‘வம்பு தும்பிற்குப் போகாதே’ என்று பிள்ளை களைப் பார்த்துப் பெற்றோர்கள் சொல்வதுண்டு. ‘வம்பு’ என்றால் ‘சண்டை’, ‘தும்பு’ என்றால் ‘குற்றம்’ என்று தமிழ்ப் பேரகராதி பொருள் தருகின்றது. தேவையற்ற சண்டைக்கு, குற்றச் செயலுக்கு ஆளாகக்கூடிய வற்றிற்குப் போகாதே எனும் பொருளில் இத் தொடர் வழங்குவது தெரிகின்றது. இவ்விரண்டு செயல்களிலும் தொடர்ந்து ஈடுபடும் ஒருவனைக் கிராமத்தில் ‘வம்பு தும்புக்காரன்’ என்று சுட்டுவதுண்டு. ‘வம்படியா பேசறான்’ என்ற தொடர் ‘வேண்டுமென்றே; சண்டை யிடும் நோக்கில் பேசுகின்றான்’ என்ற பொருளில் வழங்குவதாகத் தெரிகின்றது.

‘வம்பு’ என்ற சொல்லை மையமிட்டு ‘எதுக்குப்பா வம்பு வழக்கெல்லாம்’, ‘வம்பே வேண்டாம்’, ‘வம்பு பண்ணாத’, ‘வம்புக்கு வராங்க’, ‘ரொம்ப வம்பு பண்றான்’, ‘வம்புக்கு இழுக்காத’, ‘வம்ப வெலகொடுத்து வாங்காத’ போன்ற தொடர்கள் தற்காலத் தமிழில் வழங்குகின்றன. ‘வம்புச் சண்டைக்குப் போகாதே வந்த சண்டையை விடாதே’ என்ற பழமொழியும் தமிழில் உண்டு. வம்புச் சண்டை என்பது ‘வலிய சென்று ஏற்படுத்தும் சண்டை’ ஆகும்.

தொல்காப்பியரின் இலக்கண விதியுள் ‘வம்பு’ உரிச்சொல்லாக அமைகின்றது. இசை, பண்பு, குறிப்பு என்னும் மூன்றனுள் ஒன்றன் அடிப்படையில் தோன்றும். பெயர்ச் சொல்லிலோ வினைச் சொல்லிலோ அல்லது இரண்டிலுமோ தம் வடிவம் திரிந்து வரும்; அல்லது திரியாமல் பெயரையோ வினையையோ அடைமொழி யாகச் சார்ந்து வரும். ஒரு சொல் ஒரு பொருளுக்கோ பல பொருளுக்கோ உரிமையாக வரும். பல சொற்கள் ஒரு பொருளுக்கு உரிமையாக வருவதும் உண்டு. வெளிப்படையில் பொருள் விளக்காமல் ஒரு சொல்லுடன் - பழகிய சொல்லுடன் சார்த்தப்பட்டே பொருளுணர வரும் என்பது உரிச்சொல்லுக்குத் தொல்காப்பியர் வகுத்துள்ள விதியாகும் (தொல்.சொ. உரி. 1).

‘வம்பு’ எனும் உரிச்சொல் நிலையின்மையாகிய குறிப்புணர்த்தும் என்பதை ‘வம்பு நிலையின்மை’ (உரி. 30) எனும் தொல்காப்பிய நூற்பா சுட்டுகின்றது. ‘நிலை யில்லா பொருளை ‘வம்பு’ என்பது குறிக்கும் உரிமை யுடைமையின் உரிச்சொல்லாயிற்று, ‘வம்ப வடுகர்’, ‘வம்ப நாரை’ என்றக்கால் நிலையில்லாமை கூறிய வாராம்’ என்பது இளம்பூரணர் உரைக்குறிப்பாகும். இளம்பூரணர் சுட்டும் இந்த இரண்டு சொற்களும் அகநானூற்றில் பயின்றுவருகின்றன.

