veerai 350கவிதையும், காவியமும் ஒரு காலத்தின் வரலாறாகும்.  கவிதை எழுதுவதும், காவியம் புனைவதும் காலம் அவனுக்குத் தந்த கடமை யாகும்.  அவையே அக்கால மொழியின் சிறப்பாகவும், அந்த இனத்தின் அடையாளமாகவும் திகழ்கின்றன.

அவற்றை  இழந்துவிட அரசும் ஒப்புவதில்லை; அந்த மக்களும் அனுமதிப்பதில்லை.  எல்லா நாடுகளிலும் இதுதான் உண்மை.  இதற்காக நடந்த போர்களும் ஏராளம்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க காலம் முதன்மையானது.  அடுத்து சங்கம் மருவிய காலம், இடைக்காலம், பிற்காலம் என்றும் அழைக்கப்படுகின்றன.  பிற்கால இலக்கிய வரலாறு பாரதியில் தொடங்குகிறது.

பாரதிதாசனுக்கென ஒரு பரம்பரையே உருவானது.  அவரையே முன்மாதிரியாகக் கொண்டு ஒரு பாட்டுப் பட்டாளம் படையெடுத்தது.  அவர் களுள் கவிஞர் தமிழ்ஒளி முதலில் வைத்து எண்ணத் தக்கவர் ஆவார்.

தமிழ் ஒளியின் படைப்புகளில் கவிதை, காவியம், சிறுகதை, கட்டுரை, நாடகம், திறனாய்வு எனப் பலவகைப்படும்.  தமிழ் ஒளி பன்முகம் கொண்டவர் என்பதை அவர் படைப்புகள் கூறாமல் கூறுகின்றன.

அவர் ஒன்பது காவியங்கள் இயற்றியுள்ளார்.  கவிஞரின் காதல், நிலைபெற்ற சிலை, வீராயி, மேதின ரோஜா, விதியோ, வீணையோ? மாதவி காவியம், கண்ணப்பன் கிளிகள், புத்தர் பிறந்தார், கோசலைக் குமரி ஆகியவையே அவை.

இவற்றில் ‘புத்தர் பிறந்தார்’ என்பது மட்டும் முழுமை பெறாமல் அரைகுறையாக நின்று விட்டது, இதுபற்றி டாக்டர் மு. வரதராசனார் கூறும்போது, “புத்தர் பிறந்தார் என்ற அருமை யான காவியம் முடிக்கப்படாமலேயே குறையாக நின்றுவிட்டது.  தமிழ் இலக்கியத்தின் குறை யாகவே ஆகிவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘வீராயி’ என்னும் காவியம் முதல் ‘தலித்’ படைப்பு என்று திறனாய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.  இது 1947இல் வெளிவந்த இவரது மூன்றாவது காவியமாகும்.

“இந்நூலின் முதற்பதிப்பு 1947இல் தமிழர் பதிப்பகம் வாயிலாக தோழர் மா.சு. சம்பந்தன் வெளியிட்டார்.  அவரிடம் முறைப்படி பதிப்புரிமை பெற்று 2003இல் நான் வெளியிட்ட ‘தமிழ்ஒளி காவியங்கள்’ முதல் தொகுதியில் ‘வீராயி’ சேர்க்கப் பட்டது. இப்போது தோழர்களின் வேண்டு கோளை ஏற்று தனிநூலாக வெளியிடப்படுகிறது” என்று பதிப்பாளர் செ.து. சஞ்சீவி தமது பதிப் புரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் காவியத்துக்கு கவிஞர் தமிழ்ஒளி ஓர் அருமையான முன்னுரை எழுதியுள்ளார்.  எழுத்தாளர் களும், கவிஞர்களும் சமுதாய சிந்தனையோடு செயல்பட வேண்டும் என்பதைக் கொள்கை வழியோடு கூறுகிறார்.

“நம் கண் எதிரே நம் உடன்பிறந்தான் மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்து போகிறான்.  அவன் குடும்பம் வறுமைப்படுகுழியில் வீழ்ந்து கதறுகிறது.  இதைக் கண்டு மனமிரங்காமல் மரத்துப்போன நெஞ்சுடன் உலாவும் மானிடப் பிண்டங்களின் உடலில் ‘சுரீர் சுரீர்’ என்று தைக்கும்படி எழுதுவது தான் உண்மை எழுத்தாளனின் கடமையும் நோக்கமும் ஆகும்” என்று அவர் கூறுகிறார்.

