ஜெயகாந்தன் என்ற ஒப்பாரும், மிக்காரும் இல்லாத எழுத்தாளர் இறந்துவிட்டதாகக் கூறு கிறார்கள். இமயம் சரிந்து விட்டதா? கங்கை வற்றி விட்டதா? நம்மால் நம்ப முடியவில்லை. அரை நூற்றாண்டு காலம் தமிழ் எழுத்துலகில் கொடி கட்டிப் பறந்த சிறுகதை மன்னன் பிரிந்துவிட்டார் என்றால் நம்ப முடிகிறதா?

jayakanthan 237“பத்திரிகைக்காரர்களும், வாசகர்களும் என் மீது வைத்திருக்கிற நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு மட்டுமல்லாமல் எனக்கே என் மீதுள்ள நம்பிக்கைகளைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு நான் இவற்றை எழுத நேர்ந்தது...” என்று ஜெயகாந்தன் தான் எழுதுவதன் காரணத்தை இப்படிக் கூறுகிறார்.

பள்ளிப் படிப்பை ஐந்தாம் வகுப்போடு விட்டு விட்டு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியால் வளர்க்கப் பட்டவர். தோழர் ஜீவானந்தம், கே.பாலதண்டா யுதம், ஆர்.கே.கண்ணன், எஸ்.இராமகிருஷ்ணன் (எஸ்.ஆர்.கே), ஆர்.கே.பாண்டுரங்கன் (ஆர்.கே.பி) இவர்களை ஞானக்குருமார்களாக ஏற்றுக் கொண் டவர்.

அங்கே அலுவலகப் பையனாக வாழ்வைத் தொடங்கி, ஊழியர்களோடு ஊழியராக, தொண்ட ரோடு தொண்டராக, தலைவர்களோடு தலை வராக வாழ்ந்தவர்.

1950களில் இலக்கிய உலகத்தில் நுழைந்த ஜெயகாந்தன் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை எழுத்து வடிவமாக்கினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு நடுத்தர மக்களின் வாழ்க்கை அவர் கவனத்தை ஈர்த்தது. இறுதிக் காலங்களில் ஆன்மிகத் தத்துவத்தின்பால் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

“கம்யூனிஸ்ட் என்றாகி விட்டவர் எப்போதும் கம்யூனிஸ்டாகவே இருப்பார்”என்று கூறும் இவர், “ஒருவர் ஏக காலத்தில் மார்க்சியவாதி யாகவும், ஆன்மிகவாதியாகவும் இருப்பதில் எந்த முரணும் இல்லை”என்றும் கூறினார்.

“கம்யூனிஸ்ட் கட்சிதான் என்னை ‘நாகரிக மனித’னாக உருவாக்கிற்று. எனக்குக் கல்வி கற்றுத் தந்து, பண்பாடு கற்றுத் தந்து, என்னை எழுத் தாளன் ஆக்கியதே எனது கம்யூனிஸ்ட் நண்பர் தான் என்பதை நான் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்”என்று ஜெயகாந்தன் தம் எழுத்தில் பதிவு செய்துள்ளார்.

ஜெயகாந்தன் தமது இலக்கியப் பயணத்தை 1950களில் தொடங்கினார். சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன், அமுதசுரபி, தினமணி கதிர், குமுதம் ஆகிய இதழ்களில் அவரது படைப்புகள் வெளிவந்தன. அவை வாசகர்களின் வரவேற்பைப் பெற்றதால் அவரை சிறந்த படைப்பாளி என்று எழுத்துலகம் ஏற்றுக் கொண்டது.

இலக்கிய உலகில் புகழ்பெற்ற இவருக்குத் திரைப்பட உலகில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. 1964-ஆம் ஆண்டு ‘ஆசிய ஜோதி பிலிம்ஸ்’என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி நண்பர்களின் கூட்டு முயற்சியால் ‘உன்னைப் போல் ஒருவன்’படம் தயாரிக்கப்பட்டது. அந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து இவர் படைப்புகளான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’திரை வடிவம் பெற்றன. இவற்றில் இவர் பாடல்களும் எழுதியுள்ளார்.