கணவன் பிரிவு குறித்துத் தோழியிடம் கூறுவதாக இடையன் சேந்தங்கொற்றனார் பாடிய 375ஆம் பாடலில், ‘காட்டில் உள்ள அடி திரண்ட யா மரத்தின் கிளையானது ‘போரில் வெற்றி நீங்காத வலிய தோளை உடைய சோழன் இளம்பெருஞ் சென்னி, தன் குடி களுக்குச் செய்ய வேண்டிய கடமை காரணமாக முடிக்கப்படும் பொருளாகிய போர்ச் செயலை முடிப்பதற்குச் செம்பினைப் போன்ற வலிய மதில் கொண்ட பாழி என்னும் அரணை அழித்து, புதியதாய் (தொன்று தொட்டு வரும் பூர்வகுடிகளாக இல்லாமல் வெளியிலிருந்து) வந்த வடுகரின் தலையைச் சிதைத்து, கொன்ற யானைகளின் வெண்ணிறக் கொம்பினைப் போல் தோன்றும்’. காட்டு வழியின் தன்மை இவ்வாறு விவரித்து உரைக்கப்பட்டுள்ளது.

சோழ மன்னனிடம் எதிர் நின்று போரிட்ட வடுகர்கள் தமிழ் நிலத்தில் தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் பூர்வ குடிகளாக இல்லாது புதியதாய் வந்தவர்கள் (வடக்கிலிருந்து வந்த, வேற்றுமொழி மரபினர்) என்பதால் ‘வம்ப வடுகர்’ எனப்பட்டனர். இந்த மண்ணின் நிலையற்றவர்கள் ஆவர். தமிழகத்தைக் கைப்பற்றும் நோக்கில் வடக்கிருந்து வந்த மோரியர்களுக்கு வடுகர்கள் துணையாக இருந்துள்ளனர் (தமிழக வரலாறு: சங்ககாலம் - அரசர்கள், ப. 197).

நன்னன் ஆண்டிருந்த பாழி நகரைக் கைப்பற்றி

சில காலம் வடுகர் ஆண்டிருந்தனர். அது கண்ட

சோழன் இளம்பெருஞ்சென்னி, யானைப்படை

கொண்டு பாழியின் அரணை அழித்து, வடுகரை

வென்று இங்கிருந்து துரத்தியுள்ள செய்தியை இந்த அகநானூற்றுப் பாட்டு சுட்டிநிற்கிறது.

அகநானூற்றின் 251ஆம் பாடலில் மோரியர் (மௌரியர்) ‘வம்ப மோரியர்’ எனப்பட்டுள்ளனர். வடக்கேயிருந்த மோரியர்கள் தமிழ்நாட்டைக் கைப் பற்றும் நோக்கில் அவ்வப்போது படையெடுத்து வந்த குறிப்புகளை வரலாற்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டி யிருக்கின்றனர். ஒரு சமயம் குறுநில மன்னன் பழையன் மாறனின் ஆட்சிப் பகுதியாகிய கள்ளக்குறிச்சிக்கு அருகிலிருந்த மோகூரை மோரியர் படை முற்றுகை யிட்டுள்ளது. இது குறித்த செய்தி இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளது.

கணவன் பிரிந்து சென்றிருந்த காலத்தில், அவன் பிரிவால் ஏற்பட்ட துன்பத்தில் வருந்தி மனைவி மெலிந்துபோயினாள். தோழி அவள் நிலைகண்டு கவலையுற்று, மனைவியிடம் வந்து இப்படி ஆறுதல் கூறுவதாக அந்த அகநானூற்றுப் பாடல் அமைந் துள்ளது.

 ‘தோழி! வாழ்வாயாக! நம் தலைவரிடத்தே தூதர்களும் சென்றுள்ளனர். முன்னர்ச் செறிவுடன் விளங்கிய நின் அணிகள் எல்லாம் இப்போது நெகிழ்ந்து கழல, வருத்தத்துடன் நாம் கலங்கியிருக்கின்ற மிகுந்த பொறுத்தற்கரிய துயரினை, அவர்கள் அவரிடத்தே எடுத்துச் சொல்வார்கள். அதனைக் கேட்பாயாக,

வெற்றிச் சிறப்பு மிகுந்த கொடியினையும், விரைவு மிக்க காற்றைப்போன்று செல்லும் ஒப்பனை செய்யப் பெற்ற தேரினையும் உடையவர் கோசர். அவர்கள் பகைத்து எழுந்தனர். அதனால் மிகப்பெரிய பழைமையை உடைய ஆலமரத்தின், அரிய கிளைகள் நிறைந்துள்ள ஊர் மன்றங்களிலே, போர் முரசங்கள் குறுந்தடியினால் அடிக்கப்பெற்றனவாக, அவற்றின் முழக்கம் எங்கும் எழுந்தன.

