‘போலியைச் சுட்டெரிக்கும் புதுமைகளை, வாழ்க்கையை அலசிஅலசிப் பரிசீலிக்கும் ரசாயனங்களை, சமுதாயத்தின் புற்று நோய்களுக்கு ‘மின்சார சிகிச்சையளிக்கும்’ புத்தம் புது முறைகளை குரூர வசீகரங்களைப் படம்பிடித்துக் காட்டி, மனித உள்ளத்திலே எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது, தங்கிக் கிடக்கும் மனிதாபிமானத்தைத் தட்டியெழுப்பும் உணர்ச்சி மிக்க உயிரோவியங்களை, அந்த அபிமானத்துக்கு விரோதமாயிருந்த, இருந்து வருகிற, ‘மனித மிருகங்களின் மேல் வெறுப்பைக் கக்கி, உங்கள் நல்வாழ்வுக்கு வழிதேட முயலும் நவயுகக் கதைகளை இன்றுபோல் நீங்கள் என்றும் வரவேற்று வாழ்த்தித் தமிழை வளப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும். இதுவே என் எண்ணம். இதுவே என் இருபது வருட கால எழுத்து’ (விந்தன்:15,5,1956: விந்தன் கதைகள்:முன்னுரை)

இன்று மனித வாழ்வில் முக்கியமாக இடம் பெற்றிருப்பவை மூன்று. முதலாவது கடவுள்; இரண்டாவது மதம்; மூன்றாவது கலை. எல்லா வற்றுக்கும் காரணம் நான்தான்! என்று சொல்லாமல் சொல்லிக் கடவுள் மனிதனின் தன்னம்பிக்கையைக் கொன்றுகொண்டிருக்கிறார். இந்த உலகத்தில் அநுபவிக்கும் துன்பத்தைப் பற்றிக் கவலைப்படாதே; மறு உலகத்தில் இன்பம் உனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது’ என்று சொல்லி மனிதனை மதம், சாவை நோக்கி அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறது. கடைசி யாக உள்ள கலையாவது மனிதனை வாழ வைக்கிறதா என்றால் அதுவும் இல்லை! கடவுளையும் மதத்தையும் சிருஷ்டி செய்து, மனிதனின் ஆயுளைக் காலத்திற்கு முன்னால் கொள்ளையடிக்கும் பிக்பாக்கெட் முதலாளிகளின் கத்தரிக்கோலாகவும் அது மாறிவிட்டது!... ஆம் மாறத்தான் வேண்டும்; மனிதன் மனிதனாக வாழத்தான் வேண்டும். இதற்கு வேண்டிய தெல்லாம் என்ன?

‘ஒரே வார்த்தையில் சொல்லப் போனால் நம் உழைப்புக்கு ஏற்ற மதிப்பு’

அந்த மதிப்பைப் பெறுவதற்காகத்தான் இன்று கடவுளுடன் நாம் போராடுகிறோம்; மதத்துடன் நாம் போராடுகிறோம். இந்தக் கடுமையான போராட்டத்தில் நாம் வீழ்ந்தாலும் சரி, நம் சந்ததிகளாவது வாழ வேண்டும். மேற்படி குறிக் கோளுடன் எழுதப்படுபவை எதுவாயிருந்தாலும் அதுவே ‘மக்கள் இலக்கியம்’ (விந்தன்:சமுதாய விரோதி - சிறுகதைத் தொகுப்பு: முன்னுரை: ஜூலை1956)

கோவிந்தன் என்னும் விந்தன் (1916-1975) எவ் வகையான கருத்துநிலையோடு வாழ்ந்தார் என்பதை மேலே கண்ட அவரது இரு மேற்கோள்கள் நமக்குச் சொல்லும். இந்த மனிதரைப் புரிந்துகொள்ள இரண்டு அடிப்படைகளில் அணுகலாம். நமது வசதி கருதி உருவாக்கிக் கொண்டவை இவை. அவை,

-              சுமார் நூற்றிருபது சிறுகதைகள், ஏழு நாவல்கள் (ஒரு நாவல் முற்றுப் பெறவில்லை), விந்தன் குட்டிக் கதைகள், மகிழம்பூ என்னும் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளதும் ‘கல்கி’ இதழ்களில் இன்னும் தொகுக்கப்படாமலும் உள்ள சுமார் நூறு குட்டிக் கதைகள் ஆகியவற்றை உருவாக்கிய புனைகதை யாளன் என்னும் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வது.

-              தாம் எழுத்துலகில் நுழைந்த 1936 ஆம் ஆண்டு தொடக்கம், மறையும் வரை, தமது சமூகப் பிரக்ஞையைப் புனைகதைகளாக உருவாக்கிய தோடு, சமூக நிகழ்வுகள் குறித்த தெளிவு மற்றும் அக்கறையோடு பத்திரிகையாளனாகவும் செயல் பட்ட பாங்கு. அவ்வகையில் உருவாக்கப்பட்ட ஆக்கங்கள்.

மேலே குறித்த அடிப்படைகளில் புனைகதை யாளராக விந்தனைத் தமிழ்ச் சமூகம் ஓரளவு புரிந்து கொண்டு அங்கீகரித்திருப்பதாகக் கருத முடியும். ஆனால் அவரது உயிர்ப்பு நிலையாக அமைந்து சமூக அக்கறையைக் காட்டும் பிற ஆக்கங்களைத் தமிழ்ச் சமூகம் எவ்வகையில் புரிந்து கொண்டிருக்கிறது? என்ற உரையாடல் தேவைப்படுகிறது. அந்த வகையில் அமையும் விந்தனின் ஆக்கங்களை நமது புரிதலுக்காகக் கீழ்க்காணும் வகையில் தொகுத்துக் கொள்வோம். இவை பற்றியே இக்கட்டுரையில் உரையாடல் நிகழ்த்தலாம். (அவரது புனைகதைகள் குறித்த உரையாடலை வேறொரு சந்தர்ப்பத்தில் நிகழ்த்தலாம்)

-              ‘வேலைநிறுத்தம் ஏன்?’ என்னும் குறுநூல் 1946இல் எழுதி 1947இல் வெளிவந்தது. அக்குறுநூல் வழி வெளிப்படும் விந்தன் என்னும் மனிதனின் ஆளுமை.

-              1954இல் அவர் நடத்திய ‘மனிதன்’ பத்து இதழ்கள் வழி அறியப்படும் விந்தன்.

-              இராஜாஜி எழுதிய ‘பஜகோவிந்தம்’ என்னும் நூலுக்கு மறுப்பாக 1956இல் எழுதிய ‘பசி கோவிந்தம்’ என்னும் புடைநூல்

-              தினமணிக்கதிர் ஆசிரியக்குழுவில் (1967-1974) பணியாற்றிய காலங்களில் எழுதிய ‘மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்’ (1969), ‘ஓ மனிதா!’ (உருவகக் கதைகள்). இந்நூல் 1977இல் நூல் வடிவம் பெற்றது. எம்.கே.டி.பாகவதர் கதை (1970), நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள் (1972), (இக்காலத்தில் உரைநடையும் செய்யுளுமாக இணைந்த வடிவத்தில் ‘பாட்டிலே பாரதம்’ என்ற ஆக்கத்தையும் உருவாக்கினார்)

-              1973இல் விந்தன் உருவாக்கிய பெரியார் அறிவுச் சுவடி.

