புத்தகங்கள் மனத்தைச் செம்மைப்படுத்துகின்றன. பக்குவப்படுத்துகின்றன. நல்ல புத்தகங்கள் நல்ல மனிதர்களை உருவாக்குகின்றன. புத்தகங்களை வாசிப்பதும், புத்தகங்களை விசாலமான பார்வையில் நுணுகி ஆராய்வது என்பதும் தினந்தோறும் நடந்தாலும்  அதற்கான நாளைக் கொண்டாடுவது தேவையாகிறது.

அறிவியல் நாள், உலகத் தாய்மொழிநாள், உலகச் சுற்றுச்சூழல் நாள் எனப் பல தினங்கள் யுனெஸ் கோவினால் அறிவிக்கப் பெற்று அத்தினங்களைக் கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் மனிதனை மாமனிதனாக்கச் சமூகத்தின் திறவுகோலாக விளங்கும் புத்தகங்களுக்கு என ஒரு நாள் கொண்டாட வேண்டு மல்லவா? அந்த நாள் தான் ஏப்ரல் 23, உலகப் புத்தக  நாளாகும்.

ஸ்பானிய மொழி எழுத்தாளர் மிகுல் டி செர்வான்டஸ் (டான் குயிக்சாட் நூலாசிரியர்) மற்றும் வில்லியம் சேக்ஸ்பியர் இருவரது நினைவு நாளும் ஏப்ரல் 23. இந்த நாளை உலகப் புத்தக தினமாக 1923 இல் ஸ்பெயின் தேசத்தின் காட்டலோனியா நகரம் முடிவு செய்தது.

1948, ஏப்ரல் 23 உலகப் புத்தக தினமாகியது. எழுத்தாளரின் உரிமம் பாதுகாக்கும் தினமாக யுனெஸ்கோ நிறுவனத்தால் 1976 இல் உலகப் புத்தக தினம் மீண்டும் மறுபிறவி எடுத்தது.

சுவீடனில் இந்த தினம் குழந்தைகளுக்குப் புதிய புத்தகங்களைப் பரிசாகத் தரும் சிறப்பு நாளாகக்  கொண்டாடப்படுகிறது.  இங்கிலாந்திலும் அயர்லாந்திலும்  இதை உலகப்  புத்தக  இரவு என்று அழைக்கிறார்கள். கனடாவில் வாரம்  முழுவதும் புத்தக தின வாரம் எனக் கொண்டாடப்படுகிறது. புத்தக தினம் கொண்டாடு வதின் வழி ஒவ்வொரு படைப்பாளியையும் நாம்  கொண்டாடும் தருணமாக அமைகிறது.

ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நாளைக் கொண் டாடும் போது நல்ல மனிதத்தைப் படைக்கும் புத்தகங் களுக்கென ஒரு நாளைக் கொண்டாடுவது இன்றைய சூழலில் அவசியமாகிறது. இயந்திரத்தனமான வாழ்க் கையில், போட்டிகள் நிறைந்த சமுதாயத்தில் இளம் தலைமுறையினர் பாடநூல்களை மதிப்பெண் பெறு வதற்காகவே வாசிக்கும் சூழலில், புத்தகங்களை ஒரு சுமையாகவே கருதுகின்றனர். எந்த நோக்கோடு நமது இலட்சியம் இருக்கிறதோ அதை நோக்கிய பயண மாகவே புத்தகப் பயணமும் தொடரவேண்டும்.

‘புத்தகமே சிறந்த நண்பன்’ என்பார்கள். புத்தகங்களை மட்டுமே நண்பனாக்கிய மனிதர்களும் உண்டு. பாரதி சொன்னான்  Ôஎமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோரா திருத்தல்’ எனப் படைப்பையே ஆத்மார்த்தமாக நேசித்தவர்கள்  வாழ்ந்த, வாழும் மண்ணில்தான் நாமும்  வாழ்ந்து  கொண்டிருக்கிறோம்.

