பத்து இதழ்களில் ஒரு பார்வை

நீண்ட நாட்களாக எனக்கு அறிஞர் அண்ணா ஆசிரியராக இருந்து வெளியிட்ட ‘திராவிட நாடு’ வார இதழ்களின் பழைய பிரதிகள் கண்டு, அவற்றைப் படித்து அந்நாளைய தமிழக அரசியல், பொது வாழ்வு நிகழ்வுகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உண்டு. அண்மையில் நான் பெரியார் திடல் பெரியார் நூலகத்துக்குச் சென்ற போது இது நிறைவேறியது. 1942 இல் தொடங்கப்பட்ட இவ்விதழ்த் தொகுப்பின் முதலாண்டு இதழ்கள் கிடைக்கப் பெறவில்லை. இவ்வேட்டின் பதிவு எண் 4455. 51, நிமந்தகாரத் தெரு, சின்ன காஞ்சிபுரம் என்ற முகவரியில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. ஆறு பக்கங்கள் கொண்ட வார இதழ். ஆண்டுச் சந்தா ரூ.1/- மட்டுமே. சௌமியன், பரதன் என்ற புனை பெயர் களில் அண்ணா தனது கட்டுரைகளை எழுதி யுள்ளார். நான் இக்கட்டுரையில் இரண்டாம் ஆண்டின் (மலர்- 2; இதழ் 2) 14.03.43 நா. வார இதழிலிருந்து 16.05.43 நா வார இதழ் வரையிலான திராவிட நாடு இதழ்களிலிருந்து சில அரிய செய்திகளைத் தொகுத்துள்ளேன். இவ்வார இதழ் ஞாயிறுதோறும் வெளியிடப்பட்டு வந்துள்ளது. இவ்வார இதழ் செயல்பட்டு வந்த முகவரி யிலேயே வானம்பாடி நூற்பதிப்புக் கழகமும் செயல்பட்டு வந்துள்ளது.

dravida nadu(14.03.43) 7.03.43 அன்று திராவிட நாடு இதழின் முதலாண்டு நிறைவு விழா. தலைவர் சி.வி. இராசகோபால் தலைமையில் நடைபெற்ற செய்தி வெளியாகி உள்ளது. திருவத்திபுரம் கந்தசாமி, ஈழத்தடிகள் ஆகியோர் இவ்விழாவில் உரையாற்றி யுள்ளனர்.

(21.03.43) 25.04.43 அன்று நிகழ்ந்த திருச்சி ஜில்லா ஜஸ்டிஸ் மாநாடு பற்றிய அறிவிப்பு வெளி யாகி உள்ளது. சி.என்.ஏ. தலைமை. ‘திராவிட நாடு’ படத்திறப்பாளர் - பெரியார். இவ்விதழில் 15.3.43 அன்று சேலத்தில் நடைபெற்ற சேலம் கல்லூரி மாணவர்களின் ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்ற’ விழாவில் ‘இளைஞர் குறிக்கோள்’ என்ற தலைப்பில் சி.என்.ஏ. ஆற்றிய பொழிவு பற்றிய செய்தி வெளியாகி உள்ளது. 14.3.43 அன்று கம்பன் பற்றிச் சோமசுந்தரபாரதி யாருக்கும் அண்ணா துரைக்கும் இடையே நடந்த சொற்போர் பற்றிய செய்தி வெளியாகி உள்ளது. மேலும் டி.கே.எஸ் சகோதரர்களின் நாடகம் ‘தமிழ் வளர்த்த தாய்’ - ஒளவையார் 20.3.43 முதல் 26.3.43 வரை நடைபெற உள்ளது என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

(28.03.43) திருத்தவத்துறை திருவள்ளுவர் கழகத்தார் வெளியிட்ட ‘திருவள்ளுவர் நினைவு மலர்’ பற்றியும், ப. செல்வராசுவின், ‘ஈ.வெ.ரா உலகப் பெரியார்’ என்ற நூல் பற்றியும் மதிப்புரை வெளியாகி உள்ளது. இவ்விதழில் ‘இனிவரும் உலகம்’என்ற தலைப்பில் பெரியாரின் கட்டுரை வெளியாகி உள்ளது. 22.2.43 அன்று நாகர் கோவிலில் நடைபெற்ற மகாநாடு தமிழ்க்கலை மகாநாடா? கம்பராமாயண மகாநாடா? என்ற தலைப்பில் தோழர் சீர்திருத்த கவிச்சுடர்மணி பாரதிதாசன், பாரதியார் படத்திறப்புச் செய்ய மட்டும் அனுமதிக்கப்பட்டு விரிவாகச் சொற்பொழிவு ஆற்ற மாநாட்டுத் தலைவர் டி.கே. சிதம்பரநாத முதலியாரும், தேசிகவிநாயகம் பிள்ளையும் ஏற்படுத்திய தடை பற்றிய செய்தி வெளியாகி உள்ளது. மேலும் இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற 2-ஆவது நாள் மகாநாட்டில் பாரதிதாசன் ஏமாற்றம் போக்கும் அளவில், முதலியாரின் வாய்ப்பூட்டை உடைத்து நாஞ்சில் நாடு வீரத்தமிழன் ஹாஸ்யமணி என்.எஸ். கிருஷ்ணன் பாரதிதாசனை விரிவாக உரையாற்றச் செய்த ஏற்பாடு பற்றியும் சுவையான செய்தி வெளியாகி உள்ளது. திராவிட நாடு இரண்டாம் ஆண்டு வளர்ச்சி நிதியாகக் கோபி செட்டிபாளையம் நண்பர்கள் அளித்த நன்கொடை விவரம் வெளியாகி உள்ளது.

