ungal noolagam apr17

இந்தியச் சமூக அமைப்பில் இன்று வரை ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு கருத்தியல், தீண்டாமைக் கருத்தியல் ஆகும். நான்கு வருணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்த பண்டைய இந்தியச் சமூகத்தில் இந்நான்கு வருணங் களுக்கும் அப்பால் புதிய பிரிவு ஒன்று மனு என்றழைக்கப்படும் சுமதிபார்கவி என்பவரால் உருவாக்கப்பட்டது. வருணமற்றவர்கள் என்ற பொருளில்  அவர்ணர்கள் என்று இப்புதிய பிரிவை அழைத்த  மனுச் சண்டாளர் என்ற பெயரையும் இட்டார்.            

இந்திய மக்கள்  தொகையில்  பெருவாரியான  இம் மக்கள்  பிரிவினர், இந்தியாவின்  பல்வேறு பகுதிகளில் பல்வேறு சாதிப் பெயர்களுடனும் சாதிப்பட்டங் களுடனும்  பெரும்பாலும் கிராமப்புறங்களில் வேளாண்  தொழிலாளர்களாக வாழ்ந்தனர்.

ஆங்கிலக் காலனிய அரசு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முறையை இந்தியாவில் அறிமுகம்  செய்த போது தீண்டத்தகாத சாதியினர் யாவர்   என்பதைப் பதிவு செய்தது. அவ்வாறு பதிவு செய்ய வழிகாட்டும் வகையில், சில வரையறைகளை 1911-இல் உருவாக்கியது. இவ்வரையறைகளைப் படித்துப் பார்க்கும் போது இம் மக்களின் சமூகப் பொருளியல் நிலை எவ்வாறு இருந்தது என்பதை  நம்மால்  யூகிக்க முடியும்.

கிறித்தவ மறைப்பணியாளர்களும் ஆங்கில அரசும், தீண்டாமை என்ற ஓர் அடையாளத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு இக்கொடுமைக்கு ஆளான மக்கள் பிரிவினருக்குப் பெயரிட்டன. இம்மக்களின்  தனித்தனிப் பண்பாடுகளும், வாழ்வியலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இது ஒரு வகையான  இனமையவாதச் சிந்தனையின் வெளிப்பாடுதான். இவ்வகையில் ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டவர், தீண்டத்தகாதோர் என்ற பொதுப் பெயர்களால் இம் மக்கள்  பிரிவினர்  சுட்டப்பட்டனர்.  இவர்களின்  சாதிப் பெயர்கள் அட்டவணைப்படுத்தப்பட்டதன் அடிப் படையில் அட்டவணை சாதியினர் என்றும் அழைக்கப் படலாயினர்.

···

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு முக்கிய கட்டமான சுதேசி இயக்கம் இந்தியாவின் நகர்ப் புறங்களை மையமாகக் கொண்டே நிகழ்ந்தது. மிகச் சொற்ப அளவில் தான் இதன் தாக்கம் கிராமப் புறங்களில் இருந்தது.    

காந்தியின் வருகைக்குப் பின்னர் 1920ல்  தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம், சுதேசி இயக்கத்தை விடப் பரவலான களங்களில் நிகழ்ந்தது. கிராமங்களை அதிகமாகக் கொண்டிருந்த இந்தியாவில் கிராம மக்களை ஈர்க்காமலும், அவர்களது பங்களிப்பு இல்லாமலும் விடுதலைப் போராட்டத்தை நடத்த முடியாது என்ற உண்மையைக் காந்தி அறிந்து கொண்டார். அதன் அடிப்படையில் கிராமப்புற மக்களை ஈர்க்கும் வகை யிலான செயல் திட்டங்களை உருவாக்கினார்.  இம் முயற்சியில் தீண்டத்தகாதோர் என்று ஒதுக்கி வைக்கப் பட்டிருந்த மக்கள் பிரிவின் மீது அவரது பார்வை படிந்தது. அவரது மனிதநேய உணர்வும் இதில் கலந்து கொண்டது.

ஹரிஜன்

பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட  தீண்டத் தகாதோர்  பிரிவு மக்களுக்கு ஒரே அடையாளத்தைத் தரும் வகையில்  ஒரு பெயரை இடவிரும்பினார், இதன் அடிப்படையில்  ‘ஹரிஜன்’ என்ற பெயரை இட்டார்.

இப்பெயரை அவர் உருவாக்கவில்லை. அவர் பிறந்த  குஜராத் மாநிலத்தில் வாழ்ந்த நார்சி மோத்தா  என்ற குஜராத் கவிஞர் உருவாக்கிய சொல் இது. இந்து சமயம் உருவாக்கிப் பேணிக் காத்த தேவதாசி முறையில்  பிறந்த பிள்ளைகள், தம் தந்தை பெயர்  அறியாது  வாழ வேண்டிய  அவலம்  நிலவியது.  மனித நேய  உணர்வு கொண்ட இக்கவிஞர், இவர்கள் விஷ்ணுவின்  பிள்ளைகள் என்ற பொருளில் ஹரிஜன் (ஹரி - விஷ்ணு) என்று  பெயரிட்டழைத்தார், இச் சொல்லையே  காந்தி  ஏற்றுக்கொண்டு தீண்டத்தகாதோர் என்று ஒதுக்கப் பட்டிருந்த மக்கள் பிரிவைக் குறிக்கப் பயன்படுத்தலானார்.   தாம் நடத்திய பத்திரிகைக்கும் இப்பெயரை இட்டார்.  காங்கிரஸ் இயக்கத்தின் அரசியல் கலைச் சொல்லாக இது விளங்கலாயிற்று.

இரட்டை வாக்குரிமை

மற்றொரு பக்கம் காங்கிரஸ் இயக்கத்திற்கு வெளியே  இம்மக்கள்  பிரிவினரிடம்  இருந்தே  தலைவர் களும் சிந்தனையாளர்களும் ஆங்காங்கே உருவாகத் தொடங்கினர். இவ்வரிசையில் சிறப்பான  இடத்தைப் பெற்றவராக  அம்பேத்கர்  விளங்கினார். இம் மக்களின்  முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு அவர் முன் வைத்த திட்டங்களுள் ஒன்று இரட்டை வாக்குரிமை யாகும்.

அவரது திட்டப்படி தீண்டத்தகாத பிரிவைச்  சேர்ந்த வாக்காளர்கள் மட்டும் இரண்டு வாக்குகளைத் தேர்தலில்  வழங்கும் உரிமை பெற்றிருப்பர். இவற்றுள் ஒரு வாக்கைப் பயன்படுத்தி ஏனைய வாக்காளர்களுடன்  இணைந்து ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்வர், அவர் களுக்கு மட்டுமே உரிய ஒரு வாக்கைப் பயன்படுத்தி தீண்டத்தகாத பிரிவைச் சார்ந்த ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்வர்.

இதனால்  பிற இயக்கங்களின்  கட்டுப்பாட்டிற்குள்  வராத தீண்டத்தகாத பிரிவைச் சேர்ந்த ஒருவரைத் தேர்வு செய்ய முடியும். இதில் பிற வகுப்பினர் தலையிட முடியாது.

இதைத் தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் எதிர்த்து வந்தது.  கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது.

இந்தியாவுக்கு எத்தகைய அரசியல் சட்ட வரைவை  உருவாக்குவது என்பது தொடர்பாகக் குழு ஒன்றினை ஆங்கில அரசு 1928 இல் அமைத்தது. இது, இக் குழுவின்  தலைவரான  சைமன் என்பவரின் பெயரால் சைமன் கமிஷன் எனப்பட்டது.  மக்களின்  கருத்தறிய  இக்குழு இந்தியா வந்த போது, இதற்கு எதிராக, சைமன் கமிஷன் எதிர்ப்புப் போராட்டத்தை காங்கிரஸ் நடத்தியது. அன்றைய காலகட்டத்தில் பரவலான

மக்கள் ஆதரவைப் பெற்ற காங்கிரசின் எதிர்ப்பால் எதிர் பார்த்த அளவுக்கு சைமன் குழு வருகை வெற்றி பெறவில்லை. இதனை  ஈடு செய்யும் வகையில் 1930 இல்  வட்டமேசை மாநாடு ஒன்றை  இலண்டனில்  ஆங்கில அரசு நடத்தியது.  ஆனால்  காங்கிரஸ்  இதில்  கலந்து கொள்ளவில்லை.  இதனால் எந்தவொரு முடிவையும்  இம்மாநாடு எடுக்க முடியாமல் போனது.

ஆயினும் இந்தியாவுக்கு என்று தனியாக அரசியல்  அமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது, தீண்டத் தகாதோர் எனப்படும் மக்கள் பிரிவைக் கலந்து முடிவெடுக்க வேண்டும் என்ற முடிவு  முதலாம் வட்ட மேசை மாநாட்டில் எடுக்கப்பட்டது. இவ்வகையில்  இது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வெற்றி தருவதாய்  அமைந்தது.

1931 செப்டம்பரில் இரண்டாம் வட்ட மேசை மாநாடு நடந்தது. இதில் காந்தியடிகள் கலந்து கொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தனித் தொகுதி முறையை காந்தி எதிர்த்தார்.  மற்றபடி  எந்த முடிவும்  எடுக்கப்படவில்லை. 1932 ஜனவரியில்  காந்தி  கைதானார். இதே ஆண்டில் இரட்டை வாக்குரிமையை ஏற்றுக் கொள்ளும் முடிவை இங்கிலாந்து பிரதமர்  அறிவித்தார்.

இவ் அறிவிப்பு வந்த பின்னர் இம்முடிவுக்கு எதிராக காந்தி உண்ணாநோன்பை 1932 செப்டம்பர் 20ஆவது நாளில் தொடங்கினார். இந்து மகாசபையினரும் காந்தியின்  நிலைப்பாட்டிலேயே இருந்தனர்.  மக்களின் செல்வாக்குப் பெற்ற தலைவரான காந்தியின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய இக்கட்டான சூழலில், இரட்டை வாக்குரிமையை விட்டுக் கொடுக்கும் ஒப்பந்தத்தில் 24.09.1932 இல் அம்பேத்கர் கையெழுத்திட்டார்.

இவ்வாறு முதலாம் வட்ட மேசை மாநாட்டில் பெற்ற இரட்டை வாக்குரிமையை, காந்தியடிகளின்  உண்ணா நோன்பால் தாழ்த்தப்பட்ட மக்கள் இழந்தனர்.  

இதுவரைப் பார்த்த செய்திகளின் பின்புலத்தில் அம்பேத்கரின் ‘தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்ததென்ன’ என்ற நூலைப் படிக்க வேண்டும்.

நூல்

இந்திய அரசியல் அரங்கில், தீண்டத்தகாதவர்களின்  பாதுகாவலர்கள் என்ற அடையாளத்தை காந்தியும்  காங்கிரசும் உருவாக்கியிருந்த சூழலில் இந்நூலின் தலைப்பு அதிர்ச்சியூட்டுவதாய் அமைந்திருந்தது.  நூலின் முதல் பதிப்பு 1945 இல் வெளியானது.

பதினொன்று இயல்களைக் கொண்டிருந்த இந் நூலில், விரிவான பின் இணைப்புகளை அம்பேத்கர் கொடுத்துள்ளார்.

இந்நூல் தமிழில், பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்  நூல் தொகுப்பு வரிசையில் பதினாறாவது தொகுதியில்  இடம்பெற்றுள்ளது. இப்பதினாறாவது தொகுதி முழுமையும் இந்நூலை உள்ளடக்கியதுதான். எனவே இந்நூலைப் படிக்க விரும்புவோர், அம்பேத்கர் நூல் தொகுதி வரிசையில்  பதினாறாவது தொகுதியை வாங்கிப் படிக்க வேண்டும். 627 பக்கங்களைக் கொண்ட

இந்நூல் நாற்பது ரூபாய்தான். நூலகப் பதிப்பின் விலை கூட ரூபாய் நூறுதான்.

நூலின் செய்தி

நூலின் முதல் இயல் 1917 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நிகழ்ந்த இந்திய தேசியக் காங்கிரஸின்  வருடாந்திரக் கூட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின்  குறை பாடுகளை அகற்றுவதை வலியுறுத்தும் தீர்மானத்தில் இருந்து தொடங்குகிறது.

இத்தீர்மானத்தை வரி மாறாது மேற்கோளாகக் காட்டிவிட்டு இத் தீர்மானத்தை முன்மொழிந்த நடேசன், இத் தீர்மானத்தை ஆதரித்து உரையாற்றிய, புலபாய் தேசாய், ராமய்யர், ஆசப் அலி ஆகியோர் ஆற்றிய உரைகளை மேற்கோளாகக் காட்டுகிறார்.  இவ் உரைகள் தீண்டப்படாதோர் என்று கூறப்படும்  மக்கள்  பிரிவின்  மீதான  காங்கிரஸின் அனுதாப  உணர்வையும், அவர்கள் முன்னேற்றத்தின் மீது கொண்டுள்ள  ஆர்வத் தையும் வெளிப்படுத்துபவை. இவ்வுரைகள்  கண்ணிய மான சொற்களைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடும் அம்பேத்கர் இது விநோதமான நிகழ்வு என்றும் மதிப்பிடுகிறார்.

இம்மதிப்பீட்டிற்கான காரணத்தை இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்த அன்னிபெசண்டில் இருந்து தொடங்கு கிறார். தீண்டத்தகாதவர்களின் மீது இயல்பான  வெறுப்புணர்வு கொண்டார் அன்னிபெசண்ட் என்ற கருத்தை முன்வைக்கும்  அம்பேத்கர்  அதற்குச் சான்றாக  1909 பிப்ரவரியில்  வெளியான இந்தியன் ரெவ்யூ என்ற ஆங்கில ஏட்டில் Ôஒடுக்கப்பட்ட வர்க்கங்களை மேம் படுத்தல்Õ என்ற தலைப்பில் அன்னிபெசண்ட் எழுதிய கட்டுரையை விரிவான மேற்கோளாகக் காட்டுகிறார்.

இக்கட்டுரையில் இம் மக்களைக் குறித்த எதிர் மறையான, அருவருப்பான சித்திரத்தைத் தீட்டும் அன்னிபெசண்ட் அதைப் போக்கும் வழிமுறைகளைக் கூறவில்லை. இதற்குக் காரணமான  ஆட்சியாளர்களை விமர்சிக்கவில்லை. மாறாக  மேட்டிமைக் குழு மக்களின்  குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் இச் சமூகத்தின்  குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது என்று வாதிடு கிறார்.  இத்தகைய  சிந்தனைப் போக்குடைய அன்னி பெசண்ட்டின்  தலைமையில்  இத்தீர்மானம்  நிறைவேற்றப் பட்டமையே ‘வினோதமான சம்பவம்’ என்று குறிப்பிடும்படி அவரைத் தூண்டியுள்ளது. 

இரண்டாவது மாநாடு தொடங்கி, சமூக சீர்திருத்தங் களின் பால் தனக்குள்ள அக்கறையை காங்கிரஸ் இயக்கம் வெளிப்படுத்தி வந்தது.  1895 இல் புனே நகரில் நடந்த  காங்கிரஸ் மாநாட்டில் சமூக சீர்திருத்தம்  தொடர்பான கருத்துக்கள் மாநாட்டில் இடம் பெறுவதை ‘சமூகப் பழமைவாதிகள்’  திலகர்  தலைமையில் எதிர்த்தனர்.  இதன் பின்னர் சமூகத் தீமைகளைக் களைவதிலோ அல்லது தணிப்பதிலோ அக்கறையில்லாத ஆர்வமில்லாத ஓர் அரசியல் அமைப்பாக  காங்கிரஸ் மாறியது என்கிறார் அம்பேத்கர்.

இதனால்தான் தீண்டத்தகாதவர் என ஒதுக்கி வைக்கப்பட்ட  மக்கள் பிரிவினரின் நலன் தொடர்பாக 1917 காங்கிரஸ் மாநாட்டில் இயற்றப்பட்ட  தீர்மானத்தை விநோதமான சம்பவம் என்கிறார் அம்பேத்கர்.

இவ்வாறு குறிப்பிட்டு விட்டு, பின்வரும் ஆறு வினாக்களை எழுப்புகிறார்.     

·          இப்படி ஒரு தீர்மானத்தை இயற்ற வேண்டியது அவசியம் என்று, காங்கிரஸ் ஏன் கருதியது?

·          இவ்வாறு அக்கறை கொள்ள அதைத் தூண்டியது எது?

·          இதனால் அது பெற விரும்பிய ஆதாயம் என்ன?

·          அது யாரை ஏமாற்ற விரும்பியது?

·          அதன் பார்வையால் ஏற்பட்ட மாற்றமா? அல்லது  உள்நோக்கமா?

·          எது இதை நிறைவேற்றத் தூண்டியது?

இதன் தொடர்ச்சியாக, ‘காங்கிரஸ் தீர்மானத்திற்குப் பின் ஓர் உள்நோக்கம் இருந்தது... அந்த நோக்கம் ஆன்மீக நோக்கமல்ல, அது ஓர்  அரசியல்  நோக்கமாக இருந்தது’ என்பதை விளக்கியுள்ளார். 

1885 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் 32 ஆண்டுகள் கழித்து 1917 இல் தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றியமைக்குக் காரணம் என்ன  என்ற வினாவை எழுப்பும் அம்பேத்கர்  அதற்கு விடையும் அளிக்கிறார். 1917 இல் நாராயண் சந்தவார்க்கரின்  தலைமையில்  நிகழ்ந்த  தாழ்த்தப்பட்ட  வகுப்பினர் மாநாட்டில்  இயற்றப்பட்ட  தீர்மானங்களே இதற்குக் காரணம் என்பது அவரது கருத்தாகும். இம் மாநாட்டை அடுத்து இரண்டாவது கூட்டமும் இதே பங்களிப்பைச் செய்துள்ளது.

காங்கிரஸ் லீக் திட்டத்திற்கு தாழ்த்தப்பட்டவர்களின்  ஆதரவு தேவை என்ற நிலையில் இத்தீர்மானத்தை நிறை வேற்ற வேண்டிய கடப்பாடு காங்கிரசுக்கு இருந்தது.

பர்டோலி தீர்மானம்    

1919 இல் காந்தியின்  வருகைக்குப் பின்னர்,  பொது மக்களிடம் தொடர்பு கொள்ளும் இயக்கமாக  காங்கிரஸ் மாறியது.  இம் மாற்றத்தை  அடுத்து 1922 பிப்ரவரியில்  பர்டோலி என்னும் ஊரில் நிகழ்ந்த கூட்டத்தில் சில செயல் திட்டங்களை அறிவித்தது. உறுப்பினர் சேர்க்கை,  கதர் உற்பத்தி, மது எதிர்ப்பு போன்றவற்றுடன்  தாழ்த்தப் பட்ட மக்களை மையப்படுத்தும் திட்டம் ஒன்றும் இச் செயல் திட்டத்தில் பின்வருமாறு இடம் பெற்றிருந்தது.

‘தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஒரு சிறந்த வாழ்க்கை வாழ ஒருங்கமைத்தல், அவர்களுடைய சமூக, மன மற்றும் தார்மீக சூழ்நிலைகளை மேம்படுத்தல், தங்களுடைய குழந்தைகளை தேசியப் பள்ளிகளுக்கு அனுப்ப அவர்களைத் தூண்டுதல், இதர பிரஜைகள் அனுபவிக்கும் சாதாரண வசதிகளை அவர்களுக்கு வழங்குதல்’ ஆகியவைகளாகும்.

பின்னர் இத்திட்டம் காங்கிரஸ் காரியக் கமிட்டி யால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை நிறைவேற்ற 

குழு ஒன்றையும் நியமித்தது. அத்துடன் இதற்காக ஐந்து இலட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டது.

1923-இல் மும்பையில் கூடிய கூட்டத்தில், “... தீண்டப்படாதவர்களின் பிரச்சினை குறிப்பாக இந்து சமுதாயம் சம்பந்தப்பட்டதாக இருப்பதால், இந்து சமுதாயத்தினரிடையே இருந்து இத் தீமையை அகற்றும் கடும் முயற்சிகளை மேற் கொள்ளவும், இந்த விஷயத்தைத் தன் பொறுப்பில் ஏற்றுக் கொள்ளவும், அகில இந்திய இந்து மகா சபையை அது கேட்டுக் கொள்கிறது.”