மனிதர்களையும் சமூக வரலாற்றையும் மிகச் சரியாக வாசித்ததால் காலத்தால் அழியாத மாமனிதராக உயர்ந்தோர்கள் காரல்மார்க்ஸ், பிரடரிக் ஏங்கல்ஸ், வாசிப்புதான் மக்கள் புரட்சியின் உயிர் நாடி என வர்ணித்த சோவியத் புரட்சியின் நாயகன் லெனின், தனது வாசிப்பை சுவாசிப்பாக ஆக்கிக் கொண்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், வாசிப்புக் கொள்கை மூலம் கலாச்சார புரட்சியென சீனத்தை வெல்ல வைத்த மாவோ, வரலாற்றின் வெற்றி அடையாளமான சேகுவேரா, சிறைச்சாலையை புத்தகச்சாலையாக்கிய மாமனிதன் நெல்சன் மண்டேலா, தூக்குக்கயிற்றை முத்தமிட்ட போதும் சுவாசிப்பை நிறுத்தினாலும் வாசிப்பை நிறுத்தமாட்டேன் என்ற மாவீரன் பகத்சிங், நாட்டின் அரசியல் சட்டத்தை எழுதும் அளவு உயர்ந்து வழி காட்டிய அண்ணல் அம்பேத்கர், இன்று தலைகுனிந்து வாசித்தால் நாளை தலைநிமிர்ந்து வாழலாம் என்ற ஏ.பி.ஜே அப்துல்கலாம் போன்றோர் வாசிப்பு மட்டுமே ஒரு மனிதனின் சுவாசத்தை சுத்தமாக்கி நல்ல வளமான மனிதன் ஆக்குகிறது என்பதற்கு காரணியமாக வாழ்ந்து காட்டியுள்ளனர்.

மாணவர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த கல்லூரிகளில் நூலக வாரம் கொண்டாடப் படுகிறது. அந்நாள்களில் மாணவர்கள், அவர்கள் விருப்பப்பட்ட ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் எத்தனை பக்கங்களை வாசித் திருக்கின்றனர் என்றும் அவர்கள் வாசித்த பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டு அதற்கு பதிலளிக்கும் வகையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதிலிருந்து இளைய சமுதாயத்தினருக்கு வாசிக்கும் பழக்கம், வாசிப்பதில் விரைவு, புரிந்துகொள்ளும் திறன், மனதில் பதியவைத்தல் மற்றும் நினைவாற்றல் போன்றவற்றை வளர்த்துக்கொள்ள இதுபோன்ற வாசிப்புப்பழக்கம் பயனளிக்கிறது.

‘ஒரு நூலுக்குள் ஒரு நூலாசிரியன் உயிர் வாழ்கிறான்’ என்பர். ஒரு நூலை வாசிக்கும்போது அந்நூலைப் படைத்தவரைப் பற்றிய மனநிலையை முழுமையாக அறிந்துகொள்ளமுடிகிறது.

‘பேரறிஞர் என்று அழைக்கப்படும் அண்ணா, நூலகங்களிலேயே தவமிருப்பாராம். நூலக நேரம் முடிந்த பிறகும் நூலகர் நூலகத்தைவிட்டு வெளியேறும் வரை புத்தகங்களை வாசிப்பாராம். அண்ணா உயிர்காக்கும் சிகிச்சைக்காக அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அண்ணாவைப் பரிசோதித்த மருத்துவர்  உங்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார். அண்ணாவோ இந்த அறுவைச் சிகிச்சையை ஓரிரு நாள்கள் தள்ளிப்போடலாமா என்று கேட்டுக் கொண்டார். அதற்கு மருத்துவர் ஏன்? என்றார். அண்ணா, நான் ஒரு புத்தகம் வாசித்துக் கொண் டிருக்கிறேன். அப்புத்தகத்தை ஓரிரு நாட்களுக்குள் படித்து முடித்து விடுவேன். ஒருவேளை இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிபெறவில்லை என்றால் என்னால் அந்த புத்தகத்தை வாசிக்க முடியாமலே போய்விடும் என்றார். இப்படிப்பட்ட மகத்தான மனிதரை அவர் படித்த புத்தகங்கள் தான் ‘அறிஞர்’, ‘பேரறிஞர்’ என்னும் பட்டங்களோடு போற்றப்படுவதற்கு வழித்துணையாக இருந்தது.