விந்தனின் எழுத்துலக வாழ்க்கையை, ‘கல்கியில் பணியாற்றிய காலம்’ (1942-1951), சுதந்திர எழுத்தாளராக இருந்து பத்திரிகை நடத்துதல் மற்றும் திரைப்படத் துறையில் செயல்பட்ட காலம் (1952-1966), தினமணிக் கதிர் இதழில் பணியாற்றிய காலம் (1967-1974) என்று பாகுபடுத்திக் கொள்ளமுடியும். இதில் முதல் கால கட்டத்தில்தான் அதிகமான சிறுகதைகளை எழுதினார். திரைப்படத் துறையில் செயல்பட்ட காலங்களில் நான்கு நாவல்களை எழுதினார். முதல் கட்டத்தில் இரண்டு நாவல்கள் எழுதினார். இறுதிக் காலச்சூழலில்தான், புனைகதை அல்லாத வேறுவடிவங்களில் பெரிதும் செயல்பட்டார். இந்தக் காலச்சூழலில் செயல்பட்ட விந்தனின் ஆளுமை முன் செயல்பட்ட பரிமாணங்களி லிருந்து வேறு தளத்தில் இருப்பதைக் காணமுடிகிறது. தமிழ்ச் சமூக இயங்குநிலைகளுக்கும் விந்தனின் ஆக்கங்களுக்கும் கால ஒழுங்கில் தொடர்ச்சியான உறவு இருப்பதைக் காணமுடிகிறது. கால நிகழ்வுகளோடு தன்னைக் கரைத்துக்கொண்ட நேர்மையான மனிதனாக விந்தனின் செயல்பாடுகள் உள்ளன. வாழ்க்கை முழுவதும் சமரசம் செய்துகொள்ளாத வாழ்க்கைப் போராட்டம் அவருக்கு வாய்த்திருக்கிறது. வெகுசன வெளியில் செயல்படுபவர்களில் இவ்விதம் இருந்த வர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்தப் பின் புலத்தில் விந்தனின் ஆளுமை என்பது தனித்துப் பேசவேண்டிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்று கருதமுடியும்.

‘என்னை எழுத்தாளன் என்று சொல்லிக் கொள் வதைவிடத் தொழிலாளி என்று சொல்லிக் கொள்வதில் நான் எப்பொழுதுமே பெருமை யடைபவன்... ஆனால் எந்தக் கட்சியையும் நான் சேர்ந்தவனல்லன் என்பதை இங்குத் தெளிவு படுத்த விரும்புகிறேன்; என்றாலும் எந்தக் கட்சி தொழிலாளிகளுடைய நலனுக்காகத் தன்னுடைய நேரத்தை அதிகமாகச் செலவிடுகிறதோ, எந்தத் தலைவர்கள், தொழிலாளர்களுடைய நலனுக்காகத் தங்கள் வாழ்நாட்களை அர்ப்பணம் செய்கிறார் களோ, அந்தக் கட்சியிடம் அந்தத் தலைவர் களிடம் என்றுமே எனக்கு அனுதாபம் உண்டு. சமீபத்தில் தமிழ்நாட்டில் (1945-46) எழுந்த வேலை நிறுத்தப் போராட்டங்களின் போது என் உள்ளத்தில் எழுந்த எண்ணங்களைத்தான் இந்தப் புத்தகத்தில் வெளியிட்டியிருக்கிறேன்’ (விந்தன் வேலைநிறுத்தம் ஏன்?: 1947)

காலனிய ஆட்சி, இரண்டாம் உலகப்போர் உருவா வதற்கான நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது. 1930களில் மிகப்பெரும் பின்னடைவு (great depression) பொருளாதாரத் தளத்தில் உருவானது. இந்தக் காலங்களில் 1920களில் உருவான இந்திய இடதுசாரி இயக்கத்தின் செல்வாக்கு, தென்னிந்தியப் பகுதிகளில் உருவானது. சென்னை நகரத்தை அடிப்படையாகக் கொண்ட இடதுசாரி இயக்கங்கள் உருவாயின. 1933 - 1937 காலங்களில் காங்கிரஸ் சோசலிஸ்டுக் கட்சி என்னும் பெயரில் இடதுசாரிகள் செயல்பட்டனர். 1937-இல் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கத்திற்கு வழியேற்பட்டது. 1939-இல் கம்யூனிஸ்டுகளைப் பிரித்தானிய அரசு நேரடியாகத் தாக்கியது. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. 1942-இல் இந்திய அளவில் உருவான விவசாயிகள் இயக்கம், தமிழகத்தில் கீழ்த்தஞ்சை மற்றும் அம்பாசமுத்திரம் பகுதிகளில் வலிமையாகக் கால் கொண்டது. பிரித்தானியர்களால் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகள், மில் வேலை செய்தவர்கள், போக்கு வரத்து நிறுவனங்களான டிராம்வே, ரயில்வே, கப்பல் ஆகியவற்றில் பணியாற்றியவர்கள், அரசு ஊழியர்கள் என்று பல தரப்பிலும் உள்ளவர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர்; பிரித்தானிய அரசு இரண்டாம் உலகப் போரினால் சீரழிந்த பொருளாதாரநிலை காலனிய இந்தியாவில் கறுப்புப்பணம், விலைவாசி ஏற்றம், கள்ளச் சந்தை, ஊழல் ஆகியவற்றுக்குக் காரணமாக அமைந்தது. கொடுமையான வறுமை ஏற்பட்டது. முப்பத்தைந்து இலட்சம் வங்காள மக்கள் இறந்த வங்கப் பஞ்சம் உருவானது. மேற்குறித்த நிகழ்வுகள் அனைத்தும் 1935-1946 காலங்களில்தான் நிகழ்ந்தேறின.

சமூகத்தின் இந்த நிகழ்வுகளை, அச்சுத் தொழிலாளி யாக வாழ்க்கையைத் தொடங்கிய விந்தன் எவ்வகையில் உள்வாங்கினார் என்பதன் பதிவாக மேலே கண்ட செய்திகள் அமைகின்றன. அன்றைய காலச்சூழலில் ‘ஜனசக்தி’ போன்ற பத்திரிகைகளில் மட்டும்தான் மேற்குறித்த சூழல் விரிவாக விவாதிக்கப்பட்டது. வேறு எவரும் பிரித்தானியரின் கொடுமையைப் பொருளா தாரக் கண்ணோட்டத்தில் பதிவு செய்யவில்லை. இந்திய விடுதலைப் போராட்டம் என்பது குட்டி முதலாளிகள் மற்றும் பெரும் முதலாளிகளால் முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் சாதாரண மக்களின் வாழ்க்கை குறித்து அக்கறைப்படவில்லை. கம்யூனிஸ்டுக் கட்சியைச் சாராத விந்தன், கம்யூனிஸ்டுகளைப் போல, சமூக நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறார். கல்கியில் பணியாற்றும் ஒரு தொழிலாளி (பின்னர் உதவி ஆசிரியர்), மேற்குறித்த வகையில் பதிவு செய்திருப்பது, விந்தன் என்ற தனி மனிதனின் ஆளுமையாகப் புரிந்துகொள்ள வேண்டி யுள்ளது. குட்டி முதலாளித்துவக் கருத்துநிலை சார்ந்த சூழலில் தாம் இருந்தாலும் அதிலிருந்து வேறுபட்டு, தான் ஓரு தொழிலாளி என்ற உணர்வுடன் வாழ்ந்த வாழ்க்கையைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

‘அனுதாபத்துக்குரிய எத்தனையோ விஷயங்களில் இன்று கலையும் ஒன்றாகியிருக்கிறது; உண்மையைப் பிரதிபலிப்பதற்குப் பதிலாக அது பொய்மையைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பொய்ம்மைக்கு - அந்தப் பொய்ம்மையின் உருவமான கலாதேவிக்கு இந்த மலரைக் காணிக்கையாகச் செலுத்த நாங்கள் விரும்பவில்லை; அப்படி ஒரு தேவி இருந்தால் அந்தத் தேவியும் அதை நிச்சயமாக விரும்பமாட்டாள். ஒருவரை அடைய வேண்டிய கௌரவம், இன்னொருவரை அடைவது மனித இயல்பாக இருக்கலாம்; தேவ இயல்பாக இருக்க முடியாது. பின், வேறு யாருக்கு இந்தக் காணிக்கை?

