1975-ஆம் வருடம் ஆகஸ்டு மாதம் 15ந்தேதி தொலைக்காட்சி தனது தமிழ் ஒளிபரப்பைத் தொடங்கியது. அதுவரையில் நாம் கண்ட பிரபல ஊடகம் வானொலி மட்டுமே. வானொலியில் மாநிலச் செய்திகள், டெல்லிச் செய்திகள் என்று இரண்டுவித தமிழ்ச் செய்திகள் வாசிப்பது வழக்கம். காலையில் ஆறம்பது, மதியம் பன்னிரண்டரை, மாலை ஆறு முப்பது ஆகிய நேரங்களில் மாநிலச் செய்திகள் ஒலி பரப்பாகும். சென்னை வானொலி நிலையத்தில் இருந்து ஒலி பரப்பாகும் இந்தச் செய்திகளை திருச்சி, திருநெல்வேலி, கோயமுத்தூர் வானொலி நிலையங்கள் அஞ்சல் செய்யும். 1967 வரை இந்தச் செய்திகள் பிராந்தியச் செய்திகள் என்று பெயரிடப்பட்டு இருந்தது. பிறகு தமழக அரசின் கோரிக்கையை ஏற்று மாநிலச் செய்திகள் என்று மாற்றப்பட்டது. டெல்லியில் இருந்து ஒலிபரப்பாகும் செய்திகள் காலை ஏழே கால், இரவு ஏழே கால் நேரங்களில் ஒலிபரப்பாகும். இந்த செய்திகளில் தமிழ்நாட்டுச் செய்திகள் ஒன்றிரண்டுதான் வாசிக்கப்படும். மற்றதெல்லாம் பீகாரில் வறட்சி, பிரம புத்திராவில் வெள்ளம், ஆந்திராவில் கலவரம் என்கிற வகையிலேயே செய்திகள் செவிகளில் விழும்.

டெல்லி தமிழ்ச் செய்தி வாசிப்பவர்களில் திருமதி சரோஜினி நாராயணசுவாமி, விஜயலட்சுமி, பஞ்சாபகேசன் ஆகியோர் சிறந்தவர்களெனப் பெயரெடுத்தவர்கள். மாநிலச் செய்தி வாசிப்பாளர்களில் பத்மநாபன், ஜெயா பாலாஜி ஆகியோர் செய்தி வாசிப்பதைப் பெரும்பாலான நேயர்கள் விரும்புவர். மறைந்த பிரபல நடிகர் பூரணம் விசுவநாதன் காலம் சென்ற எழுத்தாளர் சு. சமுத்திரம் ஆகியோர் வானொலிச் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத் தகுந்த செய்தி ஆகும். வானொலிச் செய்திகளில் நடந்த செய்திகளை அப்படியே வெளியிட மாட்டார்கள். கறாரான சென்சாருக்குப் பிறகே செய்திகள் ஒலிபரப்பாகும். செய்திகளை ஒலிபரப்பு செய்வதோடு சரி, செய்திகள் பற்றிய எந்த விமர்சன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டதில்லை. அரசு ஊடகமான வானொலியில் அரசியலை அலசுவது பஞ்சமா பாதகமாக அன்று கருதப்பட்டது.