என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத் தீர்மானம் குறித்து,

‘தீண்டப்படாதவர்களின் மேம்பாடு குறித்த பணியை மேற்கொள்வதற்கு இந்து மகாசபையை விட சற்றும் பொருத்தமற்ற ஓர் அமைப்பு வேறெதுவும் இருக்க முடியாது. தீண்டப்படாதவர்களின்  பிரச்சினையை  சிரமேற்கொண்டு தீர்க்க சற்றும்  தகுதியற்ற ஓர் அமைப்பு இருக்கிறதென்றால்  அது இந்து மகாசபை தான்.  அது ஒரு தீவிரவாத இந்து அமைப்பாகும்... அது ஓர் அப்பழுக்கற்ற அரசியல் அமைப்பு, அதன் பிரதானக் குறிக் கோளும் நோக்கமும் இந்திய அரசியலில்  முஸ்லீம்களின் செல்வாக்கை எதிர்த்துப் போராடு வதேயாகும். தனது அரசியல் வலிமையைப் பேணிக் காப்பதற்காக அது தனது சமூக ஒருமைப்பாட்டை பராமரிக்க விரும்புகிறது. சமூக ஒருமைப்பாட்டை பராமரிக்கும் வழிமுறை, ஜாதி அல்லது தீண்டாமையைப் பற்றிப் பேசாதிருப்பதேயாகும்”.

மேலும், தீண்டப்படாதவர்களின் உண்மையான நண்பரான  சுவாமி சித்தானந்தாவை, தான் உருவாக்கிய  குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிப்பதை தொடக்கத்தில்  இருந்தே காங்கிரஸ் விரும்பவில்லை. அவருக்குப் பதிலாக ஓர் ஆசாரமான பிராமணரான தேஷ்பாண்டேயைத் தேர்வு செய்தது. இறுதியாக இப்பிரச்சினையை இந்து மகாசபையிடம் ஒப்படைத்தது. பர்டோலி  தீர்மானத்தை  நடைமுறைப்படுத்த உதவும் வகையில் தேவையான  நிதி வழங்கவும் காங்கிரஸ் விரும்பவில்லை. இது தொடர்பாக  சுவாமி சித்தானந்தாவுக்கும் பண்டித மோதிலால் நேருவுக்கும் இடையில் நிகழ்ந்த கடிதப் போக்குவரத்தின்  நகல்கள் நூலின் பின் இணைப்பில்  இடம் பெற்றுள்ளன.  இறுதியில் சுவாமி சித்தானந்தா  இக்குழுவில் இருந்து 1922 இல் விலகி விட்டார்.

மன்னரின் தீர்ப்பு     

தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்தொகுதி வழங்கும் திட்டத்தை இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் காந்தி ஏற்றுக்கொள்ளவில்லை. தாழ்த்தப் பட்ட வகுப்பினருக்குத் தனித்தொகுதி உரிமை அளிக்கப் படுமானால் என் உயிரைக் கொடுத்தேனும் அதை எதிர்ப்பேன் என்று காந்தி குறிப்பிட்டார்.  பின்னர் அவர் இந்தியா திரும்பியதும்  கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். சட்ட மறுப்பு இயக்கத்தை மீண்டும் தொடங்கப் போவதாக  அவர் எச்சரித்ததே இதற்குக் காரணம்.

சிறையில் இருந்தபடியே 1932 மார்ச் 11இல்

இந்திய மந்திரி சாமுவேல் ஹோருக்கு  கடிதம் ஒன்றை எழுதினார். இக்கடிதத்தில் தாழ்த்தப்பட்டோருக்குத் தனித்தொகுதி உருவாக்குவது குறித்த தன் எதிர்ப்பைப் பின்வருமாறு பதிவு செய்திருந்தார்.

Ò...தனித்தொகுதி முறை அவர்களுக்கும் இந்து சமயத்திற்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது. கேடு பயப்பது என்று கருதுகிறேன்... ...இந்து சமயத்தைப் பொறுத்தவரையில் தனித் தொகுதி முறை அதனை உடைத்துத் தகர்த்துக் கூறு போட்டு விடும்.  எனக்கு  இந்த  வகுப்பாரின்  பிரச்சினை பிரதானமாக தார்மீகச் சார்புடையது. சமயத் தொடர்புடையது.Ó

காந்தியடிகளின் இக்கூற்று ஒரு சமூக அரசியல் பிரச்சினையை மதப்பிரச்சினையாகப் பார்த்ததன்  வெளிப்பாடுதான். அடுத்ததாக,

Òதாழ்த்தப்பட்ட இனத்தாருக்கு தனித்தொகுதிகள்   அமைப்பதென அரசு முடிவு செய்யும் பட்சத்தில் அதனை எதிர்த்து  நான் சாகும்வரை உண்ணா விரதம் இருப்பேன் என்பதை மன்னர் பிரான் அரசாங்கத்துக்குப் பண்போடு தெரிவித்துக் கொள்கிறேன்... தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குத் தனித் தொகுதிகளை உருவாக்கும் உத்தேசம் ஏதும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு இல்லை என்றும் நம்பவே விரும்புகிறேன்Ó

என்றும் தம் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 1932 ஆகஸ்ட் 17-இல், இங்கிலாந்தின் மன்னர் வெளியிட்ட அறிக்கையானது காந்தியின் எச்சரிக்கையைப் பொருட் படுத்தாததன் வெளிப்பாடாக அமைந்தது. அதன் முக்கிய செய்திகள் வருமாறு:

·          தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனித் தொகுதிகள் ஒதுக்கப்படும்.

·          இம்மக்கள் பிரிவினர் மட்டுமே இத்தொகுதி களில் வாக்களிப்பர்.

·          இத்தொகுதியில்  வாக்களிக்கும்  உரிமை  பெற்றவர் பொதுத் தொகுதியிலும் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவார்.

·          தாழ்த்தப்பட்ட மக்கள் மிகுதியாக வாழும்  பகுதிகளில்  இத்தனித்தொகுதி அமைக்கப்படும்.

·          இருபது ஆண்டுகள் வரை இம் முடிவு  நீடிக்கும்.

இங்கிலாந்துப் பிரதமரின் இத்தீர்ப்பை எதிர்த்து,  கடிதம் ஒன்றை அவருக்கு காந்தி எழுதினார்; அக் கடிதத்தில் இருந்து சில பகுதிகள் வருமாறு:

என் உயிரைப் பணயம்  வைத்து உங்கள் முடிவை  எதிர்க்க வேண்டியவனாக இருக்கிறேன். இதைச் செய்வதற்கு எனக்குள்ள ஒரே வழி சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதே ஆகும். பிரிட்டிஷ் அரசாங்கம்... தனது முடிவை மாற்றிக் கொள்ளு மானால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்குத் தனித் தொகுதிகளை ஒதுக்கும் தனது திட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமானால்  என் உண்ணாவிரதத்தை நிறுத்தி விடுவேன்.Ó

காந்தியின் இக்கடிதத்திற்கு இங்கிலாந்தின்  பிரதமர்  ராம்ஸே மக்டொனால்டு பதில் எழுதினார். அதில், 

Òதாழ்த்தப்பட்ட வகுப்பினர், தங்களது குரலை எதிரொலிக்கக் கூடிய குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள தங்கள்  பிரதிநிதிகளைத் தாங்களே தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுத்து அனுப்புவதைத் தடுக்கும் ஒரே நோக்கத்துடனேயே நீங்கள் உண்ணா விரதத்தை மேற்கொள்ளத் தீர்மானித்திருக் கிறீர்கள். இவ்வாறு தான் உங்கள் போக்கை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.Ó

என்று குறிப்பிட்டிருந்தார்.

புனே ஒப்பந்தம் 

தாம் குறிப்பிட்டபடி காந்தியடிகள் தம் உண்ணா விரதத்தை 1923 செப்டம்பர் 20 ஆம் நாளன்று தொடங் கினார்.  இதனால்  காந்தியின்  உயிரை எவ்வாறு காப்பது என்ற பிரச்சினை உருவானது என்று அம்பேத்கர் குறிப்பிட்டார். காந்தியின் உண்ணாவிரத நிர்ப்பந்தத் திற்குப் பணிந்து  தாழ்த்தப்பட்டவர்களின்  வகுப்புரிமை தொடர்பான  பிரிட்டிஷ் பிரதமரின் தீர்ப்பில் மாற்றம் செய்ய அம்பேத்கர் இணங்கினார்.  இறுதியில் ஒப்பந்த விதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இவ்வொப்பந்தம் இரட்டை வாக்குரிமையைப் பறித்து விட்டது.  இது குறித்து சற்று விளக்கமாக  சில செய்திகளை  அம்பேத்கர்  கூறச் செல்கிறார்.  இதனை அடுத்து  தீண்டப்படாதவர்கள் மீதான  காங்கிரசின் கருணையை அதன் உள்ளார்ந்த  பொருள் என்ன என்று  வெளிப்படுத்துகிறார். இந்திய மக்கள் அனைவரையும்  காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என்ற வினாவை எழுப்பி ‘தாழ்த்தப்பட்ட இன வேட்பாளர் உண்மையில் இந்துக்களால் நியமிக்கப்படுபவர் என்றே கூற வேண்டும்’ என்கிறார்.

‘தீண்டப்படாதோர் உட்பட இந்தியா முழு வதையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே அமைப்பு’ காங்கிரஸ் தான் என்ற கருத்தை அயல்நாட்டினர்

நம்பி வந்த சூழலில், இந்திய சமூக அமைப்பு குறித்த  உண்மையை இந்நூலின் ஒன்பதாவது இயலில் அம்பேத்கர் வெளியிட்டுள்ளார். ‘சுதந்திரத்திற்காக காங்கிரஸ் போராடி வருகிறதா என்ற கேள்வி யாருடைய சுதந்திரத்திற்காக, காங்கிரஸ் போராடி வருகிறது

என்னும் கேள்வியுடன் ஒப்பிடும் போது மிக மிகக் குறைந்த முக்கியத்துவத்தையே பெறுகிறது’ என்று குறிப்பிட்டு விட்டு, இந்தியாவின் ஆதிக்க வகுப்பினராகப் பிராமணரும் பனியாக்களும் விளங்கி வருவதை அம்பேத்கர் வரலாற்றுச் சான்றுகளுடன் சுட்டிக் காட்டியுள்ளார். இவ்வியலின் இறுதியில்  ‘காங்கிரசை ஆதரிப்பது என்பது மற்றவர்களை அடிமைப்படுத்த கொடுங்கோன்மைக்கு சுதந்திரமளிப்பதையே குறிக்கும்’ என்று முடித்துள்ளார்.

எட்டாவது  இயல்  இந்து சமயத்திற்கும்  தீண்டத் தகாதவர்  என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும்  மக்கள் பிரிவினருக்கும் இடையிலான எதிர்மறையான  உறவினை விளக்குகிறது.

இறுதி இயல்  ‘காந்தியம்  தீண்டப்படாதவர்களின்  தலைக்கு மேல் தொங்கும் வாள்’ என்ற தலைப்பைக் கொண்டுள்ளது. கல்விப்புலம் சார்ந்த பாடநூல்கள், காந்தியவாதிகள் எழுதிய நூல்கள் வாயிலாக மட்டுமே  காந்தியை அறிந்து கொண்டவர்களுக்கு இத்தலைப்பு அதிர்ச்சியூட்டுவதாகவே அமையும். தலைப்பு மட்டு மின்றி  இவ்வியலில்  இடம் பெற்றுள்ள சாதி, வருணம்  தொடர்பான காந்தியின் கூற்றுகளும்கூட அதிர்ச்சி யூட்டுபவை தாம். சாதிமுறை, வருணமுறை தொடர்பான  காந்தியின் கூற்றுகளை அப்படியே மேற்கோளாக அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார் (பக் 442 - 444). இவை அவரது வருணாசிரமச் சார்பை வெளிப்படுத்தி நிற்கின்றன.

உழைக்கும்  வர்க்கத்தினரான தொழிலாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் அவர் வழங்கியுள்ள அறிவுரை களையும்  அம்பேத்கர் மேற்கோளாகக் காட்டியுள்ளார். இவையும் கூட எரிச்சலூட்டும்  தன்மையின. நம் கால காந்தியவாதிகள் சிலர் ஆலைத் துணிகளையும் ஏன் கைத்தறித் துணிகளையும் கூடத் துறந்து, கதராடை  அணிந்து வாழ்ந்தாலும் சாதி உணர்வைத் துறக்காது வாழ்கிறார்கள். அம்பேத்கர் மேற்கோளாகக் காட்டும்  இப் பகுதிகளைப் படிக்கும் போது அவர்கள்  உண்மை யாகவே  காந்தியைப் பின்பற்றுபவர்கள் என்றே கூறத் தோன்றுகிறது.

Ôஅம்பேத்கர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கையாள்Õ என்ற குற்றச்சாட்டை முன்வைப்பவர்களின் போலி வாழ்க்கையையும், குருவாயூர் கோவில் நுழைவுப் போராட்டத்தில் காந்தியின் எதிர்மறையான செயல் பாட்டையும் அம்பேத்கர் வலுவான சான்றுகளுடன் வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் பின்வரும்  வினாக்களையும் காந்தியை நோக்கி எழுப்பியுள்ளார்.

1.         திரு காந்தி, தாம் மிகவும் நேசிக்கிற பல்வேறு நோக்கங்களுக்காக எத்தனையோ முறை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்? இதே காந்தி தீண்டப்படாதோருக்காக ஏன் ஒரு முறை கூட உண்ணாவிரதம் மேற்கொள்ள வில்லை?

2.         தீண்டப்படாதோருக்கு ஆதரவாக காந்தி ஏன் ஒருமுறை கூட சத்தியாக்கிரகத்தை ஆரம்பிக்க வில்லை.

3.         பொதுக் கிணறுகளையும், ஆலயங்களையும் பயன்படுத்திக் கொள்வதற்கு இந்துக்களுக்கு எதிராக தீண்டப்படாதோர் காந்தியின்  வழியைப் பின்பற்றி 1929 முதல்  சத்தியாக்கிரகம்  செய்து வந்துள்ளனர். அவர்களது சத்தியாக் கிரகத்தை  திரு காந்தி ஏன் எதிர்க்க வேண்டும்?

பல முக்கிய ஆவணங்கள் இந்நூலின் பின்னிணைப்பு களாக இடம் பெற்றுள்ளன? மொத்தத்தில் தீண்டாமை  ஒழிப்பு தொடர்பாக காங்கிரசும் காந்தியும் மேற் கொண்ட அணுகுமுறை குறித்த ஓர் ஆழமான ஆய்வு நூலாக இந்நூல் அமைந்துள்ளது.

காங்கிரசின் எதிர்வினை

1945 இல் அம்பேத்கர் இந்நூலை வெளியிட்ட பின் இதற்கு மறுப்புரை எதையும்  காந்தி எழுதவில்லை. ஆனால் 26.07.1945ல் ராஜாஜிக்கும் 18.10.1945இல் ராஜாஜியின் சீடர் க.சந்தானத்திற்கும் கடிதம் எழுதி அம்பேத்கரின் நூலுக்கு மறுப்புரை எழுதும்படி வேண்டியுள்ளார். இருவரும் இரு சிறுநூல்களை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டனர்.

இந்நூல்களில் அம்பேத்கர் எழுப்பிய பல வினாக் களுக்கு விடையில்லை. மாறாக சில அறிக்கைகளையும் புள்ளிவிவரங்களையும் அடிப்படையாகக் கொண்ட  விளக்கங்களாக மட்டுமே  அமைந்தன. குறிப்பாக இந்து மதத்திற்கும் தீண்டாமைக்கும் இடையிலான நெருக்க மான பிணைப்பு, தீண்டத்தகாதவர்களுக்காக ஒரு முறை கூட காந்தி உண்ணாவிரதம் இருக்காமை, தீண்டத்தகாத மக்கள் மேற்கொண்ட சத்தியாக்கிரகத்தை காந்தி ஆதரிக் காமை,  சாதி குறித்த காந்தியின் கருத்து என அம்பேத்கர்  முன்வைத்த கருத்துக்களுக்குத் தெளிவான பதிலை இரு நூல்களிலும் காணமுடியவில்லை.

இவ்விரு நூல்களும் ஆங்கிலத்தில் வெளியாகி 71 ஆண்டுகள் கழித்து மதுரை காந்திய இலக்கிய சங்கம் இவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து ஒரே நூலாக இன்று வெளியிட்டுள்ளது. பதிப்புரை எழுதியுள்ள

திரு. மா.பா.குருசாமி தம் பதிப்புரையில்,

அண்ணலின் அரிய பணிகளை ஆய்வுரை என்ற பெயரில் புரட்டிப் போட்ட ஒரு நூலுக்கு மதிப்புரையாக இரண்டு அறிஞர் பெருமக்கள் ஆய்வுரை வழங்கினர்.

டாக்டர் அம்பேத்கர் “காங்கிரசும் காந்தியும் தீண்டத்தகாதோருக்குச் செய்ததென்ன?” என்ற ஒரு நூலை ஆங்கிலேய அரசிடம் நற்பெயர் பெறுவதற்காக எழுதி வெளியிட்டார். அதில் நெஞ்சறிந்தே பொய்களையும் புரட்டுகளையும் தொகுத்து வரலாற்றுண்மைகளை மறைத்து அண்ணல் காந்தியடிகளின் நற்பெயரைக் கெடுக்க முயன்றிருந்தார். அந்தக் கட்டியளந்த கருத்துக் களை அறிவார்ந்த முறையில் மறுத்து அண்ணலும் காங்கிரசும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் செய்ததைச் சான்றுகளோடு தொகுத்துத் தருகின்றன இந்த ஆய்வு நூல்கள்.

என்று எழுதியுள்ளார். அம்பேத்கரின் மீது அவர் கொண்ட காழ்ப்புணர்வின் பதிவாக இதைக் கருத இடமுள்ளது.

இன்றைய இந்தியாவின் அரசியல் சூழலில் அம்பேத்கர், பெரியார் சிந்தனாவாதிகளும் இடது சாரிகளும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. இந்நிலையில் காந்தியத்தின் பெயரால் அம்பேத்கரை, சிறுமைப்படுத்தும் இந்நூலை இத்தகைய பதிப்புரையுடன் இன்று வெளியிடுவது யாருக்காக?

Pin It

முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஜனசக்தி பிரசுராலயத்திலிருந்து ‘ஒப்பில்லாத சமுதாயம்’ என்ற சிறுநூல் வெளிவந்தது.  அப்போது இந்த நூலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.  நானும் இதை விற்றிருக்கிறேன்.

இந்திய மக்கள் விருப்பு, வெறுப்பில்லாமல் புரிந்துகொள்ளும் வகையில் சோவியத் யூனியனில் சோஷலிஸ அமைப்பின் சிறப்பு பற்றி எழுதப் பட்டிருந்தது.

கான்டர்பரி பிஷப் (Dean of Canterbury) எழுதிய ‘உலகில் ஆறில் ஒரு பங்கு’ ( One sixth of theworld) என்ற ஆங்கில நூலின் சுருக்கத்தை ஆரவார மில்லாத அழகிய தமிழில் எழுதிய தோழர்

நா. வானமாமலை அவர்கள் அந்நூலுக்குக் கொடுத் திருந்த தலைப்புதான் “ஒப்பில்லாத சமுதாயம்.”

இச்சிறு வெளியீட்டின் மூலமே தோழர் என்.வி. அவர்களை முதன் முதலில் புரிந்து கொண்டேன்.

முதல் சந்திப்பு

1946-ல் நான்குநேரி தாலுகாவில் விவசாயி களிடையே கட்சிப் பணிக்காக முழுநேர ஊழியராக அனுப்பப்பட்டேன்.  அரசியல் ஆர்வத்தில் கல்லூரிப் படிப்பை அரைகுறையாக நிறுத்தி விட்டு, சொந்த ஊரில் அரசியலைத் தொடர்ந்து நடத்த முடியாமல் கட்சித் தலைமைக்கு எழுதினேன்.

திடீரென்று ஒருநாள் தோழர் பாலதண்டா யுதம் அவர்களிடமிருந்து கடிதம் வந்தது.  உடனே நான்குனேரிக்குப் புறப்பட்டு ஆசிரியர் நா. வான மாமலை அவர்களைச் சந்திக்குமாறு எழுதி யிருந்தார்.  வழிச்செலவுக்குரிய பணத்தை தோழர் களிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.

