ungalnoolagam nov17 wrap 500

s 450பதினெட்டு, பத்தொன்பதாவது நூற்றாண்டுகளில் கிறித்தவர்களின் அடிப்படைச் சமய நூலாக விளங்குவது பைபிள். புத்தகங்களைக் குறிக்கும் பிபிலியா என்ற கிரேக்க மொழிச் சொல்லின் திரிபு வடிவமே பைபிள் என்ற ஆங்கிலச் சொல். 16-ஆவது நூற்றாண்டில் தூத்துக்குடி மாவட்டத்தின் புன்னைக்காயல் என்ற கடற்கரைச் சிற்றூரில் வாழ்ந்த அண்டரிக் அடிகளார் என்ற போர்ச்சுக்கீசிய நாட்டு சேசுசபைத் துறவி பிபிலியா என்ற சொல்லை ‘விவிலிய’ என்றழைத்தார். இதுவே பின்னர் விவிலியம் எனத் திரிபடைந்தது.

ஞாயிறு வழிபாட்டிற்காகத் தேவாலயம் செல்லும் கிறித்தவர்கள், கருப்பு அட்டையுடனும் நூலின் விளிம்புகளில் சிவப்பு வண்ணத்துடனும் அமைந்த தமிழ் விவிலியத்தைக் கரங்களில் சுமந்தவாறோ, மார்பில் அணைத்தவாறோ செல்வது பரவலாக நாம் காணும் காட்சி. ஒருவகையில் கிறித்தவர்களுக்கான தனி அடையாளமாக இது விளங்குகிறது.

மிக எளிதாக இன்று கிடைக்கும் தமிழ் விவிலியம், தமிழில் மொழி பெயர்க்கப்பட்டமைக்கு நெடிய வரலாறு உண்டு. இவ்வரலாறானது, கிறித்தவம் என்ற சமய எல்லையைக் கடந்து, தமிழ் மொழியில் நிகழ்ந்த உரைநடை நூல் ஒன்றின் மொழிபெயர்ப்பின் வரலாறாகவும் அமைந்துள்ளது. இதனால் தமிழ் இலக்கிய வரலாறின் ஓர் உறுப்பாக, விவிலியத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு முயற்சிகளைக் கொள்ள இயலும்.

தமிழில் மொழிபெயர்ப்பு

பண்டையத் தமிழர்களுக்கு, பாலி பைசாசம், சமஸ்கிருதம் ஆகிய வடபுலத்து மொழிகளுடன் தொடர்பு இருந்துள்ளது. ஆயினும் இம்மொழிகளில் இருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் எவையும் இன்று நமக்குக் கிட்டவில்லை. என்றாலும் மொழி பெயர்ப்பு முயற்சிகள் தொடர்பான சான்று ஒன்று தொல்காப்பியம். எச்சவியலில் (நூற்பா. 884) காணப்படுகிறது. வடமொழி ஒலிகளைத் தவிர்த்து விட்டு தமிழ் எழுத்தில் வடமொழிச் சொற்களை எழுதுவதை இந்நூற்பா குறிப்பிடுகிறது.

மகாபாரதம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதை ‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும்’ என்று கி.பி. பத்தாம் நூற்றாண்டுக் காலத்திய சின்னமனூர் செப்பேடு குறிப்பிடுகிறது. ஆனால் இன்று நமக்கு இந்நூல் கிட்ட வில்லை.

நேரடியான மொழிபெயர்ப்பாக இன்றி அம்மொழியில் எழுதப்பட்ட நூல்களை வடமொழி அறிவின் துணையுடன் தமிழில் தழுவி எழுதிய நூல்கள் சில நம்மிடையே இன்றும் வழங்குகின்றன. தண்டி அலங்காரம், கம்பரது இராமாயணம் என்பன தழுவல் நூல்கள்தாம். பைசாச மொழியில் இருந்து வடமொழிக்குச் சென்ற ‘பிருகத்கதா’ என்ற காவியத்தின் தழுவலாக கொங்குவேளரின் பெருங்கதை அமைந்துள்ளது.

மொழிபெயர்ப்பு என்பதற்கு நாம் இன்று கொள்ளும் பொருளுக்குப் பொருந்துமாறு அமைந்த முதல் மொழி பெயர்ப்பு விவிலிய மொழி பெயர்ப்புதான். இம்மொழி பெயர்ப்பு திடீரென்று நிகழவில்லை. இதற்குப் படிப் படியான வளர்ச்சி நிலை உண்டு. இவ்வளர்ச்சி நிலை குறித்த அறிதலே தமிழ் விவிலிய மொழிபெயர்ப்பு வரலாறாகும். இவ்வரலாறானது பதினாறாம் நூற்றாண்டுத் தமிழகத்தில் போர்ச்சுக்கீசியர் நிலைகொண்டமையில் இருந்து தொடங்குகிறது.

தமிழகத்தில் போர்ச்சுக்கீசியர்

கி.பி.16-ஆவது நூற்றாண்டில் இராமேஸ்வரம் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான முத்துக்குளித் துறைக் கடற்கரைப் பகுதியில் போர்ச்சுக்கீசியர்கள் தம் ஆதிக்கத்தை நிலை நிறுத்தினர். இதன் தொடர்ச்சியாக இப்பகுதியில் கடல்சார் தொழில் மேற்கொண்டு வாழ்ந்து வந்த பரவர் அல்லது பரதவர் என்ற மக்கள் பிரிவினர் கத்தோலிக்கர்களாக மதம் மாறினர். இம்மதமாற்ற நிகழ்வே விவிலிய மொழி பெயர்ப்புக்கு வித்திட்டது எனலாம்.

அச்சுநூல்கள் அறிமுகமாகாத, அக்காலத்தில் கத்தோலிக்கக் குருக்கள், தம் சமயம் சார்ந்த வழிபாட்டு முறைகளை, புதிய கத்தோலிக்கர்களுக்கு அறிமுகம் செய்வதில் இடர்ப்பாடுகளை எதிர்கொண்டனர். சில அடிப்படை மன்றாட்டுகளை (செபம்) யாவது தமிழில் கற்றுக்கொடுக்க வேண்டிய தேவை இருந்தது. அக்கால கட்டத்தில் இலத்தீன் மொழியே உலகக் கத்தோலிக்கத் திருச்சபையின் வழிபாட்டு மொழியாக விளங்கியது. தேவாலய வழிபாட்டின் போதும் அன்றாடம் வீட்டில் மேற்கொள்ள வேண்டிய மன்றாட்டுகளின் போதும் அவர்கள் கூறவேண்டிய மன்றாட்டுகளைத் தமிழாக்கம் செய்ய வேண்டிய தேவை இருந்தது. இதை நிறைவு செய்யும் வகையில் சில வழிபாட்டு மந்திரங்களையும், மன்றாட்டுகளையும் தமிழில் மொழிபெயர்த்தனர். இம்மொழிபெயர்ப்பு முயற்சிகள் விவிலிய மொழி பெயர்ப்புக்கான முன்னோடி முயற்சிகளாக அமைந்தன.

முன்னோடி முயற்சிகள்

தமிழ்நாட்டில் கிறித்தவம் அறிமுகமான 16-ஆம் நூற்றாண்டு தொடங்கி 17-ஆம் ஆண்டு முடிய விவிலிய மொழி பெயர்ப்பு தொடர்பான திட்டமிடல் எதுவும் நிகழாவிடினும் விவிலியத்தின் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளை மொழி பெயர்க்கும் பணியினை கத்தோலிக்கக் குருக்கள் தொடங்கி வைத்தனர்.

கிறித்தவப் புனிதர்களின் வரலாற்றைக் கூறும் ஃபிளாஸ் சாங்ட்ரோம் என்ற ஸ்பானிய மொழிநூல் இலத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. இலத்தீன் மொழியில் இருந்து மூன்றாண்டு கால முயற்சியில் அண்ட்ரிக் அடிகளார் என்ற சேசுசபைத் துறவி இந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். கி.பி.1586-ஆம் ஆண்டில் அவரது இம்மொழிபெயர்ப்பு ‘அடியார் வரலாறு’ என்ற பெயரில் வெளியானது. இந்நூலில் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் இடம் பெற்றுள்ள யேசுவின் மலைப்பொழிவு (செர்மன் ஆஃப் தி மவுண்ட்) தமிழ் வடிவில் முதல்முறையாக இடம் பெற்றுள்ளது. இதுவரை கிடைத்துள்ள சான்றுகளின் அடிப்படையில் தமிழ் விவிலிய மொழி பெயர்ப்பின் முதல் கட்டமாக இம்மொழிபெயர்ப்பு அமைகிறது.

இதனையடுத்து 17-ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க குருக்கள் விவிலியத்தின் சில பகுதிகளை மொழி பெயர்த்துள்ளார்கள். இது வினா விடை வடிவில் அமைந்திருந்தது. ஓலைச் சுவடியில் இதை எழுதி யுள்ளார்கள். உரையாடலைக் குறிக்கும் ‘சல்லாபம்’ என்ற வடமொழிச் சொல்லால் இவை குறிக்கப்பட்டன. பிரான்ஸ் நாட்டின் தேசிய நூலகத்தில் ‘சல்லாபம் சுவடிகள்’ பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இச்சுவடி களைப் பார்வையிட்ட, போதகர் முத்துராஜ் சில சுவடிகளில் அவை எழுதப்பட்ட காலம் குறிப்பிடப் பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளார். கி.பி. 1666, 1667, 1677 என அச்சுவடிகளில் ஆண்டு குறிப்பிடப் பட்டுள்ளது. இச்சுவடிகள் அவற்றின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் ‘புதிய ஏற்பாட்டுச் சல்லாபம்’,  ‘உபாகமச் சல்லாபம்’, ‘1, 2 ராஜாக்கள் சல்லாபம்’, என்று பெயரிடப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஆனால் இவை, டி.நோபிலியால் எழுதப்பட்ட ‘நித்திய ஜீவன் சல்லாபம்’ என்ற நூலின் மூலச்சுவடிகளில் இருந்து எடுக்கப்பட்ட நகல்களாக இருக்க வேண்டும் என்று விவிலியமும் தமிழும் (1990) என்ற தமது நூலில்  சரோஜினி பாக்கியமுத்து எழுதியுள்ளார். அத்துடன் போதகர்  முத்துராஜாவைப் பகடி செய்யும் தொனியில் அவரது கருத்தை மறுத்துள்ளார்.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள செயசீல ஸ்டீபனின் நூல் (2017:128) போதகர் முத்து ராஜாவின் கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் சில உண்மைகளை முன்வைக்கிறது.

கி.பி.1739, 1750-ஆம் ஆண்டுகளில் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்ட தமிழ் விவிலிய மொழி பெயர்ப்புகள், புதுச்சேரியில் இருந்து பிரான்சுக்கு கப்பல்கள் வாயிலாகச் சென்றதாகக் குறிப்பிடுகிறார். இம்மொழிபெயர்ப்புகள் இலத்தீன் மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டன. ஓலைச்சுவடியில் தமிழ் விவிலியத்தை எழுதுவதற்காக எழுத்தர்களை நியமித் திருந்தனர். இச்சுவடிகளின் தலைப்புகள் பின்வருமாறு உள்ளன.

·               கத்தோலிக்கரின் புதிய ஏற்பாட்டுச் சல்லாபம்

·               பழைய ஏற்பாட்டுச் சல்லாபம்

·               ராஜாக்களின் சல்லாபம்

இச்சுவடிகளில் உள்ள, கிரேக்க ஹீப்ருமொழிச் சொற்கள் தமிழில் மொழி பெயர்க்கப்படாமல் எழுத்துப் பெயர்ப்புகளாகவே இடம் பெற்றுள்ளன. ஆமென், அல்லேலுயா பாஸ்கா, ஓசன்னா என்ற சொற்கள் எழுத்துப் பெயர்ப்புகளாகவே உள்ளன.

அத்துடன் பேச்சுத்தமிழில் இடம்பெறும் ஜீவன், விசுவாசம், ரட்சிப்பு, ராப்போசனம், மாமிசம், பிதா, புத்திரன், காரியம், விசேஷம், ஜலம், சத்ரு, அபிஷேகம், ஆராதனை, ஜெபம் ஆகிய வடமொழிச் சொற்கள் பரவலாக இடம் பெற்றுள்ளன.

ஆட்பெயர்கள் சில, மாற்றம் பெற்றுள்ளன. பீட்டர் ராயப்பராகவும், ஜான் அருளப்பராகவும், பவுல் சின்னப்பராகவும் ஆண்ட்ரு பிலவேந்திரர் ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இம் மொழிபெயர்ப்புகள் ஞாயிறு வழிபாட்டில் படிக்கப்பட்டன. ஓலைச்சுவடியில் எழுதிப் பழக்கமில்லாததால் கத்தோலிக்க மறைப்பணியாளர்கள் அய்ரோப்பாவில் இருந்து காகிதம் வரவழைத்து அதில் எழுதினார்கள். அதைப் பார்த்து ஓலைச்சுவடியில் படி எடுக்க எழுத்தர்களை நியமித்தனர். இவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது.

பிரான்சில் உள்ள ஒரு காகிதப்படியின் இறுதியில் ‘வைகாசி எட்டாம் நாள் அர்ச்சிஷ்ட விவிலிய புஸ்தகம் எழுதி முடிந்தது’ என்றுள்ளது (22 மே 1702 ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது). இக்காகிதப் படியை எழுதியவர் பெயர் ஞானப்பிரகாசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கையெழுத்துப் படியானது  புதுச்சேரியில் இருந்து கான்ஸ்டாண்டின் நோபிள் வழியாக பிரான்சை அடைந்துள்ளது.

இவ்வாறு பகுதி பகுதியாகத் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட விவிலியத்தின் புதிய ஏற்பாடு நூல் வடிவில் 1714-ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் அச்சிடப்பட்டு வெளியானது. இந்தியாவிலேயே முதல்முறையாகத் தமிழில்தான் விவிலியம் அச்சிடப் பட்டது என்ற பெருமையைத் தமிழுக்கு வழங்கியவர் சீகன் பால்க் என்ற ஜெர்மானிய மதகுரு ஆவார்.

D 450சீகன்பால்க்

இன்றைய நாகப்பட்டிணம் மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி என்ற கடற்கரையூர் கி.பி.1620-ஆம் ஆண்டில் டேனிசியர்களால் குத்தகைக்கு எடுக்கப் பட்டிருந்தது. டேனிஷ் மன்னனான நான்காம் பிரடரிக் என்பவனின் விருப்பத்திற்கிணங்க இங்கு கிறித்தவப் பரப்புதலை மேற்கொள்ள ஜெர்மானிய நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட சீர்திருத்தக் கிறித்தவ சபைக் குருவே பரதாமஸ் சீகன்பால்க்.

9 ஜுலை 1706-ஆம் ஆண்டில் இங்கு வந்து சேர்ந்த இவர் மணலில் எழுதிப் பழகி, ஓலைச்சுவடிகளின் துணையுடன் தமிழ் கற்றறிந்தார். சீர்திருத்தக் கிறித்தவ சபையில் சேர்ந்த தமிழகக் கிறித்தவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் விவிலியத்தை கிரேக்க மொழியில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். குருண்டலர் என்ற செர்மானிய மதகுருவும் இப்பணியில் துணைநின்றார்.

இப்பணியின் முதற் கட்டமாக  கி.பி.1715இல் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் இருந்து சில பகுதிகளைத் தமிழில் மொழி பெயர்த்தார். யேசுவின் நேரடிச் சீடர்களான மாற்கு, மத்தேயூ லூக்கா, யோவான் என்ற நால்வரும் எழுதியவை புதிய ஏற்பாட்டில் இடம் பெற்றுள்ளன. இவை தனித்தனி நூல்களாகும். இந்நான்கு நூல்களையும், ‘காஸ்பல்’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். இதை ‘சுவிஷேஷம்’ என்று முன்னர் வடமொழியில் அழைத்தனர். தற்போது ‘நற்செய்தி ஏடு’ என்ற நல்ல தமிழ்ப் பெயரால் கத்தோலிக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நான்கு நூல்களுடன், புதிய ஏற்பாடு பகுதியில் உள்ள ‘அப்போஸ்தலர் நடபடிகள்’ என்ற நூலையும் சீகன்பால்க் தமிழில் மொழி பெயர்த்தார். இந்த அய்ந்து நூல்களின் தொகுப்புக்கு ‘அஞ்சுவேதப் பொத்தகம்’ என்று அவர் தலைப்பிட்டிருந்தார். இத்தலைப்பை அவர் இட்டதற்கு வரலாற்றுப் பின்னணியன்று உண்டு.

17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரையில் வாழ்ந்த இத்தாலிய நாட்டு சேசுசபைத் துறவி டி.நொபிலி, தமிழ்நாட்டில் வேதத்திற்கு இருந்த மரியாதையைப் புரிந்து கொண்டார். இதன் அடிப் படையில் நான்கு வேதங்கள் மட்டுமின்றி அய்ந்தாவதாக ஏசுரவேதம் என்ற ஒன்று உண்டு என்றும் தான் அதைக் கற்றறிந்த ரோமாபுரிப் பிராமணண் என்றும் வெளிப் படுத்திக் கொண்டார். அதை நிறுவும் முகமாக மார்பில் முப்புரிநூல் அணிந்து கொண்டார். அது பிதா சுதன் பரிசுத்த ஆவி என்பனவற்றின் குறியீடு என்றும் விளக்கமளித்தார்.

