நீரியலில் வரலாற்றுச் சாதனைகளைப் புரிந்தவர்; பண்டைக் கால தமிழர்தம் பாசன நுட்பங்களை உலகறியச் செய்ததோடு, அவற்றுள்ளும் பல ஆய்வுகளை நடத்தி எவருமே அறிந்திராத பல்வேறு தகவல்களை வெளிக் கொணர்ந்தவர்; தனது மறைவிற்குச் சில நாட்கள் முன்பு வரை தண்ணீர் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் உருவாக்கும் பொருட்டு, ஒத்துழைக்க மறுத்த உடல் பலவீனத்தைக் கூடப் பொருட்படுத்தாது சமூகக் கடமையாற்ற கண்ணும் கருத்துமாய் உழைத்தவர்; இறக்கின்ற இறுதி நொடி வரை தான் மீண்டெழுந்து மறுபடியும் பல்வேறு ஆய்வுகளுக்கும், கூட்டங்களுக்கும் தன்னை அணியப்படுத்த முடியும் என்று ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தவர்.

தனது இறுதிப்பயணத்தை மருத்துவமனையில் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, 'இப்போ, கொஞ்சம் நல்லா செயல்பட முடியுது. உணவும் உட் கொள்ள முடியுது. அடுத்த மருத்துவ பரிசோதனை முடிஞ்சதுக்கப்பறம், கூட்டங்கள்ல பங்கேற்க முடியும்னு நம்புறேன்' என்ற தன்னம்பிக்கை மிகுந்த சொற்கள் அவரிடமிருந்து நிறையவே வெளிப்பட்டன. ஆனாலும், திரும்ப இயலாத பெருந்தொலைவிற்குச் சென்றுவிட்டார்.

வெள்ளுடையில் மிடுக்கான தோற்றம்; சிரித்த முகம்; கூர்மையான பார்வை; நெற்றியில் திருநீற்றுப்பூச்சு; எவரிடமும் வேற்றுமை பாராட்டாத தன்மை; எந்த நேரத்திலும் எப்படிப்பட்ட தகவலையும் உடனடியாய்த் தருகின்ற பண்பு; நேரந்தவறாமை; எளிமை; இனிமை. இவையெல்லாம் அய்யா பழ.கோமதிநாயகம் அவர்களின் இயல்புகளுள் முதன்மையானவை. மிகப் பெரிய விசயத்தையும் எளிய உவமையின் மூலம் புரிய வைத்துவிடுவார்.

'மருதமரம், வலது பக்கத்துல கிளை விடும்போது, அதோட இடப்பக்கத்து வேர்ப் பகுதியில முட்டு (ஆங்கரிங்) ஒன்ன அமைக்கும். இது எல்லா மரத்துக்கும் பொருந்தும். ஆனா மருதமரத்துக்கு அந்த இயல்பு கூடுதலா இருக்கும். இந்த மாதிரி தான் மண் அணையக் (எர்த் டேம்) கட்ட முடியும். பொதுவா இயற்கையோட ஒவ்வொரு அசைவுகளையும் நாம் கூர்ந்து கவனிச்சாலே, நமக்கான தொழில்நுட்பங்கள நாம கண்டு கொள்ள முடியும். தமிழன் ஒரு காலத்துல இயற்கையோட ஒன்றி வாழ்ந்ததுனாலத்தான் அது கிட்டயிருந்து நெறய கத்துக்கிட்டான்' என்று அவர் விளக்கும்போது, உண்மையிலேயே வியப்பாக இருக்கும்.

மதுரை தியாகராசர் பொறியியற் கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்று, முதுநிலையில் நீரியல் மற்றும் நீர்வளப் பொறியியலில் அண்ணா பல்கலைக்கழகப் பட்டத்தையும் பெற்றவர். தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையில் 34 ஆண்டு காலம் நீர் மேலாண்மைப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் நீர்மேலாண்மையில் சிறப்பு பட்டயம் பெற்றிருக்கிறார். 'தமிழர் பாசன வரலாறு' என்ற அரியதொரு நூலை பாசனம் மற்றும் நீர் மேலாண்மையில் ஆர்வம் காட்டும் அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் மட்டுமன்றி, தமிழ்கூறு நல்லுலகிற்கே வழங்கியவர்.

அரசுப்பணியில் இருந்தபோதும் சரி, அதனைத் துறந்து பிற அமைப்புகளுக்காக அயல்பணியின் பொருட்டு பணியாற்றியபோதும் சரி மிகுந்த நேர்மையோடும், கண்டிப்போடும் செயலாற்றியவர். காவிரியில் தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்கவும், முல்லைப் பெரியாறில் கேரளத்தின் அடாவடித்தனத்தைச் தட்டிக் கேட்கவும், பாலாற்றில் தமிழர்கள் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்துக் குரல் கொடுக்கவும் ஒருபோதும் தயங்கியவரில்லை. அதேபோன்று தமிழகத்திலுள்ள நீர்நிலைகளில் தொடர்ந்து உருவாக்கப்படும் மாசுபாடுகளைக் களைய இடையறாது முழங்கினார்.

