பத்துப்பாட்டுள் ஒன்றாகிய ‘முல்லைப்பாட்டு’ மறுவாசிப்புச் செய்யப்படவேண்டும் என்ற சிந்தனை எனக்குத் தோன்றுவதற்கு வேறு சில காரணங்கள் இருந்தாலும், முதன்மைக் காரணமாக அமைந்தது அதனுடைய குறுகிய அடியெல்லை எனலாம்.

நெடும் பாடல் பத்தினுள்ளும் முல்லைப்பாட்டு மட்டுமே 103 வரிகளால் ஆகிய சிறிய பாடல் ஆகும். மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக் காஞ்சி 782 வரிகளுடன் கூடிய பெரிய பாடல் என்பதை மனதில் நிறுத்தி முல்லைப் பாட்டின் அளவை ஒப்புநோக்கி அறியலாம்.

வரிகளால் சிறியது ஆனாலும், அதனுள் பொதிந்து கிடக்கின்ற தரவுகள், காட்சிச் சித்திரங்கள், பண்பாட்டுச் சித்திரிப்புக்கள், உவமைகள் போன்றவை நயமிக்கவை என்பதும், இப்பாடல் எனது இரண்டாம் ஆண்டு பட்டப் படிப்பிற்கான பகுதி இரண்டு தமிழ் பாடத்தில் பயின்று வந்தது என்பதுடன், எனது தமிழ்ப் பேராசிரியர் முல்லைப் பாட்டின் மீது எனக்கு ஆர்வம் வர பயிற்றுவித்திருந்தார் என்பவையே இதனை ஆய்வு நோக்கில் மறுவாசிப்பு செய்ததற்கான வேறு சில காரணங்கள் ஆகும்.

தனது ஒப்பற்ற தமிழ்ப் பணியாக பழைய ஓலைச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து, ஆய்வு செய்து, பதிப்பித்து எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி என அரும்பெரும் புதையல்களை மீட்டெடுத்துத் தமிழுக்குத் தந்த ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா அவர்களின் தொண்டினை, முல்லைப் பாட்டை மறு வாசிப்புச் செய்யும் போது நன்றியுடன்  நினைத்துக் கொண்டேன்.

பத்துப்பாட்டின் திருத்தமுள்ள ஒலைச் சுவடிகள் தேடியும் கிடைக்கப் பெறாமல், அதனைப் பதிப்பிக்க முடியாமல் கவலை மீதுற்று கடைசி முயற்சியாக ஸ்ரீ வைகுண்டம் வக்கீல் சுப்பையா முதலியார் அவர்களைத் தஞ்சம் அடைந்ததையும், அவர் ஆழ்வார் திருநகரியில் உள்ள தன் நண்பர்கள், கவிராயர்களின் வீடுகளி லெல்லாம் கேட்டுப் பார்த்தும் பயனற்றவராக; அன்று ஆலய விசேட நாள் ஆகையால், வீதி உலா வந்த பெருமாளையும் சடகோபாழ்வாரையும் தரிசித்து தான் வந்த காரியம் கை கூட வில்லை, ‘ஆழ்வாரே நீர் தான் தமிழின் துயரைப் போக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டதையும் தனது ‘என் சரித்திரம்’ என்ற நூலின் நெஞ்சுருகப் பதிவு செய்கிறார் உ.வே.சா.

என்ன ஆச்சரியம் பாருங்கள் உ.வே.சா.வின் பிரார்த்தனை முடிந்த சிறிது நேரத்திலேயே ஆழ்வார் திருநகரியில் உள்ள ‘லட்சுமண கவிராயர்’ என்பவர் கையில் ஓலைச் சுவடிகளுடன் விரைந்து வந்து, “இந்த புத்தகத்தைப் பாருங்கள் இந்த ஒன்றுதான் என் மாமனாரிடம் உள்ளது. பார்த்துவிட்டுத் திருப்பித் தருவதாக வாங்கி வந்திருக்கிறேன்,” என்றவாறு உ.வே.சா.வின் கைகளில் கொடுக்கிறார்.

