நான் கடந்த வாரம் ஒரு நர்சரி பள்ளிக்கு நடு வராகப் போயிருந்தேன். மாணவர்களுக்குத் திறனறிதல் போட்டி நடைபெற்றது. பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியம், நடனம் என்றும் போட்டிகள் நடைபெற்றன. நடனப்போட்டிதான் கண்றாவி. ஆபாசமான டூயட் கிளப் டான்ஸ் பாடல்களுக்கு மாணவர்களின் காக்காவலிப்பு நடனம். தொலைக் காட்சிகளில் கூட சூப்பர் சிங்கர் பாட்டுப் போட்டி களில் சினிமா பாடல்களைத்தான் குழந்தைகள் பாடுகிறார்கள். பாடல்களுக்கு இடையே வரும் முக்கல் முனகல் ஒலிகளையும் சேர்த்து யார் நன்றாக முக்கினார்கள், முனகினார்கள் என்பதைப் பொருத்து அதிக மதிப்பெண். குழந்தைகளைச் சொல்லிக் குற்றம் ஒன்றுமில்லை. பெரியவர்களைத்தான் சொல்ல வேண்டும். குழந்தைகளுக்கான இசைப் பாடல் களைத் தராதது யார் குற்றம்?

கவிமணி, பாரதி, பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் அழ.வள்ளியப்பா, தமிழ்ஒளி, செல்வ கணபதி இவர்கள் எழுதிய ஓரிரு பாடல்கள் இசைத்தட்டுகளாக வந்துள்ளன. அதுவும் 50 வருடங்களுக்கு முன், இப்போது நிலை என்ன? ஒன்றுமில்லை.

ஆக 50 வருடங்களுக்கும் மேலாக குழந்தைப் பாடல்களைப் புறக்கணித்திருக்கிறோம். பிறகு குழந்தைகள் சினிமா ஹீரோக்கள் பாடும் (வாய சைக்கும்) பாடல்களைப் பாடாமல் வேறு எதைப் பாடுவார்கள்.

‘அப்பாவால் செய்ய முடியாது, மகனால் செய்ய முடியும். அது எது?’ என்று ஒரு விடுகதை உண்டு. பதில்- வளர்ச்சி. அப்பாக்களே, நீங்கள்தான் கேடு கெட்ட நிலையில் வளர்ந்து விட்டீர்கள். புதிய தலைமுறை - அதாவது, உங்கள் குழந்தைகள் நன்றாகப் பண்போடு வளர வேண்டாமா? அதற்குக் குழந்தை இலக்கியம் வேண்டும் என்று சொல்ல வருகிறேன்.

ஆணிவேரை ஒத்தது குழந்தை இலக்கியம். சிறுவயதிலேயே படிக்கும் பழக்கம் இருந்தால்தான் பெரியவர்களான பிறகும் படிப்பார்கள். ஆக, பெரியோர் இலக்கியத்திற்குக் கூட அடித்தளம் குழந்தை இலக்கியம்தான். அமெரிக்காவில் ஒரு ‘சர்வே’ எடுத்திருக்கிறார்கள். முப்பது வயதில் புத்தகம் படிப்பவர்கள் யாரென்று பார்க்கும் போது குழந்தையாக இருக்கும்போது படித்தவர் களாக அவர்கள் இருந்தனர் என்பது கண்டுபிடிக்கப் பட்டது.