1975-இல் தலைகாட்டிய தொலைக்காட்சி எண்பத்தி ஆறுவரையில் சென்னை மாநகரம் மற்றும் சென்னையைச் சுற்றிய பகுதிகளில் மட்டுமே தெரிந்தது. அப்போது அது “தூர்தர்ஷன்” என்றழைக்கப்பட்டது. அப்போது இரவு ஏழு மணிக்குச் செய்திச் சுருக்கம், எட்டு மணிக்கு விரிவான செய்திகள் தூர்தர்சனில் ஒளிபரப்பப்பட்டன. ஏழு மணிச் செய்திச் சுருக்கம் ஐந்து நிமிடமும் எட்டு மணிச் செய்திகள் அரைமணி நேரமும் ஒளிபரப்பப் பட்டன. எச்.இராமகிருஷ்ணன், இவர் பாலச்சந்தரின் வானமே எல்லை திரைப்படத்தில் மாற்றுத் திறனாளி களுக்கு நம்பிக்கையூட்டும் பாத்திரத்தில் நடித்த மாற்றுத்திறனாளி. இவர் தான் சென்னை தூர்தர்சனின் முதல் செய்தி வாசிப்பாளர் ஆவார். இவரைத் தொடர்ந்து, சோபனா ரவி, ஈரோடு தமிழன்பன், வரதராஜன் முதலியோர் சிறந்த செய்தி வாசிப்பாளர் களாகத் திகழ்ந்தார்கள். இதில் சோபனா ரவிக்கு தமிழகம் தழுவிய ரசிகர் கூட்டம் இருந்தது. இவரது உச்சரிப்புக்கள் சிலாகித்துப் பேசப்பட்டன. செய்திகள் வாசிப்பதோடு சரி, அரசியல் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று அப்போது வார இதழ் ஒன்றிற்கு பேட்டி தந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் சோபனா ரவி.

சோபனா ரவி சொன்னது போன்று தூர்தர்சனில் செய்திகள் வாசிப்பு மட்டுமே இருந்தது. செய்திகள் குறித்த எந்தவிதமான உரை யாடல் நிகழ்ச்சிகள் ஒரு நாளும் ஒளிபரப்புச் செய்த தில்லை. ஆளும் கட்சி செய்திகள் ஒளி பரப்பப்படு கின்றன. அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் மட்டுமே காட்டப்படுகின்றன... என்கிற குற்றச் சாட்டுக்கள் தூர்தர்சன் மீது எழுப்பப்பட்டன. இதற்காக தி.மு.க. தலைவர் கலைஞர் அன்று தொலைக்காட்சிப் பெட்டிகள் உடைப்புப் போராட்டம் நடத்தினார் என்பது வரலாறு. தமது பேரர்கள் தொலைக்காட்சி நிறுவனங்கள் தொடங்கி, அது ஆல் போல் தழைத்து. அறுகு போல் வேர் விட்டு... ஒரு தலைப்பட்சமான செய்திகளே ஒளிபரப்பும்... தனது பெயரிலும் ஒரு தொலைக் காட்சி உருவாகும், தமது கட்சிச் செய்தி களுக்கே அது முக்யத்துவம் தரும் என்று அப்போது கலைஞர் நினைத்திருக்கமாட்டார்.

1992க்குப் பிறகுதான் தனியார் தொலைக் காட்சியின் ஒளிபரப்பு தொடங்கியது. சன் தொலைக் காட்சிதான் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் தனியார் தொலைக் காட்சி ஆகும். கலைஞரின் பேரன் மாறன் சகோதர்களால் உருவாக்கப்பட்ட இந்த தொலைக்காட்சி சக்கைப் போடு போடுகிறது. 1992-இல் தொடங்கிய சன் தொலைக் காட்சியில் 1996 பொதுத் தேர்தலை முன்னிட்டு தினந்தோறும் இரவு எட்டு மணிக்கு சன் செய்திகள் ஒளி பரப்பப்பட்டன. ஒளிபரப்பிய செய்திகள் தி.மு.க.விற்கு ஆதரவான, கலைஞர் புகழ்பாடும் செய்திகளாகவே இருந்தன. பிறகு செய்திகளுக்கென்றே “சன்நியூஸ்” என்கிற சேனல் ஆரம்பிக்கப்பட்டு அது 24 மணிநேரமும் இன்று வரை செய்திகள் ஒளிபரப்பப்படுகின்றன. சன் தொலைக் காட்சிகளில் அன்றைய அரசியல் நிகழ்வுகளை அலச ‘நேருக்கு நேர்’ என்கிற நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. பிறகு இந்த நிகழ்ச்சி சன் நியூஸ் சேனலுக்கு மாற்றப் பட்டது. அரசியல் கட்சிகளின் பிரபலங்களை அழைத்து அன்றைய அரசியல் சூழல் பற்றி நேர்காணல் நடத்தினார்கள். மிகுந்த முன்னெச்சரிக்கையோடு அ.தி.மு.க. பிரபலங்களைத் தவிர்த்து விடுவார்கள். அப்படியே அழைத்தாலும் அவர்கள் நிகழ்ச்சிக்கு வரமாட்டார்கள். மீறி வந்தால் மறுநாள் அவர் அ.தி.மு.க. உறுப்பினராக இருக்கமாட்டார்.

