“ஒவ்வொன்றும் ஏற்கனவே சொன்ன விஷயந்தான்.
ஆனால் எவரும் சொன்னதைக் கேட்பதில்லை.
ஒவ்வொரு முறையும்
நாம் மீண்டும் புதிதாகத் தொடங்க வேண்டியதிருக்கிறது”.

-கெய்டு ஆன்ட்ரி

1964-ம் ஆண்டு மத்தியானத்து மதுரை நகரம். வைகையாற்றைத் தாண்டி செல்லூரை நெருங்கும் தூத்துக்குடி மெயில் வண்டி. ரயிலின் தடதட சத்தம் கேட்டு திடுதிடுவென இடிந்து நொறுங்குகிறது சரஸ்வதி பள்ளி. மறுநாள் தினசரியில் ‘கட்டிட இடிபாட்டுக்குள் சிக்கி 36 சடலங்கள் மீட்பு’ எனச் செய்திகள் வெளிவந்தன. சரியாக 40 ஆண்டுகள் கழிந்த நிலையில்...

2004-ம் ஆண்டு மத்தியானத்து கும்பகோணம் நகரம். சமையலறையிலிருந்து கொழுந்துவிட்ட தீ பள்ளிக்கூடத்தையே பதம் பார்த்தது. 94 குழந்தைகள் பலி. வரலாறு நமக்கு பாடங்கள் சொல்லிக் கொண்டுக்கின்றன. ஆனால் நாம் கற்றுக் கொள்கிறோமா என்பதில்தான் பிரச்சனைகள் இருக்கின்றன.

சம்பவம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகள் கழிந்தவிட்ட நிலையில், தமிழக சட்ட மன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சம்பத் தலைமையிலான விசாரணைக் கமிஷனால் சமர்ப்பிக்கப் பட்டிருக்கும் அறிக்கை நாம் இன்னும் கல்விக்கூட வளர்ச்சியில் 1947-ம் ஆண்டை தாண்டிச் செல்லவில்லை என்பதையே காட்டுகிறது.

சம்பத் கமிஷன் தனது அறிக்கையில், கும்பகோணம் தீ விபத்திற்குக் காரணம் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே என தெரிவித்துள்ளது. சத்துணவு மையப் பணியாளர்களின் கவனக்குறைவு, நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு சட்ட விதி முறைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை அதிகாரிகள் செயல்படுத்தத் தவறியது. பள்ளி நிர்வாகத்துக்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்தது என பல்வேறு மட்டத்திலும் குழந்தைகள் குறித்த இவர் களின் அலட்சிய எண்ணம் மேலோங்கி இருந்தது தெரிய வருகிறது. கமிஷனின் 535 பக்க அறிக்கை தந்திருக்கும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பவையாய் உள்ளன. கும்ப கோணம் பள்ளியில் பாதுகாப்பு விதிகள் வெளிப்படையாகவே மீறப் பட்டுள்ளன.

காற்றோட்டம், வெளிச்சம், பயன் படுத்தத்தக்க கழிவறைகள், அகலமான நுழைவாயில், வெளியேறும் வழிகள், அகலமான மாடிப்படிக்கட்டுகள் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என்ற குறைபாட்டுடன் சற்றே நீள்கிறது கமிஷனின் அறிக்கை. இதில் மிகவும் கவனிக்கத்தக்க விஷயம். ஒரே இடத்தில் மூன்று பள்ளிகள் இத்தகைய வசதியற்ற தன்மையோடு அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது என்பதுதான். 782 பிள்ளைகள் படித்த இப்பள்ளியை சம்பவம் நிகழும் வரை எந்த கல்வித் துறை அதிகாரியும் நேரடியாக பார்வையிடாமல் தொடர்ச்சியாக அனுமதி வழங்கி வந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது அரசு எந்திரத்தின் கையாலாகாத்தனத்தை மிக இலகுவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

அட்மிஷன் பீஸில் துவங்கி குழந்தைகளுக்குச் சம்பந்தமில்லாத பள்ளி மெயின்டனன்ஸ் பீஸ் வரை குழந்தைகளைக் காட்டி அவர்களின் பெற்றோர்களிடம் பணத்தைக் கறக்கும் பள்ளி நிர்வாகங்கள் பாதுகாப்பு உத்தரவாதத்தை காற்றில் பறக்க விட்டு வருகின்றன.

