general hosp 600சிப்பாய்களுக்கு சுதேசி மருந்து:

கிழக்கிந்தியக் கம்பெனி ஐரோப்பிய மருத்துவர்கள் தமிழகத்திலுள்ள சென்னை, கடலூர் போன்ற கடற்கரை நகரங்களில் கொள்ளை நோய் மற்றும் மணிக்கணக்கில், நாட்கணக்கில் இறப்புகளை உண்டாக்கும் நோய்களைக் குறித்து கவனித்து, அவை எப்பொழுது ஏற்படுகிறது, அதன் காரணம் என்ன? என அறிந்து, அவற்றிற்கான மருந்துகளை லண்டனிலிருந்து பெற்று ஆவன செய்ய வேண்டியவரானார்கள். இதனால் கொள்ளை நோய்கள் ஒருவாறு கட்டுப்படுத்தப்பட்டது என்றாலும் மருந்துகளைப் பெறும் பொழுது பல சிக்கல்கள் ஏற்பட்டன.

எ.கா.: கப்பலில் (1664) வரும் மருந்தை நம்பியே மருத்துவ மனைகள் இயங்க வேண்டிய நிலை இருந்தது. மேலும் தமிழ்நாட்டில் கம்பெனியார் பல உள்நாட்டுப் போர்களுக்கு உள்ளானதால் புதிய சுதேசி சிப்பாய்களைச் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக செலவு 1798இல் 7447 பவுண்டாக இருந்தது. 1799இல் 12,994 பவுண்டாக உயர்ந்தது.

மருந்து தேவைப்படும் பொழுது கிடைக்காது ஐரோப்பியாவிலிருந்து மருந்துகள் வர தாமதமானது. உள்நாட்டுப் போர் அடிக்கடி நிகழ்வதால் உள்ளூர் சிப்பாய்கள் எண்ணிக்கை அதிகமானது. இதன் காரணமாக அவர்களுக்கு மருத்துவம் அளிக்க கடைச்சரக்கு (1696) உள்நாட்டு சந்தையிலேயே மூலிகை மற்றும் கிராம்பு, மிளகு, ஏலக்காய் போன்றவற்றை வாங்கிப் பயன்படுத்தினர். இவைகள் பெரும்பாலும் ஆயுர்வேதம், சித்தா மருந்துகள் தயாரிக்க உதவும் பொருட்கள் ஆகும்.

இம்மருந்துகளில் சில வெளிநாடுகளிலிருந்து, எ.கா.: சூடம், ஜாவா, சுமத்திராவிலிருந்தும் இலவங்கப்பட்டை போன்ற கடைச்சரக்குப் பொருட்கள், இலங்கையிலிருந்தும் பெறப்பட்டு சந்தையில் விற்கப்பட்டன. 1758 சர்ஜன் ஜெனரல் பதிவின்படி, உள்ளூர் மருந்துகளைச் சேமித்து வைக்க அரசு மருத்துவமனைகளில் தனி அறை பயன்பாட்டில் இருந்துள்ளது அறிய வருகிறது. இம்மருந்துகள் 1765இல் நடைபெற்ற போர்களுக்காக ராணுவம் விஸ்தரிக்கப்பட்ட நிலையில் உள்ளூர் சிப்பாய்கள் நோயுற்றபொழுது பெரிதும் பயன்பட்டிருக்கின்றன ((DCB, 1758: றி. 268). இதன் பிறகு 1789இல் கிழக்கிந்தியக் கம்பெனி உள்ளூர் சிப்பாய்களுக்குப் பயன்பட 769 பகோடாக்களுக்கு “கடை மருந்துகளை” (Bazaar Medicine) வாங்கியுள்ளது. இதற்கு மற்றொரு காரணம் 1789இல் அலோபதி மருந்துகளை லண்டனிலிருந்து போதிய அளவும், வேண்டிய காலத்திலும் அனுப்ப முடியாததும், மற்றொரு காரணமாகும். இவ்வுள்ளூர் மருந்துகளை மதராஸ் சர்ஜன் ஜெனரல் விலைக்கு வாங்கி மற்ற இடங்களுக்கு அனுப்பியுள்ளார். இது தவிர லண்டனிலிருந்து பெறப்பட்ட டின்சர் ஓபியம் மருந்து மதராசிலேயே குறைவாகக் கிடைப்பதால் தமிழ் நாட்டிலேயே வாங்கிக் கொள்ளவும் லண்டன் மருத்துவ இயக்ககம் அனுமதித்தது.

