அண்மைப் படைப்புகள்

கீற்றில் தேட

ungalnoolagam june 17

சென்ற இதழின் தொடர்ச்சி...

நமது உரிமைகளுக்காக மக்களைச் சங்கமாக்குவது, அவர்களைத் திரட்டித் தெருவுக்குக் கொண்டு வருவது என்ற சனநாயகத்தின் முக்கியமான பணியை கம்யூனிஸ்டுகள் இந்த நாட்டில் வெற்றிகரமாகச் செய்துள்ளார்கள். சனநாயகத்தின் இந்த மகத்தான ஆற்றலை நாம் இழக்க முடியாது. மாறாக, சனநாயகத்தின் இந்த ஆற்றலின் மீதுதான் நாம் சோசலிசத்தின் தன்னுணர்வைக் கட்டியெழுப்ப வேண்டும். தோழர் தா.பாண்டியன் இந்நூலின் முதலிலிருந்து முடிவு வரை சனநாயகத்தின் குரலாக ஒலித்துள்ளார்.

- ந. முத்துமோகன் (அணிந்துரையில்)

மானிட சமூக வளர்ச்சியில் தொடங்கி, உலக வரலாறு, இந்திய விடுதலை இயக்க வரலாறு, உலகப் பொதுவுடைமை இயக்க வரலாறு, இந்திய விடுதலை இயக்கம், இந்தியப் பொதுவுடைமை இயக்க வரலாறு, உலகமயமாக்கத்தின் எதிர் விளைவுகள் என நூலின் செய்திகள் விரிவடைந்து கொண்டே செல்கின்றன. இவர் விவாதிக்கும் பல செய்திகள் தொடர்பான அய்யப்பாடுகள் பலரின் உள்ளங்களில் இருப்பவைதான். ஆனால், அவை தீர்க்கப்படாமல் அய்யங்களாகவே நீடிக்கின்றன. தோழர் தா.பா. அய்யங்களுக்குத் தீர்வு காணும் முயற்சியால் ஈடுபடுகிறார்.

மனித சமூகத்தின் வளர்ச்சிப் போக்கு குறித்தும்,  இவ்வளர்ச்சியில் உருவான அடிமைச்சமுதாயம் நிலவுடைமைச் சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம் உருவாக்கிய தொழிலாளி வர்க்கம் என்பன குறித்து மார்க்சியம் விரிவாக எடுத்துரைக்கிறது. மார்க்சியத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றான வரலாற்றுப் பொருள்முதல்வாதம் இச்செய்தி களை உள்ளடக்கியதுதான். வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தின் வழிநின்று, தோழர் தா.பாண்டியன் மேற்கூறிய சமூக வளர்ச்சிக் கட்டங்களை எளிமையாக அறிமுகப்படுத்திச் செல்கிறார். ஆனால் அறிமுகப் படுத்துதலின் போதே, பல வினாக்களை எழுப்பி அவற்றிற்கு விடை அளிக்கும் பாணியைப் பின்பற்று கிறார். அத்துடன் சமத்துவம் குறித்த சிந்தனையானது பழமையான ஒன்று என்பதையும், பல்வேறு சமயவாதி களின் கருத்துக்களின் துணையுடன் நிறுவுகிறார். இப்படி நிறுவும்போது ‘கார்ல் மார்க்சுக்கு முந்தியும் பல்லாயிரம் ஆண்டுகளாக சான்றோர்களும் மதத்தலைவர்களும் சமத்துவத்தை வேண்டியும் வராமல் இருப்பதற்கு என்ன காரணம்? சமத்துவம் என்பது சாத்தியம் தானா? என்ற வினாக்களை எழுப்பி முதலாளித்துவம் தோன்றிய வரலாற்றை எளிமையாக, ஆனால் ஆழமாக எடுத்துரைக் கிறார். இதன் ஊடாக இந்திய முதலாளித்துவம் குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் முன் வைக்கப் பட்ட அறிக்கையின் போதாமையையும் விமர்சிக்கிறார்.

‘இந்தியாவில் உள்ள பலகோடி ஏழை உழைப் பாளர்கள், தொழிலாளர்களைத் தங்களிலும் வசதி படைத்த மேம்பட்ட புதிய வர்க்கமாக மட்டுமே பார்க்கிறார்கள்’ என்ற கருத்தை முன்வைக்கிறார். இதன் தொடர்ச்சியாக முதலாளித்துவ சமூகத்தில் இடையிடையே தோன்றும் ‘பொருளாதார நெருக்கடி’ குறித்தும், அதை முதலாளித் துவம் எதிர்கொள்ளும் முறை குறித்தும், ‘முதலாளித் துவத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு, எதிர்ப்பு உணர்வு ஏற்படாது மங்கி வருவதற்கான காரணங்கள் குறித்தும் சில கருத்துக்களை முன்வைக்கிறார். இதனூடாக இந்திய, உலகப் பொதுவுடைமை இயக்கங்களின் போதாமை குறித்த சில விமர்சனங்களையும் முன் வைக்கிறார். இது சிலருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு அதிர்ச்சியை அளிக்கலாம். இவ்விரண்டில் இருந்தும் விடுபட்டு, சிந்திக்க வேண்டிய செய்திகள் இவை.

இந்தியாவில் இடதுசாரி இயக்கம்

இந்தியாவில் நிகழ்ந்த ஆங்கிலக் காலனிய ஆட்சிக் கெதிரான போராட்டத்தினூடாக இடதுசாரி சிந்தனை, குறிப்பாக கம்யூனிஸ்ட் சிந்தனை உருப்பெற்று, இயக்கமாக மாறியதையும், அதன் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் ஆராய்கிறார். தோழர்கள் சி. சுப்பிர மணியன், சக்ளத்வாலா, பி.சி.ஜோஷி ஆகியோரின்  கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க்கையில், எதிரிகளால் மட்டுமல்ல, சொந்த இயக்கத்தாலும் இடையூறுகளுக் காட்பட்ட அவலத்தை எடுத்துரைக்கிறார். இது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல என்பதை மூத்த இயக்கத் தோழர்கள் நன்கு அறிவர். 1942 ஆகஸ்ட் போராட்டம் தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த தவறான முடிவு குறித்தும் விமர்சன அடிப்படையிலான கருத்துக்களை முன் வைக்கிறார். இதுபோன்றே ‘மக்கள் யுத்தம்’ என்ற பெயரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1948இல் எடுத்த முடிவை, அக்காலத்தில் இந்திய அரசியல் சூழலின் பின்புலத்தில் ஆராய்ந்து அதன் எதிர்மறையான விளைவுகளையும் வெளிப்படுத்துகிறார்.

1952, 1957 ஆம் ஆண்டுகளில் நடந்த இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்தும், 1962-இல் நிகழ்ந்த சீனப்படையெடுப்பு தொடர்பான அணுகுமுறையால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவையும் எடுத்துரைக்கிறார்.

காந்தியைக் குறித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கடந்த கால அணுகுமுறை குறித்து விவாதிக்கும் தோழர் தா.பாண்டியன், கடந்த கால வரலாற்று நிகழ்வுகளை நினைவுபடுத்திவிட்டுப் பின்வரும் மதிப்பீட்டை முன்வைக்கிறார்:

தொடக்க காலம் முதலே இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி இந்திய மண்ணில் காலூன்றி நின்று, இந்திய சமுதாய அமைப்பையும் சரியாக மதிப் பிட்டு சுயமாக, சுதந்திரமாக முடிவெடுத்து அதற்கு ஏற்ப, அந்தக் கட்டத்தில் அந்தக் கடமை களை நிறைவேற்ற, நேச சக்தி எது? முறியடிக்க வேண்டிய முக்கிய முதல் எதிரி சக்தி எது? என்று இந்தியக் கம்யூனிஸ்டுகள்  முடிவு எடுப்பவர்களாக இருந்திருக்க வேண்டும். மாறாக சர்வதேசியம் என்ற கோட்பாட்டை யாந்திரிகமாக ((Mechanic) நடைமுறைப்படுத்தி வழிகாட்டுதலுக்கு ஆட்பட்டு விட்டதே ‘முதற் கோணல் முற்றிலும் கோணல்’ எனத் தவறாக அடி எடுக்க வைத்துவிட்டது.

இதற்கு அடுத்த கட்டமாக, சோவியத் புரட்சியில் வெற்றி, பின்னர் பல துறைகளில் அந்நாடு செய்துவந்த மாற்றங்கள், வளர்ச்சி காரணமாக, புரட்சிகர உணர்வின் காரணமாகவே சோவியத் ரஷ்யாவை, அந்நாட்டுக் கட்சியை தார்மீக வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு விட்டனர்.

ரஷ்யக் கம்யூனிஸ்டுக் கட்சி அமைக்கப்பட்ட வடிவம், முறைகள், விதிகள் வழிப்படிதான் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் அமைப்பும் வடிவமைப்பும் பெற்றது. விதிமுறைகளும், பக்தியோடு பின்பற்றப்பட்டன. லெனினியக் கோட்பாடு, ஜனநாயக மத்தியத்துவம், அந்திய வர்க்கப்போக்கு என்பன போன்ற வரன்முறைகள், புரட்சிகரக் கட்சிக்குத் தேவையான கட்டுப் பாட்டைக் கட்டிக் காக்கத் தேவை எனக் கூறப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இந்தியச் சமூக அமைப்பையும் கருத்தில் கொண்டு அரசியல் இயக்கங்கள், கொள்கைகள், நடைமுறைகள், அதை முறைப் படுத்தும் வழிமுறைகள் என சுயமாகச் சிந்தித்து உருவாக்குவதற்குப் பதிலாக மதவாதிகள், சில சடங்குகளை, சொற்பதங்களை, மரபுகளை, ஏன் உடை அணிவது, நல்ல நாள், கெட்டநாள் பார்த்து உணவு தயாரிப்பது போல, விஞ்ஞான ரீதியில் விஞ்ஞானக் கண்கொண்டு நெறிமுறை வகுக்க வேண்டியவர்கள், பிறநாட்டுச் சிந்தனை முடிவுகளுக்கு ஆட்பட்டனர். (பக்கம். 89-90)

இது ஒரு கடுமையான குற்றச்சாட்டு. ஆனால், கோபம் கொள்ளாமல் விடை கூறவேண்டிய  குற்றச் சாட்டு. அல்லது, குறைந்தபட்சம் அந்தரங்க சுத்தியோடு விவாதிக்க வேண்டிய குற்றச்சாட்டு.