“கண்டதைச் சொல்லுகிறேன் - உங்கள்

கதையைச் சொல்லுகிறேன் - இதைக்

காணவும் கண்டு நாணவும் உமக்குக்

காரணம் உண்டென்றால்

அவமானம் எனக்குண்டோ...?”

என்ற அவரது பாடல் வரிகள் இன்னும் நம் செவி களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

“ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதத் தொடங்கிய போது, வறுமை என்பது மக்களிடம் மிகப் பரவலாக இருந்தது. மக்களின் துன்பதுயரங்களோ அநேகம். கல்வியறிவு அற்றவர் களும், எழுத்தறிவு இல்லாதவர்களும் எண்ணில் அடங்காதவர்கள். எழுத்தாளர்களின் எண்ணிக் கையோ சொற்பம். அது வேறு இந்தியா...” என்று கூறும் ஜெயகாந்தன், “மகாத்மா காந்தியைப் பற்றி மட்டுமே நாம் இப்போது பேசுகிறோம், அன்று வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் பல மகாத் மாக்கள் இருந்தனர்”என்றார்.

கால மாறுதலுக்கு ஏற்ப அவர் எழுத்துகளும் மாறிக் கொண்டிருந்தன. அவர் பள்ளிக்கூடத்தில் படிக்கவில்லையே தவிர உலகமாகிய இந்தப் பெரிய பள்ளியில் நிறைய படித்திருந்தார், இறுதி வரை படித்துக் கொண்டும் இருந்தார்.

எழுத்துலகில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ‘அக்னிப் பிரவேசம்’என்கிற அவரது சிறுகதை நடுத்தர மக்களின் சிந்தனையைத் தூண்டி விட்டது. இப்படியும் ஒரு மறுபக்கம் இருக்கிறது என்பதைப் பேச வைத்தது. அதன் தொடர்ச்சியே ‘சில நேரங் களில் சில மனிதர்கள்’என்றும், ‘கங்கை எங்கே போகிறாள்?’ என்றும் புதினங்களாக வளர்ந்தன. வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றன.

இவரது படைப்புகள் பல்வேறு வகைப் பட்டவை. சிறுகதைகள், நாவல்கள், வாழ்க்கை வரலாறுகள், கட்டுரைகள் என எல்லாக் கோணங் களிலும் இலக்கியத்தை எடுத்துச் சென்றார். பத்திரிகைகள் அவர் படைப்புகளை வெளியிடப் போட்டி போட்டன. பதிப்பகங்களும் அவரது நூல்களை வெளியிட ஆர்வம் காட்டின. வாசகர் களும் அவற்றை வாங்கிப் படிப்பதற்காகக் காத்துக் கிடந்தனர்.

இவரோடு சமகால இலக்கியவாதியான கவிஞர் கண்ணதாசன் இவரை மதிப்பிடுவது பொருத்த மாக இருக்கிறது: “இலக்கியத் துறையில் அவர் கையாண்ட புது உத்திகளுக்கு ஒரு முன் உதாரணம் கிடையாது. இன்னொருவருடைய பாணி இவருக்கு இருக்கிறதென்று எவரையும் சொல்ல முடியாது. பிறமொழிக் கதாசிரியர்களில் கூட எவரையும் ஜெயகாந்தன் பின்பற்றியதாகத் தெரியவில்லை. அவரது நிலத்தில் தோன்றிய விளைச்சல்களுக்கு அவரே விதை; அவரே நீர்; அவரே உரம்...”

