u vesiதமிழறிஞர்களாகச் சிறந்து விளங்கிய நால்வர் சாமிநாதையர் பிறந்த அதே ஆண்டில் (1855) பிறந்திருக்கின்றனர் என்பதை வரலாற்றில் பார்க்க முடிகிறது. வெவ்வேறு நிலப்பகுதியில் பிறந்த அவர்கள் பல்வேறு காலச்சூழல்களில் சாமிநாதையரோடு நெருங்கிப் பழகி வாழ்ந்திருக்கிறார்கள் என்பது சிறப்புக்குரியதாகும்.

ஒருவர், கேரள மாநிலத்தின் ஆலப்புழா எனும் ஊரில் பிறந்த மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை (ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897). இவர், உ.வே.சாமிநாதையரின் நெருங்கிய அன்பர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர். தாம் எழுதிய மனோன்மணீயம் நாடகத்தைச் சாமிநாதையரிடம் அளித்துப் பயன்மிக்க கருத்துக்களைப் பெற்றுப் பெருமைபெற்று விளங்கியவர். இவர் 42ஆவது வயதில் தம் உலக வாழ்வை நீத்தது வரலாற்றுச் சோகமான ஒரு நிகழ்வாகும்.

இரண்டாமவர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பிறந்த வீர. லெ. சிந்நய செட்டியார் (1855 - 1900). பாண்டித்துரைத் தேவருக்கு நெருங்கிய நண்பரான இவர், ஆசுகவி என தம் சமகாலப் புலவர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர்.

இவரின் ஆசிரியர் வன்றொண்டர் நாராயணன் செட்டியார். இவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர். சிந்நய செட்டியார் 1897ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்பகோணம் மகாமகத்திற்குப் பாண்டித்துரைத் தேவருடன் வந்திருந்தபோது, அந்த மகாமகத்துக்குத் தேசிகருடன் வந்திருந்த சாமிநாதையரைச் சந்தித்திருக்கிறார் என்பது வரலாற்றுச் செய்தியாகும். இவரும் தமது 45ஆம் வயதில் இயற்கை எய்தினார் என்பது நினைவுகொள்ளத் தக்கது.

மூன்றாமவர், இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவராயினும், சென்னை கோமளலீசுவரன் பேட்டையில் பிறந்த வி. கனகசபை பிள்ளை (மே 25, 1855 - பிப்ரவரி 21, 1906).

தம்மிடமிருந்த பத்துப்பாட்டு, புறநானூறு, சிலப்பதிகாரம் உள்ளிட்ட பழந்தமிழ் நூற்சுவடிகளைச் சாமிநாதையருக்குக் கொடுத்து உதவியவர். The Tamils 1800 Years Ago (ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்) என்ற நூலை எழுதித் தமிழின் பெருமையை உலகம் அறியச் செய்த இவரும் தமது 50ஆவது அகவையில் இயற்கை எய்தியிருக்கிறார்.

நான்காமவர், சென்னையில் பிறந்த ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 - நவம்பர், 1932). தமிழின் முதல் கலைக்களஞ்சியம் என்ற பெருமை பெற்ற ‘அபிதான சிந்தாமணி’யைத் தமிழுக்கு அளித்தவர். 42 ஆண்டுகால பேருழைப்பின் விளைவாக வெளிவந்த அபிதான சிந்தாமணி ஆக்கத்திற்குச் சாமிநாதையர் பதிப்பித்து வெளியிட்ட சங்க நூல்கள் பெரிதும் உதவியதாகச் சிங்காரவேலு முதலியாரே குறிப்பிட்டிருப்பார். இவர் தமது 76ஆம் வயதில் இயற்கை எய்தியிருக்கிறார்.

இந்த நால்வரும் உ.வே. சாமிநாதையர் பிறந்த அதே ஆண்டில் பிறந்து அவருக்கு முன்னரே மறைந்து போயிருக்கிறார்கள். சாமிநாதையருக்குக் காலம் அப்படியான ஊழ்வினையைத் தந்திருக்கவில்லை. 87ஆம் வயதுவரை நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்திருக்கிறார். இந்தப் பெருமகனார் தமிழ் நூல்களை நோக்கிய பார்வைகளும் இவரைத் தமிழ்ப் பெரியார்கள் நோக்கிய பார்வைகள் சிலவும் இந்த நினைவுப் பகுதியில் திரட்டித் தரப்படுகின்றன.

உ.வே.சா. பார்வையில் தமிழ் நூல்கள்

சிந்தாமணியின் சிறப்பு

சிந்தாமணியே என்னுடைய தமிழ்நூற் பதிப்பில் முதல் அரும்பு. வழக்கொழிந்த பழம் தமிழ் நூல்களை அறிவதற்கும் ஆராய்வதற்கும் அச்சிடுவதற்கும் என் உள்ளத்தைப் பக்குவப்படுத்தி ஊக்கமூட்டியவை அந்த நூலும் அதன் உரையுமே.

தமிழ்த் தொண்டினால் இன்பம் உண்டென்னும் உண்மையை எனக்கு முதன் முதலில் வெளிப்படுத்தியது அந்த நூலே. முதல் முயற்சியிலே அடையும் சிரமங்கள் அளவிறந்தன. சிந்தாமணியைப் போன்ற நூல்கள் தமிழ்நாட்டில் வழங்காத அக்காலத்தில் அதன் நடையே ஒரு தனிப் பாஷைபோல இருந்தது. அதன் உரையோ பின்னும் புதியதாகவே தோன்றியது. அதில் உள்ள விஷயங்களோ ஜைன சமயத்தைச் சார்ந்தவை.

சைவம், அத்வைதம், வைணவம் என்னும் மூன்று சமயக் கருத்துக்களே தமிழ்நாட்டில் அதிகமாக வழங்கின. ஜைன சமயத்தைப் பற்றி அறிந்தவர்களையோ, கூறும் தமிழ் நூல்களையோ காண்பது அரிதாக இருந்தது. அன்றியும் திருவாவடுதுறையாதீனமாகிய சைவ மடத்தில் படித்த எனக்குப் புறச்சமயமாகிய ஜைனத்தைப் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பு ஏது?