இதன் அடுத்த கட்டமாக சிங்காரவேலர், பெரியார், அம்பேத்கார் ஆகியோருடனும் அவர்கள் சிந்தனைகளுடனும், உருவாக்கிய இயக்கங்களுடனும் உறவுகொள்ளாதது ஏன் என்ற வினாவை எழுப்புகிறார் (இன்று இந்நிலை இல்லை).

இதன் தொடர்ச்சியாக எந்தெந்த முற்போக்கு இயக்கங்களுடன் தொடர்பு கொள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் தவறிவிட்டது என்பதையும் விரிவாக எடுத்துரைக்கிறார். அதே நேரத்தில் காலனிய எதிர்ப்பில் இக்கட்சியின் ஆக்கப்பூர்வமான பங்களிப் பையும் எடுத்துரைக்கத் தவறவில்லை.

அதே நேரத்தில் மக்களிடமிருந்து இடதுசாரிகள் அந்நியப்பட்டுப் போனார்கள் என்ற குற்றச்சாட்டையும் இவ்வாறு முன்வைக்கிறார்:

இந்தியாவில் இடதுசாரிகளை தேசிய இயக்கமோ, சமூக சீர்திருத்தவாதிகளோ வெறுத்து ஒதுக்க வில்லை. பொதுவுடைமைக் கருத்தையும், புரட்சி பற்றியும் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து கொண்டே பேச அனுமதிக்கப்பட்டனர். பல பொறுப்புக் களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தீவிரவாதப் போக்கு என்ற பெயரால், கட்சியை அவர்களே மக்களிட மிருந்து தனிமைப்படுத்திவிட்டார்கள். (பக்கம். 55)

சோவியத் வீழ்ச்சி

சோவியத் வீழ்ச்சிக்கான காரணங்கள் பலதரத்தவை. பல தரப்பினராலும் திரும்ப திரும்பக் கூறப்படும் செய்தி, அங்கு ஜனநாயகம் இல்லை என்பதாகும். இதைத் தோழர் தா.பாண்டியன் மறுக்கவில்லை. இக்குறைபாடு மட்டுமின்றி உலகச் சந்தையில் வாணிபம் செய்ய முற்படாமையும் அதன் வீழ்ச்சிக்கான காரணி களில் ஒன்று என்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் முன்வைக்கும் கருத்துக்கள் வருமாறு:

சோவியத் ஒன்றியத்துக்கு ஏற்றுமதி மூலம் வரவு என்ற ஒன்று இல்லாமல் இருந்தது.

தற்போதுள்ள சீனத்தலைமை, கலப்புப் பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கி, பல பொருள்களை உலகச்சந்தையில், குறிப்பாக அமெரிக்காவில் விற்று, லாபம் ஈட்டி அதன் மூலம் ஆறு டிரில்லியன் அல்லது ஆறு லட்சம் கோடி டாலர் கடனை “அமெரிக்காவுக்கு”த் தரும் நாடாக மாறி நிற்கிறது. பொருளாதார வலிமையால் இன்று சீன மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்தே வருகிறது.

சீன நாடு கலப்புப் பொருளாதார முறையை ஏற்றுக்கொண்ட பின், முதலீடுகளுக்கும் அனுமதி வழங்கியது. சொந்தத் தொழிற்சாலைகளையும் கட்டியது.

முக்கியமாக உள்கட்டமைப்பு (Infrastructure) என்ற சாலைகள், மின் உற்பத்தி, கல்வித்துறை விரிவாக்கம், மருத்துவ வசதிகளைப் பெருக்கியது. (பக்கம். 122-124)

நுகர்வியத்தின் தாக்கம் சோவியத் ஒன்றியத்தில் மேலோங்கியதும் அதன் வீழ்ச்சிக்கு ஒரு காரணியாக அமைந்தது என்கிறார்.

உலகப் பொதுவுடைமை அரசுகளின் முன்னோடி யான சோவியத் வீழ்ச்சியைக் குறிப்பிட்டுவிட்டு கம்யூனிஸ்டுகள், இந்தியாவில் முதன்முதலாகத் தேர்தல் வெற்றி வாயிலாக 1957இல் ஆட்சியமைத்த கேரளம் குறித்தும் இதன் தொடர்ச்சியாக ஆட்சியமைத்த மேற்கு வங்கம், திரிபுரா குறித்தும் ஆராய்கிறார். இம்மூன்று மாநிலங்களுள் கேரளத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது,

"தொடக்க காலம் முதலே கம்யூனிஸ்ட் கட்சி சர்வாம்ச கோரிக்கைகளுக்காக (All inclusive Comprehensive demands)ப் போராடும் கட்சியாக, அதற்கும் மேலாக, சமூக சீர்திருத்த இயக்கங்களை நட்பு ரீதியாக நடத்தும் கட்சியாக மக்கள் மதிப்பிட்டனர். எனவேதான், கேரள சிந்தனை யாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் பொது வுடைமை சாரத்தை ஏற்றே கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இவ்வாறுதான் போராட்ட இயக்கத்தில் பூத்த மலராக கேரள மாநிலத் தேர்தல் வெற்றி கிட்டியது’. (பக்கம். 237)

என்று அங்கு இடதுசாரிகளின் பங்களிப்பை மதிப்பீடு செய்கிறார். இதை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் தேர்தல் கூட்டணிகள், ஆறு மாதங்கட்கு மேலாக நீடித்ததே இல்லை. அது பிணியாகவே முடிகிறது. ஆனால், கேரளத்தில் தொடர்ச்சி நீடித்தது. கேரளத்தில் அமைந்த கூட்டணி, 1957 முதல் இன்று வரை சில சிறு மாற்றங்களோடும், சில சமயம் மோதல்களால் சிராய்ப்புகளோடும் பொதுவான கூட்டணி தொடர்ந்து நீடிக்கிறது.

தனித்தன்மையை எக்காலத்திலும் இழக்காது கூட்டணியில் பங்குபெறவும் வேண்டும். கொள்கையில் முரண்பாடு வரும்போதும், உறவை நிரந்தரமாக தீயிட்டுப் பொசுக்கிவிடாமல் நாகரிக உறவோடு விலகிடவும் வேண்டும். (பக்கம். 238)

‘ஒன்றுபடுதல், போராடுதல் என்பது கத்தியின் மீது நடப்பது போன்ற சிக்கலான பயணம்தான். இதில் கேரளத் தோழர்கள் நல்ல வழிகாட்டிகள் எனக் கூறலாம்’ என்று அறிவுறுத்துகிறார். இதன் தொடர்ச்சியாக மேற்குவங்க அனுபவங்களைக் கூறி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

நூலாசிரியரின் நோக்கம்

இந்நூலில் எழுப்பியுள்ள வினாக்களும் முன் வைத்துள்ள விமர்சனங்களும் வரலாற்றின் தொடக்க காலம் தொடங்கி இன்றைய காலம் வரையிலான பரந்து பட்ட  காலத்தையும் நிகழ்வுகளையும் உள்ளடக்கியவை.

இதன் வாயிலாக அவர் முன்வைக்கும் கருத்துக்கள் கம்யூனிஸ்டுகளை சுயவிமர்சனம் செய்யத் தூண்டுகின்றன. கடந்தகாலத் தவறுகளை உணரும்படி செய்கின்றன. சமூக நீதிக்கான போராட்டத்தை மேற் கொள்ளத் தூண்டுகின்றன.

இத்துடன் நின்றுவிடாமல் நம் காலச் சமூகச் சிக்கல்களையும், கொடூரங்களையும் நம் பார்வைக்குக் கொண்டு வருகின்றன.

அத்துடன் இவற்றை எதிர்த்துப் போராடுவதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. வலியுறுத்து வதுடன் நின்றுவிடாமல் வழியையும் காட்டுகின்றன. நூலின் இறுதியில் முத்தாய்ப்பாக அவர் கூறும் செய்தி இதுதான்:

இத்தகைய சுரண்டல் முறையின் மீது இயங்கும் சமுதாய அமைப்பை மாற்றியமைக்க கம்யூனிஸ்டு பேரியக்கம் கட்டாயம் தேவை. எனவே, அந்த அமைப்பை வலுப்படுத்த வேண்டியது மனித குலத்தின் பொதுக்கடமை ஆகி நிற்கிறது. எனவே அவ்வியக்கம் வென்று மனிதகுலத்தை விடுவிக்கும், காப்பாற்றும்.

பொதுவுடைமையரின் வருங்காலம்?

ஆசிரியர்: தா.பாண்டியன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.,

அம்பத்தூர், சென்னை - 600 098

தொடர்புக்கு : 044 - 26251968

விலை: ` 250/-

Pin It

இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தமிழகத்தின் வலுவான அரசியல் சக்தியாகத் திராவிட இயக்கம் வடிவம் பெற்றது. பெரியார் ஈ.வெ.ராமசாமி (1879-1973), இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் முன்னெடுத்த சுயமரியாதை இயக்கம் என்பது, அந்த நூற்றாண்டின் இடைக்காலத்தில் பல நெளிவுசுழிவுகளை உள்வாங்கிக் கொண்டு, சனநாயக இயக்கமாக வடிவம் பெற்றது. பொருளாதாரக் காரணங்களை முதன்மைப்படுத்தாது, பண்பாட்டு அடையாளங்கள் சார்ந்த கருத்துநிலைகளை முதன்மைப்படுத்தி, அரசியல் சக்தியாக உருவானது திராவிட இயக்கம். பண்பாட்டுத் தளத்தில் முதன்மையான சக்தியாக, மொழிசார்ந்த அனைத்துச் செயல்பாடுகளையும் முன்னெடுத்த இயக்கமாகத் திராவிட இயக்கத்தை நாம் கருத முடியும். திராவிட அரசியலின் பண்பாட்டுச் சட்டகமாக (Paradigm) மொழி சார்ந்த செயல்பாடுகள் முன்னின்றன. இதன்மூலம் இவ்வியக்கம் தமிழ்மொழி மீது உருவாக்கிய பல்வேறு ஊடாட்டங்களை, அவ்வியக்கத்தின் நூற்றாண்டு நிறைவில், மீள்நினைவுக்குட்படுத்தலாம்.