நான்குநேரி போய்ச் சேர்ந்தேன்.  ஆசிரியர் அவர்களைச் சந்தித்தேன்.  வயதுக்கும் திறமைக்கும் மிஞ்சிய அடக்கம்; ஆழ்ந்தடங்கிய அறிவாற்றலின் காரணமாகும் என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

தாலுகாவில் உருவாகியிருக்கும் விவசாயிகள் எழுச்சி பற்றிய சுருக்கத்தை தெளிவாகக் கூறினார்.  எப்பகுதி மக்கள் எத்தகைய நிலப் பிரபுக்களை எதிர்த்து நிற்கிறார்கள்? சமூக, சாதிக் கொடுமை களின் வரலாறு, அரிசன மக்களின் தலைவர்களாகவும், இப்புதிய இயக்கத்தின் வழிகாட்டிகளாகவும் விளங்கும் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் எல்.டி. பால் வாத்தியார், டி.டி.சி. துரை, சண்முக வாத்தியார், பால்ராஜ் மற்றும் செட்டிமேடு ஆசிரியர் வெங்கிட்டு ஆகியோர்களைப் பற்றியும் எடுத்துக் கூறினார்கள்.  ஒவ்வொருவரைப் பற்றியும் என்.வி. அவர்கள் கூறிய மொழிகள் அத்தனையும் அத் தோழர்களைப் புரிந்துகொள்ளவும், பழகவும், அணுகவும் பேருதவியாக இருந்தது.  மடாதிபதிகளின் தாக்குதல்களை எதிர்த்துக் கடுமையாக நடந்த போராட்டத்திலும், மேல் சாதிக் கொடுமைகளை எதிர்த்து அரிசன மக்களைப் பாதுகாக்கவும் பல்வேறு சோதனைகளுக்கிடையே உறுதியாக நிற்பதற்கும் தோழர்களிடையே உணர்வு பூர்வமான உறவுநிலை இருப்பது அவசியமாக இருந்தது.  தோழர் என்.வி. அவர்கள் முதலில் எனக்குக் கொடுத்த அறிமுக அறிவுரை மிகவும் பயன் பட்டது.

விவசாயிகள் இயக்கத்தின் துணைவன்

வாரத்துக்கு ஒரு தடவை நான்குநேரி சென்று தோழர் வானமாமலை அவர்களைச் சந்திப்பேன்.  அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்களைக் கேட்பேன்.  நீண்ட விளக்கவுரை கிடைக்கும்; தெளிவு பெறு வேன்; இதன் மூலம் என்னை அறியாமலே ஒரு தெம்பு ஏற்படும்.

மாதம் இரு துண்டுப் பிரசுரங்களாவது கொண்டு வருவோம்.  ஏன் இந்தப் போராட்டம்? என்பதை விளக்கி துண்டுப் பிரசுரம் போடவேண்டி யிருக்கும்.  நேரடி இயக்கத்தில் ஈடுபட்டிருப்பவர் களுக்கு ஆத்திரம் வருவது இயற்கை.  என்னுடன் பணியாற்றி வந்த தோழர்களும், துண்டுப் பிரசுரம் கடினமான வார்த்தைகளில் இருக்க வேண்டு மென்று நினைப்பார்கள்.  தோழர் வானமாமலை அவர்களிடம் கலந்து துண்டுப் பிரசுரம் எழுதி அச்சுக்குக் கொடுத்துவிடுவேன்.  சிறுசிறு வாக்கியங்களாக இருக்கும்.  பிரச்சினைகளைத் தெளிவாக விளக்கக்கூடியதாக இருக்கும்.  கூடுமான வரை ஆட்களை எதிரிகள் பக்கம் சேர்க்க விடாமல் தடுப்பதே துண்டுப் பிரசுரத்தின் நோக்கமாக அமைந்திருக்கும். அதிலும் குறிப்பாக, பரம் பரையாகப் பல்லாண்டுகளாக பழக்கப்பட்டு வந்த சமூகக் கட்டுகளை அறுத்தெறியும் முயற்சியில் நிதானம் இல்லாமலிருந்தால், நாம் தனிமைப்பட்டு நிற்க வேண்டியிருக்கும்; பழமைக்கு புதுபலம் ஏற்பட்டுவிடும்.  தோழர் என்.வி. அவர்களிடம் இதுபற்றியும் பேசித் தெளிவு பெறுவது வழக்கம்.

1947 மே தினம் நாங்குநேரியில் விவசாயிகள் ஊர்வலம் நடத்தினோம்.  மறைந்த வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி அவர்கள் பேசுவதாக அறிவித்திருந்தோம்.  தோழர் வி.எஸ். காந்தி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.  ஊர் வலத்தில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்டவர்கள்.  ஊர்வலத்தின் முன்பு தோழர்கள் என்.வி.யும் நானும் சென்றோம்.  தெற்கு மாடவீதி கடந்து கோவில் கல்மண்டபத்தில் காலெடுத்து வைத் தோம்.  கோவிலுக்குள் நுழைவதற்கு உத்தேசம் கிடையாது.  இருந்தாலும் ஜீயர் மடத்துக் காவல் காரர்கள் கம்பு ஆயுதங்களுடன் வந்து தடுத்தார்கள்.  “கல்மண்டபத்து வழியாக வடக்குமாட வீதி செல்லு கிறோம்.  இதையும் தடுக்காதீர்கள்.  சாமியார் பேச்சைக் கேட்டு கெட்டுப் போகாதீர்கள்.  சட்டம் புதிசா வந்திருக்கு” என்று தோழர் என்.வி. கண்டிப்பான குரலில் எடுத்துச்சொன்னார்.

“கிராம முன்சீப் தாதர் மகனே இப்படிச் சொன்னா, ஊரு விளங்குமா? எங்க சாதிக்காரனும் ஒருவன் உங்களோடு சேர்ந்திருக்கான்! விளங்க மாட்டாய்” என்று கோபத்தோடு பேசியும் முனகிக் கொண்டும் போனார்கள்.

‘செல்லாக் கோபம் பொறுமைக்கு அழகு.’ அப்போது எங்கள் பக்கம் கூட்டம் அதிகம்.  ஊர்வலத்தின் முடிவில் கூட்டம் நடந்தது.  கூட்டம் முடிந்து எல்லோரும் சென்ற பின்னர் மடத்துச் சாமியாரின் தூண்டுதலில் நூற்றுக்கணக்கான அடியாட்கள் வந்தனர்.  இரவு கூட்டத்தை நடத்த விடாமல் கலகம் செய்து தடுத்துவிட்டார்கள்.

ஆசிரியர் பணி

தோழர் என்.வி. ஜில்லா போர்டு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்தார்.  சுதந்திரமாகச் செயல்படுவதற்கு அரசு நிர்வாகத்துக்குட்பட்ட இடத்தில் வேலை செய்வது தடையாக இருந்தது.

ஜில்லா கல்வி அதிகாரிகளில் பலர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாக இருந்தனர்.  ‘தாய் எட்டடி பாய்ந்தால் குட்டிக்குரங்கு பத்தடி பாயும்’ என்பார்கள்.  பிரிட்டிஷ் ஆட்சியின் அந்திம காலமாக இருந்தாலும், இந்திய அதிகாரிகள் அந்நிய ஆட்சிக்கு அடிமையாக இருந்தார்கள்.  தேசியத் தலைவர்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள்.  தேசியத்தை ஆதரித்துப் பேசும் ஆசிரியர்கள் மீது விசாரணைகள், துவங்குவது வழக்கமாக இருந்தது.  இதெல்லாம் தோழர் என்.வி.க்கு அறவே பிடிக்கவில்லை.

தேசிய உணர்வுக்குத் தடையில்லாமலும், முற்போக்குக் கருத்துக்களைக் கூற வாய்ப்பாகவும் சாத்தான்குளத்தில் துவக்க இருந்த தேசிய உயர் நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பொறுப் பேற்கத் தயாராக இருந்தார்.  ஜில்லா போர்டு ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தார்.  எதிர் பார்த்தபடி, சாத்தான்குளத்தில் உயர்நிலைப் பள்ளி துவங்கப்படவில்லை.  இதன் பின்னரே, பாளையங்கோட்டையில் மாணவர் டியூட்டோரியல் கல்லூரியைத் துவக்கினார்கள்.

தோழர் என்.வி. பாளையங்கோட்டைக்கு வந்தது எல்லோருக்கும் பல வகையில் உதவியாக இருந்தது.  புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருப் போரின் சந்திப்பு இடமாக இருந்தது.  இதற்கேற்ப நெல்லை வட்டாரத்தில் பீடித் தொழிலாளர் போராட்டம், டி.எம்.பி.எஸ். மோட்டார் தொழி லாளர் போராட்டம்,  ரெயில்வே தொழிலாளர் போராட்டம், தச்சநல்லூர் கணபதி மில் தொழி லாளர் போராட்டம் - இவ்வாறு பல போராட்டங்கள் நடந்துவந்த காலம், இப்போராட்டங்களுடனும், சங்கங்களுடனும் தோழர் என்.வி. நேரடித் தொடர்பு கொண்டிருந்தார்.

1948-இல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது.  தோழர் என்.வி.யும் கைது செய்யப் பட்டார். விடுதலையடைந்த பிறகும் கட்சியோடிருந்த இணைப்பை விட்டுவிட வில்லை.

மார்க்சிய அறிவில் தேர்ச்சி பெற்றார்.  மேலும் மேலும் பல்வேறு ஆய்வு நூல்களை எழுதினார்.  இருப்பினும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியோடு இருக்கிற தொடர்பு வலுப்பட்டு வந்திருக்கிறது.

1970-இல் நடைபெற்ற நிலமீட்சிப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டார்.  சிறையில் ஒரு மாதத்துக்கு மேல் இருந்தோம்.  சிறையிலும் மார்க்சிய அறிவைப் புகட்டுவதில் சளைக்கவில்லை.  உற்சாகம் குன்றாமல் உறுதியோடு சிறைவாசத்தைக் கழித்தார்.

திவான் ஜர்மன்தாஸ் என்பவர் மகராஜ் என்ற நூலை எழுதியிருந்தார்.  இந்திய சமஸ்தான மன்னர் களின் வாழ்க்கை நெறிகள், ஆடம்பரம், தேசத் துரோகம் பற்றியெல்லாம் நேரடி அனுபவத்தில் எழுதியிருந்தார்.  இதைச் சுருக்கி தோழர் என்.வி. கட்டுரைகளாக சாந்தியில் வெளியிட்டார்.

1971-இல் நடைபெற்ற தேர்தலில் மன்னர் மான்யம் ஒரு பிரச்சினையாக இருந்தது.  அப் போது இக்கட்டுரைகள் பலனளித்தன.

பேராசிரியர் வானமாமலை அவர்களுடன் நெருங்கிப் பழகுவதில் அலாதியான அனுபவம் கிடைக்கும்.  வாரம் ஒருமுறை பேராசிரியரிடம் உரையாடச் சென்றால் எத்தனையோ நூல்களைப் படிப்பதனால் ஏற்படும் தெளிவும் பலனும் ஏற்படுவதுண்டு.

பேராசிரியர் எழுதிய நாடோடிப் பாடல் தொகுப்புகளும் கதைப் பாடல்களும் தமிழ் நாட்டில் கிராமப்புற மக்களின் பண்பாட்டையும், பழக்கவழக்கங்களையும் போர்க்குணத்தையும் புரிந்துகொள்ள உதவுகின்றன.

சோழ மன்னர்கள் காலத்திய நில உறவு முறை களைப் பற்றி பேராசிரியர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் புதிய வரலாற்றுக் கண்ணோட்டத்தைக் கொடுக்கின்றன.

‘பூம்புகார்’ திரைப்படம் வெளிவந்த நேரத்தில் அப்படத்தின் கதாசிரியர் திரு. கருணாநிதி செய் திருந்த கதை மாற்றத்தையும் கருத்துச் சிதைவையும் சுட்டிக்காட்டி ஒரு சிறுநூலை எழுதினார்.  அது சாதாரண மறுப்பு நூலாக இல்லாமல், ஒரு ஆய்வு நூலாக அமைந்தது.

சோவியத் எதிர்ப்பு 1974-75-வது ஆண்டுகளில் இந்தியாவில் புது உருவம் எடுத்தது.  வளர்முக நாடுகளின் முன்னேற்றத்துக்காக சோவியத் ரஷ்யா செய்துவரும் உதவிகளினால் - இந்தியாவில் நட்புணர்வு வளர்ந்து வந்தது.  இதைத் தடுக்க, முதலாளித்துவ அறிவாளிகளில் வக்கிரபுத்தி படைத்த சிலர் முனைந்தனர்.  ‘துக்ளக்’ பத்திரிக் கையில் ஆசிரியர் சோ எழுதி வந்த “இந்தியாவின் தலைநகர் மாஸ்கோ/டில்லி” என்ற தொடர் கட்டுரை மிகவும் நுணுக்கமானது.  நடுநிலையாக இருக்கும் யாவரையும் சோவியத் உதவி பற்றி சிறிது சந்தேகத்தைக் கிளப்பிவிடும்.  இக்கட்டுரைகளுக்குப் பதில் எழுத வேண்டுவது அவசியமெனப் பலர் பேசிக் கொண்டோம்.  பாளையங்கோட்டையி லிருந்து பேராசிரியர் என்.வி. அவர்களும் தன்னிடம் பயிற்சி பெற்று வந்த மாணவன் மோகனும் சேர்ந்து ‘துக்ளக்’குக்கு ஆணித்தரமான பதில் கொடுக்கும் தொடர் கட்டுரைகளை எழுதினார்கள்.  அவை ஜனசக்தியிலும், சாந்தியிலும் வெளிவந்தன.

தோழர் வானமாமலை-பேராசிரியர் என்.வி. ஆராய்ச்சியாளர் நா. வா. அவர்களைப் பற்றி ஏராளமாக எழுதலாம்.  முற்போக்குக் கருத்துள்ள அரசியல்வாதிகளுக்குச் சிறந்த கருத்துக் கருவூல மாகத் திகழ்கிறார்.  தமிழ் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாகத் துணை நிற்கிறார்.  தனிமனிதனாக இருந்தாலும், தமிழகத்தில் தனிச் சிறப்பு வாய்ந்த முறையில் ‘ஆராய்ச்சி’ இதழை வெளியிட்டு வருகிறார்.  ஆய்வும் அறிவும் தன்னோடு மட்டும் நின்றுவிடாமல், இத்துறையில் ஆர்வமுள்ளவர் களை ஒன்றாக இணைத்துப் பயிற்சி கொடுத்து, ஆய்வுரைகள் எழுதத் தூண்டும் முயற்சியிலும் வெற்றி கண்டு வருகிறார்.

பேராசிரியர் என்.வி. அவர்களின் முயற்சி மேலும் மேலும் வெற்றி பெற உறுதுணையாக நிற்போம்!

- (நா.வா. மணிவிழா மலரிலிருந்து, 1978)

Pin It

இந்திய துணைக் கண்டத்தில் மிகவும் செழிப் பான காவிரி பாயும் பிரதேசமாகிய தஞ்சாவூர் நாட்டை 1676-1855-ஆம் ஆண்டு வரை 12 அரசர்கள் ஆண்டு வந்துள்ளார்கள், இதில் 6 அரசர்கள் கலைகளைப் போற்றி வளர்த்தவர்கள்.  இந்த அறுவரில் மூன்று அரசர்கள் தாங்களே பெரும் அறிஞர்களாகவும் இருந்து கலைகளை வளர்த்த வர்கள்.

மராத்திய மன்னர்கள் - நாயக்கர்களைப் பின் பற்றி சமஸ்கிருதத்திற்கும், தெலுங்கிற்கும் முதலிடம் கொடுத்து, கற்று தேர்ந்து. தமிழைப் புறந்தள்ளியதால். சைவ மதத்தினரைக் காப்பாற்றும் நிலையில் தமிழக திருமடங்கள், குறிப்பாக திருவாடுதுறை ஆதீனம் தமிழை வளர்க்கும் நிலையில் இருந்தது. மாறாக தமிழ் மருத்துவத்தை வளர்ப்பதை எந்த மதமும், திருமடங்களும் கவனம் செலுத்தவில்லை என்றாலும், அதன் வளர்ச்சிக்குத் தடை செய்ய வில்லை.  தஞ்சாவூரைச் சுற்றி மராட்டியர் ஆண்ட காலத்தில் 5783 கிராமங்களில் பரம்பரை மருத்து வர்கள் 1ஙூ ஏக்கர் நிலத்தை இறையிலியாகப் பெற்று மருத்துவம் புரிந்து வந்தனர். இது தவிர மற்ற சித்த மருத்துவர்களும், கிராமங்களில் தம் தொழிலை நடத்தி வந்தனர். ஆனால் இவர்களுக்குப் போட்டியாக ஆயுர்வேத மருத்துவர்களும் அவ்வூரில் மருத்துவம் புரிந்து வந்தனர். இவர்களுக்கு அக்கிராம மக்கள் காய், கனி, பால் மற்றும் தம்மிடமுள்ள மிகையாக விளைந்த விளைப்பொருட்களையும், நன்றிக் கடனாக அளித்து, தங்களை அறுவை சிகிச்சையி லிருந்து காப்பாற்றி கொள்வதாக நம்பினர்.  மருத்து வர்கள் தம்மிடமுள்ள ரகசிய மருத்துவ முறை களைக் கொண்ட சுவடி நூல்களில் உள்ளவற்றை, தங்களை நம்பும் பொருட்டு படித்துக் காண்பித்து, தங்களுக்கான மருத்துவத்திற்கு பணத்தை பெற்றுக் கொண்டனர். கவலை அளிக்கும் எந்த அளவிலும் உள்ள பலதரப்பட்ட நோய்களையும் நாடி பிடித்துப் பார்த்து, நோயை அறிந்து மருந்து வழங்கினர். இவர்களில் சிலர் மிகப் புகழ்பெற்று நாடு முழுவதுமுள்ள செல்வந்தர்களுக்கும் மருத்துவம் அளித்தனர். இக்காலகட்டத்தில் நாட்டு மருத்து வர்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்தியப் படையிலும் பணியமர்த்தப்பட்டனர்.

நோயாளிகளுக்குத் தனியாக மருத்துவமனைகள் அக்காலகட்டத்தில் இல்லாத நேரம். ஆகவே அவர்கள் வீட்டிலேயே மருத்துவம் செய்யப் பெற்றனர். ஒரு விடியலாக மராத்திய மன்னர் சஹாஜி (ளாயாதi -- 1684 - 1712) மருத்துவமனைகளைக் கட்டி, ஹைதராபாத் மற்றும் அரேபியாவிலிருந்து மருத்துவர்களை வரவழைத்தார்.  இந்த மருத்துவ மனைகளில் நோயாளிகள் சோதனை செய்யப் பட்டு, அரசர் செலவில் மருந்தளிக்கப்பட்டது.  இத்துடன் கட்டணமற்ற தங்கும் விடுதிகள் (சத்திரங்கள்) இராமேஸ்வரம் போகும் சாலை யோரங்களில் கட்டப்பட்டு, நடந்து செல்லும் பயணிகளுக்கு நோய் ஏற்பட்டால், அங்குத் தங்கி மருத்துவமும் பெற்றனர். இச்சத்திரங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் சாதாரண நோய்களைத் தீர்க்க வல்லதாக எட்டு மருந்தகங்களுடன் அமைக்கப்பட்டு இருந்தன.  சஹாஜி வெளி ஊரிலிருந்து மருத்துவர் களை அழைத்த செயல் பீஜப்பூர் சுல்தானைப் பார்த்துச் செய்த செயலை ஒத்தது ஆகும்.  மேலும் சஹாஜி மன்னர் மராட்டிய அரசர்களில் இரண்டா மவன் என்பதால் உள்நாட்டின் மருத்துவர்களின் திறமையை அறியாமல் இருந்ததே காரணமாகும்.  இத்துடன் துளாஜாஜிக்கு முன்பிருந்தவர்களும் சித்த மருத்துவர்களின் பெருமையை மன்னர் களிடம் கொண்டிருந்த உறவை அறிந்தவர்களாக இல்லை.  அரண்மனையிலிருந்த மருத்துவம் பற்றிய பதிவு குறிப்புகள் (1773-1776) எரிக்கப்பட்டதினாலும் ஆகும்.  மராட்டிய அரசர்கள் தங்கள் பதிவுகளை மோடி எழுத்தில் சுவடியில் பதிவுசெய்து வைத் தார்கள்.  இதில் 1000 சுவடிக்கட்டுகள் இன்னும் சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ளது.  இதில் பெரும் பகுதி இன்றுவரை மொழிபெயர்த்து வெளியிடப்படாமலே உள்ளது.  இவைகள் வெளியிடப்பட்டால் பல அரிய மராத்தியச் சரித்திரக் குறிப்புகள் கிடைக்கக்கூடும்.