சுன் தொலைக்காட்சியைத் தொடர்ந்து ராஜ் தொலைக்காட்சி, ஜெஜெ தொலைக்காட்சி என்று துவங்கிஞ். இன்று...? எத்தனை தொலைக்காட்சி சேனல்கள் இருக்கின்றன என்று எண்ணிச் சொல்ல இயலாத அளவிற்குப் பல்கிப் பெருகிவிட்டன. ஒவ்வொரு தனியார் தொலைக்காட்சியிலும் வெவ்வேறு வேளைகளில் செய்திகள் ஒளிபரப்பாகுகின்றன. அரசியல் கட்சித் தலைவர்களின் நேர்காணல்கள், கலந்துரை யாடல்கள், விவாதங்கள் நடத்தப்பட்டு ஒளி பரப்பப்படுகின்றன. புதிய தலை முறைத் தொலைக் காட்சியில் புதுவிதமான விவாத மேடையைக் காணமுடிகிறது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தந்தி செய்தியிலும் இந்த விவாத நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. திரைப்படங்கள், மெகா தொடர்கள், பிற நிகழ்ச்சிகள் ஆகியனவற்றைப் பார்க்கப் பிடிக்காதவர்களுக்கு ஒரே ஆறுதல் இந்தக் கலந்துரை யாடல்கள்தான். இதனைத் தொகுத்து வழங்கும் ஒருங்கிணைப்பாளர்களும் அரசியல் விசயங்களில் தேர்ந்தோராக இருப்பது நிகழ்ச்சிகளுக்கு பெரியதொரு வரவேற்பைப் பெற்றுத் தருகின்றது.

என்னதான் எத்தனை தொலைக் காட்சிச் செய்திகள் கேட்டாலும் பத்திரிகைகளைப் படித்து விசயங்களை அறிவதில் வருகிற திருப்திக்கு ஈடு இணை இராது எனலாம்.

அந்தக் காலங்களில் பலரும் பரவலாக அறியப் பட்ட பத்திரிகைகள் தினமணி, தினத்தந்தி மட்டுமே. அரசாங்க அலுவலர்கள், உயர்தர வர்க்கத்தார் ஆகியோர் மட்டுமே தினமணியை வாசித்தார்கள். தினமணியின் அன்றைய மொழி நடையும் இவர்களுக்கு மட்டுமே விளங்கும்படியாக இருந்தது. அக்கிராசனர், அபேட்சகர், அசெம்பிளி, காரியாலயம், காரியதரிசி, பொக்கிஷதாரி, கமிட்டி, ஜலம் போன்ற சொற்களைப் பயன்படுத்தி மணிப்பிரவாள நடையைக் கையாள்வார்கள். நாளாக நாளாக சொற்களில், நடையில் மாற்றம் கண்டு... இன்று கருத்தாழமிக்க செய்திக் கட்டுரைகள், செய்திகள், வாசகர் கடிதங்கள் இடம் பெறுகின்ற வகையில் இன்று தினமணி மொழி நடையில் மாற்றங்கள் மலர்ந்திருக்கின்றன.

தினத்தந்தியைப் பொறுத்தவரையில் பாமரர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக சி.பா. ஆதித்தனாரால் ஆரம்பிக்கப்பட்ட இதழ். பத்திரிகை படிக்கும் ஆர்வத்தைத் தமிழர்களிடம் ஊக்குவித்த பத்திரிகை தினத்தந்தி என்றால் அதில் இருவிதக் கருத்துக்கள் இருக்க இயலாது. ‘சிரிப்பு’ என்று முதற்பக்கத்தில் இடம் ஒதுக்கி வாசகர்களை நகைச்சுவைத் துணுக்குகள் அனுப்ப வைத்து அந்தக் காலத்திலேயே ஐந்து ருபாய் பரிசளித்தார்கள். காமராஜர், பெரியார், அண்ணா போன்ற தலைவர்களின் பேச்சுகளை முழுமையாகப் பிரசுரிக்காவிட்டாலும் முக்கியமானவற்றை வெளியிட்டது தினத்தந்தி. “தினத்தந்தி பேசுகிறது” என்கிற பெயரில் எழுதிய எளிமையான தலையங்கம், ஞாயிறுமலர், சினிமா செய்திகள், முதலியவைகள் வாசகர்களை ஆர்வமாக வாசிக்கத் தூண்டியது.