[பவ்ய ஜீவன் (கட்டுரை), கலைமகள், தொகுதி 14, பகுதி 79 - 84, 1938; நல்லுரைக் கோவை, பாகம் - 4, 1939]

சுவடிகளின் நிலை

உரையில்லாத மூலங்கள் எழுத்துஞ்சொல்லும் மிகுந்தும் குறைந்தும் பிறழ்ந்தும் திரிந்தும் பலவாறு வேறுபட்டிருந்ததன்றி, இவற்றுள், சில பாடல்களின்பின் திணையெழுதப்படாமலும் சிலவற்றின்பின் துறையெழுதப்படாமலும் சிலவற்றின்பின் இரண்டு மெழுதப்படாமலும் சிலவற்றின் பின் பாடினோர் பெயர் சிதைந்தும் சிலவற்றின்பின் பாடப்பட்டோர் பெயர் சிதைந்தும் சிலவற்றின் பின் இருவர்பெயருமே சிதைந்தும் சில பாடல்கள் இரண்டிடத்து எழுதப்பட்டு இரண்டெண்களையேற்றும் வேறுவேறிடத்தில் இருத்தற்குரிய இரண்டுபாடல்கள் ஒருங்கெழுதப்பட்டு ஓரெண்ணையேற்றும் சில முதற்பாகங்குறைந்தும் சில இடைப் பாகங்குறைந்தும் சில கடைப்பாகங்குறைந்தும் சில முற்றுமின்றியும் ஒரு பாடலின் அடிகளுள் ஒன்றும் பலவும் வேறுபாடல்களின் அடிகளோடு கலந்தும் ஓரடியே ஒருபாட்டுட் சிலவிடத்து வரப்பெற்றும் பொருளுண்மைகாணாத வண்ணம் இன்னும் பலவகைப்படமாறியும் கையெழுத்துப் பிரதிகளிலிருந்தன.

இவற்றைப் பரிசோதித்துவருகையில், இந்நூலிலிருந்து வேறு நூல்களினுடைய பழையவுரைகளின் இடையிடையே உரையாசிரியர்களால் பூர்த்தியாகவும் சிறிதுசிறிதாகவும் எடுத்துக்காட்டப்பட்டிருந்த உதாரணங்கள், சிற்சில பாடல்களிலுள்ள வழுக்களை நீக்கிச் செவ்வை செய்துகொண்டு பொருளுண்மை காணுதற்கும், சிற்சில பாடல்களிற் குறைந்த பாகங்களை நிரப்பிக் கொள்ளுதற்கும், பிறழ்ந்து கிடக்கும் சில பாடல்களை ஒழுங்குபடுத்தி வரையறை செய்துகொள்ளுதற்கும் பெருந்துணையாகவிருந்தன.

[புறநானூறு, முதல் பதிப்பின் முகவுரை, 1894]

சுவடிகளின் இயல்பு

பழைய பிரதிகளுட்பல, இனி வழுப்படவேண்டுமென்பதற்கிடமில்லாமற் பிழைபொதிந்து, அநேகவருடங்களாகத் தம்மைப்படிப்போரும் படிப்பிப்போருமில்லை யென்பதையும் நூல்களைப் பெயர்த்தெழுதித் தொகுத்து வைத்தலையே விரதமாகக் கொண்ட சில புண்ணிய சாலிகளாலேயே தாம் உருக்கொண்டிருத்தலையும் நன்கு புலப்படுத்தின.

ஒன்றோடொன்று ஒவ்வாது பிறழ்ந்து குறைவுற்றுப் பழுதுபட்டுப் பொருட்டொடர்பின்றிக்கிடந்த இப்பிரதிகளைப் பரிசோதித்த துன்பத்தை உள்ளுங்கால் உள்ளம் உருகும்.

[சிலப்பதிகாரம், முதல் பதிப்பின் முகவுரை, 1892]

மிதிலைப்பட்டி

மிதிலைப்பட்டி என்னும் ஊரை நான் எந்தக் காலத்தும் மறக்கமுடியாது. மணிமேகலையின் முகவுரையில் ‘...இவற்றுள் மிகப் பழமையானதும் பரிசோதனைக்கு இன்றியமையாததாக இருந்ததும் மற்றப் பிரதிகளிற் குறைந்தும் பிறழ்ந்தும் திரிந்தும் போன பாகங்களையெல்லாம் ஒழுங்குபடச் செய்ததும் கோப்புச் சிதைந்து அழகுகெட்டு மாசு பொதிந்து கிடந்த செந்தமிழ்ச் செல்வியின் மணிமேகலையை அவள் அணிந்து கொள்ளும் வண்ணம் செப்பஞ் செய்து கொடுத்ததும் மிதிலைப்பட்டிப் பிரதியே’ என்று எழுதியுள்ளேன்.

தமிழ்நாட்டில் எவ்வளவோ புண்ணிய ஸ்தலங்கள் இருக்கின்றன; சிவ ஸ்தலங்களும் விஷ்ணு ஸ்தலங்களும் சுப்பிரமணிய ஸ்தலங்களும் பல உள்ளன. அவற்றைப் போல் தமிழ்த் தெய்வம் கோயில் கொண்டுள்ள ஸ்தலங்களுள் ஒன்றாகவே மிதிலைப்பட்டியை நான் கருதியிருக்கிறேன்.

[பரம்பரைக்குணம் (கட்டுரை), ஆனந்தவிகடன், தீபாவளி மலர், 1934; நான் கண்டதும் கேட்டதும், 1936]

கலாசாலை

நான் காணும் கனவுகளில், கலாசாலையிற் பல மாணாக்கர்களிடையே இருந்து அவர்களுடைய உத்ஸாகமான செயல்களையும் அவர்கள் பேசும் பேச்சுக்களையும் அறிந்து மகிழுங் காட்சிகளே பல.

தம்முடைய குடும்பத்தையே மறந்துவிட்டுக் கல்வி கற்றல் ஒன்றையே நாடிப் பறவைகளைப்போலக் கவலையற்றுப் படித்துவந்த மாணாக்கர்களுடைய கூட்டத்திடையே பழகுவதைப் போன்ற இன்பத்தை வேறு எங்கும் நான் அனுபவித்ததில்லை.

அவர்களுடைய அன்பை நினைத்தாலே என் உள்ளத்தில் ஒரு புதிய ஊக்கம் உண்டாகும். அந்தக் காலம் போய்விட்டதனாலும் அக்காலத்து நிகழ்ச்சிகளின் நினைவு இன்னும் என் மனத்தைவிட்டு நீங்கவில்லை. அதனால், நான் நினைக்கும்போதெல்லாம் உள்ளத்தால் மீண்டும் கலாசாலையிலிருந்து பாடஞ் சொல்லுகிறேன்; இன்புறுகிறேன்.