மன்னர் துளாஜாஜி இரண்டு மருத்துவ நூல்கள் சமஸ்கிருதத்தில் எழுதியுள்ளார் என்றாலும், அதில் மருத்துவத்திற்கு ஆற்றிய பணிகளை, சேவையை அறிய முடிவதில்லை.  இவரால் சுவீகாரம் எடுக்கப் பட்ட அரசர் சரபோஜி - ஐஐ, உள்நாட்டு மருத்துவத் திற்கு முதன்மை கொடுத்து, இதற்கான மருத்துவக் குறிப்புகளைச் சேகரித்து பத்திரப்படுத்தினார்.  இம்மருத்துவ முறைகள் செயல்பாட்டில் இருக்க துப்புரவு காரணமாக பல உத்திகள் கையாண்டார்.  (எ.கா.) மக்களின் துப்புரவு மற்றும் உடல்நலத்தைப் பேண, சரபோஜி தஞ்சையிலுள்ள கோட்டைக்குள் இருந்த சேப்பாண நாயக்கன் ஏரி, சிவகங்கை குளம் ஆகியவைகளை ஊரில் உள்ள பல நல்ல தண்ணீர் கிணறுகளுடன் இணைத்து போதுமான தண்ணீரைப் பொது மக்களுக்குக் கிடைக்க வழியமைத்தார்.  இது தவிர தஞ்சையில் 6 மைல்கள் சுற்றளவிலுள்ள பெண்கள் கருவுற்ற 9 மாதத்திலிருந்து குழந்தை பிறந்த பின் மூன்று மாதங்கள் வரை தாய்க்கும், சேய்க்கும் பாலை இலவசமாக அளித்தார். இதை அவர் மகன் சிவாஜியும், தான் இறக்கும் வரை, அதாவது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி தஞ்சையை முழுவதுமாக ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றும் வரை இச்சலுகைகள் வழங்கப்பட்டன.  தஞ்சையில் அன்றைய காலகட்டத்தில் குருகுல முறைப்படி போதிக்கப்பட்ட மருத்துவம், மறை பொருளாக எழுதி வைக்கப்பட்டு, பலநூறு ஆண்டுகள் இச்செயலே நீடித்ததால் பலருக்கு, பல தரப்பட்ட மருத்துவ முறைகளுடன் மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவமும், சிலருக்கு சக்தியற்றதாகவும், மந்திரத்தன்மையுற்றதாகவும், பல மருந்துகளைக் கொண்டு குறுக்கு வழியில் குணப்படுத்தக்கூடிய தாகவும் மருத்துவம் அமைந்தது.  மருத்துவம் பொதுமைப்படுத்தப்படாது மருத்துவப் பள்ளிகள் இன்றி முறைப்படி மருத்துவம் போதிக்காததே இதற்குக் காரணம்.  மேலும் அன்றைய மருத்து வர்கள் தன்னிடம் உள்ள ஓலைச்சுவடிகளை, மருத்துவச் சுவடி நூல்களை வழிவழியாக வழிபட்டு வந்தனர். இந்நூல்கள் மற்றவர்கட்கு கொடுத்து வாங்கல் என்பதும் இல்லாது இருந்தது.  இந்நூல்களில் மருத்துவத்தைக் கண்டறிதல், குணப்பாடு, அதனால் ஏற்படும் முன்னேற்றம் ஆகியவைகள் முறையாக வகைப்படுத்தப்பட்டு எழுதப்படாது இருந்ததும் ஒரு குறையாகவே காணப்பட்டது.  பெரும்பாலான மருத்துவச் சுவடிகளில் நோயின் அறிகுறி, மருத்துவம், குணப்பாடு ஆகியவை அங்கு மிங்குமாக இருந்தது.  ஒருவேளை மருத்துவத்தை அறிந்து எழுதியவருக்குப் பிறகு அதைப் பின் பற்றும் சீடர்கள் தனக்கு ஆர்வம் உள்ளதை அல்லது தனக்கு வேண்டியதை மட்டும் ஓலைச் சுவடியில் படி எடுத்திருக்கலாம்.

மேலும், அக்காலகட்டம் மருத்துவர்களுக்கு எந்தத் தேர்வு எழுதி சான்றிதழ்கள் பெறவோ அல்லது மருத்துவம் புரிய உரிமையோ பெறத் தேவையின்றி இருந்தது.  இதன் காரணமாகப் பல மருத்துவர்கள் மிகக் குறைந்த அளவு மருத்துவ அறிவுடன் இருந்ததால் பண்டைய முடிவுகளைப் பற்றி தனக்குத் தெரிந்த வரை கையாண்டு மருத்துவம் புரிந்தனர்.  இதனால் சித்த மருத்துவத்தில் பல போலி மருத்துவர்கள் உருவாகக் காரணமாகி, யார் உண்மையான மருத்துவர், யார் போலியானவர் என்று பிரித்துப் பார்க்க இயலாது போய்விட்டது.

சித்த மருத்துவர்களுக்குப் போட்டியாக மருத்துவம் புரியும் ஆயுர்வேத மருத்துவர்கள் அரசர்களுக்குப் பெரும்பாலும் மருத்துவர்களாக இருந்துள்ளனர்.  இவர்கள் சிறந்த பண்டிதர் களைக் கொண்டு மருத்துவம் கற்றுக்கொண்டனர்.  இவர்கள் பெரும்பாலும் பிராமணர்களே.  ஆகவே இவர்கள் உயர்ந்த நிலையில் அரசர்களாலும், மற்றவர்களாலும் போற்றப்பட்டிருக்கின்றனர்.  ஆனால் இரண்டு மருத்துவங்களின் கொள்கை மற்றும் மருத்துவம் ஒன்றே என்றாலும், சித்த மருத்துவத்தின் உபயோகம் 10-ஆம் நூற்றாண்டி லிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.  யுனானி மருத்துவம் முகமதிய மன்னர்களால் போற்றப் பட்டு வளர்ந்தாலும், இதில் சிலர் சிறந்து விளங்கினாலும் தஞ்சையில் தமிழ் மருத்துவர் களுக்குப் போட்டியாளர்களாக இருக்கவில்லை.

ஐரோப்பிய மருத்துவர்கள் பெரும்பாலும் இராணுவத்தில் பணியாற்றினாலும், அவர்கள் தொழிற்சாலைகளிலும் மற்றும் நகரங்களிலும் மக்களுக்காகப் பணிபுரிந்தனர்.  இது 1780-க்குப் பிறகு சற்று கூடுதலாக இருந்தது.  ஆகையால் அவர்களுக்கு உள்நாட்டு மருத்துவத்தில் நாட்டம் ஏற்பட்டு, தகுந்த மருத்துவர்களிடம் தமிழ் மருத்துவ செயல்பாடுகளைக் குறித்து அறிந்து கொண்டனர்.  ஆனால் மக்களுடன் மொழி காரணமாக நேரடித் தொடர்பு கொண்டு, மருத்துவ சேவை செய்ய இயலாது தடுமாறினர்.  ஆனால், மன்னர்கள் இம் மருத்துவர்கள் சேவை தேவை இல்லாவிடினும் ஒரு பெருமைக்காக இம்மருத்துவர்களை தங்களுக்குச் சேவை செய்ய பணியில் அமர்த்திக் கொண்டனர்.  இதன்படி மன்னர் சரபோஜி - ஐஐ தங்கள் அரண் மனை ராயல் மருத்துவர்களாக டாக்டர் செல் மற்றும் க்ரியை நியமித்துக் கொண்டார்.  ஆனால் இக்காலக் கட்டத்தில் மருத்துவம் தெரிந்த மிஷனரிகள் இங்குப் பணியாற்றவில்லை.  ஆனாலும் ஐரோப்பிய மருத்துவர்கள் மராத்திய மன்னர்களிடம் சித்த மருத்துவத்திற்கு புத்துயிர்வூட்ட உதவினர்.

மராட்டியர் - மருத்துவம்:

உள்நாட்டு மருத்துவத்தை ஒட்டியே அக்கால கட்டத்தில் ஐரோப்பிய மருத்துவமும் இருந்தது.  அவர்கள் இரத்தம், பித்தம், சளி, எரிப்பாற்றல் ஆகியவைகளே உடல் கேட்டிற்கான காரணம் என்று கூறினர்.  இதற்கு வாந்தி எடுப்பது, இரத்தத்தை வெளியேற்றுவது, அட்டை (டுநநஉh) மருத்துவம், பேதி கொடுப்பது மருத்துவமாகக் கடைப்பிடிக்கப் பட்டது.  இங்குள்ளவைகளைப் போலவே இயற் கையில் கிடைக்கும் மூலிகை, உலோகம் ஆகியவை களே மருந்தாகப் பயன்படுத்தப்பட்டன.  இரும்பு - இரத்த சோகைக்கும், சிங்கோனா மலேரியா விற்குமே அந்நிலையில் மருந்தாக இருந்தது. அறுவை சிகிச்சை கூட கை, கால்களுக்கானதாக இருந்தது.  உடல், உள்உறுப்புகள் கேடு அணுகத் தகாததாகக் கருதப்பட்டது.  அறுவை மருத்துவர்கள் 1745-ஆம் ஆண்டு வரை நாவிதர்களுக்கு இணை யாகவே கருதப்பட்டனர். தொடக்க நிலையைக் கடந்து உடல் கூறு, உடல் இயங்கியல், வேதியல், பௌதீகம் இருப்பினும், அவை மருத்துவம் புரிய துணை செய்யவில்லை.  நோய் அறிதல் என்பது அறிகுறிகளை மட்டும் குறிப்பிடுவதாக இருந்தது.  மருத்துவமும் அனுபவத்தை ஒட்டியே அமைந்தது.

1753-இல் கல்வியைக் குறித்த ஜேம்ஸ் லின்ட் (துயஅநளடiனே) நூலும், எட்வர்ட்ஜென்னரின் (நுனறயசன துநnநேச) அம்மை குத்தல் குறித்த நூல்கள் மட்டுமே மருத்துவம் குறித்த நூல்கள். மற்றைய ஏதும் குறிப்பிடத்தக்கதாக இல்லை என்று கூறலாம்.  அடிசன் (ஹனனளைடிn), பிரைட் (க்ஷசiபாவ) மற்றும் குல் (ழுரடட) போன்றோரின் நூல்கள் பிந்தையதே.  1848 வரை மருந்துபோடும் துளையுடைய ஊசிகள் கூட கண்டுபிடிக்கப்படவில்லை.  ஆனால் ஐரோப்பிய மருத்துவர்கள் தாங்கள் நோயாளிகளிடம் கண்ட அறிகுறி குணப்பாடுகளை பதிவு செய்து ஆராய்ந்தனர்.  அவைகளைச் சான்றுகள் மூலம் மெய்ப்பித்துக் கொண்டார்களேயன்றி நம்பிக்கையினால் அறி வியலை வளர்த்துக் கொள்ளவில்லை.  ஹெக்னி மேன் போன்றோர் அந்நிலையில் பரிசோதனை மூலம் மருந்துகளை ஆராய முற்பட்டு, பல மருந்து களைக் கண்டுபிடித்தனர்.  ஃபிரடரிக் வில்கிம் (குசநனநசiஉம றுiடாநiஅ), சர்டுனர் (ளநசவரநசநேச) (1805) மூலிகையிலிருந்து நோய்களைக் குணமாக்கும் பொருள்களைத் தனித்து, பிரித்து எடுத்து ஆய்ந்து மருந்து தயாரிப்புக்கு வித்திட்டனர்.

சரபோஜியின் சித்த மருத்துவத்திற்கான கொடை:

மேற்கூறப்பட்ட நிலையிலேயே மருத்துவச் சேவை சரபோஜி ராஜ்யத்திலும் ஐரோப்பாவிலும், நடைமுறையில் இருந்தது.  தந்தை இறக்கும் பொழுது சரபோஜி சிறுவனாக இருந்ததால், வளர்க்கும் பொறுப்பை சீர்திருத்த கிருத்தவ மிஷனரியான ஸ்வாட்ஜ் பாதிரியிடம் ஒப்படைத்தார்.  இவர் வழிகாட்டலில் சரபோஜி சென்னையில் ஐரோப்பிய அறிவுஜீவிகளுடன் படித்து, மேலும், மேலும் புதியவைகளை அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டார்.  பிறகு பல இந்திய ஐரோப்பிய மொழிகளைக் கற்றுணர்ந்தார்.  இதன் மூலம் பல மொழி மருத்துவ நூல்களைக் கற்க முனைந்தார்.  இந்நிலையில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி வளம் கொழிக்கும் தஞ்சை ஆட்சி முழுவதும் அரசரிடமிருந்து, தன் வசம் ஆக்கிக் கொண்டது.  இருப்பினும் கம்பெனி அரசருக்குத் தன் அறிவு சார்ந்த வேலைகட்கு, செய்கைகளுக்குத் தேவையான பொருளுதவி அளித்தது.

மூலிகைத் தோட்டம்:

ஐரோப்பிய கல்வி பெற்ற அரசர் சரபோஜி பல நோய்களுக்கான மருத்துவக் குறிப்புகளை அறிந்து சோதனை செய்ய முனைந்தார்.  இதற்காகத் தன்வந்திரி மஹாலின் ஒரு பகுதியில் மருத்துவ சோதனைக்கான மையத்தைத் திறந்து, அதில் 12 இந்திய மருத்துவர்களை நியமித்தார்.  அவர்கள் நோய்களுக்கான தகுந்த சிகிச்சையை அளித்தனர்.  இதனை ஐரோப்பிய மருத்துவர்கள் நோயாளி களின் குறிப்பேட்டில், நோயின் தன்மைகளைக் குறித்து வைத்தனர்.  இதன்படி மன்னர் மருத்துவக் குறிப்பேட்டிலுள்ள மருந்துகளில் சிறந்தவை

களில் 5000 மருத்துவக் குறிப்புகளைச் சேகரித்தார்.  இதைத் தமிழ் மருத்துவர்களும் சரிபார்த்தனர்.  இக்குறிப்புகள் பல வகையாகப் பிரிக்கப்பட்டு 18 நூலாக ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டன.  நோயாளிகளிடம் சரியான மருந்து கொடுத்து சோதனை செய்ய மூலிகைத் தோட்டம் பராமரிக்கப் பட்டு, மருந்தும் தயாரிக்கப்பட்டது.  மூலிகைகள் சுத்தம் செய்யப்பட்டு, அவைகள் தரப்படுத்தப் பட்டு, மிகச் சிறந்த முறையில் அத்துறையில் சிறந்த மருத்துவ வல்லுநர்களின் ஒப்புதலுக்குப்பின் மருந்துகள் தயாரிக்கப்பட்டன. இன்றைக்கு ஈடாக மாத்திரைகளில் அம்மருந்துகளின் பெயரும் தயாரிக்கப்பட்ட தேதியும் குறிப்பிடப்பட்டன.

இவைகளில் சில மருந்துகள் எந்நிலையிலும் கெடாதவாறு தயாரிக்கப்பட்டு, மன்னரின் வாரிசு களால் அம்மருந்துகள் அண்மைக்காலம் வரை கொடுக்கப்பட்டு வந்துள்ளன.  சரபோஜி மருத்துவர் களுக்குச் சரியான மூலிகைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த, சிறந்த ஓவியங்களைக் கொண்டு அரிய மூலிகைகளின் படத்தை அதன் நிறத்தை ஒட்டி வண்ணத்தில் தத்ரூபமாக வரைந்து, அதனடியில் அதன் பயன்களையும், பெயரையும் குறித்து வைத்துள்ளார்.  அப்படங்கள் அடங்கிய புத்தகம் இன்றும் சரஸ்வதி மஹால் நூலகத்தில் புதிய படங்களைப் போல காட்சியளிக்கின்றன.  இதே போல உடற்கூறுகளைக் குறித்த படங்களும் நூல் வடிவத்தில் நிறத்திலும் கருப்பு வெள்ளையு மாகவும், சில வண்ணத்திலும் இருக்கின்றன.  நோயாளிகளைப் பற்றிய குறிப்புகள் படத்துடன் குணப்பாடுகள் எழுதப்பட்டு, அவைகள் பிற்கால சந்ததியினருக்கு ஆய்வுக்கு உதவும் விதமாக உள்ளது.  கண்நோய்களைப் பற்றியது இவை களில் குறிப்பிடத்தக்கது.

சரபோஜி யாத்திரை:

இந்தியாவில் கல்வி கற்பிப்பதில் சிறந்து விளங்கிய காசிக்கு 1820-இல் பரிவாரம், எழுத்தர் மற்றும் அறிஞர்களுடன் யாத்திரை சென்றார்.  அப்படிச் சென்று வருகையில் பழைமை வாய்ந்த அகஸ்தியர், தேரையர், பிரம்மமுனி, மச்சமுனி, தன்வந்திரி, சட்டைமுனி, யூகிமுனி, திருமூல முனி, கெங்கணவர் ஆகியோரின் மருத்துவ சுவடிகள் திரட்டிக் கொண்டுவரப்பட்டன.  சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு மருத்துவம், அறுவை சிகிச்சை, தாவர இயல், உடல்கூறு, மிருக மருத்துவம் ஆகியவைகள் குறித்த நூல்களை வாங்கியதோடு அவைகளை அவரே படித்து முக்கிய மான கருத்துக் களைக் கோடிட்டு வைத்துள்ளார்.  இத்துடன் மன்னர் பழைய ஓலைச்சுவடி நூல்களையும் வாங்கி நூலகத்தின் பயன்பாட்டிற்கு உதவியுள்ளார்.

மருத்துவக் குறிப்பு சரிபார்க்கப்பட்டது:

சுவடிக் குறிப்புகள் மூலம் நோயாளிகளுக்கு ஆய்வு செய்யப்பட்டு சரியான மருந்து தேர்ந் தெடுக்கப்பட்டது.  இம்மருத்துவக் குறிப்புகளைக் கீழ்க்கண்ட அறிஞர்கள் சரிபார்க்க தன்வந்திரி மஹாலில் பணிபுரிந்தனர்.

வேலாயுத வைத்தியர் (1827), திருவேங்கடம் பிள்ளை, கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர், சுப்பராய கவிராயர், தாமோதரம் பிள்ளை, ரெங்கையா நாயக்கர், அய்யாக்கண்ணு பிள்ளை, பஞ்சநாதம் பிள்ளை, வேலாயுத வைத்தியர் (1827) மற்றும் சித்த மருத்துவர்களான அப்பண்ண வைத்தியர், அனுச்சாமி வைத்தியர், முத்துசாமி அய்யர், கஷிதர கோவிந்த ராவ், சுப்பையா வஸ்தாது, வைத்தியர் வாசுதேவபிள்ளை, அபிராம மேஸ்திரி, பரங்கிப் பேட்டை அப்பு வைத்தியர், தௌளதுராவ், வைத்தியர் முத்துசாமி தீட்சிதர் மற்றும் வஸ்தாது ஞானி ஆவர்.

மன்னர் சரபோஜி இவர்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட 5000 மருத்துவக் குறிப்புகளின் குணப் பாட்டை அறிந்து தான் முழுவதும் அதை ஏற்றுக் கொண்டு, அதிலிருந்து 900 குறிப்புகளை தன் இனத்தாருக்குப் பயன்தரும் வகையில் மராத்தி மொழியில் உரைநடையில் மொழிபெயர்த்தார்.  ஆனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது,  பாடலாக சரஸ்வதி மஹால் நூல் நிலையத்தின் வழியாக “சரபேந்திர வைத்திய ரத்னாவளி” என்ற நூலாக  1957-இல் வெளியிடப்பட்டது.  பாடலாக்க உதவியவர்களில் முக்கியமானவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்.

