மருத்துவமனை என்பது கல்வெட்டுகளில் ஆதுலர்சாலை மற்றும் ஆரோக்கியசாலை என்ற சொற்களால் குறிப்பிடப்பட்டுள்ளன.  திருமுக்கூடல் கல்வெட்டில் ஆதுலர்சாலை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவமனை முறையின் வளர்ச்சி: தமிழ்நாட்டில் குடியேறிய சமணர்கள் தமிழ் மருத்துவத்தினைக் கற்று அவர்கள் மடாலயங்களில் தங்களது மருத்துவப்பணியினைத் தொடங் கினார்கள்.

சுகாதார மையங்கள்: புகார் நகரில் மக்களின் துயரங்களைத் துடைப் பதையே தொழிலாகக் கொண்ட துறவிகள் வாழ்ந்த ‘சக்கரவாளக் கோட்டம்’ என்னும் மையம் ஒன்றிருந்ததாக மணிமேகலையில் குறிப்பிடப் பட்டுள்ளது.  அம்மையத்தில் மக்களுக்குத் துயரங் களும், நோய்களும் தீர்க்கப்பட்டன.  மாமுனிவர் களால் மன உளைச்சல்கள் நீக்கப்பட்டன.

“துக்கம் துடைக்கும் துகளறு மாதவர்

சக்கரவாளக் கோட்டம் உண்டு.”

(மணிமேகலை: 17: 75-76)

அவ்வூரில் கடும் பசியால் வாடியவர்களுக்கும், ஆதரவற்ற அனாதைகட்கும் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்க்கும், உதவுவதற்கென அற நிலையமாகச் செயல்பட்டு வந்த ஒரு பொது இடம் “உலக அறவி” இருந்தது.

“உலக அறவி ஒன்று உண்டு அதனிடை

ஊரூர் ஆங்கண் உறுபசி உழன்றோர்

ஆரூம் இன்மையினரும் பிணியுற்றோர்

இடுவோர்த் தேர்ந் தாங்கு யிருப்போர் பலர்.”

(மணிமேகலை: 17: 78-81)

மேற்கண்ட விபரங்களிலிருந்து இங்கு கூறப் பட்ட அறவி என்னும் பொது இடமானது இலவசப் பராமரிப்பு விடுதியாகச் செயல்பட்ட ஒரு பொது சுகாதார மையமாக இருந்திருக்க வேண்டும்.

இதற்கு சிறந்த சான்று கி.மு. 3-ஆம் நூற்றாண்டின் (V.R. Madhavan Opcit at P. 224) பத்திரபாகு சீடரான வைசாக முனிவர்.  இச்செய்தி மதுரை மாவட்டத்தில் உள்ள மலையில் உள்ள பிராமி கல்வெட்டுகளால் அறிய முடிகிறது.  இவ்வாறு அமைக்கப்பட்ட மடாலயங்களில் உணவு, அடைக்கலம், மருந்து, கல்வி எனும் நான்கு தானம் வழங்கப்பட்டது.  (சமணமும் தமிழும், சீனி. வேங்கடசாமி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பக். 41).

இந்த நான்கினையும் அன்னதானம், அபயதானம், ஒளடததானம், சாத்திரதானம் என்று கூறுவர்.  ஒளடதம் என்பது மருந்து தானத்தைக் குறிக்கும்.  அதாவது இலவச மருத்துவ சேவையைக் குறிப்ப தாகும்.

தஞ்சாவூர் மருத்துவமனை: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோயில் தேவராயன்பேட்டை கல்வெட்டு தஞ்சாவூரில் மருத்துவமனை இருந்ததைப் பற்றிய குறிப்பை அளிக்கிறது.  இந்த மருத்துவமனை சுந்தரசோழ விண்ணகர ஆதுலசாலை என்று கல்வெட்டு குறிப்பிட்டுள்ளது.  (ARS I.E - 1924 - P.162/No.249-1923).