[மாணாக்கர் விளையாட்டுகள் (கட்டுரை), கலைமகள், தொகுதி 10, பகுதி 55 - 60, 1936, தொகுதி 23, பகுதி 137, 1943; நல்லுரைக்கோவை, பாகம் - 3, 1938]

சுவடிப் பற்று

தமிழ் ஆராய்ச்சியில் நான் ஈடுபட்ட பிறகு தமிழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடுவது என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான வேலையாகிவிட்டது. அச்சிட்ட புத்தகமோ, அச்சிடாததோ எதுவானாலும் சுவடியின் உருவத்திலே காணும்பொழுது ஏதோ ஒரு தெய்வத்தின் உருவத்தைக் காண்பதுபோலவே நான் எண்ணுவது வழக்கம்.

சுவடிகளைத் தேடி அவை இருக்குமிடம் சென்று மூலை முடுக்குகளிற் கிடக்கும் அவற்றைத் தொகுத்து ஆராய்வதில் என் உள்ளம் ஒரு தனி இன்பத்தை அடையும். என் உடலில் முதுமைப் பருவத்தின் தளர்ச்சி ஏறிக்கொண்டே வந்தாலும் என் உள்ளத்தில் மட்டும் ஏட்டுச் சுவடிகளிலுள்ள பற்று இறங்கவே இல்லை.

[மாணாக்கர் விளையாட்டுகள் (கட்டுரை) கலைமகள், தொகுதி 10, பகுதி 55 - 60, 1936, தொகுதி 23, பகுதி 137, 1943; நல்லுரைக்கோவை, பாகம் - 3, 1938]

சமயங்கடந்த கலைமகள்

கல்வி கற்பார் யாவரும் கலைமகளின் திருவருளைப் பெற வேண்டும். நம் நாட்டிற் சிறந்த கவிஞர்களாகப் போற்றப்பெறும் காளிதாஸர், கம்பர், ஒட்டக்கூத்தர், குமரகுருபரர் முதலியோர் கலைமகளுடைய திருவருள் நோக்கத்தைப் பெற்றவர்களே. கம்பர் சரசுவதியந்தாதி பாடியிருக்கிறார்.

ஒட்டக்கூத்தர் கூத்தனூரென்னும் ஊரில் திருக்கோயில் கொண்டுள்ள கலைமகளை வழிபட்டுப் புலமை வாய்ந்தனர். குமரகுருபரரோ சகலகலாவல்லிமாலை பாடி ஹிந்துஸ்தானி பாஷையை அறிந்துகொண்டார்.

பரம சைவராகிய அவர் மனங்கரைந்து கலைமகளைத் துதித்துள்ளார்; ‘கண்கண்ட தெய்வம்’ என்று பாராட்டுகின்றார். அதனால் கலைமகள் சமயங் கடந்த தெய்வமென்று அறிகின்றோம். பௌத்தர்களும் ஜைனர்களுங்கூடக் கலைமகளை வணங்கி வந்தனர்.

[மகளிர் கல்வியும் கலைமகள் பெருமையும் (கட்டுரை), நினைவு மஞ்சரி, பாகம் - 2, 1942]

தமிழ்க் கோயில்

திருநெல்வேலி மேலை வீதியில் உள்ள கவிராஜ ஈசுவர மூர்த்திப் பிள்ளை வீட்டில் புத்தக அறை இருந்தது. அதுதான் அவர்கள் பரம்பரை வீடு. புத்தக அறையைத் திறந்து காட்டினார்கள். பார்த்தவுடன் என் உடம்பு சிலிர்த்தது.

‘தமிழ்ச் சங்கத்தில் முன்பு இப்படித்தான் சுவடிகளை வைத்திருந்தார்களோ?’ என்று விம்மிதமடைந்தேன். ஏட்டுச் சுவடிகளை அடுக்கடுக்காகவும் ஒழுங்காகவும் வைத்திருந்தார்கள்.

சுவடிகளைக் கட்டி வைத்திருந்த முறையே திருத்தமாக இருந்தது. புழுதி இல்லை; பூச்சி இல்லை; ஏடுகள் ஒன்றோடொன்று கலக்கவில்லை. தமிழ்த் தெய்வத்தின் கோயிலென்று சொல்லும்படி இருந்தது அவ்விடம்.

[என் சரித்திரம், 1950]

பஞ்ச மந்திரம்

சீவகசிந்தாமணி உரையில் ஓரிடத்திலே, ‘திருத்தங்குமார்பன், புனலாட்டிலே உயிர் போகின்ற ஞமலிக்குத் தானும் வருந்திப் பஞ்சாட்சரமாகிய மந்திரத்தைக் கொடுத்தபடியும்’ என்று இருந்தது. ‘இது ஜைன நூலாயிற்றே; பஞ்சாட்சர மந்திரம் இங்கே எப்படிப் புகுந்துகொண்டது?’ என்ற சந்தேகம் வந்தது.

மூலத்தில் “ஞமலிக் கமிர் தீர்ந்தவாறும்” என்று இருக்கிறது. ‘அமிர்து’ என்பதற்கு, ‘பஞ்சாட்சரமாகிய மந்திரம்’ என்பது உரையாக இருந்தது.

‘மந்திரத்தை யென்றிருந்திருக்க வேண்டும்: யாரோ பிரதியைப் பார்த்து எழுதின சைவர் பஞ்சாட்சரம் என்று சேர்த்தெழுதி விட்டார்’ என்று முதலில் கருதினேன்.

பின்னாலே வாசித்து வருகையில் “ஐம்பத வமிர்த முண்டால்” (946) என்று வந்தது. வேறிடங்களில் உள்ள உரையால் பஞ்ச நமஸ்கார மந்திரமென்று தெரிந்தது. ஜைன நண்பர்களை விசாரித்தேன்.

அவர்கள் மிகவும் எளிதில், “அருகர், ஸித்தர், ஆசாரியர், உபாத்தியாயர், ஸாதுக்களென்னும் பஞ்ச பரமேஷ்டிகளை வணங்குதற்குரிய ஐந்து மந்திரங்களைப் பஞ்ச நமஸ்காரமென்று சொல்வது ஸம்பிரதாயம்” என்று தெளிவுறுத்தினார்கள்.