உண்மையான எழுத்தாளர் எப்படியிருக்க வேண்டும் என்று உபதேசம் செய்கிறவர் எப்படிப் பட்ட எழுத்துக்குச் சொந்தக்காரராக இருப்பார் என்று எதிர்பார்ப்பது இயல்பு.  ‘வீராயி’ அதற்கு ஓர் எடுத்துக்காட்டான படைப்புதான் என்பதை படித்து முடித்ததும் தெரிந்துகொள்கிறோம்.

“தீண்டாமையும், வறுமையும் விளைந்த கொடுமையான சூழ்நிலையில் உள்ள வீராயி என்ற ஏழைப் பெண்ணின் சோகக் கதையை இந்நூல் சித்தரிக்கிறது.  பாரதியும், பாரதிதாசனும் கையாண்டு நிலைநிறுத்திய எளிமையும், விறு விறுப்பும் கலந்தது என்பது அ. சீனிவாசராகவன் (முன்னாள் முதல்வர், வ.உ. சிதம்பரம் கல்லூரி, தூத்துக்குடி) ‘சிந்தனை’ ஏட்டில் எழுதிய விமர்சனம் ஆகும்.

ஐப்பசி மாத அடைமழை வெள்ளத்தில் மருதூர் சேரியே அழிந்தது.  அதில் வீராயியும், அவள் தந்தையும் வெள்ளத்தில் மிதந்து வந்த வைக்கோற்போரில் அமர்ந்து தப்பிப் பிழைத்தனர்.  எனினும் தந்தை இறந்து போகிறார்.

“மருதூரின் சேரியினர் மண்ணோடு மண்ணாய்

மறைந்தனராம் தமிழரசு மறைந்ததனைப் போன்று!

பெருநாடே நீ அவர்க்குத் தந்தபரி சிதுவோ?

பிறர்வாழ உயிரு தவுந் தமிழ்நாடு நீயோ?”

என்று அதற்காகக் கவிஞர் வருந்துகிறார்.

புதுப்பட்டினத்தைச் சேர்ந்த வீரண்ணன் வீராயியைக் காப்பாற்றி வீட்டுக்கு அழைத்துப் போகிறான்.  அவனும், அவன் தந்தை மாரியும் அவளைக் குடும்பத்தில் ஒருத்தியாகச் சேர்த்துக் கொள்கின்றனர்.  வீரண்ணன் அவளைத் தங்கை யாகவே எண்ணி அன்பைப் பொழிகிறான்.

“வீராயி நீ சிறிதும் கவலையுற வேண்டாம்

வேறில்லை நாங்களெலாம் உன்சொந்தக் காரர்

யாராரோ செய்திட்ட புண்ணியம்டி அம்மா

உன்தந்தை இறந்திட்டார் நீ தப்பி விட்டாய்!”

என்று மாரிக்கிழவன் கூறுகிறான்.  ‘நீ எனக்கு மகள் தான், என் ஆதரவில் வாழ்வாய்!’ என்று ஆறுதல் கூறுகிறான்.

அந்தக் குடும்பத்தில் தங்கி அவ்வூர் பண்ணை யார் வயலில் நடவு வேலை செய்து வந்தாள்.  அவளது அழகில் மயங்கிய பண்ணையார் ஒரு நாள் பாலியல் வன்முறைக்கு முயல்கிறான்.

“பருந்தொன்று கோழியிளங் குஞ்சு தன்னை

பாய்ந்தடித்துக் கவ்வுதல்போல் அவளைப் பற்றி

ஒருகணத்தில் அறைக்குள்ளே இழுத்துச் சென்றான்!

ஓடியுமே இமைப்பினிலே தாழை யிட்டான்!”

அப்போது அவளைத் தேடிவந்த வீரண்ணன் அவளது அலறலைக் கேட்டான்.  கதவை உடைத்து அவளை மீட்டான்.  எனினும் இந்தக் கலவரத்தில் பண்ணையார் கொலையாகிறார்.  வீரண்ணன் கைது செய்யப்பட்டு அவனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

வீராயியும், மாரிக் கிழவனும் அழுது ஆற்று கின்றனர்.  எனினும் நீதிமன்றம் இரக்கம் காட்ட வில்லை.

“உண்மைக்கு மதிப்புவரும் ஒருகாலம்

வரும்; அப்போ துணர்ந்து கொள்வர்

கண்போன்ற தங்கையினைக் கற்பழிக்க

முனைந்தவனின் உயிரைக் கொன்ற

அண்ணனுக்குத் தீங்கிழைத்த நடுநிலைமை

அற்றோரின் செயலைக் கண்டே

மண்ணுலகம் பழிதூற்றும்; யாவருமே

என்பேரை மறவார் அன்றோ?”