இவ்வளவு மருத்துவம் தொடர்பான தன் வந்திரி மஹால் எங்கிருந்தது என்பதை எஸ்.கணபதி ராவ் மோடி ஆவணங்களை ஆராய்ந்த பிறகு இன்றைய சரஸ்வதி மஹால் உள்ள இடத்திலேயே நடைபெற்று வந்தது என்று கூறுகிறார்.  இதுவே கிராமங்களில் நடைபெற்ற ஆரோக்கிய சாலை களுக்குத் தலைமைப் பீடமாகத் திகழ்ந்தது.  இந்த ஆரோக்கிய சாலையில் மருத்துவர், டிரஸ்சர், மருந்தாளுநர், கணக்கர், உதவி புரிபவர் ஆகியோர் பணிபுரிந்தனர்.

ஊதியம்:

இதில் பணிபுரிந்தவர்களுக்கான ஊதியம் மோடி ஆவணங்களின் மூலம் அறியப்படுகிறது.  மருந்து தயாரிக்கும் பரங்கிப்பேட்டை வைத்தி யருக்கு மாதம் 50 ரூபாய் கொடுக்கப்பட்டது.  மாறாக சாதாரண மருத்துவருக்கு இவரை விட குறைவாகவே ஊதியம் வழங்கப்பட்டது.  ஆனால் ஐரோப்பிய மருத்துவர்களுக்கு மிக அதிகமாக ஊதியம் கொடுக்கப்பட்டது.  இவர்கள் டாக்டர் மெக்பின் மற்றும் டாக்டர் பிரோக்கிலின். இதில் டாக்டர் மெக்பின் ஒரு கண் மருத்துவர்.  இவரைப் போல கண் மருத்துவராக அப்பு சாஸ்திரிகளும் பணிபுரிந்துள்ளார்.

பல்கலைக்கழகம்:

கணபதிராவின் மோடி ஆவண ஆய்வின்படி சித்த மருத்துவ ஆய்வுகளுடன் சரபோஜி மன்னர் நவ வைத்திய கலாநிதிசாலை என்ற சிறு பல்கலைக்ழபகத்தை ஆரம்பித்து மருத்துவக் கல்வியைப் போதித்ததாகக் கூறுகிறார்.

மன்னர் தன்வந்திரி மஹால் குறித்த செயல் பாடுகளை சுவாமி வைத்தியர் ஆலோசனையுடன் நடத்தியுள்ளார்.  மன்னர் இறந்த பிறகும் கூட தன்வந்திரி மஹால் மருத்துவமனை செயல் பாட்டில் இருந்துள்ளது என்பதை உடற்கூறு குறித்த நூல்கள், அறுவை சிகிச்சைக்கான உப கரணங்கள் மற்றும் நூல்கள் வாங்கப்பட்டுள்ளதை மோடி ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது.

மன்னர் ஆய்வுக்குட்பட்ட அன்றைய மருந்துக் குறிப்புகள் 18 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, “சரபேந்திர வைத்திய ரத்னாவளி” எனும் நூலாக தற்பொழுது காணக்கிடைக்கிறது.

Pin It

கல்லூரியில் பட்டப்படிப்புக்காகச் சேர்ந்திருந்த நேரம். ஒரு ஞாயிறு அன்று காலை நேரத்தில் எங்கள் வீட்டருகே இருந்த நூலகத்தில் செய்தித்தாள் படிப் பதற்காகச் சென்றிருந்தேன். ஒரு மணி நேரத்தில் செய்தித்தாட்களையும் புதிய வார இதழ்களையும் படித்துவிட்டு, என்ன செய்வது என்று புரியாமல் அங்கிருந்த மேசைகள் மீது பார்வையைப் படர விட்டேன். அங்கிருந்த நூலகர் எனக்கு மிகவும் பழக்கமானவர். ஒரு பத்து நிமிடம் தனக்கு எதிரில் போடப்பட்டிருந்த நாற்காலியில் வந்து உட்கார்ந் திருக்கும்படி சொல்லிவிட்டு தேநீர் அருந்தச் சென்றார். அந்த நேரத்தில் யாரேனும் வாசகர்கள் வந்துவிட்டால், அவர்களுடைய கேள்விகளுக்குப் பொருத்தமான பதில்களைச் சொல்லி அவர் ஆரும்வரைக்கும் அப்படியே உரையாடலை இழுக்கவேண்டும். அதுதான் என் வேலை.

ஒரு நடுவயதுக்காரர் நெருங்கிவந்து “நூலகர் இல்லையா?” என்று கேட்டார். “இதோ வந்துடுவார். கடைக்கு போயிருக்காரு. உட்காருங்க” என்று அவருக்கு இருக்கையைக் காட்டினேன். அவர் கையில் இரண்டு புத்தகங்கள் இருந்தன. அதைப் பார்த்துவிட்டு நானாகவே “படிச்சிட்டீங்களா சார்? மாத்தணுமா?” என்று பேச்சை வஅளர்ப்பதற்காகக் கேட்டேன். அவர் புன்னகையோடு தலையசைத்தார். அவரிடமிருந்த புத்தகங்களை கைநீட்டி வாங்கி புத்தகத்தின் தலைப்பை மனதுக் குள்ளேயே படித்தேன். Ôவாழ்விலே ஒரு முறை’. இரண்டு மூன்று முறை எனக்குள் அதைச் சொல்லிப் பார்த்தேன். தலைப்புக்குக் கீழே அசோகமித்திரன் என்று இருந்த தையும் வாசித்தேன். உரையாடலைத் தொடரும் வகையில் “நல்லா இருக்குதா சார்?” என்று கேட்டேன். “ரொம்ப நல்லா இருக்குது. தெனமும் நம்ம பார்வையில படக்கூடிய விஷயங்கள்தான். ஆனால் அவர் எழுதி யிருக்கறதப் பார்க்கும்போதுதான் அடடா இப்படி யெல்லாம் நாம கவனிக்கலையேன்னு தோணுது” என்றார். பிறகு அவராகவே Òநீ சின்னப் பையனா இருக்கியே, படிச்சா உனக்கு புரியாதுன்னு நெனைக்கறேன்” என்று சிரித்தார். அந்தக் கடைசி வார்த்தை என்னைச் சீண்டுவதுபோல இருந்தது. “அது எப்படி புரியாம போவும், புரியும் சார்” என்று பதில் சொன்னேன். அதற்குள் நூலகர் வந்துவிட்டார். வந்த வேகத்தில் பேரேட்டைத் திருப்பி புத்தகங்கள் வரவைப் பதிவு செய்துகொண்டு “உள்ள போய் புதுசா எடுத்துக்குங்க சார்” என்றார். பிறகு என் பக்கமாகத் திரும்பி “அவருகிட்ட என்னப்பா பேச்சு? கமிஷனர் ஆபீஸ் சூப்பிரன்டண்ட் அவரு, தெரியுமா?” என்று அடங்கிய குரலில் சொன்னார். போன வேகத்தில் கையில் இரு புத்தகங்களோடு அவர் வெளியே வந்தார். அவற்றைப் பதிவு செய்து கொடுத்ததும் வாங்கிக்கொண்டு போய் விட்டார்.

மேசையின் மீதே வைக்கப்பட்டிருந்த அசோக மித்திரனின் புத்தகத்தை உடனே எடுத்து நான் கையில் வைத்துக்கொண்டேன். பக்கங்களை மெதுவாகப் புரட்டினேன். நிறைய சிறுகதைகள் இருந்தன. புரட்டிய வேகத்தில் ரிக்ஷா என்னும் தலைப்பைப் பார்த்துவிட்டு படிக்கத் தொடங்கினேன். மிகச்சிறிய கதை. ஒரே மூச்சில் படித்துவிட்டேன். என்னால் நம்பவே முடியவில்லை. இப்படிக்கூட கதை எழுத முடியுமா என்று ஆச்சரியமாக இருந்தது. மகிழ்ச்சியாகவும் இருந்தது. எனது முகம் மலர்ந்ததைப் பார்த்துவிட்டு “என்ன, என்ன?” என்று கேட்டார் நூலகர். நான் அவரிடம் அக்கதையைக் காட்டி படிக்கும்படி சொன்னேன். இரண்டு மூன்று நிமிடங்களில் படிக்கக்கூடிய கதைதான். அவரும் படித்து விட்டு புன்னகைத்தார். எனக்கு அந்தப் புத்தகத்தை முழுமையாகப் படிக்கவேண்டும் என்று தோன்றியது. ஞாயிறு அன்று அரைநாள்தான் நூலகம் என்பதால் உணவு இடைவேளை சமயத்தில் அவர் எல்லா வற்றையும் எடுத்துவைத்துவிட்டு புறப்படுவதற்கு முன்னால் “நான் அந்தப் புத்தகத்தை எடுத்துப்போயி படிச்சிட்டு தரட்டுமா?” என்று கேட்டேன். அப்போது நான் உறுப்பினர் இல்லை. ஆனால் எங்கள் நட்பின் அடையாளமாக புத்தகம் எடுக்க அவர் என்னை அனுமதித்து வந்தார். சம்மதத்துக்கு அடையாளமாக அவர் தலையசைத்ததும் அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுவிட்டேன்.

சாப்பாட்டுக்குப் பிறகு மறுபடியும் அந்தக் கதையைப் படித்தேன். படிக்கப்படிக்க அந்தக் கதையின் சம்பவம் என் மனத்துக்குள் ஒரு நாடகக்காட்சி போல விரிவடைந்தது. ஒரு சிறுவன். அவன் அப்பா. அம்மா. மூன்று பேர்தான் கதைப்பாத்திரங்கள். சிறுவன் ரிக்ஷா என்னும் சொல்லை ரிஷ்கா என்று மாற்றி உச்சரிப்பதை தற்செயலாக அவன் அப்பா கண்டுபிடிக்கிறார். திருத்த முயற்சி செய்த பிறகும் அவன் நாக்கில் அந்தப் பிழையான சொல்லே எழுகிறது. அவன் அப்பா மறுபடியும் திருத்துகிறார். ஒவ்வொரு எழுத்தாகச் சொல்லி ஒன்றிணைத்துச் சொல்லவைக்க முயற்சி செய்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது. அத்தருணத்தில் காய்கறி வாங்கச் சென்ற மனைவி வீட்டுக்குத் திரும்பி வருகிறாள். வந்த பிறகுதான் அவளுக்குத் தன் குடையை மறந்து வைத்துவிட்டுத் திரும்பியது தெரியவருகிறது. மறுபடியும் கடைவரைக்கும் நடந்து செல்லவேண்டுமே என்னும் அலுப்பு அவளுக்கு. அருகில் நின்றிருந்த கணவன் “ரிஷ்காவில போய் வந்திடேன்” என்று சொல்கிறான். மனைவி குழப்பத்துடன் ஒருமாதிரி அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு “என்ன சொன்னீர்கள்?” என்று கேட் கிறாள். அக்கணத்தில் அவனையறியாமலேயே

அவன் மனம் அந்தப் பிசகைத் திருத்திக்கொள்கிறது. “ரிக்ஷாவில் போய் வந்திடேன்னு சொன்னேன்” என்கிறான். “என் காதுல என்னமோ ரிஷ்கான்னு சொன்னமாதிரி விழுந்தது” என்றபடி அவள் செல்கிறாள்.

அக்கணத்தில் அந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதை எழுதிய அசோகமித்திரனையும் பிடித்துவிட்டது. அன்று முதல் எனக்குப் பிடித்த எழுத்தாளராக அவரை நினைக்கத் தொடங்கினேன். அப்போது படிமம், உருவகம், உட்பொருள் ஆகிய வற்றைப் பற்றியெல்லாம் பெரிய அளவில் தெளி வெதுவும் இல்லாத கல்லூரி மாணவன் நான். படிக்கச் சுவையாக இருப்பவை அனைத்தையும் தேடித்தேடிப் படிக்கும் பழக்கம் கொண்டவன்.  ரிக்ஷா சிறுகதையை அப்படியே மனத்தில் பதிய வைத்துக்கொண்டேன். இன்றும் என் பிரியத்துக்குரிய சிறுகதை இது. படிமங் களும் உருவகங்களும் கூடுதலான விளக்கங்களோடு கடந்து சென்று தொடும் புள்ளியை, ரிக்ஷா மிக எளிமையாகச் சென்று தொடுவதை இப்போது என்னால் கண்டடைய முடிகிறது. சிறுவனுக்கு மட்டுமா வாய்ப் பிசகு வருகிறது, பெரியவர்களுக்கும் வருகிறது. பிசகு ஒன்றும் பெரிய விஷயமேயில்லை. அதுவும் இயற்கை யானதுதான். வாழ்க்கையில் சொல்லில் மட்டுமா பிசகு நேர்கிறது? பேச்சு, குணம், பணவிவகாரம், நடத்தை என எல்லாக் களங்களிலும் பிசகுகள் கொட்டிக் கிடக்கின்றன. எல்லாப் பிசகுகளையும் உள்ளடக்கியது தானே வாழ்க்கை. இப்படி யோசிக்க யோசிக்க ஒரு புகாருமில்லாத அனுபவமாக வாழ்க்கை அமைந் திருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.

ஒரு கோணத்தில் அசோகமித்திரன் பிற்காலத்தில் எழுதிய இருநூற்றி ஐம்பது சொச்ச கதைகளுக்குமான ஒரு பொது அடித்தளம் அவர் எழுதத் தொடங்கிய ஆரம்பக் கட்டத்திலேயே உருவாகிவிட்டதை

இப்போது உணர முடிகிறது. எவ்விதமான புகாரு மில்லாமலேயே இந்த வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க முடியும் என்பதுதான் அவர் குரல். அதன் பொருள், இந்த வாழ்வு புகார் சொல்ல முடியாத அளவு கண்ணிய மாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கிறது என்பதல்ல. முட்களால் நிறைந்த பாதைதான் அது. ஆனால் ஒரு சாமானிய மனிதனுக்கு நினைப்பதற்கும் ஆற்றுவதற்கும் ஏராளமான பொறுப்புகளும் கடமை களும் எல்லாத் தருணங்களிலும் காத்திருக்கின்றன.  முட்களைப் பற்றி யோசிக்கக்கூட பொழுதில்லாமல் தாவித்தாவி ஓடிக்கொண்டே இருப்பவன். புகார் எனச் சொல்வதற்கு கோடிக்கணக்கான விஷயங்கள் இந்த உலகத்தில் இருந்தாலும் அவனுடைய சொந்த வாழ்க்கை அவற்றைவிட பொருட்படுத்தத்தக்க சுமை களோடு அழுத்திக்கொண்டிருப்பதால் அந்தச் சாமானியன் குரலெழுப்பாமல் தன்னைத் தானே அமைதிப்படுத்தியபடி ஓடிக்கொண்டே இருக்கிறான்.

அந்த வாரம் முழுக்க அசோகமித்திரனுடைய சிறுகதைகளை மீண்டும் மீண்டும் படித்தபடி இருந்தேன். பல சிறுகதைகள் பால்ய காலச் சம்பவங்களின் விவரிப்பைக் கொண்டிருந்ததால், அவற்றுடன் மிக எளிதாக ஒன்றி விட்டேன். அதற்குப் பிறகு அவருடைய படைப்பை எந்தப் பத்திரிகையில் பார்க்க நேர்ந்தாலும், அதைப் படிக்காமல் கடந்துபோனது கிடையாது.

தீபம் இதழில் என்னுடைய முதல் சிறுகதை வெளி வந்தது. அடுத்த சிறுகதை அதே ஆண்டில் கணை யாழியில் வெளிவந்தது. அந்தச் சிறுகதை பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் விவரத்தைத் தாங்கி வந்த அஞ்சலட்டையை அசோகமித்திரன் எழுதியிருந்தார். அன்று முழுக்க அவர் எழுதிய நான்கு வரிகளை பித்துப் பிடித்ததுபோல மீண்டும் மீண்டும் படித்தபடி இருந்தேன். என் இளமையில் நான் விரும்பிப் படித்த எழுத்தாளர் எனக்கு எழுதிய முதல் கடிதம். இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கணையாழியில் நான் எழுதிய ‘முள்’ என்னும் சிறுகதைக்கு இலக்கியச் சிந்தனை விருது கிடைத்தது. அதையட்டி அவர் எனக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்த அஞ்சலட்டையையும் ஒரு பாராட்டுப்பத்திரம் போல வெகுகாலம் பாதுகாப்பாக வைத்திருந்தேன். வீடு மாற்றும் சமயத்தில் ஏராளமான கடிதங்களைக் கொண்ட ஒரு பெரிய கோப்பே காணாமல் போய்விட்டது. Ôவேர்கள் தொலைவில் இருக்கின்றன’ என்னும் தலைப்பில் என்னுடைய முதல் சிறுகதைத்தொகுதி 1987 ஆம் ஆண்டில் வெளிவந்தது. நான் அத்தொகுதியை அசோகமித்திரனுக்கு அனுப்பி வைத்திருந்தேன். அடுத்த மாதத்தில் கணையாழியில் நாலைந்து வரிகள் கொண்ட ஒரு சிறிய குறிப்பை அசோகமித்திரன் எழுதியிருந்தார். அந்தத் தொகுதிக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம் அது.

எப்போதோ ஒருமுறை சென்னைக்குச் சென்றிருந்த சமயத்தில் இலக்கியக்கூட்டமொன்றில் அவரைச் சந்தித்து அறிமுகப்படுத்திக்கொண்டேன். Òரொம்ப சின்ன வயசா இருக்கிறியேப்பா” என்று தோளை அழுத்திக் கொண்டார். மெலிந்து உயர்ந்த அவருடைய உடல்வாகு எங்கள் பெரியப்பாவின் உடல்வாகைப் போல இருந்தது. ஆனால் அதை அவரிடம் சொல்ல வில்லை. அந்த முதல் முறைக்குப் பிறகு ஏராளமான முறைகள் அவரைப் பார்த்ததுண்டு. ஒவ்வொரு முறையும் அந்த முதல் கணத்தில் எங்கள் பெரியப்பாவின் முகம் நினைவில் படர்ந்து கலையும்.

Òஉங்க பேர கேட்கும்போதெல்லாம் முத்து கோர்த்த மாதிரி இருக்கிற உங்க அழகான கையெழுத்துதான் ஞாபகத்துக்கு வருது. கொஞ்சம் கூட வளைவு நெளிவு இல்லாம ஒவ்வொரு வரியும் கோடு போட்ட மாதிரி இருக்கும். படிக்கும்போதே எனக்கு ஆச்சரியமா இருக்கும், இந்தப் பையன் எப்படி இவ்வளவு கச்சிதமா எழுதறான்னு...”

பாராட்டுணர்வோடு அவர் சொன்ன அந்தச் சொற்கள் இன்னும் நினைவில் உள்ளன.  தொடர்ந்து அவர் என்னிடம் “கார்பன் வச்சி எழுதுவிங்களா?” என்று கேட்டார். “ஆமாம் சார்” என்று தலையசைத்தேன். “அப்படித்தான் வச்சிக்கணும். பத்திரிகை ஆபீஸ்லேருந்து திரும்பி வரும்ன்னு எதிர்பார்க்கக்கூடாது. நாள பின்ன தொகுப்பு போடணும்னா ரொம்ப உதவியா இருக்கும்” என்றார். பிறகு அன்றைய பேச்சு எப்படியோ படிக்கத் தக்க எழுத்தாளர்களுடைய பட்டியலின் திசையில் போய்விட்டது. நான் ராதுகா பப்ளிகேஷனும், சாகித்ய அகாதெமியும், நேஷனல் புக் டிரஸ்டும் வெளி யிட்டிருக்கும் புத்தகங்களையும் ஆசிரியர்களையும்

பற்றி சொல்லத் தொடங்கினேன். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட பிறகு அவர் மெதுவான குரலில் “வில்லியம் சரோயன்னு ஒரு எழுத்தாளர். நீங்க அவசியம் படியுங்க. உங்களுக்கு ரொம்ப புடிக்கும்” என்றார். தொடர்ந்து ‘தமிழ்லயே கெடைக்குது. க.நா.சு. மொழிபெயர்த்திருக்காரு. நீங்கதான் தேடிக் கண்டுபிடிக்கணும்” என்றார். அடுத்த ஒரு வருடத்தில் நான் அந்தப் புத்தகத்தைக் கண்டு பிடித்து விட்டேன். பெங்களூர்த் தமிழ்ச்சங்க நூலகத்தில் கிடைத்தது. ஒரு வாரத்தில் அத்தொகுதியின் எல்லாக் கதைகளையும் படித்துவிட்டு அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவர் ஓர் அஞ்சலட்டையில் தன் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தி உற்சாகமூட்டி எழுதி யிருந்தார். அதற்கடுத்த மாதத்திலேயே பெங்களூரில் பிரீமியர் புக் ஸ்டால் என்னும் பெயரில் புத்தகக்கடை நடத்தி வந்த நண்பரிடம் சொல்லி ‘த ஹம்மிங் பேர்ட் தட் லிவ்விட் த்ரூ விண்டர்’ என்னும் தலைப்பில் வந்திருக்கும் சரோயனின் சிறுகதைத் தொகுதியை வாங்கிப் படித்துவிட்டேன். உடனே அவருக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டேன். தன் இளமைக்காலத்தில் அத்தொகுதியை அவர் விரும்பிப் படித்ததாகக் குறிப்பிட்டு பதில் எழுதியிருந்தார்.