1977ஆம் ஆண்டைய தமிழக அரசின் உத்தரவுப்படி கட்டிட உறுதிச் சான்று இல்லாத எந்தக் கட்டிடத்திலும் அனுமதியில்லாமல் வகுப்புகளை நடத்தக் கூடாது. மேலும் வகுப்புகளைத் துவங்குவதற்கு முன் தமிழ்நாடு பொதுக் கட்டிடங்கள் உரிமம் வழங்கல் சட்டத்தின்படி, உரிமம் கோரி மனுத்தாக்கல் செய்ய வேண்டும். உரிமம் முடிந்ததும் அதைப் புதுப்பிக்க வேண்டும். ஆனால், இவைகளை எந்தப் பள்ளியும் தற்போது வரை கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை.

1940 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘சென்னை ஆரம்பக்கல்வி’ குறித்த புத்தகமொன்று, பள்ளிக் கட்டிடங்கள் அமைக்கும் முறைகள் மற்றும் வகுப்பறைகளிலிருந்து கழிவறைகள் எவ்வளவு தூரத்தில் இருக்க வேண்டும் என்பது வரை தெளிவாக வரையறுத்துச் சொல்கிறது. கல்வியறிவில் முன்னேற்றம் கண்டுவிட்டதாகச் சொல்லும் நாம் கல்விச் சாலைகளை கட்டமைக்கும் முறைகளில் பின்தங்கியே உள்ளோம்.

இத்தகைய மந்தைத்தன மனோ பாவத்திற்கு 1975-ல் கொண்டு வரப்பட்ட கல்வி குறித்த அவசர நிலைப் பிரகடனமே காரணம். கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு கொண்டு சென்றதிலிருந்து நாம் கல்விக் கூடம் சம்பந்தமாக எடுக்கக் கூடிய முடிவுகளில் தவறுகளையே செய்து வருகிறோம். அந்த தவறுகள் வழியே வருங்கால தலைமுறைகளை அழித்தொழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் இதில் வேதனை கலந்த உண்மை.

இத்தகைய சூழலுக்குப் பின் மாநில அரசுகள் பள்ளிக் கல்விக்கு நிதி ஒதுக்காமல் அலட்சியம் காட்ட ஆரம்பித்தன. இதனால் கல்வித் துறைக்குள் தனியார் நிறுவனங்கள் தலைகாட்ட ஆரம்பித்தன. இதை நாம் மோசமான காலக்கட்டத்திற்குரிய அறிகுறியாகவே பார்க்க வேண்டியதிருக்கிறது. இதன் தொடர்ச்சியாகத் தான் பல்வேறு தொழில்களில் வெற்றி பெற்று வியாபாரிகளாக வலம் வந்தவர்கள் தங்களை கல்விக் கொடையாளர்களாக அடையாளப்படுத்திக் கொள்ள பள்ளிகளை துவங்க ஆரம்பித்தனர். இத்தகைய காலக் கட்டத்தில் தமிழகத்தில் அதிகமான தனியார் பள்ளிகள் வர ஆரம்பித்தன. நீதிபதி சம்பத் கமிஷன் ஆய்வு மேற்கொண்ட 2,661 பள்ளிகளில் 1,157 பள்ளிகள் இதே காலக்கட்டத்தில் தோன்றியவை என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.

தனியார்கள் கல்வித் துறைக்குள் நுழைந்த பின்னர், அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்ட, அனை வருக்கும் கட்டாய இலவசக் கல்வி சாத்தியமில்லாமல் போனது. 1968-ல் கொண்டு வரப்பட்ட கல்விக் கொள்கை, 1986ல் தேசிய கல்விக் கொள்கை, 2000-க்குப் பின் சர்வ சிக்ஷ அபியான் என கல்விக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தீட்டினாலும் அவை கானல் நீராக மக்களுக்கு பயன் படாமலே இருந்து வருகிறது. இன்னு மின்னும் தெருக்களில் அலைந்து திரியும் குழந்தைத் தொழிலாளர்களே அதற்கு நிதர்சனமான சாட்சி.

கல்வியில் அரசியலும் ஊழலும் புரையோடி விட்டபின், குழந்தைகளைக் காப்பாற்றும் எண்ணத்துடன் பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தமிழ்நாடு பொதுக் கட்டிடங்கள் உரிமம் வழங்கல் சட்டம், அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் முறைப்படுத்துதல் சட்டம், மெட்ரிக்குலேசஷன் பள்ளிகளுக்கான விதிகள், அங்கீகரிக்கப்பட்ட மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கான விதிக்கோவை என எத்தனையோ இருப்பினும் அவை நடைமுறையில் உள்ளவையா என்றால் ‘இல்லை’ என்ற பதிலே வருகிறது.