இவ்வாறாக வேதம் என்ற அடையாளம் விவிலியத்துக்கு டி. நொபிலியால் இடப்பட்டது. இதன் வளர்ச்சியாகவே கிறித்தவர்கள் வேதக்காரர்கள் என்ற அடையாளத்தைப் பெற்றார்கள். அவர்கள் சென்று வழிபடும் தேவாலயம் வேதக்கோவில் என்ற பெயரால் சுட்டப்பட்டு இன்றுவரை அது தொடர்கிறது.

சீகன்பால்குவின் சமகாலத்தவரான வீரமாமுனிவர் விவிலிய மொழிபெயர்ப்பை மையமாகக் கொண்டு சீர்திருத்தக் கிறித்தவர்களுடன் வாதிட எழுதிய நூலுக்கு ‘வேதவிளக்கம்’ என்றே பெயரிட்டார்.

இச்சூழலில்தான் சீகன்பால்க் தமது விவிலிய மொழிபெயர்ப்புக்கு அஞ்சுவேதப் பொத்தகம் எனத் தலைப்பிட்டார். வேதம் என்பது அடித்தள மக்கள் கேட்கவும் பயிலவும் தடைசெய்யப்பட்டிருந்த சமூக அமைப்பில் தமக்கென ஒரு வேதத்தை மத மாற்றத்தின் வாயிலாக அடித்தள மக்கள் பெற்றனர். அஞ்சுவேதப் புத்தகம் 500 படிகள் அச்சிடப்பட்டது. தாம் மொழி பெயர்த்து அச்சிட்ட அஞ்சுவேதப் புத்தகத்திற்கு:

சுதனாகிய சர்வேஸ்வரனாய் இருக்கிற யேசு கிறிஸ்து நாதரானவர் இந்த பூலோகத்தில் மனுசனாய்ப் பிறந்த விசேஷங்களையும் போதிச்சு விச்ச உபதேசங் களையும் செய்த அற்புதங்களையும் மனுசருக்கு வேண்டிப் பாடுபட்டு எல்லாரையும் ரட்சித்து வித்தவங்களையும் உயிரோடே எழுந்தருளவித்து பரலோகத்திலே மகிமையாக அவருடைய சீஷர் களாகிய அப்போஸ்தலமார்கள் லோகம் எங்கும் போய் இப்படிக் கொத்த விசேஷங்களை சகல வசனங்களுக்கும் பிரசங்கம் பண்ணினதையும் வெளிப்படுத்திய புது ஏற்பாடினுடைய முதலாம் வகுப்பாகிய அஞ்சுவேத பொஸ்தகம். கிறிஸ்து பிறந்த ஆயிரத்து எழுநூத்து பதினாலாம் வருஷமாகிற போது தரங்கம்பாடியிலே இருக்கிற பாதிரிமார் களுடைய அச்சிலே பதிப்பிக்கப்பட்டது.

என்ற தலைப்பை  சீகன்பால்க்கும் குருண்டலரும் இட்டுள்ளார். இந்நூல் வெளியான காலத்தில் நான்காம் பிரடரிக் என்ற மன்னன் டென்மார்க் நாட்டை ஆண்டு வந்தான். இம்மொழிபெயர்ப்பு நூலை அவனுக்குக் காணிக்கையாக்கி தமிழிலும், ஜெர்மனிலும் அதை எழுதியுள்ளனர். அப்பகுதி வருமாறு:

மகா மகிமையுள்ளவருமாய், மகாவல்லமையுடைத் தானவருமாய் சகலகிருபை உள்ளவருமாய் இருக்கிற மகாராசவாகிற தென்மார்க்கச் சீமைக்கும் நார்வேயாகிய சீமைக்கும் வெரியுன்னத சீமைக்கும் சுயம் பார்பத்தியம் உடைத்தான ஆண்டவருக்காக ராச்சியபாரம் பண்ணுகிற யெங்களுடைய கிருபை யுள்ள ராசாவாயிருக்கிற பிரடரிக்கு சுவார்ட்ஸ் சென்கிறவருக்குச் சமாதானமும் பாக்கியமும் ராச்சியபாரமும் ஆசிர்வாதமும் தேவநன்மை களுடைய பரிபூரணமும் நித்திய சீவனத்தை யுடைய கிரிடமும் உண்டாகக் கடவதென்று அடியேன்கள் வேண்டிக் கொள்கிறோம்.

ஆள்வோனிடம் இறையடியார்கள் எவ்வளவு தாழ்ச்சியுடன் இருந்துள்ளார்கள் என்பதற்கு இப்பகுதி நல்ல எடுத்துக்காட்டு, ‘திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே’ என்று நாமும் பாடி யுள்ளோமே!

கத்தோலிக்கரின் மதிப்பீடு

ஆனால் கத்தோலிக்கத் துறவியர், இம்மொழிப் பெயர்ப்பை எதிர்மறையாகவே விமர்சித்தனர். வீரமாமுனிவர் தமது வேதவிளக்கம் நூலில் மிகக் கடுமையாக விமர்சித்ததுடன் பகடியும் செய்துள்ளார். 

கத்தோலிக்கக் குருக்கள் தாம் மொழிபெயர்த்த தமிழ் விவிலியப் பகுதிகள் அனைத்துக் கத்தோலிக்கர் களிடமும் அறிமுகம் ஆவதை விரும்பவில்லை. தேர்வு செய்யப்பட்ட பகுதிகளை மட்டுமே வாசிக்க அனுமதித்தனர். தேவாலயத்தில் நிகழ்த்தப்படும் மறையுரைகளில் மட்டுமே அது வாசிக்கப்பட்டது. இதை, சீர்திருத்த கிறித்தவர்கள் குற்றச்சாட்டாகக் கத்தோலிக்க மறைப்பணியாளர்கள் மீது வைத்தனர். இது ஒருவகையான ஏமாற்று வேலை  என்றனர். தமது வேத விளக்கம் என்ற நூலில் இதற்கு வீரமாமுனிவர் பின்வருமாறு பதிலளித்தார்:

எழுதப்பட்ட வேதாகமங்களை அவனவன் தன் மனதின்படியே மறுபாஷையாக திருப்பவும் திருப்பினதை அவனவன் வாசிக்கவும் அதற்கு அர்த்தஞ் சொல்லவும் நல்லதென்று பதிதர்* அபத்தமாய்ச் சொல்கிறார்கள்... வேதாமகங்கள் தேவவாக்கியமாகக் கொள்ள எவருக்கும் உயிர்தரும் அமிர்தமாகும். ஆகிலும் பசுவின்பால் அமிர்தமா யினுஞ் ஜீரண சக்தியற்றவர்களுக்கு அது விஷமல்லோ?

காகிதங்களிலும் ஓலைச்சுவடிகளிலும் எழுதப்பட்டு ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே அறிமுகமாகி இந்த விவிலியம் அச்சிடப்பட்ட புத்தக வடிவில் வெளிப்பட்டு அனைவர் கைக்கும் சென்றது கத்தோலிக்க மறைப்பணியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கும் என்பதில் ஐயமில்லை.

சீகன்பால்கின் சமகாலத்தவரான வீரமாமுனிவர் தமிழ் இலக்கிய இலக்கணங்களில் புலமை மிக்கவராய் இருந்தார். இவரளவுக்கு சீகன்பால்க் தமிழ்ப்புலமைமிக்க வரல்லர்தான். ஆனால் கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற வகையில் மக்களது பேச்சு மொழியில் விவிலிய மொழிப்பெயர்ப்பைச் செய்துள்ளார். தமிழ் இலக்கிய இலக்கணப் புலமை கொண்ட வீரமாமுனிவர் சீகன் பல்குவின் மொழி பெயர்ப்பில் இருந்து சில பகுதிகளை மேற்கோளாகக் காட்டி மொழிபெயர்ப்பின் தரத்தைக் குறை கூறினார். குறிப்பாக மத்தேயூ (4:18, 18:17), லூக்கா (6:14), ரோமர்கள் (9:22) கொரிந்தியர் (7:3, 9:5) பீட்டர் (2:2) தீமத்யூ (3:6) ஹிப்ருக்கள் (13:4) ஆகிய பகுதிகளைச் சுட்டிக்காட்டினர்.

அழகு குன்றிய தமிழில் (பேச்சுத் தமிழில்) விவிலியத்தை மொழிபெயர்த்ததானது ஒளிவீசும் அணிகலனை சேற்றில் புதைப்பதையும், அமுதத்தில் நஞ்சைக் கலப்பதையும் அழகிய ஓவியத்தின் மீது கரியைப் பூசுவதை ஒக்கும் என்றும் குறிப்பிட்டார். அஞ்சுவேதப் புத்தகம் குறித்த எள்ளல் தன்மையுடன் கூடிய அவரது விமர்சனத்தின் ஒரு பகுதி வருமாறு:

ஒரு வரி முடியா முன்னே பார்த்த கண்ணும் வேக, உச்சரித்த நாவுந் துவர்ப்ப, கேட்ட காதுங் கைப்ப, மிகவும் வருந்துதற் காரணமாக, தொடரெழுதி யைந்த வகையும் எழுத்து வழுவி, யெடுத்த நீச்ச சொல்லுங் கீழிறந்த திடறிய சொல்லை கூட்டின வசனமும் யிவையெல்லாம் ஒன்று தளர்ந்து மயங்கி செந்தமிழ் கெடுக்கவும், கேட்டார் காதிரண்டையும் பிளந்து உரித்து கொடுந்தீயூட்டி உச்ச வருந்தனங் கொடியர் நினைத்த மற்றோர் பாஷை அதென்று, பொங்கிய வெகுளியோடு அதை தானெறிந்து வந்ததைக் கொணர்ந்த சிறிய சிந்தாயினை சினந் தடித்ததையென துரத்த மிகவும் வருந்தா நின்றதாம்.

வீரமாமுனிவரின் இக்கடுமையான விமர்சனத்துக்கு அவரது தமிழ்ப்புலமை மட்டுமே காரணமல்ல. அல்லது சமயப்பரப்பலில் தன் போட்டியாளராக சீகன்பால்க் இருந்தார் என்பதும் காரணமல்ல. அவர் சார்ந்திருந்த கத்தோலிக்கத் திருச்சபை விவிலியம் தொடர்பாகக் கொண்டிருந்த அணுகுமுறையே காரணமாகும்.

கிரேக்க, ஹிப்ரூ மொழிகளில் இருந்து இலத்தீன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட விவிலியத்தையே தன் அதிகாரப்பூர்வமான விவிலியமாகக் கத்தோலிக்கத் திருச்சபை கொண்டிருந்தது. அதைப் படித்து விளக்கம் தரும் உரிமையைத் தன்னிடமே வைத்துக் கொண்டது. செர்மானிய மொழியில் விவிலியத்தை மொழி பெயர்த்ததன் விளைவாக மார்டின் லூதர் கத்தோலிக்கத் திருச்சபையின் சீற்றத்துக்கு ஆளானார் என்பது வரலாறு கூறும் செய்தி. சீகன்பால்குவின் செயல் விவிலியத்தை அடித்தள மக்களிடம் கொண்டு சேர்ந்தது. இதுவே வீரமாமுனிவரின் சீற்றத்துக்கு காரணம் எனலாம்.

காஸ்டன் லாரெண்ட் என்ற பிரெஞ்சு சேசுசபைத் துறவி 1741 செப்டம்பர் 20-ஆம் நாள் எழுதிய கடிதம் ஒன்றில் இம்மொழிபெயர்ப்பின், மொழி, நடை அமைப்பு ஆகியன சிறப்பாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளதுடன் ஒரு புனித நூலுக்குப் பெருமை சேர்ப்பதாக அமையவில்லை என்றும் எழுதியுள்ளார்.

பெர்ரி கிலூனி என்ற சேசு சபைத் துறவி தமது ஆண்டு மடலில், இம்மொழிப்பெயர்ப்பில் நயமற்ற தமிழ் இடம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டதுடன் அவர்களது விளக்கவுரைகளையும், தவறுகளையும் விமர்சனம் செய்துள்ளார். அதே நேரத்தில் நூலாக்கத் திற்குப் பயன்படுத்தியுள்ள அச்செழுத்துக்களைப் பாராட்டியுள்ளார்.

bible 1850 450திருத்திய பதிப்பு

சீர்திருத்தக் கிறித்தவ மறைப்பணியாளர்கள் சிலரும் பேச்சு மொழியில் விவிலிய மொழிபெயர்ப்பு அமைந்தது தவறு என்றனர். இவ்விமர்சனங்களை ஏற்று மத்தேயு நற்செய்தி நூலின் திருத்தப்பட்ட பதிப்பு 25 மார்ச் 1739-இல் தரங்கம்பாடி அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியானது. இந்நூலின் தமிழ்த் தலைப்பானது ‘யேசு கிறிஸ்து சுவாமியின் சீசனாகிய அப்போஸ்தலரும் சுவிசேஷிகளுமாயிருந்த அர்ச்சிஷ்டமாத்தி என்பவர் எழுதுவித்த ஆகமம் என்றிருந்தது.

இப்பதிப்பிற்காக சீகன்பால்க்கின் முந்தைய பதிப்பை மட்டுமின்றி கத்தோலிக்கர்கள் பயன்படுத்தி வந்த வேறு இரு விவிலிய மொழி பெயர்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டார். இத்துடன் விவிலிய மொழி பெயர்ப்பு நின்றுவிடவில்லை. இது மேலும் தொடர்ந்தது.

தொடர்ந்த பணி

சீகன்பால்கு அச்சிட்ட அஞ்சுவேதப் புத்தகம் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை உள்ளடக்கியது. இதனையடுத்து விவிலியத்தின் பழைய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடத் திட்டமிட்டார். இதன் பொருட்டு கத்தோலிக்கத்தின் சேசுசபைத் துறவியர் நாகப்பட்டிணத்திலும் சென்னை சாந்தோமிலும் பயன்படுத்தி வந்த பழைய ஏற்பாட்டுச் சுவடிகளை 1711 டிசம்பரில் பெற்று அதைப் படித்தறிந்தார். பின் ஹிப்ரூ மொழியில் இருந்து தாமே மொழி பெயர்க்கலானார். இதன் மொழிநடை பேச்சுவழக்கிலேயே இருந்தது. 1719 பிப்ரவரி 23-இல் இவர் இறக்கும் முன்னர் பழைய ஏற்பாட்டின் பகுதிகள் அச்சுக்கு ஆயத்தமாய் இருந்தன. அவர் இறந்த பின்னர் தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் மிஷன் அச்சகத்தில் 1724-ஆம் ஆண்டில் 400 படிகள் அச்சிடப்பட்டன. இதன் தலைப்பு இலத்தீன் மொழி யிலும், தமிழிலும் அச்சிடப்பட்டிருந்தது. தமிழில் இந்நூலின் தலைப்பு பின்வருமாறு காணப்படுகிறது.

அளவில்லாத ஞானமுள்ளவருமாய் அளவில்லாத கிருபையுள்ளவருமாய் அளவில்லாத தெய்வீக முள்ளவருமாய், இருக்கிற பராபர வஸ்துவானவர். பழைய ஏற்பாட்டினுடைய காலத்திலே திருவுளம் பத்தின வேத பொஸ்தகத்தின் ரெண்டாம் பகுப்பு:

விவிலிய மொழிபெயர்ப்புடன் மட்டுமின்றி விவிலியத்தில் இடம்பெறும் சொற்களுக்கான அகராதி ஒன்று. ‘தேவ அருள்  வேதபுராணம்’ என்ற தலைப்பில் 1731-ஆம் ஆண்டில் கொழும்பு நகரில் வெளியானது. சீகன்பால்குவின் புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பை கி.பி.1772-இல் திருத்தியமைத்து, சென்னை வேப்பேரி அச்சகத்தில் ஆயிரம் படிகள் அச்சடித்து இவர் வெளியிட்டார். இம்மொழிபெயர்ப்பு, ‘நமது கர்த்தரும் இரட்சகருமாகிய யேசு கிறிஸ்துவினால் உன்னத கிருபையின் உடன்படிக்கையாகிய புது ஏற்பாடு’ என்ற தலைப்பில் வெளியானது.

இதிலே அர்ச்சிஸ்ட ரூத் என்கிறவருடைய முதலாம் பொஸ்தகமும் அர்ச்சிஸ்ட் சாமுவேலன்கிறவருடைய முதலாம் பொஸ்தகமும், ரெண்டாம் பொஸ்தகமும், பரவிப் போலென்று சொல்லப் பட்ட  முதலாம் பொஸ்தகமும், ரெண்டாம் பொஸ்தகமும் யெச்சேருவென்கிற வருடைய பொஸ்தகமும், யோபு யென்கிறவருடைய பொஸ்தகமும், தாவீதென்கிறவர் யெழுதிவைத்த ஞானசங்கீதங்களென்கிற பொஸ்தகமும், சால மோன்யென்கிறவர் பேசின வாக்கியங்களுடைய பொஸ்தகமும் யெசக்கியேல் யென்கிற நாமத்தைக் கொண்டிருக்கிற பொஸ்தகமும் உன்னதமான பாட்டினுடைய பொஸ்தகமும் அடங்கியிருக்கிறது. கிறிஸ்து பிறந்து 1724 வருஷமாகிய போது இது தரங்கன்பாடியிலேயிருக்கிற பாதிரிமார்களுடைய அச்சிலே பதிப்பிக்கப்பட்டது.