(4.4.43) கும்பகோணம் கே.கே. நீலமேகம் இல்லத் திருமணம் பற்றிய அறிவிப்பு இதில் எவ்விதப் பரிசுகளும் வேண்டாம்; ஒலிபெருக்கும் கருவி அமைக்கப்படும் என்றும் செய்தி. இவ் விதழில் ‘மூர்த்தி மறைவு’ என்ற தலைப்பில் சென்ற கிழமை தோழர் எஸ். சத்தியமூர்த்தி மறைவு பற்றிய செய்தி வெளியிடப்பட்டது.

(11.4.43) 4.4.43 ஞாயிறு அன்று போளூரில் நடைபெற்ற கூட்டத்தில் 3 மணி நேரம் சி.என்.ஏ உரையாற்றினார். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை. கூட்டம் இரவு 7 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை நடந்தது. கூட்டத்தலைவர் ஜனாப் படேல் அல்லா பக்ஷ் சாயபு. கூட்ட இடம் போளூர் பெரிய மசூதி எதிரில். புதுமைக் குறள் என்ற நூல் (கருவூர் ஈழத்தடிகள் சிறப்புரை பெற்றது) பற்றிய விளம்பரம்.

(18.4.43) இவ்விதழில் ‘கலிங்கராணி’ என்ற தொடர்கதை ‘சௌமியன்’ என்ற பெயரில் சி.என்.ஏ எழுதியுள்ளார். நு.ஏ. ராமசாமி, தேதி 1.4.43 ஈரோடு ‘திராவிட நாடு பத்திரிகைக்கு உதவி வேண்டுகோள்’ என்ற செய்தி வெளியாகி உள்ளது. இதில் திராவிட நாடு வெளியிட டபுள் கிரவுன் சிலிண்டர் மெஷின் ரூ. 1,200/- ஆகிறது. இதற்குத் தமிழர்கள் தாராளமாக நிதி உதவ வேண்டும் என்று பெரியார் தெரிவித்து அவரே முன் வந்து ரூ. 100/- அன்பளிப்பு செய்துள்ளார். இது அக் காலத்தில் பெரிய தொகையாகும். இவ்விதழில் கும்பகோணத்தில் நடைபெற்ற தமிழர் இயக்கத் தளபதி குடந்தை கே.கே. நீலமேகம் இல்லத் திருமணத்திற்கு 4000 பேர்கள் வருகை என்றும், சி.என்.ஏ., பெரியார் வருகை சிறப்புச் சேர்த்தது என்றும் செய்தி வெளியாகி உள்ளது. காஞ்சியில் ‘சந்திரோதயம்’ நாடகம் மே மாதத்தில் நடைபெற உள்ளது பற்றிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

(25.04.43) இவ்விதழில் வழக்கமான கட்டுரை, தலையங்கத்துடன் (1) தீ பரவட்டும் (சி.என்.ஏ) (2) இனிவரும் உலகம் (பெரியார் ஆராய்ச்சிக் கட்டுரை) ஆகிய நூல்கள் பற்றிய அறிவிப்பு வெளியானது. இவ்விதழில் இசையரசு மு.மு. தண்டபாணி தேசிகரின் ‘தமிழ்மொழியின் சிறப்பு’ பற்றிய பாடல் வெளியாகி உள்ளது. குமாஸ்தாவின் பெண் (அ) கொலைகாரியின் குறிப்புகள் பிரதம நடிகர் கூ.மு. சண்முகம் அவர்களின் அன்புரையுடன் கூடிய நூல் வெளியீடு என்ற அறிவிப்பும் வெளி யாகி உள்ளது.

(02.05.43) 5.4.43 முதல் போளூர் தோழர் மு.சுப்பிரமண்யம் அவர்களைக் கௌரவ நீதிபதி யாக இரண்டாண்டுகட்கு நியமனம் செய்யப்பட்ட செய்தி வெளியாகி உள்ளது. ‘புத்தாண்டு வாழ்த்து’ என்ற தலைப்பில் கரந்தைக் கல்லூரி மாணவன் ந. இராமநாதனின் கவிதை வெளியாகி உள்ளது.

(09.05.43) சோவியத் சிங்கம் லெனின் என்று முதல் பக்கத்தில் கட்டுரை. மே தின முழக்கம் என்ற தலைப்பில் தலையங்கம். விடுதலை வீரன் ரூஸோ என்ற கட்டுரை. திருச்சிராப்பள்ளி ஜில்லா 14-ஆவது நீதிக்கட்சி மாநாட்டில் அ. அங்கமுத்து அம்பல காரர் ஆற்றிய வரவேற்புரை வெளியிடப்பட்டு உள்ளது. இவ்விதழின் இறுதியில் திராவிடத் தோழர்கள் ஆரியம் அழிக! அபேதவாதம் வாழ்க! சனாதனம் வீழ்க! சமதர்மம் வாழ்க! என்று முழங்கக் கோரப்பட்டுள்ளது.

(16.05.43) சென்னை நகரத் தொகுதி - மத்திய சட்டசபைத் தேர்தலில் தோழர் சுந்தரராவ் நாயுடு அவர்கள் (நீதிக்கட்சியின் தளபதி) வெற்றிபெற வாக்களிக்க வேண்டுகோள் வெளியாகி உள்ளது. பல நாடுகளில், ஊர்களில் நடைபெற்ற மேதினக் கொண்டாட்டங்கள் பற்றிய விரிவான செய்திகள் உள்ளன. 25.04.43 அன்று நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் கட்சிக்கொடியை சின்னராசு (சி.பி. சிற்றரசு) ஏற்றி வைத்தார் என்ற செய்தியும், திருவத்திபுரம் தோழர் சுப்பிரமணியனின் மறைவுச் செய்தியும் வெளியாகி உள்ளன.