இம்மருத்துவமனையின் பராமரிப்புச் செலவுக்கு இலவச மருத்துவச் சேவைக்குமாக ‘9-மா’ நிலத்தை, இளவரசி குந்தவை கொடையாக அளித்துள்ளார்.  மேலும் முதலாம் ராஜேந்திர சோழதேவனின் மூன்றாம் ஆட்சியாண்டு காலத்தில் (கி.பி. 1015) குறிப்பேட்டிலிருந்து, அந்த நிலம் விற்கப்பட்டுக் கொடையின் நோக்கங்களுக்குச் செலவிடப்பட்டது என்ற குறிப்பு உள்ளது.  ஆனால் தொகை பற்றாக் குறையாக இருந்தபடியால் களகரச்சேரி என்னும் சிற்றூரைச் சேர்ந்த ஒருவன் தனது நிலத்தினை விற்று மருத்துவமனைப் பராமரிப்புச் செலவை ஈடுகட்டினான் (கி.பி. 1019) என்று குறிப்பிடுகிறது.  (ARS I.E - P.162/No.249-1923).

திருவிசலூர் மருத்துவமனை: கும்பகோணத்தையடுத்த திருவிசலூரில் உள்ள சிவயோகநாதர் ஆலயத்தில் காணப்படும் முதலாம் ராஜேந்திரனின் ஆட்சிக்கால கல்வெட்டில் ஒரு அறுவை மருத்துவருக்குப் பொது மக்களுக்குச் சேவை செய்வதற்காக நிலமும், வீடும் கொடையாக அளிக்கப்பட்ட விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.  (S.I.I. Vol. XXIII No.350 & 351).

வேம்பத்தூர் மருத்துவமனை: முதலாம் ராஜேந்திர சோழ தேவனின் சகோதரி குந்தவை வேம்பத்தூரில் மருத்துவத்தொழில் நடத்தி வந்த பிரயோகத்தரையன் என்னும் அறுவை மருத்துவருக்கு, அவ்வூரில் உள்ள ஒரு வீட்டையும், ஒரு வேலி 4 மா நிலத்தையும் மக்களுக்கு இலவச மருத்துவ சேவை புரிவதற்காகக் கொடையாக அளித்துள்ளாள்.  (S.I.I. VoI. XXIII P. (iii)). இது அவரது இலவச சேவைக்கான வாழ்நாள் ஊதியம் ஆகும்.

மேற்கண்ட கல்வெட்டுக்களின் வாயிலாக அரசர்களும், அவர்கள் குடும்பத்தினரும், இலவச மருந்தகங்களை நிறுவ உதவியளித்தது அறியப்படுகிறது.

திருப்புகலூர் மருத்துவமனை: விக்கிரம சோழர் காலத்திய கல்வெட்டில் திருப்புகலூர் முடிகொண்ட சோழர் பேராற்றின் வடகரையில் நிறுவப்பட்டிருந்த மருத்துவமனை ஒன்றிற்கு நோயாளியையும், ஆதரவற்றவர்களையும் பராமரிக்கும் வகையில் சத்திரிய நாத சதுர்வேதி மங்கலத்து ஊர்ச்சபையினர் கொடையாக வழங்கிய வரி விலக்களிக்கப்பட்ட நிலம் பற்றிய விபரம் காணப்படுகிறது.  அந்த மருத்துவமனையை நிறுவியவர் வீர ராஜ ராஜன்.  இம்மருத்துவமனை இன்றும் சித்த வைத்தியசாலையாகப் பராமரிக்கப் பட்டு வருகிறது.  (திருப்புகலூர்க் கல்வெட்டு 323-1978).

நோயாளி ஓய்வெடுக்க சத்திரம் & சத்துணவு: இரண்டாம் ராஜேந்திர சோழன் கல்வெட்டின் படி மருத்துவ மனையிலிருந்து வெளிவரும் நோயாளிகள் இலவசமாகத் தங்கி ஓய்வெடுக்கவும், சத்துணவு உண்ணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியை அறிய முடிகிறது.  (TN SDA Serial No. 17/ 1976-1977 No.371/1976-1977).

