Kamal and Kalanidhi

மனிதர்கள் ஒழுக்கம் பண்பாடு என்று எவற்றையெல்லாம் கருதுகிறார்களோ, அவற்றுக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத ஒழுக்கக் கேடர்களும், பண்பாடற்றவர்களுமே கடவுள்களாகக் கற்பனை செய்யப்பட்டுப் பூசனைக்குரியவர்களாகப் போற்றப்படுகிறார்கள்.

`போக்கிரிகளே கண்டிப்பான நீதிபதிகளாக இருக்கிறார்கள்’ என்பது எளிய மக்களின் நம்பிக்கை. பத்தினிக் கதைகளை அதிகமாகப் படித்துப் பாராட்டும் இந்தியாதான் `எய்ட்ஸ்’ நோயில் - உலகத்தர வரிசையில் - இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்பது முரண்பாடான வேடிக்கையாகும். மிதமிஞ்சிய - கட்டுப்பாடற்ற - காமவேட்கையும், சோரப் புணர்ச்சியுமே எய்ட்ஸ் நோயின் கருவறை என்று மருத்துவ ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.

டிசம்பர் முதல் தேதி `எய்ட்ஸ் விழிப்புணர்வு நாளாக’ அறிவிக்கப்பட்டு, உலகெங்கும் `எய்ட்ஸ்’ நோயைத் தடுப்பது குறித்து பிரச்சாரங்களும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தென்னிந்தியாவில் `எய்ட்ஸ் விழிப்புணர்வை’ ஏற்படுத்தும் பொறுப்பை நடிகர் கமலஹாசனும், சன் டிவி அதிபர் கலாநிதி மாறனும் ஏற்றுக் கொண்டார்கள்.

காதல் காட்சி என்கிற பெயரில், காம விகாரங்களையெல்லாம் வாரி வழங்கும் `எய்ட்ஸ் பரப்பி’களில் முன்னணியில் நிற்பவர் கமலஹாசன். இரவு பகலாக - `நான் ஸ்டாப் கொண்டாட்டமாக’ காம உணர்வைத் தூண்டுவதையே தொழிலாக நடத்துபவர் கலாநிதி மாறன்.

இந்த இருவரும் சேர்ந்து கலாச்சாரச் சீரழிவில் ஊறிப்போன சினிமாக் கலைஞர்களைத் திரட்டி `எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சி’ நடத்தினால் எப்படி இருக்கும்? ஆந்திராவில் நடந்த `எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சிகள்’ அத்தனையும் கமலஹாசனின் - கலாநிதி மாறனின் - புத்திக்கும் ரசனைக்கும் ஏற்பவே அரங்கேறின. விரசமான சொற்களோடும் விகாரமான ரசனையோடும் கவிஞர்கள் என்கிற பெயரில் போக்கிரிகள் எழுதிய பாடல்களும், `அம்மண தரிசனத்தோடு கொக்கோக அபிநயங்களும், கூடியிருந்த கூட்டத்துக்குப் போதை ஏற்றின. இடையிடையே எய்ட்ஸ் நோயாளிகள் மேடை ஏற்றப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்கள். (அதாவது நோயாளிகளிடம் அன்பு செலுத்துங்கள்; அவர்களைப் புறக்கணிக்காதீர்கள் என்று வலியுறுத்துகிறார்களாம்.) பிற நாடுகளிலும் இம்மாதிரியான கொண்டாட்டங்களும் பிரச்சாரமும்தான் நடந்தன.

அர்ஜெண்டினாவில், பியூனஸ் அயர்ஸ் நகரில் உலக அதிசயங்களில் புதிதாய் ஒன்று நிறுவப்பட்டதுபோல் வானைத் தொடுகிறமாதிரி ஒரு காண்டம் (ஆணுறை) வைக்கப்பட்டு வினோதமாகவே எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊட்டப் பட்டது. எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பும் எந்த முதலாளியும் குறள்கூறும் இன்பத்துப்பாலை வலியுறுத்த விரும்புவதில்லை. எய்ட்சைக் கட்டுப்படுத்த முதலாளித்துவ உலகம் பரிந்துரைக்கும் ஒரே தீர்வு பாதுகாப்பான `செக்ஸ்’ உறவுதான்.

அதாவது விதவிதமான ஆணுறைகளை விற்பனை செய்வதுதான்.

கவர்ச்சி காட்டுவதில் பணம்,
காம உணர்வைத் தூண்டுவதில், பணம்.
அச்சுறுத்திக் காண்டம் விற்பதில், பணம்.
எத்தனை அற்புதமான வர்த்தக உத்தி!

-இளவேனில்

Pin It