இந்தியாவில் உருவான அரசியல் பண்பாட்டு இயக்கங்களில், திராவிட இயக்கம் மொழிசார்ந்து உருவாக்கிய பல்வேறு மாற்றங்களைச் சுருக்கமாகப் பின்வரும் வகையில், புரிதலுக்காகத் தொகுத்துக் கொள்வோம்.

- வெகுசன வெளியில் பேச்சு சார்ந்து உருவாகும் தொடர்பாடல் ((Communication), அரசியல் இயக்கங்கள் காலூன்ற அடிப்படையாக அமைகின்றன. வெகுமக்களுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்குமான உறவு என்பது, அவ்வியக்கம் மக்களிடத்து முன்னெடுக்கும் உரையாடல் மொழியாகப் பேச்சு அமைகிறது. திராவிட இயக்க பேச்சுகள் குறிப்பாக மேடைச் சொற்பொழிவுகள் திராவிட இயக்கச் சனநாயகச் செயல்பாட்டின் சட்டகங்களாக (((Paradigm)) வடிவம் பெற்றன.  இவ்வகையான முறையில், இந்தியாவில் வேறு எந்த இயக்கமும் செயல் பட்டதாகக் கருதமுடியவில்லை. திராவிட இயக்கத்தின் இவ்வகையான செயல்பாடு களால் வெகுசனப் பரப்பில் தமிழ்மொழி வளமாகப் பரவிய வரலாறு மிக முக்கிய மானது. அதுவும் காலப்போக்கில் நீர்த்துப் போனதாகவும் கருதப்படுகிறது. திராவிட இயக்கத்தின் மொழி சார்ந்த இச்சட்டகத்தின் பண்புகளைப் புரிந்து கொள்ளும் தேவை நமக்குண்டு.

- நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது தொடர்பாடல் துறையில் உருவாக்கிய தாக்கங்கள் பிரமாண்டமானவை. இதில் அச்சு ஊடகம் வழி உருவான அச்சுப் பண்பாட்டு மரபு வளமானது. திராவிட இயக்கம் அச்சு மரபை மிக வளமாகவே பயன்படுத்திய இயக்கம். இதழ்கள் சார்ந்த வாசிப்பு மரபு என்பது நாளிதழ்களில் வளர்ச்சி பெற பிரித்தானியர்க்கு எதிராக மேற்கொண்ட போராட்டங்கள் உதவின. சுதேசமித்திரன் (1894), இந்தியா (1905) போன்ற நாளிதழ்கள் இவ்வகையில் அமையும். ஆனால், நாளிதழ் வாசிப்பு மரபு வெகுசன வெளிக்கு வளர்த் தெடுத்த இயக்கமாகத் திராவிட இயக்கத்தைக் கருத முடியும். ஆனந்த விகடன் (1930), கல்கி (1940), குமுதம் (1954) ஆகிய பருவ இதழ்கள் வெகுசன வாசிப்பு மரபை உருவாக்கியவை; ஆனால், திராவிட இயக்கம் நாளிதழ்கள் மூலம் வெகுசன வாசிப்பை உருவாக்கியது. இதைப் போல் பருவ இதழ்களை மிக அதிகமாக நடத்திய இயக்கமும் திராவிட இயக்கமே. அச்சுப் பண்பாடு மரபு சார்ந்து தமிழ் மொழி வளர்ச்சிக்குத் திராவிட இயக்கப் பங்களிப்பு வளமானது. இம்மரபும் தொடரவில்லை. இத்தன்மைகள் குறித்த உரையாடலை நிகழ்த்தும் அவசியம் நமக்குண்டு.

- நவீனத் தொழில்நுட்ப மரபில், அச்சு ஊடகத்தைப் போலவும், சில வேளைகளில் அதனை விஞ்சும் வகையில் செயல்பட்டது காட்சி ஊடகமாகும். இவ்வூடகத்தில் பயன் படுத்தப்படும் மொழிக்கூறுகள் என்பவை அம்மொழி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. திராவிட இயக்கம் திரைப்படம், நாடக

அரங்க ஆற்றுகை ஆகிய காட்சி மரபில் தமிழ் மொழியை வளப்படுத்தியது. தமிழ் புதிய மொழியாக வெகுசன வெளியில் பரவுவதற்குத் திராவிட இயக்க காட்சி மற்றும் நிகழ்த்துக் கலை சார்ந்த பங்களிப்புகள் பிரமாண்ட மானவை. இத்தன்மையும் வெவ்வேறு பரிமாணங்களில் இன்றைக்கு மாற்றத்திற் குள்ளாகியுள்ளது.

இருபத்தோறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாம் வாழ்கிறோம். இருபதாம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூக இயங்குத் தளத்தில் மறுதலிக்க இயலாத இயக்க மாகத் திராவிட இயக்கம் உருவானது. இவ்வியக்கம் தொடர்பான அரசியல் கட்சிகள், அதன் செயல்பாடுகள் ஆகிய பிறவற்றை ஒரு நிலையில் பார்க்க வேண்டும். ஆனால் அவ்வியக்கம் மொழியை அரசியல் பண்பாட்டுச் சட்டகமாக வடிவமைத்த வரலாறு, பிற இந்திய மொழி களில் நிகழாத தமிழில் மட்டும் நிகழ்ந்த வரலாறாகக் கருத முடியும். அதற்கு உந்து சக்தியாக இருந்த அரசியல் - பண்பாட்டுச் செயல்பாடுகளை உருவாக்கியது திராவிட இயக்கம் என்று புரிந்து கொள்வது அவசியம். அதுவும் மொழி எனும் பண்பாட்டு ஊடகம் சார்ந்து திராவிட இயக்கச் சாதனைகள் பற்றிப் பதிவு செய்வது முக்கியம். மேற்குறித்தவாறு பேச்சு மரபு, குறிப்பாக மேடைப் பேச்சு, அச்சு மரபு, குறிப்பாக இதழியல் துறை, காட்சி மரபு, குறிப்பாக திரைப்படம், நாடக நிகழ்த்து மரபுகள் ஆகியவற்றில் தமிழ்மொழி பெற்ற வளங்கள் வேறெந்த மறுமலர்ச்சி இயக்கங்களால் நிகழாது, திராவிட இயக்கத்தால் மட்டும் நிகழ்ந்தது என்பது தமிழ்ச் சமூக வரலாற்று மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

பெரியார்  ஈ.வெ.ராமசாமி, கு.காமராஜ் (1903-1975) ஆகிய மக்கள் தலைவர்கள், தமிழ்ச் சூழலில் பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடைவெளி இல்லாத மேடைப் பேச்சைக் கைக்கொண்டனர். தமிழ்மொழி இயல்பாக இரட்டை வழக்கை அடிப்படையாகக் கொண்ட மொழி. ஆனால், பெரியார் இம்மரபை உடைத்துப் பேசுவதைப் போல் எழுதினார். இதனால், கேட்போர் மிக எளிதாக அவரது உரையாடலுக்குள் செல்ல முடிந்தது. மேலும் கேள்வி - பதில் முறையில் அமைந்த பேச்சு பெரியாரின் பேச்சு. வெகுசன அரசியல் பங்கேற்பு, சனநாயகப்படுத்தல் ஆகிய நிகழ்வுகளுக்குப் பெரியாரின் மொழி உதவியது. இவ்வகையில் திராவிட இயக்கத்தின் மூலவரான பெரியார் மொழி அன்றைய மொழிப்புழக்கத்திலிருந்து முற்றிலும் வேறானது.

பெரியாரின் தொண்டர்களாகச் செயல்படத் தொடங்கிய சி.என்.அண்ணாதுரை (1909-1969), Ôஅறிஞர்Õ என்று அழைக்கப்பட்டார். பிரிதொரு சீடரான நெடுஞ்செழியன் (1920-2000) Ôநாவலர்Õ என்று அழைக்கப்பட்டார். இப்போது வாழும் கருணாநிதி (1924-) அவர்கள் Ôகலைஞர்Õ என அழைக்கப்படுகிறார். இத் தலைவர்களின் அடைமொழிக்கும், திராவிட இயக்க மேடைப் பேச்சு மரபுக்கும் தொடர்புண்டு. இம்மூவரின் மேடைப் பேச்சுகள் பலமணி நேரம், கேட்பவர்களுக்குப் பெருவிருந்தாக இருந்தது. இதற்குக் காரணம் பெரியார் மற்றும் காமராசர் கைக்கொண்ட மொழிமுறைமை களிலிருந்து வேறுபட்டு Ôசெந்தமிழ்Õ என்று சொல்லும் வகையில் அமைந்தது. இப்பேச்சுகளில் வரும் அரசியல் செய்திகள் மட்டும் முதன்மையானது அன்று; அதனை மீறி மொழியில் பயன்படுத்தும் சொற்கள், ஏற்ற இறக்க மொழி செயல்பாடுகள், உடல்மொழியும், பேச்சு மொழியும் இணைந்திருக்கும் தன்மைகள் எனப் பல்வேறு சட்டகங்களைத் தமிழ்மொழிக்குக் கொடுத்தார்கள்.

வெகுமக்கள் அம்மொழிக்குள் தேனில் விழுந்த வண்டு களாகிப் போனார்கள். இத்தன்மை வேறு எந்த இயக்கத் திற்கும் இல்லாமல் திராவிட இயக்கத்திற்கு மட்டும் கைவரப் பெற்றது ஏன்? இவ்வியக்கம் சார்ந்த கட்சி அரசியல், அதில் ஏற்பட்ட பல்வேறு முரண்கள், அத் தன்மை சார்ந்த சமூகப் பொருளாதார விளைவுகள் என்பவற்றை ஒரு நிலையிலும், பண்பாட்டுத் தளத்தில் மொழியைக் கொண்டு வினையாற்றிய மரபைத் தனித் தனியாகப் புரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் தமிழ் மொழியின் தொன்மை, சமசுகிருத மொழிக்கு இணையான வரலாறு, இந்தியத் துணைக் கண்டத்தில் வேறுபட்ட பண்பாட்டுக் கதையாடல்கள் கொண்ட இனத்திற்கான மொழி எனும் பல்வேறு கூறுகளைத் திராவிட இயக்கத் தலைவர்களின் பேச்சு மொழி அடிப் படையாகக் கொண்டிருந்ததை அறிய வேண்டும். இத் தன்மைகளில் பெரியாரிலிருந்து அவரது தொண்டர்கள் வேறொரு புதிய மொழியைத் தமிழ்ச் சூழலில் உருவாக்கினார்கள். இத்தன்மை மொழிக்குக் கிடைத்த வளமாகவே கருத வேண்டும்.