அப்படி அந்தக் கோசர்கள் எதிர்த்த போர் முனைகளையெல்லாம் அழித்து வெற்றி சூடிவந்த காலத்திலே, மோகூர்ப் பழையன் என்பவன், அவருக்குப் பணியாது, வன்மையுடன் அவர்களை எதிர்த்து நின்றான்.

அப்போது, அவன்மீது பகைமை மேற்கொண்டு, மிகப்பெரிய சேனையுடன் வந்தவரான புதிய மோரி யர்கள், புனையப்பெற்ற தம் தேரின் சக்கரங்கள் உருண்டு செல்லுமாறு மலையிடங்களை உடைத்துப் பாதை யினை அமைத்தனர். விளங்கும் வெண்மையான அருவி களையுடைய அத்தகைய மலைவழிகளுக்கும் அப் பாலுள்ள... நெடுவழியினையும், கடந்து சென்றுள்ளனர் நம் தலைவர். ...அவர் நந்தன் என்னும் பாடலிபுரத்து மன்னனுடைய செல்வத்தையே பெற்றாரென்றாலும், அதற்கு மகிழ்ந்து அவ்விடத்தேயே தங்கிவிடும் இயல் பினர் அல்ல. விரைவிலேயே திரும்பி வந்துவிடுவார்’ (அகநானூறு, புலியூர் கேசிகன் உரை, சாரதா பதிப்பகம், 2010, பக். 274,275) என்று கணவனைப் பிரிந்த மனைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். இப்பொருளமைந்த பாட்டு,

தூதும் சென்றன; தோளும் செற்றும்;

ஓதி ஒண்நுதல் பசலையும் மாயும்;

வீங்குஇழை நெகிழச் சாஅய், செல்லலொடு

நாம்படர் கூரும் அருந்துயர் கேட்பின்,

நந்தன் வெறுக்கை எய்தினும், மற்றுஅவண்

தங்கலர் - வாழி, தோழி!- வெல் கொடித்

துனைகால் அன்ன புனைதேர்க் கோசர்

தொல்மூ தாலத்து அரும்பணைப் பொதியில்,

இன்இசை முரசம் கடிப்புஇகுத்து இரங்க,

தெம்முனை சிதைத்த ஞான்றை; மோகூர்         

பணியா மையின், பகைதலை வந்த

மாகெழு தானை வம்ப மோரியர்

புனைதேர் நேமி உருளிய குறைத்த

இலங்குவெள் அருவிய அறைவாய் உம்பர்,

மாசுஇல் வெண்கோட்டு அண்ணல் யானை       

வாயுள் தப்பிய , அருங்கேழ், வயப்புலி

மாநிலம் நெளியக் குத்தி, புகலொடு

காப்புஇல வைகும் தேக்குஅமல் சோலை

நிரம்பா நீள்இடைப் போகி-

அரம்போழ் அவ்வளை நிலைநெகிழ்த் தோரே.

(அகம்: 251)

என வருகின்றது. பழையன் - கோசர்; பழையன் - மோரியர் பகை குறித்த செய்தியை இப்பாடல் சுட்டு கின்றது. பழையனுக்கும் கோசர்க்கும் இடையில் நடைபெற்ற போரில் கோசர்க்குத் துணையாக மோரியர்கள் இருந்தனர் என்று (ந.மு. வேங்கடசாமி நாட்டார் & ரா. வேங்கடாசலம் உரை, கழகம், ப. 251; இரா. செயபால் உரை, என்.சி.பி.எச். ப. 753; நா. மீனவன்; சுப. அண்ணாமலை உரை, கோவிலூர் மடாலயம், ப. 301) உரை ஆசிரியர்கள் சிலர் சுட்டுகின்றனர். ‘கோசர்’ எனும் நூலை இயற்றிய ரா. ராகவையங்கார் ‘மோகூர் மன்னன் பழையனுக்கும் மோரியருக்கும் இடையே நடைபெற்ற போரில் ‘கோசர்’ பழையனுக்குத் துணையாக இருந்தனர் என எழுதியிருக்கிறார் (கோசர், 1951, ப. 16). மதுரைக்காஞ்சியில் வரும்

“மழையழுக் கறாஅப் பிழையா விளையுட்

பழையன் மோகூ ரவையகம் விளங்க

நான் மொழிக் கோசர் தோன்றி யன்ன

நாமே எந் தோன்றிய நாற்பெருங் குழுவும்” (508 - 511)

என்வரும் குறிப்பை ரா. ராகவையங்கார் அதற்குத் துணையாகக் கொண்டிருக்கிறார்.