சீகன்பால்குடன் இணைந்து விவிலியத்தின் பழைய ஏற்பாட்டை மொழி பெயர்த்த ஸ்வார்ட்ஸ் எஞ்சிய பகுதிகளை மொழி பெயர்த்து 1727 அக்டோபர் மூன்றாம் நாளான்று தரங்கம்பாடி அச்சகத்தில் 400 படிகளை அச்சிட்டு வெளியிட்டார். இந்நூலில் சீகன்பால்க் மொழிபெயர்த்த பகுதிகளும் இடம் பெற்றிருந்தன.

சென்னை வேப்பேரி, சிராம்பூர், புதுச்சேரி, கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய ஊர்களில் தமிழ் விவிலியம் அச்சானது. போர்ச்சுக்கீசியரும், டச் நாட்டினரும், மொழி பெயர்ப்பிலும், அச்சாக்கத்திலும் முன்நின்றனர். இவ்வாறு மொழி பெயர்த்தவர்களுள் ஜோனோப் பிலிப் பப்ரிஷியஸ் என்ற சீர்திருத்தக் குரு முக்கியமானவர்.

பணியின் தொடர்ச்சி

கத்தோலிக்க குருக்களால், இலத்தீன் மொழியில் இருந்தும், போர்ச்சுக்கீஸ் மொழியில் இருந்தும், மொழி பெயர்க்கப்பட்ட விவிலியம், சீகன்பால்குவினால் கிரேக்க மொழியில் இருந்தும் ஹீப்ரு மொழியில் இருந்தும் மொழி  பெயர்க்கப்பட்டது. அத்துடன் அச்சுவடிவம் பெற்று அனைவருக்கும் கிடைத்தது. இது தமிழ் அறிவுத்துறையில ஏற்பட்ட பெரும் மாறுதலாகும்.

சீகன்பால்குவின் விவிலிய மொழி பெயர்ப்பும் அச்சாக்கமும் தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு புதிய தொடக்கமாக அமைந்தது. அத்துடன் ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே புழங்கிய ஓலைச் சுவடி களுக்கு மாற்றாக அச்சுப் புத்தகப் பண்பாட்டை அறிமுகம் செய்தது. இதன் வளர்ச்சி நிலையாக தொடக்கக் கல்விக்கான பாட நூல்கள் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்டன.

இவ்வாறு 16-ஆம் நூற்றாண்டில் அண்ட்ரிக் அடிகளார் என்ற போர்ச்சுக்கீசியக் கத்தோலிக்கத் துறவி தொடங்கி வைத்த விவிலிய மொழி பெயர்ப்பானது 18-ஆம் நூற்றாண்டில் சீர்திருத்தக் கிறித்தவ சபையின் சீகன்பால்க், குருண்டலர் பெப்ரிஷியஸ் ஆகியோரால் அச்சு வடிவம் பெற்றது.

தமிழ்நாட்டின் தொடக்கக்காலக் காலனியவாதி களான போர்ச்சுக்கீசியர், டச் நாட்டினர், டேனிஷியர் ஆகியோரை அடுத்து வந்த பிரெஞ்சு, ஆங்கிலக் காலனிய வாதிகள் 19-ஆம் நூற்றாண்டில் விவிலிய மொழி பெயர்ப்பையும், அச்சாக்கத்தையும் தொடர்ந்தனர்.

நூல் பிரதி கிடைக்குமிடம்:

Louis Savinien Dupuis Research Centre

IMMACULATE GENERALATE

19, St. Therese Street,

Pondicherry – 605001

(தொடரும்)

Pin It

மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகிய இருவருக்கும் இடையில் ஓர் அற்புதமான வேலைப் பிரிவினை நிலவியது. பொதுவான பல வேலைகளை அவர்கள் இணைந்து செய்தது போக, அவர்கள் தனித்தனியாகவும் பல வேலைகளைச் செய்து முடித்தனர். மார்க்சைப் பொறுத்தமட்டில், அவரது கவனம் பெருமளவில் மார்க்சியக் கோட்பாட்டு உருவாக்கத்திலும் அடுத்த கட்டத்தில் “மூலதனம்” நூலிலும் குவிந்திருந்தது. வரலாறு குறித்த பொருள் முதல்வாதப் புரிதலும், உபரிமதிப்பு குறித்த அரசியல் பொருளாதாரக் கோட்பாடும் மார்க்சின் இரண்டு மேதமை கொண்ட கண்டுபிடிப்புகள் என்று ஏங்கெல்ஸ் எடுத்துக்காட்டுவார்.

வரலாறு குறித்த பொருள்முதல்வாதப் புரிதல் மார்க்சின் காத்திரமான தத்துவ உழைப்பை அடிப் படையாகக் கொண்டது. “கம்யூனிஸ்ட் அறிக்கை” வெளிவந்த 1848 ஆம் ஆண்டிற்கு முன்னதும் பின்னது மான ஆண்டுகளில் மார்க்ஸ்  இந்தத் தத்துவப் பணியைச் செய்து முடித்தார். மார்க்சின் வாழ்க்கைக் காலத்தில் நடுப்பகுதியிலிருந்து இறுதிக் காலம் வரையிலான அவரது உழைப்பு சமகாலச் சமுதாயமான முதலாளித் துவம், அதன் பொருளாதார உற்பத்தி முறை ஆகியவை தொடர்பானது. அவைதாம் உபரி மதிப்பு குறித்த கோட்பாட்டின் எல்லைகளையும் குறித்தன. மார்க்சின் வாழ்க்கை முழுவதையும் மேற்குறித்த இரண்டு கண்டுபிடிப்புகளும் அவற்றுக்கான உழைப்பும் ஆக்கிரமித்திருந்தன என ஒரு வசதிக்காகச் சொல்லலாம்.

ஏங்கல்சைப் பொறுத்தமட்டில், அவர் மார்க்சின் இணைபிரியாத நண்பர். மார்க்ஸ் என்ன செய்து கொண்டிருந்தார், அவருக்கு என்ன தேவைகள் இருந்தன, வேலைகளுக்கு நடுவில் இட்டு நிரப்ப வேண்டிய இடைவெளிகள் யாவை என்பவற்றை அவர் நன்கு அறிந்திருந்தார். மார்க்சை ஏங்கெல்ஸ் எப்போதுமே அணைத்து நின்றார். மார்க்ஸ் என்ற இளம் தத்துவ அறிஞரில் முதலாளியப் பொருளாதாரம் குறித்த ஆர்வங்களை ஏற்படுத்தியவர் ஏங்கெல்ஸ் என்று ஒரு சித்தரிப்பு உண்டு. வரலாற்றுப் பொருள்முதல்வாதப் புரிதலை உருவாக்கிக் கொள்ள மார்க்ஸ் போராடிக் கொண்டிருந்த காலங்களில், 1843 ல் “அரசியல் பொருளாதார விமர்சனம் குறித்த பொது வரையறைகள்” என்று ஒரு கட்டுரையை ஏங்கெல்ஸ் எழுதினார். இன்னும் சில ஆண்டுகளில், 1845 ல் ஏங்கெல்ஸ் “இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைச் சூழல்கள்” என்றொரு நூலை எழுதி வெளியிட்டார். இந்த இரண்டு படைப்புகளும் அவை சார்ந்த கலந்துரையாடல்களுமே மார்க்சிடம் அரசியல் பொருளாதார ஆர்வங்களை ஏற்படுத்தின என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது மார்க்ஸ் ஏங்கெல்ஸ் உறவுகளில் ஒரு பரிமாணம். இதுபோலப் பல வேளைகளில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அறிவுப்புல வட்டாரங்களில் புதிய ஆர்வங்களை ஏற்படுத்திக் கொண்டனர். நூல்களைச், செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர். 

russ 6001848 ஐ ஒட்டிய ஆண்டுகள் மார்க்ஸ் ஏங்கெல்சுக்கு மிக நெருக்கடியான ஆண்டுகள். ஹெகல், ஃபியவர்பாக் ஆகியோரின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு புதிய சிந்தனை அவர்களிடத்தில் உருவான ஆண்டுகள் அவை. இளம் ஹெகலியர் போன்ற அமைப்புகளில் இணைந்து வேலை செய்த நண்பர்களையும் தோழர்களையும் மார்க்சும் ஏங்கெல்சும் கடந்து நடந்த காலங்கள் அவை. புதிய நிலைகளை எட்டியபோது பலருடன் அவர்களுக்கு மோதல்கள் ஏற்பட்டதுண்டு. மார்க்ஸ் ஆக்ரோஷத்துடன் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுவார் என்ற தகவலை அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். புதிதாக உருவான “மார்க்சிய”த்தை மார்க்சின் நண்பர்களே அங்கீகரித்து விடவில்லை.

“மார்க்சியம்” ஓரளவு அங்கீகரிக்கப்பட்டு பரவிய நாட்களில், முதலாம் கம்யூனிஸ்ட் அகிலம் உருவான போது, அதனுள் நிகழ்ந்த கருத்துப் போராட்டங்களும் காத்திரமானவை. இத்தகைய சூழல்களில்தான் ஏங்கெல்ஸ் என்ற மார்க்சின் நண்பரின் மற்றுமொரு பரிமாணம் வெளிப்பட்டது. புரூனோ பௌவர், டூரிங்க், ப்ரௌதன், மாக்ஸ் ஸ்டனர், மிகயில் பகூனின் போன்ற பலருடன் மார்க்ஸ் ஏங்கெல்சுக்கு கருத்து வேறுபாடுகள் திரண்டன. அது உக்கிரமான ஒரு விவாதச் சூழல், உரையாடற் சூழல், மோதல் சூழல். மார்க்சை அத்தகைய சூழல்களில் வியூகம் கட்டிப் பாதுகாப்பது போன்ற ஒரு பணியை ஏங்கெல்ஸ் செய்துவந்தார். ஏங்கெல்ஸ் ராணுவ உத்திகள் தெரிந்தவர். எனவே போராட்ட வியூகங்கள் வகுப்பதிலும் அவர் திறன் கொண்டவராக இருந்தார். இது அவரது இரண்டாவது முக்கியமான பரிமாணம் என்று கொள்ள வேண்டும்.

1848-50களில் ஜெர்மனியிலும் இன்னும் சில ஐரோப்பிய நாடுகளிலும் ஒரு தொழிலாளர் எழுச்சியை மார்க்சும் ஏங்கெல்சும் எதிர்நோக்கினர். ஐரோப்பியத் தொழிலாளர் எழுச்சி திரளும்போது, பூர்ஷ்வா வர்க்கம் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும்? பூர்ஷ்வா வர்க்கம் ஐரோப்பிய நாடுகளின் நில உடமை வர்க்கத்தோடு எத்தகைய உறவினைக் கொண்டிருக்கும்? பூர்ஷ்வா வர்க்கம் மாற்றங்களை விரும்பும் ஒரு வர்க்கம் என்ற முறையில் பழமைவாத நில உடமைச் சக்திகளைப் புறந்தள்ளும் என்றும் மார்க்ஸ் எதிர்பார்த்தார். ஆயின் 1848-50 ஆம் ஆண்டுகள் மார்க்சுக்கு அதிர்ச்சிகளை ஏற்படுத்தின. ஜெர்மனியிலும் பிரான்சிலும் பூர்ஷ்வா வர்க்கம் நில உடமையாளர்களோடு உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டது. இரண்டு ஆளும் வர்க்கங்களும் சேர்ந்து விவசாயிகளையும் தம்பக்கம் சேர்த்துக் கொண்டன. தொழிலாளர் வர்க்கம் தனிமைப்பட்டது, எழுச்சிகள் தோற்கடிக்கப்பட்டன. 

நவீன பூர்ஷ்வா வர்க்கத்தின் வரலாற்றுரீதியான முற்போக்குப் பாத்திரம் மிகக் குறைந்த ஓர் எல்லைக்குட் பட்டது என்பதை மார்க்சும் ஏங்கெல்சும் உணர்ந்து கொண்ட சந்தர்ப்பம் என அதனைக் கொள்ள வேண்டும். மார்க்சும் ஏங்கெல்சும் விவசாயிகளைப் பற்றிய தமது சிந்தனைகளை விரிவுபடுத்த முடிவு செய்தனர். மார்க்ஸ், சமகால உடனடி அரசியலில் ஆளும் வர்க்கங்களின் சூதாட்டங்களைப் பற்றிக் கோபத்தோடு எழுதினார்.

நகர்ப்புற தொழிலாளர் வர்க்கம் மற்றொரு பிரதான உழைக்கும் வர்க்கமான விவசாயிகளோடு நிரந்தரமான சமூக அரசியல் கூட்டணியை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு மார்க்ஸ் வந்து சேர்ந்தார். மற்றொரு புறம், ஏங்கெல்ஸ், ஜெர்மானிய வரலாற்றில் விவசாயிகளின் பாத்திரம் பற்றிய ஆய்வுகளில் அக்கறை காட்டினார். வரலாறு முழுவதிலும் விவசாயிகள் நில உடமைக்கு எதிரான கலகங்களிலும் எழுச்சிகளிலும் ரகசிய சங்கங்களை உருவாக்குவதிலும் ஈடுபட்டு வந்திருப்பதை அவரால் இப்போது காணமுடிந்தது. நில உடமையை ஆதரித்து நின்ற அரசாங்கத்தையும் கத்தோலிக்க கிறித்தவ சமயத்தையும் விவசாயிகள் விட்டு வைக்கவில்லை. ஆயுதமேந்திய  போராட்டங்களையும் அவர்கள் முன்னெடுத்தனர். விவசாயிகளின் எழுச்சிகள்தாம் வரலாற்றின் மிகப்பெரும் நிறுவனமான கிறித்தவ சமயத்தை இரண்டாகப் பிளந்தன.

கத்தோலிக்கம், சீர்திருத்தக் கிறித்தவம் என்ற இரண்டு சமயங்கள் உருவாயின. இது குறித்த ஆய்வுகளைக் கொண்டுதான் ஏங்கெல்ஸ் “ஜெர்மனியில் விவசாயிகளின் போர்” என்ற நூலை எழுதி வெளியிட்டார். ஒரு முக்கியமான அரசியல் வேலைத்திட்டத்தைத் தன்னுள் கொண்டுள்ள நூல் அது. விவசாயிகளால் முடியுமா? என்ற கேள்விக்கு இந்நூல் பதில் சொல்லியது. இந்நூல் உருவாக்கம் ஏங்கெல்சின் மூன்றாவது பரிமாணத்தைக் குறித்து நிற்கிறது. முக்கியமான சந்தர்ப்பங்களில் இதுபோன்ற நூல்களை ஏங்கெல்ஸ் எழுதி வழங்கினார் என்பதைக் கவனத்தில் கொள்ளுவோம்.

மார்க்ஸ், “மூலதனம்” நூலின் உருவாக்கத்தில் இயங்கியல் தத்துவத்தின் முழு ஆற்றலையும் பயன் படுத்தியிருந்தார். இயங்கியலைப் பற்றித் தனியாகவே ஒரு நூலை எழுத அவர் நினைத்திருந்தார். ஆயின் அவரது முடிவுறா வேலைகளுக்கு இடையில் அது சாத்தியப் படவில்லை. இத்தகைய சூழல்களில் ஏங்கெல்ஸ் இயங்கியல் பற்றிய தகவல்களைத் திரட்டத் தொடங்கினார். குறிப்பாக, நவீன விஞ்ஞானங்கள் இயங்கியல் குறித்து வழங்கும் ஆதாரங்களில் அவர் கவனம் செலுத்தினார். “இயற்கையின் இயங்கியல்” என்ற தலைப்பில் இன்று கிடைக்கும் நூல் அத்தகைய முயற்சியில் உருவான நூலே. அது முழு வடிவம் பெறாமல் பல இடங்களில் குறிப்புகளாகவே உள்ளது. மார்க்சியத்திற்கு விஞ்ஞானங்களின் ஆதரவை இந்நூல் கோரிநின்றது. இந்நூலின் உருவாக்க முயற்சி ஏங்கெல்சின் நான்காவது பரிமாணத்தைக் குறித்து நிற்கிறது எனலாம்.