மூன்றாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1246-1279) காலத்தைச் சேர்ந்த கல்வெட்டில் சிவம் என்பவர் திருத்தொண்டத் தொகையான் திருமடத்திற்கு ஒரு நிலத்தைக் கொடையாக அளித்து அதிலிருந்து கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதி அந்த மடத்தில் தங்கிச் செல்லும் நோயாளிப் பயணிகளுக்கு இலவச சிகிச்சை செய்யப்பட்ட செய்தியை அறிய முடிகிறது.

தமிழகத்தின் ஆயுர்வேத மருத்துவமனைகள்:

பழங்கால மருத்துவமனை பற்றி மிகவும் விரிவான விளக்கங்களுடன் கூடிய மிகப்பெரிய கல்வெட்டு, வீர சோழன் ஆதுலர் சாலை பற்றிய திருமுக்கூடல் என்னும் இடத்தில் அமைந்துள்ள வெங்கடேசப் பெருமாள் கோயில் பிரகாரத்தில் கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் தற்கால மருத்துவமனை போன்று எல்லா வகை வசதிகளோடும் செயல்பட்டு வந்த முழுமையான மருத்துவமனை பற்றிய மிகப்பெரிய குறிப்பு காணப்படுகிறது.

இது சோழ மன்னன் இராஜகேசரிவர்மன் என்னும் வீரசோழன் என்பவனால் கி.பி. 1062-இல் நிறுவப்பட்டுள்ளது.  அந்த மருந்துவமனையின் பெயர் வீரசோழன் ஆதுலர் சாலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  வெங்கடேசப்பெருமாள் கோயில் பணியாளர்களுக்கும், அக்கோயிலைச் சேர்ந்த வேதபாடசாலையில் பயின்ற மாணவர் களுக்கும் உடல் நலப் பராமரிப்புக்கென அந்த மருத்துவமனை நிறுவப்பட்டுள்ளது.

அந்த மருத்துவமனையில் உள்நோயாளிகள் தங்கி, சிகிச்சை பெறுவதற்கென 15 படுக்கை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.  ஒரு பொது மருத்துவர், ஒரு அறுவை மருத்துவர், இரு உதவியாளர்கள், இரு பெண் பணியாளர்கள், ஒரு நாவிதன், நீர் கொணர் வோன் ஒருவன் ஆகியோர் அம்மருத்துவமனையில் பணிபுரிந்த அலுவலர்கள் ஆவர்.  ஆலம்பாக்கம் என்னும் ஊரைச் சேர்ந்த கோதண்டராமன் அசுவத்தாம பட்டன் என்பவன் அம் மருத்துவ மனையில் நியமிக்கப்பட்டுள்ளான்.

“ஆதுலர்க்கு மருந்துகளுக்கு வேண்டும்

மருந்து பறித்தும் விறகிட்டும்

பரியாரம் பண்ணுவர் இருவர்.”

“ஆதுலர்க்கு வேண்டும் பரியாரம் பண்ணி

மருந்தாடு பெண்டுகள் இருவர்.”

என்ற கல்வெட்டு வரிகளின் மூலம் மருத்துவப்பணி மகளிரைக் (செவிலியர்) கொண்டு மருத்துவச் சேவையளிக்கும் மருத்துவச் சிகிச்சை முறை கி.பி. 11-ஆம் நூற்றாண்டிலேயே செயல்பாட்டில் இருந் துள்ளமையை அறிய முடிகிறது.

“ஆதுலர்க்கும் கிடைகளுக்கும் சத்திரர்க்கும்

வேண்டும் பணி செய்யும் நாவிதன் ஒருவன்.”

அதாவது நோயாளிகளுக்கும், மருத்துவ மனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும், உள்நோயாளிகளுக்கும் மற்றும் கோயிலுடன் இணைக்கப்பட்ட சத்திரத்தில் தங்கியிருப்போருக்கும் தேவையான பணிகளையும் செய்வது நாவிதனின் பணியாகும்.  மேலும் அடிக்கடி சிறு அறுவைச் சிகிச்சைகளையும் அந்த நாவிதன் செய்து வந்திருக்க வேண்டும்.