சமசுகிருதச் சொற்களை மிகுதியாகக் கொண்ட மணிப்பிரவாளத் தமிழ் கி.பி. பதினோறாம் நூற்றாண்டு முதல் தமிழ்ச் சூழலில் உருவானது. அம்மொழி இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை, மேடைப் பேச்சு மொழியாக இருந்து வந்தது. மேலும் சமூகத்தின் மேல்தட்டைச் சார்ந்தவர்களின் மொழி யாகவும் அது இருந்தது. இதனைத் தலைகீழாக மாற்றியது திராவிட இயக்கம். மணிப்பிரவாளம் மறைந்தது. பேச்சுவழக்கில், நிர்வாகத்தில், நாள்தோறும் நிகழும் நடைமுறைகளில் அம்மொழிமரபு செலுத்திய தாக்கம் ஆழமானது. அதனைத் திராவிட இயக்கம் வேரடி மண்ணோடு சாய்த்தது. ஒருவகைச் சாதி மொழியாக இருந்த மேடைத் தமிழை, மக்களின் செந்தமிழாக இவ்வியக்கம் மடைமாற்றம் செய்த சட்டகம் மிக முக்கியமானது. மக்களுக்கு அந்நியப்பட்ட மொழி மறைந்து, மக்களைக் கவர்ந்து உள்ளிழுக்கப்படும் மேடைத் தமிழ் உருவானது. இத்தன்மை தேச உருவாக்கம், சாதிய மேலாதிக்கம், இனம் சார்ந்த அடையாள மதிப்பீடுகள் ஆகிய பல அரசியல் சட்டக மரபுகளில் முக்கியமானவை. இத்தன்மையைத் திராவிட இயக்கக் கொடையாகவே கருத வேண்டும்.

திராவிட அரசியல் கட்சி சார்ந்த செயல்பாடுகளால் இன்றைக்கு உருப்பெற்றிருக்கும் நிலைமைகளுக்கும், அவர்கள் முன்னெடுத்த அரசியல் - பண்பாட்டுக் கருத்துப் பரப்புரையாக அமைந்த மேடைப் பேச்சு சார்ந்த மொழி வளத்துக்கும் ஏதேனும் தொடர்புண்டா? பண்பாட்டுத் தளத்தில் மொழி, செழுமையாகச் செயல்படுவது என்பது வேறு; பொருளாதாரத் தளத்தில் அரசியல் கட்சி செயல்பாடு வேறு. இதில் இரண்டா வதாகக் கூறியதில் உருவான பல்வேறு முரண்கள், சீரழிவுகள் ஆகிய பிற மொழி சார்ந்த பண்பாட்டு வளர்ச்சி சட்டகத்தையும் பாதித்திருக்கிறது என்று கூற முடியும். திராவிட இயக்கக் கருத்து நிலைகளை ஏற்றுக் கொள்ளாத சில அமைப்புகளும் இன்றையச் சூழலில் அம்மொழியைப் பயன்படுத்துகின்றனர். திராவிட இயக்க மொழிப் பயன்பாட்டிற்கும் அவர்களது கருத்து நிலைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஆனால் தமிழ் மொழி, பண்பாடு ஆகியவை சார்ந்த பழமைக் கண் ணோட்டம், வைதீக மரபு ஆகியவற்றைப் பேசுவோரும் திராவிட இயக்க விளைவான மேடைப் பேச்சு வளமரபைக் கையில் எடுப்பது வரலாற்று முரண்.

மேடை மொழியைப் போலவே, திராவிட இயக்கம் நடைமுறைப்படுத்திய எழுத்து மொழி; குறிப்பாக இதழியல் சார்ந்த மொழி; தமிழ் அச்சுப் பண்பாடு; வரலாற்றில் பெரிதும் கவனத்திற்குரியது. திராவிட இயக்கமே மிக அதிகமான பருவ இதழ்களையும், நாளிதழ்களையும், சிறுவெளியீடுகளையும் வெளியிட்ட இயக்கமாகும். ஒவ்வொரு தலைவருக்கும் அவர் நடத்திய இதழே அடையாளமாக அமைந்தது. இவ்வகையில் 1940 -1970 காலகட்டங்களில் திராவிட இயக்கம்

சார்ந்து சுமார் 200 இதழ்கள் வெளிவந்தன என்ற ஒரு கணக்குண்டு. இவ்வளவு இதழ்களை வேறு எந்த இயக்கமும் வெளியிட்டதாக வரலாறு இல்லை. இதன்மூலம் இவ்வியக்கம், தொண்டர்களிடத்தில் உருவாக்கிய வாசிப்பு மரபு மிக வளமானது. நவீன தொழில்நுட்பத்தால் உருவாகும் புதிய நிகழ்வுகளைச் சமூகத்தில் செயல்படும் இயக்கங்கள் தன்வயப்படுத்திக் கொள்ள வேண்டும் அவ்வகையில் திராவிட இயக்கம் வளர்த்தெடுத்த அச்சுப் பண்பாட்டு மரபு என்பது வேறு எந்த இந்திய மொழிகளிலும் நிகழாத ஒன்று. எழுத்துப் பயிற்சிக்கும் வாசிப்பு மரபுக்கும் தொடர்புண்டு. தமிழ்ச் சூழலில் வளர்ச்சியடைந்த எழுத்துப் பயிற்சி அல்லது எழுத்தறிவு என்பது வாசிப்பு மரபாக வளம் பெறுகிறது.

இவ்வளத்தில் திராவிட இயக்கத்திற்கு முதன்மையான பங்குண்டு. இதன்மூலம் உருவான உடன்விளைவுகள், சமூக மாற்றங்கள் ஆகியவை குறித்த உரையாடல் ஒரு பக்கம்; ஆனால், நவீன தொழில்நுட்ப வளத்தைக் கைக்கொண்ட மரபு இன்னொரு பக்கம். அந்த வகையில் அச்சுப் பண்பாட்டு மரபில் பெரும் சாதனை நிகழ்த்திய இயக்கமாகத் திராவிட இயக்கத்தை மதிப்பிட முடியும். இதன் தொடர்ச்சி இன்றைக்கு இல்லாமல் போய்விட்டது. திராவிட இயக்க உருவாக்கம், அதற்கான அரசியல் - பண்பாட்டுச் சட்டகச் செயல்பாடுகள் மூலம் உத்வேகம் பெற்றிருந்த மரபு, அவ்வியக்கம் ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற பின்பு மேற்குறித்த தேவைகள் இல்லாமல் போயின.  எனவே, திராவிட இயக்கம் தமிழ் மொழியில் முன்னெடுத்த அச்சுப் பண்பாட்டு மரபும் இன்றைக்குத் திசைமாறியுள்ளது. வரலாற்றுத் தேவை, சமூக இயங்குதளம், நவீன தொழில்நுட்ப செயல்பாடுகள் என்ற பல பரிமாணங்களில் திராவிட இயக்கம் நிகழ்த்திய அச்சுப் பண்பாட்டு வரலாற்றை நாம் மதிப்பிட வேண்டும். அதன்மூலம் அச்சுப் பண்பாட்டில், குறிப்பாக இதழியல் துறையில் அவ்வியக்கம் உருவாக்கிய மொழி வளம் விதந்துரைக்கத்தக்கது.

பராசக்தி (1952) திரைப்படம் தமிழ்த் திரைப்பட வரலாற்றின் திருப்புமுனை என, மறைந்த எம்.எஸ்.எஸ். பாண்டியன் (1958-2014) போன்ற அறிஞர்கள் விரிவான ஆய்வுகள் மேற்கொண்டதைக் காணமுடிகிறது. அத் திரைப்படத்தின் மொழி குறிப்பாக வசனம் என்பது இதற்கு முன் இருந்த திரைப்பட மொழியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. காட்சி ஊடகத்தில், காட்சி மரபை, பார்வையாளன் முழுமையாக உள் வாங்குவதற்கு, அதில் பயன்படுத்தப்படும் மொழி முதன்மையாக அமைகிறது. சொற்களின் ஒலி வழியாகவே, காட்சிப் படிமங்களுடன் பார்வையாளன் இணைந்து கொள் கிறான். காட்சியும் கேட்பும் இணையும்போது உருவாகும் விளைவுகள் ஆழமானவை. தமிழ்மொழியில் ஒரு புதிய காட்சி மொழியை வசனங்கள் எனும் கேட்பு மொழி மூலம் உருவாக்கியது பராசக்தி. தமிழ்த் திரைப் பட மரபில் மணிப்பிரவாள சாதி மொழி முதன்மை பெற்றிருந்த தருணத்தில், அம்மொழிக்கு மாற்றாக வளமான செந்தமிழ் மொழியைக் காட்சியாக வழங்கிய திரைப்படம் அது.

அதில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மொழிசார்ந்த வெளிப்பாடுகள் முதன்மை யானவை. இத்திரைப்படம் வெளிவந்த காலத்திற்குப் பின்பு, தமிழ்த் திரைப்பட வசன மரபுகள் மாற்றம் பெற்றன. இது தமிழ் மொழிக்கு காட்சி ஊடக மரபு சார்ந்த திராவிட இயக்கம் வழங்கிய கொடையாக அமைகிறது. 1930-1950க்கு இடைப்பட்ட தமிழ்த் திரைப்பட தமிழ் வசன மரபையும், 1951-1970க்கு இடைப் பட்ட தமிழ்த் திரைப்பட வசன மரபையும் ஆய்வுக்குட் படுத்தும்போது, திராவிட இயக்கம் வழங்கிய காட்சி சார்ந்த தமிழ் மொழி வளத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. 1970களுக்குப் பின் அம்மரபு மடைமாற்றம் பெறுகிறது. இவ்வகையில் ஊடக வரலாற்று மரபுகளில் திராவிட இயக்கம் நிகழ்த்திய பல்வேறு ஊடாட்டங் களைத் தமிழ் மொழி மீது அவ்வியக்கம் உருவாக்கிய வளங்களாகவே கருத முடியும். இவ்வகையான வளம், தொன்மை மரபுடைய மொழிக்கு நவீன மரபும் வளமாக இணைந்த வரலாறாகக் கருதலாம்.