ரஷியா, அமெரிக்கா, பிரான்சு, பிரிட்டன், எல்லாம் வளர்ந்த நாடுகள் என்றால், அந்த வளர்ச்சிக்கு, குழந்தை இலக்கியம் அங்குப் பேணப்படுவதும் ஒரு காரணம் தான். ரஷியா, அமெரிக்கா நாடுகளில் சிறுவர் நூலகங்கள் இலட்சக்கணக்கில் இருக்கின்றன. பெரியோர் நூலகங்களில் சில்ரன்ஸ் கார்னர் இருக் கின்றன. குழந்தைகளுக்குக் கதை சொல்லும் நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பாருங்கள், குழந்தைகளுக்குத் தனி நூலகம் இருக்கின்றதா? சென்னை தேவநேயப் பாவாணர் நூலகத்தில் சில்ரன்ஸ் கார்னர் இருக்கிறது- அதுவும் சரியாகப் பேணப்படவில்லை. அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கணக்கில் சேர்க்கவா, தெரியவில்லை. ஒரு நூலகத்தின் கதவுகள் திறக்கப்பட்டால் ஒரு சிறைச்சாலையின் கதவுகள் மூடப்படும் என்று சொல்கிறார்கள். நம் மனதையே ‘மேஜிக்’ செய்யக்கூடிய நூலகத்தை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை எண்ணிப் பாருங்கள். குழந்தைகளை நூலகத்திற்கு வரவழைக்க என்ன செய்திருக்கிறோம்?

குழந்தைகள் அதிகம் கேட்க விரும்புகிறார்கள்; அதிகம் பேச விரும்புகிறார்கள் . அதற்கான வாய்ப்புகளைக் குழந்தை இலக்கியமே தரமுடியும். குழந்தை இலக்கியம் சிறப்பாக உள்ள சமுதாயமே மிகச்சிறந்த சமுதாய மாக வாழ முடியும்.

டாக்டர் பூவண்ணன் எழுதிய ‘குழந்தை இலக்கிய வரலாறு’ நூலைப் படித்துப் பார்க்கும் போது தமிழில் குழந்தை இலக்கியம் பீடு நடைபோட்டதை அறிய முடிகிறது. அதெல்லாம் 50 வருடங்களுக்கும் முன்பு.

சுமார் 50 சிறுவர் இதழ்கள் தமிழில் வந்த காலம் அது. பெயர்களைப் பாருங்கள். பாலியர் நேசன், பாலவிநோதினி, பாலர் முரசு, பாப்பா மலர், அணில், சங்கு, டமாரம், டிங்-டாங், கரும்பு, பார்வதி, அம்பி, முத்து, கண்ணன், சின்னக்கண்ணன், முயல், மயில், கிளி, பூஞ்சோலை, சிறுவர் உலகம், ரேடியோ, குஞ்சு, ஜில் ஜில், வானர சேனை, மத்தாப்பு, ரத்ன பாலா, பூந்தளிர், தமிழ்ச்சிட்டு, ஜிங்லி, அம்புலி மாமா, கோகுலம், துளிர்... இன்னும் உண்டு. இவற்றில் கடைசி மூன்றும் இன்னும் வெளிவருகின்றன.

பாலியர் நேசன், அணில், டமாரம், கண்ணன், கரும்பு, அம்புலிமாமா, கோகுலம் போன்ற பத்திரி கைகள் 25 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனை ஆகியிருக்கின்றன. சிறுவர்கள் காசு கொடுத்து வாங்கிப் படித்திருக்கிறார்கள். இன்றைய நிலையில் இது நம்பும்படியான செய்தியாக இருக்கிறதா? இன்று சிறுவர் பத்திரிகைகளை பிரபல தினசரிகள் இலவசமாகத் தரும் நிலையே இருக்கிறது. இலவச மாகத் தருவது எப்படி இருக்கும்? குழந்தைகளைக் கவரும் விதத்தில் வண்ணத்திலா அச்சடித்துத் தர முடியும்!