மருத்துவமனையில் 15 உள்நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றனர் என்பது.

“ஆதுலர் சாலை வீரசோழனில்

வியாதிபட்டுக் கிடப்பார்

பதினைவர்க்குப் பேரால் அரிசி நாழியாக

அரிசி குறுணி ஏழுநாழி.”

என்ற குறிப்பினால் அறியமுடிகிறது.  இந்த 15 உள் நோயாளிகளுக்கும் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 30 நாழி அரிசி வீதம் செலவு செய்யப்பட்டது.

தண்ணீர் கொண்டு வருபவர் (Water Man) மருந்துகளைப் பத்திரப்படுத்தி வைப்பவர் (Store- Keeper) இரவு முழுவதும் விளக்கு எரிவதைக் கண்காணிக்க, நோயாளிகளுக்குத் தினசரி உணவு அளிக்க என்று ஒவ்வொரு பணிக்கும் தனித் தனியாகப் பணியாட்கள் நியமிக்கப்பட்டிருந்த விபரமும் கல்வெட்டில் காணப்படுகிறது.

நோயாளிக்கு மருந்து கலந்து கொடுப்பவர் (Compounder) பற்றி “மருந்தாய்ந்து கொடுப்பார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  மருந்துகள் திரவ மாகவும், கலப்புத் திரவமாகவும் மற்றும் கசாயம், பொடி, மாத்திரை, லேகியம் எனப் பல்வேறு வகை களில் வழங்கப்பட்டுள்ளன என்பது கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளின் பெயர்களி லிருந்து அறிய முடிகிறது.

மருத்துவமனைப் பணியாளர்களின் ஊழியங்கள் பற்றியும் கல்வெட்டில் விவரமான குறிப்புகள் காணப்படுகின்றன.  மருத்துவமனைப் பணியாளர்களுக்கு ஊதியம் நெல்லாகவும், பொற்காசுகளாகவும் வழங்கப்பட்டுள்ளன.

பொது மருத்துவராகிய கோதண்டராம அசுவத்தாம பட்டனுக்கு நாள் ஒன்றுக்கு மூன்று குறுணி நெல்லும் ஆண்டுக்கு 8 காசு ரொக்கமும் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.  இதுபோல் சல்லியக் கிரியைப் பண்ணும் அறுவை மருத்துவருக்கு நாள் ஒன்றுக்கு ஒரு குறுணி நெல் வீதம் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.  ஆண் உதவியாளர் ஒவ்வொரு வரும் நாள் ஒன்றுக்கு ஒரு குறுணி நெல்லுடன் ஆண்டுக்கு ஒரு காசு ரொக்கமும் ஊதியமாகப் பெற்றனர்.  பெண் செவிலியர் ஒவ்வொருவரும் நாள் ஒன்றுக்கு ஒரு குறுணி நெல்லுடன் ஆண்டுக்கு அரைக் காசும் ஊதியமாகப் பெற்றனர்.  நாவிதனுக்கு அரைக் குறுணி நெல் மட்டும் ஊதியமாக வழங்கப்பட்டது.  ஏனைய பணியாளர்களின் ஊதியங்களும், இதுபோல் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.

hospital census 600ஆயுர்வேத மருந்துகள்:

கல்வெட்டுக் குறிப்புகளுள் மிகவும் குறிப்பிடத் தக்கது மருந்துகள். ஓராண்டுக்குப் பயன்படும் விதத்தில் 20 வகை மருந்துகள் சேமிப்பில் வைக்கப் பட்டிருந்தன.  இதில் கல்யாண லவணா, சுசுருத சம்ஹிதையிலும், தச மூலஹரிதகி, கரும்பூரி கண்டீரா போன்ற மருந்துகள் சரக சம்ஹிதையிலும் தசமூல ஹரிதகி, மண்டூகாவடிகா ஆகியவை அஷ்டாங்க ஹிருதயத்திலும் குறிப்பிட்டவாறு தயாரிக்கப் பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இந் நூல் மூன்றும் ஆயுர்வேத வைத்திய ஆணிவேர் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மருந்தும் பல்வேறு மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டு, பல நோய்களைக் குணமாக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எ.கா. : தச மூலஹரிதகி என்ற மருந்து 10 வகையான மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப் பட்டு, காசம், வாதம், இரத்தப்போக்கு, நீர்க்கோவை, சிறுநீரகக்  கோளாறு, நுரையீரல் கோளாறு, மண்ணீரல் விரிவு முதலான நோய்களைக் குண மாக்கும் தன்மை படைத்தன.  (அறிவியல் தமிழகம்: பக்.-96)

ஸ்ரீரங்கம் கல்வெட்டு:

திருமுக்கூடல் இடைக்கால கல்வெட்டு போன்று மற்றொரு கல்வெட்டு ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் ஆலயத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

கருட வாகன பட்டர் என்பவர் தனது குரு வாகிய ஸ்ரீ ராமானுஜரின் அறிவுரைப்படி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நான்காம் பிரகாரத்தில் ஒரு ஆதுலர் சாலையை அமைத்தார்.  ஹொய்சன மன்னர் வீர ராமநாதரின் முதன்மைத் தளபதி சிங்கதண்ட நாயக்கர், அப்பிரகாரத்தில் இருந்த திருநடை மாளிகையின் இடைக் கூடத்தில் ஒரு பகுதியைப் பிரித்து, அதை நீண்ட அறையாக மாற்றி, அதில் ஆரோக்கிய சாலை நடத்தும் பொறுப்பினை மற்றொரு கருடவாகனப் பட்டரிடம் ஒப்படைத்தார்.  இதை நெடுங்காலம் நடத்தி வந்தனர் என்ற செய்தியை 1257-ஆம் ஆண்டு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

“வைத்தியரில் எனக்கு ரட்சகராய்

 இத்தர்மம் நெடுநாள்பட

நடத்திக் கொண்டு வந்த நாயகனான

 கருட வாகன பட்டர்.”

பின்னர் முகம்மதியரின் படையெடுப்பில் சிதைக்கப்பட்ட இந்த ஆரோக்கியசாலையை

கி.பி. 493-இல் மூன்றாவது கருட வாகன பட்டர் புனரமைத்து நடத்தி வந்துள்ளார்.

கி.பி. 1493-ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“முன்னாள் பிரதாப சக்ரவர்த்தி காலம் துடங்கி

இவருடைய பூர்வாள் கருட வாகன பட்டர்

நடத்தி வந்த ஆரோக்கிய சாலை.”

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அறுவை மருத்துவருக்கு ஊதியம் குறைவு:

திருமுக்கூடல் கல்வெட்டு போன்று இக் கல்வெட்டிலும் அந்த ஆரோக்கிய சாலையில் பணிபுரிந்த பொது மருத்துவர், ஒரு துணை மருத்துவர், ஒரு பணியாளர் முதலான அலுவலர் பற்றியும், அவர்களது ஊதியம் பற்றியும் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த அலுவலர்கள் முறையே நாள் ஒன்றுக்கு 5 குறுணி, 3 குறுணி நெல் வீதம் ஊதியம் பெற்றுள்ளார்கள்.