நேரு சிறையிலிருக்கும்போது தமது மகளான இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள்தான் இந்திராவை நாட்டின் பிரதமராக்கியது. காரல்மார்க்ஸ் எழுதிய ‘மூலதனம்’  தான் இன்றளவும் சிறந்த பொருளாதாரக் கொள்கையை வெளிப்படுத்தும் வகையில் பேசப் படுகிறது. பகத்சிங்குக்கு ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ எனும் சிந்தனை மேலோங்கியது.

கண்ணதாசன் சொல்வார், ஒரு மனிதன் இப்படித் தான் வாழ வேண்டுமென்றால் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ படியுங்கள். ஒரு மனிதன் எப்படி வேண்டு மானாலும் வாழலாம் என்றால் என்னுடைய ‘வனவாசம்’ படியுங்கள் என்பார்.

‘பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வாழ்க்கை வாழ்க்கையல்ல. இறப்புக்குப் பின்னும் பேசப்படுவதுதான் வாழ்க்கை’. நாம் வாழ்ந்த காலத்தில் நமது சுவடுகள் எதிர்காலத் தலைமுறையினருக்குப் பாடமாக அமைய வேண்டும். நிறைய படைப்பாளிகள் தான் எழுதுவதை நிறுத்தி பல ஆண்டுகள் கடந்தாலும் அவர்களுடைய படைப்புகள் என்றென்றும் வாழும் வரம் பெற்றதாக விளங்குகிறது. படைப்போடு  படைப்பாளனும் பேசப்படுகிறான். நேற்று எழுதி இன்று பேசுவதைவிட படைப்பாளன் எழுதுவதை நிறுத்திய பிறகும் பேசப்படுவதில் தான் அவன் படைப்பும் உயிர் பெறுகிறது. அவனும் உயிர் பெறுகின்றான்.

சிறையிலிருந்து புத்தகங்களைப் படித்து மாமனிதர்களானவர்களும் உண்டு. புத்தகங்களை  அட்டைபோட்டு அட்டைப் படங்களை மறைக்கா தீர்கள். அட்டைப் படத்தைப் பார்த்தாவது பலருக்குப் படிக்கும் ஆர்வத்தை  மிகுதிப்படுத்தும்  என்பார்கள்.

தந்தை பெரியார் தமது கொள்கைகளை,  கருத்தியல் களை அனைவரிடமும் கொண்டு போய்ச் சேர்க்க புத்தகங்களை மிகக்குறைவான விலைக்கு விற்றார். 

உன் நண்பன் யார் என்று சொல், உன்னை அறிந்து கொள்கிறேன் என்பது போல் நாம் படிக்கும் புத்தகங்களே நம்மைச் சீர்தூக்கிப் பார்க்க உதவுகிறது. இன்றைய சூழலில் ‘புத்தக வங்கி’ ஏற்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் தமக்குத் தேவையான புத்தகங்களைப் புத்தக வங்கியில் மிகக் குறைந்த விலையில் பெற்று படிக்க வழிவகை செய்யப் பட்டிருக்கிறது.

கல்லூரிக்குச் செல்லும்போது புத்தகங்களைச் சுமந்து கொண்டுபோய் படித்த இளைஞர்கள் பிற் காலத்தில் நல்ல அரசியல் தலைவர்களாக, படைப்பாளி களாக, நாடு போற்றும்  நல்லவர்களாகத் திகழ்ந்தனர். இன்றைய தலைமுறையினர் புத்தகத்தை விட உள்ளங் கையில் கைப்பேசியை வைத்துக்கொண்டு உலகையே வலம் வருகின்றனர்.  சமூக வலைத்தளங்களுக்கு ஆட் பட்டு தம்மை பட்டைதீட்டுவோரும் உண்டு.