[என் சரித்திரம், 1950]

புலவர்கள்

தமிழ்ப் புலவர்களின் வரலாறுகள் தமிழகத்தில் ஒரு வரையறையின்றி வழங்குகின்றன. கர்ணபரம்பரைச் செய்திகள் முழுவதையும் நம்ப முடியவில்லை. எந்தப் புலவர்பாலும் தெய்வீக அம்சத்தை ஏற்றிப் புகழும் நம் நாட்டினரில் ஒரு சாரார் புலவர்களைப் பற்றிக் கூறும் செய்திகளிற் சில நடந்தனவாகத் தோன்றவில்லை.

அங்ஙனம் கூறுபவர்கள் அப்புலவர்களுக்கு மிக்க பெருமையை உண்டாக்க வேண்டுமென்பதொன்றனை மட்டும் கருதுகிறார்களே யல்லாமல் நடந்த விஷயங்களை நடந்தபடியே சொல்லுவதை விரும்புவதில்லை.

கம்பர் முதலிய சில புலவர்களை வரகவிகளென்றும் கல்லாமலே பாடிவிட்டனரென்றும் ஸரஸ்வதிதேவியின் திருவருளால் அங்ஙனமாயினரென்றும் கூறுவதுதான் பெருமையெனவும், அவர்கள் பழம் பிறப்பிற் செய்த புண்ணியத்தாலும் திருவருளாலும் கிடைத்த நல்லறிவைத் துணைக்கொண்டு பல நூல்களைப் பயின்று செயற்கையறிவும் வாய்க்கப் பெற்று நூல் முதலியன இயற்றினார்களென்பது சிறுமையெனவும் சிலர் எண்ணுகின்றார்கள்.

மிகவும் புகழ்பெற்ற ஒரு புலவர் செய்தனவாகத் தெரிவித்தால் அவற்றிற்கு மதிப்புண்டாகுமென்று தாமாகவே கருதி அவருடைய தலையில் பிழை மலிந்த நூல்களையும் உரைகளையும் தனிப்பாடல்களையும் ஏற்றிவிடுகின்றனர்.

[மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம், முதற்பாகம், முன்னுரை, 1938]

பெண்கள்

பெண்பாலாரைப் பற்றித் தமிழ் நூல்களில் உள்ள செய்திகளெல்லாவற்றையும் தொகுத்து வகைப்படுத்தினால் ஒவ்வொரு துறையிலும் அவர்கள் தம் ஆற்றலை வெளிப்படுத்திச் சிறப்புற்ற வரலாறுகள் பல தெரியவரும்.

அவர்களது பெருமை ஆடவர்களது பெருமையோடு சேர்ந்தே காணப்படுகின்றது. சங்கீதத்தில் சுருதி எத்தகையதோ அத்தகையதே வாழ்க்கையிற் பெண்களுடைய நிலையும். சுருதியில்லாமல் சங்கீதம் நடைபெறாது.

ஆனால் சங்கீதத்தில் வாத்தியகோஷங்களும் வாய்ப்பாட்டும் வெளிப்படையாகத் தோன்றி எல்லோராலும் போற்றப்படுகின்றன. சுருதியோ அவ்வளவு பெருமைக்கும் ஆதாரமாகி நின்றும் புலப்படாமல் இருக்கிறது.

பெண்களும் எல்லாவற்றையும் கடமையாகச் செய்து பிறர் புகழுக்கு அஸ்திவாரமாக இருந்து அடங்கிச் சுருதியைப்போலக் கலந்து நிற்கின்றனர்.
[தமிழ் நாட்டுப் பெண்பாலார் (கட்டுரை) கலைமகள், தொகுதி 11, பகுதி 61 - 66, 1937, நல்லுரைக்கோவை, பாகம் - 2, 1937]

சிலப்பதிகாரம்

தமிழ்மகள் களிநடம் புரிந்தகாலத்தில் அவளுடைய சிலம்பொலி எழுந்து தமிழரின் உள்ளத்தைக் கவர்ந்தது. இன்றைக்கு 1800 வருஷங்களுக்கு முன் இளங்கோவடிகளென்னும் புலவர் பிரான் இயற்றிய சிலப்பதிகாரமென்னும் நூல் தமிழ் மக்களின் சிலம்பாகவே கருதத்தகும். இவ்வளவு நாட்களாகியும் அக்காவியம் இன்றும் புதிய சுவையோடு விளங்குகின்றது.

தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்குச் சிலப்பதிகாரம் செய்யும் உதவி மிகவும் சிறந்தது. கடைச் சங்க காலத்தை அறிவதற்கு முக்கிய காரணமாக இருப்பது அதுவே.

இறந்துபட்ட இசைத்தமிழ் நாடகத் தமிழின் சில பகுதிகளையுடையதாகிப் பழந்தமிழ் வழக்கை வெளிப்படுத்திக் கொண்டு விளங்கும் அந்நூலுக்கு இணையாக வேறொன்றும் இல்லை. அதை நான் முதலில் ஏட்டுச்சுவடியிலே படித்தபோது பல அற்புதங்கள் நிறைந்த புதிய உலகிற்குச் சென்றதுபோல தோன்றியது.

மூலத்தைக் காட்டிலும் அடியார்க்கு நல்லார் உரையினால் அறிந்துகொள்ளும் செய்திகள் அளவிறந்தன. இசைத்தமிழ் நாடகத் தமிழ்களைப் பற்றி நாம் இக்காலத்தில் அறிந்துகொள்ளும் செய்திகளிற் பல அடியார்க்கு நல்லார் இட்ட பிச்சையென்றே சொல்ல வேண்டும். எத்தனை நூல்கள்! எத்தனை கலைகள்! எத்தனை மேற்கோள்கள்! சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதின அடியார்க்கு நல்லார் பிற்காலத்தவர்.

அவர் உரைக்கு முன்பு ஓர் உரை அதற்கு உண்டு; அவ்வுரை அரும்பதவுரை எனப்படும். அடியார்க்கு நல்லார் உரையெழுதுவதற்கு அவ்வரும்பதவுரை பெரிதும் துணை செய்தது. அவ்வாறெனின் அரும்பதவுரையின் சிறப்பை எப்படி நான் தெரிவிக்க முடியும்? ஆனால் என்னுடைய துரதிர்ஷ்டம் அரும்பதவுரையுள்ள ஏட்டுப்பிரதி ஒன்றே எனக்குக் கிடைத்தது.

