subraavu book 450

நம் நாட்டின் ஆதி இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் இன்றைக்கு `மறு உருவம்’ பெற்று புத்தகச் சந்தையில், குறிப்பாக ஆங்கிலப் புத்தகங்கள், சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. வால்மீகி, வியாசரால் இந்த இதிகாசங்கள் எழுதப்பட்டிருந்தாலும் வால்மீகி ராமாயணம் பல நாடுகளில் அந்தந்த நாட்டு கலாச்சாரத்திற்கேற்ப சில இடைச்செருகல்களைக் கொண்டு பலரால் எழுதப்பட்டும், நடிக்கப்பட்டும் வருகின்றன. அது போல மதம்/சமயத்திற்கேற்றவாறு ஜெயின் ராமாயணம், சீக்கிய ராமாயணம் எனப் பல வகைகளிலும் இந்த இதிகாசங்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

Ôஏற்கனவே சொல்லப்பட்ட கதையை மீண்டும் மீண்டும் படித்து அக்கதை மாந்தர்கள் பேசிய, பேசாமல் விட்ட விஷயங்களை வைத்து அக்கதையை ஒட்டி வேறொரு கதையை எழுதுவது மறுகூறல் (எழுத்தாளர் பார்வையில்) / மறுவாசிப்பு (வாசகரின் பார்வையில்) என அழைக்கப்படுகிறது.

`புத்தகம் பேசுது’ என்கிற மாத இதழில் வெளிவந்த 17 கட்டுரைகள் புத்தக வடிவத்திற்கென்று சற்றே விரிவாக எழுதப்பட்டு இந்நூலில் தரப்பட்டுள்ளது. `புராண வியாபாரம்’ என்கிற வணிகமயமாதலில் ஆரம்பித்து உஷா நாராயணனின் `பிரத்யும்னா - சன் ஆஃப் கிருஷ்ணா’ புத்தகத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட `ஒரு அரசர்... இரு மனைவிகள்... இரு புதல்வர்கள்” என்கிற கட்டுரையோடு இப்புத்தகம் முடிகிறது.

தமிழில் வெளிவந்த, பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்த, ஆங்கிலத்தில் வெளிவந்து கொண் டிருக்கிற பல மறுவாசிப்பு நூல்களைப் பற்றியும், அதில் தங்கள் திறமைக்கும், கற்பனாசக்திக்கும் ஏற்ப நூலாசிரியர்கள் செய்யக்கூடிய இடைச்செருகல்களையும் ஆசிரியர் கோடிட்டுக் காட்டி விமர்சித்துச் செல்கிறார்.

மறுகூறல் அல்லது மறுவாசிப்பில் இரு வகைப் போக்குகள் இருக்கின்றன. முதலாவதாக, கதையைச் சொல்லிச் செல்லும்போதே இதிகாச கதாபாத்திரத்தின் சிறப்பியல்புகளைக் கூறிச் செல்வது. இதற்கு உதாரணம் அசோக் பாங்கர் என்கிற எழுத்தாளர் ராமாயண கதையை Prince of Ayodhya, Siege of Mythila, Demons of Chitrdkot, Armies of Hanuman, Bridge of Rama, King of Ayodhya, Vengence of Ravana, Sons of Sita என எட்டுத் தலைப்புகளிலும், மகாபாரத்தை The seeds of war, The children of midnight, As the blind king watched  என்கிற தலைப்புகளிலும் எழுதியிருக்கிறார். அது போல கிருஷ்ணனது கதைகளை ஒன்பது புத்தகங்களாக எழுதியிருக்கிறார்.

இரண்டாவதாக,  புராணக்கதையை உள்ளபடியே கூறிவிட்டு, ஒவ்வொரு அத்தியாயத்தின் பின்குறிப்பாக இது இப்படி நடந்திருக்கலாம், இப்படி நடந்திருக்க முடியாது, ஒரு சம்பவம் நாட்டின் வெவ்வேறு பகுதி களில் எப்படியெல்லாம் பார்க்கப்படுகிறது என்று தனது `படைப்பாற்றலோடு கூடிய ஊகத்தை’க் கூறுவது. முன்னதை விட பின்னது அருமையானது என்பது இந்நூலாசிரியரின் கருத்து. இந்த வகையான கதை கூறலில் முன்னனியில் இருப்பவர் மருத்துவர், எழுத்தாளர், நிர்வாகயியல் ஆலோசகர் தேவதத் பட்நாயக் ஆவார். இவருடைய `சீதா’ என்கிற மறுவாசிப்பு நூல் சீதாவின் பார்வையில் சொல்லப்பட்ட ராமாயணம் ஆகும். அதோடு `லட்சுமண் கோடு’ என்பது வால்மீகி ராமாயணத்தில் இல்லையென்றும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட தெலுங்கு, வங்காள நாவல்களில்தான் இந்த `இடைச்செருகல்’ செய்யப்பட்டது என்றும் கூறுகிறார்.  