கைகளில் கிடைத்த ஒலைச் சுவடிகளைக் கண்ணுற்ற உ.வே.சா.வின் பரவசத்தை அவருடைய வார்த்தைகளாலே தருவதுதான் முறையாகும். உ.வே.சா. எழுதுகிறார், “எனக்கிருந்த ஆவலினாலும் வேகத்தி னாலும் நிலா வெளிச்சத்திலேயே அதைப் பிரித்துப் பார்த்தேன்.  சட்டென்று ‘முல்லைப் பாட்டு’ என்ற பெயர் என் கண்ணிற்பட்டது அப்போது எனக்கு உண்டான சந்தோசத்திற்கு எல்லையில்லை”.

முல்லைப் பாட்டின் இன்பமும்,  பயனும் எப்படித் தேடிக் கிடைக்க வந்தது என்பதை இதன் மூலம் அறிகிறோம். முல்லைப் பாட்டைப் படிக்கும் போதெல்லாம் மேற்படி உ.வே.சா. அவர்களின் பரவசமும் நம்மையும் தொற்றிக் கொள்வது தவிர்க்க இயலாதது ஆகிறது.

அறிவியல் உவமையுடன் ஒரு துவக்கம்

குளிர்ந்த கடலைப் பருகி மேலெழுந்த மேகம், மலை முகடு தொட்டு பின் மழையாகிப் பொழிவது என்பது, மகாபலி சக்ரவர்த்தி தாரை வார்த்த நீரானது நழுவித் தன் கையில் விழுந்த மாத்திரத்திலேயே வானில் உயர்ந்து நின்ற வாமன அவதாரம் போல்வது என்ற அற்புதமான அறிவியல் உவமையுடன் முல்லைப் பாட்டைத் துவக்குகிறார் இதன் ஆசிரியராகிய ‘காவேரி பூம்பட்டினத்து பொன் வணிகனார் மகன் நப்பூதனார்.

“நீர் செல நிமிர்ந்த மாஅல் போலப்

 பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு

 கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி

பெரும் பெயல் பொழிந்த சிறுபுண் மாலை” (3-6)

இதில் மற்றொரு நுட்பம் என்னவென்றல், முல்லை நிலத்தினுடைய பெரும் பொழுது-கார் காலம், சிறு பொழுது-மாலை. பாடலின் 6-வது வரியிலேயே முல்லைத் திணை விளக்கமுற “பெரும் பெயல் பொழிந்த சிறுபுண் மாலை” என்ற வரியால், காலம் ‘கார்’ என்பதையும் பொழுது ‘மாலை’ என்பதையும் பாங்குற விளக்கிவிடுகிறார் ஆசிரியர்.

அவ்வாறெனில் தனித்துவமான திணை மயக்கம் என்பது எங்கிருந்து வந்தது? என்ற கேள்வி எழுகிறது.

அகப்பாடலா? புறப்பாடலா?

சங்க இலக்கியங்கள் அனைத்தும் பரந்துபட்ட இரண்டு திணைகளால் அமைகின்றன. ஒன்று, வீரமும் வீரம் சார்ந்த புற வாழ்வு குறித்த புறப்பாடல்கள். மற்றொன்று, காதலும் காதல் சார்ந்த களவு, கற்பு குறித்த அகப்பாடல்கள். 

இவற்றுள் முல்லைப்பாட்டு எத்திணையில் அமைகிறது? என்று பார்க்குமிடத்து, இந்தப் பாடலிலே அகத்திணையும் அடக்கம், புறத்திணையும் அடக்கம். தலைவி, தலைவனைப் பிரிந்து தனித்திருப்பதைப் பற்றி கூறுவதால் இப்பாடல் அகத்திணையாம். மற்றும் போர்களத்துப் பாசறை பற்றியும் அதில் தலைவனுடைய பங்கு பற்றியும் கூறுவதால் இப்பாடல் புறத்திணையுமாம்.