புரட்சிகரமான கருத்துகளைப் புதிய புதிய உத்திகளில் வழங்கினார். எதிர்ப்புகளைப் பற்றி எப்போதும் கவலைப்பட்டதில்லை. எதிர்நீச்சல் என்பது அவரது குணங்களில் ஒன்றாகி விட்டது.

பாரதியைப் பாடியதைப் போல ஞானச் செருக்கு இவரையும் வழி நடத்தியது. எவரையும் எடுத்தெறிந்து பேசும் போக்கு இவரை மற்றவர் களிடமிருந்து அந்நியப்படுத்தியது. ஆனால் அவரது எழுத்துகள் அனைவரையும் அணைத்துக் கொண்டு அழைத்துச் சென்றது.

“மக்களை விட்டு ஒதுங்கவும் கூடாது. கலக்கவும் கூடாது. எப்போதும் ஓர் அடி முன்னே செல்ல வேண்டும். அப்போதுதான் மக்களை இழுத்துச் செல்ல முடியும். அவர்கள் எதை வேக மாக விரும்பி ஏற்கிறார்களோ, அதை அவர்கள் அதே வேகத்தோடு வீசியும் எறிகிறார்கள்...” என்றார் அவர்.

இவர் இலக்கியவாதியாக மட்டும் இருக் காமல் அரசியல்வாதியாகவும் மாறினார். கம் யூனிஸ்ட் கட்சியை விட்டு விலகி, காங்கிரஸ் கட்சி யில் சேர்ந்து, காமராசரின் அன்புக்குப் பாத்திர மானார். காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைகளான நவசக்தி, ஜெயக்கொடி, ஜெயபேரிகை இவற்றின் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார்.

ஈ.வெ.கி.சம்பத், கண்ணதாசன் இவர்களோடு சேர்ந்து இவரும் காங்கிரஸ் மேடைகளில் முழங் கினார். திராவிட இயக்கங்களைச் சாடினார். பெரியார், அண்ணா முதலிய செல்வாக்குப் பெற்ற தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இலக்கிய வானில் வெற்றிபெற்ற இவர் அரசியல் களத்தில் படுதோல்வியையே சந்தித்தார். அதையும், ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’என்று இலக்கியமாக்கினார்.

இறுதிக் காலங்களில் அவர் எழுத்துக்கும், பேச்சுக்கும் முரண்பட்டவராக வாழ்ந்தார். அதையும் அவர் மறுக்கவில்லை.

“நான் முரண்பாடுகளின் மூட்டையாகிப் போனேன். இதைச் சொல்வதற்காக நான் வெட்கப் பட வேண்டாம். முரண்பாடுகள் இல்லாதவர்கள் பாக்கியவான்கள். எனது அறிவு எனக்குப் பகையாகியிருக்கிறது. ஏனெனில் அது எப்போதும் குறையுடையதாகவே இருக்கின்றது. இது எனக்கு அடிக்கடி புரிகிறது. லௌகீக வாழ்க்கையில் குறை களைத் தவிர வேறு எதையும் என்னால் காண முடியவில்லை. இந்தக் குறைகளின் மத்தியில் மிகுந்த குறைபாடும் உடையவராக வாழ்ந்து கொண்டிருக்கிற நான் இதன் ஊடாகவே பல நிறைவுகளைக் கண்டு கொண்டிருக்கிறேன்...” என்பது அவரது சுயவிமர்சனம்.

இன்றைய உலகில் படித்தவர்களை விடவும் படிக்காத மேதைகளே மிகப் பெரிய சாதனைக் குரியவர்களாக வாழ்ந்திருக்கின்றனர். ஆரம்பக் கல்வியைப் பாதியிலே விட்ட ஜெயகாந்தன் அந்தச் சாதனையாளர் வரிசையில் இடம் பெறுகிறார்.

மனிதர்களுக்கு மரணமுண்டு, இலக்கியவாதி களுக்கு மரணமில்லை. எனவே ஜெயகாந்தன் என்ற இலக்கியவாதி இறக்கவில்லை.