குழல் வேந்தனின் ‘நதிவெள்ளத்தின் துளி’ சிறுகதைத் தொகுப்பினை முன்வைத்து...

வாழ்க்கை என்பதன் பொருள் யாது? என்ற வினாவிற்கு நாம் இருக்கும் சூழல், நம்முடைய மனநிலை ஆகியவற்றின் அடிப்படையில் வாழ்க்கை ஒரு காலநடை செல்லும் கடற்கரைப் பாதை என்றோ, சிலுவையுடன் தேவ குமாரன் நடக்க நேரிட்ட பாலை பெருவழி என்றோ விடையளிக்கக் கூடும். இந்த இரண்டு விடைகளில் ஒன்றையே முதன்மைப்படுத்தி தம் ஆக்கங்களை உருவாக்கிய படைப்பாளிகள், தத்துவவாதிகள் ஆகியோரை வரலாறு நெடுகிலும் சந்தித்து வருகிறோம். மிகச் சிலரே வாழ்க்கை என்பது இந்த இரண்டும்தான் என விடையளிக்கிறார்கள். அத்தகையவர்களால்தான் ஓர் இல்லத்தில் முழங்கும் மணமுழவினையும், பிரிதொரு வீட்டில் ஒலிக்கும் பிணப்பறையையும் ஒருசேர கேட்க முடிகிறது. படைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்களின் பெரும் கனவு அது. அதற்காக அவர்கள் கணம் தோறும் கணம் தோறும் முயன்றுகொண்டிருப்பார்கள், முயன்றுகொண்டிருக்கவேண்டும். அத்தகைய பலரில் ஒருவரென குழல் வேந்தன் இணைந்து கொண்டுள்ளார்.

kuzhal vendhan bookஓசைகளின் நிறமாலை, மழைக்குடை நாட்கள் ஆகிய கவிதைத் தொகுப்புகளையும், தமிழ் நாவல்களில் தலைமுறை இடைவெளி என்ற ஆய்வு நூலையும் தமிழுக்கு வழங்கிய கோ.கண்ணன் அவர்களுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு இது. இந்தத் தொகுப்பின் மூலம் கண்ணன் குழல் எடுத்து வாழ்வை சிறுகதைகளில் இசைக்கத் துவங்கியிருக்கிறார்.

நதிவெள்ளத்தின் துளி என்ற இந்தத் தொகுப்பில் 10 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றை ஒருசேர வாசித்தபோது வாழ்வின் கருணை மற்றும் கயமை ஆகியவற்றை நேர் நின்று நோக்கிய ஓ£¢ இதயத்தின் சிலிர்ப்பும், தவிப்பும் நகைச்சுவை என்ற ஆடை பூண்டு அணி பூண்டு நம் முன் வந்து நிற்கிறது. இந்த சிறுகதைத் தொகுப்பிற்கு ஒரு கூடுதல் சிறப்பும் உண்டு. காலம் தோறும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் வாழ்வை மையத்திற்குக் கொண்டுவந்து விவாதிக்கும் ஒரு முயற்சியாக இது திகழ்கிறது.

இந்த வரிசையில் இது முதலானது அன்று. ஆனால் இது முக்கியமானது. காரணம் பார்வையற்றவர்களின் வாழ்க்கையை வெளியிலிருந்து கருணையும் மானுட நேயமும் தோன்ற நோக்காமல், அதன் உள்ளே சென்று பொதிந்திருக்கும் களிப்பையும், கரவையும், பதின் பருவ காமத்தையும், சொல் கடந்து நிற்கும் தோழமையையும் என அனைத்தையும் பதிவு செய்யமுயன்றதன் விளைவாக முத்துகளுடனும் மீன் வீச்சத்துடனும் திகழும் நுங்கும் நுரையுமான கடலென இந்தத் தொகுப்பு திகழ்கிறது.

சாலையில் மிகுந்த துயரத்துடன் செல்லும் ஒரு பெண்ணின் தோற்றம் தம்முடைய அக்காவை நினைவுபடுத்த அவளுடைய வாழ்க்கைக்கே பொறுப்பேற்றுக்கொள்ளும் முனியனை, மேலே உத்திரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் மின்விசிறியின் இறக்கை கண்பார்வையற்ற குழந்தைகளின் மீது விழப்போவதை அறிந்து குழந்தைகளைக் காப்பாற்ற முயலும் சுசி அக்காவை தம்முடைய அண்ணனுடைய பார்வையற்ற பெண்குழந்தைகளை தம்முடைய குழந்தைகளாகவே கருதிப் போற்றும் சுலோச்சனா அத்தையைப் பார்த்து வணங்க முடிகிறது. அவர்களின் பெயர்களுக்குப் பின்னால் பட்டங்களும் பதவிகளும் இல்லை. ஆனால் அவர்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய சிறுகதைகளை எழுதிய படைப்பு மனம் இந்த மானுட வாழ்வை ஒரு முறையாக, ஒழுங்காக, அன்பு என்ற தோணி பற்றி, அறம் என்ற துடுப்பிட்டு கடக்கப்படவேண்டிய ஒரு நதியாகக் கண்டிருக்கிறது.