உள்ளடக்கத்தால், முல்லைப்பாட்டு அகமும் புறமுமான திணை மயக்கத்தில் இருந்தாலும், திணைகளின் கூட்டு விகிதங்கள் சரியாய் அமைவதால், இத்திணை மயக்கமே முல்லைப்பாட்டுக்குச் சிறப்பாய் அமைவதைக் காண்கிறோம். தலைவியின் தவிப்பை முதலாவதாகக் கொண்டு பாடல்கள் துவங்குவதால் அகத்திணை சார்ந்த தலைப்பாக ‘முல்லைப் பாட்டு’ என அமைந்தாகக் கருதலாம்.

இடைப் பிறவரலான காட்சியமைப்பு

இப்பாடலுக்கான கதை அமைப்பின் மற்றுமொரு சுவையான அமைப்பியல் உத்தியை அறிஞர் சாமி சிதம்பரனார் தனது ‘பத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும்’ என்ற நூலில் சுட்டிக்காட்டுகிறார்.

போர் முடித்துக் கார் காலத்தில் திரும்புகிறேன் என்று வாக்களித்துச் சென்ற தலைமகன் கார் காலம் துவங்கியும் வந்தானில்லை, என்ற தவிப்பில் துவண்டிருக் கிறாள் தலைவி அவளது வாட்டத்தைப் போக்க பெரு முது பெண்டிர் அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று நெல்லொடு மலரும் கலந்து படைத்து இறைவனை வணங்குகிறார்கள். தலைவியின் வாட்டம் போக்க நல் நிமித்தம் கேட்டு நிற்கிறார்கள். கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள ஆயர் சேரியில் பெண் ஒருத்தி, பசுவைப் பிரிந்த கன்றுக்குச் சொல்வதாக ‘இதோ, மேய்ச்சலுக்குச் சென்ற உன் தாய் வருகிறாள், கவலை கொள்ளாதே!’ என்ற நன்மொழி கேட்கிறது. அதனையே  தலைவனைப் பிரிந்த தலைவிக்கான நல்ல சகுனமாய் எடுத்தியம்பி தலைவியைத் தேற்றுகிறார்கள். அவளோ தேறுதல் அடையாதவளாய் கலங்கி நிற்கிறாள் என்பதை 1 முதல் 23 வரையிலான வரிகளில் காட்சிப்படுத்தி நிறுத்துகிறார் நப்பூதனார்.

இனி தலைவியின் துன்ப நிலையை இத்துடன் விட்டு, தேர்ந்த திரைக் கலைஞன் போல, இடைப் பிறவரலாக (deviation of sequence) ஆசிரியர் வினை மேற்சென்ற தலைவன் நிலையை 24 முதல் 79 வரையிலான வரிகளில் விவரித்துக் காட்டுகிறார். போர் பாசறையின் அமைப்பு அதன் ஒழுங்கு சிறப்பாக சித்தரிக்கப்படுகின்றன.

மீளவும், “இன்துயில் வதியுநற் காணாள் துயர் உழந்து” (வரி-80) எனத் தலைவிக்கே இத்துணைப் பொருளையும் அடையாளமாக மேற்படுத்தி, மீண்டும் இடையறுத்து காட்சிகளை அமைத்து காட்டியது காணலாம். இது வாசிப்பவர் உள்ளத்தில் தேர்ந்த உத்தியிலான இன்பத்தை தருவதாக அமைகிறது.

மயங்கும் திணை ஒழுக்கம்

ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு வகை ஒழுக்கமாக, ஐவகை நிலத்திற்கும் ஐவகை ஓழுக்கத்தை இலக்கண மிட்டுக் காட்டுகிறது தொல்காப்பியம்.

குறிஞ்சியில் புணர்தலும் புணர்தல் நிமித்தமும், முல்லையில் இருத்தலும் இருத்தல், நிமித்தமும், மருதத்தில் ஊடலும் ஊடல் நிமித்தமும், நெய்தலில் இரங்கலும் இரங்கல் நிமித்தமும், பாலையில் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் என நிலத்திற்கான ஒழுக்கங்களாக வரையறுத்துள்ளனர் நம் முன்னோர்.

