caste 350வருணமும் சாதியும் பல நூற்றாண்டுகளுக்கு மேலாக பல்வேறு சமூகங்களில் காலூன்றிய ஒரு அமைப்பாக உள்ளது. இவ்விரண்டும் மக்களிடையே ஏற்றத்தாழ்வையும், தீண்டாமையையும் ஏற்படுத்தி மக்களை பல்வேறு சமூகப் படிநிலைகளாக வகைப்படுத்தி யுள்ளது. குறிப்பாக சிலர் வருணத்திற்கும், சாதிக்கும் பெரிதும் வேறுபாடுகள் இல்லை என்றே நினைக் கின்றனர். ஆனால், இவை இரண்டிற்கும் அடிப்படையே வேறு வேறு. பண்டையத் தமிழ்ச் சமூகம் வருணமும் சாதியும் இல்லாத ஒரு குடி சமூக அமைப்பாக இருந்துள்ளது. கால ஓட்டத்தால் அந்நியர்களின் படையெடுப்பாலும், ஆட்சியாலும் வட இந்தியாவில் இருந்த வருண அமைப்புமுறை தொடர்ந்து தென்னிந்தி யாவில் பரவத் தொடங்கியது. இவ்வாறு தொடர்ந்த வருண அமைப்பானது பல்வேறு காலகட்டங்களில் பல சாதிகளாகவும், உட்சாதிகளாகவும் பிளவுற்று இன்று பல்வேறு சாதியச் சமூகமாகவும் விரிந்து கிடப்பதையும் காணமுடிகிறது.

வருணமும், சாதியும் பற்றி விளக்கம் காண்பதற்கு முன்பு வருணத்திற்கு அடிப்படையாக விளங்கும் மனுவின் தோற்றம் பற்றிய சில குறிப்புகளை காண் போம். மனுதர்மத்தின் பெரும் விரிவுரையாளரான  ‘மெக்காதே’ என்பவரின் கருத்துப்படி மனு என்பர் நிச்சயமாகவே ஒரு தனி ஆள்தான் ஆகவே மனுஸ்மிருதியின் உண்மையான ஆசிரியரான ‘சுமதி பார்க்கவே’ என்பவரையே மனு என்ற பெயர் குறிப்பிடுகின்றது. சுமதி பார்க்கவே எந்த ஆண்டில் மனு விதிகளை தொகுத்தார் என்பது தெரியவில்லை. ஆனால் எந்தக் காலகட்டத்தின் போது இது தொகுக்கப்பட்டது என்பது பற்றி குறிப்பிடமுடியும். கி.மு.170-150க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் மனுஸ்மிருதி என்ற பெயரால் வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தினர் என்பது பெரும்பாலானோர் அறிஞர்களின் கருத்தாக உள்ளது (ஐயங்கார் 2013: 545-546).

அடுத்ததாக வருணத்திற்குள் நுழைவோம் வருணம் என்பது பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பதாகும். குறிப்பாக வருணம் தொடக்க காலத்தில் நிறத்தையே குறிக்கப் பயன்பட்டது. பிராமணர்களின் நிறம் வெள்ளை நிறமாகவும், சத்திரியர்கள் சிவப்பு நிறமாகவும், வைசியர்கள் மஞ்சள் நிறமாகவும், சூத்திரர் கருப்பு நிறமாகவும் என தனித்தனியே பிரித்துக் காட்டியதே வருணத்தின் சிறப்பு அம்சமாகும் (இரவிச்சந்திரன் 2014: 15). இவ்வகையான வருணமுறை தமிழ்ச் சமூகத்திற்குப் பொருந்தாது. வருணமானது மாறும் தன்மை கொண்டது. மேலும் சாதியைப் போல் பல உட்பிரிவுகளைக் கொண்டதல்ல வருணம். வருணங்களில் உட்பிரிவுகள் கிடையாது. வருணங்கள் என்பவை ஏராளமான சாதிகளை உள்ளடக்கிய ஓரு கூட்டு வகையைக் குறிக்கும்.