1967 வரை நடுநிலை நாளேடு போன்று தோற்ற மளித்த தினத்தந்தி 1967 தேர்தலில் தி.மு.க. ஆதரவு ஏடாகத் தன்னை மாற்றிக் கொண்டது. ஆம் 1967 தேர்தலில் தினத்தந்தி அதிபர் சி.பா. ஆதித்தனார் சாத்தாங்குளம் சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நின்றார். எனவே தி.மு.க. அணி வெற்றி பெற தினத்தந்தி பேருதவி செய்தது. தி.மு.க. ஆட்சியைப் பிடித்ததும் ஆதித்தனார் சபாநாயகராக்கப்பட்டார். அதன் பிறகு அமைச்சரானார். 1976-இல் தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்படும் வரையில் தினத்தந்தி தி.மு.க. ஆதரவு ஏடாக இருந்தது. அதன் பிறகு நிலைமைக்குத் தகுந்தபடி, அதாவது எம்.ஜி.ஆர் முதல்வராக இருக்கும் போது அவருக்குச் சாதகமாக, கலைஞர், ஜெயலலிதா முதல்வர்களாக இருக்கும் போது அவர்களுக்குச் சாதகமாக செய்திகள் வெளியிட்டு ஒரு விதமான நடுநிலைத் தன்மையை தினத்தந்தி ஏடு கடைப்பிடித்து வருகிறது.

தினத்தந்தி காலைப் பத்திரிகை என்றால் ‘மாலை முரசு’ சாயங்காலம் வந்து பரபரப்பாய் விற்றது. இதுவும் ஆதித்தனார் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகையாதலால் தினத்தந்தி பாணியையே கடைப்பிடித்தது. இன்று எத்தனையோ மாலை ஏடுகள் வந்துவிட்டன. இருந் தாலும் அன்று மாலை முரசுக்கு இருந்த எதிர்பார்ப்பு இன்றைய இதழ்களுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

குமரி மாவட்டத்தில் 1968 வாக்கில் ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் பரவிய நாளிதழ் தினமலர். தி.மு.க.வில் எம்.ஜி.ஆருக்குக் கட்சித் தலைமையுடன் பிணக்கு ஏற்பட்டது. அது சம்மந்தமான செய்திகளை பரபரப்பாக வெளியிட்டு எம்.ஜி.ஆர் ரசிகர்களைக் கவர்ந்து, எம்.ஜி.ஆர், தி.மு.க.வை விட்டு வெளியேறிய பிறகு அவருக்கு ஆதரவான செய்திகளையே வெளியிட்டு வாசகர் எல்லையை விரிவாக்கிய இதழ் தினமலர். எம்.ஜி.ஆர் இருக்கும் போது அ.தி.மு.க.வை ஆதரித்து செய்திகள் வெளியிட்டது மாதிரி, அது ஜெயலலிதாவை ஆதரித்து செய்திகள் அவ்வளவாகப் போடுவதில்லை. நடுவில் தேசிய நாளிதழ் என்று அறிவித்துக் கொண்டு காங்கிரசு ஆதரவு; செய்திகளைச் சில காலம் வெளி யிட்டது. அவ்வப்போது இடதுசாரி இயக்கத் தலைவர் களுக்கு எதிராக விசமத்தனமான விமர்சனங்களை வெளியிடும். அதற்குத் தக்க பதில் கொடுக்கும்போது பேசாமல் மௌனமாக இருந்துவிடுவதை அது வழக்க மாகக் கொண்டுள்ளது.