எவன் வானத்தையும் பூமியையும் பயன்படுத்தி தான் வாழ்வதோடு பிறரையும் வாழ வைக் கிறானோ, அவனுக்கு... எவனுக்கு அந்த உலக இன்பத்தைக் காட்டிவிட்டு, இந்த உலக இன்பத்தை நாம் அனுபவித்துக் கொண்டிருக் கிறாமோ, அவனுக்கு... எவன் உழைப்பையே மூலதனமாகக் கருதி ஊரை ஏய்த்துப் பிழைப்பதை அடியோடு வெறுக்கிறானோ அவனுக்கு.... எவன் பாடுபடுவதையே தன் வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு, பாவத்தைப் பற்றி நினைக்கக் கூட நேரம் இல்லாமலிருக்கிறானோ அவனுக்கு... (மனிதன் இதழ்: காணிக்கை: பொங்கல் மலர்: 1955 சனவரி)

பிரித்தானியர் அதிகாரத்திலிருந்து, காங்கிரஸ் கட்சி அதிகாரத்துக்குக் காலனிய இந்தியா மாறிய சூழலில் பல்வேறு புதிய புத்தெழுச்சிகள் உருப்பெற்றன. சோவியத்நாடு, மக்கள் சீனம் ஆகியவற்றிலிருந்து நூல்கள் வரவழைக்கப்பட்டு, தமிழில் மொழியாக்கம் செய்யப் பட்டது. 1950இல் தொ.மு.சி.ரகுநாதன் மார்க்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலை மொழியாக்கம் செய்தார். இதற்குமுன் இந்நாவல் ‘அன்னை’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தது. ‘ஜனசக்தி’, ‘முன்னணி’, ‘ஜனநாயகம்’ ஆகிய இதழ்களைக் கம்யூனிஸ்ட் கட்சி இக்காலத்தில் நடத்தியது. கே.சி.எஸ். அருணாசலம் ‘விடிவெள்ளி’ என்ற இதழையும் தொ.மு.சி.ரகுநாதன் ‘சாந்தி’ என்ற இதழையும் இக்காலங்களில் (1945-1955) நடத்தினர். இஸ்மத் பாஷா அவர்களின் ‘சமரன்’ (1954) இதழும் வெளிவந்தது. திராவிட இயக்கச் சார்பில் மிகுதியான இதழ்கள் வெளிவந்த காலம் இது. இந்தச் சூழலில்தான் விந்தன் ‘மனிதன்’(1954) இதழைத் தொடங்கினார். கார்க்கி முன்னெடுத்த ‘மனிதன்’ என்ற கருத்து நிலையை அடிப்படையாகக் கொண்டுதான் இதழுக்கு மனிதன் என்ற பெயரைச் சூட்டுவதாகக் குறிப்பிடுகிறார். (மனிதன்:15.8.1954:முதல் இதழ்) கார்க்கி மீது விந்தன் கொண்டிருக்கும் ஈடுபாடு வியப்பளிப்பதாக உள்ளது. எந்த இடதுசாரி அமைப்புகளோடும் தொடர்பு இல்லாதவர்; கல்கி என்ற குட்டி முதலாளித்துவ இதழில் பணியாற்றியவர்; இருந்தாலும் கார்க்கி மீது அவர்தம் ஈடுபாட்டைப் பகிரங்கமாகப் பதிவு செய்கிறார். 15.1.1955 மனிதன் இதழின் அட்டைப்படத்தில், அரசாங்க அடிநிலை ஊழியர், நெய்தல் தொழிலாளி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர், உழவன் ஆகியோரது படங்களைப் போட்டு, அவர்களை ‘இந்நாட்டு மன்னர்கள்’ என்ற தலைப்பில் குறித்துள்ளார். ‘இதோ ஒரு சுயமரியாதைக்காரர்’ என்னும் தொடர் மனிதனில் வந்தது. சமூகத்தின் அடிமட்டத்தில் வாழும் மனிதர்களையே இத்தொடரில் அறிமுகப்படுத்தினார்.

‘தெருவிளக்கு’ என்ற தொடர்கதை மனிதன் இதழில் இடம்பெற்றது. திரைப்பட உலகின் கொடுமை களைக் கடுமையாக விமர்சனம் செய்வதாக அப்பகுதி அமைந்தது. தமிழொளி, ஜெயகாந்தன், சுந்தரராமசாமி ஆகிய பிற படைப்பாளர்கள் இவ்விதழில் எழுதினர். தனக்குச் சமூக அங்கீகாரம் கொடுத்து, வாழ்க்கைக்கு உதவிய கல்கியைப் பெரிதும் பாராட்டும் செய்திகளும் இவ்விதழ்களில் இடம்பெற்றன. அன்றைய தமிழ்ச் சூழலில் இடதுசாரி அமைப்புகளைச் சேராமல், இடது சாரி மனநிலையுடன் வாழ்ந்தவர்கள் பலர் இருந்தனர். அவர்களில் விந்தன் இடம் தனித்தது. இதனை அவரது 1946இல் எழுதிய வேலைநிறுத்தம் ஏன்? என்ற குறு நூலும் மனிதன் இதழும் உறுதிப்படுத்துவதைக் காண முடிகிறது. இவ்வகையான ஆளுமைகளைத் தமிழ்ச் சமூக வரலாறு உரிய வகையில் புரிந்து அங்கீகாரம் அளிக்க வில்லை என்றே கருதத் தோன்றுகிறது. அமைப்புச் சார்பில்லா இடதுசாரி மனநிலையினரை, இடதுசாரி அமைப்புகளில் இருந்தவர்கள், தம்முள் ஒருவராய் அங்கீகரித்துக் கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும். அது தமிழ்ச்சூழலில் நிகழவில்லை. கட்சிக்காக உழைத்து, கட்சியைவிட்டு வெளியே வந்த தமிழொளியைக் கூட இடதுசாரி அமைப்புகள் அந்தச் சூழலில் அங்கீகரிக்கவில்லை. அப்படியானால் விந்தன் போன்றவர்களை எப்படி அங்கீகரிப்பார்கள்? விந்தன் போன்ற ஆளுமைகளை இடதுசாரிகள் கொண்டாடுவது அவசியம். அப்படிச் செய்யாவிட்டால் இழப்பு இடதுசாரிகளுக்குத் தான்.