கம்பெனி ராணுவத்தில் ஒவ்வொரு காலால் படைக்கும் ஒரு நாட்டு வைத்தியர் அவில்தார் ஊதிய அளவில் பதவியில் அமர்த்தப்பட்டார். 1833லிருந்து அரசு மருந்தகம் (Government Dispensary) ஆரம்பிக்கப்பட்டு, அங்குச் சுதேசி மருந்துகள் தயாரிக்கப்பட்டு அவை மதராசின் மத்திய பகுதிக்கு அனுப்பப்பட்டன. அதன் பிறகு தேவை அதிகமான பொழுது சிந்தாதிரிப்பேட்டையில் மற்றொரு மருந்தகம் ஆரம்பிக்கப்பட்டது. இவைகளிலிருந்து அரை ஆண்டுக்கான அளவு மருந்துகளை மருத்துவமனைகள் பெற்றுக்கொண்டன. இம்மருந்துகளை ஆங்கிலேயருடன், டேனிஷ்காரர்களும் வாங்கி தரங்கம்பாடியில் உள்ள மருத்துவமனைகளில் பயன்படுத்தினர்.

இவ்வகை மருந்துகளை ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டிலிருந்தே பெற்றிருக்கலாம் என்றாலும், முக்கியமாக மூலிகை மருந்துகள் ஐரோப்பிய சீதோஷ்ண நிலையில் பயிர் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மைக்கு தடுப்பு மருந்து:

disease 350இந்நிலையில் கிழக்கிந்தியக் கம்பெனி கொள்ளை நோயான பெரியம்மைக்கு எதிராகத் தடுப்பூசி முதன் முதலில் 1787இல் திருச்சிராப்பள்ளியில் ஐரோப்பிய வீரர்களுக்கும், அவர்கள் குழந்தைகளுக்கும் போடப்பட்டது. இது அம்மைப் பாலிலிருந்து பழைய முறையில் ஒரு பிராமண கீழ்மட்டப் பிரிவினரால் போடப்பட்டது. ஆனால் 1792இல் தான் எட்வர்ட் ஜென்னர் மாட்டிலிருந்து தயாரித்த அம்மைப்பால் அம்மை நோய் எதிர்ப்புக்கான ஊசியாகப் பயன்படுத்தப்பட்டது. இது மதராசில் அம்மைக்கு எதிராக 1800 செப்டம்பரில் முதன் முதலில் தடுப்பூசியாகப் போடப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பெண் தெய்வமான மாரியம்மாவின் கோபத்தினாலே அம்மை உண்டாவதாக நம்பி, அதற்கான கோவில்களில் பல சடங்குகள் நடத்தப்பட்டன.

அம்மைக்கான மருத்துவம் தமிழ் மருத்துவத்தில் ‘வைத்திய வாகடம் 1500 அகஸ்தியர்’ என்ற நூலில் காணப்படுகிறது. இதுபோலவே, மருத்துவ நூலான ‘மாதவா நிதானா’ என்ற நூலிலும் பெரியம்மைக்கான குணப்பாடு குறிப்புகள் உள்ளன. இந்நோய் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் கடைசியிலிருந்து பிப்ரவரி வரை காணப்படுவதாக டாக்டர் ஒட்லே அன்சி குறிப்பிடுகிறார். அம்மை தடுப்பு ஊசியை 1801ஆம் ஆண்டு பதிவின்படி ஐரோப்பியர்களே மிகுதியாக சுதேசிகளைவிட ஏற்றுக் கொண்டனர். பழைய முறை தடுப்பு ஊசியைப் போடாது, ஜென்னர் கூறும் முறையில் மாட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட தடுப்பு ஊசியே 1802லிருந்து மதராசில் ஊக்கப்படுத்தப்பட்டு போடப்பட்டது. இவ்வகையில் அம்மைக்கான தடுப்பு முறையான மேலை மருத்துவம் தமிழகத்தில் நுழைந்தது.