அவ்வாறே, முல்லை நிலத்தில் தலைவியும் தலைவனும் பிரிவு வந்துற்ற போது, தலைவியானவள் தலைவன் வரும் வரை அவன் வருகையே நோக்கி ஆற்றி இருத்தல் வேண்டும். அழுது அரற்றுதல் கூடாது. அவ்வாறு அழுது அரற்றுவாள் ஆயின், அத்திணை ஓழுக்கம் இரங்கலும் இரங்கல் நிமித்தமுமாகிய நெய்தல் நிலத்திற்கு உரியதாக மாறிவிடும்.

முல்லைப் பாட்டின் தலைவி கார் காலம் துவங்கியும் வராத தலைவனை நோக்கித் துயர் கொள்கிறாள். அவளது வாட்டத்தைப் போக்க பெரு முது பெண்டிர் பல்வேறு விதமாகத் தேற்றுகிறார்கள். எனினும் தேறாதவளாகிய தலைவியின் கண்களில் கண்ணீர் அரும்புகிறது என்கிறார் நப்பூதனார்.

“பருவரல் எவ்வம் களை மாயோய் எனக்

 காட்டவும் காட்டவும் காணாள் கலுழ் சிறந்து

 பூப் போல் உண் கண் புலம்பு முத்துஉறைப்ப” (21-23)

இவ்விடத்தே நுட்பமானதொரு திணை மயக்கத்தை ஆய்வு செய்து புலப்படுத்துகிறார் ‘உரைவேந்தர்’ ந.மு.வேங்கடசாமி நாட்டார். முல்லை ஒழுக்கத்தில் தலைவனை நினைத்து ஆற்றியிருக்க வேண்டிய தலைமகள் அதனையும் தாண்டி துயர் கொள்கிறாள். எனவே அவளது கண்களில் கண்ணீர் பெருகிறது. ஆனால் அக்கண்ணீர் துளிகளாகி சிந்தி விடுமேயாகில் அது நெய்தல் திணைக்குரிய இரங்கல் நிமித்தமாகி விடும். அதனைத் தவிர்க்க முல்லை நிலத்தின் ஓழுக்கத்தை நிறுவிக்காட்ட, தலைமகள் கண்களில் துளிர்ந்த கண்ணீர் வீழ்ந்து படாமல் கண்களில் உருண்டு திரண்டு நிற்பதாகக் காட்டி நிறுத்துகிறார் ஆசிரியர்.

போர்ப் பாசறையில் பெண்கள்

முல்லைப் பாட்டின் பல்வேறு சிறப்புகளுள், போர்ப்பாசறை அமைப்பு விளக்கத்தையும் அவற்றுள் பயின்று வரும் காவல் முறைகள் பற்றிய பதிவையும் கூறலாம்.

பொதுவாகப் போர்க்களத்திற்குப் பெண்கள் செல்வதில்லை. ஆனால் போருக்குப் பிந்தைய அல்லது போருக்கு முந்தைய பாசறைப் பணிகளில் மகளிர் பெரிதும் ஈடுபட்டுள்ளதை முல்லைப் பாட்டு தெள்ளதின் விளக்குகிறது.

சிறிய வளையல்களை அவர்கள் முன் கையில் அணிந்திருக்கிறார்கள். அவர்களது கூந்தல் அவிழ்ந்து முதுகிலே கிடக்கிறது. அவர்களது இடுப்பிலோ, இரவைப் பகலாகக் காட்டக் கூடிய ஒளி பொருந்திய வாள் தொங்கவிடப்பட்டுள்ளது. பாசறையின் நீண்ட பந்தங்களில் நெருப்பு அணையாமலும், பாவை விளக்கின் கையிலே எரிக்கின்ற விளக்கு அணையாமலும் நெய்வார்த்துப் பார்த்துக் கொள்கிறார்கள் அவர்கள்.