குறிப்பாக, திராவிட இயக்கம் ஆற்றுகை மரபில், நாடக வசனங்கள், நாடகப் பாடல்கள் ஆகிய பல மொழி சார்ந்த செயல்களில் வளம் சேர்ந்த இயக்கமாகும். புராணிய கதைகளும், புராணிய மொழிவெளிப்பாடு களும், மணிப்பிரவாளப் பேச்சுமாக இருந்த தமிழ் நாடக நிகழ்த்து மரபைத் திராவிட இயக்கம் மாற்றியது. இதில் எம்.ஆர்.இராதா (1907-1979), கலைஞர் மு.கருணாநிதி ஆகியோர் பங்களிப்பு முதன்மையானது. செம்மொழி மரபு சார்ந்த தமிழ் நாடக மரபில், மணிப்பிரவாளமே நாடக மொழியாக இருந்தது. தெலுங்கு, சமசுகிருத பாடல் மரபுகளே இருந்தன. இத்தன்மைகளைத் திராவிட இயக்க நாடக மொழி மாற்றியது. தமிழ் மொழிக்குக் கிடைத்த வளங்களில் இத்தன்மை முதன்மையானது.

நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் திராவிட இயக்க வரலாற்றில் தமிழ்மொழி சார்ந்த அரசியல் - பண்பாட்டுச் சட்டகங்களைத் திராவிட இயக்கம் எவ்வாறு உருவாக்கியது என்ற மீள்பார்வை தேவை யானது. இதில் மேடைமொழி, அச்சுப் பண்பாட்டு மொழி, காட்சி ஊடக மொழி ஆகியவற்றில் வளம் சேர்த்தது திராவிட இயக்கம். இவ்வியக்கம் சார்ந்த ஆட்சிமொழி, பயிற்றுமொழி ஆகியவை குறித்த உரை யாடலையும் மேற்கொள்ள வேண்டும். அரசியல் சார்ந்த பண்பாடு; சனநாயக மயமாக்கம், மொழி சார்ந்த செயல் பாடு என்ற பரிமாணங்களில் திராவிட இயக்கத்தை மதிப்பீடு செய்யும் தேவையுண்டு.

Pin It

periyasamy 450“பட்டியிலிருந்து விடுவிக்கப்பட்ட

கன்றுக்குட்டியின் துள்ளாட்டத்தோடு

வந்தவன் காட்டினான்

வரைந்த ஓவியத்தை

ஆலமரம் அழகென்றேன்

இல்லப்பா, இது அலெக்ஸ் மரம் என்றான்

சரிசெய்யும் பதற்றத்தில்

மீண்டும் வலியுறுத்தினேன்

ஏற்க மறுத்தவன் கூறினான்

என் மரம்

என் பெயர்தான்”

இந்தக் கவிதையில் வெளிப்படும் என் என்கிற தன்னுணர்வில் தெறிக்கும் குழந்தைமை ஒரு முக்கிய மான அனுபவம். நான் என்னும் தன்னுணர்வோடு ஆட்காட்டி விரலால் தன் நெஞ்சைத் தொட்டு  தன்னால் உருவாக்கப்பட்டதற்கு உரிமை கொண்டாடும் ஒரு குழந்தையின் கூற்று ஒரே தருணத்தில் புன்னகையையும் சிந்தனையையும் தூண்டிவிடுகின்றன. தினசரி வாழ்க் கையில் சாதாரணமாக நம் கவனத்திலிருந்து முற்றிலும் நழுவியோட வாய்ப்புள்ள ஒரு அனுபவம் என்றே இதைச் சொல்லவேண்டும். ஆனால், பெரியசாமியின் கவிதைக் கண்கள் சரியான தருணத்தில் அதைத் தொட்டு மீண்டு வருகின்றன. நான், எனது என்பவை மானுடத்தின் அடிப்படை உணர்வுகள்.

இவ்வுணர்வுகள் வழியாகவே ஓர் உயிர் தன் அகத்தைக் கட்டமைக்க முற்படுகிறது. வாழ்க்கையில் அது ஒரு கட்டம். இறுதியாக ஒரு கட்டமும் உள்ளது. இறுகப் பற்றி வாழும் இவ்வுணர்வுகளை தானாகவே கரைந்துபோகச் செய்யும் கட்டம். கடற்கரையில் கட்டியெழுப்பப்பட்ட மணல் வீட்டை அலைகள் கரைப்பதுபோல கரைந்துபோக அனுமதிக்கும் கட்டம். கவிதையை வாசித்து முடிக்கும் கணத்தில் இந்த முனையிலிருந்து அந்த முனைவரைக்கும் மனம் மானசிகமாக ஒரு பயணத்தை நிகழ்த்தி முடித்து, மீண்டும் தொடங்கிய புள்ளிக்கு வந்து நின்றுவிடுகிறது. நினைவின் வழியாக நிகழும் இந்த அனுபவமே இந்தக் கவிதையின் அனுபவம். இது பெரியசாமி என்னும் கவிஞர் நாம் மூழ்கித் திளைப்பதற்காகவே கட்டி யெழுப்பியிருக்கும் பேருலகம்.

பெரியசாமியின் கவிதைகள் காட்சிகளால் நிறைந்தவை. வனவிலங்குகளைப் படமெடுப்பதற்காக கூரிய புலனுணர்வுடன் காத்திருக்கும் புகைப்படக் கலைஞர்களைப்போல குழந்தைகளின் சொற்கள் அல்லது செயல்கள் வழியாக நிகழும் அற்புதத்துக்காக அவர் விழிகள் ஒவ்வொரு கணமும் காத்திருக்கின்றன.  இந்தப் பொறுமை, அவர் காட்சிப்படுத்தும் கவிதைகளுக்கு ஒருவித தனித்தன்மையை வழங்குகின்றன.

மாலைப் பொழுதொன்றில்

உரையாடலைத் துவங்கினாள் சிறுமி

யானைக்கு யார் துணை

இன்னொரு யானைதான்

காக்காவிற்கு

மற்றொரு காக்கா

குருவிக்கு

மற்றொரு குருவி

இந்த மரத்துக்கு

அதோ, அந்த மரம்

அப்ப வானத்துக்கு?

மௌனித்திருந்தேன்

அன்றுதான் ஒரு தாளில் வரைந்து அனுப்பினாள்

துணை வானம் ஒன்றையும்

ஒரு நிலா ஒரு சூரியன்

நிறைய நட்சத்திரங்களையும்

யாவரும் கண்டுகொண்டிருப்பது

அவள் அனுப்பிய துணைகளைத்தான்

வானத்துக்கும் சூரியனுக்கும் நிலவுக்கும் துணை வேண்டுமேயென கவலைப்படும் குழந்தைமையோடு இரண்டறக் கலந்திருக்கும் கவிதையனுபவத்தை மகத்துவமானதென்றே சொல்லவேண்டும். பெரிய பெரிய படிமங்களாலும் தர்க்கங்களாலும் கட்டியெழுப்ப முடியாத வினோதமான அனுபவத்தை மிக  எளிய சொற் களால் ஒரு காட்சியின் வழியாக முன்வைத்துவிடுகிறார் பெரியசாமி. இதுவே அவருடைய கவித்துவம்.

எண்ணற்ற குழந்தைச் சித்திரங்களை பெரியசாமி தன் கவிதைகளிடையே தீட்டி வைத்திருக்கிறார். அக் குழந்தைகளின் ஏக்கங்களுக்கும் கனவுகளுக்கும் குழப்பங்களுக்கும் முடிவுகளுக்கும் விளையாட்டுகளுக்கும் புதுப் புது வண்ணங்களைக் குழைத்து பளிச்சிட வைக்கிறார்.

இத்தொகுதியின் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்று மழையின் பசியாற்றியவர்கள்.

மழையின் பசியாற்றினோம்

ஆவல் பீறிடக் கூறினேன்

நட்சத்திரங்களாகக் கூரையில் மின்னும்

துளிகளிடமிருந்து மீண்டு

பரிகாசமாகச் சிரித்தவனின்

கரம்பற்றி அழைத்துச் சென்றேன்

என் துளிர்த்த காலத்திற்கு

உத்தி பிரித்து விளையாடிய காலையில்

சிறுசிறு தூறல்களும் உடனாட

மழைக்குப் பசிக்குமென

கொட்டாங்கச்சியில் தட்டி வைத்தோம்

சுடச்சுட இட்லிகளை

கரைத்து விழுங்கின் தெம்பாய்

ஊரைச் சுத்தம் செய்தோடியது

மழை.

குழந்தையின் சொற்கள் அசலான குழந்தைமை யோடு வெளிப்படும்போது, இயற்கையாகவே அதில் கவித்துவம் நிறைந்துவிடுகிறது. தனக்குப் பசிப்பதைப் போல மழைக்கும் பசிக்குமென ஒரு குழந்தையால் மட்டுமே யோசிக்கமுடியும். எவ்விதமான தயக்கமும் இல்லாமல் மழையின் முன் உணவை நீட்டியளிக்க

ஒரு குழந்தையால் மட்டுமே முடியும். உள்ளார்ந்த அன்போடும் பரிவோடும் மண்கட்டியை இட்லி என்று சொல்லி ஒரு குழந்தையால் மட்டுமே அடுத்தவருக்கு அளிக்க முடியும். மண்ணின் பசியையும் தாகத்தையும் மழை பொழிந்து தணிக்கிறதென்பதுதான் நம்பிக்கை. இக்கவிதையில் மழைக்கே பசிக்கிறது என்று நம்புகிறது ஒரு குழந்தை. அந்தப் பசியைத் தணிக்க தன் கைகளால் உணவை வழங்கி மனம் களிக்கிறது.