இந்நூலுக்கு “இயற்கையின் இயங்கியல்” எனத் தலைப்பிட்டிருப்பது பொருத்தம் தானா? என்ற கேள்வியில் நியாயம் உண்டு. இந்நூலுக்கு, “இயற்கை விஞ்ஞானங்களின் இயங்கியல்” என்ற தலைப்பிட்டிருக் கலாம். ஏனெனில் மொத்த இயற்கையின் இயங்கியலை இந்நூல் பேசிவிடவில்லை, மாறாக, நவீன விஞ்ஞானங்கள் வழங்கும் தகவல்கள், வகைப்படுத்தல்கள், விஞ்ஞானக் கோட்பாடுகள் முதலானவற்றில், விஞ்ஞானிகள் தம்மை அறியாமலேயே வெளிப்படுத்தும் இயங்கியல் உண்மை களை ஏங்கெல்ஸ் இந்நூலில் பதிவு செய்துள்ளார். விஞ்ஞான அறிஞர்கள் தன்னிச்சையாகப் பயன்படுத்தும் இயங்கியல் முறைமைகளை ஏங்கெல்ஸ் எடுத்துக்காட்டு கிறார்.

மார்க்சின் மறைவுக்குப் பிறகு, “மூலதனம்” நூலின் பிற்பகுதி எழுத்துக்களைப் பதிப்பித்து வெளியிடும் ஏங்கெல்சின் மீதொரு மிகப்பெரிய பரிமாணத்தைச் சந்திக்கிறோம். மார்க்சின் வாழ்நாள் முழுவதும் அவருக்குப் பொருளாதார உதவிகள் செய்து, அவருடன் நின்ற ஏங்கெல்ஸ் பற்றிய தகவல்களையும் இங்கு மற்றுமொரு பரிமாணமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மார்க்சை எப்போதுமே அணைந்து நின்று ஏங்கெல்ஸ் மேலெடுத்துச் செய்துவந்த மேற்குறித்த வேலைகளின் தொடர்ச்சியாகத்தான் “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற இந்நூலையும் காண வேண்டும்.

அமெரிக்க மானுடவியல் அறிஞரான மோர்கனின் “பண்டைய சமூகம்” என்ற நூலைப் (1877) படித்து மார்க்ஸ் எழுதி வைத்திருந்த குறிப்புகள் இப்போது “இனவியல் நோட்டுப் புத்தகங்கள்” என்ற தலைப்பில் நமக்குக் கிடைக்கின்றன. மோர்கனின் நூலின் முக்கியத்துவத்தை உணர்ந்து மார்க்சும் ஏங்கெல்சும் அது குறித்து எழுதவேண்டும் என ஏற்கனவே திட்ட மிட்டிருந்தனர் என்பதை உணரமுடிகிறது. ஆயின் மார்க்சின் பிற பணிகளும் பின்னர் அவரது மரணமும் அத்தகைய ஒரு நூலை வரவிடாமல் ஆக்கி விட்டன. எனவே அப்பணியைத் தான் ஒருவரேயாயினும் செய்துமுடிக்க வேண்டும் என்ற முனைப்பிலேயே ஏங்கெல்ஸ் அதனை மார்க்சின் மறைவுக்குப் பின் செய்து முடித்துள்ளார். மார்க்ஸ் தனது கையெழுத்துப் பிரதிகளில் எழுதி வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டே ஏங்கெல்ஸ் இந்நூலை உருவாக்கியுள்ளார் என்பதையும் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

ஏங்கெல்ஸ் எந்தத் தயக்கமும் இன்றி, மார்க்சிய சிந்தனை உருவாக்கத்தில் மார்க்ஸ் வகிக்கும் இடம் குறித்துத் தெளிவாகச் சொல்லுகிறார்: மார்க்ஸ் ஒரு மேதை, நாங்கள் திறமைசாலிகள். நாங்கள் இல்லாமலே கூட நாங்கள் செய்துள்ளவற்றை மார்க்சால் செய்திருக்க முடியும்; ஆயின் அவரின்றி எங்களில் எவரும் அவர் செய்துள்ளவற்றைச் செய்திருக்க முடியாது, என்று அவர் குறிப்பிடுகிறார்.

மார்க்சைப் பற்றி ஏங்கெல்ஸ் நட்புணர்வுடனும் உண்மையுடனும் கூறியுள்ளவற்றை ஏங்கெல்சுக்கு எதிராகவே பயன்படுத்துபவர்கள் இருக்கின்றனர். மார்க்சிய உருவாக்கத்தில் ஏங்கெல்சின் பங்களிப்பைப் பின்னுக்குத் தள்ளி அவர் மீது குற்றச்சாட்டுகளை அவர்கள் சுமத்துகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கு வரிசைப்படுத்துவோம்.

மார்க்சியத்தில் பொருளாதார நிர்ணயவாதம் உருவாவதற்குக் காரணமாக அமைந்தவர் ஏங்கெல்ஸ். பொதுவாகவே மார்க்சியத்தைச் சில சூத்திரங்களாகச் சுருக்கிக் காட்டியவர் அவர். ஏங்கெல்சின் எழுத்துக்களில் மார்க்சியம் அதன் படைப்புத்தன்மையை இழந்து வாய்ப்பாடாக மாறிவிட்டது. சமூக வாழ்க்கைக்குச் சொந்தமான இயங்கியலை ஏங்கெல்ஸ் இயற்கைக்குச் சொந்தமானதாகச் சித்தரித்தார். மனிதப்பங்கேற்பின்றி இயங்கியல் கிடையாது. ஏங்கெல்ஸ் ஒரு புறவயவாதி. ஏங்கெல்ஸ் ஒரு விஞ்ஞானவாதி. மார்க்ஸ் மனித நேயவாதி. கிட்டத்தட்ட சோவியத் அறிஞர்கள் “எளிமைப்படுத்தி” வழங்கிய ஸ்டாலினிய மார்க்சியத் திற்கு முன்மாதிரியாக ஏங்கெல்சின் மார்க்சியம் அமைந்தது. இவையெல்லாம் ஏங்கெல்சின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள்.

ஏங்கெல்ஸ் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை மீறி நிற்கும் நூல் “குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகிய வற்றின் தோற்றம்” எனும் இந்நூல். இந்த நூலின் மிகப் பெரிய சிறப்பு, இது மார்க்ஸ் தனது முழுக்கவனத்தையும் செலுத்திய நவீன முதலாளிய யுகத்திற்கு முந்திய (றிக்ஷீமீ-சிணீஜீவீtணீறீவீst) மிக நீண்ட வரலாற்றுக் காலக்கட்டத்தைப் பரவி நிற்கிறது. ஏடறியா வரலாற்றுக் காலம் என அழைக்கப்படும் புராதன சமூக அமைப்பில் தொடங்கி சில அபூர்வமான தொடர்ச்சிகளின் காரணமாக மத்திய காலத்தின் பிற்பகுதி வரை நீடிக்கும் வரலாற்றுக் காலத்தை ஏங்கெல்சின் நூல் தழுவி நிற்கிறது. முதலாளியத்திற்கு முந்திய யுகம் பற்றிய இந்நூலின்றி உண்மையில் இன்றைய மார்க்சியத்தை முழுவடிவில் உருவகிப்பதே சாத்தியமில்லாத ஒன்றாகும். பண்டைய வரலாறு சார்ந்த ஒரு மிகப்பெரிய இடைவெளியை இட்டு நிரப்பும் நூலாக இது அமைந்துள்ளது.

மோர்கன் எனப்படும் மானுடவியல் அறிஞரின் நூலில் தரப்பட்டுள்ள புராதன குடும்பம், ஆண்-பெண் பாலியல் உறவுகள், அரசு நிறுவனம் ஆகியன குறித்து கள ஆய்வுகளின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தகவல்கள், விளக்கங்கள் ஆகியவற்றை மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதப் புரிதல் அடிப்படையில் மறு வாசிப்பு செய்து எழுதப்பட்ட நூல் இது. பலவகை மண உறவுகள், குலம், குடும்பம் சார்ந்த ரத்த உறவுகள், தாய்வழிச் சமுதாயம், அது உடைந்து சிதறுதல், தனிச் சொத்துரிமையின் தோற்றம், குலம் சார்ந்த தன்னாட்சி முறை, வர்க்கங்களின் தோற்றமும் மோதல்களும், அரசு எனும் அடக்குமுறை எந்திரத்தின் தோற்றம் எனப் பலவகையான பழம் வரலாற்று நிகழ்வுகளை இந்நூல் விரிவாகப் பேசுகிறது. கிரேக்க, ரோமானிய, ஜெர்மானிய மற்றும் அமெரிக்கச் செவ்விந்தியப் பழங்குடிகளின் வாழ்க்கைத் தரவுகளை இந்நூலில் மோர்கனைப் பின்பற்றி ஏங்கெல்ஸ் எடுத்தாளுகிறார்.

ஏங்கெல்ஸை சில விமர்சகர்கள் பொருளாதார நிர்ணயவாதியாகச் சித்தரிக்கின்றனர் என்று மேலே குறிப்பிட்டோம். இந்நூலில் அப்படிப்பட்ட பொருளாதார நிர்ணயவாதத்தைக் காண முடியாது. மாறாக, 1884 ஆம் ஆண்டு இந்நூலுக்கு ஏங்கெல்ஸ் எழுதிய முன்னுரையில், இரண்டு வகையான உற்பத்தி வடிவங்களைச் சுட்டிக் காட்டுகிறார். அவை பொருளாதார உற்பத்தி, மற்றும் மனித இனம் தன்னைத் தானே உற்பத்தி செய்து கொள்ளுதல். பொருளாதார உற்பத்தி மிகக்குறை வாகவே இருந்த பண்டைக்காலத்தில் குலமரபு உறவுகள் ஆதிக்கம் செலுத்தின, ஆயின் படிப்படியாக உற்பத்தி வளர்ந்த போது, பொருளுற்பத்தி உறவுகள் அவற்றை மீறி வளர்ந்து, குல மரபு உறவுகள் இரண்டாம் நிலைக்குச் செல்லுகின்றன.

இவ்விரண்டு வகையான உறவுகளுக்கும் பொருந்தாநிலை ஏற்பட்டு அவை ஒரு புரட்சிக்கே இட்டுச் சென்றன என ஏங்கெல்ஸ் எழுதுகிறார். ஏங்கெல்ஸின் நூல், குலமரபு உறவுகள் நிலவிய காலத்திய சமூக நிறுவனங்களையும் அவற்றிலிருந்து பொருளுற்பத்தி உறவுகள் மீறி வளர்ந்த காலத்தையும் சித்தரிக்கின்றது. பொருளாதார அமைப்பு இன்னும் வலுப்படாத, வெளிப்படையாகத் தன்னை அறிவித்துக் கொள்ளாத காலத்தின் சமூக உறவுகளை, அச்சமூக உறவுகளின் இயங்கியலை இந்நூல் பேசுகிறது. பண்பாடு, அரசியல், பொருளாதாரம், வரலாறு ஆகிய பல பரிமாணங்களை மிக நுட்பமாக ஏங்கெல்ஸ் இந்நூலில் ஒன்றிணைக்கிறார். இது வேறு எந்த ஒரு மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் நூலிலும் காணக்கிடைக்காத சித்திரம்.                 

வரலாறு என்ற துறையும் மானுடவியல் என்ற தொரு துறையும் இந்நூலில் சங்கமமாகின்றன. வரலாறு, பழங்கால மக்கள் கூட்டங்களின் வாழ்க்கையைப் பேசத் தொடங்கும்போது, அது மானுடவியலுடன் இணைவது தவிர்க்கமுடியாது என்பது உண்மைதான். இருப்பினும், மார்க்சியத்தின் முதலாசிரியர்களில் ஒருவரான ஏங்கெல்சே நேரடியாக இப்பணியை முன்னெடுத்துச் செய்துள்ளார் எனும் போது இந்நூலின் சிறப்பு பலமடங்கு உயர்கிறது.

மானுடவியல் என்ற ஒரு துறை ஐரோப்பாவில் தோற்றம் பெற்ற பல்வேறு சூழல்களுக்கு இடையில், குறிப்பிடத்தக்க அதன் ஒரு பங்களிப்பினைப் பற்றி இங்கு சொல்ல வேண்டும். 18-19 ஆம் நூற்றாண்டுகளின் அறிவு முதல்வாதத்தின் (Rationalism) ஒற்றை நேர்கோட்டுப் போக்கைத் திசைதிருப்பி ஆய்வுலகின் கவனத்தைப் பண்பாட்டு ஆய்வுகளை நோக்கி இட்டு வந்ததில் மானுடவியலுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அறிவு முதல்வாதிகள் முன்வைத்த, அறிவுக்குப் பொருந்தாத பழம் சரக்குகளை புறம் தள்ளுங்கள் என்ற கோஷத்தை மௌனமாக மறுதலித்து நாட்டார் சமயங்கள், சடங்குகள், பழக்க வழக்கங்கள், வாய்மொழி வழக்காறுகள் ஆகிய வற்றைப் பண்பாடு, சமூக உளவியல் மற்றும் பயன்பாடு சார்ந்து விளக்கமளிக்கும் ஒரு துறையாக மானுடவியல் பரிணமித்தது. இந்த வகையில் அறிவுமுதல்வாதத்தின் ஒற்றை நேர்கோட்டுப் போக்கிலிருந்து விலகிய ஒரு செழுமையான அணுகுமுறை மானுடவியலில் காணப் பட்டது. அறிவு முதல்வாதத்தை நெகிழவாக்கும் ஓர் இயங்கியல் மானுடவியலுக்கு அமைந்திருந்தது.  

மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த நம்மைப் பொறுத்தமட்டில், மானுடவியலின் ஆய்வுப்பரப்பு பெருமளவில் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சார்ந்தது என்பது கவனிக்கத்தக்கது. அதாவது, ஐரோப்பிய அறிஞர்களால் அநாகரீக மானவை, வளர்ச்சி அடையாதவை, மூடத்தனமானவை, அழுக்கானவை என்றெல்லாம் புறம்தள்ளப்பட்ட வாழ்க்கைக் கூறுகள் மானுடவியலின் மறுமதிப்பீட்டுக்கு ஆட்படுகின்றன. மானுடவியலும் மார்க்சியமும் சந்தித்துக் கொள்ளும் இவ் அணுகுமுறையை “குடும்பம், தனிச்சொத்து...” நூலில் ஏங்கெல்ஸ் தொடங்கி வைத்தார் என்று கூற வேண்டும். பல ஐரோப்பிய அறிஞர்கள் மார்க்சிய ஆதரவு நிலைப்பாடுகளுடன் மானுடவியல் ஆய்வுகளில் ஈடுபட்டனர். மூன்றாம் உலக நாடுகளின் பல்கலைக்கழகங்களில் மானுடவியல், நாட்டார்வழக்காற்றியல் துறைகள் விருப்புடன் பயிலப்படுகின்றன. பேராசிரியர்கள் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, நா. வானமாமலை, ஆ. சிவசுப்பிர மணியன் போன்றோர் இந்தியச் சூழல்களில் தமது மார்க்சிய நிலைப்பாடுகளுடன் ஊடும் பாவுமாக மானுடவியலின் பயன்பாட்டை உணர்ந்திருந்தனர். இன்றுவரை சமூக மானுடவியல், பண்பாட்டு மானுடவியல், பொருளாதார மானுடவியல், சூழல்சார் மானுடவியல், பெண்ணிய மானுடவியல் போன்ற துறைகள் இவ்வட்டாரத்தில் செழித்து வளர்ந்துள்ளன என்று கூறமுடியும். 

“மூலதனம்” நூலின் கறாரான பொருளாதார அணுகுமுறையைக் கொண்டு, மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதார அரசியலைப் புரிந்து கொள்ளுதல் ஒரு விதமான மார்க்சியம். ஆயின் “குடும்பம், தனிச் சொத்து...” நூலில் பேசப்பட்டுள்ள விடயங்களைக் கொண்டு மூன்றாம் உலக நாடுகளின் கலாச்சார அரசியல், அடையாள அரசியல், மத அரசியல், சாதியம், அரசு எந்திரத்தின் வட்டாரச் செயல்பாடுகள் போன்ற வற்றைப் பயில்வது இன்னொரு வகையான மார்க்சியம். மூன்றாம் உலக அரசியலில் இவை கூட்டாகப் பயணிக்க முடியும்.

ஏங்கெல்சின் நூலிலிருந்து ஒரு மார்க்சியப் பெண்ணியத்தை உருவாக்க முடியும். அது உருவாக்கப் பட்டுள்ளது. வரலாற்றின் முதல் வேலைப்பிரிவினையாக ஆண்-பெண் பிரிவினை அமைந்தபோது, பாலியல் மண உறவுகள் புராதனச் சமூகத்தின் ஒழுங்கமைப்பை நிர்ணயித்த காலங்களில் அவற்றின் மொழியிலேயே ஆணாதிக்கமும் உருவான நிகழ்வை ஏங்கெல்சின் இந்நூலிலிருந்து வருவிக்க முடியும். வேலைப் பிரிவினைகளுக்கும் மண உறவு முறைகளுக்கும் பின்னால் ஆணாதிக்கச் சமூகத்தின் தனிச்சொத்துரிமை நலன்கள் அமைந்திருந்ததையும் ஏங்கெல்ஸ் எழுதுகிறார்.

