இவன் ஒரு வெகுளி!

அப்பாவி, பிழைக்கத் தெரியாதவன், உருப்படாதவன், மண்ணாங் கட்டி போன்று தமிழில் வழக்கில் உள்ள சில சொற்களை, இந்த ‘வெகுளி’ நாயகனுக்குப் பொருத்திப் பார்க்கலாம். ஆனால், அவன் அறிவாளி! எதையுமே அறிவுக் கண்ணாடியை விலக்கி, இதயக் கண்ணாடி வழியே பார்க்கிறான். அதனால்தான் அவனுக்கு ‘முட்டாள்’ எனும் பட்டம்!

இந்த கதை எப்படி தோன்றியது?

dostoyevskyபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் (Crime and Punishment) வெளியாகி நல்ல புகழைத் தேடித் தந்த பிறகு - 1868 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் ரஸ்கி வெஸ்ட்னிக் (Russky Vesknik) என்னும் இதழில் இந்த வெகுளி (The Idiot) நெடுங்கதையைத் தொடராக எழுதத் தொடங்கினார். சுமார் ஒன்றரை ஆண்டுகளில் இந்த நெடுங் கதையை எழுதி முடித்தார்.

இப்படியொரு கதாநாயகனை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதைக்கான அடிப்படை என்ன?

அறையப்பட்ட சிலுவையிலிருந்து கிறிஸ்துவின் உடலை இறக்கி வைத்ததைக் காட்சிப்படுத்தி ஹேன்ஸ் ஹால்பின் வரைந்த ஓவியத்தைப் பார்த்து மனம் கரைந்து போன தஸ்தயெவ்ஸ்கி, இயேசு கிறிஸ்துவின் மாற்று வடிவமாகத் தான் வெகுளி (The Idiot) என்னும் கதாபாத்திரத்தைப் புனைந்தார். அவர் காலத்தில் மிகத் தூய்மையாகக் கருதப்படும் கதாநாயகர்களெல்லாம் கோமாளி வடிவத்தில் காட்டப்பட்ட போது, தஸ்தயெவ்ஸ்கி தன் வெகுளி (The Idiot) நாவலின் கதாநாயகனான இளவரசன் மிஷ்கினை கிறித்தவ சமயத்துக்கான பண்புடன் ஒரு காத்திரமான கதாபாத்திரமாக வரைந்து, கேலிக்குரிய பண்பையும் அந்தக் கதாபாத்திரத்தில் கலந்து ஒரு புது வடிவம் கொடுக்கிறார்.

இந்த வெகுளி, குழந்தைப் பருவத்திலிருந்தே ஒரு வகை மன நோய்க்கு ஆளாகித் துன்புற்று வருபவன். எனவே, அவனிடமிருந்து வரும் எந்த எதிர்வினையும் தலையிலிருந்து வருவதைக் காட்டிலும் இதயத்திலிருந்தே வருகிறது. இந்நூலைப் படைத்த தஸ்தயெவ்ஸ்கியைப் போலவே அவன் பணி வானவன்; அன்பு நிறைந்தவன்; தன்னலமற்றவன்.

ரஷ்யாவின் சிற்றரச வம்சத்தைச் சேர்ந்த இளவரசனான மிஷ்கின் 26 வயது இளைஞனாக வலிப்பு நோய்க்குச் சிகிச்சை பெறு வதற்காக ஸ்விட்ஸர்லாந்துக்குச் சென்று, அங்கிருந்து தாய்நாடான ரஷ்யாவுக்குத் திரும்பி வரும்போதுதான் இக்கதை துவங்குகிறது.

மிஷ்கின் தன் தூரத்து உறவினரான திருமதி லிசபெத்தா பிரோக்கோஃபியவ்னா என்பவரைச் சந்திக்கிறான். அதன் பிறகு பலருடன் பழக நேரிடுகிறது; கதைக்களம் பல திசைகளில் விரிகிறது.