இந்த ஆரோக்கிய சாலையின் அருகில் ஆயுர் வேதக் கடவுளாகிய தன்வந்திரிக்குக் கோயில் நிறுவப்பட்டு இன்றுவரை வழிபாடு நடந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

திருமுக்கூடல் கல்வெட்டின்படி ஊதிய ஏற்றத் தாழ்வுகள் அறியமுடிகின்றது.  அங்கு பணி செய்த தாதிப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குறுணி வீதம் ஆண்டுக்கு 30 கலம் நெல்லும், அரைக் காசு பணமும் ஊதியமாக வழங்கப்பட்டன.  இது போல பொது மருத்துவருக்கு ஆண்டுக்கு 90 கலமும், 8 காசும், அறுவை மருத்துவருக்கு 30 கலம் மட்டும் மற்றும் நாவிதருக்கு ஆண்டுக்கு 15 கலம் நெல்லும் வழங்கப்பட்டன.  மேலே குறிப்பிடப்பட்ட கல்வெட்டு களின்படி சோழர் காலத்தில் ஆண் ஊழியர் மற்றும் செவிலியரை விட மிகக் குறைவாகவே அறுவை மருத்துவருக்கு ஊதியம் அளிக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது.

(தென்னிந்திய மருந்துவ வரலாறு: 224-232) (E1 Vol. XXI. No.38)

இத்துடன் பெண் பராமரிப்பாளர்களுக்கு அன்று முக்கியத்துவம் அளிக்கப்பட்டமையும் அறியமுடிகிறது.  திருமுக்கூடல் கல்வெட்டின்படி அங்கு ஆயுர்வேத மருத்துவம் கடைப்பிடிக்கப் பட்டுள்ளது என்பது ஆய்வு முக்கியச் செய்தியாகும்.

இதுபோல திருவாடுதுறையில் 12-ஆம் நூற்றாண்டில் கோமதீஸ்வரன் கோயிலில் நிறுவப் பட்ட மருத்துவப் பள்ளியில் சரஹ ஸம்ஹிதா, அஷ்டாங்க ஹிருதயம், ரூபாவதாரம் பாடமாகக் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.  இதன்படி இது ஒரு ஆயுர்வேத மருத்துவப்பள்ளி எனக்கொள்ள வேண்டியுள்ளது.  (K.A. Nelakanta Sastri. The Colas: 632)

இக்கல்லூரியில் 364 மருத்துவ மாணவர்களுக்கு, உணவு அளிக்கப்பட்டிருக்கிறது என்று விக்கிரம சோழனின் 3-ஆம் ஆண்டுக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.  மேலும் ஒரு மருத்துவமனையும் நிறுவப்பட்டு, அதில் பணி புரிந்த மருத்துவருக்கு இலவச நிலங்கள் வழங்கப்பட்டன.  இங்கு மருத்து வருடன் அறுவை மருத்துவர் மற்றும் செவிலியரும் பணி புரிந்தனர்.

(K.A.N. Sesatri the Chola, P.469 & 159 of 1979 EP1 Ind. Vol. XXI 182 - of 1915)

இச்செய்திக்கு வலுவூட்டும் விதமாகவும் தொடர்ந்து ஆயுர்வேத மருத்துவம் தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டு வந்துள்ளது என்பது பரிமேலழகர் திருக்குறள் உரையினாலும் அறியப் படுகின்றது.  எ.கா.: நூலோர் (941) என வள்ளுவர் கூறியது மருத்துவ நூல் வல்லோர் என்று பொருள் படும்.  அவர்கள் ஆயுர்வேத நூல் கற்றோராகவும் இருக்கலாம்.  சித்த மருத்துவம் கற்றோராகவும் இருக்கலாம்.  ஆனால் பரிமேலழகர் ஆயுர்வேத நூலுடையார் என்று குறிக்கின்றார்.  இந்திய பொது மருத்துவ இயல்பாக வள்ளுவரின் கருத்தைக்  கொள்வதில் தவறில்லை.

(தமிழக அறிவியல் வரலாறு:  பக். 88).

இவற்றை நோக்கும் பொழுது சித்த மருத்துவத்துடன் ஆயுர்வேதமும், தமிழகத்தில் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. இருப்பினும் சோழர் காலத்தில் ஆயுர் வேதமே சிறப்பாக நடைபெற்றிருக்கிறது என்கிறார் தொல்பொருள் துறையைச் சார்ந்த தே.கோபாலன்.

(நடன. காசிநாதன், அருண்மொழி ஆய்வுத் தொகுதி, சென்னை- 1988, பக். 166).