திரைப்பட உலகத்தில் செயல்படச் சென்ற விந்தன் அதற்காகவே கல்கியிலிருந்து விலகினார். அந்த உலகம் அவருக்கு உவப்பாக இல்லை. அந்த உலகத்திலும் தன்னுடைய அடையாளத்தைக் காட்ட முயன்றார். அவரது திரைப்பாடல் ஒன்று பின்வரும் வகையில் அமைகிறது.

‘ஒண்ணும் புரியவில்லை தம்பி - எனக்கு/ ஒண்ணும் புரியவில்லை தம்பி/ கண்ணு ரெண்டும் சுத்துது/ காதை அடைக்குது/ கஞ்சி கஞ்சி என்று வயிறு/ கெஞ்சிக் கெஞ்சிக் கேட்குது./

கடவுளை நம்பினேன் கற்பூரம் செலவு/ கல்வியை நம்பினேன் காசெல்லாம் செலவு/ மனிதனுக்கு மனிதன் மனமிரங்கவில்லை/ மானத்தோடு வாழ மார்க்கம் ஏனோ இல்லை/ சாலையிலே தொழிலாளி சம்சாரம் நடக்குது/ ஆலையிலே அவனாவி புகையாகப் போகுது (1953:’அன்பு’ திரைப்படம்)

திரைப்படத்துறையில் அவருக்கு ஏற்பட்ட நிறைவின்மையைப் பத்திரிகை நடத்துவதின் மூலம் போக்கிவிடலாம் என்று நம்பினார். இவ்வகையில், 1950களில் தமிழ்ச்சமூக நடைமுறையின் நேரடி விளைவாக விந்தன் போன்றோரின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடிகிறது. பத்திரிகைத் துறையில் தொடர்ந்து செயல்பட்டிருக்க வாய்ப்பு இல்லாமல் போனது தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்ட இழப்பாகவே கருதவேண்டும். தாம் பத்திரிகைத்துறையில் தொடர முடியாமைக்குக் காரணம், பத்திரிகைகளை விற்பனை செய்யும் முகவர்களின் பித்தலாட்டம் மற்றும் ஏமாற்றுதல் ஆகியவைகளே காரணமாக விந்தன் பதிவு செய்கிறார்.

1950களில் தமிழ்ச்சமூகத்தில் பல்வேறு புதிய விளைவுகள் உருவாயின. இடதுசாரிகள், குறிப்பாக, கம்யூனிஸ்டுகள் மக்களின் செல்வாக்குப் பெற்றவர்களாக உருவாயினர். தென்னிந்தியப் பகுதிகளில் பெரு வாரியான இடங்களில் தேர்தலில் இடதுசாரிகள் வெற்றியும் பெற்றனர். தமிழகம்/ ஆந்திரம்/ கேரளப் பகுதிகளில் கம்யூனிஸ்டுகள் ஆட்சி அமைக்கும் சூழல் உருவானது. விவசாயிகள் இயக்கம், தொழிலாளர் இயக்கம் ஆகியவை வலுவான அமைப்புகளாக உருப்பெற்றன. சோவியத்நாடு, மக்கள் சீனம் ஆகிய கம்யூனிச நாடுகளிலிருந்து தொடர்புகள் கிடைத்தன. இந்தச் சூழலில் பெரியார், தமது சுயமரியாதை இயக்கம் சார்ந்த கருத்துப்பரவலைச் செய்துகொண்டிருந்தார். ‘இராமன் சிலையை செருப்பால் அடிக்கும் வெகுசன மத எதிர்ப்புப் போராட்டத்தை இக்காலத்தில் நிகழ்த்திக் கொண்டிருந்தார்’. தமிழ்ச்சமூகத்தின் இவ்வகையான வளர்ச்சிப் போக்கு இராசகோபாலாச்சாரி என்னும் இராஜாஜிக்கு உவப்பாக இல்லை. அவரது செல் வாக்கைப் பயன்படுத்தி ‘குலக்கல்வித் திட்டம்’ என்னும் சாதியத்தை நியாயப்படுத்தும் வேலையைச் செய்யத் தொடங்கினார். சனாதன, வைதீக மரபுகள் அழிக்கப் படுவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை; காம ராஜரையும் இராமசாமி படையாச்சியையும் பயன்படுத்தி மேற்குறித்த வகையில் உருவாகும் தமிழ்ச்சூழலுக்கு மாற்றான ஒன்றைத் திரைமறைவில் செய்து வெற்றி பெற்றார். இடதுசாரிகள் படிப்படியாகச் செல்வாக்கு இழந்தனர். இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையில் உருவான கேரள கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியும் நேருவால் பின்னர் கலைக்கப்பட்டது. தமிழ்ச்சூழல் திராவிட கருத்துநிலை சார்ந்த வளர்ச்சியில் உருப்பெறத் தொடங்கியது.

மேற்குறித்த சூழலில்தான் இராஜாஜி ‘பஜகோவிந்தம்’ (1956) என்ற நூலை எழுதினார். இந்நூல் ‘மோக முத்கரம்’ என்ற பெயரில் சங்கராச்சாரி எழுதிய நூலின் வழிநூல். அந்நூலின் கருத்துகளை உள்வாங்கி 31 பாடல்களாக இராஜாஜி எழுதினார். இராஜாஜியின் இந்நூலுக்குப் புடைநூலாக ‘பசிகோவிந்தம்’ (1956) என்ற நூலை விந்தன் எழுதினார்.

‘பஜகோவிந்தம் பஜகோவிந்தம் பாடு’ என்று வரும் இராஜாஜி வரிகளுக்கு மாற்றாக ‘பசிகோவிந்தம் பசிகோவிந்தம் பாடு’ என்று விந்தன் எழுதினார். இவரும் 31 பாடல்களை எழுதி அதற்கு விளக்கவுரையும் எழுதினார். இவ்விரு நூல்களையும், பெண்ணாடம் புதுமைப்பிரசுரம் திரு இராமசாமி என்பவர் வெளி யிட்டார். இராஜாஜி நூலில் அட்டையில் கிருஷ்ணன் குழல் ஊதி நின்றுகொண்டிருப்பான்; விந்தன் நூலின் அட்டையில், பிச்சையோட்டை ஏந்தியவாறு ஒட்டிய வயிறோடு ஒரு மனிதர் நின்றுகொண்டிருப்பார். இரண்டு அட்டைகளும் ஒரே மாதிரியான வடிவமைப்பில் வெளி யிடப்பட்டன. இவ்வகையில் இராஜாஜியின் சனாதன, வைதீகத்திற்கு எதிராக விந்தனின் நூல் அமைந்தது. புதுமைப் பிரசுரன் வெளியிட்ட இந்நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிட ஸ்டார் பிரசுரத்திற்கு விந்தன் கொடுத்திருந்தார். அதில் முன்னுரையாகப் பின்வரும் பகுதியை விந்தன் கையால் எழுதியுள்ளார்.