குறிப்பாக, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகளில் சாயக்கழிவுகள் கலப்பதைத் தடுப்பதற்காகவும், அந்த ஆற்றின் இயல்புத் தன்மையை மீட்டெடுக்கவும் நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட வல்லுநர்க் குழுக்களில் பழ.கோமதிநாயகம் அவர்கள் தவறாது இடம் பெற்றார். நீர்நிலைகளைக் காப்பதற்காக தொடர்ந்து இயங்கினார். வாழ்ந்து முடிக்கின்ற இறுதி நொடி வரை ஒரு நீர்ப்போராளியாகவே வாழ்ந்தார்.

'கல்லூரியில் பயின்ற காலத்திலேயே மாணவர்களுக்கும், தமிழர்களுக்கும் ஆதரவான போராட்டங்களில் மிகத் தீவிரமாகப் பங்கேற்றுப் போராடினார். இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து நடைபெற்ற மாணவர் போராட்டங்களில் எழுச்சியுடன் முன்நின்று குரல் கொடுத்திருக்கிறார். தீர்வு கிடைக்கும் வரை சளைக்காமல் போராடுவது என்பது அவரின் குணம். அரசியலுக்காகவோ, குடும்பத்திற்காகவோ அல்லது வேறு எந்தக் காரணங்களுக்காகவோ தனது கொள்கைகளை விட்டுக் கொடுக்காது வாழ்ந்த உன்னதமான நண்பர்' குரல் தழு தழுக்க நம்மிடம் பகிர்ந்து கொண்டார் வேளாண்மைப் பொறியியல் துறையில் கண்காணிப்புப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இரா.வெங்கடசாமி. இவர் 'முல்லைப்பெரியாறு அணை வரலாற்று விவரங்களும், இன்றைய விவகாரங்களும்' என்ற தலைப்பில் நூலொன்றை எழுதியுள்ளார்.

'ஏற்றுக் கொண்ட பொறுப்பை உணர்ந்து இம்மியளவும் பிசகாது பணியாற்றுகின்ற ஒரு சில பொறியாளர்களுள் பழ.கோமதிநாயகமும் ஒருவர். மிக நுட்பமான பாசனச் செய்திகளை சிறப்புடன் விளக்குவதில் வல்லவர். பண்டைத் தமிழரின் அறிவு நுட்பத்தை செல்லுமிடங்களிலெல்லாம் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தவர். பணியில் ஆழ்ந்த ஈடுபாட்டைக் காட்டியதால்தான், இன்றளவும் அவரது செயல்பாடுகள் அனைத்தும் பாராட்டுக்குரியனவாகத் திகழ்கின்றன' என்று கூறுகிறார் பொறியாளர் இரத்தினவேலு. தானம் அறக்கட்டளையின் வெளியீடான 'பாசன ஏரிகளில் பழமையின் அறிவைத் தேடி' என்ற ஆங்கில நூலை பழ.கோமதிநாயகத்துடன் இணைந்து பொறியாளர் இரத்தினவேலு எழுதியுள்ளார். இவர் பொதுப்பணித்துறையில் சிறப்பு கண்காணிப்புப் பொறியாளராகப் பணியாற்றியவர்.

தியாகராசர் கல்லூரி பொதுவியல் துறைப் பேராசிரியர் முனைவர் சந்திரன், 'அறிஞர்களுடன் எந்த அளவிற்கு அணுக்கம் காட்டிப் பழகுகிறாரோ, அதே போன்று, மாணவர்களிடமும் வேறுபாடு பாராது உரையாடுபவர். இன்னும் சொல்லப்போனால், தன்னிடம் விளக்கம் பெற வரும் மாணவனைக்கூட பொறியியல் அறிஞர் என்ற கண்ணோட்டத்திலேயே அணுகுவார். இதனால் மாணவர்கள் பழ.கோமதிநாயகம் அவர்களிடம் பேசுவதிலும், உரையாடுவதிலும் எந்தவிதத் தயக்கமும் கொள்வதில்லை' என்கிறார். மூத்த தொல்லியல் அறிஞர் வெ.வேதாசலம், 'ஒரே சமயத்தில் பாசனப் பொறியியல் நுட்பத்தில் வல்லவராகவும், தமிழ் இலக்கியங்களில் விற்பன்னராகவும், தொல்லியல் துறை அறிஞராகவும் திகழ்ந்த ஒரே ஆளுமை பழ.கோமதிநாயகம் மட்டும்தான். தமிழர்களுக்குக் கிடைத்த தனிச்சிறப்பு மிக்க மனிதர்' என்கிறார்.

