லை என அவர் விடுதலை செய்யப்படுகிறார். அரவிந்தர் உட்பட 17 பேர்கள் விடுதலை. பரீன் கோஷ், உல்லாசர் தத் இருவருக்கும் மரண தண்டனை, ஒருவர் சிறைக்குள் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

மீதமுள்ளவர்களில் 13 பேர்களுக்கு சொத்துக்கள் பறிமுதலுடன் ஆயுள் முழுவதும் அந்தமான் சிறையில் தீவாந்திர தண்டனை. மூவருக்கு சொத்துக்கள் பறிமுதலுடன் பத்தாண்டுகள் சிறைத் தண்டனை.

ஆங்கில அரசு இந்த வழக்கு தொடங்கிய கணம் முதல் அரவிந்தரையே முக்கிய குற்றவாளியாகக் குறி வைத்து இந்த விசாரணையை நடத்தியது. எனினும் அவர் விடுதலை செய்யப்பட்ட கதை சுவாரசியமானது.

இது குறித்தும், அரவிந்தரின் சிறை அனுபவங்கள் குறித்தும் அவர் என்ன சொல்கிறார், எப்படி அந்த அனுபவங்களை அவர் எதிர் கொண்டார் என அவர் பார்வையிலிருந்தும் அறிவதற்கு முன்பாக அது குறித்த வரலாற்றுப் பதிவுகள் என்ன சொல்கின்றன எனப் பார்ப்போம்.

அன்றைய மாலைப் பத்திரிக்கைகளில் செய்தி வந்தவுடனேயே அரவிந்தர் தம்பி பரீனுடன் தொடர்பு கொண்டு, அவர்களைக் குற்ற நடவடிக்கையில் சிக்க வைக்கத் தக்க, எழுத்து மூலமான ஆவணங்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் முதலான அனைத்து ஆதாரங்களையும் அப்புறப்படுத்துமாறு சொல்லுகிறார். பரீனும் அவ்வாறே முடிந்தவரை செய்கிறார். அடுத்த நாள் மாலைக்குள் 33 பேர் கைது செய்யப்படுகின்றனர். அரவிந்தர், சைலன் போஸ், அவினாஷ் பட்டாச்சார்யா ஆகிய மூவரும் ‘கிரே’ தெருவில் இருந்த அரவிந்தரின் 'வந்தேமாதரம்' அலுவலகத்தில் கைது செய்யப்படுகின்றனர். அவரது கையெழுத்துப் பிரதிகள், கடிதங்கள் எல்லாம் கைப்பற்றப் படுகின்றன. அவர்கள் லால் பசார் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அடுத்த நாள் கமிஷனர் ஹாலிடே முன் நிறுத்தப்பட்டனர்.

ஏழு போலீஸ் படைகள் அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட அவ்வழக்கில் தொடர்புடைய எல்லா முக்கியமானவர்களும் அன்று மாலைக்குள் கைது செய்யப்பட்டனர். ஹாரிஸ் சாலையில் இருந்த குடியிருப்பிலும், மானிக்டோலா தோட்டத்திலிருந்த அரவிந்தர் - பரீன் இல்லத்திலும் ஏராளமான ஆவணங்கள், வெடி மருந்துகள், வெடி குண்டுகள், கீதைப் பிரதிகள் முதலியன சிக்கின.

அனுஷீலன் சமிதி முழுமையுமே பிரச்சினையில் சிக்கி முடக்கப்பட்டு விடக்கூடாது எனக் கருதிய பரீன் கோஷ் தானே முன்வந்து சதி உட்பட எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்றுக் கொண்டார். மரண தண்டனை உறுதி எனத் தெரிந்தும் அமைப்பைக் காப்பாற்ற பரீன் மட்டுமல்லாமல் உலாஷ்கர் தத், இந்துபூஷன் ராய், விபுதிபூஷன் சர்கார் ஆகியோரும் குற்றத்தை ஏற்றுக் கொண்டு எழுத்துமூலமாக மட்டுமின்றி மாஜிஸ்ட்ரேட் முன்னும் வாக்குமூலம் அளித்தனர்.

எல்லோரும் மாஜிஸ்ட்ரேட் முன் நிறுத்தப்பட்டுப் பின் அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர். அரவிந்தர் மட்டும் தனிக் கொட்டடியில் அடைக்கப்பட்டார். மே 18 அன்று “பேரரசர் எதிரி அரவிந்த கோஷ் மற்றும் பலர்” எனக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. எல்லோரும் பிரிட்டிஷ் பேரரசருக்கு எதிராக யுத்தம் புரிந்தவர்களாகக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டனர். எல்லோரும் வழக்குரைஞர்கள் வைத்துக் கொள்ளவும் தொடக்கம் முதலே அனுமதிக்கப்பட்டனர்.