வருணநெறி முதலில் தொழில் பிரிவின் அடிப் படையில் அமைந்திருந்தது. பிறப்பின் அடிப்படையில் இல்லை. இதனால் ஒரு வருணத்தில் பிறந்தவர்கள் தொடர்ந்து அதே வருணத்தினராகவே இருந்து வருவார்கள் என்பது கட்டாயம் இல்லை. வருணங் களுக்குள் இயங்குதல் தன்மை இருந்தது. தொழில் பிரிவினை அடிப்படையில் வருணத்தை நிர்ணயிக்கும் முறை மாற்றப்பட்டு பின் பிறப்பின் அடிப்படையில் ஆக்கப்பட்டது. வருணம் பிற்காலத்தில் பரம்பரை உரிமையாக மாற்றப்பட்டது (கேசவன் 1995: 12).

அடுத்ததாக சாதியின் சில அம்சங்களைப் பற்றி காண்போம். சாதியத்துக்கு உரிய அம்சங்களான பிறப்பின் அடிப்படையில் தொழில் திருமண உறவுக் கட்டுப்பாடு, சமூகப் படிநிலை அமைப்புமுறையை காணலாம். இத்தகைய பொதுவான அம்சங்களே சாதியின் தோற்றம் வருணமுறையிலிருந்து உருவானது என்ற கருத்தாக்கத்துக்கு  துணை செய்கின்றது (மேலது: 13). சாதி என்பது பல. சாதிக்குள்ளேயே துணைச்

சாதி, குலம், கோத்திரம் எனப்பல நுண்பிரிவுகளை உள்ளடக்கியதாகவே உள்ளது. ஆகவே சாதியானது அகமணமுறை கொண்டதாகவும், மாற்ற முடியாத தன்மை உடையதாகவே காணப்படுகிறது. ஒருவன் எந்த சாதியில் பிறக்கின்றானோ அவன் இறக்கும் வரை அதே சாதியில்தான் இறக்க வேண்டும் என்பது நியதியாகவே உள்ளது.

வருணம் சாதியாக மாறுதல்

வருணம் சாதியாக மாறிய காலத்தை துல்லியமாக குறிப்பிட முடியாது. இருந்த போதிலும் இவ்விரண்டுக்கு மான ஒற்றுமை வேற்றுமைகளை தெளிவுபடுத்த முடியும் என்பதை அம்பேத்கர் கூற்றுப்படி நிறுவமுடியும்.

1. வருணமும் சாதியும், அந்தச் சொற்களின்படி இரண்டும் ஒரே பொருளைக் கொண்ட சொற்களே. இந்த இரண்டுமே அந்தஸ்து((Status), தொழில் (occupation) இரண்டையும் குறிப்பிடுகின்றது.

2. அந்தஸ்து, தொழில் ஆகிய இந்த இரண்டு கருத்துகளுமே வருணம் சாதி ஆகிய கருத்துகளில் இடம் பெறுகின்றன. ஆனால், ஒரு முக்கிய விசயத்தில் மட்டும்  வருணமும் சாதியும் வேறுபடுகின்றன.

3. வருணமுறையில் அந்தஸ்தோ அல்லது தொழிலோ தலைமுறைத்தன்மை (hereditary) கொண்டதல்ல. ஆனால் சாதியோ, அந்தஸ்தும் தொழிலும் தலைமுறைத்தன்மை கொண்டதான (தந்தையிடமிருந்து மகனுக்கு) ஒரு அமைப்பை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது.

வருணம் சாதியாக மாறியதில் மூன்று கட்டங்களை முதன்மையாய்க் கூறலாம்.

1. முதலாவது வருணத்தின் கால அளவு அதாவது ஒருவரின் அந்தஸ்தும் தொழிலும் வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மட்டுமே என்றிருந்தது.

2. இரண்டாவது கட்டத்தில் ஒருவரின் அந்தஸ்தும், தொழிலும் அவன் வாழ்நாள் முழுவதற்கு மட்டுமே என்றிருந்தது.

3. மூன்றாவது கட்டத்தில் அந்தஸ்தும், தொழிலும் பரம்பரை உரிமையானது. வருணத்தால் அளிக்கப்பட்ட அமைப்பு ஆரம்பக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான அமைப்பாக மட்டுமே இருந்தது. அதன் பின்பு வாழ்க்கைக்கான அமைப்பாக மாறியது. முடிவாகப் பரம்பரைக்கான ஓர் அமைப்பாக மாறி வருணம் சாதியாக மாற்றிச் சொல்லப்பட்டது. வருணம் மாறிய இந்த கட்டங்களைப் பற்றி மத இலக்கியங்களிலும் மரபுகளிலும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