1990ஆம் ஆண்டில் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக அவரோடு உரையாடியபடி இருக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. இளம் எழுத்தாளர்களுக்கான ஒரு சிறுகதைப்பட்டறையை சாகித்திய அகாதெமி தில்லியில் ஏற்பாடு செய்திருந்தது. அமெரிக்காவிலிருந்து சில எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள். இந்திய மொழிகளிலிருந்தும் சில முக்கியமான எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள். ஒவ்வொரு மொழி சார்பாகவும் ஐந்து இளம் எழுத்தாளர்கள். அவர்களோடு உரையாடுபவர் களாக ஒரு இந்திய எழுத்தாளர். ஒரு அமெரிக்க எழுத்தாளர். எங்கள் குழுவில் திலீப்குமார், கார்த்திகா ராஜ்குமார், லதா ராமகிருஷ்ணன், காவேரி ஆகியோ ரோடு நானும் இருந்தேன். எங்களுடைய ஒருங்கிணைப் பாளர்கள் அசோகமித்திரன் மற்றும் லெஸ்லி எப்ஸ்டீன். அந்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று. அசோக மித்திரன் பல சிறுகதைகளை முன்வைத்து அதில் பிரிந்து செல்லும் அல்லது ஒன்றிணையும் தளங்களையும் கோடு களையும் தமக்கே உரிய எளிய நகைச்சுவை உணர்வோடு சொல்லிக்கொண்டே இருந்தார். அவரோடு திலீப் குமாரும் இணைந்து பல படைப்புகளை முன்வைத்து உரையாடல் வளர்ந்து செல்ல உதவியாக இருந்தார்.

அசோகமித்திரனுடைய எல்லாப் படைப்பு களையும் நான் அந்த நேரத்தில் படித்து முடித்திருந்தேன். தமிழில் அழகிரிசாமியை அடுத்து நான் விரும்பும் எழுத்தாளராக அவர்  இருந்தார். ஒருமுறை அதை

நான் அவரிடமே தயங்கித்தயங்கி நேரிடையாகச் சொன்னேன். அவர் ஒரு மெலிதான புன்னகையோடு கைவிரல்களை உயர்த்தி மூடிய உதடுகள் மீது ஒருமுறை வைத்து எடுத்துவிட்டு Òஅப்படிலாம் தடால்புடால்னு ஸ்டேட்மெண்டா சொல்லக்கூடாது. தப்பு தப்பு” என்றார். ஒரு கணம் கழித்து “நாளபின்ன யாராச்சும் மடக்கி கேள்வி கேக்கும்போது பதில் சொல்லமுடியாம போயிட்டா சங்கடமா இருக்கும்” என்று சிரித்தார். வாய்விட்டு புன்னகைக்கும்படி இருந்தது அவர் சொன்ன தோரணை.

மழை, அம்மாவுக்காக ஒரு நாள், ஐந்நூறு கோப்பைத் தட்டுகள், விமோசனம், பார்வை, பிரயாணம், எலி, புலிக்கலைஞன், நானும் ஜே.ராமகிருஷ்ணராஜுவும் சேர்ந்து எடுத்த படம், பூனை, தந்தைக்காக, விடிவதற்குள், உண்மை வேட்கை, முறைப்பெண், அப்பாவின் சிநேகிதர், குகை ஓவியங்கள் என எப்போதும் அவர் கதைகளைக்கொண்ட ஒரு பட்டியல் நினைவிலேயே இருக்கும். நண்பர்களிடையே உரையாடும்போது அவருடைய படைப்புகளைப்பற்றி பேசவேண்டிய வாய்ப்பு அமையும்போது, ஏதேனும் ஒரு கதையிலிருந்து என்னால் எளிதில் தொடங்கிவிட முடியும். அந்த அளவுக்கு அவருடைய  படைப்புகள் எனக்குள் கரைந்துபோயிருந்தன.

எண்பதுகளில் கலை இலக்கியம் என்னும் தலைப்பை முன்வைத்து மூன்று நாள் கருத்தரங்கம் ஒன்றை கோ.ராஜாராம், தமிழவன், ஜி.கே.ராமசாமி. ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன் போன்ற நண்பர்களைக் கொண்ட பெங்களூர் வாசகர் வட்டமும், மதுரை தமிழ்ப்பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தியது. அதில் ஒரு அமர்வில் தொடக்க உரை நிகழ்த்துவதற்காக அசோகமித்திரன் அழைக்கப்பட்டிருந்தார். அவருக்கு அடுத்த அறையில் நான் தங்கியிருந்தேன். அந்தக் கருத் தரங்கத்துக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னால்தான் அவர் குங்குமம் இதழில் Ôவிடுவிப்புÕ என்னும் சிறு கதையை எழுதியிருந்தார். மனநிலைகளில் உருவாகும் மாற்றங்களை மிகவும் துல்லியமாகப் பதிவு செய்திருக்கும் படைப்பு அது. எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. அன்று இரவு வெகுநேரம் அந்தக் கதையைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தேன். அந்தச் சிறை அனுபவத்தி லிருந்து அவருடைய உரையாடல் எப்படியோ சிறையி லிருந்து தப்பிப்பவர்களின் கதைகளை நோக்கி நகர்ந்து விட்டது. முதலில் அவர் ஹென்றி ஷாரியரின் பாபி லோன் (ரா.கி.ரங்கராஜன் மொழிபெயர்ப்பில் தொடராக வந்த Ôபட்டாம்பூச்சி’ நாவல்) கதையைப் பற்றிச் சொன்னார். பிறகு அலெக்ஸாண்டர் டூமாஸின் பிரபலமான கதையன்றைப் பற்றி விவரித்தார்.

வேறொரு தருணத்தில் திருச்சூரில் நடைபெற்ற கலைவிழாவில் அவரும் நானும் அடுத்தடுத்த அறை களில் தங்கியிருந்தோம். கூட்டுக்குடும்பங்களின் சிதைவையும் தனிக்குடும்பங்களின் தோற்றத்தையும் இந்திய நாவல்கள் வழியாகக் கிடைக்கும் சித்திரங்களை முன்வைத்து ஆய்வு செய்யும் நோக்கில் ஒரு பெரிய கருத்தரங்கம் ஏற்பாடாகியிருந்தது. தகழி, மகாஸ்வேதா தேவி, அசோகமித்திரன், எம்.டி.வாசு தேவன் நாயர் போன்ற ஆளுமைகள் அமர்ந்திருந்த வரிசையில் நானும் அமர்ந்திருந்த அக்கணங்களை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. அசோக மித்திரன் அன்று பிரேம்சந்த், சரத்சந்திரர் ஆகியோரின் படைப்புகளில் தொடங்கி ஆர்.ஷண்முகசுந்தரத்தின் Ôநாகம்மாள்Õ வரைக்கும் தொட்டு அழகாக புள்ளி வைத்து ஒரு கோடு இழுத்ததுபோல குடும்ப அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றி இருபது நிமிட நேரம் உரை நிகழ்த்தினார். கிட்டத்தட்ட அதே சாயலில்தான் நானும் என் உரையைத் தயார் செய்திருந் தேன். மண்பொம்மை என்னும் பெயரில் வந்திருந்த ஒரு ஒரிய நாவலில் தொடங்கி, சிவராம காரந்தின் நாவல்கள், எம்.டி.வாசுதேவன் நாயரின் அசுரவித்து  வழியாக நிலைகுலைந்து விலகும் குடும்பங்களின் சித்திரங்களைத் தொகுத்து அன்று நான் உரையாடினேன். அந்த ஆங்கில உரையை அவர் மிகவும் விரும்பிக் கேட்டார். அன்று இரவும் நாங்கள் வெகுநேரம் உரை யாடினோம். தனக்குத் தெரிந்து சிதறிப் போன பல கூட்டுக் குடும்பங்களின் கதைகளை அவர் தன் நினைவி லிருந்து சொல்லிக்கொண்டே இருந்தார். பெரிய கதைச்சுரங்கம் அவர் என்பது அக்கணத்தில் எனக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது. “ஞாபகம் இருக்கும்போதே இதயெல்லாம் எழுதி வைக்கணும். எப்போ எழுதப் போறேன்னுதான் தெரியலை” என்றார்.

அடுத்தடுத்து அவர் நாவல்கள் வரும் போதெல்லாம் நான் ஆவலோடு அவற்றை வாங்கிப் படிப்பேன். அவர் ஒருமுறை கூட அந்தக் கருவை மையமாக்கி எழுதவே இல்லை. மறந்திருக்கக்கூடும் என்று நானும் நினைத்துக் கொண்டேன். ஆனால் இருபதாண்டுகளுக்குப் பிறகு அவருடைய ‘யுத்தங்களுக்கிடையில்’ நாவலைப் படித்தபிறகு என்  எண்ணம் பொய்த்துவிட்டது. முதல் உலகப்போர் நடைபெற்ற காலத்துக்கும் இரண்டாவது உலகப்போர் நடைபெற்ற காலத்துக்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் ஒரு பெரிய குடும்பம் அல்லது சில குடும்பங்களின் தொகுதிகளிடையே நிகழ்ந்த உறவு மோதல்கள்தான் நாவலின் களம். முப்பதுகள் மற்றும் நாற்பதுகளின் வாழ்க்கை சிறிதுகூட மிகையில்லாமல் எழுத்தில் கட்டியெழுப்பியிருந்தார்.

அதற்கு அடுத்த ஆண்டில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக அவர் பெங்களூருக்கு வந்திருந்தார். சுசித்ரா ஃபிலிம் சொசைட்டி கருத்தரங்க வளாகத்தில் அந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது. தொடக்கக் காலத்தில் அவர் ஆங்கிலத்தில் சிறுகதை எழுத முயற்சி செய்ததையும், அச்சிறுகதை பெங்களூரி லிருந்து வந்த டெக்கன் ஹெரால்ட் ஆங்கில இதழில் பிரசுரமானதையும் நினைவுக்குக் கொண்டு வந்து பார்வையாளர்களிடம் அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். திடீரென நிகழ்ந்த ஒரு மனமாற்றத்தின் காரணமாக ஆங்கிலத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டு முழுக்க முழுக்க தமிழில் எழுதும் எழுத்தாளராகவே வாழ்ந்துவிட்டதாக சொன்னார். தன் இளமையில் அவர் படித்த புத்தகங்கள், அவருடைய அப்பாவுக்கும் அவருக்கும் இடையிலிருந்த நெருக்கமான உறவு, குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் தமிழ் வாசிப்பில் பழக்குவதற்காக அவர் எடுத்த முயற்சிகள், அவர் பார்த்த திரைப்படங்கள் என ஒரு அரைமணி நேரம் நன்றாக உரையாடினார். கையோடு எடுத்துச் சென்றிருந்த Ôயுத்தங்களுக்கிடையில்’ நாவலில் அவரிடம் கை யெழுத்தை வாங்கி வைத்துக்கொண்டேன். அந்தப் புத்தகத்தை அவர் ஏதோ புதியதொரு புத்தகத்தைப் புரட்டுவது போல ஒருகணம் கையிலேயே வைத்துக் கொண்டு திருப்பித்திருப்பிப் பார்த்தார். பிறகு மெதுவாக, “இத எழுதனது ரொம்ப நல்லதா போச்சி. இத எழுதி முடிச்சதுக்கப்புறம்தான் ஞாபக சக்தியில ஏதோ கோளாறு. எல்லாமே மறந்தமாதிரி போயிட்டது. அன்னைக்கு இத நான் எழுதலைன்னா, எழுத முடியாமயே போயிருக்கும். இப்ப இந்த நாவல்ல இருக்கிற சம்பவங்கள் எதுவுமே எனக்கு ஞாபகத்துல இல்லை” என்றார். சில கணங்களுக்குப் பிறகு, “வயசாயிட்டுதில்லையா? இது எல்லாமே சகஜம்தான்” என்று சிரித்தபடியே புத்தகத்தை என்னிடம் திருப்பித் தந்தார். என்னோடு வந்திருந்த நண்பர்கள் சம்பந்தம், விஜயன் ஆகியோருக்கும் அவர்களுடைய புத்தகங்களில் அசோகமித்திரனிடம் கையெழுத்து வாங்கி அளித்தேன்.

1956 ஆம் ஆண்டில் அசோகமித்திரனுடைய முதல் சிறுகதை வெளிவந்தது. 2017 இல் போன மாதம் கூட அவருடைய சிறுகதை வெளிவந்தது. ஏறத்தாழ அறுபது ஆண்டு காலம் அவருடைய தொடர் இயக்கம் மிக முக்கியமானது. வற்றாத ஊக்கத்தோடு செயல்படும் வகையில் அவர் மனம் கலைநுட்பங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தது. அவருடைய சிறுகதைகளில் வெளிப்படும் மனிதர்கள் மிகமிக எளியவர்கள். பெரும்பாலும் நடுத்தட்டு மனிதர்கள். சின்னச்சின்ன வேலைகளைச் செய்து வாழ்க்கையை ஓட்டுகிறவர்கள். அவர்கள் தம் தினசரி வாழ்க்கையில் சந்திக்க நேரும் கூர்மையான சம்பவங்களையே அவர்தம் படைப்பு களுக்கான மையங்களாக அமைத்துக்கொள்கிறார். ஆயிரம் பிரச்சினைகளுக்கு நடுவில் அந்த மனிதர்கள் வாழ்கிறார்கள். ஆனால் எந்த இடத்திலும் அவர்கள் ஒடுங்கி நின்றுவிடுவதில்லை. வலிகளையும் வேதனை களையும் புறந்தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக் கிறார்கள். தன்னிரக்கத்துக்கு இரையாகாத அந்த மனிதர்கள் வாழ்க்கையை அசோகமித்திரனின் சிறுகதைகள் ஒரு வரலாற்று ஆல்பம் போலத் தொகுத்து வைத்திருக்கின்றன. அவருடைய சிறுகதைகளில் வெளிப் படும் எளிமை ஒரு சாதாரண பத்திரிகை எழுத்தின் எளிமை அல்ல, ஆழ்ந்த நுட்பத்தின் துணையோடு வெளிப்படும் எளிமை. உத்தி சார்ந்த எந்த நாட்டமும் அவரிடம் தென்பட்டதில்லை. ஆனால் உத்திகள் வழியாகச் சென்றடையத்தக்க தொலைவைவிட அதிக தொலைவை அவருடைய கதைகள் எட்டித் தொடும் ஆற்றல் கொண்டவை. அவருடைய அனைத்துக் கதை களுமே இரண்டாவது வாசிப்பையும் மூன்றாவது வாசிப்பையும் கோருபவை. அசோகமித்திரனுடைய கதையின் இறுதி வாக்கியத்தைப் படிக்கும் வாசகர்கள் மிக இயல்பாகவே கதையின் முதல் பத்தியைத் திருப்பி மீண்டும் படிக்கத் தொடங்குவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.

உலக இலக்கிய அடையாளத்தை நவீன தமிழ் இலக்கியம் பெறும் வகையில் ஆழமும் நுட்பமும் பொருந்திய படைப்புகளை தொடர்ச்சியாக எழுதி வழங்கியவர் அசோகமித்திரன். அந்த அனைத்துப் பெருமைகளையும் ஒருபோதும் சுமக்காமல் ஒதுக்கி வைத்துவிட்டு மிக எளிமையாக அனைவரோடும் பழகியவர். அவருடைய எளிமையைப்பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் புதுவையில் வசிக்கும் என்னுடைய நெருங்கிய நண்பர் சிவக்குமார் தன்னுடைய அனுபவத்தை மீண்டும் மீண்டும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். தொண்ணூறுகளின் தொடக்க ஆண்டில் அவர் ஒரு கருத்தரங்கை புதுச்சேரியில் ஏற்பாடு செய்திருந்தார். கருத்தரங்கம் எளியதொரு சத்திரத்தின் கூடத்தில் நடைபெற்றது. அசோகமித்திரன் மீது அவருக்கு மிகுந்த மதிப்பு உண்டு. ஓர் ஆர்வத்தில் அவருக்குக் கடிதம் எழுதினார். அவரும் ஒப்புதல் கொடுத்துவிட்டார். கருத்தரங்கம் நிகழவிருந்த அன்று காலையில் அவர் அந்தச் சத்திரத்தைத் தேடிக்கொண்டு வந்துவிட்டார். நண்பருக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. எப்படி எங்கே தங்கவைப்பது என்று தடுமாறிவிட்டார். அசோகமித்திரன் அவரை அமைதிப்படுத்தி அந்தக் கூடத்திலேயே அமர்ந்துகொண்டார். மாலையில் தன் உரையை முடித்துக்கொண்டதும் அவரை அழைத்துச் சென்ற சிவக்குமார் உணவு விடுதியன்றில் சிற்றுண்டி அருந்தச் செய்த பிறகு பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். மிகுந்த தயக்கத்தோடு ஓர் உறையில் இருநூறு ரூபாயை வைத்து அசோக மித்திரனிடம் கொடுத்திருக்கிறார். அவரோ புன்னகை மாறாத முகத்துடன் அதை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார். “எனக்கும் உங்க கூட்டத்துல பேசணும்ன்னு ஆசையா இருந்தது. அதான் வந்தேன். பணம்லாம் தேவையில்லை. வேற யாருக்காவது கொடுக்க தேவைப்படலாம். வச்சிக்குங்க” என்று சொல்லிவிட்டு வண்டியேறிப் போய்விட்டார். கருத்தரங்கத்துக்கு வந்திருந்த அனைவரும் பணத்தைப் பெற்றுக்கொள்ள, அதை மறுத்துச் சென்ற ஒரே எழுத்தாளர் அசோக மித்திரன் மட்டுமே. சிவக்குமார் அந்தச் சம்பவத்தை நேற்று நடைபெற்றதுபோல ஒவ்வொரு முறையும் சொல்லும்போது உணர்ச்சிவசப்படுவதைப் பார்த்திருக் கிறேன்.

அசோகமித்திரன் எளிய உள்ளம் கொண்டவர். பழகுவதற்கு இனியவர். அவர் நம்மைவிட்டு மறைந்தார் என்பதை மனம் நம்ப மறுத்தபடியே இருக்கிறது. 24.03.2017 அன்று நிகழ்ந்த மரணம் அவருடைய பௌதிக இருப்பை மட்டுமே இல்லாமலாக்கிவிட்டது. நம் மொழியிலும் நம் மனத்திலும் உறையும் அவருடைய இருப்புக்கு ஒருபோதும் அழிவே இல்லை. அவருடைய ஒரு சிறுகதையின் தலைப்பைப்போலவே அது அழிவற்றது. என்றென்றும் நம்மிடையே வாழ்ந்தபடி இருக்கும். அசோகமித்திரனுக்கு நம் அஞ்சலிகள்.

Pin It

சங்க இலக்கியப் பிரதிகளை நுட்பமாக வாசிக்கும் போது பண்டைத் தமிழர், இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்ததை அவதானிக்க இயலும். கடவுளையும் இயற்கையாகக் கருதிய தமிழர், இயற்கையைச் சூழல் என அறிந்திருந்தனர். இயற்கையில் இருந்து பிரித்து அறிந்திட இயலாதவாறு, சங்கப் பாடல்கள், இயற்கைப் பின்புலத்தில் தோய்ந்து எழுதப் பட்டுள்ளன. சூழலைப் போற்றுவதன்மூலம் தங்களுடைய இருப்பினை அறிந்திட முயன்றது, சங்ககாலத் தமிழரின் தனித்துவம். சுற்றுச்சூழல் பற்றிய பல்வேறு விழுமியங்கள் இயற்கையை முன்வைத்துச் சங்கப் பாடல்களில் வெளிப்பட்டுள்ளன. அவை பண்டைத் தமிழர் வாழ்க்கை பற்றிய பல்வேறு போக்குகளைப் பதிவாக்கியுள்ளன. இன்று தமிழகத்து நிலவெளியானது, கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்களமாகியுள்ள சூழலில், நுகர்பொருள் பண்பாட்டில் எல்லாம் சந்தைக்கானதாக மாறியுள்ளது.