‘இப்புத்தகத்தில் ஆசான் உரைத்தவை பாடல்கள்; அடியானுடையது வியாக்கியானங்கள். உண்மை யான ஒரு சங்கராச்சாரி (ஆதிசங்கரர்) இதைத்தான் பாடியிருக்க வேண்டும். உண்மையான அடியான் (இராஜாஜி) இதைத்தான் வியாக்கியானம் பண்ணியிருப்பான். மற்றதெல்லாம் ஹம்பக் - பித்தலாட்டம் - ஏமாளிகளை ஏய்த்தல் - தூங்குகிறவன் தொடையில் கயிறு திரித்தல் - இவ்வளவும் தானும் தன்னைச் சார்ந்த கூட்டமும் சுகமாய் வாழ - உழைக்காது உண்டு கொழுக்க’ (வீ.அரசு: விந்தன் சிறுகதைகள் - ஒரு திறனாய்வு: எம்.பில். ஆய்வேடு: பின்னிணைப்பு:39:1979)

மேற்குறித்த இரண்டாம் பதிப்பு ஸ்டார் பிரசுரத்தின் மூலமாக வெளியாகவில்லை. விந்தனின் வைதீக எதிர்ப்பு மரபை இதன்மூலம் அறிய முடிகிறது. பிற்காலங்களில் பெரியார் மீது ஈடுபாடு கொண்டதையும் விளங்கிக் கொள்ளமுடிகிறது. இராஜாஜியை கருத்து மோதலில் நேரடியாக எதிர்கொண்ட விந்தனின் ஆளுமை விதந்து பேசக்கூடிய ஒன்று. சமூகத்தில் செல்வாக்குள்ள மனிதர்களுக்கு எதிராகக் கருத்துப்போர் நடத்துவது ஓர் எழுத்தாளரால் நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பதைக் காண்கிறோம். இதனை அன்றைய சமூகம் இயல்பாக எடுத்துக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. இன்றைய சூழலில் இப்படியான செயல்பாடுகளைக் கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியுமா? என்று சந்தேகம்.

‘தினமணிக்கதிரில்’ (1967-1974) விந்தன் பணியாற்றிய காலங்களில் செய்த ஆக்கங்களைப் புரிதலுக்காகப் பின்வரும் வகையில் தொகுத்துக் கொள்ளலாம்.

-              சமூக அவலங்களை எள்ளல் மற்றும் உருவகக் கதை வடிவில் விமர்சனத்துக்கு உள்ளாக்கும் மரபு. பத்திரிகைத் துறையில் இவ்வகை மரபுகள், சிறந்த பத்திரிகையாளர்களால் நிகழ்த்தப்படுவது இயல்பு. உண்மை நிகழ்வுகளுக்குக் கொடுக்கப் படும் பத்திரிகைத் துறைசார்ந்த வடிவமாக இதனைக் கருதலாம். இவ்வகையில் செயல்பட்ட விந்தனின் செயல்பாடுகள்.

-              சமூகத்தில் பிரபலமாக இருக்கும் மனிதர்களை உரையாடல் வடிவத்தில் அறிமுகப்படுத்தும் தொடர்கள், முன்பு பத்திரிகைகளில் மிகுதியாக இடம் பெற்றிருப்பதைக் காண்கிறோம். பத்தொன் பதாம் நூற்றாண்டு பத்திரிகை உலகில், கட்டுரைகள் எழுதுவதையே ‘கடிதங்கள்’ என்று குறிப்பிட்டு வெளியிட்டு இருப்பதைக் காண்கிறோம். ‘தத்துவ விவேசினி’ (1882-1888) இதழில் இம்முறை பின்பற்றப்பட்டுள்ளது. உரையாடல் வடிவத்தில் விந்தன் தினமணிக் கதிரில் எழுதிய இரு தொடர்கள் குறித்த பதிவை இங்குச் செய்ய வேண்டியது அவசியம்.

தினமணிக்கதிரில் ‘மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்’ என்ற பெயரில் வெளிவந்தது விந்தனின் தொடர். இது 1969இல் நூல்வடிவம் பெற்றது. விக்கிர மாதித்தன் கதையின் அமைப்பை அப்படியே தழுவி, நடைமுறை வாழ்க்கையை எள்ளி நகையாடும் எள்ளல் பாணி இலக்கிய வெளிப்பாடாக இது அமைந்துள்ளது. திரைப்பட நடிகர்கள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் என முப்பத்திரண்டு பேர் குறித்த முப்பத்திரண்டு கதைகள் அவை. இதைப் போலவே ‘ஓ மனிதா!’ என்ற தொடரைத் தினமணிக்கதிரில் எழுதினார். அவை 1977இல் நூலாக வெளிவந்தபோது, வெளியீட்டாளர் எழுதியுள்ள குறிப்பு பின்வருமாறு அமைகிறது.

‘விலங்குகளையும் பறவைகளையும் வைத்துக் கதையில் நீதி புகுத்துவது பஞ்சதந்திரக் கதை களிலும், கீதோபதேசக் கதைகளிலும், ஈசாப் கதைகளிலும் உண்டு. ஆனால், அந்த நீதிக்கதை களில் காணாத குத்தல், கிண்டல் ஆகியவை நீறுபூத்த நெருப்பாக இல்லாமல் வீறு கொண் டெழுந்த அக்கினிப் பிழம்பாக விளங்குவதே ‘ஓ மனிதா!’ கட்டுரைக்கதைகள். இல்லை இவை கதைக்கட்டுரைகள். (பூம்புகார் பிரசுரம், 1977. முன்னுரை)

மேற்குறித்த இரு ஆக்கங்களிலும் விந்தன் மிக விரிவான சமூக விமர்சனங்களைச் செய்துள்ளார். இவ்வகையான ஆக்கங்களைச் செய்தவர்கள் தமிழில் மிக மிகக் குறைவு என்று கூறலாம். புனைகதைப் படைப் பாளி பத்திரிகைத் துறையில் செயல்படும்போது இவ் வகையான ஆக்கங்கள் உருப்பெறுவது இயல்பு. இவ் வகையில் தமிழ்ப்பத்திரிகைத்துறை மரபை வலுப் படுத்தியவராக விந்தனைக் கருத இயலும். ‘ஓ மனிதா!’ கதைக்கட்டுரைகளில் பறவைகள் ஒன்பதும் விலங்குகள் எட்டும் நம்மைப் பார்த்துப் பேசுவதாக அமைத்துள்ளார் விந்தன். அதில் ஒருபகுதி பின்வருமாறு:

‘மனம் ஒரு குரங்கு’ என்று சொல்லிக் கொள்வ தோடு மனிதர்களான நீங்கள் நிற்பதில்லை; ஆதியில் என்னிலிருந்து வந்ததாகவே நீங்கள் சொல்லிக் கொள்கிறீர்கள். அதையும் சாதாரண மாகச் சொல்லிக் கொள்ளவில்லை; ஆராய்ச்சி பூர்வமாகச் சொல்லிக் கொள்கிறீர்கள். அதற் கென்றே ‘டார்வின் சித்தாந்தம்’ என்று ஒரு தனிச் சித்தாந்தத்தையே உருவாக்கி வைத்துக் கொண் டிருக்கிறீர்கள். இன்னும் சொல்லப்போனால் அதை ஒரு பெருமையாகக் கூட நீங்கள் கருதிக் கொண்டிருக்கிறீர்கள்! நாங்கள் அந்த அளவுக்கு எங்களுடைய பெருமையைக் குறைத்துக் கொள்ளவில்லை. காரணம், உங்களுக்கு மட்டுமே இருப்பதாக நீங்கள் சொல்லிக் கொள்ளும் ‘பகுத்தறிவு’ எங்களுக்கு இல்லாமல் இருப்பது தானோ என்னவோ? ராம - ராவண யுத்தத்தில் ஈடுபட்டதன் காரணமாக உங்களில் சிலருக்கு நாங்கள் வணக்கத்துக்குரிய ஜீவன்களாக இருந்து வருகிறோம். ஆயினும் என்ன, கடவுளரைக் குறிக்கும் விக்கிரகங்களை வேண்டுமானால் நீங்கள் நைவேத்யம் என்ற பேரால் பழம் - பட்சணம் வைத்து வணங்குவீர்கள் - அவற்றை எடுத்து அவை தின்று தின்றுவிடாது என்ற தைரியத்தில்! எங்களை வணங்கும் போதோ? - ராம ராமா! என்று கன்னத்தை வலிக்காமல் தொட்டுக் கொள்வதோடு சரி! இதனால் என்ன நடக்கிறது? - எங்களுக்கு வேண்டியதை நாங்கள் உங்களிட மிருந்து தட்டிப்பறித்தே தின்ன வேண்டியிருக் கிறது. நாங்கள் மட்டும் என்ன, நீங்களும் ஒருவரை ஒருவர் நாசூக்காக, நாகரிகமாகத் தட்டிப் பறித்தே தின்றுகொண்டிருக்கிறீர்கள்! இது உங்கள் பிறவிக் குணம். நீங்களாக யாருக்கும் எதுவும் கொடுக்கமாட்டீர்கள். அப்படியே கொடுத் தாலும் ஏதாவது ஒரு லாப நோக்கோடுதான் கொடுப்பீர்கள். நல்ல வேலையாகக் கடவுள் உங்கள் கண்ணில் படுவதில்லை. பட்டால் அவருக்கு எதிர்த்தாற் போலவே யாராவது ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு காசை எடுத்துத் தாராளமாகத் தருமம் செய்துவிட்டு, ‘நான்தான் தருமம் செய்து விட்டேனே, எங்கே எனக்கு மோட்ச சாம்ராஜ்யம்? கொண்டா!’ என்று கூசாமல் கேட்டாலும் கேட்பீர்கள்! (ஓ மனிதா: பூம்புகார் பிரசுரம்: 27,28: 1977)

மேற்குறித்த ஆக்கங்களில் விந்தன் செய்துள்ள ஆக்க இலக்கிய வடிவங்களை, மதிநலப்பேச்சு (wit) இடித்துக் கூறல் (satire),  இகழ்ச்சிக் குறிப்பு (sarcasm) வினையப்பேச்சு (lampooning) என்று ஆங்கில இலக்கிய மரபில் கூறுவர். விந்தன் செய்துள்ள இவ்வகையான சமூக விமர்சனங்களை எள்ளல் மற்றும் அங்கதம் என்று நாம் புரிந்து கொள்ளலாம். இவ்வகையான மரபை அவர் எழுதியுள்ள குழந்தைகளுக்கான குட்டிக்கதைகளிலும் காணமுடியும். விந்தனின் காக்கா - வடை கதையில், நரி, காக்கையைப் பாடக் கேட்கும் போது, காக்கை, வடையை வாயிலிருந்து பத்திரமாகத் தம் காலில் இடுக்கிக்கொண்டு பாடும். காக்கை நரியை ஏமாற்றும். நரி காக்கையை ஏமாற்றுவதை விந்தன் புரட்டிச் செய்திருப்பார். இவ்வகை அரிய ஆக்கங்களைத் தமிழில் உருவாக்கியவர் விந்தன் என்னும் புரிதல் தமிழ்ச் சமூகத்தில் உருப்பெற்றிருப்பதாகக் கூறமுடியாது.

1944களில் ஆயிரம் நாட்கள் ஓடிய திரைப்படம் ‘ஹரிதாஸ்’. இதில் நடித்தவர் எம்.கே.தியாகராய பாகவதர். இவ்வளவு நாட்கள் எந்தத் திரைப்படமும் ஓடியிருக்க முடியாது. அந்த வகையில் 1940களில் தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். எம்.கே.டி. பாகவதர். அவரது வாழ்க்கை வரலாற்றை உரையாடல் பாங்கில் விந்தன் பதிவு செய்திருக்கிறார். வாழ்க்கை வரலாற்றை, கதைபோல உரியவர்கள் பேசுவதாக அமையும் இவ்வடிவம் விந்தனின் சிறந்த ஆக்கங்களில் ஒன்றாக அமைகிறது. திரு.சி.என். அண்ணாதுரை அவர்களும் பாகவதர் அவர்களும் காலப்போக்கில் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். பாகவதரை வைத்து, படம் ஒன்று உருவாக்க சி.என்.ஏ. முடிவு செய்தார். அவருக்காக ஒரு கதையை எழுதினார். பாகவதரிடம் அவர் நடிக்கக் கேட்டபோது அவரது பதிலாகக் கீழ்வரும் பகுதி அமைகிறது.

‘தெரிந்தோ தெரியாமலோ, நடிக்கும் படங்களில் மட்டுமல்ல; வாழ்க்கையிலும்நான் தெய்வபக்தி உள்ளவனாக இருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் கதாநாயகனுக்கோ அந்தப் பக்தி இல்லை. அவனை மையமாக வைத்து எழுதப் பட்டிருக்கும் கதையில் நான் எப்படி நடிப்பேன்? நடிப்புக்காகத் தெய்வ நிந்தனை செய்யக்கூட என்மனம் துணியவில்லையே! உங்கள் கொள்கை அதுவானால், அதில் நீங்கள் உறுதியோடு இருப்பது உண்மையானால், அதற்கு நான் தலை வணங்குகிறேன்! என்றார் அண்ணாதுரை, தமக்கே உரிய பெருந்தன்மையுடன். கொள்கை எதுவாயிருந்தாலும் பிறருடைய விருப்பத்துக்கு விரோதமாக அவற்றைத் திணிக்க விரும்பாத உங்கள் பெருங்குணம் என்னை வெகுவாகக் கவரு கிறது என்று அவரை மனமுவந்து பாராட்டினார் பாகவதர். நீங்கள் மட்டும் அதற்குச் சளைத்தவரா, என்ன? பக்திப்பாடல்கள் என்னுடைய கொள் கைக்கு உடன்பாடு இல்லை என்பதற்காக நீங்கள் வேதாந்தப் பாடல்கள் பாடி என்னை மகிழ்விக்க வில்லையா?’ என்றார் அண்ணாதுரை. அதற்காகப் பக்திக்கதை எழுதி, அதில் நீங்கள் என்னை நடிக்கச் சொல்லமாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன்! என்றார் பாகவதர் சிரித்துக்கொண்டே. அது நடக்காத காரியம்; நானும் கொள்கைப் பிடிப்பில் உங்களுக்குப் பின் வாங்கியவனல்ல’ என்று அண்ணாதுரை சிரித்துக்கொண்டே எழுந்து நடந்தார். அது என்ன கதை? என்று தெரிந்து கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களல்லவா? அதுவே சொர்க்க வாசல். பாகவதருக்குப் பதிலாக அதில் நடித்தவர் யார்? அவரே திரு.கே.ஆர்.ராமசாமி (விந்தன்: எம்.கே.டி.பாகவதர் கதை: 215,216: 1983)

இவ்வகையில் பிரபலமானவர்களை அவர்களுடைய பன்முகப் பரிமாணநோக்கில் விந்தன் வெளிப்படுத்தி யிருப்பதைக் காண்கிறோம். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, மிகச் சிறந்த கர்நாடக இசைப்பாடகராக இருந் தவர் எம்.கே.டி.பாகவதர். தமிழகக் கலை வரலாற்றில் கர்நாடக இசை வித்தகர்களாக இசை வேளாளர்கள் என்னும் கால மரபைச் சேர்ந்தவர்கள் தொடக்க காலத்தில் இருந்தனர். அந்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி ஆதிக்க சாதியினர்கள் அதனைக் கையில் எடுத்துக் கொண்டனர். அந்த மரபில் ஆதிக்கசாதியினருக்குச் சமமாக அதற்கும் மேலான தகுதியுடையவர் எம்.கே.டி. பாகவதர் என்னும் கர்நாடக இசைக்கலைஞர் என்பதைச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் அரசியலை விந்தன் சிறப்பாகச் செய்துள்ளார். யாரை? எதற்காக? எப்படி அறிமுகப்படுத்த வேண்டும் என்னும் புரிதல் விந்தனுக்கு இருந்தது. இவ்வகையான புரிதல் ஊடகத்துறையில் மிகவும் அவசியம்.