உடல் கூறு:

இதுபோலவே சுதேசி மருத்துவத்தில் உடற்கூறு குறித்த நூல்கள் மற்றும் அதைச்சார்ந்த அறிவியல் நுட்பம் மிகுதியாக அறிந்திருந்திராத பொழுது ஐரோப்பிய அறுவை மருத்துவர்கள் முன்பு கற்றறிந்த உடல் கூறு அறிவியலை மேலும் வளப்படுத்திக் கொள்ளும் விதமாக 1693இல் முதன் முதலாக வெண்பாஷாணத்தை உட்கொண்டதால் ஏற்பட்ட மரணத்தின் உண்மையைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை செய்து நிரூபிக்கப்பட்டது. மேலும் 1746இல் பிரெஞ்சுக்காரர்களுடன் ஏற்பட்ட போரில் இறந்த 205 ஐரோப்பியர், பாண்டிச்சேரி முற்றுகையில் இறந்த 67 நபர்கள், ஹைதரலியிடம் மேற்கொண்ட போரில் (1781) இறந்த 48 நபர்கள், திப்பு சுல்தானுடன் நடந்த போரில் இறந்த 175 நபர்கள் உடலை, அவர்கள் உறவினர்கள் பெறாத பொழுது அறுவை மருத்துவர்கள் பிணப் பரிசோதனை செய்ததன் மூலம் உடல் கூறு மருத்துவத்தை மேலும் அறிந்து கொண்டனர்.

ஜான் கிளர்க் என்ற கம்பெனி சர்ஜன் (1773), கப்பல்படை மருத்துவமனை சர்ஜன் சார்லஸ் கர்டிஸ் நோயினால் இறந்தவர்களைப் பிணப்பரிசோதனை செய்து, நோயினால் இறந்தவர்கள் ஏன் இறந்தார்கள் என்ற காரணத்தை அறிந்து கூறினர். இதன் வெளிப்பாடாக டாக்டர் ஜேம்ஸ் அன்சிலி 25 ஆண்டுகள் அனுபவத்துடன், 1828இல் வெப்பக்காலத்தில் ஏற்படும் நோய்களைக் குறித்து ஒரு நூல் எழுதி வெளியிட்டார்.

இதற்கு மாறாக, டாக்டர் ஒட்லே அன்சி என்ற மருத்துவர், இந்து மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனையை மறுப்பதைக் கூறி (1794) சுசுருதா காலத்தில் பிணப்பரிசோதனை செய்தே நூல்கள் எழுதப்பட்டதால் அந்நூல்கள் போற்றப்படுவதாகக் கூறினார். இவர் அகஸ்தியர் வைத்தியம் 500 என்ற நூலைப்படித்து ஹிந்துஸ்தான் மருந்துப்பட்டியல் என்ற நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய கண் மருத்துவ சிகிச்சை மதராசில் (1819 - 1857) நடைமுறைக்கு வந்தது:

1819இல் கண் நோய்க்கு மட்டும் என மதராசில் மருத்துவமனை கிழக்கிந்தியக் கம்பெனியால் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. மேலை மருத்துவத்தை விரும்பாத பிராமண வகுப்பினர்கூட இங்கு மருத்துவம் பெற்றுச் சென்றனர். இம்மருத்துவ மனையின் முதல் கண்காணிப்பாளர் டாக்டர் ரிச்சர்ட்சன். இவரைத் தொடர்ந்து கண்காணிப்பாளராக வந்த டாக்டர் லேன், இவர் கூற்றுப்படி, விழி வெண்புள்ளியுள்ள (Leucoma) நோயாளிகள் மிக அதிக அளவில் மருத்துவத்திற்கு வந்து சென்றிருக்கின்றனர் என்பதாகும். ஏனெனில் இவ்வகை விழி வெண்புள்ளி உள்நாட்டு கண் மருத்துவர்களால் கண் நோய்களுக்குச் சரியான மருத்துவம் புரியாத நிலையில் ஏற்படுகிறது என்று கூறி, இதன் காரணமாக பலர் தங்கள் பார்வையை இழந்து குருடாகின்றனர் என்று குறிப்பிடுகிறார்  (BI. Gioc.: P/262/1747: FI. 998).

இம்மருத்துவமனைக்கு கண் அறுவைக்கான உபகரணங்கள் லண்டனிலிருந்து பெறப்பட்டன. அக்கால கட்டத்தில் உள்நாட்டில் கண்புரைக்கு செய்யப்படும் கௌசிங் என்ற மருத்துவம் மேல் நாட்டினர் மருத்துவத்தை ஒத்ததாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது (BI.Govt. Gazette. Madras: 21 Feb. 1826)..