அதே சமயத்தில் ஒன்றை அடைய இயலாமல், தவிர்க்கவும் முடியாமல் தவிக்கும் மனத்தின் உட்கிடக்கையையும், புற நடிப்பையும் பதிவுசெய்ய பாசம் என்பது எதுவரை என்ற சிறுகதையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பழனிச்சாமியின் குடும்பத்தில் பாகப்பிரிவினை நிகழ்கிறது. இளையமகனாகிய சுந்தரமூர்த்திக்கே மிகுதியாகக் கொடுக்கப்படவேண்டும் என்று பழனிச்சாமி நினைக்கிறார். அவ்வாறே பங்கிட்டு வழங்கவேண்டும் என்று மத்தியஸ்தம் செய்பவர்களிடம் ரகசியமாகக் கேட்டுக்கொள்கிறார். இது மூத்தமகனாகிய ராம மூர்த்திக்குத் தெரியவருகிறது. அவன் சார்பில் குரல்கள் எழுகின்றன.

பழனிச்சாமியும், சுந்தரமூர்த்தியும் இணைந்து மூத்தவனாகிய ராமமூர்த்தியை பலவாறாக அவமதிக்கிறார்கள். அப்போது ராமமூர்த்தியின் மனைவி துர்கா குறுக்கிட்டு தத்தம் குடும்பத்திற்கு சொத்தில் பங்கு எதுவும் தேவையில்லை எனச் சொல்கிறார். இது ராமமூர்த்திக்கு உடன்பாடில்லை, ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்லவும் அவனால் முடிவதில்லை. அவன் பதவி, படிப்பு இவற்றால் விளைந்த சமூக மதிப்பும் மனைவி குழந்தைகளின் மனத்தில் தம்முடைய இடம் குறித்த அச்சமும் ராமமூர்த்திக்கு பெரிய தடைகளாகக் காணப்படுகின்றன.

இத்தகைய ஏமாற்றத்தை நேரிடையாகச் சொல்வது ஒரு முறை என்றால் பார்வைத்திறன் கிடைக்கப்பெறாத இரு பெண்குழந்தைகளின் மனத் தவிப்புகளை அங்கதம் எனத் திரையிட்டு, ஏமாற்றம் என்ற ஒன்றை மறைமுகமாகச் சொல்கிறது.

பார்வையற்றவர் உலகம்

குழல்வேந்தனின் நதி வெள்ளத்தின் துளி என்ற சிறுகதைத் தொகுப்பை வாசிக்க பார்வையற்றவர்களின் வாழ்க்கைப் பதிவுகள் பல கிடைக்கின்றன. பல சிறுகதைகளில் அமைந்திருக்கும் இவற்றை இவ்வாறு நிரல்படுத்தித் தொகுத்துக் கொள்ளலாம். பார்வையற்றவர்களுக்குரிய சிறப்புப் பள்ளியில் சேர்க்கப்பெறும் குழந்தைகள் அங்குத் தம்மைப்போன்ற பிறருடன் இணைந்து தமக்குரிய ஒரு தனி உலகைப் படைத்துக்கொள்கிறார்கள், அங்கு, அடிப்படையில் அன்பும் கருணையுமே நிலவுகிறது. ஆனால் அங்கும் சிறுமையின் இருட்கோடுகள் இல்லாமல் இல்லை.

பதிவேட்டில் ஒருவகை உணவு பதிவு செய்யப்படுகிறது. அதற்கான கணக்கு காணப்படுகிறது. ஆனால் நடைமுறை சில நேரங்களில் வேறுபட்டும் திகழ்கிறது. அங்குப் பணிபுரியும் ஏவலர்கள், ஆசிரியர்கள் இவர்களுள் பெண்கள் மிகுந்த கருணையுடன் நடந்துகொள்கிறார்கள். வசந்த மல்லிகா போன்ற ஆசிரியைகள் அங்குப் பயிலும் குழந்தைகளுக்குத் தாயெனத் திகழ்கிறார்கள். பள்ளியை நடத்தும் பணக்காரருக்கும் பள்ளி மாணவர்களுக்கும் இடையே உறவும் இடைவெளியும் ஒருசேர இருக்கின்றன. பள்ளியில் படித்த பலர் உயர் பதவிகளை அடைகிறார்கள். சிலர் கல்லூரிப் பேராசிரியர்

களாகவும் திகழ்கிறார்கள். அவர்களைக் கண்டு ஆசிரியர்கள் மிகுந்த மன நிறைவும் பெருமையும் அடைகிறார்கள்.