பிற்காலத்தில் தமிழ்போன போக்கையும், அடைந்த அலங்கோலத்தையும் அப்பிரதியும் நிதர்சனமாகக் காட்டியது. பிழைகள் மலிந்தும் முன்பின் மாறியும் இடையிடையே விட்டும் அப்பிரதியில் விஷயங்கள் எழுதப்பட்டிருந்தன.

அதனை முற்றும் படித்தறிவதே கஷ்டமாக இருந்தது. உரைப்பகுதிகள் வெவ்வேறு இடங்களில் மாறி மாறிக் கலந்திருந்தமையின் ‘மூலத்தில் எந்தப் பகுதிக்கு எது பொருள்?’ என்று தேடிப் பொருத்திப் பார்ப்பதற்குள் சிலப்பதிகாரம் முழுவதற்குமே உரையெழுதிவிடலாமென்று தோன்றியது.

[படக்காட்சி (கட்டுரை), கலைமகள், தொகுதி 13, பகுதி 73 - 78, 1938; நல்லுரைக்கோவை, பாகம் - 4, 1939]

அறிஞர்கள் பார்வையில் உ.வே. சாமிநாதையர்

இந்தப் பத்திரிகையி லெழுதப்பட்டிருக்கிற சாமிநாதையர் நமது ஆதீன வித்துவான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்களிடத்தில் ஆறு வருஷகாலம் இலக்கண இலக்கியங்கள் நன்றாய் வாசித்ததுமன்றி நம்மிடத்திலும் நான்கு வருஷ காலமாக வாசித்துக் கொண்டிருக்கிறார். இலக்கண இலக்கியங்களைத் தெளிவாய்ப் போதிக்கிற விஷயத்தில் நல்ல சமர்த்தர்; நல்ல நடையுள்ளவர்.
[1880, கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியர் பணிக்குப் பரிந்துரைத்துத் திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீசுப்பிரமணிய தேசிகர் எழுதியது]

“ஸ்ரீமான் ஸ்வாமிநாதையர் தமது பாஷாபிமானம், தேசாபிமானம் என்னும் பெரிய ஆயுதங்களைக் கொண்டே அசௌகர்யங்களை வென்று உயர்வுற்றிருக்கிறார் என்பதில் ஐயமில்லை.

இவருடைய அருந்திறமையை நன்கு மதித்துக் கவர்ன்மெண்டார் இவருக்குப் புதுவருஷப் பட்டமாக மகாமகோபாத்தியாயர் என்ற உயர் பட்டமளித்திருப்பதைப் பெருமகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.

மகாமகோபாத்தியாய ஸ்வாமிநாதையர் அவர்கள் இன்னும் நெடுங்காலம் இருந்து, அவருக்கு நெடுங்காலம் முன்னரே கிடைத்திருக்க வேண்டியதாகிய மதிப்பு முழுதையும் அடைந்தவராகி, இத்தமிழுலகத்தாருக்குப் புதிய புதிய விருந்துகள் ஊட்டிக் கொண்டிருப்பாரென்று மனப்பூர்த்தியாக விஸ்வசிக்கின்றோம்”

[1906, ஜனவரி, 3, மகாமகோபாத்தியாய பட்டம் பெற்றதற்குச் சுதேசமித்திரன் இதழின் பாராட்டு]

“‘மகாமகோபாத்தியாயப் பட்டமென்பது வடமொழியாளர்க்கே உரியது, தமிழ்ப் பண்டிதர் முதலியோர்க்கு உரியதன்று’ என்று சிலர் ஆக்ஷபிக்கலாம். அப்பெயர் பெரும் பேராசிரியரென்று பொருள்படுவதேயன்றி, அதன் பொருளில் வடமொழி வல்லவர் என்பது விளங்காமையால், அந்த ஆக்ஷபம் ஏற்றுக்கொள்ளத்தக்கதன்று.

அந்தப் பெயர் சம்ஸ்கிருத பதமாயிருப்பது மாத்திரங் கொண்டு, அது அவர்களுக்கே உரியதென்று ஆகாது. தமிழ் முதலிய தேசபாஷை நூல்களுக்குச் சிந்தாமணி, மணிமேகலை முதலாகவும், அந்நூல்களின் உட்பிரிவுகளுக்குக் காண்டம், படலம், அத்தியாயம், அதிகாரம், இலம்பகம் முதலாகவும் வடசொற்களாற் பெயரிடும் வழக்கம் தொன்றுதொட்டு உள்ளதனால், அவ்வழக்கின்படியே இவ் வடமொழிப் பெயரும் தென்மொழியாளர்க்கும் உரியதாம்.

ஆனால் ‘இதுவரை வடநூலார்க்கே வழங்கப்பட்டதே யன்றித் தமிழர்க்கு வழங்கியதில்லையே?’ என்றால்; ராமாயணம், பாரதம், பாகவதம், ஸ்காந்தம் முதலியன ஆதியில் வடமொழியில் உண்டாகிப் பிற்காலத்தில் தமிழிலும் ஏற்பட்டவையாதலால், அந்த நியாயத்தின்படியே இப்பட்டமும் முதலில் வட மொழியில் வழங்கிப் பின்பு தென்மொழியில் வழங்குதல் தகுதியேயாம்.

இதுவன்றி வேதம், வேதத்திற்கு அங்கமும் உபாங்கமுமான தர்க்கம், வியாகரணம், மீமாம்ஸை, தர்க்க சாஸ்திரம் முதலிய சாஸ்திரங்கள், வேதாந்தம் இவை தமிழில் இல்லை என்று கொண்டு, இவைகளெல்லாம் வல்லவர்க்கு,

வழக்கமாய்க் கொடுக்கப்பட்டுவருகிற இப்பட்டம் தமிழ் வித்துவானுக்கு உரியதன்று என்று வேறோர் ஆக்ஷபம் உண்டாகலாம். இவையெல்லாம் வட மொழியில் போலவே தென்மொழியிலும் உள்ளனவாதலால் இவை வல்லார்க்கும் அப்பட்டம் சிறக்கு மென்பதே அதற்குத் தக்க சமாதானம். வடமொழியில் அதர்வண வேதம் நீங்கலாக மற்றை மூன்று வேதங்களும் ‘த்ரயீ’ என்று சிறப்பித்துப் பாராட்டப்படுதல் போலவே தமிழிலும் திருக்குறள், தேவார திருவாசகங்கள், திவ்வியப் பிரபந்தங்கள் இம்மூன்றும் வேதமென்று கொண்டாடப்படுகின்றன.