நஸ்தாசியா ஃபிலிப்போவ்னா பெற்றோரை இழந்த சிறுமியாக இருக்கிற வேளையில், டாட்ஸ்கி என்னும் நடுத்தர வயது மனிதரால் அடைக்கலம் கொடுக்கப்பட்டு, பின்னர் அவராலேயே சீரழிக்கப்பட்டு, மனவிரக்தியுடன் வாழ்கிறார்.

உரிமையான ஆதரவு இல்லாமல், நஸ்தாசியா பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டாலும் நன்கு கற்றவள்; தெளிவானவள். வறுமையிலும் தளராது தன்னம்பிக்கையுடன் கம்பீரமாக முன்னோக்கிச் செல்லும் நஸ்தாசியா காதல், இரக்கம் என்ற நிலைகளில் அப்படியே உருகிப் போகிறாள். இவள் மிஷ்கினுடனான இரண்டாவது சந்திப்பிலேயே காதல் வயப்படுகிறாள். இருவருக்குமே இசைவான குணம் உண்டல்லவா, அதன் விளைவுதான் இந்தக் காதல் உதயம்!

இதற்கிடையில், ரகோஜின் பார்ஃபென் என்றொரு முரடனும் மூர்க்கத்தனமாக நஸ்தாசி யாவைக் காதலிக்கிறான்.

கானியா என்றழைக்கப்படும் கவ்ரிலா அர்டாலியோனோவிச் என்றொரு இளைஞன் திருமதி லிசபெத்தா பிரோக்கோலி யவ்னாவின் மகளான அக்லா யாவைக் காதலித்துவிட்டு, பின்னர் பணத்துக்காக நஸ்தாசியா ஃபிலிப்போவ்னாவிடம் தன் காதலைத் தெரிவிப்பான்.

நஸ்தாசியாவின் காப்பாளராக இருந்த டாட்ஸ்கி ஒரு பெருந் தொகையைக் கொடுத்து அவளை விடுவிக்கும் போதுதான் யாருமற்ற நிலையில், ‘நம்மை எல்லோரும் சமூகத்தில் இப்படிக் கொச்சைப் படுத்துகிறார்களே... இனி நமது எதிர்காலம்தான் என்ன’ என்ற கேள்வியுடன் தவிப்பாள்.

அக்லாயாவும் இளவரசன் மிஷ்கினைக் காதலிக்க - அவளுக்கும், நஸ்தாசியாவுக்கும் கடும் சொற்போர் நடக்கும். இந்நிலையில், யார் யார் என்னென்ன சிக்கல்களைச் சந்திக்கிறார்கள் இடையில், என்னென்ன முடிவுகளை எட்டுகின்றனர்.

இந்த நிலைகளில் அவர்களுக்குள் நிகழும் அகமும் புறமுமான ஊசலாட்டங்களின் பின்னலே இக்கதையின் நீட்சியும் உச்சகட்டமுமாகும்.

வெகுளி நாவல் ரஷ்யத்திலிருந்து ஆங்கிலம் வழியே தமிழுக்கு வந்திருக்கிறது என்றாலும், தஸ்தயெவ்ஸ்கியின் கதை மாந்தர்களின் உளப் போராட்டங்களை வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

ஏற்கனவே தமிழுக்கு அறிமுகமாகியுள்ள ரஷ்யக் கதைகளைப் போலவே இதனையும் தமிழ் வாசகர்கள் உள்வாங்கி ரசிக்க முடியும். 

வெகுளி

தஸ்தயெவ்ஸ்கி

தமிழில் : ச.வின்சென்ட்

பதிப்பாசிரியர் : சா.ஜெயராஜ்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41- பி, சிட்கோ இண்ட்ஸ்ட்ரியல் எஸ்டேட்

அம்பத்தூர், சென்னை - 600 098.

தொலைபேசி எண்: 044 - 26359906

விலை - 850/-