தமிழ் அரங்கவரலாற்றில், எம்.ஆர்.இராதா அளவிற்குக் கலகக்காரர் என்று இன்னொருவரைக் கூறமுடியாது. தமிழ் நாடகத்திலும் தமிழ்த் திரைப் படத்திலும் அவரது இடம் தனித்தது. பெரியார் கருத்துக்களின் பிரச்சாரகராக அவர் இருந்தார். பெரியார் செய்துவந்த பரப்புரைக்கு இணையாகக் கூட எம்.ஆர். இராதா அவர்களின் செயல்பாட்டைக் கூறலாம். பகுத்தறிவாளர் இராதாவை, தமிழ்ச்சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் பணியை விந்தன் சிறப்பாக நடைமுறைப்படுத்தினார். எம்.ஜி.ஆர். துப்பாக்கிச் சூடு நடந்து சிறையில் இருந்து எம்.ஆர்.இராதா வெளி வந்தவுடன் அவரோடு உரையாடல் நடத்தி பத்திரி கையில் வெளியிட்டார். அந்நூல், இராதா என்ற மனிதரின் பல்பரிமாணங்களை வெளிப்படுத்துவதாக உள்ளது. இராதா அவர்களின் கருத்து வெளிப்பாட்டைப் புரிந்துகொள்ள கீழ்க்காணும் பகுதிகள் உதவும்.

‘ ‘சங்கரதாஸ் சுவாமிகள்...?’ வருவார்; இருப்பார். குடித்துவிட்டு ஆடினால், இது நமக்குப் பிடிக்காது; நீ போய்விட்டு வா! என்று அய்யர் அவரை வெளியே அனுப்பிவிடுவார். ‘அவரை இன்று சிலர் நாடக உலகத் தந்தை என்று சொல்கிறார்களே?’ அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அவர் நல்ல நாடகாசிரியர்; பாடலாசிரியர். எழுத ஆரம்பித்தால் தங்குதடை யில்லாமல் எழுதுவார்... அதெல்லாம் சரி. ஆனா, இப்போதே இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிட்ட புராண இதிகாச நாடகங்களுக்கு வேண்டுமானால் அவர் தந்தையாயிருக்கலாமே தவிர, நாடக உலகத்துக்கு ஒரு நாளும் தந்தையா யிருக்க முடியாது. அப்படி யாராவது இருந்தால் அவர் ஜகந்நாதய்யராகத்தான் இருக்கமுடியும். ஏன்னா இன்னிக்கு இருக்கிற அத்தனை கலைஞர் களும் அவருடைய வழிவழியா வந்த கலைஞர் களே. இதை யாராலும் மறுக்க முடியாது.’ (நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்:22:1995)

சங்கரதாஸ் சுவாமிகள் குறித்த எம்.ஆர்.இராதா அவர்களின் இந்தப் பதிவு சிந்திக்க வைக்கிறது. அதைப் போல, பிரகாசம் என்ற தமிழ்நாட்டு முதலமைச்சர், கம்யூனிஸ்டுகள் மீது நடத்திய அடக்குமுறையை எம்.ஆர்.இராதா பின்வரும் வகையில் பதிவு செய் துள்ளார்.

பார்த்தசாரதியும் என்.வி.என்.னும் இன்னும் சிலரும் திருச்சிக்கு வந்து என்னைப் பார்த்தாங்க; நாடகம் நடத்தக் கூப்பிட்டாங்க. எனக்கும் அப்போ சென்னையிலே நாடகம் போட்டா தேவலைன்னு தோணுச்சி; வந்தேன். சவுந்தரிய மகாலிலே நாடகம். இழந்த காதல், விமலா அல்லது விதவையின் கண்ணீர், லட்சுமிகாந்தன் இந்த மாதிரி நாடகங்களைப் போட்டுக் கிட்டிருந்த வரையிலே எந்த வம்பும் இல்லே; போர்வாள்ன்னு போட்டதுதான் தாமதம். சர்க்கார் அந்த நாடகத்தை நடத்தக் கூடாதுன்னு தடை போட்டுட்டாங்க... ‘எந்த சர்க்கார், பிரிட்டிஷ் சர்க்காரா?’ அவங்க போட்டிருந்தாலும் அதிலே ஓர் அர்த்தம் இருந்திருக்கும். ஒரு பக்கம் ஜன நாயகத்தைக் கட்டி வளர்த்தாலும், இன்னொரு பக்கம் முடியாட்சியை இன்னிய வரையிலே கைவிடாம இருக்கிறவங்க அவங்க. அந்தச் சர்க்கார் போர்வாள் நாடகத்தைத் தடை செய்யல்லே; அதுக்குப் பதிலா அப்போ சென்னையிலே நடந்துக்கிட்டிருந்த பிரகாசம் சர்க்கார் தடைவிதிச்சது... ‘பிறகு...........?’ அப்போதைக்கு அந்தத் தடையை மீற வேணாம்னு வேறே நாடகங்களை நடத்த ஆரம்பிச்சோம். ஏன்னா, அப்போ நாட்டு நிலவரம் நல்லாயில்லே. எங்கே பார்த்தாலும் ஒரே கம்யூனிஸ்ட் கலாட்டா, குழப்பம், பொன்மலையிலே கம்யூனிஸ்டுகளைச் சுட்டுத் தள்றாங்கன்னு ஒரே புரளி; பீதி. பிரகாசம் வேறே ஒரு கம்யூனிஸ்ட்டைக் கூட வெளியே விடாம பிடிச்சி உள்ளே தள்ளிக்கிட்டே இருந்தார். இந்தச் சமயத்திலே என்கிட்டேகூட ஒருத்தர் வந்து, ‘நீங்க டிராமா தொடங்கறதுக்கு முந்தி ஒரு திரைவிடறீங்களே, அந்தத் திரையைக் கூட கழற்றிச் சுருட்டிக் கொஞ்சநாள் உள்ளே வைச்சுடுங்க; இல்லேன்னா உங்களையும் கம்யூனிஸ்டுன்னு பிரகாசம் உள்ளே போட்டுட் டாலும் போட்டுடுவார்’னார்.... ‘அப்படி என்ன இருந்தது அந்தத் திரையிலே....?’ திராவிட நாடு திராவிடருக்கேன்னு இருந்திருக்கும்னு நினைக் கிறீங்களா? அதுதான் இல்லே; உலகப் பாட்டாளி மக்களே ஒன்றுபடுங்கள்னு இருந்தது... கம்யூனிஸ்ட் கட்சியிலும் உங்களுக்கு ஈடுபாடு உண்டா, என்ன? இல்லாதவன் யாராயிருந்தாலும் அவனுக்கு நிச்சயம் அதிலே ஓர் ஈடுபாடு இருக்கத்தானே இருக்கும்? (மேலது:136-138)

இவ்வகையில் தமிழ்ச்சமூகத்தில் வாழ்ந்த இரு கலைஞர்கள் குறித்த வேறுபட்ட பதிவை விந்தன் செய்துள்ளார். இப்பதிவுகளின் பின்னுள்ள ஊடக அரசியல் மிக முக்கியமானது. அவ்வகை அரசியலில் விந்தன் தெளிவாகச் செயல்பட்டதாகக் கூறலாம். அச்சுஊடக வரலாற்றில் விந்தன் செயல்பாடுகளைத் தமிழ்ச்சமூகம் விரிவாகப் புரிந்து கொள்ளும் தேவை இருப்பதாகக் கருதலாம்.