ஸம்ஸ்கிருதத்தில் ப்ராசீனமாகவும், நவீனமாகவும் வழங்குகிற தர்க்கத்திலும் மிகவும் அதிகமான தர்க்க சாஸ்திரம் தமிழில் வழங்கியதென்பது ஸ்ரீமத் சாமிநாதையரவர்கள் தாம் இயற்றிய அரும் பதவுரையுடன் அச்சிட்டிருக்கிற ‘மணிமேகலை’ எனும் மகா காவியத்தில் ‘தவத்திறம் பூண்டு தருமங் கேட்டகாதை’ ஒன்றினாலேயே விளங்கும். வடமொழி வியாகரணத்தினும் தமிழ் வியாகரணம் பரந்ததும், அருமையானதும், சிரமசாத்தியமுமாகு மென்பது பாணிநீயம் முதலிய ஸம்ஸ்கிருத வியாகரணங்களையும், தொல்காப்பியம் முதலிய தமிழிலக்கணங்களையும் ஒப்புநோக்குவார்க்குத் தானே தெரியலாம். இப்படியே தரும நூல்களும், வேதாந்த நூல்களும் தமிழில் மிகப் பலவென்பது இவற்றைப் பயில்வார்க்கு எளிதில் விளங்கும். இதிகாச புராணங்களும் அப்படியே.”

[மகாமகோபாத்தியாய பட்டம் பெற்றதற்கு நடந்த பாராட்டு விழாவில், வை. மு. சடகோபராமாநுஜாசாரியார் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம், சுதேசமித்திரன், பிப்ரவரி 13, 1906]

“செம்பரிதி யளிபெற்றான் பைந்நறவு
சுவைபெற்றுத் திகழ்ந்த தாங்கண்
உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்
றெவரேகொல் உவத்தல் செய்வார்?
கும்பமுனி யெனத்தோன்றும் சாமிநா
தப்புலவன் குறைவில் கீர்த்தி
பம்பலுறப் பெற்றனனேல் இதற்கென்கொல்
பேருவகை படைக்கீன் றீரே?”
“அன்னியர்கள் தமிழ்ச்செவ்வி யறியாதார்
இன்றெம்மை யாள்வோ ரேனும்
பன்னியசீர் மஹாமஹோ பாத்தியா
யப்பதவி பரிவின் ஈந்து
பொன்னிலவு குடந்தைநகர்ச் சாமிநா
தன்றனக்குப் புகழ்செய் வாரேல்
முன்னிவனப் பாண்டியர்நா ளிருந்திருப்பின்
இவன்பெருமை மொழிய லாமோ?”
“நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி
யின்பவகை நித்தந் துய்க்கும் கதியறியோம்
என்றுமனம் வருந்தற்க;
குடந்தைநகர்க் கலைஞர் கோவே
பொதியமலை பிறந்தமொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்,
இறப்பின்றித் துலங்கு வாயே!”

[மகாமகோபாத்தியாயர் பட்டம் பெற்றதற்காக, மாநிலக் கல்லூரித் தமிழ் மாணவர் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதி வாசித்த கவிதை, மார்ச்சு, 17, 1906]

“எந்தப் புஸ்தகத்தை எப்பொழுது படித்தாலும் பென்ஸிலும் குறிப்புப் புஸ்தகமும் இல்லாமல் படிப்பது அவர்கள் வழக்கமன்று. ஒரு பாட்டைப் படிக்கும்போது அதற்குள் ஆழ்ந்து முழுகி அதிலுள்ள விஷயங்களைத் தனியே பார்த்துக் குறிப்பதும், ஒரே மாதிரிக் கருத்துப் பிற நூல்களில் வந்திருந்தால் அதைக் குறித்துக்கொள்வதும், சந்தேகமாக இருந்தால் அதைத் தனியே குறித்துக் கொள்வதும் அவர்கள் வழக்கம்.

சந்தேகங்களைப் பின்னும் பின்னும் ஆராய்ந்து யோசித்து முடிவு செய்வார்கள். இல்லையானால் யாரேனும் வந்தால் கேட்பார்கள். உடனிருக்கும் எங்களுக்குச் சில சமயங்களில் மனத்துக்குள் கோபங்கூட உண்டாகும். ‘இவருக்கு என்ன தெரியும்? இவரிடம் போய்ச் சந்தேகம் கேட்கிறார்களே!’ என்று எரிச்சல் எரிச்சலாக வரும்.

ஐயரவர்களோ மிகவும் விநயமாக வந்தவருடைய மனசுக்கு உவப்பான விஷயங்களைப் பேசிச் சந்தேகத்தைக் கேட்பார்கள். வந்தவருக்கு அந்த விஷயத்தின் வாசனைகூடத் தெரியாமல் இருக்கலாம்.

ஆனால் கௌரவத்தை விட்டுக்கொடுக்காமல் எதையாவது சொல்வார். ஐயரவர்கள் அதைக் குறித்துக் கொள்வார்கள். அந்தப் பரமகுரு போனவுடன் நாங்கள் ‘இவரிடம் சந்தேகம் கேட்பதில் என்ன லாபம் உண்டாயிற்று?’ என்றால், ‘லாபம்; உடனே தெரியாது, லாபம் இல்லாவிட்டால் என்ன? நமக்கு கஷ்டம் ஒன்றுமில்லையே’ என்பார்கள்.”

[வித்வான் கி. வா. ஜகந்நாதையர், கலைமகள், 1942, ஜூன்]

தாங்கள் அனுப்பிய புறநானூற்றை மூன்றாம் தடவையாக இப்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றில் உள்ள பல அரிய பகுதிகளை ஏற்கனவே இங்கிலீஷில் மொழி பெயர்த்துவிட்டேன்.