அசோக் பாங்கர் போல அமிஷ் திரிபாதி, அஸ்வின் சாங்கி, கிரிஸ்டோஃபர் டாயில், சித்ரா பானர்ஜி திவாகருணி போன்றவர்கள் புராண காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து இரு காலங்களில் மாறி மாறி பயணிக்கும் கதைகளை எழுதி வருகிறார்கள்.

இன்றைய இளைஞர்கள் வால்மீகியும், வியாசரும் எழுதியதைப் படிக்கிறார்களோ, இல்லையோ மறு வாசிப்பு நூல்களைப் படிக்கிறார்கள் என்பதற்கு பல லட்சம் பிரதிகள் விற்பதே சாட்சியாகும்.

இந்த தொழில்நுட்ப பரவலாக்க யுகத்தில் நமது வீடுகளில் கதை சொல்வதும், கதை கேட்பதும் மிகவும் அரிதாகி விட்டது. இதை அற்புதமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் இந்த `மெத்தப்படித்த’ எழுத்தாளர்கள். இவர்களில் சிலர், ஐஐஎம், ஐஐடி போன்ற கல்விக் கூடங்களில் படித்து, பன்னாட்டு நிறுவனங்களில் சில ஆண்டுகள் வேலை பார்த்துவிட்டு பின் அவ்வேலையை உதறித் தள்ளிவிட்டு முழு நேர எழுத்தாளர்களாக ஆகி யிருக்கிறார்கள்.  இதிலிருந்தே புராணம் எந்த அளவுக்கு வணிகமயமாக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவரும்.

இப்படி எழுதப்படும் மறுவாசிப்பு நூல்களில் பல நமது கற்பனைகளுக்கு சவால் விடுவதோடு `ஹாரி பாட்டர்’ போன்ற `ஃபேண்டஸி’ நாவல்களையே விஞ்சி விடும் அளவுக்கு ஏகப்பட்ட`ரீல்’கள் (கட்டுக்கதைகள்) கொண்டதாக இருக்கின்றன. இதற்கு நூலாசிரியர் பல உதாரணங்களைச் சுட்டிக் காட்டினாலும், அஸ்வின் சாங்கியின் `ரோஸாபால் லைன்’ என்கிற `பெஸ்ட் செல்லரை’ மிகவும் மோசம் என்கிறார். அதற்குக் காரணம்: `கிருஸ்துவம் போதிப்பது அனைத்தும் இந்துமதத்திலிருந்து பௌத்தம் வழி அங்கு சென்றது தான். ஏசுநாதர் சிலுவையிலிருந்து தப்பி இந்தியா வந்து காஷ்மீரில் பல ஆண்டுகள் இருந்து மாண்டார். மேரி மக்தலீன் அவரது மனைவி, அவள் மகத நாட்டு இளவரசி (அதானால் தான் அவளுக்கு அந்தப் பெயராம்!)...” இப்படியாக அந்த நாவல் வாசகர்கள் காதில் நன்றாக பூ சுற்றுகிறது எனக் குறிப்பிடுகிறார்.

`ஹரப்பாவில் அட்டாச்ட் பாத்ரூம்’ என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை. இதில் அமிஷ் திரிபாதியின் `ஷிவா ட்ரிலாஜி’ ((Shiva Trilogy) என்கிற `சிவன் பற்றிய முத்தொகுதி நூல்கள்” குறித்து எழுதியிருக்கிறார். இதில் ஒரு புத்தகத்தில் தான் இன்றைய அரசியல் தலைவர் களும் சொல்லத் தயங்கும் விஷயத்தை- ஹரப்பாவில் அட்டாச்ட் பாத்ரூம் - `தைரியத்துடன்’ சொல்லி யிருக்கிறார். பிள்ளையாருக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது உண்மையென்றால், இதுவும் உண்மை தானோ?! புராணக் கதையில் விறுவிறுப்பையும், அளவுக்கு மீறிய கற்பனையையும் ஏற்றி எழுதிவரும் அமிஷ் திரிபாதியின் புத்தகங்கள் இதுவரை சுமார் 20 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்று கிட்டத்தட்ட ரூ 50 கோடி வருமானம் ஈட்டியிருக்கிறது. ஷிவாவுக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து அவர் இப்போது `ராமனை’ மையமாக கொண்டு ஒரு தொடரை ஆரம்பித் திருக்கிறார். அவர் எழுதத் திட்டமிட்டிருந்த நான்கு புத்தகங்களில் இரண்டு ஏற்கனவே வெளிவந்து விட்டது!