“குறுந்தொடி முன் கைக் கூந்தல் அம்சிறு புறத்து

இரவு பகல் செய்யும் திண்பிடி ஒள்வாள்

விரிவு வரிக்கச்சின் பூண்ட மங்கையர்” (45-47)

என்பது பாடல் வரிகளாகும்.  ஆண்களின் வீரத்திற்கு உதவியாக இங்கே பெண்களின் வீரமும், கடமையும் ‘நெய்யுமிழ் விளக்கின் வெளிச்சம்’ போலப் பரவுவதைக் காண்கிறோம்.

யவனரும், மிலேச்சரும்

அரசனுக்குரிய போர்ப்பாசறை ‘ஈர் அறைப் பள்ளி’யாக அமைக்கப்பட்ட நுட்பமும், அதில் காவல் காக்க வலிமைமிக்க உடலமைப்பு கொண்ட ‘யவனர்’ களும் உள் அறையில் கண்களாலும், செய்கையாலும் மட்டுமே பேசிக் கொள்ளும் வாய் பேசாத ‘மிலேச்சர்’ களும் பணியமர்த்தப்பட்ட மதிநுட்பத்தையும் முல்லைப் பாட்டின் வாயிலாக நாம் அறிகிறோம்.

“உடம்பின் உரைக்கும் உரையா நாவின்

 படம் புகு மிலேச்சர் உழையர் ஆக” (65-66)

இதில் ‘மிலேச்சர்’ என்பார் பலுசிஸ்தானத்து, நமது மொழி அறியா வீரர்கள் என்றும், வாய்ப் பேச்சில்லா ஊமைகள் என்றும் பொருள் கொள்வார் உண்டு. எவ்வாறாயினும் போர்த் தந்திர ரகசியங்கள் பகிரப்படும் உள் அறையில் வாய் பேசாதவர் பணியில் இருப்ப தென்பது சிக்கலற்ற போர் நிர்வாகத் திறனாகும். அதில் ‘உழையர்’ என்ற சொல் அருகில் இருந்து பணியாற்றுபவர் (மிலேச்சர்) என்ற தெளிவை தருகிறது.

பாட்டுடைத் தலைவன் யார்?

பத்துப் பாட்டுக்களுள், ஏனைய பாடல்கள் (குறிஞ்சிப் பாட்டு தவிர்த்து) யார் மீது பாடப்பட்டவை என்பதற்கான விளக்கம் தெளிவாய் இருக்கிறது. ஆனால் முல்லைப்பாட்டு யார் மீது பாடப்பட்டது என்பதற்கும், பாட்டுடைத் தலைவன் யார்? என்பதற்கும் விளக்கம் ஏதுமில்லை. இது ‘தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்’ மீது பாடப்பட்டதென சிலர் கருதுவர். ஆனால் அதற்கான அகச்சான்றுகள் அல்லது குறிப்புகள் ஏதும் இப்பாட்டில் இல்லை.

பாட்டுடைத்தலைவன் இவன், என்ற பிம்பம் கட்டமைக்கப்படாமலே வெறும் 103 ஆசிரியப்பா வரிகளில் நிகழ்த்திக் காட்டிய அற்புதம் முல்லைப் பாட்டு என்றால் அது மிகையில்லை.

அள்ள அள்ளக் குறையாத ஆய்வுக் குறிப்புகள் முல்லைப்பாட்டின் நிறைந்து கிடக்கின்றன காலத்தின் கண்ணாடியாகிய முல்லைப்பாட்டு எதிர்கால கூர்ந்தாய்வுகளில் மேலும் துலக்கமுறும் என்பது உறுதி.

மேற்பார்வை நூல்கள்

1. பத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும் - சாமி சிதம்பரனார்

2. பத்துப்பாட்டு மூலமும் உரையும் - புலவர் அ.மாணிக்கம்

3. சங்க இலக்கியம் பத்துப்பாட்டு மூலமும் உரையும் - என்.சி.பி.எச். வெளியீடு

4. என் சரித்திரம் - உ.வே.சாமிநாதய்யர்.

Pin It