koomanam 350தினசரி யாத்திரை - நடை பயணம் - உடலுக்கு ஆறுதல் தருவது. கிரிவலம், கோவிலுக்குப் பாத யாத்திரை என்பது பக்தர்களின் மனதிற்கு நிம்மதி தரும் ஆன்மீக காரியம். இப்போது தமிழ்நாட்டில் பல கோவில்களின் விசேசங்களையட்டி ஆன்மீக பக்தர்கள் பக்தி யாத்திரை மேற்கொள்கிறார்கள். அதில் மிக முக்கியமானது பழனி கோவிலுக்கு தைப்பூச சமயத்தில்  நடைபெறும் பாதயாத்திரை.

தமிழ்நாட்டிலிருந்து மட்டுமின்றி கேரளாவிலிருந்தும் பலர் அவ்வகைப் பயணம் மேற்கொள்கிறார்கள். வெளிநாட்டினரும் கூட.

அப்படி பழனி பாதயாத்திரையின் போது நடக்கும் நிகழ்வுகள், அனுபவங்களை இந்நாவல் சொல்கிறது. பனியன் தொழிலாளர்கள், பனியன் உற்பத்தி செய்யும் சிலர், பலதரப்பட்ட பெண்கள், இளைஞர்கள் என்று பலர் அப்பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

வெவ்வேறு வகையான சடங்குகள், தொன்மக் கதைகள் , பக்தி சார்ந்த நம்பிக்கைகள், சிறுசிறு சடங்குகள் என்று நான்கு நாட்கள் பக்திப் பயணத்தை இந்நாவல் விவரிக்கிறது.

பாதயாத்திரை தங்களின் தன் அகங்காரத்தை கழற்றி வைத்து விட ஒரு சந்தர்ப்பம். பணம், அந்தஸ்து, சாதி  என்ற வேறுபாடு இல்லாமல் மேற்கொள்ளப்படுவது. அகங்காரத்தைத் தொலைத்து விட்டு பலருடன் பழகவும், பல இடங்களில் அன்னதானம் பெற்று

உணவு உண்ணவும், போகும் பாதைகளில் சாதாரண இடங்களில் உறங்கவும், தங்கவும், பலருடன் கலந்து பேசவும் ஏற்படும் வாய்ப்பு பக்தியை மையமாக வைத்தே நிகழ்கிறது. முருகனை சந்தித்து வணங்கி தங்களின் பாரத்தை இறக்கி வைக்க ஒரு சந்தர்ப்பம்.

ஆனால் அங்கேயும் சாதி தட்டுப்பட்டு விடுகிறது. பண அந்தஸ்து குறுக்கிடுகிறது சிலசமயம். நாத்திக எண்ணம் கொண்ட ஓரிருவர் அவர்களுடன் பயணம் செல்வதால் மறை முகமாகப் பகுத்தறிவு சார்ந்த விசயங்களும் வெளிப்படுகின்றன. அதில் செல்பவர்கள் தங்களைச் சுயபரிசீலனை செய்துகொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது.

பாதயாத்திரை என்பது வாழ்க்கைப் பயணத்தின் ஒரு பகுதி. அந்தப் பயணத்தின் வழியே வர்க்க வேறுபாடு. சாதியம், பண ஆதிக்கம், பக்தியின் போலித்தனம் போன்றவற்றை சுப்ரபாரதிமணியன் வெளிப்படுத்தி பல    சமூக அவலங்களை வெளிக்கொணர்கிறார்.

குறிப்பாக குடிசார்ந்த விசயங்கள், பெண்களின் பிரச்சினைகள், தொழிலாளர்களின் நிலை என்று பல கோணங்களை இந்நாவல் காட்டுகிறது.

பகுத்தறிவுப் பார்வை ஊடாடி நிற்பது ஆசிரியரின் சரியான நிலையைச் சொல்கிறது. புதிய களம், திருப்பூரைத் தாண்டிய சுப்ரபாரதி மணியனின் அனுபவங்கள்  இதில் எழுதப்பட்டுள்ளன. முகநூல் பக்கங்கள், தொன்மக்கதைகள், ஆன்மீகக் கதைகள் சுவாரஸ்யமாக உள்ளன.

பக்க அளவில் சிறியதாக இருந்தாலும் ஒருவகை முழுமையை இதிலும் காணலாம். எழுத்தாளனின் பார்வை எல்லா விசயங் களிலும் பதிவது, விமர்சனமாக படைப்பில் வைக்கப் படுவது சார்ந்த ஒரு முன் மாதிரி நாவல் இது.

கோமணம்

ஆசிரியர்: சுப்ரபாரதிமணியன்

வெளியீடு:முன்னேற்றப் பதிப்பகம்,

சென்னை.

விலை: `80.00