சித்திரம் தீட்டுதல் பெரியசாமியின் கவிதைகளில் திரும்பத்திரும்ப வரும் செயல்பாடு. குழந்தைகளின் பிஞ்சு விரல்களின் கோணல்மாணலான கிறுக்கல்களால் நிறைந்த சித்திரங்களே அவை. குழந்தைமையின் தொனி யோடு அக்கோடுகள் இணையும்போது அவை அழகான கவிதைகளாகிவிடுகின்றன. எடுத்துக்காட்டாக பிரம்ம அவதாரம் என்னும் கவிதையைச் சொல்லலாம்.  எவ்விதமான விளக்கங்களும் தேவையற்ற நேரிடையான கவிதை.

முட்டைகள் நான்கிட்டு

அடைகாத்தான்

அது நான்கு வானங்களைப்

பிறப்பித்தது

வெக்கை மிகும் பொழுதுகளில்

மழை பொழிவிக்க

ஊற்றும் மழையால்

வெளி நடுங்கும் காலங்களில்

வெயிலடிக்க

அப்பிய இருளோடு உலகிருக்க

நிலவு முளைக்க

சகஜீவராசிகள் பனியில் சுருங்கிக் கிடக்கக்

கதகதப்பூட்டவென

வேலைகளைப் பங்கிட்டுக் கொடுத்து

வேறு முட்டையிட தயாரானான்.

பிஞ்சுக்குழந்தை கட்டளையிடும் இடத்தில் நின்று கொள்ள, அதை மனமார ஏற்றுப் பணிந்து கடமை யாற்றும் இடத்தில் நின்றிருக்கிறது வானம். ஆகிருதிகள் முக்கியமிழந்து கற்பனையும் குழந்தைமையும் முக்கியத் துவம் பெறுகின்றன.

இந்தச் சித்திரம் தீட்டும் விருப்பம் பவனி என்னும் கவிதையில் வேறொரு விதமாக வெளிப்படுகிறது.

தாள் ஒன்று

தன்னில் எதையாவது வரையுமாறு

அழைப்பதாகக் கூறிச் சென்றான்

வர்ணங்களைச் சரிபார்த்து

ஒன்றிரண்டை வாங்கிவரப் பணித்தான்

மகாபாரதம் தொடரில் கண்ணுற்ற

ரதம் ஒன்றைச் செய்யத் தொடங்கினான்

ஒளிர்வில் வீடு மினுங்க

நின்றது பேரழகோடு

மற்றொரு நாளில்

புரவிகளை உயிர்ப்பித்துப் பூட்டினான்

அதிசயித்து ஊர்நோக்க

வானில்

பவனி வந்தான்

இது குழந்தையின் ரதம். குழந்தை பூட்டிய குதிரை. குழந்தையின் பவனி. கண்ணும் கற்பனையும் நிறைந்தவர் களுக்கு மட்டுமே இந்தப் பவனியின் தரிசனம். பெரிய சாமியின் கவிதைப்பயணத்தை மறைமுகமாகக் குறிப்பிட இக்கவிதை பெரிதும் உதவக்கூடும். அதுவும் ஒருவகை பவனி.

ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது பெரிய சாமியின் கவிதைகள் குழந்தைகளின் பார்வை வழியாக உலகத்தைப் பார்க்க முனையும் விழைவுள்ளவை. அவை தர்க்கமற்றவை. ஒருங்கிணைவற்றவை. எவ்விதமான உள்நோக்கமும் இல்லாதவை. அபூர்வமான தருணங் களில் கவிதானுபவமாக மாறக்கூடிய ஆற்றலையும் கொண்டிருப்பவை.

குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்

ஆசிரியர் : ந.பெரியசாமி

வெளியீடு : தக்கை

15, திரு.வி.க.சாலை, அம்மாப்பேட்டை, சேலம்-7.

விலை : ` 30.00

Pin It

அறுவை மருத்துவர்கள்:

வரலாற்றின் இடைக்காலத்தில் நாவிதர்களே பொதுவான மருத்துவ சிகிச்சையை எல்லோருக்கும் செய்து வந்தனர் என்றாலும் குறிப்பாகப் போர்க் காலங்களிலும், அதன் பிறகு ராணுவ வீரர்களுக்கு மருத்துவமும், அறுத்துவமும் புரிந்தனர்.  இதன் காரணமாக இவர்கள் தங்கள் வசம் தீட்டிய கத்தி ஒன்றை வைத்திருப்பது வழக்கம்.

அதன் தொடர்ச்சியாக மருந்துகளால் நோய் குணமாகாது என்று மருத்துவர்களால் எண்ணப் பட்ட பொழுது அவர்கள் கட்டளைப்படி நாவிதர்கள் தேவையான அளவு கீறியோ அல்லது அட்டையைக் கடிக்கவிடுவதன் (Leeches) மூலமாகவோ இரத்தத்தை வெளியேற்றினர்.  இதை ஏன் மருத்துவர்கள் நாவிதர் களிடம் ஒப்படைத்தனர் என்றால், இது தனக்கு தரக்குறைவானது என்று எண்ணியதாலேயே ஆகும்.

பண்டைய காலத்தில் உலகளவில் நாவிதர்கள்:

இலண்டனில் அறுவை சிகிச்சை செய்யும் நாவிதர்கள் சங்கம் (Guild of Surgeons) 1318-இல் உருவானது.  1505-ஆம் ஆண்டு பாரீஸ் பல்கலைக் கழகத்தில் நாவிதர் அறுவை மருத்துவர்களைப் பேராசிரியர்களாக நியமனம் செய்தது.  இங்கிலாந்தில் 1540-இல் நாவிதர்கள் அறுவையாளர் சங்கத்துடன் இணைக்கப்பட்டிருந்தார்கள் (Company of Barber -- Surgeons). ஆனால், நடைமுறையில் முடிவெட்டு தலையும், சவரம் செய்தலையும் செய்து வந்த நாவிதர்கள் அறுவை சிகிச்சை செய்வதற்குத்

தடைவிதிக்கப்பட்டிருந்தது.  பிரான்சில் 1743-ஆம் ஆண்டிலும் இங்கிலாந்தில் 1745-ஆம் ஆண்டிலும் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் நாவிதர்களிட மிருந்து பிரிக்கப்பட்டு இருந்தனர்.  1800-ஆம் ஆண்டில் ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் தோற்று விக்கப்பட்டதிலிருந்து நாவிதர்கள் இணைப்பை இச்சங்கம் முழுமையாகத் துண்டித்தது.  இதன் எச்சமாகவே இன்றும் இங்கிலாந்தில் எம்.ஆர்.சி.எஸ்.  என்ற அறுவை சிகிச்சைப்பட்டம் பெற்ற பின்பு டாக்டர் என்று அழைக்கப்படாது திரு, திருமதி, செல்வி (Mr, Mrs, Miss) என்றே பட்டத்திற்கு முன் போட்டுக் கொள்கின்றனர்.

நாவிதர்கள் அறுவை சிகிச்சையின் முன்னோடிகள்:

உலகில் நாவிதர்கள் அறுவை சிகிச்சை செய்தனர், பேராசிரியர்களாக இருந்தனர் என்பதைத் தாண்டி, இந்தியாவில் அறுவை சிகிச்சை முறையைக் கண்டுபிடித்து வளர்த்தது நாவிதர்களேயாவர்.  இது குறித்து பண்டைய வரலாற்றறிஞரான டி.டி. கோசாம்பி, “போரில் அல்லது நோயில் மூக்கிழந் தோருக்கு மாற்று மூக்கு ஒட்டறுவை முறை, சமூகத்தினர் சற்று அருவருப்புடன் நோக்கிய நாவிதரின் கண்டுபிடிப்பே”, என்கிறார்.  இது தவிர இந்நாவிதர்கள் சமூகத்தைச் சேர்ந்த உபாலி என்பவர் பவுத்த சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார்.  இப்பவுத்தர்கள் காலத்தில் தான் மெய்ஞான அறிவியலோடு அறுவை சிகிச்சை யானது தோன்றி வளர்ச்சியடைந்ததாக வரலாற்றிஞர் வாட்ஸ் குறிப்பிடுகின்றார்.

மங்கல அமங்கல காரியம் புரியும் குடிமக்கள் - நாவிதர்கள்:

ஆனால், இன்றைய நிலையில் தமிழ்நாட்டுக் கிராமங்களில் மக்களுக்குத் தேவையான முக்கிய மான பணிகளை செய்துவந்த 18 வகைத் தாழ்த்தப் பட்ட இனங்களுடன் நாவிதர்களும் அடங்கும்.  இந்த இனத்தினர் யாவரும் குடிமக்கள் என்று அழைக்கப்பட்டுள்ளனர்.  இப்பதினெட்டு வகை இனத்தவரும் குடிமக்கள் பிரிவினைச் சேர்ந்த வராகக் கருதப்பட்ட போதிலும் நாவிதக் குலத்தைச் சேர்ந்தவர் மட்டிலும் குடிமக்கள் என்ற பெயரை இன்றுவரை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.  ஏனெனில் கிராம மக்களுக்கு முடி வெட்டும் சேவையுடன் மங்கலக் காரியங்கள் மட்டுமின்றி அமங்கலக் காரியங்களுக்கும் அவசியமான பணி களை நாவிதர்கள் மட்டுமே செய்து வருகின்றனர்.

இவைகளைக் கல்வெட்டுகளின் மூலம் அறியமுடிகின்றன.  சான்றாக மங்கலச் சடங்கு களின்போது அடிப்படைப் பணிகளில் நாவிதர்கள் ஈடுபட்டிருந்தமையால் அவர்கள் மங்கல வினைஞர், மங்கலையன் என்றும், நாவிதப் பெண் மங்கலை என்றும் அழைக்கப்பட்டனர்.  இதுவே, கொங்கு மண்டல சதகத்தில் மங்கலை எனும் சொல் நாவிதப் பெண்ணைக் குறிப்பிடப் பயன்படுத்தப் பட்டுள்ளது.  மங்கலம் என்னும் சொல் மருத்துவ குலத்தைச் சேர்ந்தோரின் பெயர்களுடன் இணைத்துக் காணப்படுவதாக முதுநிலை கல்வெட்டாய் வாளர்கள் ஏ. சுப்பராயலுவும், கே.ஜி. கிருஷ்ணனும் குறிப்பிட்டுள்ளார்கள்.  இவ்வாறு பெயர்களுடன் மங்கலம் என்ற அடைமொழியும், இணைக்கப் பட்டுள்ளதைத் தெரிவிக்கும் சில சான்றுகளாவன.  “மூவேந்தர் மங்கலப் பேரரையன் மாறன்காரி”, “பாண்டி மங்கல விசையரையன் மாறன் எயினன்” என்பதாகும்.