எனவே ஏங்கெல்சின் இந்நூலை சோசலிசப் பெண்ணியத்தின் முதல் நூலாகக் கொள்ளுவோர்கள் உண்டு. ஏங்கெல்ஸ் குடும்ப அமைப்பின் பல்வேறு வரலாற்று வடிவங்களைப் பெண்-நலன்களின் நோக்கிலிருந்து அணுகியுள்ளார் என்ற கருத்து நிறுவப்பட்டுள்ளது. புராதனக் குடும்பம், நில உடமைக் குடும்பம், பூர்ஷ்வா குடும்பம், உழைப்பாளிக் குடும்பம் எனக் குடும்ப அமைப்புகளை வித்தியாசப் படுத்திப் பார்க்கும் முறையியலை ஏங்கெல்சின் நூல் வழங்குகிறது. உடமைச் சமுதாயம் பெண்ணின் வரலாற்றுத் தோல்வியை நிர்ணயித்தது, பாலியல் உறவுகள் மற்றொரு சமூக ஏற்றத்தாழ்வின் காரணியாக மாறியது என்று ஏங்கெல்ஸ் எழுதுகிறார். இந்திய, தமிழ்ச் சூழல்களில் கம்யூனிஸ்டுகள், கம்யூனிஸ்ட் அறிவாளிகள் குடும்பங்களை அவற்றின் வர்க்கப் பண்புகளைக் கொண்டு பகுத்து ஆய்வு செய்துள்ளார்களா? முதலாளியக் குடும்பம் என்பது இன்னும் கூடுதலாகச் சிக்கல் நிறைந்த ஓர் அமைப்பு. தனி உடமையால், பண உறவுகளால் குடும்பம் சீரழிக்கப்படுவது முதலாளியச் சூழல்களில் உச்சக்கட்டத்தை எட்டுகிறது.      

ஏங்கெல்ஸ் இந்நூலின் முதற் பதிப்புக்கு 1884ல் எழுதிய முன்னுரையையும் நான்காம் பதிப்புக்கு 1891 ல் எழுதிய முன்னுரையையும் மொழிபெயர்ப்பாளர்கள் தமிழ்ப் பதிப்போடு சேர்த்துத் தந்துள்ளார்கள். இம் முன்னுரைகள் சில குறிப்பிடத்தக்க மதிப்பீடுகளைக் கொண்டுள்ளன. மோர்கன் பற்றிய மதிப்பீடு முதன்மை யானது. “நாற்பது ஆண்டுகளுக்கு முன் மார்க்ஸ் கண்டு பிடித்திருந்த வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கருத் தோட்டத்தைத்தான் மார்கன் தன்னுடைய வழியில் அமெரிக்காவில் மறுபடியும் கண்டுபிடித்தார்.” இது மோர்கனின் நூல் குறித்து ஏங்கெல்ஸ் வழக்கும் அற்புத மான, பெருந்தன்மையான மதிப்பீடு. இதே கருத்தை மார்க்சும் கொண்டிருந்தார் என்பதையும் ஏங்கெல்ஸ் உறுதிப்படுத்துகிறார். மோர்கன் பற்றிய மதிப்பீட்டை மார்க்ஸ் “மக்கள் முன்பாக வைத்து, அதன் மூலம் அவற்றின் முக்கியத்துவம் முழுவதையும் தெளிவாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்.”

மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் அறிவுப்புல நேர்மைக்கு இவ்வரிகளெல்லாம் சான்றாக நிற்கின்றன. இன்னும் கூடுதலாக, மோர்கன் பண்டைய உலகின் கூறுகளைக் கொண்டு, தற்கால முதலாளிய சமூகத்தின் அடிப்படையான பண்ட உற்பத்தி முறையை விமர்சனம் செய் துள்ளார் என்பதை எடுத்துக்காட்டுகிறார். “மட்டுமின்றி, கார்ல் மார்க்ஸ் உபயோகப்படுத்தியிருக்கக் கூடிய சொற்களில் சமூகத்தின் எதிர்கால மாற்றத்தைப் பற்றிப் பேசியுள்ளார்.” நேரில் சந்தித்துக் கொள்ளாத ஓர் அறிஞரோடு, அவரது கண்டுபிடிப்புகளுக்காகவும் கருத்துக்களுக்காகவும் மார்க்சும் ஏங்கெல்சும் தோழமை பாராட்டும் பண்பை இங்கு காணுகிறோம்.

Pin It

“சிறுவர்கள் தட்டி விளையாடும் பலகைக் கதவின் ஓசையிலிருந்து, தம்பட்டம் பேரிகை மத்தளம், மிருதங்கம் தபிலா உடுக்கை கைத்தாளம் சேமக்கலம் சல்லரிமணி சலங்கை முதலிய கொட்டும் கருவிகளும், ஊதி விளையாடிய இலைக்குழல்களிலிருந்து, தாரை ஒத்து நாகசுரம் முகவீணை மகடி புல்லாங்குழல் கொம்பு சங்கு முதலிய துளைக் கருவிகளும், பல்லினால் கடித்து கையினால் பிடித்து இழுத்து ஒரு கையினால் மீட்டிப் பிறந்த இனிய நாதத்திலிருந்து, துந்தினாமா கின்னரி தம்புரு அகப்பைக் கின்னரி சுந்தரிவீணை ருத்ரவீணை பேரியாழ் மகரயாழ் முதலிய மீட்டும் தந்தி வாத்தியங்களும் சிறுவர் விளையாட்டி லிருந்தே தோன்றி, படிப்படியாய் விருத்தியாயின வென்று நாம் அறிகிறோம்”. (கருணாமிர்தசாகரம். முதல் புத்தகம். முதல் பாகம். 2009:119)

தமிழிசை வரலாற்றில் ஆபிரகாம் பண்டிதர் (1859-1919) உருவாக்கிய ‘கருணாமிர்தசாகரமும்’, விபுலானந்தர் உருவாக்கிய ‘யாழ்நூலும்’ மயில்கற்கள். கருணாமிர்த சாகரம் 1917இல் வெளிவந்தது. நூல் வெளிவந்த நூற்றாண்டு இது. அந்த நூலை, ஆபிரகாம் பண்டிதர் உருவாக்கிய வரலாற்றை மீள்நினைவுக்குக் கொண்டுவர வேண்டும். அந்த நூலில் பண்டிதர் பேசியுள்ள செய்தி களை நூற்றாண்டு கடந்த வரலாற்றோடு இணைத்துப் பேச வேண்டும். அந்த நூலின் வரலாற்று முக்கியத் துவத்தை பின்வருமாறு தொகுத்துக் கொள்ள இயலும்.

- பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் திராவிட மொழிக்குடும்பம் அடையாளப்படுத்தப்பட்டது. இந்த நூற்றாண்டில்தான் திருக்குறளும் (1812), தொல்காப்பியமும் (1847), சங்க இலக்கியங்களான கலித்தொகை (1887), பத்துப்பாட்டு (1889) ஆகிய வையும் அச்சு வடிவம் பெற்றன. சிலப்பதிகாரமும் (1892) அச்சானது. இதன் மூலம் தமிழ் மொழியின் செவ்வியல் கூறுகள் உலக அளவில் அறியும் சூழல் உருவானது. இப்பின்புலத்தில் தமிழிசை குறித்த தமது ஆய்வை மேற்கொண்டு வந்த பண்டிதர், தமிழர்கள், தமிழ்மொழி, தமிழ் நிலம் ஆகியவை குறித்த ஆய்வையும் மேற்கொண்டார். கருணாமிர்த சாகரம் முதல் பகுதியில் மேற்குறித்த இனம், மொழி, நிலம் ஆகியவற்றின் தொன்மை குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். இசை குறித்த ஆய்விற்கு அடிப்படையாக மேற்குறித்த ஆய்வை நிகழ்த்தியுள்ளார்.

- கருணாமிர்தசாகரத்தின் இரண்டாம் பகுதியில் புழக்கத்தில் இருக்கும் கர்நாடக இசைக்கும் தமிழிசைக்கும் உள்ள உறவு குறித்த ஆய்வை நிகழ்த்தியுள்ளார். சுமார் இரண்டாயிரத்தைநூறு ஆண்டுகளில் தமிழ்க்கலை வரலாற்றில் இசைக் கலையின் பல்வேறு பரிமாணங்களை விரிவாகப் பதிவு செய்கிறார். தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் உள்ள தொடர்புகளை விரிவாகப் பேசுகிறார். இந்தப் பின்புலத்தில் கருநாடக இசை என்று கருதப் படும் மரபு என்பது தமிழிசை மரபுதான் என்ற கருத்தை முன்வைக்கிறார். இதற்கான விரிவான உரையாட லாகவே இரண்டாம் பகுதி அமைந்துள்ளது.

- கர்நாடக இசை மரபு என்பது தமிழிசை மரபுதான் என்ற கருதுகோளை நிலைபெறு கொள்ளச் செய்யும் பணிகளில் ஈடுபடுகிறார். பல்வேறு இசை மாநாடு களை நடத்துகிறார். இந்தியா முழுதும் இருக்கும் இசை அறிஞர்களைப் பங்கேற்க செய்து, அவர்களது கருத்துக்களைப் பதிவு செய்கிறார். தஞ்சையில் நிலையான மன்றம் ஒன்றையும் உருவாக்குகிறார். தனது ஆய்வு வழி கண்டறிந்தவற்றை நடைமுறைப் படுத்தும் பணியை மேற்கொள்கிறார். இவ்வகை யான செயல்கள் குறித்த விரிவான பதிவாக மூன்றாம் பகுதி அமைந்துள்ளது.

-     இறுதிப் பகுதியில் கர்நாடக இசை மரபில் கூறப்படும் 22 அலகுகள் என்பதை ஏற்றுக் கொள்ளாது, 24 அலகுகள் என்று நிறுவுகிறார். இதனை சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசை நுணுக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பேசுகிறார். இதன் மூலம் யாழிசை மரபு குறித்த ஆய்வையும் முன்னெடுக்கிறார். பண்டைத் தமிழ் மரபின் இசை வரலாற்றை இவ்வகையில் புதிதாகக் கட்டமைக்கிறார்.

***

இசையின் பழைமையை உறுதிப்படுத்துவதற்காக, உலகத்தோற்றம் தொடர்பான பல்வேறு தொன்மைக் கதைகளை பண்டிதர் அறிமுகப்படுத்துகிறார். விவிலியத்தில் கூறப்படும் இசைக்கருவிகள் பற்றிய விவரங்களைத் தருகிறார். மோசே முனிவர், தாவீது ராஜா, சாலமோன் ராஜா, பாபிலோன் அரண்மனையில் வாசிக்கப்படும் இசை ஆகிய பல செய்திகளை விவிலியத்திலிருந்து எடுத்துப் பேசுகிறார். இதன் மூலம் இசையின் தொன்மை குறித்துச் சொல்கிறார். தமிழ் பேசும் பகுதிகளில் ஏற்பட்ட கடற்கோள்கள் குறித்து விரிவாகப் பதிவு செய்கிறார். ஜலப்பிரளயம் எனும் சொல்லை கடற்கோள் என்பதற்குப் பயன்படுத்துகிறார். இதன் மூலம் தமிழைப் போற்றிய முதல், இடை, கடைச்சங்கங்கள் கடலில் மூழ்கியதைச் சொல்கிறார். இறையனார் களவியல் உரையில் பேசப்படும் செய்தி களை அடிப்படையாகக் கொண்டு, மேற்குறித்த விவரணங்களைப் பதிவு செய்கிறார். லெமூரியா கண்டம் குறித்த பல்வேறு ஆய்வுகளையும் மேற்கோள் காட்டு கிறார். அழிந்துபோன லெமூரியாவில்தான் தமிழ்மொழி புழக்கத்தில் இருந்ததாகக் கூறுகிறார். இதன் மூலம் தமிழ்மொழியின் தொன்மையைப் பதிவு செய்கிறார்.

சென்னை இராஜதானியின் நிர்வாகக் கையேடு, அபிதான சிந்தாமணி, கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், வின்சுலோ அகராதியில் உள்ள செய்திகள், மோனியர் வில்லியம்ஸ் அவர்களின் தமிழ் - சமசுகிருத அகராதி ஆகியவற்றிலிருந்து விரிவான மேற்கோள்களைத் தருகிறார். ஆங்கிலத்தில் கொடுத்து விட்டு அதன் தமிழ் மொழியாக்கத்தையும் தருகிறார். இச்சான்றுகள் தமிழ்மொழியின் தொன்மையை உறுதிப்படுத்துவதாகக் கருதுகிறார்.

“உலகச் சரித்திரங்கள் எழுதப்படுவதற்கு முன்னும், அழிந்துபோன லெமூரியா கண்டத்திலுள்ளோர் நாகரிகமுடையவர்களாயிருந்திருக்க வேண்டு மென்று சரித்திரக்காரர் சொல்வதற்கிணங்க அக் கண்டத்திலுள்ள தென்மதுரையும், அதில் அரசாண்டு வந்த பாண்டிய ராஜர்களும் சங்கப்புலவர்களும் பேசி வந்த பாஷையாகிய தமிழும், மிகுந்த தொன்மையும் தனிச்சிறப்பும் வாய்ந்தவைகளாயிருந்தன. தமிழ் என்னும் பதத்தின் முதல் இரண்டு எழுத்துக்கள் சேர்ந்த தமி என்னும் முதனிலையானது ஒப்பின்மை, தனிமை என்றும், தமிழ் என்னும் பதமானது, இனிமை, மதுரம் என்றும் அர்த்தப்படுமென்று நாம் அறிவோம்”. (கருணாமிர்தசாகரம். முதல்புத்தகம். முதல்பாகம்:2009:153)

இவ்வகையில் பண்டிதரின் கருணாமிர்தசாகரம் முதல் பகுதியில் உலகத்தில் இசையின் தொன்மை, விவிலியம் கூறும் இசையின் பழைமை, கடற்கோள்களினால் அழிந்து போன தமிழ்ச்சங்கங்கள், தமிழின் பழமை ஆகியவற்றைப் பதிவு செய்கிறார். தொல்பழங்காலத்தில் பேணப்பட்ட இசைமரபு பிற்கால மன்னர்கள் காலத்திலும் போற்றிப் பாதுகாக்கப்பட்டது என்பதை முதல் பாகத்தின் இறுதிப் பகுதியில் பேசுகிறார். பிற்கால சோழர் காலத்தில் உள்ள இசை தொடர்பான கல்வெட்டுக்களை விரிவாக மேற்கோள் காட்டுகிறார். தஞ்சாவூர் பெரியகோவில் கல்வெட்டுகளிலுள்ள இசை, நடனம் தொடர்பான விரிவான விவரணங்களைப் பதிவு செய்துள்ளார். மேலும் தஞ்சையில் “சங்கீத வித்யா மகாஜன சங்கம்” உருவாக்கப் பட்டதற்கான காரணங்களைக் கூறுகிறார். தென்னிந்திய இசை வல்லுநர்கள் சுமார் நாற்பது பேர், இசைமரபை ஆதரித்த அரசர்கள், புரவலர்கள் ஆகியோரின் பட்டியல் களையும் தந்துள்ளார். ஒரு பொருள் குறித்து ஆய்வு செய்யும்போது, அதன் அடிப்படையாக அமையும் வரலாறு அவசியமாகும். அந்த வகையில் கருணாமிர்த சாகரத்தின் முதல் பகுதி அமைந்துள்ளது.

***

கி.பி.பதிமூன்றாம் நூற்றாண்டில் சாரங்கர் என்பவர் எழுதிய ‘சங்கீதரத்னாகரம்’ எனும் நூல், தென்னிந்திய இசைமரபு குறித்து எழுதிய முதல் நூலாகப் பலராலும் கருதப்படுகிறது. இந்நூலில் பேசப்படும் இருபத்திரண்டு சுருதிகள் என்னும் அலகைப் பண்டிதர் ஏற்றுக்கொள்ள வில்லை. எனவே அந்நூலில் சுருதிகள் குறித்துப் பேசப் படும் செய்திகளைப் பற்றிய விரிவான ஆய்வை மேற் கொள்கிறார். அந்நூலை அடியற்றிப் பேசும் அறிஞர் களின் கருத்துக்களையும் ஆய்வு செய்கிறார். ‘விக்டோரிய கீதிகா’ என்ற சமசுகிருத இசை நூலை எழுதிய ராஜா சுரேந்திர மோகன தாகோர் மற்றும் கே.பி.தேவால், இ.கிளிமெண்ட்ஸ், சி.நாகோஜிராவ், சுப்பிரமணிய சாஸ்திரி ஆகியோர், ‘சங்கீதரத்னாகரம்’ நூலில் பேசப்படும் இருபத்திரெண்டு சுருதிகளை எவ்வா றெல்லாம் புரிந்து பதிவு செய்துள்ளனர் என்பதை விரிவாகப் பேசுகிறார். மேற்குறித்த அறிஞர்களின் கருத்துக்களை சாரங்கர் கருத்துக்களோடு ஒப்பிட்டு பல்வேறு அட்டவணைகளை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் இருபத்திரெண்டு சுருதிகள் குறித்துப் பேசு வோரின் கருத்துக்களைப் பதிவு செய்கிறார். சமசுகிருத மொழியிலுள்ள தென்னிந்திய இசை பற்றிய சாரங்கரின் நூலான சங்கீதரத்னாகரம் செய்திகளை, பண்டிதர் விரிவாக உரையாடலுக்கு உட்படுத்துவது என்பது, அடுத்த பகுதியில் 22 சுருதிகள் எனும் அலகுப் பதிலாக 24 சுருதிகள் எனும் அலகை அவர் கட்டமைப்பதற்கான அடிப்படையாக அமைகிறது. அவ்வகையான உரை யாடல் பூர்வ தமிழிசை குறித்தப் புரிதலுக்கு உதவுமென்றும் கருதுகிறார்.