1978ல் தி.மு.க. விற்கு ஆதரவான ஏடுகள் இல்லை. அதனால் தி.மு.க.வில் செல்வந்தராக இருந்த ஆதித்தனாரின் உறவினரான கே.பி. கந்தசாமியை நாளேடு ஒன்றைத் துவக்க வைத்தார் கலைஞர். அதற்கு அவரே “தினகரன்” என்றும் பெயர் சூட்டினார்... இது தி.மு.க. தலைவர்களின் பேச்சுக்களையும். தி.மு.க.விற்கு ஆதரவான செய்திகளையும் வெளியிட்டது. கலைஞர் முரசொலியில் எழுதும் கடிதங்களை மறுநாள் மறு பிரசுரம் செய்தது. தி.மு.க. உறுப்பினர்கள், தி.மு.க. ஆதரவாளர்கள் இந்த ஏட்டிற்கு வாசகர்கள் ஆனார்கள். வைகோவிற்கும், தி.மு.க.விற்கும் பிணக்கு; உருவான கால கட்டத்தில் இந்த ஏடு சில காலம் வைகோவை ஆதரித்துவிட்டு மீண்டும் தி.மு.க.வை ஆதரித்தது. பிறகு கலைஞரின் பேரர்கள் மாறன் சகோதரர்கள் தினகரனை விலைக்கு வாங்கினார்கள். 2006 தேர்தல் காலங்களில் இதழ் ஒன்று ஒரு ருபாய்க்கு விற்றார்கள். கலைஞர் குடும்பத்துடன் அதிருப்தி ஏற்பட்ட காலங் களில் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதிலும் இந்த இதழுக்கு அரசாங்க விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன. கருத்து வேறுபாடுகள் சரியான பிறகு இன்றுவரையில் அது தி.மு.க. ஆதரவு ஏடாகவே செயல்பட்டு செய்தி களை வெளியிடுகின்றது.

இந்த இதழ்கள் தவிர காங்கிரசு, தி.மு.க., அ.தி.மு.க. இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்டு (மார்க்சிஸ்ட்டு) கட்சி ஆகியனவைகள் சார்பில் ஏடுகள் வந்தன, வருகின்றன.

காங்கிரசைப் பொறுத்தவரையில் நவசக்தி, ஜெயபேரிகை, கடிதம் போன்ற ஏடுகள் வெளிவந்தன. நவசக்தி ஆசிரியராக பி.சி. கணேசனும் ஜெயபேரிகை ஆசிரியராக ஜெயச்சந்திரனும், கடிதம் ஆசிரியராக கவிஞர் கண்ணதாசனும் இருந்தார்கள். தி.மு.க. எதிர்ப்புச் செய்திகள், விமர்சனக் கட்டுரைகள் முரசொலிக் கட்டுரைக்குப் பதில் என்கிற ரீதியில் விசயங்கள் வெளியிடப்பட்டன. காமராஜர் இருக்கும் வரையில் உற்சாகமாக வலம் வந்த இந்த இதழ்கள் அவரது மறைவிற்குப் பிறகு இவைகளும் மறைந்து போய்விட்டன. இன்று தமிழ்நாடு காங்கிரசுக்கு என்று எவ்விதப் பத்திரிகையும் இருப்பதாகத் தெரியவில்லை.

தி.மு.க. சார்பில் திராவிட நாடு, நம்நாடு, எதிரொலி என்று எத்தனையோ நாளேடுகள் வந்திருந்த போதிலும். இன்று தி.மு.க. ஏடு என்றால் பலருக்கும் நினைவிற்கு வருவது முரசொலி மட்டுமே. இந்த ஏட்டில் செய்தி களைக் காட்டிலும் கலைஞர் பேச்சுக்கள், கலைஞர் கடிதம், அவ்வப்போது அன்பழகன் பேச்சுக்கள் முதலியனவற்றிற்கு முக்யத்துவம் தரப்படுகின்றன. தற்போது மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்ட செய்திகள் அவரின் பேச்சுக்கள் அதிகம் இடம் பெறுகின்றன.