வருண கலப்பு மணமும் புதிய சாதிகளின் உருவாக்கமும்

ஒரு சூத்திரன், ஒரு தலைமுறைகளில் தொடர்ந்து பார்ப்பான் சாதியில் திருமணம் செய்து கொண்டால் அந்த சூத்திரனும் பார்ப்பான் ஆகின்றான் என்கிறது மனு (X.64-67). மனுதர்மத்தில் குறிப்பிடப்படும் நான்கு வருணங்களுக்கிடையே கலப்புத் திருமணம் நடை பெற்றதையும் மனு குறிப்பிடுகிறது. உதாரணமாக,

1.            பிராமண தந்தைக்கும் சத்திரியத் தாய்க்கும் பிறந்தவர் - பிராமணர்.

2.            சத்திரிய தந்தைக்கும் வைசியத் தாய்க்கும் பிறந்தவர் - சத்திரியர்.

3.            வைசிய தந்தைக்கும் சூத்திரத் தாய்க்கும் பிறந்தவர் - வைசியர்.

4.            சத்திரிய தாய்க்கும் சூத்திரத் தந்தைக்கும் பிறந்தவர் - குசலன்.

5.            சத்திரிய தந்தை (சந்தனு)க்கும் சூத்திரத் தாய் (அனாமிக்)க்கும் பிறந்தவர் - பீஷ்மர் (சத்திரியர்).

6.            யயாதி தந்தைக்கும் (சத்திரியர்) தேவயானி (பார்ப்பான்) தாய்க்கும் பிறந்தவர் - யாது (சத்திரியர்).

இவ்வகையான வருணக்கலப்பு மணத்தை பார்க்கும் பொழுது தாயின் வருணம் மேல் வருணமாக இருந்த போதிலும், தந்தையின் வருணம் கீழ் வருணமாக இருந் தாலும், பிறக்கும் குழந்தை தந்தையின் வருணமாகவே கருதப்பட்டது. இவற்றிலிருந்து தந்தையின் வருணம் கீழ் வருணமாகக் காணப்பட்டாலும் இங்கு தீண்டாமை வருணம் என்று எதுவும் குறிப்பிட்டு சொல்லப்பட வில்லை. மேலும் வருணக்கலப்பு மணங்களைப் பற்றி ஆராய இந்து மதத்தின் பழைய புராணங்களும், இதிகாசங்களும் நமக்குத் துணைபுரியும். காலப்போக்கில் வருணக்கலப்பு மணங்கள் பல சாதிகள் உருவாகக் காரணமாயிற்று. இச்சாதியின் வளர்ச்சியானது கால ஓட்டத்தால் பல உட்சாதிகள் ஏற்படுத்தியதோடு அகமணமுறையும் தீண்டாமையும் உருவாக்கியது.

தமிழ்ச் சமூகத்தில் வருணமும் சாதியும்

பண்டைய தமிழ்ச் சமூகமானது ஐந்திணைகளை உள்ளடக்கிய ஏற்றத் தாழ்வற்ற ஒரு சமூகமாக இருந்ததை சங்க இலக்கிய பாடல்கள் சிலவும் எடுத்தியம்புகின்றன. குறிப்பாக திணைகளுக்குள் திணைக்கலப்பு நடந்ததைப் பற்றியும் பல சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது. இன்றைய சாதிய சமூகம் போல அகமணமுறை கொண்ட சமூகம் என்றோ, குறிப்பிட்ட தொழிலைச் செய்யவோ, தூய்மை, தீட்டு என்ற நிலை இல்லாமல் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்ததையும் சங்க இலக்கியங்களில் சில பாடல்கள் பதிவு செய்துள்ளன. இவையனைத்தும் திணை மக்களின் வாழ்க்கை பிரதிபலிப்பதாகவே உள்ளது. இவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையையே மேற்கொண்டனர். இம்மக்கள் வாழ்ந்த பகுதி ‘திணை’ என்னும் பெயரால் குறிக்கப் பட்டுள்ளது. இதனையே,

“குறிஞ்சி  பரதவர் பாடநெய்தல்

நறும்பூங் கண்ணி குறவர் சூடக்

கானவர் மருதம் பாட வகவர்

நீனிற முல்லைப் பஃறிணை நுவல

.......................................Ó

(பொருநரா.படை 218-231)

எனும் பாடல் அடிகளால் மக்களின் கூட்டுவாழ்க்கை மேற்கொண்டனர்  என்பதை அறியமுடிகிறது (மனோன் மணி சண்முகதாஸ் 2007:70).