பேருந்துகளில் கனத்த இதயத்துடன் பயணம் செய்யும் தருணத்தில் நல்ல புத்தகத்தை வாசித்தால் பேருந்துப் பயணத்தோடு நம் மனப் பயணமும் புத்தகத்தோடு ஒன்றி நாம் சென்றடையும் இடம் வரும்போது நம் மனதும் லேசாகிறது. நாம் எந்த ஒரு மனத்தைக் கொண்டிருந்தாலும் அப்புத்தகத்தில் உள்ள  கதாபாத்திரமாகவே மாறிவிடுவதும் உண்டு. மனம் அமைதியாக  இருக்கும்போது வாசிக்கும் புத்தகங்களின் சிந்தனைகள் நம் மன ஓட்டத்தின்  நீங்காத நினைவு களைத் தருகின்றன.

‘நூலகத்திற்குச் செல்ல மறந்த நாள்கள் நான் மூச்சுவிட மறந்த நாள்களே’ என்பான் ஒரு கவிஞன்.  சமூகத்தின் வெளிப்பாடுகளை வெளிக்கொணரும் உந்து சத்தியாக புத்தகங்கள் இருக்கின்றன.

‘நவில் தொறும் நூல் நயம் போல பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு’ ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்தூறும்  அறிவு’ என ஒருவனின் பண்பை மதிப்பிட அவன் படித்த புத்தகங் களே சான்றாக அமைகிறது. ‘உவப்பத்தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்’ பிறர் மனம் மகிழும்வண்ணம் பேசி, பிரியும்போது இனி இவரை எப்போது காண்போம் என்று வருந்தும் படி  பிரிதலே புலவரின் தொழிலாகும். அவ்வகையில் ஒரு புத்தகத்தைப் படித்தபின் கிடைக்கும் இன்பமே மறுபடியும் அப்புத்தகத்தையும் படைத்த படைப் பாளியையும் நினைவு கூறுகின்றன.

ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சியின் வாயிலாக புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்து கிறோம். அங்கு வரும் கூட்டத்தைப் பார்த்துத்தான் இத்தனைப் புத்தகப் பிரியர்கள் இருக்கிறார்களா  எனும் வியப்பே மிஞ்சுகிறது. புத்தகங்களைக் கழிவு விலையில் விற்பனை செய்தும் புத்தகம் வாங்குவோரை ஊக்கப் படுத்துகின்றன.

ஒவ்வொரு வீட்டிலும் சமையலறை, பள்ளியறை, பூசையறை, வரவேற்பறை இருக்கும்போது படிப் பதற்கென படிப்பறையும் நூலகமும் இருக்கவேண்டு மென்றார் அண்ணா. வீடு என்பது வசிக்க மட்டுமல்ல வாசிக்கவும் தான் எனும் சிந்தனையோடு பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு முன்னோடிகளாக விளங்க வேண்டும். குழந்தைகளுக்குப் பரிசு தரவேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் நல்ல புத்தகங்களைப் பரிசாகத் தர வேண்டும். இளவயதிலேயே நல்ல விதைகளை விதைத்தால் அதன் பலன் நல்லதாகவே இருக்கும் எனப் பெற்றோரும் மற்றோரும் எண்ணவேண்டும். திரைப் படம், கோயில் எனப் பொழுதுபோக்குவதற்குரிய  இடங்களுக்கு இட்டுச்செல்வதைவிட அறிவுக் கோயிலான நூலகங்களுக்கு அழைத்துச் செல்வது குழந்தைப்  பருவத்திலேயே  நன்மையை  விதைப்பதாகும்.

Òஅறிவு அற்றம் காக்கும் கருவி” அவ்வகையில் அறிவை ஊற்றெடுக்கச் செய்யும் புத்தகங்களைப் படித்து பண்படுவோம். பலருக்குப் பயன்படவும் செய்வோம். ஆண்டுக்கொரு முறை வருவது உலகப் புத்தக நாள். நாள்தோறும் வாசிப்போருக்கு ஒவ்வொரு நாளும் புத்தக நாளே! புத்தகங்கள் ஞானத்தின் வேர்களாகவும், சமூகத்தின் திறவுகோலாகவும் விளங்குகிறது.