அன்னையரும் தேவதைகளும் நதிவெள்ளத்தின் துளி தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் யாவற்றிலும் இடம்பெற்றிருக்கும் பெண்மை பற்றிய சித்திரிப்பு மிகுந்த மன எழுச்சியை அளிக்கக் கூடிய ஒன்று. குழல் வேந்தனின் சிறுகதைகளில் இடம்பெற்றிருக்கும் அன்னையர், மனைவிகள், மகள், தோழிகள் யாவரும் மிகுந்த உள விரிவு கொண்டவர்கள். வெள்ளோல வெங்கம்மா என்ற சிறுகதையில் இடம்பெற்றிருக்கும் முனியனைத் தவிர்த்துவிட்டால் பிற ஆண்கள் அனைவரும் தம் மனைவியரால் ஏதேனும் ஒரு வகையில் மன்னிக்கப்படுகிறார்கள், பொருத்தருளவே படுகிறார்கள். அந்த அளவிற்கு பெண்மையின் பேரன்பை படைப்பு மனம் கொண்டாடுகிறது.

நவீனமயமாதல் நிகழும் காரணத்தினால் ஏற்படும் புதிய சூழல் கிராமங்களிலும், சிற்றூர்களிலும் ஏற்படுத்தும் மாற்றம் இவர்தம் சிறுகதைகளிலும் இடம்பெற்றிருக்கிறது.

கடந்தகால மகிழ்ச்சிகளை எண்ணி ஏங்கும் ஒரு குரல் இந்தக் கதைகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது. தமக்குக் கற்பித்த ஓர் ஆசிரியரின் இறப்பை எண்ணி ஒருவர் வருந்துவதாக ‘தேவலரிப் பூவாச காலம்’ என்ற சிறுகதை அமைந்துள்ளது. ஒருவகையில் இந்த மலரும் மணமும் ஒட்டு மொத்த கடந்த கால வாழ்வின் படிமமாக குழல் வேந்தனின் சிறுகதைகளில் விரிகின்றன.

 நடுவயதை அடைந்திட்ட ஒருவர் தம் பள்ளி வாழ்வின் பரவசக் கணங்களை எண்ணி எண்ணி சில நேரங்களில் புன்னகையுடனும், சில நேரங்களில் பெருமூச்சுடனும் அமர்ந்திருக்கும் ஒரு சித்திரம் இந்த சிறுகதைகளை மொத்தமாக வாசிக்கும்போது கிடைக்கிறது. நெருக்கமானவர்களின் மரணமும், பிரிவும் மீண்டும் மீண்டும் இந்தத் தொகுப்பில் பதிவுசெய்யப் பட்டுள்ளன.

வடிவநிலையில் நோக்கும்போது எவை குழல்வேந்தனின் சிறப்பாகப் புலப்பட்டு புன்னகையை தோன்றச்செய்கின்றனவோ, அவையே. ஆனால், அவை மட்டுமே! என்று அறியநேரும் போது சிறிது மன சஞ்சலமும் ஏற்படுகிறது. தருமபுரி வட்டார கிளைமொழி, அங்கதம் ததும்பும் கதைசொல்லல், கதைசொல்லியே கதையை கலைத்துவிடும் உத்தி ஆகிய இவை தனித்தனி சிறுகதைகளாக வாசிக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றன.

ஒட்டுமொத்த கதைகளையும் ஒருசேர தொகுப்பாக வாசிக்கும்போது வேறுபட்ட கதைசொல் முறையையும், உத்திகளையும் இவர் பரிசோதித்து இருக்கலாம் என்ற எண்ணம் எழுகிறது.

இது குழல் வேந்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு. எங்கள் பார்வையற்ற சமூகத்திலிருந்து ஒலிக்கும் முக்கியமான படைப்புக் குரல் இவருடையது. சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொல் புதிது! என இவர் தொடர்ந்து எழுதுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது, எழுதவேண்டும் என்ற எதிர் பார்ப்பு இருக்கிறது, எழுதும்படி வற்புறுத்த உரிமையும் நம்மைப் போன்றவர்களுக்கு இவரிடம் மிகுதியாகவே இருக்கிறது!

நதிவெள்ளத்தின் துளி

கு.பத்மநாபன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41- பி, சிட்கோ இண்ட்ஸ்ட்ரியல் எஸ்டேட்

அம்பத்தூர், சென்னை - 600 098.

தொலைபேசி எண்: 044 - 26359906

ரூ. 90.00