சங்ககால அரசர்கள் குறித்து ஆய்வு செய்துள்ள புலவர் கா. கோவிந்தன் அவர்கள், மோரியருக்கும் பழையனுக்கும் இடையே நடைபெற்ற போரில் பாண்டியனின் கீழிருந்த ‘கோசர்’ படையைப் பழையனுக்குத் துணையாக அனுப்பி உதவினர் எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு மேற்குறித்த அக நானூற்றுப் பாடலை (251) ஆதாரமாகக் கொள்கிறார் (தமிழக வரலாறு: சங்ககாலம் - அரசர்கள், 1993, ப. 166). ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ எனும் நூலில் கா. அப்பாத்துரை அவர்களும் கோசர்கள் மோரியர் களுக்கு உதவியதாகக் குறிப்பிட்டிருக்கிறார் (ப. 69).

அகநானூற்றின் அந்தப் பாட்டு, ‘கோசர்’ எதிர்த்த போர் முனைகளைப் பழையன் அழித்து, கோசருக்குப் பணியாது இருந்த செய்தியைக் குறிப்பிடுகின்றது. இவ்விருவருக்கும் இடையில் பகை இருந்த காலத்தில் பழையன் ஆண்டிருந்த நாட்டின்மீது மோரியர் படையெடுத்து வந்துள்ளனர் என்ற குறிப்பையும் அப்பாட்டு வெளிப்படுத்துகின்றது. மோரியருக்கோ, பழையனுக்கோ கோசர் துணையாக இருந்தது பற்றிய குறிப்பு அப்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. அந்தப் பாட்டை மையமிட்டு எழுதப்பட்ட உரைகளும், ஆய்வுகளுமே கோசர் பழையனுக்கு உதவியதாகவும், மோரியருக்கு உதவியதாகவும் இரு முரண்பட்ட முடிபுகளைக் குறிப்பிட்டிருக்கின்றன.

மதுரைக்காஞ்சியில் ‘கோசர், பழையன் அவையில் இருந்த ‘வீரர்’ எனவரும் இந்தக் குறிப்பும்

“மழையழுக் கறாஅப் பிழையா விளையுட்

பழையன் மோகூ ரவையகம் விளங்க

நான் மொழிக் கோசர் தோன்றி யன்ன

நாமே எந் தோன்றிய நாற்பெருங் குழுவும்” (508 - 511)

சிந்திக்கத்தக்கதாய் உள்ளது. பழையன் - கோசர் இடையே நிகழ்ந்த போரில் பழையன் வன்மையுடன் நிலைநின்று தோல்வியுறாமல் இருந்திருக்கிறான். அப்பொழுது இந்த அகநானூற்றுப் பாடல் எழுதப் பட்டிருக்கக்கூடும். கோசர்களுக்கு ஏற்பட்ட தொடர் தோல்வியின் காரணத்தினால் பின்னாளில் பழையனுக்கு அடிமைப்பட்டு அவன் அவையிலேயே வீரர்களாக இருந்திருக்கக்கூடும். இந்தக் காலத்தில் மதுரைக்காஞ்சி நூல் பாடப்பட்டிருக்கக்கூடும். எட்டுத்தொகையினும் பத்துப்பாட்டு நூல்கள் பிற்காலத்தன என்பது பல அறிஞர்களின் கருத்தாக இருப்பதும் இங்குச் சிந்திக்கத் தக்கது. மேலும் ஆய்வு செய்யக்கூடிய பகுதியாகவும் அமைகிறது.