சிறுவர் பத்திரிகைகள் நிறைய வந்தபோது குழந்தைகளுக்கான கதைகள், கட்டுரைகள், பாட்டுகள், நாடகங்கள், நாவல்கள் நிறைய எழுதப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கொள்வார் இருந்ததால் கொடுப்பாரும் இருந்திருப்பார்கள். பெரியவர் களுக்கு எழுதிய ராஜாஜி, கி.வ.ஜா, கி.ரா., அகிலன், பெரியசாமி, தூரன், ஆர்.வி., தி.ஜ.ர., ரா.கி.ர., ஜெய காந்தன், கல்கி, துமிலன், போன்றோர்களும் சிறுவர் களுக்கு எழுதுவதில் பெருமைப்பட்டார்கள். குழந்தை இலக்கியம் படைக்க ஒரு பட்டாளமே இருந்த காரணத்தால் அவர்களை அணி திரட்டிச் செயல்பட குழந்தை எழுத்தாளர் சங்கம் 1950-இல் தோன்றியது. அதன் தலைவராக குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா தன்னலமின்றிச் செயல்பட்டார். 1975இல் வெள்ளி விழா ஆண்டில் குழந்தை எழுத்தாளர் யார்? எவர்? என்ற நூல் வெளியிடப்பட்டது. அது குழந்தை எழுத்தாளர்களை அடையாளம் காட்டியது; பெருமைப்படுத்தியது. கடந்த 35 ஆண்டுகளாக யார் இருக்கிறார்கள், யார் எழுதுகிறார்கள் என்று ஒன்றும் தெரியவில்லை. 2000-இல் பொன்விழா ஆண்டில் குழந்தை எழுத்தாளர் சங்கம் ஊத்தி மூடப் பட்டது. இங்கே எதை யார் சரியாகச் செய்திருக் கிறார்கள் - அது மட்டும் சரியாகச் செயல்பட?

சரி, விஷயத்திற்கு வருவோம். குழந்தை இலக் கியத்தைப் புறக்கணித்தால் பிற இலக்கியங்களும் வளராது என்பதைப் புரிந்துகொள்ள சாதாரண அறிவு இருந்தால் போதும். அதுகூட நமக்கு இல்லை. பெற்றோர்கள் குழந்தைகளுக்குப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்; சிறுவர் பத்திரிகை களை வாங்கிக் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் - ஆசிரியர்கள் முழு ஆதரவு இல்லாமல் ஒன்றும் நடக்காது என்பதுதான் உண்மை. குழந்தைகள் புத்தகம் படிப்பது (பாடப்புத்தகம் அல்ல) சம்பந்த மாக பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வேறு பட்ட கருத்துகள் இருப்பது தெரிகிறது. பெரியோ களே படிப்பது இல்லை. சினிமா, டி.வி, இன்டர் நெட், வந்துவிட்டது. அதெல்லாம் இல்லாத காலத்தில் படித்தார்கள்.

இந்தப் பதிலில் உண்மையில்லை. இவையெல்லாம் அதிகமிருக்கின்ற மேலைநாடுகளில் குழந்தைகள் படிக்கிறார்கள்; நவீன ஊடகங்களையும் பயன் படுத்துகிறார்கள். புத்தகத்தின் இடத்தை வேறு எந்த ஊடகமும் பிடித்து விட முடியாது என்பதை ஹாரிபாட்டர் விற்பனை நிரூபித்திருக்கிறது.

சரி, திரைப்படம், நாடகம் போன்ற காட்சி ஊடகங்களின் வலிமையை நான் குறைத்து மதிப் பிடவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆக்க பூர்வமான முயற்சிகள் இன்று தமிழில் இல்லாமல் போய்விட்டதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

குழந்தைகளுக்கென்று நாடகமும் சினிமாக்களும் இருந்தன. சென்னையில் நேருவின் பெயரால் பாலர் அரங்கம் இருந்தது- அங்குக் குழந்தைகள் திரைப்படங்கள் வாரம் ஒருமுறை திரையிடப் பட்டன. பிறகு அது கலைவாணர் அரங்கமானது. கலைவாணர் அரங்கமும் போய் அந்த இடத்தில் தலைமைச் செயலகம் கட்டப்பட்டுவிட்டது. அதுவும் போகுமா இருக்குமா, தெரியவில்லை.