மதராசில் மேலை மருத்துவத்தைக் கற்பிக்க மருத்துவப்பள்ளி:

மேலை மருத்துவ மருத்துவமனைக்கு மதராஸ் கருப்பு நகரிலுள்ள சுதேசிகள் 1815ஆம் ஆண்டில் முன்பைவிட அதிக எண்ணிக்கையில் மருத்துவம் பெற்றனர். மதராசில் 1800 - 1820ஆம் ஆண்டு வாக்கில் நான்கு மருத்துவமனைகள் இயங்கின. இதில் பொது மருத்துவமனையே (General Hospital) புகழ் பெற்றிருந்தது. 1827இல் பொது மருத்துவமனைக்கு டி.மார்டின், கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இவரால் அங்கு மருத்துவம் கற்பிக்கப்பட்டது. இது 1822இல் கல்கத்தாவில் மேலை மருத்துவத்துடன் ஆயுர்வேதம், யூனானியை சேர்த்து கற்பிக்கப்பட்டதைப்போல் இன்றி மேலை மருத்துவம் மட்டுமே ஆங்கில வழியில் கற்பிக்கப்பட்டது.

இதற்குக் காரணம் (1774 - 1839) லார்ட் வில்லியம் பென்டிக் கவர்னர் ஜெனரலாக இருந்தபொழுது “ஆங்கிலத்தை ஆதரிப்பவர்கள், தமிழ்க் கலாசாரத்தைப் பேணிக்காக்க அவசியமில்லை. இதற்குப் பதிலாக மேலைக் கலாசாரத்தை ஆங்கில வழியில் கொணர வேண்டும்” என வற்புறுத்தியதே ஆகும்.

இதன் காரணமாக கவர்னர் ஜெனரல் 1833இல் ஒரு கமிட்டியை அமைத்து, உள்நாட்டினர் மற்றும் ஆங்கிலத்தை ஆதரிப்பவர்களைப் பேட்டி கண்டு அறிக்கை சமர்ப்பிக்கக் கேட்டுக் கொண்டார்.

இவர்களின் அறிக்கையின் கருத்துப்படி கவர்னர் ஜெனரல் 1835 அக்டோபர் 28இல் மதராசில் ஐரோப்பிய மருத்துவத்தை மட்டும் ஆங்கிலத்தில் கற்பிக்க ஆணையிட்டார். ஏனெனில் அம்முறை மட்டுமே காலனி அரசால் அங்கீகரிக்கப்பட்ட முறையாகும். 1835இல் இம்மருத்துவப் பள்ளியில் கவர்னர் சர்.ஃபிரடெரிக் ஆடம்ஸ் ஆணைப்படி மதராசில் அப்போதகிரி மற்றும் நேட்டிவ் டிரசர்களுக்குப் பயிற்சி அளித்து மருத்துவம் கற்பிக்கப்பட்டது.

இதன்படி தமிழகப் பகுதியில் உள்ள ஐரோப்பியர் மற்றும் சுதேசிகள் மருத்துவ சேவைக்குத் தகுதி பெற முடிந்தது. ஆரம்பத்தில் மருத்துவப்பள்ளி மருத்துவமனை, அறுவை மருத்துவர்கள் தங்கும் விடுதி அருகில் ராணுவத்தினருக்காக ஆரம்பிக்கப்பட்டது. 1838இல் ராணுவத்தினருடன் இக்கால கட்டத்தில் உள்நாட்டு மக்களும் படிக்க அனுமதிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் இரண்டாண்டுப் படிப்பாக இருந்தது பிறகு 5 ஆண்டுகளாக ஆனது. உள்நாட்டு சிவில் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்பட்டது. இப்பள்ளி 1850 அக்டோபர் 1 முதல் கல்லூரியாக மாறியது. இக்கல்லூரியில் கற்பிக்கப்படும் கல்வி இங்கிலாந்தை ஒத்ததாகவே அமைந்தது, ஆகவே 1851இல் இங்குப் படிப்பவர்களை ராயல் காலேஷ் ஆப் சர்ஷன் இங்கிலாந்து அங்கீகரித்தது. 1852இல் முதல் செட் மாணவர்கள் பட்டச்சான்றிதழ் டிப்ளோமா பெற்று வெளியேறினர். இது 1863ஆம் ஆண்டு கல்லூரி மதராஸ் பல்கலைக்கழகத்துடன் இணையும் வரை நீடித்தது (A Meeting of the minds European and Tamil Encounters in Modern Science 1507 - 1857 : 301 551).

- டாக்டர் சு.நரேந்திரன்