பூர்வ தமிழிசை மரபில் காலப் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்துப் பண்டிதர் ஆய்வு செய்கிறார். அவ்வாய்வில் தமிழிசை தொடர்பான சொற்கள் பலவும் சமசுகிருத சொற்களாக மொழிமாற்றம் பெற்றதாகக் கருதுகிறார். அவ்வகையான செயல்பாடுகள், சாரங்கரின் ‘சங்கீதரத்னாகரம்’ நூலில்தான் முதல்முதல் முன்னெடுக்கப் படுவதாகக் கருதுகிறார். தமிழிசையில் ஏற்பட்ட இவ்வகையான மொழிமாற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில், பண்டிதர் தமது ஆய்வைக் கொண்டு செல்கிறார். இக்கண்ணோட்டத்தில் அந்நூல் பேசும்  செய்திகளையும் அதனை வேறு பலர் எடுத்துக் கொண்ட முறையினையும் விரிவாகப் பதிவு செய்கிறார். இப்பகுதி கருணாமிர்தசாகரத்தின் இரண்டாம் பகுதியாக அமைகிறது.

***

“வடநாட்டில் வழங்கிவரும் கானத்திற்கும் சாரங்க தேவர் எழுதிய சங்கீதரத்னாகரத்திற்கும் எப்படி ஒற்றுமையில்லையோ அப்படியே தென்னாட்டில் சமஸ்கிருதம் தெலுங்கு தமிழ் முதலிய பாஷை களில் எழுதிய சங்கீத சாஸ்திரத்திற்கும், சங்கீத ரத்னாகரத்திற்கும் முற்றிலும் ஒற்றுமையில்லை யென்று அறிகிறோம். ஆனால் தென்னாட்டிலுள்ள சில சமஸ்கிருத நூல்களுக்கும் தென்னாட்டின் சங்கீதத்திற்கும் ஒற்றுமையிருக்கிறதென்று விசாரிக்கும் விவேகிகள் அறிவார்கள். ஊர்ந்து திரிகிற குழந்தை நடக்க பிரயத்தனப்படுவதும், பூமியில் நடக்கிற ஒருவன் ஆகாயத்தில் பறக்க விரும்புவதும் பெற்று வளர்த்த தாயைவிட்டு மனையாளிடத்தில் அதிகப் பிரியங்காட்டுவதும் இயற்கையென்று அறிவோம். அரைகுறையாய்த் தான் கற்ற அந்நிய பாஷையில் தனது தாயின் குணங்களை வர்ணிப்பது போலத் தென்னாட்டின் சங்கீத ரகசியங்களை அந்நியப் பாஷையிலெழுதி வைத்ததேயழிய வேறில்லை”. (கருணாமிர்த சாகரம். முதல்புத்தகம். மூன்றாம் பாகம்: 2009:10)

தென்னிந்திய இசை மரபு எவ்வாறு பதிவு செய்யப் பட்டது? ஒரு மொழியில் பதிவு செய்யப்பட்டது என்பதனாலேயே அதிலுள்ள செய்திகள் அம்மொழி சார்ந்த பண்பாட்டுத் தரவுகளாக அமைந்துவிடுமா? எனும் கேள்விகளுக்குப் பதிலாகவே, தென்னிந்திய இசைமரபு பதிவு செய்யப்பட்டிருக்கும் மொழிபற்றிய புரிதலை மேற்காணும் பண்டிதரின் பதிவுதருகிறது. பல்லவ மன்னர்கள், பிற்கால சோழர்கள், விஜயநகர மன்னர்கள் ஆகியோர் காலத்தில் அரச மொழியாக சமஸ்கிருதம் செயல்பட்டது. தென்னிந்திய கட்டிடக் கலை, தென்னிந்திய இசைக்கலை, தென்னிந்திய சமய மரபுகளின் அடிப்படைகள் ஆகிய பிற சமசுகிருத மொழியில் எழுதப்பட்டன. வைணவ ஈட்டு உரைகள் எழுதப்பட்ட மணிப்பிரவாள மொழி எத்தகையது என்பதை நாம் அறிவோம். கி.பி.ஏழாம் நூற்றாண்டு முதல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மொழி குறித்தும் நாம் அறிவோம். இந்தப் பின்புலத்தில் சமஸ்கிருத சொற்களிலிருக்கும் பூர்வ தமிழிசை மரபு குறித்த ஆய்வை பண்டிதர் மேற்கொள்கிறார். கருணாமிர்த சாகரத்தின் மூன்றாம் பகுதியில் சங்கீதரத்னாகரத்தில் கூறப்படும் செய்திகளில் தொல்பழமையைக் கூறுகிறார். அதனை இசைத்தமிழ்ச் சுருதிகள் என்று அழைக்கிறார். இதனை அவரது சொற்களில் வாசிப்பது நல்லது. அப்பகுதி வருமாறு.

“பூர்வ நூல்களின் அபிப்ராயத்தை உள்ளது உள்ளபடி அர்த்தம் செய்து, பழைய வழி அதனை மேலான நிலைக்குக் கொண்டுவர வேண்டுமென்று அநேக கனவான்கள் பிரயாசப்பட்டிருக்கிறார் களென்றும், அவர்கள் சாரங்கத்தேவர் கருத்தின்படி சுருதி சேர்க்காமல் வெவ்வேறு விதமாய்த் தங்கள் மனம்போல் செய்திருக்கிறார்களென்றும் இதன் முன் உள்ள அட்டவணைகளில் தெளிவாகக் கண்டோம்.

அவைகள் யாவையும் பார்த்த நமக்கு யாவராலும் மிக அருமையும் சாஸ்திர முறைமையுமுடைய தென்று மதிக்கப்படும் தென்னிந்திய சங்கீதத்திற்குப் பூர்வ தமிழ் நூல்களின் ஆதாரம் ஏதாவது உண்டா என்று விசாரிக்கும் எண்ணம் உண்டாகாமல் போகாது. இவ்வெண்ணம் முற்றிலும் பூர்த்தி அடையாமல் போனாலும், அதாவது தென்னிந்திய சங்கீதத்தைப் பற்றி விவரஞ்சொல்லும் பூர்வ நூல்கள் நமக்குக் கிடைக்காமல் போனாலும், தென்னிந்திய சங்கீதத்திற்கு முக்கிய ஆதாரமான சில அம்சங்கள் மாத்திரம் தற்காலம் ஆங்காங்கே காணக் கிடைக்கின்றன.

அதோடு தென்னாட்டில் வழங்கிவரும் சங்கீதப் புத்தகங்கள் என்று சொல்லப்படும் சில சமஸ்கிருத நூல்களிலும், தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வந்த சில அம்சங்களையே சொல்லியிருக்கிற தென்று நாம் அறிய வேண்டும்”. (கருணாமிர்த சாகரம். முதல்புத்தகம். மூன்றாம்பாகம். 2009:10)

தென்னிந்திய சங்கீதமரபு என்பது பூர்வ தமிழிசை மரபுதான் என்பதை உறுதியாகப் பேசும் பண்டிதர், இதனை சிலப்பதிகாரத்தில் பேசும் இசை தொடர்பான செய்திகளின் அடிப்படையில் விரிவாக ஆய்வு செய்திருக் கிறார். மூன்றாம் பகுதி முழுவதும், தொல்காப்பியம், பரிபாடல், சிலப்பதிகாரம் ஆகியவற்றிலுள்ள இசை தொடர்பான மரபுகளை ஆய்வு செய்வதாகவே அமைகிறது. இந்த மரபு பின்னர் எவ்வாறு தென்னிந்திய இசைமரபாக வடிவம் பெற்றது என்பதையும் பேசுகிறார். பண்டிதரின் தமிழ் இசை பற்றிய ஆய்வு என்பது, தமிழ்ச்சமூகத்தில் நடைமுறையில் தொழிற்பட்ட அவைதீக மற்றும் வைதீக மரபுகள் சார்ந்து புரிந்து கொள்ளும் தேவை உண்டு.

***

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்வேறு சமூக இயக்கங்கள், தமிழ்ச்சூழலில் உருப்பெற்றன. திராவிட மாணவர் சங்கம் (1912), தனித் தமிழ் இயக்கம், தமிழ் பௌத்த சங்கம்;, தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் (1917), சென்னை மாகாணசங்கம் (1924), சுயமரியாதை இயக்கம் (1925), தமிழிசை இயக்கம் என்பவை அவ்வகையில் அமையும். இவை இனம், மொழி சார்ந்த பல்வேறு புதிய பார்வைகளை முன்னெடுத்தவை. இவ் வகையில் தமிழிசை இயக்கத்தின் பங்கும் குறிப்பிடத் தக்கது.

சென்னை சங்கீத வித்வ சபை (1927)இல் உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் அரங்காக மியூசிக்கல் அகாடெமி கட்டிடம் கட்டப்பட்டது. அவ்வரங்கில் தமிழ்ப் பாடல்கள் பாடுவதற்கான அனுமதி மறுக்கப்பட்ட சூழலில், அதற்கு எதிராக உருவான இயக்கமே தமிழிசை இயக்கம் என அறியப்படுகிறது. இதில் தமிழகத்தில் இருந்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். 1929இல் உருவான அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்நாட்டில் உருவாக இருந்த தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு மாற்றாகவே அமைந்தது. ஆந்திரப் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் என்றே காலனிய இரட்டையாட்சி அரசு அனுமதி வழங்கியது. ஆனால் அண்ணாமலை அரசரின் செல்வாக்கால், சிதம்பரம் மீனாட்சி கல்லூரி தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு மாற்றாக அண்ணாமலைப் பல்கலைக்கழகமாக அமைந்தது. அங்கு தமிழ் இசைக்கு முதன்மை கொடுக்கும் செயல்கள் முன்னெடுக்கப் பட்டன. சங்கீத வித்வ சபையை எதிர்கொள்ள தமிழ் இசை குறித்த ஆய்வு, மற்றும் மாநாடு நடத்தல் (பண்ணிசை மாநாடு) ஆகியவை நடந்தன. மதுரை, சென்னையில் கட்டப்பட்டுள்ள அண்ணாமலை மன்றங்களும், சங்கீத வித்வ சபை நடவடிக்கைகளுக்கு எதிரான உருவாக்கங்களே ஆகும்.

இவ்வகை இயக்கத்தை இராஜாஜி ‘தமிழ்ப்பாட்டு’  இயக்கம் என்றே அழைப்பார். ஏனெனில் தமிழில் பாட இயலாத நிலைக்கு எதிராக உருவான இயக்கம் என்பதால் ஆகும். இவ்வகையான இயக்கத்திற்கு முன்னோடியாக ஆபிரகாம் பண்டிதரைக் குறிப்பிட முடியும். கீழ்க்காணும் செயல்கள் அவரது தமிழிசை இயக்கச் செயல்களாகக் கருதலாம்.

-     1907இல் கருணாமிர்தசாகரத்திரட்டு எனும் நூலை வெளியிட்டார். இவை தமிழ்ப் பாட்டுக்களைப் பாடும் பயிற்சியாளர்களுக்கென்று உருவாக்கப் பட்ட கையேடு ஆகும். 95 தமிழ்ப்பாடல்களுக்கு சுர தாள ஒழுங்கை இவர் அமைத்து இந்நூலைக் கொண்டுவந்தார். தமிழ்க் கீர்த்தனங்கள் இல்லை யென்ற சூழலில் அதற்கான மாற்று ஏற்பாடாகவே செய்தார்.

-     1912இல் தஞ்சாவூர் சங்கீத வித்ய மகாஜன சங்கத்தை உருவாக்கினார். அந்த ஆண்டு முதல் 1916 வரை ஏழு இசை மாநாடுகளை நடத்தினார். சுருதிகள் பற்றிய ஆய்வு இம்மாநாடுகளில் மேற் கொள்ளப்பட்டது. இதனை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நடத்திய பண்ணிசை ஆராய்ச்சி மாநாடுகளுக்கு முன்னோடியானது என்று கூற முடியும்.

***

ஆபிரகாம் பண்டிதர் வாழ்க்கை என்பது பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக அமைகிறது. மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, பெரும் ஆளுமையாக உருவான வரலாறு வியப்பளிக்கும் வகையில் உள்ளது. சித்த மருத்துவ நாடார் குடும்பம், மூன்று தலைமுறை யாக சித்த மருத்துவப்பயிற்சியில் இருந்த குடும்பத்தில் பிறந்தார். பள்ளி ஆசிரியராக பணியைத் தொடங்கினார். சுருளி மலைப் பகுதியில் இருந்த கருணாமிர்தர் என்பவரை தமது குருவாக ஏற்றுக் கொண்டார். அவரின் மூலமாக இவரது மருத்துவ அறிவு வளர்ந்தது. அக் காலத்தில் தென்னிந்தியாவை அலைக்கழித்த பிளேக் நோய்க்கு மருந்து கண்டுபிடித்து மக்களைக் காப்பாற்றி யவர் பண்டிதர். திண்டுக்கல் பகுதியிலிருந்து, தஞ்சாவூருக்குக் குடிபெயர்ந்தார். ஆசிரியப் பணியை விட்டார். முழு

நேர மருத்துவர் ஆனார். முழுநேர விவசாயியும் கூட. பழப் பண்ணை, மாட்டுப் பண்ணை ஆகியவற்றை உருவாக்கினார். அவற்றிற்கு நவீன நீர் இறைக்கும் கருவிகளை இங்கிலாந்திலிருந்து வருவித்தார். தனது கருணாமிர்த சாகரம் நூல் அச்சிட லாலி அச்சகத்தை உருவாக்கினார். அதற்கான இயந்திரம் இங்கிலாந்தி லிருந்து வாங்கப்பட்டது. ஒருவகையில் ஜி.டி.நாயுடு அவர்களின் வாழ்க்கைக்கும் பண்டிதர் வாழ்க்கைக்கும் நெருங்கிய ஒற்றுமைகள் உள்ளன.

மேற்குறிப்பிட்ட பின்புலத்தில் இருந்த பண்டிதர், இசைத் துறைக்குச் சென்றதில் அவரது இரண்டாவது துணைவியார் கோவில் பாக்கியம் அம்மா அவர்களுக்குப் பங்குண்டு. அவரது இசைப் பணிகள் தமிழ்ச்சமூக வரலாற்றில் என்றும் பேசப்படும். தமிழ்ச்சமூகத்தில் பண்டிதர் ஆளுமையை முழுதும் புரிந்து கொள்ளப் பட்டுள்ளதா? என்றே கேட்க வேண்டியுள்ளது. அவரைக் கொண்டாடும் கடமை நமக்குண்டு.

***

ஆதாரநூல்கள்

1917  -     ஆபிரகாம் பண்டிதர் மு. கருணாமிர்த சாகரம் எனும் இசைத்தமிழ் நூல். 1994இல் அன்றில் பதிப்பக வெளியீடாக வந்தது. இது இரண்டாம் அச்சு. அந்நூல் இங்கு பயன்படுத்தப்பட்டது.

1950  -     வரகுணபாண்டியன் ஆ.அ. பாணர் இசைவழி எனப்படும் யாழ்நூல். இதன் மறுபதிப்பு 2001இல் வந்தது. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். இந்நூல் இங்கு பயன்படுத்தப்பட்டது.

1984  -     தனபாண்டியன் ஆபிரகாம்பண்டிதர் (வாழ்க்கை வரலாறு)

1985  -     அருணாச்சலம்.மு கருநாடக சங்கீதம் தமிழிசை. ஆதி மும்மூர்த்திகள்.    

1988  -     தனபாண்டியன்.து.ஆ நுண்ணலகுகளும் இராகங்களும் தமிழ்ப் பல்கலைக்கழகம். தஞ்சாவூர்.    

1993  -     தண்டபாணி.ப. திராவிடர் இசை ஆபிரகாம் பண்டிதர் மன்றம். சென்னை   

2007  -     அமுதாபாண்டியன். கருணாமிர்தம்:சுருக்கத் திறனாய்வு உரை ஆபிரகாம் பதிப்பகம் தஞ்சாவூர். 

2009  - ஆபிரகாம் பண்டிதர். தமிழிசைக் களஞ்சியம் கருணாமிர்தசாகரத்திரட்டு (பகுதி 1), கருணா மிர்த சாகரம் (பகுதி-2 முதல் 7 வரை) பதிப்பு: அங்கயற்கண்ணி. மு. வளவன் பதிப்பகம். சென்னை.