நீதிபதி சம்பத் கமிஷன் ஆய்வு செய்த 2661 பள்ளிகளில் 625 பள்ளிகள் இன்னும் அங்கீகாரம் பெறாமலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன. இச்சூழலில் தமிழகத்தில் தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை 51,807 பள்ளிகள் இருக்கின்றன. இதில் எந்த அளவுக்கு விதி முறைகள் கடைப்பிடிக்கப் பட்டிருகிறது என்பது விடை தெரியாத புதிராகவே இருக்கும்.

ஒரு கும்பகோணம் சம்பவத்திற்குப் பின் அதிரடி நடவடிக்கை மேற் கொள்வதாய்... தமிழகமெங்கும் 4136 கீற்றுக் கொட்டகைப் பள்ளிகள் பிரித்து எறியப்பட்டன. அதன்பின் பேச்சு மூச்சைக் காணவில்லை. தமிழகக் கல்வி வியாபாரிகள் வழக்கம் போலவே கோடைகால விடுமுறைக்குப் பின் தங்களது வசூல் வேட்டையை ஆரம்பித்து விட்டனர்.

சுயவரலாறு தெரியாத, சிந்திக்க வைக்க முடியாத ஒரு மந்தைத் தனமான கல்வியைக் கற்பிக்கும் தற்போதைய கல்வி நிறுவனங்கள் ‘போன்ஷாய் பொம்மைகளாக’ குழந்தைகளை வார்த்தெடுக்கின்றன. இந்தக் குழந்தைகள் எந்தளவிற்கு இந்தச் சமூகத்தை மாற்றியமைக்கப் போகிறார்கள் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

நீதிபதி சம்பத் கமிஷன் போன்ற அவ்வப்போது கமிஷன்கள் அமைக்கப்படுவதும் அதன் பரிந்துரைகள் காற்றில் விடப்படுவதும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. 1940-களில் கல்வி குறித்து அமைக்கப்பட்ட ஹண்டர் கமிஷனிலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு கமிஷன்களை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். அத்தகைய நிலைக்கும் சம்பத் கமிஷன் பரிந்துரைகளும் ஆகிவிடக் கூடாது என்பதே பள்ளிக் குழந்தைகளை நேசிப்பவர்களின் கருத்தாக உருப்பெற்று உள்ளது. அத்துடன் பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது.ம் காலத்தின் தேவை. அதை மத்திய அரசு தனது தீவிர கவனத்தில் கொள்ள வேண்டும்

சம்பத் கமிஷன் பரிந்துரைகள்

1. வகுப்பறைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கதவுகள் இருக்க வேண்டும்.
2. தூய்மையான குடிநீர் வசதி இருக்க வேண்டும்.
3. போதுமான கழிவறைகள் இருக்க வேண்டும்.
4. விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும்.
5. பள்ளிக்கூட வாயில் நெடுஞ் சாலையில் இருக்கக் கூடாது.
6. குளம், காடுகளுக்கு பக்கத்தில் பள்ளிகள் இருக்கக் கூடாது.
7. பள்ளிக் கட்டிடத்தைச் சுற்றி சுவர் இருக்க வேண்டும்.
8. அடித்தளம் உறுதியானதாக இருக்க வேண்டும்.
9. இரண்டு தளங்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
10. மூன்றாம் வகுப்புவரை தரை தளத்தில் தான் இருக்க வேண்டும்.
11. சரியாக 1.6மீட்டர் அகலம் கொண்ட அவசர கால மாடிப்படி தேவை.
12. ஒவ்வொரு மாடிப்படியிலும் 16படிக்கு மேல் கூடாது.
13. படிக்கட்டுகள் தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.
14. ஒவ்வொரு வகுப்பறையின் அளவும் 400 சதுர அடி இருக்க வேண்டும்.
15. சுவரின் தடிமன் 23 செ.மீட்டருக்கு குறைவாக இருக்கக் கூடாது.
16. எந்த தளத்தில் இருந்தும் 21/2 நிமிடத்தில் வெளியேற வழி வேண்டும்.
17. தீயணைப்புக் கருவிகள் கட்டாயம் வைக்க வேண்டும்.

Pin It