இந்நூலாசிரியர் சிலாகித்துப் பேசியிருப்பது அவரது அபிமான எழுத்தாளரான தேவ்தத் பட்நாயக்கின் `சிகண்டியும் அவர்கள் சொல்ல மறுக்கும் வேறு கதைகளும்’ - `Shikandi and other tales they don’t tell you' - என்கிற புத்தகத்தைத் தான். வழக்கம்போல, ஆழமான பின் குறிப்புகளுடன் எழுதப்பட்டிருக்கும் புத்தகம் இது.

சரி, ஆங்கிலத்தில் தான் மறுவாசிப்பு நூல்கள் வருகிறதா? இல்லை. தமிழில் இதற்கு விதை போட்டவர் புதுமைப்பித்தன். அவரது `சாப விமோசனம்’ தமிழின் முதல் மறுவாசிப்புக் கதையாகக் கொள்ளலாம் என்கிறார் நூலாசிரியர். அவரைத் தொடர்ந்து எம்.வி. வெங்கட் ராம் எழுதிய `அகலிகை முதலிய அழகிகள்’, `நித்திய கன்னி’, சோலை சுந்தர பெருமாளின் `தாண்டவபுரம்’, ப. ஜீவகாருண்யனின் `கிருஷ்ணன் என்றொரு மானுடன்’, இந்திரா பார்த்தசாரதியின் `கிருஷ்ணா’, எஸ்.ராம கிருஷ்ணனின் `உப பாண்டவம்’ ஆகியவையும் இந்த வகையைச் சேர்ந்தவையாகும்.

பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு காண்டேகரின் ÔயயாதிÕ, எம்.டி. வாசுதேவன் நாயரின் `ரெண்டாம் முழம்’ தமிழில் `ரெண்டாம் இடம்’ என்கிற பெயரிலும், பைரப்பாவின் `பருவா’ தமிழில் பாவண்ணன் மொழி பெயர்ப்பில் `பருவம்’ ஆகவும் பல மறுவாசிப்பு நூல்கள் இலக்கிய நோக்கத்துடன் வெளிவந்திருப்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.  ஆங்கிலத்தில் வெளிவரும் மறுவாசிப்பு நூல்கள் பெரும்பாலும் வணிக நோக்கத்தை முன் வைத்தே எழுதப்படுகின்றன.

இது தவிர மறுவாசிப்பாக இல்லாமல், முழு இதிகாசத்தையும் தனது நடையில் அப்படியே எழுதிச் செல்லும் போக்கு எழுத்தாளர் ஜெயமோகனால் முன்னெடுக்கப்பட்டு வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

பொருளாதார, அரசியல் காரணங்களுக்காக திடீரென்று இந்த மறுவாசிப்புக்  கதைகள் ஆங்கிலத்தில் வெளிவர ஆரம்பித்திருப்பது ஒரு புதிய இலக்கிய வகைமை என்றாலும் அதில் கலந்திருக்கும் பொய்யிலும், புரட்டிலும் இந்தத் தலைமுறையினர் மயங்கிவிட்டால் என்ன ஆகும் என்கிற கவலையும், பதட்டமும் ஏற்படத்தான் செய்கிறது.

ஆங்கிலத்தில் மறுவாசிப்புக்காக எழுதப்பட்டு இது வரை வெளிவந்திருக்கிற பெரும்பாலான புத்தகங்களைப் படித்து நேரத்தை வீணாக்குவதற்குப் பதிலாக எளிய நடையில், நகைச்சுவையுடன், நறுக்கென்று, அப் புத்தகங்களில் இருக்கும் நிறை, குறைகளை சுட்டிக் காட்டி எழுதப்பட்டிருக்கும் `மீண்டெழும் மறு வாசிப்புகள்’ என்கிற இந்தப் புத்தகத்தை வாசகர்களாகிய நீங்கள் படிப்பதன் மூலம் உங்கள் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.

`மீண்டெழும் மறுவாசிப்புகள்’ என்கிற இப் புத்தகம் இதிகாசங்களின் அடிப்படையில் எழுதப்பட்டு இது வரை வெளிவந்திருக்கும் பல புத்தகங்கள் குறித்த ஒரு விமர்சனம் என்றால் மிகையில்லை!

மீண்டெழும் மறுவாசிப்புகள்

ஆசிரியர்: சு.சுப்பாராவ்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை, சென்னை - 600 018

விலை: ` 90.00

Pin It