அண்ணா தி.மு.க.வைப் பொறுத்த வரையில் எம்.ஜி.ஆர் காலத்தில் “அண்ணா” என்றொரு பத்திரிகை வந்தது. இப்போது “நமது எம்.ஜி.ஆர்” என்கிற பெயரில் பத்திரிகை வந்து கொண்டிருக்கிறது. எந்த அ.தி.மு.க. தொண்டனும் இந்த பத்திரிகை படித்துக் கொண் டிருப்பதைப் பார்த்ததாக ஞாபகம் இல்லை. ஏதோ அம்மாவின் புகழைப் பரப்ப பேருக்கு வந்துகொண் டிருக்கிறது நமது எம்.ஜி.ஆர்.

இடதுசாரி இயக்கங்களின் நாளேடுகள் ஜனசக்தி மற்றும் தீக்கதிர் ஆகும். ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் இதழாக 1937-இல் ஜனசக்தி ஆரம்பிக்கப்பட்டது. ஜீவா ஜனசக்தியின் முதல் ஆசிரியர். தோழர்கள் கே.முத்தையா, ஐ.மாயாண்டி பாரதி, சோலை, டி.செல்வராஜ் ஆகியோர் ஜீவாவுடன் ஜனசக்தியில் பணிபுரிந்தவர்கள். பாரதிதாசனின் “புதியதோர் உலகம் செய்வோம்” என்கிற பாடலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் “நண்டு செய்த தொண்டு” கவிதையும், ஜீவாவின் “காலுக்கு செருப்பு மில்லை” பாடலும் ஜனசக்தியில் வெளியான படைப்புக்கள். கவிஞர் தமிழ்ஒளியின் கவிதைகளும் ஜனசக்தியை அந்தக் காலத்தில் அலங்கரித்தன.

2007-இல் இருந்து ஜனசக்தி தோழர் தா.பாண்டியனை ஆசிரியராகக் கொண்டு நாளேடாக வருகிறது. பொது வான இயக்கச் செய்திகளோடு நான்காம். எட்டாம் பக்கங்களில் தலையங்கம், நல்ல கட்டுரைகள் இடம் பெறுகின்றன.

1963-இல் ஆரம்பித்த தீக்கதிர் ஏடு தற்போது பொன் விழாவைக் கொண்டாடி இருக்கிறது..

மார்க்சிஸ்ட்டு கட்சியின் பரிணாமத்தோடு தானும் பரிணமித்து கட்சியின் இயக்கங்களோடு தானும் வளர்ந்து கட்சியின் வளர்ச்சிக்குப் பங்களித்து வருவது தீக்கதிர் நாளிதழ் ஆகும்.

மதுரையில் இருந்து மட்டும் வந்துகொண்டிருந்த தீக்கதிர், சென்னை, கோவை, திருச்சி என்று நான்கு இடங்களில் இருந்து இன்று வெளிவருகின்றது. அரசியல் கட்சியின் பத்திரிகை நான்கு பதிப்பு மையங்களில் இருந்து வருவது தீக்கதிர் மட்டுமே. தமிழ்நாடு அரசியல் களத்தில் தீக்கதிர் ஏட்டிற்கு தனியானதொரு அடையாளம் உண்டு. கம்யூனிஸட்டு அல்லாத எழுத்தாளர்களும் தீக்கதிர் கட்டுரைகளை மேற்கோள் காட்டுவதைக் காணமுடிகிறது.

மாவட்டம், தமிழகம், பிற மாநிலங்கள். தேசம், உலகம் என்று பக்கங்கள் பிரிக்கப்பட்டு செய்திகள் வெளி யிடப்படுகின்றன. அன்றாட அரசியல் நிகழ்வுகளை ஒட்டி எழுதப்படும் தலையங்கங்கள், தலைவர்களால் வரையப்படும் கட்டுரைகள் முரண்படுகிறவர்களையும் சிந்திக்க வைக்கின்றது.

தீக்கதிர் இலவச இணைப்பாக ஞாயிறு தோறும் வருகிற “வண்ணக்கதிர்” திங்கள் தோறும் வெளி வரும் “இலக்கியச் சோலை” பக்கம் எத்தனையோ புதிய எழுத்தாளர்களை உருவாக்கி இருக்கின்றது.