Pin It

இந்தியாவின் தென்கோடி. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம். மூங்கில், தேக்கு, கோங்கு போன்ற மரங்களைக் கொண்ட அடர்த்தியான மலங்காடு. புலி, கரடி, யானை, மிளா, மான், தனிச் சிறப்புடைய சிங்கவால் குரங்கு, காட்டெருமை, காட்டுப் பன்றிகள், விருவு, கிளி, குயில், கருங்காகம், மலை அணில், மலைப் பாம்பு, நாகப் பாம்பு, கட்டுவிரியன், உடும்பு என நிற்பன, நடப்பன, பறப்பன, ஊர்வன எனப் பல்வேறு பட்ட உயிரினங்களுடன் ஏராளமானத் தாவர வகைகளையும் தன்னகத்தே கொண்ட நிலம். முண்டந்துரைப் புலிகள் காப்பகமாகத் திகழும் ஒரு பகுதி. அங்கு அம் மலையில் கருமேகங்கள் திரண்டு, மழையாகப் பொழிந்து, உருவாக்கியதொரு ஆறு ஒன்று உண்டு. அதன் பெயர் பச்சையாறு.

ஆற்றின் இரு மருங்கிலும் காட்டுப் பத்து, வாணியம் பத்து, கோவர் நெடுங்கன், கோனார் பள்ளி, சத்திரங்காடு, பரிசுகொடுத்தான் பத்து, கால்பரவு, என்னும் பெயர்களைக் கொண்ட நெற்பயிர் வயல்கள் பச்சைக் கம்பளம் விரித்தாற் போன்று, காற்றில் அலை அலையாய் வீசும் பசுங்கடல் கண்ணுக்குச் சிறப்பு விருந்தளிக்கும். தென்னந்தோப்புகள், மாந்தோப்புகள், வாழைத் தோட்டங்கள் என பறவைகளின் வசிப்பிடங் களுடன், நெட்டேரிக்கால் அணை, தலை அணை, தேங்காய் உருளி, எலவடி அணை, கருங்கல் கசம், மொட்டைக் கலங்கு என்னும் நீர்த் தேக்கங்கள், வடக்குக்கால், காலாங்கரை, மணல் அடைப்புக் கால் வாய், முத்து ஓடை என்னும் உச்சி வெயிலிலும் குளிர்ந்த நீரைச் சுமந்து செல்லும் சிறு கால்வாய்களைக் கொண்ட பசுமையான கிராமம்.

சிதம்பரபுரம் என்பது அதன் பெயர். திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி தாலுகாவைச் சேர்ந்த சிறு கிராமம். அந்நாளில் மோட்டார் வாகனங்கள் அதிகம் இல்லாமையால் மாசற்ற தூய காற்றையும் நீரையும் கொண்ட பசுமையான கிராமமாக விளங்கியது. முப்பிடாதி அம்மன், முத்தாரம்மன், இசக்கி அம்மன், சாஸ்த்தா, ஊர்க்காட்டான், பட்ராயன், அதலி பாறையம்மன், நிழல் தாங்கல் என்று அழைக்கப்படும் இரு நாராயண சாமி கோவில்கள், ஒரு கத்தோலிக்க வேதக் கோவில், சி.எஸ்.ஐ வேதக்கோவில் என சிறு கிராமமே என்ற போதிலும் ஏராளமான கோவில்களைக் கொண்டிருந்தது. அதனால் திருவிழாக்கள், கோவில் கொடைவிழாக்கள் என ஆண்டு முழுமையும் நடைபெற்றன. செம்மண் பூமியையும் சிறந்த நீராதாரத்தையும் கொண்ட பூமியான படியால் விவசாயம் முக்கியத் தொழிலாய் அமைந்திருந்தது.

விவசாயம் சார்ந்த இதரத் தொழில்களான கலப்பை செய்யும் ஆசாரிகள், கொளு, கதிர் அரிவாள் இத்தியாதிகள் செய்யும் கொல்லாசாரிகள் அதற்கான பட்டறைகள், களம் கூட்டும் விளக்குமாறு, பதர் நீக்கும் முறம் செய்யும் குறவர் இன மக்கள், ஏராளமான பனைமரங்களையும் கொண்டிருந்ததால் பனை சார்ந்த கருப்புக் கட்டி செய்வோர், ஓலை பெட்டி, நார்ப்பெட்டி செய்வோர் என பலதரப்பட்ட மக்களைக் கொண்ட பகுதியாக இருப்பதால் சிறுகிராமமா? பெருங்கிராமமா? எனப் பிரித்து அறிய முடியாத கிராமத்தில் பிறந்து வளர்ந்து சுற்றித்திரிந்த பதினாறு வயதே நிரம்பிய பருவ மங்கையவள். நல்ல மஞ்சள் நிறத்தழகி. இராணுவ வீரரின் கைத்தலம் பற்றியதால் இத்தென்கோடியி லிருந்து இந்தியாவின் வடமேற்கு எல்லைப் பகுதிக்கு, மறு செழுமைப் பார்க்கப் புறப்பட்டாள்.

நீண்ட ரயில் பயணம். முதல் இரு நாட்கள் மகிழ்ச்சியளிப்பதாய் இருந்தன. காடுகள், மலைகள், ஆறுகள், ரயில் நிலைய அழுக்குகள், ஏழை பாழைகள், இளையோர் முதியோர், ஆண்கள் பெண்கள், உடல் ஊனமுற்றோர் என பலதரப்பட்டோரை இங்கும் அங்குமாகக் காண நேரிட்டது அவளுக்கு. சில சமயம் ஆச்சரியம், சில சமயம் வெறுப்பு, கோபம், அசூசை எனப் பலவித உணர்ச்சிகளோடு இருந்தாள். எப்போதும் துறுதுறுவென்று ஓடிக்கொண்டே இருந்த அவளுக்கு மூன்றாம் நாள் அயர்ச்சியாய் இருந்தது. மெதுவாக எதிர்ப்புறம் அமர்ந்திருந்த பெரியவரிடம், “தாத்தா உங்களுக்கு எந்த ஊர்?” என்று தமிழில் கேட்டு வைத்தாள். “கியா பேட்டி” என்றார் கரடுமுரடான குரலில். அவ்வளவுதான் பயந்து விட்டாள். அவரின் குரலில் அவள் பயப்படவில்லை. அதே சமயம், “பேசாமல் இரு” எனத் தன் பெரிய விழிகளை உருட்டிக் உரத்தக் குரலில் கட்டளையிட்ட  கணவரின் சத்தத்தில் தான் பயந்தாள். முதன் முதலாக அவள் கேட்ட அந்நிய மொழி என்ன ஏது எனப் புரியாமல் அச்சம் கொள்ளச் செய்தது.

இந்தியாவின் தலைநகரில் கால் பதித்தாள். பயம் கலந்த மகிழ்ச்சி. என்றோ படித்தது நினைவில் வந்தது. ஆனால் ஊர் பெயர் ஞாபகத்தில் இல்லை. எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மிக்கவள். அதனால் டில்லி என்பதனைத் தன் கணவரைக் கேட்டுத் தெரிந்து கொண்டாள். மீண்டும் ஓரிரவு ரயில் பயணத்திற்குப் பின் அமிர்தஸரஸ் நகர் வந்து சேர்ந்தாள். வரும் வழி எங்கும் தான் கண்ட பச்சை வயல்வெளிகள் அவளுக்கு மகிழ்ச்சியளிப்பதாய் இருந்தது. ஏனென்றால் தான் மீண்டும் ஒரு உழவுத் தொழிலை மையமாகக் கொண்ட நிலத்திற்கு வந்து விட்டதை உணர்ந்து கொண்டாள். அது அவளை அந்நியப்படுத்தாதிருந்தது. மார்கழி மாதக் குளிரை ரசித்த அவளுக்குப் பஞ்சாபின் நவம்பர் மாதக் குளிர் விரும்பத்தக்கதாக இருந்தது. கிராமத்திலிருந்து கிளம்பும் போது வெறும் ஊறுகாயும், தமிழகத்து மசாலாப் பொருட்களை மாத்திரமா கொண்டு வந்திருந்தாள்? கோலப் பொடியையும் அல்லவா எடுத்து வந்திருந்தாள்.

அதிகாலை எழுந்து குளித்து வாசலில் கோலமிடுவது, தமிழ் காலண்டர்படி மார்கழியில் கோலத்தின் மீது அழகழகாகப் பூக்களை வைத்து அலங்கரிப்பது, விளக்கேற்றுவது, பாந்தமாக தான் புடவைக் கட்டிக் கொள்வது எனத் தமிழ் பழக்க வழக்கத்தை விடாமல் அவள் மேற்கொண்டமை அவளது தனிச் சிறப்பு. அவளின் கோலமிடும் திறனை அக்கம் பக்கத்தினர் சிலாகித்தமை அவளை மகிழும்படிச் செய்தது. புடவையில் கண்ட அப் பெண்கள் அவளை தேவதையாகவே கொண்டாடினர். மேம்சாப் என்று தன் கணவரின் துணைநிலை அதிகாரிகள், அவர்களின் வீட்டுப் பெண்கள் தன்னை அழைக்கின்ற பட்சத்தில் தனக்கு கிரீடம் வைக்கப்பட்டதாகவே நினைத்து ஆனந்தம் கொள்வாள்.

கடல்களே அற்ற பூமி என்பதை அறிந்த போது ஆச்சரியப்பட்டாள். மேடுபள்ளங்கள் அற்ற சம பூமி என அறிந்து கொண்டாள். பெருங்கடலாய் விரிந்திருக்கும் பேராறுகள், பெருங்கால்வாய்கள், வியக்கச் செய்வதாய் இருந்தன. இவ்வாறுகளின் வண்டல் மண், வற்றாது பாயும் நீர், நிலத்தடி நீர், மண் வளம், தாது வளம் போன்றவற்றின் சிறப்புதான் வயல்வெளிகளின் செழுமைக்குக் காரணம் என்பதனை மக்களைக் கேட்டு அறிந்து கொண்டாள். எதனையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் காரணமாய் பஞ்சாபி மொழியை சீக்கிரமே பிறரிடம் பேசிப் பழகியே கற்றறிந்து கொண்டவள். அவள் பிறந்து வளர்ந்த ஊரில் பசுமாடுகளை மாத்திரமே அறிந்திருந்தவள். இப் புதிய ஊரில் எருமைகள் மாத்திரமே உண்டு என்பது விந்தையாகவே இருந்தது. பால், தயிர், வெண்ணெய், பாலாடை என பால் பதார்த்தங் களை விரும்புபவளாய் இருந்தது இப்பொருட்களின் சரளமானப் பயன்பாட்டில் ஈடுபாடு மிக்கவளாக்கிற்று.

அது மட்டுமின்றி இம் மக்களின் திருமண வைபவங்கள் ஈர்க்கச் செய்வதாய் இருந்தது. குறிப்பாக நள்ளிரவில், மாப்பிள்ளையின் அம்மா, மற்றும் அவர்களின் கூடப் பிறந்த சகோதரிகள், இன்னும் மிக நெருங்கிய உறவுக்காரர்கள் என பத்துப் பதினைந்து பெண்கள் சேர்ந்து, நல்ல பலவண்ண அலங்கார ஆடை அணிகலன்களுடன், அலங்கரிக்கப்பட்டு, சுற்றிலும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்ட மட்குடங்களைத் தலையில் சுமந்து, தோல் கருவி, இசை முழங்க ஆடிப்பாடி ஊர்வலமாகச் சென்று தங்கள் வீட்டுத் திருமண விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைக்கும் வைபவம், பைசாகி என்னும் அறுவடைத் திருவிழா, லோரி, தீஜ், ஹோலி போன்ற விழாக்களைக் கண்டும் கொண்டாடியும் மகிழ்ந்தாள். தான் இருக்கும் ஊரின் மொழியறிவை சீக்கிரமாகக் கற்றுக் கொண்டதால் அந்நிய ஊரில் இருப்பதாகவே உணர்ந்தாளில்லை. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதனை மெய்ப்படச் செய்தாள்.

குளிர்காலத்தினை அடுத்துக் கோடையும் வருமே. இந்நகரில் கோடையும் உக்கிரம் மிக்கதாய்த் தகித்தது. வீட்டிற்குள் அறைகளுக்குள் அரை நாளுக்குத் தண்ணீரை நிரப்பி வைத்து வெப்பத்தைத் தணிக்கும் முறையைக் கண்டாள். வெளியே செல்லும் போது துணியை நனைத்து தலை முகம் முழுவதையும் சுற்றிக்கொள்வது, வீட்டு வராந்தாக்களில் வெட்டி வேர்தட்டிகள் அமைத்து மாலையில் தண்ணீர் தெளித்து இயற்கை முறையில் குளிரூட்டுவது போன்ற பல கோடைக்கால வாழும் முறைகளையும் அறிந்து கொண்டாள் அவள்.

பசுமையான வயல் வெளிகளில் மனதைப் பறி கொடுத்தவளைக் கொள்ளை கொண்ட இன்னுமொரு விடயம் உண்டென்றால் அது பொற்கோவில். இரவில் அலங்கார மின் விளக்கொளியில் புனிதநீர் தேக்கத்தில் தகதகத்து பிரதிபலிக்கும் கோபுரக் கலசங்கள், கோவில் கூரையின், சுற்றுச் சுவரின் வண்ண ஓவியங்கள், அங்கு இலங்கும் தூய்மை, மக்களின் சேவையுள்ளம், செழுமை, அமிர்தமாய் விளங்கும் குரு பிரசாதம், சமபந்தி உணவு வழங்கல் முறை, இசைக்கப்படும் பாடல்கள் என அனைத்தும் என்றும் அவள் நினைவலையின் நீங்கா ஓவியங்களாயிற்று.

கடுங்குளிரைத் தாங்குவதற்கான கம்பளி ஆடைகள், வீட்டு அமைப்புகள், வீட்டு வாசல்கள், சன்னல்கள் என எல்லாவற்றிலும் வலைக் கதவு மரக் கதவு என இரட்டைக் கதவுகள் கொண்ட கட்டிடங்கள், பூஞ்செடிகளைக் கொண்ட பங்களாக்கள், தோட்டங்கள் எனப் பலவற்றையும் மனத்திரையில் ஏற்றிக்கொண்டவள். சலிப்பற்ற ஏராளமான மகிழ்ச்சியானத் தருணங்களைச் சந்தித்தவள். வாழ்க்கைச் சக்கரம் சுழன்று மூன்று பிள்ளைகளுடன் தாயகம் திரும்ப வைத்தது. ஆம் பிள்ளைகளை ஓரிடத்தில் இருந்து படிக்க வைக்க வேண்டிய பொறுப்புக்குள்ளானாள். இராணுவ அதிகாரியின் அடிக்கடியான வேலை மாற்றம் பிள்ளைகளின் படிப்பிற்கு இடைஞ்சலாயிற்றே என்ற காரணத்தினால்.

அவளது இரண்டாந்தலைமுறையும் அவள் பாதையிலேயே தன் ஐம்பதாம் வயதில் பயணம் மேற்கொண்டாள், ஆராய்ச்சியாளரின் மனைவியாகத் தம் கணவரோடு. தன் தாயின் வார்த்தைகளை அதே மாதிரியான நீண்ட ரயில் பயணத்தின் போது அசை போட்டவாறு. திடீரென்று பெரியதொரு ஆற்றினைக் கடந்த போது, ‘பியாஸ்Õ என்ற பெயர் பலகையைக் கண்ட போது பழைய நினைவொன்று வந்து போனது. ஆம் ஒரு நாள் படித்துக் கொண்டிருந்த போது, இந்தியாவின் நதிகளென்ற தலைப்பில் பல ஆறுகளின் பெயர்களைப் படித்துவிட்டு. பஞ்சாபின் நதிகள் பற்றி படிக்க நேரிட்டது. “ஜீலம், ஜீனாப், ம்... ம்...Ó என்று படித்துக்கொண்டு சொன்னதையே ஓட்டை ரெக்காடாய் வாசித்துக் கொண்டிருந்தாள். அங்கு வந்த முதல் தலைமுறைக்காரி, அவளது அம்மா “ரவி, சட்லெஜ் என்று கூறி. பாஞ் என்றால் ஐந்து என்றும், ஆப் என்றால் ஆறுகள் என்றும் இந்த ஐந்து ஆறுகளும் பாய்கின்ற செழிப்பான மாநிலமே பஞ்சாப்” என்றும் தன் சிறு பெண்ணிற்கு விளக்கமளித்தாள்.