தமிழகத்தில் ஆசிரியரும், பூசாரியும், துறவியரும் அந்தணர் என்றும், ஆட்சிவினை பூண்டோர் அரசர் என்றும், விற்பனையும் இருவகை வணிகமும் மேற் கொண்டோர் வணிகர் என்றும், உழுதும் உழுவித் துண்போர் வேளாளர் எனவும் அழைக்கப்பட்டனர் (தேவநேயப்பாவாணர் 1986:144). தவிர வடஇந்திய வருணாசிரம முறையான பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று அழைக்கும் முறை இல்லை என்பதும் தெளிவாகிறது.

உயர்குடியாக்கம்

இந்தியச் சமுதாயத்தில் பழங்குடியினரும் பிற் படுத்தப்பட்ட பிரிவினரும் பிற கீழ்க்குடியினரும் உயர் குடியினரின் பண்பாட்டை ஏற்றுக் கொண்டு சமூதாயத்தில் தங்கள் தகுதிகளை உயர்த்திக் கொள்ளும் முறையே உயர்குடியாக்கம் என்று கூறலாம். இச்சொல்லை முதலில் அறிமுகப்படுத்தியவர் எம்.என்.சீனுவாஸ் ஆவார். குறிப்பாக சாதிய படிநிலையில் கீழே உள்ளவர்கள் தங்களுக்கு மேல் உள்ள சாதிகளைப் போல் மாற விழைவார்கள். இவ்வாறாக ஒவ்வொரு சாதியும் அவர்கள் வாழ்க்கை முறையைப் பின்பற்றி தங்களின் சமுதாய தகுதியை உயர்த்திக் கொள்ள முயலுகின்றன. இந்நிகழ்வே உயர்குடியாக்கம் எனலாம். பிராமணர்களின் வாழ்க்கை பின்பற்றுவது மட்டும் உயர்குடியாக்கம்முறை நிகழவில்லை என்றும் இதில் நான்கு வகையான உயர்குடியாக்கம் நிலவுகிறது என்று கருதினார். அவை,

1.            பிராமண வகை உயர்குடியாக்கம்

2.            சத்திரிய வகை உயர்குடியாக்கம்

3.            வைசிய வகை உயர்குடியாக்கம்

4.            சூத்திரர் வகை உயர்குடியாக்கம்

என்று வகைப்படுத்தியுள்ளனர். முதல்வகையில் பிராமணர் களுக்குக் கீழுள்ளவர்கள் பிராமணர்களை முன்மாதிரிக் குழுவாக ((reference group) கொண்டு அவர்களின் வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவர். இரண்டாம் வகையில் கொண்டு அவர்களின் வாழ்க்கை மரபுகளைத் தழுவி அவர்களின் அளவு உயர முயலுவார்கள். மூன்றாம் வகையில் வைசியர்கள் முன் மாதிரியாகக் கொள்ளப் படுவர். நான்காம் அரிசனங்களுக்குக் கீழ் உள்ள தீண்டாமைச் சாதியினர் அரிசனங்கள் அல்லது அவர்களுக்கு உயர்வாகக் கருதப்படும் சில பிரிவினர் அளவிற்குத் தங்களை உயர்த்தி கொள்ள முயலுவர் (பக்தவத்சல பாரதி 2009: 583).