வளமான குறிஞ்சி நிலம் அழிக்கப்பட்டு, வணிகப் பயிர்கள் விளைகிற எஸ்டேட்களாகி விட்டன. முல்லைக் காடுகள் என எதுவும் இல்லை. வண்டல் படிந்த மருத நிலமானது, வீட்டடி மனைகளாக உருமாறிக் கொண்டிருக்கிறது. நெய்தல் நிலமானது பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தில் சிக்கியுள்ளது. இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில், சங்ககாலச் சூழலியல் சார்ந்த விழுமியங்கள் பற்றியும், அவற்றின் எச்சங்கள் நவீன வாழ்வியலில் தொடர்வது பற்றியும் ஆராய்ந்திட வேண்டியுள்ளது.

சமூகமாகக் கூடி வாழ்கின்ற நிலையில், பன்னெடுங்காலமாக மக்கள்  தங்களுடைய வாழ்க்கையில் தொடர்ந்து பின்பற்றிய ஒழுங்குகள் அல்லது நெறிகளை விழுமியம் என வரையறுக்கலாம். தனிமனித உறவு, குடும்பம், சமூகம், சூழல் எனப் பல்வேறு நிலைகளில் காலந்தோறும் தொடர்ந்து உருவாக்கப்படும் விழுமியங்கள், பூமியில் மனிதர்கள் இயங்கிட வேண்டிய நெறிமுறைகளை வலியுறுத்துகின்றன. குறிப்பாகச் சூழல் குறித்த விழுமியங்கள், அடிப்படையில் மனிதர்கள் இயற் கையின் அங்கம் என்ற கருத்தியலை முன்வைக்கின்றன.

பண்டைத் தமிழரின் சூழல் பற்றிய விழுமியத்தை அறிந்திடச் சங்க இலக்கியப் படைப்புகளும், தொல் காப்பியமும் அடிப்படையானவை. சூழலின் பருப் பொருட்கள் அனைத்தும் ஐம்பெரும் பூதங்களால் உருவானவை என்ற கருத்தியல், சங்கத் தமிழரிடம் ஆழமாக ஊடுருவியிருந்தது. பூதவியல் என்ற சொல் உலகினை ஆராய்வதாகத் தமிழர் மரபில் இடம் பெற்றுள்ளது. சங்க இலக்கியத்திலும், தொல்காப்பி யத்திலும் உலகம் எவற்றால் உருவானது என்ற பதிவுகள் இடம் பெற்றுள்ளன.

நீரு நிலனுந்தீயும் வளியு

மாக விசும்போடு ஐந்தும் உடனியற்ற

(மதுரைக்காஞ்சி:453-454)

மண்டிணிந்த நிலனும்

நிலனேந்திய விசும்பும்

விசும்புவதைவரு வளியும்

தீமுரணிய நீருமென்றாங்கு

ஐம்பெரும் பூதத்தியற்கை  (புறநானூறு:12)

நிலம் தீ நீர்வளி விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம்

(தொல்.பொருள். மரபியல்:644)

உலகமானது நிலம், தீ, நீர்,  வளி, விசும்பு என்னும் ஐந்து  பூதங்களும் கலந்தது என்பது என்ற பார்வையின் மூலம், பண்டைத்தமிழரின் இயற்கை பற்றிய புரிதல் தொடங்கியுள்ளது. விசும்பு என்பது வெற்றிடம் என்று கருதப்பட்டது. மலையில் பொழிந்த மழைநீர், காட்டில் அருவியாகிச் சமவெளியில் ஆறாகப் பரந்து பாய்ந்து, கடலில் கலக்கிற இயற்கைச் செயல்பாடுதான், நிலப் பாகுபாட்டிற்கான ஆதாரம். மலை, காடு, வயல், கடலோரம் என்ற நான்கு வகையான நிலங்களே உலகம் எனக் கண்டறிந்த சங்கத் தமிழர் நானிலம் என வகைப் படுத்தினர். திணைக் கோட்பாடு உருவாவதற்கு நானிலம் தான் அடிப்படை. நான்கு நிலங்களுடன் தொடர் புடைய தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆகிய வற்றுடன் இயைந்த சூழல் தொகுப்புகள்

(Eco system) இன்றளவும் முக்கியமானவை. காடுறை உலகம், மைவரை உலகம், தீம்புனல் உலகம், பெருமணல் உலகம் எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது நிலங்களை உள்ளடக்கிய சூழல் தொகுப்புகள்தான். நான்கு திணை நிலங்களும், அந்நிலத்தில் சிறந்து விளங்கிய பூக்களின் பெயர்களால் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என அழைக்கப்பட்டன. சூழல் சிதை வடையும்போது உருவான நிலம் பாலை என்று குறிப்பிடப்பட்டது. நிலத்தின் அடிப்படையில் ஐந்து வகையான சூழல் தொகுதிகளை உருவாக்கியதுடன், குறிப்பிட்ட நிலத்திற்கென முதல் பொருள், கருப் பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை வரையறை செய்தது பண்பாட்டுச் சூழலியல் (Cultural Ecology) சார்ந்தது. உயிரின வளத்தின் (Biodiversity) சிறப்புகளாக அறிவியலாளர் குறிப்பிடுகிற அம்சங்கள், சங்ககாலத் தமிழகத்தில் நிலவியுள்ளதைத் தொல்காப்பியம் மூலம் அறிய முடிகிறது.

மலையும் மலை சார்ந்த நிலமானது குறிஞ்சிச் சூழல் தொகுப்பு எனவும், காடும் காடு சார்ந்த நிலப்பரப்பானது முல்லை சூழல் தொகுப்பு எனவும், வயலும் வயல் சார்ந்த நிலவெளியானது மருதம் சூழல் தொகுப்பு எனவும், கடலோரம் சார்ந்த பெருமணல் நிலப் பரப்பானது நெய்தல் சூழல் தொகுப்பு எனவும், முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து உருவான வன்மையான நிலப்பரப்பு பாலைச் சூழல் தொகுப்பு எனவும் குறிக்கப்பட்டது, பண்டைத்தமிழரின் சூழல் பற்றிய புரிதலின் வெளிப்பாடாகும். அன்றைய கால கட்டத்தில் தமிழக நிலப்பரப்பில் நான்கில் மூன்று பங்களவில் தாவரங்களும், விலங்குகளும் நிறைந் திருந்தன. குறிப்பாக இயற்கையான தாவரங்களின் வளரிடங்கள் வளமுடன் செழித்திருந்தன. சங்கத் தமிழர் அன்றாட வாழ்வியலில் பயன்பாட்டு நிலையிலும் குறியீட்டு நிலையிலும் தாவரங்கள் பற்றி நன்கு அறிந்திருந்தனர். தாவரங்கள் பற்றிய பல்வேறு தகவல்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் அடையாகவும் உவமையாகவும் சங்கப் புலவர்கள், பாடல்களில் பதிவாக்கியுள்ளனர். சங்கப் பாடல்களில் இடம் பெறுள்ள தாவரங்களின் வருணனைகள், இன்றைய பயிர்நூல் வல்லுநர்களின் கருத்துகளுடன் ஒத்துப் போகின்றன. தமிழர்கள் தாவரங்களையும், அவற்றின் பூக்களையும் இன்றளவும் பயன்படுத்துகிற முறையானது, பெரிதும் உணர்ச்சிப்பெருக்கானது. தாவரங்களுடன் இயைந்த வாழ்க்கை வாழ்ந்த காரணத்தினால்தான்,  சங்கத் தமிழர்கள், தங்களுடைய வாழ்வியலில் ஒவ்வொரு நிலையிலும் தாவரத்துடன் தங்களை இணைத்து நினைத்தனர்.

விதை - நல்ல பண்பு, முளை - தொடக்கம், தளிர் - மழலை, மலர் - பெண் குழந்தை, பிஞ்சு - குழந்தை, பூத்தல் - பெண் வயதுக்கு வருதல், கொடி - இளம் பெண், முள் - வேண்டாதது, கனி - பலன், அரும்புதல் - மனதில் உணர்வு தோன்றுதல், கிளை - சுற்றம், சினை - கருவுறுதல், பட்டுப்போதல் - அழிவு போன்ற சொற்கள் தமிழரின் வாழ்க்கையில் தாவரங்கள் பெற்றுள்ள முதன்மையிடத்திற்குச் சான்றுகள். குழந்தைப் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் தமிழர்களின் வாழ்க் கையில் ஒவ்வொரு நிலைகளிலும் பூக்கள் பெற்றுள்ள இடம் வலுவானது. சோலை எனப்படும் காடு வழிபாடு, மர வழிபாடு, குன்று வழிபாடு, நீர்நிலை வழிபாடு, மழை வழிபாடு, பாம்பு வழிபாடு என இயற்கையை வழிபட்ட சங்கத் தமிழரின் பாரம்பரியம் இன்றளவும் தொடர்கிறது.

திணை மரபு அறிந்த சங்கப் புலவர்களின் இயற்கை பற்றிய சித்தரிப்புகள் உருவகம், உவமை, இறைச்சி எனக் கவித்துவச் செழுமையுடன் பாடல்களில் வெளிப்பட்டு உள்ளன. இளம் பெண்ணின் மனதில் அரும்பியுள்ள காதலின் ஆழத்தைக் குறிப்பிடச் ‘சிறுகோட்டுப் பெரும் பழம்” என்ற உவமை பயன்பட்டுள்ளது. சின்னப் பெண்ணின் காதல் உணர்வு, மரத்தின் சிறிய கிளையில் தொங்குகிற பெரிய பழம் போன்றது என்ற உவமையில் புலவரின் இயற்கை சார்ந்த மனம் தோய்ந்துள்ளது. சங்கத் திணைச் சூழல் சார்ந்த வாழ்க்கையுடன், தமிழர்கள் தங்களைப் பொருத்திக் காண்பது இயல்பாக நடந்தேறி யுள்ளது. தான் சிறுமியாக இருந்தபோது செடியாக இருந்து, இன்று பெரிய மரமாக வளர்ந்துவிட்ட புன்னை மரத்தைத் தனது உடன்பிறந்தவளாகக் கருதி, அம் மரத்தின் அருகில் தனது காதலனைச் சந்திக்க மறுக்கிறாள் இளம்பெண் (நற்றிணை:172). தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற காதலனை நினைந்து வருந்துகிற இளம்பெண், Ôஇரவு நேரத்தில், தோட்டத்தில் இனிய துணையாக விளங்கிய வேங்கை மரத்திடம்கூடவா தூது சொல்லக் காதலன் மறந்துவிட்டான்’ என ஆதங்கப்படுகிறாள் (குறுந்தொகை:266). இயற்கையுடன் தன்னை அடையாளப்படுத்துவதன் மூலம் பிரிவினால் வாடுகிற மனதைத் தேற்றுவது இவ்விரு பாடல்களிலும் பதிவாகி யுள்ளது. பொதுவாகச் சங்கப் பாடல்கள் மரம், செடி, கொடி, விலங்குகள் என இயற்கைப் பின்புலத்தில் படைக்கப்பட்டுள்ளன. காதல் விழைவு, துக்கம், பிரிவு, இழப்பு, கொண்டாட்டம் போன்ற அடிப்படையான உணர்வுகளைச் சித்திரித்திடப் புலவர்கள், பெரிதும் இயற்கை சார்ந்த சூழலுக்கு முக்கியத்துவம் தந்துள்ளனர். இன்றைய தமிழகத்தில் சூழல் தொகுப்புகள் சிதிலமாகி யுள்ள நிலையில், கவிதையாக்கத்தில் இயற்கைக்கான முக்கியத்துவம் மிகக்குறைவு. இயற்கையை நேசித்தல், கொண்டாடுதல், புரிந்துகொள்ளுதல் போன்ற விழுமியங்கள் நவீன கவிதையில் பழமலய், வெய்யில், தமிழச்சி, ஃபஹீமா ஜஹான் போன்றோரிடம் தொடர்கின்றன.

சங்க காலத்தில் பல்வேறு இனக்குழுக்களின் தனித்துவமான சமூக அமைப்புகள் சிதைக்கப்பட்டு உருவான மருத நிலம் சார்ந்த வாழ்க்கைமுறையில், மனிதர்கள், இயற்கைமீது ஆளுகை செலுத்த முயன்றனர். இயற்கையின் அதியற்புத ஆற்றல்கள், மனிதர்களால் விளங்கிட இயலாத சவால்களாக விளங்கின. இயற்கையின் பேராற்றல் ஒருபுறம், பேரழிவுகள், மரணம் இன்னொரு புறம் எனத் திண்டாடிய சூழலில் ஏதாவது செய்து, அதியற்புத ஆற்றல்களை அமைதிப்படுத்த முயன்ற போது, கடவுள் பற்றிய புரிதல் ஏற்பட்டிருக்க வேண்டும். இயற்கைக்கும் தங்களுக்குமான உறவினைப் புரிந்து கொள்ள விழைந்த தமிழர்கள், ஏதோவொரு மாய ஆற்றல் எல்லாவற்றையும் இயக்குவதாகக் கண்டறிந்தனர். சங்க காலத்தில் மனிதர்கள் பெரும் வெள்ளம், புயல், மழை, நிலநடுக்கம் போன்றவற்றில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான முயற்சிகள் ஒருபுறமும், கொடிய வேட்டை விலங்குகளிடமிருந்து உயிரைத் தக்க வைத்துக்கொள்வதற்கான போராட்டம் இன்னொரு புறமும் தொடர்ந்தன. இயற்கையில் இருந்து தன்னை அந்நியப்படுத்தி அறிந்திடும் அறிவு வளர்ச்சியடைந்த போது, இயற்கையையே கடவுளாகக் கருதி வழிபட வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவேதான் ஐந்திணை நிலப்பரப்பில் மலை, கடல், காடு, நீர்நிலைகள் சார்ந்து வாழ்ந்து வந்த சங்க காலத்து மக்கள் மரங்கள், மலைமுகடுகள், சுனைகள், கடற்கரை, ஆள் புழக்கமற்ற காடுகள், இரவு நேரம் போன்றவற்றில் கட்புலன்களுக்குத் தென்படாத சக்திகள் உறைந்திருப்பதாக நம்பினர். அவற்றை வழிபடுவதன் மூலம் தீய சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடலாம் என நம்பினர்.

கடவுள் என்ற கருத்தியல், தொடக்கத்தில் உருவமற்ற பேராற்றலையே குறித்தது. சூர், அணங்கு, சூலி, முருகு போன்ற கடவுள்கள் இயற்கை சார்ந்த இடங்களில் தங்கியிருப்பதான நம்பிக்கை, சங்க காலத்தில் வலுவாக நிலவியது. அணங்கு, வரையர மகளிர், சூர் போன்ற பேராற்றல்கள், குறிப்பாகப் பெண்களைப் பிடித்துக்கொண்டு அவர்களுடைய உடலினை மெலிவித்துக் கேடு செய்கின்றனவாகக் கருதப்பட்டன. அச்சம், வருத்தம் என்று பொருள் தருகின்ற வகையில் அணங்கு, பேய், சூர் போன்ற பெயர்களால் கடவுள்கள் குறிக்கப்பட்டாலும், அவற்றின் பேராற்றல் காரணமாக வணங்கப்பட்டன. புராதன சமய நெறிப்படி அச்சம்தான் கடவுள் பற்றிய கருத்தியலுக்கு மூலமாக விளங்குவதைச் சங்கப் பாடல்கள் புலப்படுத்துகின்றன. மனிதனுக்கு நன்மை செய்யும் பேராற்றலைவிடக் கெடுதல் செய்யும் பேராற்றல் பற்றிய சிந்தனைதான் முதன்முதலாகச் சடங்குகள் செய்யத் தூண்டின. ஏதோவொரு மாய சக்தியினால் ஏதாவது கேடுகள் விளையும் என்ற நம்பிக்கைதான், சங்கத்தமிழரின் சமயம் உருவாவதற்கான அடிப்படை. தாக்கு அணங்கு என்னும் கடவுள் தம்மை எதிரில் வருகின்றவர்களைத் தாக்கும்; அதிலும் இளம் பெண்களைப் பற்றித் துன்புறுத்தும். அணங்கைப் போலவே அச்சம் தருகின்ற இன்னொரு கடவுளான சூர், பொதுவாக மலைப்பகுதியில் செல்கிறவர்களுக்கு வருத்தம் அளித்தது. சூர் என்பது சூர்மகள் எனப்பட்டது. சூரானது மலைச்சுனை, மலைத்தொடர், மலை ஆகிய மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் உறைந் திருந்தது. சூர் குடியிருக்கும் மலையில் முளைத்துள்ள தழையினைத் தீண்டினாலும், வாடச் செய்தாலும், அது வருத்தும். அதனால் வரையாடுகள்கூட சூர் உறைந்திடும் மலையிலுள்ள தழையினை உண்ணாமல் ஒதுங்கு கின்றன (நற்றிணை:359).

நீர்நிலைகளான ஆறு, சுனை, குளம், கடல், கழிமுகம், ஆற்றின் நடுவில் அமைந்திருக்கும் திட்டு போன்றவற்றில் கடவுள் உறைவதாகக் கருதி வழிப்பட்ட நிலை, சங்க காலத்தில் நிலவியது. துறை எவன் அணங்கும் (ஐங்குறுநூறு:53), அருந்திறற் கடவுள் அல்லன் பெருந் துறைக் கண்டு இவள் அணங்கியோளே (ஐங்குறுநூறு: 182) என்ற வரிகள், பெண்களைத் துன்புறுத்தும் நீர்க் கடவுள்களைச் சுட்டுகின்றன. சூர்ச்சுனை (அகம்:91) என்ற வரி சுனையில் இருக்கும் சூர் கடவுளைக் குறிக்கிறது. அணங்குடை முந்நீர் (அகம்:220), பெருந் துறைப்பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ (நற்றிணை: 155), கடல்கெழு செல்வி(அகம்:370) போன்ற வரிகள் கடல் சார்ந்த கடவுளைக் குறிக்கின்றன. பிரமாண்டமான கடல் ஏற்படுத்திய அச்சம் காரணமாக அது வழிபடும் கடவுளானது.

சங்கத் தமிழர்களின் கடவுள் பற்றிய நம்பிக்கை யானது, தொல் பழம் சமயக்கூறுகள் அடிப்படையி லானது. மனித இருப்பு குறித்த மிகைப்படுத்தப்பட்ட தத்துவம், அதியற்புதப் புராணக்கதைகள், சொர்க்கம்/நரகம் பற்றிய புனைவுகள், உருவத்தை முன்னிறுத்திய தெய்வங்கள் போன்றனவற்றுக்குப் பழங்குடியினர் முக்கியத்துவம் தருவதில்லை. இத்தகைய போக்கானது சங்ககாலத் தமிழரின் கடவுள் பற்றிய கருத்தாக்கத்தில் முன்னிலை வகித்தது. இன்று வைதிக சமயம் முன்னிறுத்தும் நால் வருணப் பாகுபாடு உள்ளிட்ட பிறப்பு, பால் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கிற போக்கு தமிழர்களிடையே வலுவடைந்துள்ளது. தமிழர்கள் எல்லோரும் சாதி, மத அடிப்படையில் பிளவுண்டு, ஏற்றத்தாழ்வான மனதுடன் வாழ்கின்றனர். யாகத் தீ வளர்த்து, வேதம் ஓதுகிற பார்ப்பனியச் செயல் பாடு, விளிம்புநிலையினரின் வீடுகளுக்குள்ளும் நுழைந்து விட்டது. தீண்டாமையின் ஆதிக்கம் எல்லா மட்டங் களிலும் ஆழமாக ஊடுவியுள்ளது. பால் அடிப்படையில் பெண்களை இரண்டாம் நிலையினராகக் கருதுகிற கருத்து வலுவடைந்துள்ளது. சங்கத் திணைச் சூழல் உருவாக்கிய சமயம் பற்றிய விழுமியங்கள், தனிமனித உருவாக்கத்தில் சிதிலமாகியுள்ளன. குறிப்பாகச் சமயத்தின்  மூலம் இயற்கையுடன் எப்படி ஒத்திசைந்து வாழ்வது என்ற விழுமியம், இன்றைய வாழ்க்கையில் அறுபட்ட நிலையில் உள்ளது. சூழல் குறித்த அக்கறை இன்மையினால், தமிழர்களின் இன்றைய வாழ்க்கை, அரசியல் ரீதியாகப் புதிய பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளது.