தமிழ் நிலத்துக்கு உரியர் அல்லாத, வடக்கிருந்த வந்த மோரியர் ‘வம்ப மோரியர்’ எனப்பட்டனர். ‘வடுகர்’, ‘மோரியர்’, போன்று ‘கோசர்’ என்பாரும் வேற்றுக்குடியினர் என்று அறிஞர் ரா. ராகவையங்கார் குறிப்பிடுகிறார். ‘கோசர்’ எனும் நூலில் கோசராவார் காசுமீர நாட்டிலிருந்து வேளிரையடுத்துக் கோசாம்பியைத் தலைநகராகக் கொண்ட வத்த (வத்ஸ) நாட்டு வழியாய்த் தமிழ்நாடு வந்தவர் என்றும்; வத்தம் அல்லது வச்சம் (வத்ஸம்) என்னும் வட சொல்லிற்கு இளமைப் பொருளுண்மையாலும் அவர் கோசம் என்னும் ஓர் அரிய சூள் முறையைக் கையாண்டதினாலும், இளங்கோசர் எனப்பட்டிருக்கலாம் என்றும் கோசர் என்னும் பெயருக்குக் கோசம் என்னும் சூள் முறையன்றி, கோசம் (கோசாம்பி) என்னும் நகர்ப் பெயரும், குசர் என்னும் ஆட்டுப் பெயரும், கோசம் (திரவியம்) என்னும் செல்வப் பெயரும், காரணமாய் இருக்கலாம் என்றும், கோசர் முதலில் கொங்கு நாட்டில் வந்து பின்பு குடகில் குடியேறியவர் (கோசர், 1951) என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

வடநாட்டிலிருந்து இங்கு வந்தவர்களைச் சங்க இலக்கியங்களில் ‘வம்ப வடுகர்’, ‘வம்ப மோரியர்’ என சுடப்பட்டுள்ளனர். ஆனால் ‘கோசரை’ மட்டும் ‘வம்பக் கோசர்’ என எங்கும் சுட்டிக் கூறாதது சிந்திக்கத்தக்கதாய் உள்ளது.

‘வம்ப மோரியர்’, ‘வம்ப வடுகர்’ என்பது போன்று ‘வம்பு’ எனும் சொல்லை அடைமொழியாகக் கொண்ட ‘வம்ப மாக்கள்’ எனும் சொல் நற்றிணையின் இரண்டு பாடல்களில் (164, 298) பயின்று வருகின்றது. பாலை வழியின் தன்மையைச் சொல்லக் கூடியதாக அந்த இரண்டு பாடல்களும் அமையப்பெற்றுள்ளது. ‘பாலை வழியின் தன்மை அறியாது, அங்கிருக்கும் கள்வர் கூட்டத்தினரால் தமது உடைமைகள் கொள்ளைபோகும் என்று தெரியாமல் (நெடுநாட்களாக அங்கே இருந் திருந்தால் தெரிந்திருக்கும்) செல்லக்கூடிய ‘புதியவர்கள்’ ‘வம்ப மாக்கள்’ என அழைக்கப்பட்டுள்ளனர்.

மருத நிலத்தில் வாழும் தன்மையுடையது நாரை. அது இரைதேடுவதற்கு வேற்று நிலத்திற்குச் செல்லுகின்ற போது ‘வம்ப நாரை’ என (அகம். 100, 190; குறுந். 236 சங்கப் பாடல்களில் சுட்டப்பட்டுள்ளன. ‘வம்ப நாரை’ என்பது அந்த நிலத்தில் நெடுநாட்களாக நிலைத்து தங்கிறாத, வேற்று நிலத்துக்கு உரியதாகிய புதியதாய் வந்த நாரை’ என்பதாகும். போரில் இறந்துபட்டோர் மீது புதியதாக அமைந்த கற்குவியல் ‘வம்பப் பதுக்கை’ என புறநானூற்றுப் பாடலில் (3) சுட்டப்பட்டுள்ளது. சங்க காலத்தில் இறந்தவர்களைப் புதைத்த (கற்களைக் கொண்டு) இடம் ‘பதுக்கை’ என அழைக்கப்பட்டது. நெடுநாட்களாக இல்லாமல் புதிதாய் தோன்றிய பதுக்கை ‘வம்பப் பதுக்கை’ எனப்பட்டது. இவைபோல் ஒரு மன்னன்மீது புதிதாய் படையெடுத்து வந்த வேந்தன் ‘வம்ப வேந்தர்’ (புறம் 287, 345) என அழைக்கப் பட்டுள்ளனர்.