இந்தியாவில் அறுவை சிகிச்சை வளராது தடுத்தது எது?

அறுவை சிகிச்சை கண்டுபிடிப்புகளுக்கும், வளர்ச்சிக்கும் தேவையானது உடல்கூறு அறிவு. இதற்குச் சவப் பரிசோதனை அவசியம்.  இது இந்தியாவில் இந்துமதக் கோட்பாட்டின்படி ஒரு விதியாகப் பிணம் எரிக்கப்படுவதாலும், அல்லது ஆற்றில் மிதக்க விடுவதாலும் மற்றும் மனு சாஸ்திரம் ஒரு சண்டாளனை, ஒரு பிரேதத்தை அல்லது பிரேதத்தைத் தொட்ட ஒருவனை யதேச்சை யாகத் தொட நேர்ந்துவிட்டால் குளிப்பதன் மூலம் மீண்டும் ஒருவன் தனி பரிசுத்தத்தைப் பெறுவான் என்பதாலும், புத்த சமண மதங்களும், திருக் குறளும், கொல்லாமையைப் போற்றுவதாலும் உடல்கூறு தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா விலேயே தழைக்கவில்லை எனலாம்.  இக்காரணத்தை மிகவும் துல்லியமாக ஆய்ந்த சட்டோபாத்தி யாயா அறுவை சிகிச்சைக்கான வளர்ச்சியில் மேல் சாதியினருக்கு எவ்விதப் பங்கும் இருந்திருக்க வில்லை என்பதை விளக்கமாக “உடலை முதன்மைப் படுத்தியதால்தான் தந்திரர் ரசவாதம், ரசாயனம் போன்ற அறிவியல்களை வளர்க்க முடிந்தது.  வைதீகர், தூய ஆன்மாவைத் தேடியதால் உடம்பின் மீது கவனம் செலுத்தவில்லை.  பிணங்களை வைத்துக் கீழ் சாதியினரே அறுத்து ஆராய்ந்தார்கள்.  இதை மேல் சாதியினர் தீட்டாகக் கருதியதால் ஒதுக்கினார்கள்.  தவிர “தந்திரரின் சவ சாதனை!” மனித உடல் பற்றி அவர்கள் அறிய உதவியது.  இன்றும் கூட, (1959) பிணத்தைத் தொட மேல்சாதியார் மறுப்பதால் அறிவியலை மறுக்கிறார்கள்,” என்கிறார்.

சோழர் காலத்தில் அறுவை மருத்துவர்கள் - நாவிதர்கள்:

சோழர் காலத்தில் நாவிதர்கள் மிகவும் உன்னத நிலையில் சிறப்புற்றிருந்தது கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகின்றது.  இராஜராஜனின் கி.பி. 1014-ஆம் ஆண்டைய கல்வெட்டொன்றில் பஞ்சவன் மங்கலப் பேரரையன் அனையன் பவருத்திரன் மற்றும் இராஜராஜ பிரயோகத்தரையன் என்னும் பெயர் கொண்ட அறுவை சிகிச்சை செய்தவர் களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.  பிரயோகம் என்ற சொல் மருத்துவ சிகிச்சையைக் குறிப்பிடும் சொல்லாகும்.  எனவே பிரயோகத்தரையன் என்ற சொல் மருத்துவ சிகிச்சை செய்பவனைக் குறிப்பிடு வதாகும். அனையன் பவருத்திரன் என்பவர் கோலினமை (கோலினமை - கோலி - மயிர்) என்ற தொழிலில் வல்லவன் என்ற குறிப்பு வருகின்றது.  இப்பெயருக்கு அருகில் இராஜராஜ பிரயோகத் தரையன் என்ற சொல் மருத்துவரைக் குறிக்கும்.  அம்பட்டன் என்ற சொல்லும் மருத்துவரைக் குறிக்கும்.  எனவே கோலினமை என்ற சொல்லும் மருத்துவத்துடன் தொடர்புடையதாகவே இருக்கும் என்று கல்வெட்டாய்வாளர் ஏ. சுப்பராயலு கருத்துத் தெரிவிக்கின்றார்.

திருவிடலூர் சிவயோகநாதர் ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட முதலாம் இராஜராஜ சோழனின் கி.பி. 1016-ஆம் நாளிட்ட கல்வெட்டில் இராணி குந்தவை ஆர்க்காட்டு கூற்றம் ஸ்ரீ பராந்தக சதுர்வேதி மங்கலத்துச் சபையிடமிருந்து நிலம் விலைக்கு வாங்கி அரையன் உத்தமசோழன் என்ற நாவிதனுக்குச் சல்லிய போகமாக வழங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.  ((ARE No. 351/1907)

இதே ஆலயத்திலுள்ள மற்றொரு கல்வெட்டில் குந்தவை, இராஜகேசரி சதுர்வேதி மங்கலத்திலுள்ள ஒரு வேலி 4 மா நிலத்தையும், வேம்பத்தூரிலுள்ள ஒரு வீட்டையும் அரையன் உத்தம சோழன் என்ற இராஜேந்திர சோழ பிரயோகத்தரையன் ஆகிய அம்பட்டனுக்குச் சல்லிய கிரியா போகமாக (அறுவை மருத்துவத் தொழிலை விருத்தியடையச் செய்வதற்கான மானியத்தின் பெயர்) வழங்கி யிருப்பது தெரிய வருகின்றது.  (ARE No. 350/1907)

மருத்துவக் கண்டுபிடிப்புக்கு வித்திட்டவர்:

இவ்விடத்தில் மருத்துவக் கண்டுபிடிப்புக்கு வித்திட்டவர்கள் இச்சாதியின ஆண்களா? அல்லது பெண்களா? என்ற கேள்வி முக்கியமாக எழுகின்றது.  பண்டைய காலத்தில் சடங்குகளைப் பெண்களே முன்னின்று நடத்தினர்.  இன்றும் கிராமப்புறங்களில் “பாட்டி வைத்தியம்” என்ற பெயர் புழக்கத்தில் இருப்பது அன்று பெண்களே மருத்துவம் செய்தனர் என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

இதற்கு ஒரு இலக்கிய சான்றாகக் கொங்கு மண்டலச் சதகத்தில் கார்மேகக் கவிஞர் (9-ஆம் நூற்றாண்டு) விரிவாக எடுத்துரைக்கின்றார்.

கொங்கு நாட்டு மன்னனின் மகள் பிரசவ வலியால் துன்புற்றபொழுது சிசு வெளிவராத நிலையில் ஒரு நாவிதப் பெண், வயிற்றைக் கீறி, (Caesarean) சிசுவை வெளியே எடுத்ததைச் சிறப்புற விளக்குவது இங்கு நினைவு கூரத்தக்கதாகும்.

இதுபோலவே வயிற்று வலி ஏற்படும் குழந்தை களுக்குக் குடல் தட்டி இன்றுவரை நிவர்த்தி அளிப்பதும் பெண்களே ஆகும்.  மேலும் நாவிதப் பெண்கள் இன்றும் பல கிராமங்களில் பிரசவம் பார்த்துவருவது என்பது ஆதிகாலத்தில் மருத்து வத்தைக் கண்டுபிடித்து அதனை வளர்த்து இன்று வரையில் தக்க வைத்துள்ளதின் எச்சமென்ப தாகும்.

நாவிதப் பெண்கள் மருத்துவச்சி என்று அழைக்கப்பட்டு, காலனி அரசு காலத்திலும் பணிபுரிந்துவந்தபொழுது இவர்களின் மருத்துவமுறை மேலை மருத்துவத்தை ஒத்து வராது, தூய்மையற்று இருந்ததன் காரணமாக, 1923-இல் காலனி அரசு இவர்கள் பணியை மேம்படுத்த

பல முயற்சிகளை மேற்கொண்டது.  மருத்துவப் பள்ளிகள், கல்லூரிகள் தோன்றிய பிறகும் தங்கள் பொருளாதாரப் பின்னடைவினால் மேலை மருத்துவம் கற்க வாய்ப்பின்றி போனார்கள்.  ஆகவே, இவர்களுக்குத் தெரிந்த தமிழ் சித்த மருத்துவத்தைச் சிக்கெனப் பிடித்தபடி மருத்துவம் புரிந்தனர்.  யூனிசெப் மற்றும் உலக சுகாதார கணக்குப்படி (1967) மருத்துவச்சிகளால் மட்டும் 70 விழுக்காடு பிரசவங்கள் நடைபெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.

இதுபோலவே நாவித வகுப்பு ஆண்கள் அறுவை சிகிச்சை உட்பட பல மருத்துவப் பணி களைப் புரிந்துள்ளனர்.  இது தவிர, சில நோய் களுக்குப் பேய், பிசாசு போன்றவற்றின் தாக்கமாக இருக்கும் என எண்ணிய நிலையில், அதனை விரட்டும் சடங்கினையும் செய்தனர்.  இவர்களால் மருத்துவம் பெற்றுக்கொள்பவர்கள் மேல்குடி மக்களாக இருப்பினும் இவர்கள் கூறுவதைக் கேட்பது மக்கள் மத்தியில் வழக்கமாக இருந்ததன் காரணமாக “எத்தைச் சொல்வானோ பரிகாரி அத்தைக் கேட்பான் நோயாளி” என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது.

முடிவாக, நாவிதர்களை நோக்கும்போது, உலக அளவில் அறுவை மருத்துவ முன்னோடி களாக, அறுவைக்கான கத்தியை வைத்திருந்த வர்கள் இன்றைய நிலையில் முடி வெட்டும் கத்திரிக் கோலுடன் வலம் வருவது ஏன் என்பதை இன்னும் விரிவாகக் கூறுபோட்டு ஆராய வேண்டியவர் களாக உள்ளோம் என்பது தெளிவாகின்றது.

துணை நூல்கள்:

1. டாக்டர் ரா. நிரஞ்சனாதேவி, அறிவியல் தமிழகம், மினாகோபல் பதிப்பகம், சென்னை - 2006.