சங்க காலத்தில் நிலத்தை முன்வைத்து உருவாக்கப் பட்ட சூழல் தொகுப்பில் வாழ்ந்த மக்கள், குறிப்பிட்ட மண்ணிற்குரிய தாவரங்களையும், விலங்குகளின் இறைச்சியையும் உண்டு வாழ்ந்தனர். கடலோரம் வாழ்கின்ற மக்களின் உணவில் மீன் இறைச்சியும், மலை சார்ந்த மக்களின் உணவில் வேட்டை விலங்கின் இறைச்சியும் தினமும் இடம்பெறுவது தவிர்க்க வியலாதது. பெரும்பாணாற்றுப்படை நிலவெளிக் காட்சிகளின் தொகுப்பினை நுணுக்கமாகப் பதிவாக்கி யுள்ளது. புரவலரான திரையனைக் காண்பதற்காகச் செல்கிற வழியில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை நிலவெளியின் இயல்பு, அங்கு வாழ்கிற மக்களின் உணவு, குடியிருப்பு, பழக்கவழக்கம், உயிரினங்கள், தாவரங்கள் பற்றிய விவரிப்புகள் சூழலியல் நோக்கில் முக்கியமானவை. ஒருவகையில் மக்களின் வாழ்க்கைமுறையை மண் தீர்மானித்தது. அந்தப் போக்கின் நீட்சியாக மலை சார்ந்த குறிஞ்சி நிலமெனில் காதல் எனப் புலவர்கள் வரையறுத்தனர். சூழல் சார்ந்து உருவாக்கப்படும் விழுமியங்கள் நிலந் தோறும் வேறுபடும் இயல்புடையன, ஆநிரை கவர்தல் என்பது பாலை நிலத்தில் வாழ்கின்ற மக்களின் தொழில் என்ற நிலை, சூழல் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் இயற்கையுடன் அங்கமாகி வாழ்கிற போக்கு, சங்க இலக்கியத்தில் சூழல் பற்றிய விவரிப்பில் வெளிப் பட்டுள்ளது. இன்றைய தமிழகத்தில் சூழல் என்பது முழுக்க நசிந்து விட்டது. ஒவ்வொரு நிலத்திற்குரிய தாவரம் என்பது புறக்கணிக்கப்பட்டு, மரபணு மாற்றம் செய்யப்பட்ட மேலைநாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களின் விதைகள் நிலத்தில் விதைக்கப்படுகின்றன. வேதியியல் உரங்களும் பூச்சிக்கொல்லியான நஞ்சுகளும் தூவப்பட்டு வளர்கின்ற செடிகளில் விளைகிற தானியங்களையும் காய்கறிகளையும் உண்ணுகிற மக்கள் நீரிழிவு, ரத்தப் புற்றுநோய், அல்சர் போன்ற தீராத நோய்களால் அவதிப்படுகின்றனர். ஹார்மோன் மருந்தினால் ஊட்டம் பெற்ற பிராய்லர் கோழி இறைச்சியைச் சாப்பிடுகிற வர்கள் கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களின் பாதிப்பிற்குள்ளாகின்றனர். இளைஞர்கள் அஜினோமோட்டா கலந்த சீன உணவுகள், பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை விருப்பத்துடன் உண்ணு கின்றனர். இந்நிலையில் குதிரைவாலி, வரகு, தினை போன்ற சிறுதானியங்களை உண்ண வேண்டும் என்ற  கருத்து, பரவலாகியுள்ளதற்குக் காரணம், பண்டைய உணவு விழுமியம் மீண்டும் செல்வாக்குப் பெற்றிருப்பது தான். இயற்கை வேளாண்மைக்குத் திரும்ப வேண்டும் என்ற குரல் இன்று தமிழகத்தில் ஒலிப்பது, சூழலியல் சார்ந்த விழுமியங்கள் புத்துயிர் பெற்றிருப்பதன் அடையாளம்.

ஆண்-பெண் உறவின் அடிப்படையாக விளங்குகிற காதலையும் சுழலுடன் பொருத்திக் காண்பது, சங்கப் பாடல்களில் சிறப்பாக இடம் பெற்றுள்ளது.  சங்கக் காதல் பாடல்களில் பெண் மொழியில் அமைந்த அள்ளூர் நன்முல்லையாரின் பாடல் தனித்துவமானது; சிறிய காட்சி மூலம் காதல் வயப்பட்ட பெண்ணின் மனநிலை உயிரோட்டமாக வெளிப்படுகிறது.

குக்கூ என்றது கோழி; அதன் எதிரே

துட்கென் றன்று என்தூஊ நெஞ்சம்

தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்

வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே

(குறுந்தொகை : 157)

கோழி கூவிய ஒலி கேட்டு, என் தோளுடன் பொருந்தியுள்ள காதலரைப் பிரிக்கவிருக்கும் வைகறைப் பொழுது வரப்போகிறதே எனப் பதற்றமடையும் பெண்ணின் மனத்துடிப்பு, நுட்பமான கவிதை வரிகளாகியுள்ளன. இங்கு பெண், உறவு கொண்டுள்ள காதலனுடனான தொடர்பு ஒருவேளை அவள் சார்ந்துள்ள சமூகமும் சுற்றமும் அறியாதது அல்லது அவளுடைய தோளுடன் பொருந்தியவன் நேசத்திற் குரிய கணவனாக இருக்கலாம். எவ்வாறாயினும் பொழுது விடியப் போவதானால், இருவரும் ஒன்றாக இருந்த சூழல் மாறிப் பிரிய வேண்டிய நிலையேற் படுகிறது. காதலனாக இருந்தால் மீண்டும் எப்பொழுது எங்கே கூடல் என்பது அறிய இயலாதது. கணவனாயின் அடுத்த நாள் இரவு வரும்வரை காத்திருக்க வேண்டும். ஆண் பெண் உறவினைக் காதல் இழையோட்டத்தில் ஏக்கமாகச் சொல்லியுள்ள வரிகள், காதலின் ஆழத்தைச் சித்தரிக்கின்றன. கோழி கூவுதல், வைகறை என அதிகாலைப் பொழுதினில் பின்புலத்தில் முல்லை நிலத்தின் ஒழுக்கமான பிரிவு விவரிக்கப்பட்டுள்ளது. சூழல் உருவாக்கும் பெண் மனப்பதிவுகள், திணைசார் வாழ்க்கையைப் பதிவாக்கியுள்ளன.

ஐவகை நிலப்பாகுபாட்டில் காதலை மையமிட்ட குறிஞ்சிப் பாடல்கள்தான் எண்ணிக்கை அடிப்படையில் அதிகமானவை. அதனையடுத்துக் காடும் காடு சார்ந்த முல்லை நிலம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அன்றைய காலகட்டத்தில் தரைப்பகுதியில் காடு செழிப்புடன் விளங்கியது. காட்டில் வளர்ந்திருந்த தாவரங்கள் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு ஆதாரமானவை. இயற்கை வளமான சூழலில் ஆநிரை வளர்த்தல் மூலம் மனித வாழ்க்கை வளர்ச்சியடைந்தது. முல்லை நிலத்தின் உரிப் பொருளான Ôகாத்திருத்தல்Õ முழுக்கப் பெண்ணுக்கானது. போர் அல்லது பொருள் தேடிப் பிரிந்துபோன தலைவனை நினைத்துப் பெண் காத்திருத்தல், பெண்ணுக்கான அடையாளம் என்பது குடும்ப நிறுவனம் பற்றிய விழுமியமாகும். வினையின் காரணமாக ஆணின் உலகம் வெளியெங்கும் விரிந்து கொண்டிருக்கிறது. ஆண் எங்கு சென்றான்? எப் பொழுது வருவான்? என எதுவும் அறிந்திராத சூழலில் கார்காலத்தில் நிச்சயம் அவன் திரும்பி வருவான் எனப் பெண் காத்திருத்தல், ஒருவகையில் பெண்ணுக்கு மன அழுத்தமும் சோகமும் தரக்கூடியன.

ஒக்கூர் மாசாத்தியாரின் முல்லைப் பாடல், இயற்கைப் பின்புலத்தில் பெண் மனதின் நுட்பங்களைப் பதிவாக்கியுள்ளது.

இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர்

இவணும் வாரார் எவணரோ என

பெயல் புறந்தந்த பூங்கொடி முல்லைத்

தொகுமுகை இலங்கு எயிறுஆக

நகுமே தோழி நறுந்தண் காரே     (குறுந்தொகை.126)

இன்பமளிக்கும் கொண்டாட்டத்தினைக் கருதாமல் பொருள் தேடிப் பிரிந்து சென்றவர் எங்கு சென்றாரோ? இன்னும் அவர் இங்கு வரவில்லை. குளிர்ச்சியான கார்காலத்தில் மழை பொழிகிறது. முல்லைப் பூங் கொடியில் ஒளிர்கின்ற முல்லை அரும்புகள், அக் கொடியின் பற்களாக என்னைக் கண்டு நகைக்கின்றன. என்ன செய்வேன் தோழி எனத் தலைவி புலம்புகிறாள். முல்லைப் பூக்கள் பூக்கின்ற இயற்கையான நிகழ்வைக் கூடத் தன் நிலையைப் பார்த்து அவை சிரிப்பதாகக் கற்பிதம் செய்கிறாள். இயற்கையுடன் சார்ந்த பெண்ணின் மனநிலை கவிதை வரிகளாகியுள்ளன. ஒருக்கால் கார்காலம் வருவதற்கு முன் வந்துவிடுவேன் எனத் தலைவன் அவளுக்கு வாக்குக் கொடுத்திருக்கலாம். திணை சார்ந்த வாழ்க்கையில் பெண்ணின் உலகமானது, வீடு, குழந்தைகள் எனக் காத்திருத்தல் ஒழுக்கமாக வலியுறுத்தப்பட்டது, குடும்பம் பற்றிய விழுமியத்தில் முதன்மையானது. இன்று வரையிலும் ஆணின் உலக மானது வீட்டிற்கு வெளியே விரிந்து கொண்டிருக் கையில் பெண் வீட்டில் காத்திருத்தல் தொடர்கிறது. சூழல் சார்ந்த ஒழுக்கமாகச் சங்கக் கவிதை சித்தரித்த குடும்ப உறவானது, இன்றும் தொடர்கிறது.

வளமான வாழ்க்கைக்குக் குறியீடான பறம்பு மலையானது மூவேந்தரால் கைப்பற்றப்பட்ட நிலையில், பாரி மன்னரின் இழப்பு ஏற்படுத்தும் வலியைக் கண்ணீருடன் பாடியுள்ள ஒளவையாரின் பாடல் வரிகளில் துயரம் கசிகிறது.

நாடா கொன்றோ காடா கொன்றோ

அவலா கொன்றோ மிசையா கொன்றோ

எவ்வழி நல்லவர்: ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே      (புறநானூறு:187)

ஆடவர் நல்லவராக விளங்குமிடத்தில் நிலமும் நன்முறையில் விளங்கும் என்ற ஒளவையாரின் கருத்து, ஆண் பற்றிய மதிப்பீட்டை உருவாக்குகிறது. வன்முறையும் ஆதிக்கமும் மிக்க அரசியலை முன்னெடுத்துச் செல்லும் ஆண்களில் உலகம் பற்றிய ஒளவையாரின் விழுமியம், இன்றைய காலகட்டத்துக்கும் பொருத்தமாக உள்ளது. திணைசார் மரபிலான தமிழக நிலப்பரப்பையும் நீர் வளத்தையும் திட்டமிட்டுக் கொள்ளையடிக்கிற கார்ப்பரேட்டுகளின் பின்னால் இருக்கிற அரசியல் வாதிகள் தான் சூழலின் நசிவினுக்குக் காரணம் என ஒளவையின் வழியில் யோசிக்கலாமா?

இன்று இயற்கை, மனிதர்களுக்கு எதிராகச் செயல் படுகிறதா என்ற கேள்வி முக்கியமானது. மனிதன், தான் ஓர் இயற்கைஜீவி என்ற புரிதல் இல்லாமல் நடத்துகிற அத்துமீறல்களால் ஏற்பட்டுள்ள சேதங்கள் அளவற்றவை. கி.பி.16-ஆம் நூற்றாண்டு முதலாக ஐரோப்பியரின் காலனிய அதிகாரத்துவ ஆட்சியில், தமிழகத்தின் சூழல் நாசமாகத் தொடங்கியது. ஆண்டு முழுக்க மழை பொழிந்திடும் மழைக்காடுகள் எனப்படும் சோலைகள் நிரம்பிய மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள், மொட்டையாக்கியது, இன்றளவும் தமிழகத்தின் சூழலியத்திற்குக் கேடு விளைவித்துள்ளது. நீருற்றுகள் வறண்டதால் வருஷம் முழுக்கத் தண்ணீர் பாய்ந்த ஓடைகள் காணாமல் போயின. வான் பொய்ப்பினும் தான் பொய்யாத வையை என்னும் குலக்கொடியானது, எழுபதுகளில்கூட மணல் பரப்புடன் மதுரைக்காரர்களின் பயன்பாட்டில் இருந்தது. இன்று வையை, இன்னொரு கூவம் ஆறு போல மாறி விட்டது. நொய்யல் ஆறு சாக்கடையாகி விட்டது. மக்களுக்கு உணவளித்த அருமையான நஞ்சை நிலத்தைக் கடந்த முப்பதாண்டுகளில் தமிழகமெங்கும்  பிளாட்டுகளாகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். பரந்த நிலப்பரப்பின் வழியே காலங்காலமாகப் பாய்ந்து கொண்டிருந்த வாய்க்கால்களை மறைத்துக் கட்டடங்கள் எழுப்பத் தொடங்கியது, இயற்கையைக் குறைத்து மதிப்பிட்ட செயலாகும்.  அண்மையில் சென்னை மாநகரம் எதிர்கொண்ட பேரவலத்திற்கான முதன்மைக் காரணம், இயற்கையின் பேராற்றலை மறந்ததுதான். கெடுப்பதும், கெட்டவர்க்குச் சார்பாகப் பொழியும் மழையின் இயல்பை திருவள்ளுவர் சொல்லியிருப்பது, இன்றைக்கும் பொருந்தும், நடுத்தர வர்க்கத்தினரின் கனவான சென்னையில் வீடு என்பது, ஓரிறவில் பெருக் கெடுத்த வெள்ளத்தினால் சிதைந்து போனது. வீடு முழுக்கச் சேமித்து வைத்திருந்த பொருள்கள் அழிந்தன.  குடிநீர், மின்சாரம், உணவு, அலைபேசி இல்லாமல் இருப்பதா இறப்பதா எனப் போராடிய சென்னை வாசிகளின் அனுபவங்கள் கொடுங்கனவாகப் பல்லாண்டு களுக்குத் துரத்திக் கொண்டிருக்கும். பெரும் மழை யினால் கடலூர் நகரம் உள்ளிட்ட கடலோரக் கிராமங்கள் எதிர்கொண்ட பேரழிவுகளினால் மக்களின் வாழ்வதாரம் சிதிலமானது. விவசாயம் முழுக்க அழிவுக் குள்ளானதால் விவசாயிகள் பட்ட துயரம் தீராதது.

சங்கச் சூழலியல் சார்ந்த இயற்கையான வாழ்க் கைக்கும் இன்றைய தமிழகத்தின் நிலவெளிக்கும் இடையில் பெரிய இடைவெளி உள்ளது. இயற்கைக்கும் தமிழர்களுக்குமான உறவு பெரிதும் சிதிலமாகியுள்ளது. மழைக்காடுகள், சோலைகள் அழிக்கப்பட்டது, கானகத்தில் வாழும் உயிரினங்கள் வேட்டையின்மூலம் கொல்லப்பட்டது எனச் சூழலின் பல்லுயிர்ப் பெருக்கம் நாசமாகி விட்டது. தமிழகத்தில் இன்று செயல்படுத்தப் படுகிற கூடங்குளம் அணு உலைகள், மீத்தேன் திட்டம், நியூட்ரினோ, கார்பன் ஹைட்ரோ திட்டம்  போன்ற பிரமாண்டமான அறிவியல் திட்டங்கள், கார்ப்பரேட்டு களின் ஆதாயத்திற்காக அமல்படுத்தப்படுகின்றன. இன்னொருபுறம் சூழலியலின் சீர்கேட்டினால் நீருற்றுகள் அற்றுப்போய், ஆறுகள் வறண்டு போய் விட்டன. பூச்சிக்கொல்லி நஞ்சு, வேதியியல் உரங்கள் காரணமாக வளமான மருத நிலங்கள் மலடாகிவிட்டன. பாலிதீன் பைகள், சாயக் கழிவுகள், ஆலைகளின் புகைகள், தோல் தொழிற்சாலைச் சுத்திகரிப்புக் கழிவுகள், வேதியியல் தொழிற்சாலைகளின் மாசுகள் எனத் தமிழகத்து நிலமும் காற்றும் சீரழிந்து விட்டன. இன்னொருபுறம் பெரிய நகரங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பிதுங்கி வழியும் மக்கள் கூட்டம் என மனித வாழ்க்கையே இயற்கையிலிருந்து முழுக்க அந்நியமாகியுள்ளது. சூழலியல் சார்ந்து வாழ்ந்த  சங்கத் தமிழர்களின் ஐந்திணை நிலமானது, இன்று கனவாக மாறியுள்ளது. என்றாலும் சூழல் உருவாக்கிய சக உயிரினங்களை நேசித்தல், இயற்கையுடன் இயைந்து செயல்படல், குடும்ப உறவில் காதல் போன்ற விழுமி யங்கள், இன்றளவும் தமிழர் வாழ்வில் எச்சங்களாகத் தொடர்கின்றன. அவை குறித்த புரிதலை இளந்தலைமுறை யினருக்கு உருவாக்கிட வேண்டியது அவசியமாகும்.

'நீர் இன்றி அமையாது உலகம்’ எனப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கண்டறிந்திட்ட பாரம் பரியத்தில் வந்த தமிழர்கள், இன்று கடந்த காலத்தைப் பின்னோக்கிப் பார்க்க வேண்டியுள்ளது. பண்டைத் தமிழர் சூழலைப் போற்றி வாழ்ந்திட்ட முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த முயலுவது அவசியமாகும்.  தொழில்நுட்பரீதியில் பல்வேறு வசதிகள் வந்துவிட்டன என்றபோதிலும், இயற்கையின் சீற்றத்தை எப்படி எதிர்கொள்வது என்பது இன்று தமிழர்கள் எதிர் கொண்டிருக்கும் காத்திரமான சவால். சங்க காலத் தமிழர்கள் தகவல்தொடர்பு, போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையிலும், தங்களைச் சுற்றிலும் காட்சி யளிக்கும் சூழலைப் புரிந்துகொள்ள முயன்றனர்; சூழலுடன் ஒத்திசைந்து வாழ்வது அடிப்படையானது என்ற நிலையில் வாழ்க்கை பற்றிய விழுமியங்களை உருவாக்கினர். அறிவியல்ரீதியில் வளமாக வாழ்வதாக நம்பிக் கொண்டிருக்கும் இன்றைய தலைமுறையினர், சூழலில் இருந்து விலகுதல் துரிதமாக நடைபெறுகிறது. இந்நிலையில் இயற்கையோடு இயைந்து வளமான வாழ்க்கை வாழ்ந்திட சங்கத் தமிழர்களிடமிருந்து கற்றுக் கொள்ள விழுமியங்கள் இருப்பதுதான் உண்மை.  

உதவிய நூல்கள்

1.            கிருஷ்ணமூர்த்தி,கு.வெ. தமிழரும் தாவரமும். திருச்சி: பாரதிதாசன் பல்கலைக் கழகம், 2011.

2.            முருகேசபாண்டியன்,ந. மறுவாசிப்பில் செவ்வியல் இலக்கியப் படைப்புகள்.  சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2016.

Pin It