பாண்டிய தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனிடம் நிலைத்து நின்று எதிர்த்துப் போர் செய்யும் தகுதியற்ற வீரர் ‘வம்ப மள்ளர்’ எனப்பட்டு உள்ளனர். பாண்டியன் நெடுஞ்செழியனின் வீரம் குறித்து இடைக்குன்றூர் கிழார் பாடிய புறநானூற்றின் 77,78,79 ஆகிய மூன்று பாடல்களில் இச்செய்தி இடம் பெற்றுள்ளது. தம்மீது போரிட வந்த மள்ளர்களைப் பாண்டியன் நெடுஞ்செழியன் புறமுதுகிட்டு ஓடச் செய்த குறிப்பைக் கிழார் இவ்வாறு பாடியிருக்கிறார்.

மலைப்பு அரும் அகலம் மதியார், சிலைத்து எழுந்து,

விழுமியம், பெரியம், யாமே; நம்மின்

பொருநனும் இளையன், கொண்டியும் பெரிது என

எள்ளி வந்த வம்ப மள்ளர்

புல்லென் கண்ணர் புறத்தில் பெயர

ஈண்டு அவர் அடுதலும் இல்லான்... (புறம். 78: 4- 9)

செழியனின் போரிடுவதற்குரிய அரிய மார்பை மதியாதவராய், ஆரவாரித்து எழுந்து ‘நாங்கள் சிறப்புடையோம் படையினாலும் பெரியோம்; நம்மொடு போர் செய்பவன் மிக இளையவன் எனவே நாம் கொள்ள இருக்கும் கொள்ளைப் பொருளும் பெரிது’ என இகழ்ந்து புதிய, நிலையில்லாத மள்ளர்கள் போரிட வந்தார்கள். ஒளியிழந்த கண்களை உடைய அவர்களை நின்ற இடத்தில் நில்லாது புறத்தே ஓடச் செய்திருக் கிறான். நிலைத்துநின்று போரிடும் வீரத்திறமற்ற மள்ளர் ‘வம்ப மள்ளர்’ எனப்பட்டுள்ளனர். கோடைக்காலத்தில் நீடித்து நில்லாது புதிதாக மழையத் தரும் மேகத்தை ‘வம்பப் பெரும்பெயல்’ (பெயல் என்றால் மேகம்) என புறநானூற்றுப் பாடலொன்று (325) சுட்டுகின்றது.

‘வம்பப் பெரும்பெயல் வரைந்து சொரிந்து இறந்தென’

(புறம். 325: 2)

‘வேனில் பருவத்தில் புதிதாக மழையைத் தரும் மேகம் சிறிது பொழுது பெய்து நீங்கிற்று’ என்கிறது அந்தப் புறநானூற்றுப் பாடல். கோடை வெப்பத்தைப் போக்குமளவில் நிலைத்துநின்று வெகுநேரம் மழை தராமல் சிறிதளவு பெய்துவிட்டுக் களைந்துபோன

மேகம் ‘வம்பப் பெரும்பெயல்’ எனப்பட்டது. கோடைக் காலத்தில் புதிதாகப் பெய்கின்ற மழையை ‘வம்ப மாரி’ (மாரி என்றால் மழை) என்று அழைத்துள்ளார் ‘கோவர்த்தனார்’ எனும் சங்கக் கவிஞர்.

பிரிந்து சென்ற கணவன் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்ற கார்ப் பருவம் வந்துவிட்டதாக மனைவி கருதி வருந்துகிறாள். அப்பொழுது அவளின் தோழி

மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை

கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய

பருவம் வாரா அளவை, நெரிதரக்

கொம்புசேர் கொடிஇணர் ஊழ்த்த

வம்ப மாரியைக் கார்என மதித்தே. (குறு. 66)