அதன் பின் பொற்கோவிலுக்குச் செல்கின்ற போதெல்லாம் தன் அம்மையின் சொற்கள் மீண்டும் மீண்டும் வந்து போயின. பெரிய செழிப்பான கோவில் என்பது மாத்திரமே நம் கோவிலுக்கும் பொற் கோவிலுக்கும் உள்ள வேறுபாடு என்றும், வழிபாட்டு முறைகள் பெரும்பாலும் ஒன்றே என்ற அவளது வாதம் சரியானதே என்று பின்னவளை எண்ண வைத்தது. இவர்களின் ஊரில் நாராயண சாமி கோவில் உள்ளது. நிழல் தாங்கல் என்று அழைக்கப்படும். அதாவது இங்கு வரும் பக்தர்களின் துன்பெனும் உக்கிரத்தை நிழலாகத் தாங்குமிடமாகக் கொள்ளப்படும். கோவில் கர்ப்பக் கிரகத்தில் விக்ரகம் கிடையா. ஐயா நாராயணரின் செய்திகள் பாடல்களாக எழுதப்பட்ட ஏடு ஒன்று நடுப் பகுதியில் இருக்கும் மேடையில் வைக்கப்பட்டிருக்கும். தினப்படி விளக்கு ஏற்றி வைத்து முரசங்கள் ஒலிக்க ஒலிபெருக்கியில் ஏடு வாசிப்பு நடைபெறும். பால் அன்னம், உம்பாஞ் சோறு என அனைவருக்கும் விசேட நாட்களில் வயிறாற உணவு வழங்கப்படும். அது சமயம் ஆண்கள் அனைவரும் தலையில் முண்டாசுக் கட்டிக் கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட இதே வழிமுறை தான் பொற்கோவிலிலும் பின்பற்றப்படுகிறது என்பது வியக்கத் தக்கதாய் இருந்தது.

அம்மையின் ஒவ்வொரு வார்த்தைகளும் செயல் களும் அவளுக்கு நினைவில் கொள்ளத்தக்கதாய் இருந்தன. குறிப்பாகக் குளிர்காலங்களில் வென்னீரில் பாத்திரங்கழுவுவது, வென்னீரில் நல்ல சுவை இருக்கும் என்று கூறி இறுதிவரை வென்னீர் குடிப்பது, மப்ளெர், ஸ்வெற்றர், சால் இத்தியாதிகளைச் சுற்றிக் கொண்டு கோமாளித்தனமாகக் குளிரில் அலைவதின் சுகம், சுட்ட நறுக்கிய சீனிக்கிழங்கு, மக்காச்சோளத்தை அவித்து எலுமிச்சை சாற்றில் நனைத்து உப்பில் தேய்த்து தின்னும் ருசி, மக்கி ரொட்டியும் சாகு என்ற கடுகுக் கீரை மசியலின் தனிச்சுவை, பைங்கன் பர்த்தா என்று அழைக்கப்படும் சுட்டக் கத்தரிக்காய் கறி, ஆலு பரோட்டா, கீர் போன்றவைகளுடன் கித்தா என்ற பெண்களின் கையையும் காலையும் தட்டித் தட்டி ஆடும் சீரான நடனம், ஆண்களின் பங்கரா வீர நடனம், கட்கா வாள் சண்டைக் காட்சிகளுடனான நகர் வலம் போன்ற அனைத்தையும் அம்மையின் கண்ணோட்டத்திலேயே சிற்சில மாற்றங்களுடன் காண நேரிட்டது இரண்டாம் தலைமுறைக்கு. 

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மகளுக்கு அவளது அம்மை உடனிருந்து சொல்லுவது போலவே தெரிந்தது. எது நினைவு, எது நனவு? எப்படி இப்படி ஓர் அதிசயம் நிகழ்ந்தது! இரண்டு தலைமுறையைச் சேர்ந்த ஒரே குடும்பத்துப் பெண்கள் இந்த ஊரில் வந்து கிட்டத் தட்ட ஒரே மாதிரியாக நல்லதும் கெட்டதும் அனுபவித்திருக்கிறார்களே!

Pin It

ரஷ்யாவில் 1917ஆம் ஆண்டு இடம் பெற்ற அக்டோபர் புரட்சி பற்றி நமது மகாகவி பாரதி பின்வருமாறு எழுதுகிறார்.

“மாகாளி பராசக்தி உருசிய நாட்

டினிற் கடைக்கண் வைத்தா ÷ளங்கே

ஆகாவென் றெழுந்தது பார் யுகப் புரட்சி

கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்

வாகான தோள் புடைத்தார் வானமரர்

பேய்களெல்லாம் வருந்திக் கண்ணீர்

போகாமற் கண் புகைந்து மடிந்தனவாம்

வையகத்தீர் புதுமை காணீர்.”

இந்தக் கவிதை பாரதி அன்பர்களுக்கு நன்கு தெரிந்த ஒன்று.  சோவியத் புரட்சி நடந்த உடனேயே அதனை வரவேற்றுப் பாடிய முதல் தமிழ்க் கவிஞன் என்ற பெருமை பாரதிக்கு உண்டு.  (தமிழ்நாட்டில் இதனைக் கொச்சைப்படுத்தி பேசியவர்கள் உண்டு.)

இந்தப் புரட்சியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அதன் அடியார்களாக விளங்கிய லெனின், ஸ்டாலின் வழி நின்று அது பற்றிய சில விஷயங் களை இங்கு நினைவுபடுத்திக் கொள்வது அவசிய மாகிறது.  இவற்றை பெரும்பாலும் எல்லோரும் மறந்து விட்டனர்.

இந்தப் புரட்சி தோன்றி வெற்றி பெறுவதற்கான சூழ்நிலைகள் என்ன என்பது முதல் கேள்வி.

இதனை முதலில் பாரதி வாயிலாகவே காண்போம்.

“உழுது விதைத் தறுப்பாருக் குணவில்லை;

பிணிகள் பல வுண்டு; பொய்யைத்

தொழுதடிமை செய்வார்க்குச் செல்வங்க

ளுண்டுண்மை சொல்வோர்க் கெல்லாம்

எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு

தூக்குண்டே யிறப்ப துண்டு

முழுதுமொரு பேய் வனமாஞ் சிவேரியிலே

ஆவிகெட முடிவ துண்டு.”

லெனின், ஸ்டாலின் ஆகியோரது மொழியில் கூறினால் இது புரட்சிக்கான அகச் சூழ்நிலை ஆகும்.  இவற்றை ஸ்டாலின் பின்வருமாறு வகைப் படுத்துகிறார் ஒன்று: ரஷ்யாவின் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் ஆதரவு அக்டோபர் புரட்சிக்கு இருந்தது.  இரண்டு: ஏழை விவசாயிகள் போர் வீரர்கள் ஆகியோர் அதனை ஆதரித்தனர்.  மூன்று : உறுதியான கொள்கையுள்ள போல்ஷ்விக் கட்சி அதற்குத் தலைமை தாங்கியது.  இக்கட்சிக்கு உழைக்கும் மக்களிடையே நெருங்கிய தொடர்பு இருந்தது.  நான்காவது புரட்சியை எதிர்த்த ரஷ்ய பூர்ஷ்வா வர்க்கம் பலமற்று இருந்தது.  நிலப் பிரபுத்துவ வர்க்கம் சிதைந்து இருந்தது.  ஐந்தாவது பல சிறு சிறு அரசுகளின் ஆதரவு அதற்கு இருந்தது அவற்றில் போல்ஷ்விக்குகள் சுதந்திரமாகச் செயல் பட்டனர்.

russia fighters 600இவை ரஷ்யாவிற்கு உள்ளே இருந்த நிலை.  இவற்றை பாட்டாளி வர்க்கத்துடன் இணைத்து புரட்சியை நடத்திய பெருமை போல்ஷ்விக்குகளுக்கு உண்டு.

அதே ஸ்டாலின் இதற்கான புறக்காரணி களையும் வகைப்படுத்துகிறார்.  அக்டோபர் புரட்சி ஏற்பட்ட பொழுது ஐரோப்பிய அரங்கில் இரண்டு ஏகாதிபத்திய சக்திகள் போராடிக் கொண்டிருந்தன.  ஒன்று ஆங்கிலேயர்களும் - பிரஞ்சுக்காரர்களும் இணைந்திருந்த அணி.  மற்றொன்று ஜெர்மனி - ஆஸ்திரியா ஆகியன இணைந்திருந்த அணி.  இவற்றின் தீவிரமான பேராட்டம் காரணமாக அக்டோபர் புரட்சி பற்றி சிந்திக்க இவற்றிற்கு நேரமே இல்லை.  இதனை புரட்சியாளர்கள் தங்களுக்குச் சாதக மாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

இவற்றின் விளைவாகத் தோன்றியது தான் பாட்டாளி வர்க்கம், விவசாய வர்க்கம் ஆகிய வற்றிற்கு இடையிலான கூட்டுறவு.  இது பாட்டாளி வர்க்கத் தலைமையில் அமைந்தது. இது புரட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றது.  இது அக்டோபர் புரட்சிக்கான காரணங்கள்.

அக்டோபர் புரட்சியானது ஒரு நாட்டில் ஏற்பட்ட ஒரு நிகழ்வு.  இருந்தாலும் அது பல நாடுகளுக்கு வேகத்தைக் கொடுத்தது.  அது அரசியல் ரீதியான வேகத்தினையும், கருத்தியல் ரீதியான வேகத்தையும் அளித்தது.  எனவே அதனை ஒரு நாட்டில் இடம் பெற்ற தேசீய நிகழ்வாகக் காணக் கூடாது.  அதாவது அதற்கு ஒரு தேசீயத் தன்மையும் உண்டு; சர்வ தேசீயத் தன்மையும் உண்டு.

பழங்காலத்தில் புரட்சிகள் இடம் பெற்றது உண்டு.  உதாரணமாக ஸ்பார்ட்டகஸ் என்ற அடிமையின் தலைமையில் ரோம சாம்ராஜ்யத்தில் ஏற்பட்ட புரட்சி இதனை அடித்தளமாகக் கொண்டு ஹோவாட் பாஸ்ட் என்ற அமெரிக்க இடதுசாரி எழுத்தாளர் ஸ்பார்ட்டகஸ் என்ற நாவலை எழுதி யுள்ளார்.  இது புகழ்பெற்ற திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.  இதில் தான் அடிமை என்பவன் “பேசும் கருவி” (ளுயீநயமiபே கூடிடிட) என்ற வாசகம் இடம் பெற்றது.  இப்புரட்சி தோல்வியில் முடிந்தது; பிரான்ஸ் தேசத்தில் உலகப் புகழ்பெற்ற பிரஞ்சுப் புரட்சி இடம் பெற்றது.  இது வெற்றி பெற்றது.  இதன் விளைவாக பிரபுத்துவ ஆட்சி ஒழிக்கப் பட்டு, பூர்ஷ்வாக்களின் ஆட்சி இடம் பெற்றது.  இதனைத் தொடர்ந்து பாரிஸ் கம்யூன் எழுச்சி இடம் பெற்றது.  இது தான் பாட்டாளி வர்க்க மானது முதலாளிகளுக்கு எதிராகப் போர் கோலம் பூண்டு ஆட்சியைப் பிடித்த நிகழ்ச்சி யாகும்.  ஆனால் வரலாற்றுச் சூழல் சாதகமாக இல்லாத காரணத்தால் இது கொடூரமாக அடக்கப் பட்டது.  பிரான்சில் இரத்த ஆறு ஓடியது! இது போன்று இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும் பல போராட்டங்கள் இடம் பெற்றன.  ஆசிய நாடு களிலும் இடம் பெற்றன.  இவற்றில் அடக்கப்பட்ட வர்க்கமானது சுரண்டல்காரர்களை அகற்றி

விட்டு அதன் ஆட்சியை நிறுவ முற்பட்டது.  இது வரலாறு கண்ட உண்மை.  இன்று வர்க்கங்களே கிடையாது என்று பேசுபவர்களது மண்டையில் இது ஏறாது.

அக்டோபர் புரட்சி அதற்கு முந்தி நடந்த புரட்சியிலிருந்து முன்னேறிய ஒன்று.  இதன் நோக்கமே சுரண்டலை முற்றிலுமாக அகற்று வதாகும்.  எனவே இது முற்றிலும் புதிய வகைப் புரட்சி ஆகும்.  இது பற்றி ஸ்டாலின் பின்வருமாறு கூறுகிறார்.

“அக்டோபர் புரட்சியின் வெற்றி மனித குல வரலாற்றில் ஒரு அடிப்படை மாறுதலின் வெற்றியைக் குறிக்கிறது; முதலாளித்துவத்தின் விதியைத் தீர்மானிக்கிறது; உலகப் பாட்டாளி களின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு மாறுதலைக் குறிக்கிறது போராட்ட முறைகளிலும், வடிவங் களிலும் ஒரு புரட்சிகர மாறுதலைக் குறிக்கிறது.  சுரண்டப்பட்ட, வர்க்கங்களின் கருத்தியல் கலாச் சாரம் ஆகியவற்றில் மாறுதலைக் குறிக்கிறது” (ளவயடin : ஞசடிடெநஅள டிக டுநninளைஅ : 237).

அக்டோபர் புரட்சி ஏற்படுத்திய விளைவுகள் என்ன? ஒன்று உலக ஏகாதிபத்திய முகாமில் அது ஒரு விளைவை ஏற்படுத்தியது.  உழைப்பாளிகள், அடக்கப்பட்டவர்கள், சுரண்டப்பட்டவர்கள் ஆகியோர் கரங்களில் அரசு அதிகாரம் சென்றது.  உற்பத்தி சாதனங்கள், பொதுச் சொத்தாக மாற்றம் பெற்றன.  உலகில் முதன் முதலாகச் சோஷலிசச் சொத்து என்பது பூர்ஷ்வாக்களின் அதிகாரத்தை அடியோடு ஒழித்தது.  இரண்டு இப்புரட்சியின் தாக்கத்தினால், உலகின் பல நாடுகளில் உழைப் பாளர் போராட்டங்கள் வேகம் பெற்றன.  அக்காலத்திய தேச விடுதலைப் பேராட்டத்திற்கு இப் புரட்சி உந்து விசையாக இருந்தது என்பது வரலாற்று உண்மை.  மூன்று இதனை வெறும் பொருளாதார மாறுதல் என்றோ, அரசியல் மாறுதல் என்றோ கூற முடியாது.  இது உழைக்கும் மக்களது சிந்தனையில் மாறுதலைக் கொண்டு வந்தது.  இது மார்க்சியத்தின் வெற்றியை எடுத்துக் காட்டியது.  மார்க்சியக் கருத்துக்கள் உலகம் முழுவதிலும் பரவுவதற்கு இது காரணமாக இருந்தது.  பாராளுமன்ற ஜனநாயகம் என்பதை இது கேள்விக்குள்ளாக்கியது.

அக்டோபர் புரட்சி பல படைப்பாளிகளையும் கவர்ந்தது.  ஹெச்.ஜி.வெல்ஸ், பெர்னாட்ஷா போன்றவர்கள் புரட்சியைப் பாராட்டிப் பேசினர்.  உதாரணமாக, ஹெச்.ஜிவெல்ஸ், புரட்சி நடந்த ஒரு சில வாரங்களில் லெனினைப் பற்றி பின் வருமாறு எழுதினார் “கிரம்ளினில் ஒருவர் கனவு கண்டு கொண்டிருக்கிறார்” இதே வெல்ஸ் ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னர் பின்வருமாறு எழுதினார்.  “அந்தக் கனவு நனவாகிவிட்டது” ஜான் ரீட் “உலகத்தை உலுக்கிய பத்து நாட்கள்” என்ற நூலை புரட்சி பற்றி எழுதினார்.  தமிழ்நாட்டில் பெரியார் இந்தப் புரட்சியை வரவேற்றார்.  அலக்ஸி டால்ஸ்டாயின் “எஃகு எவ்வாறு உறுதி யாக்கப்பட்டது?” என்ற நாவல் புரட்சியைப் பற்றியது ஆகும்.

இந்தப் புரட்சி செய்த காரியம் உலக ஏகாதி பத்திய முகாமில் ஒரு சிறு விளைவை ஏற்படுத்தியது ஆகும்.  ஆனால் இது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பது மட்டும் உண்மை.  இதனை பட்டுக்கோட்டையின் பாடல் ஒன்றுடன் முடிக்கலாம்.  அது நண்டு செய்த தொண்டு என்ற பாடல்.  ஒரு பண்ணையாரின் வயல் மேடான இடத்தில் இருக்கிறது.  அவருக்கு ஏராளமான வயல்கள்.  நல்ல வசதியான இடத்தில் அவை உள்ளன.  முதல் தண்ணீர் முழுவதும் அவற்றிற்குத் தான் செல்லும்.  அந்த வயல்களைச் சுற்றி சிறு விவசாயிகளின் வயல்கள் உள்ளன.  பண்ணை வயலின் உயரமான வரப்பை மீறி மற்ற வயல்களுக்குத் தண்ணீர் செல்ல முடியாது! ஒரு நண்டு பண்ணையார் வயலின் வரப்பில் ஒரு சிறு துளையிட்டது.  இத்துளை வழியாகத் தண்ணீர் தாழ்வான வயல்களுக்குப் பாயத் தொடங்கியது.  சிறுதுளை பெரிதாகி மற்ற வயல்களுக்குப் பாய்ந்தது.  இந்த நண்டு தான் உழைக்கும் வர்க்கம்.  இதன் தொண்டு ஒரு சமுதாய மாறுதலுக்கு வித்திட்டது எனலாம்.

இன்று அக்டோபர் புரட்சியை இடதுசாரி களே மறந்துவிட்டனர்.  அவர்கள் பல கருத்துக் குழப்பங்களுக்கு உள்ளாகியுள்ளனர் வலுது சாரிகளைக் கேட்க வேண்டாம்.  அவர்கள் குழம்பிய குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருக் கின்றனர்.

Pin It