2. கோ. ரகுபதி, ஆதி மருத்துவர் சவரத் தொழிலாளராக்கப் பட்ட வரலாறு, வல்லினம், புதுவை - 2006.

3. டாக்டர் ரா. நிரஞ்சனா தேவி, தென்னிந்திய மருத்துவ வரலாறு, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை - 2013.

Pin It

திரு. நா. வானமாமலை அவர்கள் இன்றுள்ள தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர்.  தமிழ் ஆராய்ச்சி அறிஞர்களுள் பின்பற்றப்பட வேண்டியவர்.

இக்கூற்று பேராசிரியர் நா.வா.  அவர்களின் நெருங்கிய நண்பராலோ, அவர் தோற்றுவித்து தலைமையேற்று நடத்திவரும் அவரது சிந்தனை வழித் தோன்றல்களான நெல்லை ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஒருவராலோ கூறப்பட்டக் கூற்றல்ல.  ஸ்ரீலங்கா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுள் சிறந்த ஆய்வாளராகத் திகழும் பேராசிரியர் கா. சிவத்தம்பி, எம்.ஏ., பி ஹெச். டி, அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய கூற்றாகும்.

பேராசிரியர் நா.வா. பின்பற்றப்பட வேண்டிய அறிஞராவார்? அவருக்கு முன்னும், இன்றும் எத்தனையோ அறிஞர்கள் ஆராய்ச்சி செய்ய வில்லையா? மு. இராகவ அய்யங்கார், வையாபுரிப் பிள்ளை, கா.சு.பிள்ளை, தெ.பொ.மீ.  என எத்தனையோ ஆராய்ச்சி அறிஞர்கள் உள்ளனர்.  ஆனால், பேராசிரியர் நா.வா. அவர்களின் ஆய்வு முறை மற்ற ஆய்வாளர்களின் முறையில் இருந்து மாறுபட்டது.  மற்ற ஆய்வு முறைகளுடன் மாறு பட வேண்டுமென்பதற்காக விதண்டாவாதமாக மாறுபடுத்தப்பட்ட ஆய்வு முறை இல்லை.

எந்த ஆய்வும் ஆய்வாளரின் அறிவின் வீச்சையும், மேதா விலாசத்தையும் மட்டுமே வெளிப்படுத்த உதவுமாயின் அத்தகைய ஆய்வு முறையால் உலகிற்கு எவ்விதப் பயனும் இல்லை.  ஆய்வு என்பது பல்வேறு கருத்துக்களைச் சேகரித்து வகைப் படுத்தி வெளியிடுவது மட்டுமல்ல.  அத்தகைய ஆய்வு “இணரூழ்த்தும் நாறாமலரை ஒக்கும்” பெரும்பாலான ஆய்வுகள், இருக்கும் நிலை மையை விமர்சிப்பதோடு நின்றுவிடுகின்றன; மேலும் அவைகள் சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்கள் தனிமனித சிந்தனையில் ஏற்பட்ட மாற்றங்களால் ஏற்பட்டவை என்ற கருத்தோட்டத்தைக் கொண்டவை.

ஆனால், பேராசிரியர் நா.வா. அவர்களின் ஆய்வு முறை இந்தக் கருத்தோட்டத்திற்கு முற்றிலும் மாறுபட்டது.  இன்று அவருடைய ஆய்வு முறை பலராலும் ஏற்றுக்கொண்டு பின்பற்றப்படுகின்றது.  அதன் அடிப்படைக் காரணம் ஆய்வு முறையில் அவர் கையாளும் விஞ்ஞான முறையாகும்.

இத்தகைய ஆய்வு முறை நம் நாட்டிற்கும் புதியது.  ஆனால், இன்றியமையாதது.  வட இந்தி யாவில் டாக்டர் கோசாம்பி, தேவி பிரசாத் சட்டோபாத்யாயா போன்றவர்கள் இந்த ஆய்வு முறையினை ஏற்கனவே பின்பற்றி ஆய்வுகள் செய்து ஆய்வுத் துறையில் தங்களுக்கென ஓர் இடத்தைப் பெற்றுள்ளனர்.  அவர்களது ஆய்வு முறை மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்கு கிறது.

தமிழகத்தில் இப்புதிய விஞ்ஞான ஆய்வு முறையை அறிமுகப்படுத்தி வழிகாட்டி, வெற்றி நடைபோடும் முதல்வரும் முன்னோடியும் பேரா சிரியர் நா.வா. அவர்கள் ஆவார்.  இலக்கியம், வரலாறு, மானிடவியல், நாட்டுப் பாடல், விஞ்ஞானம் ஆகிய கல்வித் துறைகளைத் தனித் தனியே பிரித்து ஒன்றுடன் ஒன்றினை சம்பந்தப் படுத்தாது ஆய்வு செய்வது வழக்கமாக உள்ளது.  ஆனால், பேராசிரியர் நா.வா. வின் ஆய்வு முறை இவை ஒவ்வொன்றையும் தனித்துப் பார்ப்ப தில்லை. இவைகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கிடப்பவை.  இவை அத்தனையையும் பிணைப்பது என்ற அடிப்படை அறிவைப் பெற முயலுகிறது. இதைக் கண்டுகொண்டால் உண்மையை அறிவதும் சிரமமாகாது.  இத்தகைய அடிப்படை அறிவைத் தரக்கூடியதுதான் பேராசிரியர் நா.வா.  அவர்களின் ஆய்வு முறையாகும்.

இயற்கையின் இயக்கத்திற்குச் சில அடிப் படையான நியதிகள் உள்ளன.  அவற்றின்படியே அது செயல்படும். சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்கள் வரலாற்றுப் பொருள்முதல்வாத விதிகளின்படி தான் ஏற்படுகிறது.  இந்த மாற்றங்கள் யாருடைய ஆணைக்காகவும் காத்திருப்பதில்லை.  யாருடைய கெஞ்சலுக்காகவும் தன் விதியை மாற்றுவதில்லை.  இந்த விதியை வரலாற்றுப் பொருள்முதல்வாத நியதிகள் என்று மார்க்ஸியம் அழைக்கிறது.  இந்த விதியினை தனது ஆய்வு முறைக்குப் பேராசிரியர் நா.வா. அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த விதிதான் எல்லாவித அறிவியல் கலைகளையும் கல்விப் பிரிவுகளையும் இணைக்கும் விதி.

“நிகழ்ச்சிகளே சிந்தனைகளை உருவாக்கு கின்றன.  சிந்தனைகள் நிகழ்ச்சிகளை உருவாக்குவ தில்லை” என்பது மார்க்ஸீயத்தின் அடிப்படைத் தத்துவம். சிந்தனைகள் உருவான பின் நிகழ்ச்சி களின் மீது அவை செல்வாக்குச் செலுத்துகின்றன.  நன்கு புரிந்த இவ்வியக்கவியலை நம் நாட்டுச் சூழ்நிலைக்கு ஏற்ப அதைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்வதில் தன்னிகரற்றவர் பேராசிரியர் நா.வா. அவர்கள்.  இவ்விதியினை வரட்டுத்தனமாகப் பயன் படுத்துவதில்லை.  தத்துவம் என்பது சிக்கல்கள் என்னும் கடலைக் கடக்கப் பயன்படும் தோணி யாகும்.  மாறாக தத்துவமே எல்லாம் என்று தத்து வத்தைக் காலில் கயிறுபோல் கட்டிக் கொண்டு கடலில் விழுந்தால் நீரில் மூழ்க வேண்டியது தான்.  பேராசிரியர் இயக்க இயல் என்னும் கப்பலில் பயணம் செய்வதால் எத்தகைய சமுதாயச் சிக்கல் கடல்களையும் கடக்க முடிகிறது.  எந்தச் சமுதாயச் சிக்கலுக்கும் தீர்வு காண்பது எளிதாக உள்ளது.  பேராசிரியர் நா.வா அவர்களின் புதிய ஆய்வு முறையினை உலகுக்குப் பறைசாற்றியவை உலகத்  தமிழ் மாநாட்டில் அவர் வாசித்தளித்த The motif in Silappadikaram, Consolidation of Feudalism ----- rules ----- சரடநள என்ற கட்டுரைகளாகும்.

ராஜ ராஜ சோழனைப்பற்றிய அவரது கட்டுரையும், தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுக்களின் சான்றுகளைக் கொண்டு அக் கோயிலுக்கு ராஜ ராஜ சோழனால் அளிக்கப் பட்ட பல்வேறு வகையான சொத்துக்களைப் பற்றிய அவருடைய கட்டுரை ராஜ ராஜ சோழனின் மெய்க் கீர்த்தியைப் பாடி வந்தவர்களின் மனதில் அதிர்ச்சியையும், உண்மையான ஆய்வாளர்களின் மனதில் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  இராஜ ராஜன் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் ஆட்சியை நிலைநிறுத்தச் செய்த  நிலமானிய முறை மாற்றங் களை அக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.

எந்தத் துறையிலும் அவர் ஒப்புநோக்கும் முறையையும், மேலே விளக்கிய ஆய்வு முறையையும் கையாளுகிறார்.  சமுதாயத்தைப் பற்றியும், அதன் மீது வளர்ந்து வரும் கலை இலக்கியங்கள் பற்றியும் ஆராய்வதற்கு அவர் கையாளும் ஆய்வு முறையே அவருடைய சக்தி வாய்ந்த ஆயுதமாகும்.

இன்று பேராசிரியர் நா.வா.  அவர்களின் ஆய்வு முறையைப் பின்பற்றும் ஆய்வாளர்கள் தமிழகத்திலும், பிற தமிழ் கூறும் நல்லுலகத்திலும் அனேகர் தோன்றியுள்ளனர்.  எத்தனையோ ஆய்வாளர்கள் ஏகலைவர்களாக இவருடன் கடிதத் தொடர்பு மட்டுமே கொண்டு இவருடைய ஆய்வு முறையைப் பின்பற்றுகின்றனர்.  சமுதாய மாற்றத்திற்காகத் தனது ஆய்வுமுறையைப் பயன்படுத்தும் பேராசிரியர் நீண்ட நாள் வாழ்ந்து அவருடைய ஆய்வு முறையை வளம்படுத்த  வேண்டும் என விரும்புகிறேன்.

(நா.வா.மணிவிழா மலரில் வெளியான கட்டுரை)

Pin It