எனப் பாடித்தேற்றுகிறாள். ‘பரற்கற்கள் விளங்கும் பாலைநிலத்தில், கடத்தற்கரிய வழியைக் கடந்துசென்ற நம் காதலர், மீண்டு வருவதாகச் சுட்டிக் கூறிய பருவம் வருவதற்குள், பருவம் அல்லாத காலத்தில் பெய்யும் மழையைக் கார்காலத்து மழை எனக் கருதி, பருத்த அடியுடன் விளங்கும் கொன்றை மரம் கொடி மாலையாகப் பூக்கள் மலர்ந்தன. அது அறியாமை உடையன’ இதனால் ‘கார்ப்பருவம்’ என்று மயங்கி வருந்தாதே’ என்று கணவனைப் பிரிந்து சென்ற மனைவியைத் தேற்றுகிறாள். நிலைத்துநின்று பெய்யக் கூடிய கார்காலத்து மழைபோல் இல்லாமல், கால மல்லாத காலத்தில் புதிதாகப் பெய்த மழை ‘வம்ப மாரி’ எனப்பட்டது.

‘வம்பு’ நிலையற்றது; இயல்பைச் சிதைக்கவல்லது. நிலையற்றது நிலையானதை வென்றிட முயற்சிக்கும். வடக்கிருந்து வந்த ‘வம்ப மோரியர்’, ‘வம்ப வடுகர்’ படைகள் நிலையான குடியை வென்றிட முயற்சித்திருக் கின்றன; இறுதியில் வீழ்ந்திருக்கின்றன. பாண்டியனின் வீரத்தை, நிலையில்லாத புதிய ‘மள்ளர்’ கூட்டம் வீழ்த்திட எண்ணி வீழ்ந்துள்ளது. வம்பப் பெரும் பெயலுக்குக் கோடை வெப்பத்தைப் போக்குமளவில் நிலைத்துநின்று வெகுநேரம் மழைதரும் வன்மை இல்லை. ‘வம்ப மாரி’ க்கும் கார்கால மயக்கத்தையே தரமுடிகிறது. ‘வம்பு’ நிலைத்த இயல்பைச் சிதைக்கிறது. இதனால்தான் ‘வம்பு தும்பிற்குப் போகாதே’ என்ற வழக்கு வந்திருக்குமோ?.

துணைநின்ற நூல்கள்

1.             ராகவையங்கார், ரா. 1951. கோசர், சிதம்பரம், அண்ணாமலை நகர்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

2.             அப்பாத்துரை, கா. 2001. தென்னாட்டுப் போர்க்களங்கள், சிதம்பரம்: மெய்யப்பன் தமிழாய்வகம்.

3.             புலியூர்க் கேசிகன் (உரையும் பதிப்பும்). 2010. அகநானூறு - மணிமிடைப்பவளம் மூலமும் உரையும், சென்னை: சாரதா பதிப்பகம்.

4.             தமிழண்ணல் & அண்ணாமலை, சுப. (ப.ஆ.), நா. மீனவன் & அண்ணாமலை, சுப. (உரை). 2004. அகநானூறு, இரண்டாம் பகுதி - மணிமிடைப்பவளம், கோவிலூர்: கோவிலூர் மடாலயம்.

5.             காசிவிசுவநாதன் செட்டியார், பாகனேரி வெ. பெரி. பழ. மு. (வெளியீடு). 1968. ந. மு. வேங்கடசாமி நாட்டார் & ரா. வேங்கடாசலம் பிள்ளை (உரை), எட்டுத்தொகையுள் ஒன்றாகிய அகநானூறு, சென்னை: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

6.             பரிமணம், அ.ம. & பாலசுப்பிரமணியன், கு. வெ. (ப.ஆ.); செயபால், இரா. (உ.ஆ.). 2014 (5ஆம் பதிப்பு). சங்க இலக்கியம் அகநானூறு (தொகுதி - 1, 2) சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

7.             பரிமணம், அ.ம. & பாலசுப்பிரமணியன், கு. வெ. (ப. ஆ.). 2014 (5ஆம் பதிப்பு). சங்க இலக்கியம் புறநானூறு (தொகுதி1, 2) சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

8.             பரிமணம், அ.ம. & பாலசுப்பிரமணியன், கு. வெ. (ப. ஆ.); வி.நாகராசன் (உ.ஆ.) 2014 (5ஆம் பதிப்பு). சங்க இலக்கியம் குறுந்தொகை (தொகுதி1, 2) சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

9.             சுப்பிரமணியன், ச.வே. (பதிப்பும் உரையும்). 2010 (11ஆம் பதிப்பு). தொல்காப்பியம் தெளிவுரை, சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.