மணிமேகலையையும் முழுதும் ஊன்றிப்படித்து மொழி பெயர்த்தும் ஆயிற்று. தங்களுடன் பல மணிநேரம் உட்கார்ந்து நேரில் தமிழைப் பற்றிப் பேச விரும்புகிறேன். தங்களைத்தான் நான் என்றும் என் தமிழ்க் குருவாகக் கொண்டுள்ளேன்”

[9 - 10 - 1906, ஜி. யு. போப், உ.வே.சா. விற்கு எழுதிய கடிதம், என் ஆசிரியர்பிரான், கி. வா. ஜா. 1983]

“யான் இம் மணிமேகலைப் பதிப்பைப்பற்றி முகமனாவொன்றும் எழுதுகின்றிலேன். மிகவும் அற்புதமாயிருக்கின்றது. யான் விரும்பியாங்கே குறிப்புரையும் பிறரால் இது வேண்டும் இது வேண்டாவென்று சொல்லப்படாதவாறு செவ்வனே பொறித்திருக்கும் பெற்றிமையை யுன்னுந்தோறு மென்னுள்ளங் களிபேருவகை பூக்கின்றது.

இப்போழ்தன்றே யெந்தஞ் சாமிநாத வள்ளலைக்குறித்துக் குடையும் துடியும் யாமும் எம்மனோரும் ஆடிய புகுந்தாம். இன்னும் எம்மூரினராய் நின்று நிலவிய நச்சினார்க்கினிய நற்றமிழ்ப்பெருந்தகை போன்று பன்னூற் பொருளையும் பகலவன் மானப்பகருமாறு பைந்தமிழமிழ்தம் பரிவினிற்பருகிய பண்ணவர் பெருமான் எந்தம் மீனாட்சிசுந்தர விமலன் நுந்தமக்கு வாணாள் நீட்டிக்குமாறு அருள்புரிவானாக”

[1898, வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி, மணிமேகலைக்கு இவர் எழுதிய உரையின் சிறப்பைப் பாராட்டி எழுதியது, என் சரித்திரம், 1950]

மகாகவி பார்வையில்

பொதுவாக இந்நாட்டில் ஆங்கிலம் கற்றோரெல்லாம் சுபாஷாபிமானம் என்பது மிகவும் குன்றியிருப்பது அன்றி, அதன் நயமறியாது திட்டுவதை நினைக்கும்பொழுது நமக்கு வருத்தம் உண்டாகிறது.

இதன் சம்பந்தமாகச் சென்னை பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதராகிய மகாவித்துவான் ஸ்வாமிநாதையர் சொல்லிய வார்த்தையன்று நமது நெஞ்சை விட்டு ஒருபோதும் அகலமாட்டாது.

மேற்படி காலேஜ் தமிழ்ச்சங்கத்தில் ஒரு மீட்டிங் நடந்தது. தமிழ்ப் பாஷையின் அருமையைப் பற்றி ஏதோ பிரஸ்தாபம் வந்தது. அப்போது ஸ்வாமிநாத ஐயரவர்கள் எழுந்து பின்வருமாறு பேசினார்: “ஆங்கிலேய பாஷையின் இலக்கிய நூல்களில் எத்தனையோ அருமையான கருத்துக்கள் ததும்பிக் கிடப்பதாகச் சொல்கிறார்கள்.

அந்தப் பாஷை எனக்குத் தெரியாது. அதனால் அவ்விஷயத்தில் ஒருவிதமான அபிப்ராயமும் என்னால் கொடுக்க முடியாது என்றபோதிலும் மேற்கண்டவாறு சொல்வோர் தமிழ்ப் பாஷையிலே அவ்விதமான அருமையான விஷயங்கள் கிடையாதென்று சொல்லும்பொழுது உடன் எனக்கு வருத்தம் உண்டாகிறது.

இவ்வகுப்பினர்களுடன் நான் எத்தனையோ முறை சம்பாஷணை செய்திருக்கிறேன். அந்தச் சமயங்களில் நான் இவர்களது தமிழ் வன்மையைப் பரிசோதனை புரிந்திருக்கிறேன்.

இவர்கள் அத்தனை சிறந்த பண்டிதர்கள் என்று எனக்குப் புலப்படவில்லை. பழங்காலத்து தமிழ் நூல்களில் பயிற்சி இல்லாத இவர்கள் அவற்றைப் பற்றி இழிவான அபிப்ராயம் கொடுப்பதுதான் வெறுக்கத்தக்கதாக இருக்கின்றது’ என்று அப்பண்டிதர் முறையிட்டார். வாஸ்தவம்தானே? ஆனையையே பார்த்திராத குருடனா அதன் நிறம் முதலியவை பற்றி ஓர் அபிப்ராயம் கொடுக்க முடியும்.

[மகாகவி பாரதியார், இந்தியா இதழ், 29, செப்டம்பர், 1906.]

“சென்ற ஐம்பது வருஷங்களில் இம்மாகாணத்தில் விளங்கிய பெரியார்கள் ஒவ்வொருவரையும் அநேகமாக எனக்குத் தெரியும். ஆனால் அறிவாற்றலில் சிறந்து முழுமனத்துடன் கல்விக்காகப் பாடுபட்டதில் மஹாமஹோபாத்தியாய சாமிநாதையருக்கு ஈடாக வேறு யாரையும் நான் அறியேன்.

அதிவேகமாய்ச் சென்றுகொண்டிருக்கும் காலம் ஒருநாளும் திரும்பிவராது” என்னும் உண்மையை நன்குணர்ந்து அவரைப்போல் ஒவ்வொரு நிமிஷத்தையும் நற்பயன்படுத்தி வருபவர்களையும் நான் பார்த்ததில்லை.

கலைஞர்களாகக் கருதப்படுவோர் தங்கள் தங்கள் கலைகளிடத்தில் கொள்ளக்கூடிய சிரத்தா பக்தியில் இப்பெரியாரைப் போல் சிறந்தவர் தென்னிந்தியாவில் - ஏன் இந்தியாவில்கூட - இல்லையென்றே அச்சமின்றிச் சொல்லுவேன்”

[எண்பதாம் ஆண்டுநிறைவு விழா காலத்தில் (1935) ஸ்ரீ. வி. வி. ஸ்ரீநிவாஸ ஐயங்கார் எழுதியது, மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர், கே. சுந்தரராகவன், 1942]

“ஸ்ரீசாமிநாதையரின் கல்வி, கடலைப் போன்றது. மெய்வருத்தம் பாராத அவருடைய முயற்சியுடன் தேனீயும் எறும்புமே போட்டியிடலாம். தாய்மொழியின் தொண்டிலும் கல்வி முயற்சியிலும் அவருடன் நாம் போட்டியிட முடியாதாயினும் அவருடைய அடக்க குணத்தையாவது நாம் கற்றுக்கொள்ள வேண்டும்”

[சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர், கே. சுந்தரராகவன், 1942]

“ஏடு தேடி யலைந்தவூ ரெத்தனை
எழுதி யாய்ந்த குறிப்புரை யெத்தனை
பாடு பட்ட பதத்தெளி வெத்தனை
பன்னெறிக்கட் பொருட்டுணி பெத்தனை
நாடு மச்சிற் பதிப்பிக்குங் கூலிக்கு
நாளும் விற்றபல் பண்டங்க ளெத்தனை
கூட நோக்கினர்க் காற்றின வெத்தனை
கோதி லாச்சாமி நாதன் றமிழ்க் கென்றே”

[ரா. இராகவையங்கார், டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் சதாபிஷேக வரலாறு, 1936]

ஆதி யுகத்து இருளில் பனையோலைச் சுவடிகளில்
இருந்தது திராவிட நாட்டின் புராதன கீர்த்தி
அந்தப் பெருநிதி, பேராசானே
உன்னால் அன்றோ வெளிப்பட்டது?
அந்தக் காலத்து அகஸ்தியனைப் போல நீயன்றோ
வந்து உன் அன்னையினைச் சிம்மாசனத்தில்
பெரு மதிப்புடன் வீற்றிருக்க வைத்தாய்?
அம்மட்டோ ஐம்பெருங் காப்பியங்களுள்
சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, முதலானவற்றை
அந்த அன்னையின் இணையடியில்
சமர்ப்பித்தவன் நீ அன்றோ?
அவற்றுடன் சங்க இலக்கியத்தையும்
நிலவில் மலர்ந்த முல்லை என
ஒளிர வைத்தவனும் நீஅன்றோ?
உன்னை வணங்கு கிறேன்”

[மகாகவி இரவீந்திரநாத் தாகூர்; தமிழ் மொழிபெயர்ப்பு திரு. சேனாபதி, டாக்டர் உ.வே. சாமிநாதையர் திருஉருவச்சிலைத் திறப்பு விழா, சிறப்பு மலர், 1997]

பார்காத்தார் ஆயிரம்பேர் பசித்தார்க் காகப்
பயிர்காத்தார் ஆயிரம்பேர் பாலர்க் காக
மார்காத்தார் ஆயிரம்பேர் வாழ்ந்த நாட்டில்
மானங்காத்த தமிழ்த்தாய்என் உடைமை எல்லாம்
யார்காத்தார் எனக்கேட்க ஒருவன் அம்மா
யான்காப்பேன் எனவெழுந்தான் சாமி நாதன்
நீர்காத்த தமிழகத்தார் நெஞ்சின் உள்ளான்
நிலைகாத்த மலைஇமய நெற்றி மேலான்.
பொய்யாத தமிழ்க்குமரி ஈன்ற சாமி
போகாத புகழ்க்கன்னி மணந்த நாத!
செய்யாத மொழித்தொண்டு செய்த ஐயா!
சிறுகாத செஞ்சத்தேம் வணங்கு செம்மல்!
எய்யாத திருவடியால் எண்பத் தாண்டும்
இளையாத உள்ளத்தால் எங்குஞ் சென்று
நெய்யாத தொன்னூல்கள் நிலைக்க வைத்த
நீங்காத தமிழ்க்குயிரே! நின்தாள் வாழ்க.
[அறிஞர் வ.சுப. மாணிக்கம், தமிழ்க்காதல், 1962]
பேச்செல்லாம் தமிழ்மொழியின் பெருமை பேசிப்
பெற்றதெல்லாம் தமிழ்த்தாயின் பெற்றி யென்று
மூச்செல்லாம் தமிழ்வளர்க்கும் மூச்சே வாங்கி
முற்றும் அவள் திருப்பணிக்கே மூச்சை விட்டான்
தீச்சொல்லும் சினம் அறியாச் செம்மை காத்தோன்
திகழ்சாமி நாதஐயன் சிறப்பை எல்லாம்
வாய்ச்சொல்லால் புகழ்ந்துவிடப் போகாதுண்மை;
மனமாரத் தமிழ்நாட்டார் வணங்கத் தக்கோன்.
அல்லுபகல் நினைவெல்லாம் அதுவே யாக
அலைந்தலைந்தே ஊரூராய்த் திரிந்து நாடிச்
செல்லரித்த ஏடுகளைத் தேடித் தேடிச்
சேகரித்துச் செருகலின்றிச் செப்பம் செய்து
சொல்லரிய துன்பங்கள் பலவும் தாங்கிச்
சோர்வறியா துழைத்தஒரு சாமிநாதன்
இல்லையெனில் அவன் பதித்த தமிழ்நூலெல்லாம்
இருந்த இடம் இந்நேரம் தெரிந்திடாதே.
சாதிகுலம் பிறப்புகளாற் பெருமை யில்லை;
சமரசமாம் சன்மார்க்க உணர்ச்சி யோடே
ஓதிஉணர்ந் தொழுக்கமுள்ளோர் உயர்ந்தோர் என்னும்
உண்மைக்கோர் இலக்கியமாய் உலகம் போற்ற
ஜோதிமிகும் கவிமழைபோல் பொழிமீ னாட்சி
சுந்தரனாம் தன்குருவைத் தொழுது வாழ்த்தி
வேதியருள் நெறிபிசகாச் சாமிநாதன்
விரித்துரைக்கும் சரித்திரமே விளங்கி நிற்கும்.
மால்கொடுத்த பிறமொழிகள் மோகத் தாலே
மக்களெல்லாம் பெற்றவளை மறந்தார் ஞானப்
பால் கொடுத்த தமிழ்த் தாயார் மிகவும் நொந்து
பலமிழந்து நிலைதளர்ந்த பான்மைபார்த்துக்
கோல்கொடுத்து மீட்டுபவள் கோயில் சேர்த்துக்
குற்றமற்ற திருப்பணிகள் பலவும் செய்து
நூல்கொடுத்த பெருமைபல தேடித் தந்த
நோன்பிழைத்த தமிழ்த்தவசி சாமி நாதன்

[நாமக்கல் கவிஞர், டாக்டர் உ.வே. சாமிநாதையர் திருஉருவச்சிலைத் திறப்பு விழாச் சிறப்பு மலர், 1997]

- முனைவர் இரா.வெங்கடேசன்