தமிழ்ச் சமூகம்: சாதிய சமூகத்தில் இருந்து மீண்டும் வருண சமூகமாக மாறுதல்

மேலே குறிப்பிட்ட நான்கு வருண கோட் பாடானது வட இந்தியாவிற்கு பொருந்தி வருவதை பார்க்கமுடியும். ஆனால், தென்னிந்தியாவில் பொருத்திப் பார்க்க சில சிக்கல்கள் இருக்கின்றன. ஏனெனில் பண்டைய தமிழ்ச் சமூகம் குடியமைப்புமுறை கொண்ட சமூகத்திலிருந்து மெல்லமெல்ல சாதியச் சமூகமாக மாறியது. இவற்றை காணும் பொழுது இன்றைய சூழலில் ஒவ்வொரு மனிதனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள சாதியைவிட உட்சாதியையே முதன்மையாகக் காட்டிக் கொள்கின்றனர். தென்னிந்திய சூழலில் யாரும் தன்னை இந்த வருணம் என்று குறிப்பிட்டு சொல்லு வதில்லை. மாறாக சாதியை மட்டுமே முதன்மைப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால், இன்றைய நவீனமயமாக்கப் பட்ட சூழலில் சாதியச் சமூகப் படிநிலை வரிசையில் கீழ்நிலையில் உள்ளவர்கள் தங்களை மேல்நிலை யாக்கத்தில் உயர்த்திக் கொள்ள தங்களை சாதி உட்சாதியோடு வருணத்திற்குள் நுழைய விரும்பு கின்றனர்.

உதாரணமாக பிராமணர் வருணத்திற்கு நிகராக ‘விஸ்வகர்மாக்கள்’ என்று அழைக்கப்படும் பஞ்ச கம்மாளர்கள் பிராமணர்களைப் போல் பூநூல் தரித்துக் கொண்டும், புராணங்களை உருவாக்கிக் கொண்டும் முதல் வருணத்தில் நுழைகின்றன. இரண்டாவது வருணமாகிய சத்திரியர் வருணத்தில் வன்னியர்களும், நாடார்களும், பிள்ளைமார்களும் நுழைய போராடிக் கொண்டிருக்கின்றனர். தென்னிந்தியாவில் சத்திரியர் என்ற சொல்லுக்கு பொருத்தமான சாதி அடையாளம் இல்லாத நிலையில் வன்னியர்களும் தங்களை ‘அக்கினி குல சத்திரியர்’ என்றும், ‘வன்னியகுல சத்திரியர்கள்’ என்றும் மிகைப்படுத்திக் கொண்டு கடவுளின் பெயரால் புராணங்களை உருவாக்கிக் கொண்டனர். நாடார்களும் ‘வலங்கை மாலை’ என்னும் புராணங்களை ஏற்படுத்தி வருணத்தில் நுழைந்து கொண்டனர். மூன்றாவது வருணமான வைசியர் வருணத்தில் ‘ஆயிர வைசிய செட்டியார்’களும் இணைந்து கொண்டனர்.

நான்காவது வருணமான சூத்திர வருணத்தில் வேளாண்மை செய்பவர்கள் தங்களை ‘கங்கையின் புதல்வர்கள்’ என்றும் கூறுகின்றன. இவ்வகையான நிகழ்வுகளை ஒட்டுமொத்தமாகக் காணும் பொழுது இதுவரையில் சாதியில் இருந்து உட்சாதியாகப் பிரிந்து அடையாளம் காணப்பட்டவர்கள் இன்று சாதியச்

சமூகப் படிநிலையில் உயர் வருணத்தின் இடத்தில் தக்க வைத்துக் கொள்ள புராணங்களை ஏற்படுத்திக் கொண்டும், வருணத்தில் நுழைவதன் சமூகத்தில்  முன்னேற விழைகின்றனர் என்பதும் தெள்ளத் தெளிவாகிறது. இவ்வாறாக தமிழ்ச் சமூகமானது சாதியச் சமூகத்தில் இருந்து மீண்டும் வருணப் படிநிலையில் உயர்த்திக் கொள்ள விரும்புகின்றது.

துணை நின்ற நூல்கள்

1) இரவிச்சந்திரன், தி.கு. 2014. தீண்டாமை நனவிலி சாதியம் உளப்பகுப்பாய்வு. சென்னை: அலைகள் வெளியீட்டகம்.

2) ஐயங்கார், கோ. 2013. டாக்டர் அம்பேத்கர். சென்னை: வ.உ.சி.நூலகம்.

3) கேசவன், கோ. 1995. சாதியம். விழுப்புரம். சரவணபாலு பதிப்பகம்.

4) தேவநேயப்பாவாணர். 1986. பழந்தமிழராட்சி. சென்னை: பாரி நிலையம்.

5) பாரதி, பக்தவத்சல. 2009. பண்பாட்டு மானிடவியல். சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.

6) மனோன்மணி சண்முகதாஸ். 2007. சாதியும் துடக்கும். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

7) வீரமணி, கி. 2009. அசல் மனு தரும சாஸ்திரம். சென்னை. திராவிடக் கழகம் வெளியீடு.

Pin It