தானம் அறக்கட்டளையின் மூலம் மதுரையிலுள்ள நீர்நிலைகள் குறித்து எழுதுவதற்கான வாய்ப்பொன்று எனக்குக் (இக்கட்டுரையாளருக்கு) கிடைத்தபோது, அதற்குத் தேவையான சில நூல்கள் கைவசமில்லாத நிலையில் அய்யா பழ.கோமதிநாயகம் அவர்களிடம் ஆலோசனை கோரினேன். அய்யா அவர்கள், 'அப்படியா, கொஞ்சம் பொறுத்துக்கங்க. நான் ரெண்டு, மூணு நாள்ல மதுரைக்கு வருவேன். அப்ப நாம இது பத்தி பேசலாம்' என்று பதிலுரைத்தார். இரண்டு நாட்கள் கழித்து ஒருநாள் அய்யாவிடமிருந்து திடீரென கைப்பேசி அழைப்பு வந்தது. 'சிவக்குமார், இப்ப உடனே வீட்டுக்கு வர்றீங்களா?' என்று மதுரையிலுள்ள அவரது அண்ணனின் வீட்டிலிருந்து அழைத்தார். நானும் எனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அவரது இல்லத்திற்குப் பறந்தேன். அங்கே புன்முறுவல் பூத்த முகத்துடன் வரவேற்ற அதே நேரத்தில், தனது உறவினர்கள் அனைவரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பிறகு நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். நான் விடை பெற முயன்றபோது, அய்யா அவர்கள், சற்றுப் பொறுங்கள் என்பதுபோல் கையசைத்துவிட்டு, பக்கத்திலிருந்த ஒரு அறைக்குள் சென்றார். அங்கிருந்து ஒரு பெரிய கட்டைப் பையை தூக்கிக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார். நானும் அதனை வாங்கி என்னவென்று பார்த்தேன். உள்ளே மதுரைக் காஞ்சியிலிருந்து மதுரையைப் பற்றிய அனைத்து விதமான தகவல்களும் அடங்கிய பல்வேறு நூல்கள் இருந்தன. மிகவும் வியந்தே போனேன்.

'இது எல்லாத்தையும் நகல் எடுத்துக்கங்க' என்று சிரித்துக் கொண்டே கூறினார். அதற்குப் பிறகு மதுரையின் நீர்வளம் குறித்த 'நீரின்றி...' என்ற நூலை எழுதி முடித்தேன். அதில் அய்யாவின் பெயரைப் போடுவதற்கு அவரது இசைவினைக் கோரியபோது, கூடவே கூடாது என்று மறுத்துவிட்டார். 'குறிப்பு நூல்கள் மட்டும்தானே நான் கொடுத்தேன். எழுதியது நீங்கள். பிறகு என் பெயரை எதற்காகப் போட வேண்டும்?' என்று கண்டிப்புடன் கூறிவிட்டார். பிறகு அவரது இசைவுடன் நூலின் கடைசிப் பகுதியில் நன்றி தெரிவித்திருந்தேன்.

வேறுபாடு பார்த்து பழகத் தெரியாத குழந்தை மனம், எவருக்கு வாய்க்கும். அது அய்யா பழ.கோமதிநாயகத்திற்கு உடன் பிறந்த வரமாய் அமைந்துவிட்டது. இனி... அந்த மகத்தான மனிதரை எப்போது காணப்போகிறோம்? அரற்றித் துடிக்கிறது நம் இதயம். நிரப்ப இயலாத வெற்றிடமொன்று ஏற்பட்டுவிட்டது. இறந்து போகும் ஒவ்வொருவருக்கும், அரசியல்வாதிகள் சொல்லும் வழக்கமான வெற்றுச் சொல்லல்ல இது. உண்மையிலேயே பழ.கோமதிநாயகம் அவர்களின் இறப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

'தமிழகத்தின் நீர்நிலைகள் குறித்த முழுமையான தொகுப்பினை வெளிக் கொண்டு வர வேண்டும். அடுத்து வருகின்ற தலைமுறையினருக்கும் இதனை உணர்த்துவதற்கு தொடர் பங்களிப்பை நல்க வேண்டும் என்ற பழ.கோமதிநாயகம் அவர்களின், ஆவலை நிறைவேற்றும் பொருட்டு, எல்லோரும் சேர்ந்து இயங்குவது அவசியம். இழந்து போன நீர் உரிமைகளை மீட்டெடுத்து தமிழர்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு வழி செய்ய வேண்டும். இதனைச் செய்து விட்டாலே பழ.கோமதிநாயகம் அவர்களின் கனவை நனவாக்கி விடலாம்' என்கிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் வழக்கறிஞர் சி.சே.இராசன். இதனையே அய்யா கோமதிநாயகம் அவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகவும் கொள்ளலாம்.

-இரா.சிவக்குமார்