விந்தனின் முதல் குறுநூல் 1946இல் எழுதிய வேலைநிறுத்தம் ஏன்? ஆகும். அவரது இறுதியான கையெழுத்துப்படி, 1973இல் எழுதிய பெரியார் அறிவுச் சுவடி ஆகும். இக்குறுநூல் 2004இல் அச்சுவடிவம் பெற்றது. பெரியார் மறைந்த ஆண்டில் இதனை எழுதிவிட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரும் மறைந்தார்.

தமிழில் எழுதப்பட்ட ஆத்திசூடி, உலகநீதி, கொன்றைவேந்தன் ஆகிய சமயச்சார்பு நீதிநூல்களின் வடிவத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 1979இல் கையெழுத்துப் பிரதியாகப் படிக்கும் வாய்ப்பு எனக்குக்கிடைத்தது. விந்தன் மீது ஆழ்ந்த மரியாதையை இந்நூல் என்னுள் உருவாக்கியது.

‘ஆலயம் தொழுவது சாலவும் தீது/ கிளர்ச்சிகள் இன்றி வளர்ச்சிகள் இல்லை/ கீதை உன்னைக் கீழ்மகன் ஆக்கும்/ கைம்பெண்ணாயினும் கட்டு தாலியை/ கோயில் இல்லா ஊரில் நீ குடிஇரு/ சாதி ஒழியாமல் சமதர்மம் இல்லை/ தொட்டால் தீட்டெனில் தொடாமல் விடாதே/ மோட்சத்தைப் போலொரு மோசடி இல்லை/ ராவண காவியம் ரசித்துப்படி/ மனிதனைக் கெடுத்தது மதமெனும் மாயை’

என்னும் பெரியார் அறிவுச்சுவடி, ஆத்திசூடி வடிவில் அமைக்கப்பட்டது. இதைப்போல உலகநீதியைச் ‘சமூகநீதி’ என்று விந்தன் எழுதியுள்ளார்.

‘மதமென்னும் வெறிபிடித்து அலைய வேண்டாம்/ மல்லுக்கு அதற்காக நிற்க வேண்டாம்/சிந்திக்கும் முன் எதையும் செய்ய வேண்டாம்/செய்தபின் சிந்தித்து வருந்த வேண்டாம்/பதினெட்டுப் புராணத்தைப் படிக்க வேண்டாம்/ படித்து விட்டுப் பகுத்தறிவை இழக்க வேண்டாம்/ எம்மதமும் சம்மதமே என்ற மேலோன்/ ஏறொத்த பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே (பெரியார் அறிவுச் சுவடி: 2004:14)’

இவ்வகையில் விந்தன் என்ற ஆளுமை தமிழ்ச் சமூகத்தில் செயல்பட்ட பல்பரிமாணங்களைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமுண்டு. 2016இல் விந்தன் நூற்றாண்டு வருகிறது. அந்தக் கட்டத்தில் தமிழ்ச் சமூகத்திற்கு விந்தனை விரிவாக அறிமுகப்படுத்தும் ஆய்வுகளும் பரப்புரைகளும் நிகழ வேண்டும். மேற்குறித்த உரையாடல் சார்ந்து தோழர் விந்தன் அவர்களின் ஆளுமைகளைப் பின்வரும் வகையில் தொகுக்க இயலும்.

-              தனித்த மொழிநடையில் புனைவுகளை உரு வாக்கிய சிறுகதை மற்றும் நாவல் படைப்பாளி என்ற அளவில் மட்டும் விந்தன் செயல்படவில்லை; மாறாக, நடைமுறைச் சமூக நிகழ்வுகளைத் தனக்கான அரசியல் புரிதலோடு பதிவு செய்த வராகவும் குறிப்பாக 1940களில் தொழிலாளர்கள் எதிர்கொண்ட சிக்கலோடு தம்மை இணைத்துக் கொண்டவராகவும் அறியமுடிகிறது.

-              சமூகத்தின் அவலங்களை எதிர்த்துப் போராடு வதில் பத்திரிகையாளராகச் செயல்படுபவர் களுக்குத் தனித்த இடமுண்டு. விந்தன் ‘மனிதன்’ இதழ் மூலம், சமூகக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் பத்திரிகையாளராகவும் தமது ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார்.

-              வைதீகம் என்பது சமூகத்தில் உருப்பெற்றுள்ள புற்றுநோய். இதனை எதிர்த்துப் போராடிய விந்தன் செயல்பாடே, அவரது ‘பசிகோவிந்தம்’ என்னும் ஆக்கம். விந்தனுக்கேயுரிய தனி ஆளுமையாக இதனைக் கருத முடியும்.

-              தினமணிக்கதிர் என்னும் வெகுசனப் பத்திரி கையில், எள்ளல் மற்றும் பகடி சார்ந்த மொழியில் சமூகக் கொடுமைகளை அம்பலப்படுத்தியுள்ளார். உருவகக் கதைகள்; கதைக்கட்டுரைகள் என்னும் வடிவங்களில் விந்தனின் செயல்பாடுகள் தனித்துப் பேசத்தக்கவை.

-              எம்.கே.டி.பாகவதர், எம்.ஆர்.இராதா ஆகி யோருடன் உரையாடி, அவர்களது பரிமாணங் களை வெகுசனத்தளத்தில் அறியச் செய்த விந்தன் பணி அரிய பணியாகும். சமூகத்தின் ஒடுக்கப் பட்ட மக்களுக்காக ஏதோ ஒரு வகையில் பேசியவர் எம்.ஆர்.இராதா அவருக்கு சமூக அங்கீகாரத்தை விந்தன் தனது உரையாடல் மூலம் ஏற்படுத்தியுள்ளார். அச்சு ஊடகத்தின் அரசியலைப் புரிந்து செயல்பட்டவராகக் கருத முடிகிறது.

-              தமது இறுதி நூலை ‘பெரியார் அறிவுச்சுவடி’ என்னும் பெயரில் விந்தன் எழுதினார். தமிழ்ச் சமூகத்தின் புறக்கணிக்க இயலாத சமூகப் போராளி பெரியாரை, விந்தன் வெளிப்படுத்தியுள்ள பாங்கு தனித்தது.

எழுத்தாளரும் சமூகப் போராளியும் இணைந்த மனிதராக விந்தன் வாழ்ந்து மறைந்தார். அவரது நூற்றாண்டைத் தமிழ்ச்சமூகம் கொண்டாட வேண்டும். அதற்கான பரப்புரையை மேற்கொள்வது சமூக அக்கறையுள்ளவர்களின் கடமை.