மொத்தத்தில் 49 பேர்கள் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டனர். அரசுத் தரப்பில் வாதிடுவதற்கு அன்றைய புகழ்பெற்ற வழக்குரைஞரான ஏர்ட்லி நார்டன் துரை சென்னை மாகாணத்திலிருந்து வரவழைக்கப்பட்டார். அவருக்குத் துணை புரிய ஒரு வழக்குரைஞர் குழுவும் பணிக்கப்பட்டது. மாஜிஸ்ட்ரேட் லியோனார்ட் பிர்லே மிசிஷி விசாரணையை நடத்தினார். 220 சாட்சிகள் விசாரிக்கப் பட்டனர் 2000 ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டன. சிறிய இடைவெளிகள் இருந்த போதும் தொடர்ந்து வழக்கு விசாரணைகள் நடந்தன.

குற்றம் சாட்டப்பட்டிருந்த பலருக்கும் குற்றத்தை நிறுவப் போதிய ஆதாரங்கள் காவல்துறையிடம் இருந்தன. ஆனால் முக்கிய குற்றவாளியான அரவிந்த கோஷ§க்கு மட்டும் குற்றத்தை நிறுவ அவர்களிடம் போதிய ஆதாரம் இல்லை. அனுஷீலன் சமிதியின் அமைப்பு வடிவம் அப்படி இருந்தது. அமைப்பின் மேற்படிநிலையில் இருப்பவர்களுக்குக் கீழே உள்ளவர்களுடன் தொடர்பிருக்காது. எனவே மேலே உள்ளவர்களின் செயல்பாடுகள் எல்லாமும் கீழே உள்ளவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. பரீனுக்கும் அரவிந்தருக்கும் இடையில் இருந்த சில கடிதப் போக்குவரத்துகளும் வந்தே மாதரம், யுகாந்தர் ஆகிய இதழ்களில் எழுதிய கட்டுரைகளும் மட்டுந்தான் அரவிந்தருக்கு எதிரான சாட்சியங்களாக இருந்தன.

அந்தக் கடிதம் ஒன்றில், “இந்தியா முழுவதும் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடும் நாள் விரைவில் வரும்” என்றொரு வாசகம் அரவிந்தருக்கு எதிரான முக்கிய ஆதாரமாக முன்வைக்கப்பட்டது. வெடிகுண்டு செய்யும் தொழில்நுட்பத்தைத் தாங்கள் கற்றுக் கொண்டதைத்தான் இப்படி மறைமுகமாக அவர்கள் பரிமாறிக் கொண்டுள்ளனர் என அரசுத் தரப்பு முன்வைத்தது. எப்படியாவது அதிகபட்சத் தண்டனையை அரவிந்தருக்குப் பெற்றுத் தந்துவிட வேண்டும் என்பதில் அரசுத் தரப்பு மிக உறுதியாக இருந்தது.

குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் யாராவது ஒரு நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டு அரவிந்தரைக் காட்டிக் கொடுக்கும் ‘அப்ரூவராக’ மாறுவாரா எனத் தேடிக் கொண்டிருக்கும் போதுதான் அவர்களின் கண்ணில் நரேன் கோஸ்வாமி (நரேன் கோஹைன்) தென்பட்டான். நரேன் ஒரு பணக்கார நிலவுடைமைக் குடும்பத்துப் பிள்ளை. முதல் கட்டக் காவல்துறைச் சோதனை யிலேயே மானிக்டோலா தோட்டத்தில் பரீனுடன் பிடிபட்டவன் அவன்.

ஜுன் 22 அன்று நார்டன் துரை நீதிபதி பிர்லேயின் முன் ஒரு முக்கிய செய்தியைப் பதிவு செய்தார். ”நரேன் கோஸ்வாமி பேரரசின் சாட்சியாக” மாறிவிட்டான் என்பதுதான் அச்செய்தி. அதற்காக நரேன் குற்றத்திலிருந்து மன்னிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரினார். ஆகஸ்ட் மத்தியில் நீதிபதி பிர்லே சாட்சியங்களைப் பதிவு செய்தபொழுது நரேனைக் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என இருமுறை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரப் பட்டபோது நீதிபதி பிர்லே அதை அனுமதிக்கவில்லை. அப்படி அனுமதிக்காமல் இருப்பதற்கான சிறப்பு அதிகாரத்தை வங்க அரசு அவருக்கு அளித்திருந்தது.

ஆகஸ்ட் 31 அன்று அப்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லோரும் நிறுத்தப்பட்டனர். அரவிந்தர் மீதான குற்றச்சாட்டைப் பொருத்தமட்டில் அவருக்கும் மற்றவர்களுக்கும் நடந்துள்ள கடிதப் போக்குவரத்து, குறிப்பாக “இனிப்பு வழங்கும் நாள்” பற்றிய கூற்று ஒன்றே அரவிந்தர் மீதான குற்றச்சாட்டை நிறுவுவதற்கான (prima facie) ஆதாரம் என பிர்லே ஏற்றுக்கொண்டார்.