இந்நிலையில் வயதான மாரிக்கிழவன் மகனை யிழந்து தமிழ்நாட்டில் வாழ வழி தெரியாமல் ‘கங்காணி’யின் பேச்சைக் கேட்டு பிழைப்பிற்காக தென் ஆப்ரிக்காவுக்கு வீராயியுடன் செல்கிறான்.  அங்கு தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் போது பாம்பு கடித்து மாரி இறந்து போகிறான்.  வேறு துணையில்லாத வீராயி தற்கொலைக்கு முயல்கிறாள்.

“அண்ணன் இறந்தவுடன்- என்

ஆவி துறந்திருப்பேன்

புண்ணிய தந்தையினால் - அதைப்

பொறுத்துக் கொண்டிருந்தேன்

கண்ணிரண் டில்லை இன்று- பினர்

காட்சியும் தப்பிடுமோ?

மண்ணில் உயிர் விடுவேன்- என

மங்கை துணிந்துவிட்டாள்”

அப்போது ஆனந்தன் என்ற இளைஞன் அவளைக் காப்பாற்றுகிறான்.  அவளுக்கு வாழ்வு தருவதாகக் கூறி, தமிழ்நாட்டுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்கிறான்.

“காளை இளம்பருவம்- அவன்

கண்களில் நற்பிரிவு!

மாள மனம்துணிந்தாய்- இது

மாபரி தாபம் அம்மா!

வேளை வந்தே இறந்தார்- அவர்

விசனம் நீங்கிடம்மா!

நாளைக் கழித்துவிட்டால்- நம்

நாட்டுக்குச் சென்றிடலாம்”

என்று கூறி ஆனந்தன் அவளைத் தேற்றுகிறான்.

ஆனந்தன் அவளை அழைத்துக் கொண்டு ஊருக்கு வருகிறான்.  அவர்களது திருமணப் பேச்சைத் தொடங்குவதற்கு முன்பாகவே அவள் பறைச்சி என்பது தெரிந்துவிடுகிறது.  கவுண்டர் அவர்களை வீட்டை விட்டே விரட்டி விடுகிறார்.

“தொலையட்டும் கழுதையது பறைக்குட்டி யோடு!

துளியேனும் இடம் கொடுத்தால் உன் கழுத்து துண்டு

அலையட்டும்! எங்கேனும் சாகட்டும் சென்று!

அப்பண்ணக் கவுண்டரவர் ஆட்களுடன் வந்தார்”

ஆனந்தன் சினம் கொள்கிறான்.  ‘மேல்சாதித் திமிரை அடக்கப் போவதாகக் கூறி அவளை அழைத்துக் கொண்டு சேரிக்கே செல்கிறான்.  சாதி மறுப்பு என்னும் புரட்சித் திருமணம் செய்யப் போவதாக பறையடித்து அறிவிக்கச் செய்கிறான்.  ஊரே கொந்தளிக்கிறது.

“காதெலாம் கிழியும்வணம்

                பறையடித்து விட்டான்

‘கவுண்டருக்கும் பறைச்சிக்கும்

                கலியாணம்’ என்று!”

இதுகேட்டு செல்லப்பக் கவுண்டரும், ஊராரும் ஓடோடி வந்தனர்.  ‘இருவரையும் கொல்லுங்கள்’ என்று ஆணையிட்டார்.  சேரியையே சிதைத்தனர்.  அவர்களை அடித்துத் துவைத்தனர்.

“குருதியிலே காதலர்கள் குளிக்கின்றார் அந்தோ!

கொடுமையிலே இதுபோன்ற கொடுமையதும்  உண்டோ?

ஒருவாறு வெறிதீர்ந்தே ஊரார்கள் சென்றார்

உடல்சோர்ந்து காதலர்கள் தரைசாய்ந்து விட்டார்

திருந்தாத தமிழ்நாடே! நீ செய்த தீமை

தீ மண் நீர் காற்றுவெளி உள்ளளவும் மக்கள்

ஒருபோதும் மறவார்கள் உண்மையிது சொன்னேன்!

உயர்காதல் கொன்றாய் நீ வாழுதியே நன்றே!”

சமுதாய மாற்றத்துக்காக பல காலமாகப் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.  கவிஞர் தமிழ்ஒளி எழுத்தின் மூலம் போராடியுள்ளார்.  திருந்தாத தமிழ்நாட்டைத் திருத்து வதற்காகப் பாடியுள்ளார்.  ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை முழக்கமாகக் காவியம் முடிகிறது.

வீராயி

ஆசிரியர்: கவிஞர் தமிழ்ஒளி

வெளியீடு: புகழ் புத்தகாலயம்

48/105, பிள்ளையார் கோயில் தெரு,

செனாய் நகர், சென்னை - 600 030

விலை: `50.00