அதே நேரத்தில் பரீன் கோஷ் சும்மா இருக்க வில்லை. ஒரு சிறை உடைப்பிற்கான எல்லா வேலைகளையும் உள்ளிருந்து கொண்டே அவர் செய்து கொண்டிருந்தார். தடுக்க முனைபவர்களைத் தாக்குவதற்குத் தேவையான கடும் அமிலங்கள், வெடிகுண்டுகள், ஆயுதங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அனுஷீலன் சமிதி ஆதரவாளர்களாலும், உறவினர்களாலும் சிறைக்குள் கடத்தப்பட்டுக் கொண்டே இருந்தன. ஆகஸ்ட் இறுதிக்குள் பரீனிடம் இரண்டு கைத் துப்பாக்கிகள் குண்டுகளுடன் இருந்தன. ஒன்று RICO 0.45, மற்றது ஓஸ்போர்ன் 0.38 காலிபர் கைத் துப்பாக்கிகள். அரவிந்தர் மற்றும் பரீன் கோஷ் சகோதரர்களை மட்டுமல்லாது இன்னும் பலரையும் மரணக் குழிக்குள் தள்ளும் அளவிற்குச் செய்திகளை கோஸ்வாமி தெரிந்திருக்கும் நிலையில் அவனை விட்டு வைத்திருப்பது எங்ஙனம்?

கோஸ்வாமியின் குரல் வெளியே வராமல் தடுப்பதற்கான ஒரு முடிவை ஹேமச்சந்திர தாஸ் எடுத்தார். அதன்படி ஒரு வெற்றிகரமான நாடகம் சிறைச்சாலையின் நான்கு சுவர்களுக்குள் நடத்தப் பட்டது.

ஆகஸ்ட் 29. குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் உள்ள கைதிகளில் ஒருவரான கனய்லால் தத் திடீரென ”வயிற்று வலி” யால் து(ந)டித்து வீழ்ந்தார். உடனடியாக அவர் சிறை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து நரேன் கோஸ்வாமிக்கு, தானும் சத்யேன் போசும் அவனைப் போல ‘அப்ரூவர்’ ஆகி விடுதலை அடையத் துடிப்பதாகச் செய்தி அனுப்பினார். நரேன் கோஸ்வாமி மிக்க ஆர்வத்தோடு சிறை மேற்பார்வை யாளருடன் (overseer) ஓடி வந்தான். கடத்திக் கொண்டுவரப்பட்ட இரு கைத்துப்பாக்கிகளுடன் வெளிப்பட்ட சத்யேனையும் தத்தாவையும் கண்டவுடன் கோஸ்வாமி ஓடினான். இருவரும் அவனைத் துரத்தினர். சிறை வராந்தாவில் எல்லோர் கண் முன்னும் அந்த ஓட்டப் பந்தயம் நடந்தது. கோஸ்வாமியுடன் கூட வந்த சிறை ‘ஓவர்சீயர்’ அவனைக் காக்க முயன்றார். சிறை வார்டன் ஹிக்கின்ஸ் தத்தைப் பிடித்து மடக்க முயன்றபோது தத் ஹிக்கின்சைச் சுட்டார். ஹிக்கின்ஸ் கையில் குண்டு பாய்ந்து வீழ்ந்தார். ஓவர்சீயர் சத்யேனைக் கட்டிப் பிடித்து மடக்க முயன்றார். சத்யேன் அவரை உதறித் தள்ளி விட்டு கோஸ்வாமியைத் துரத்தினார், லின்டன் என்கிற இன்னொரு சிறை அதிகாரி தத்தைப் பிடித்து மடக்க முயன்றதும் பலிக்கவில்லை. ஒரு பக்கம் சத்யேன். இன்னொரு பக்கம் தத். இருவர் கைகளிலும் துப்பாக்கிகள், இரண்டி லிருந்தும் சரமாறியாகச் சீறி வந்த குண்டுகள் கோஸ்வாமியின் உடலைச் சல்லடை ஆக்கின. இரண்டு கைத்துப்பாக்கிகளிலும் இருந்த குண்டுகள் தீரும்வரை அவர்கள் சுட்டுக் கொண்டே இருந்தனர். மொத்தம் ஒன்பது குண்டுகள்.

கோஸ்வாமி செத்தொழிந்தது உறுதியானதும் இருவரும் அமைதியாயினர். சுற்றி நின்றவர்கள் அவர்களை நெருங்கியபோது இருவரும் அமைதியாகத் தம்மை அவர்களிடம் ஒப்புவித்துக் கொண்டனர்.

கனய்லால் தத்தா தான் குற்றமற்றவர் எனக் கூறியதை நீதிமன்றம் ஏற்கவில்லை. குற்றம் நிறுவப்பட்டு அவர் சாகும்வரை தூக்கிலிடப்பட்டார். சத்யேன் சென்னைக் குற்றமற்றவர் எனக் கீழ் நீதிமன்ற ஜூரிகள் கூறினர். பிரிட்டிஷ் அரசு மேல்முறையீடு செய்தபோது உயர்நீதி மன்றம் அவருக்கு மரணதண்டனையை உறுதி செய்தது.

அரவிந்தருக்கு எதிராக இருந்த அந்த ஒரே பலவீனமான சாட்சியும் ஒழிக்கப்பட்ட வரலாறு இதுதான்.

தொடரும்