பிரபல இயக்குநர்கள் சாந்தாராம், சத்யஜித்ரே போன்றவர்கள் குழந்தைகள் திரைப்படம் எடுக்க ஊக்கமளித்தனர். தமிழ்நாட்டில் திரையரங்குகளில் கூடக் குழந்தைகள் திரைப்படங்கள் திரையிடப் பட்டன. அண்ணி, குழந்தைகள் கண்ட குடியரசு, அன்பின் அலைகள், ஏகலைவன், கலங்கரை விளக்கம், மீனாவின் கடிதம், சத்யமே வெல்லும், மோதி என் தோழன், பொன்மானும் தங்க மீனும் போன்ற குழந்தைகள் திரைப்படங்கள் மறக்கமுடியாதவை. இன்று பெரிய திரையானாலும் சின்னத் திரை யானாலும் குழந்தைகளுக்கென்று பிரத்தியேக படைப்புகளைத் தர யாருமில்லை. முன்பு அவசிய மாக இருந்து இப்போது அவசியமில்லாமல் போய் விட்டதோ?

குழந்தைகளுக்கு நாடகங்கள் அளப்பரிய பயனைத் தருவன. மகாத்மாகாந்தி கூட அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்து உண்மை பேசுதல் மீது பற்றுக் கொண்டார் என்றெல்லாம் கரிசனமாகப் பேசுவோம். 50 ஆண்டுகளுக்கு முன்பு டி.கே.எஸ். சகோதரர்கள் சகஸ்ரநாமம் குழுவினர் எல்லாம் வருடத்திற்கொருமுறை குழந்தைகளுக்கென்று நாடகம் நடத்தினார்கள். குழந்தைகள் நாடகத் திற்கான விழா நடத்திப் போட்டிகள் வைத்தனர். பூவண்ணனின் காவேரியின் அன்பு, கூத்தபிரானின் அன்னை சொல் அமிர்தம், தம்பி சீனிவாசனின் தங்கக் குழந்தைகள், டி.கே.எஸ்.-ஸின் அப்பாவின் ஆசை போன்ற மறக்க முடியாத நாடகங்கள் உருவாயின. இன்று எதுவும் இல்லை. அப்போது பள்ளிக்கூட நாடகங்களும் அதிகமிருந்தன. இப்போது வசதி யுள்ள பள்ளிக்கூடங்களில் தமிழே இல்லை. முத்தமிழில் ஒன்றான நாடகம், இயல், இசையினை விட வலிமை வாய்ந்தது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். நாடகத்தில் காண்பது கல் மேல் எழுத்தாக மனதில் பதிந்து விடும். குழந்தைகள் நாடகம் புறக்கணிக்கப் பட்டுக் கிடக்கிறது என்பதைக் கவலையுடன் பதிவு செய்கிறேன்.

இன்னொரு பக்கம் குழந்தைகளுக்கும், மாணவர் களுக்கும் கூடப் பல்வேறு துறைகளைப் பற்றிய தகவல் களைத் தருவது கட்டுரை நூல்களாகும். ஆராய்ச்சி அறிஞர்கள் நா.வானமாமலை, எஸ்.தோதாத்ரி, பெரியசாமி தூரன், டாக்டர் மு.வ., கல்வி கோபால கிருஷ்ணன் உட்பட பல்வேறு அறிஞர்கள் நல்ல கட்டுரை நூல்களைத் தந்தார்கள். காகிதத்தின் கதை, ரப்பரின் கதை, இரும்பின் கதை, இரயிலின் கதை, காற்றின் கதை, மின்சாரத்தின் கதை என்று அறிவியல் உண்மைகளைக் கதை போல எழுதினார்கள். விலங்குகள், பறவைகள், மரங்கள், மலைகள், கடல் என்று பல்வேறு துறைகளிலும் சிறந்த நூல்கள் அன்று வந்தன. இன்று நிலைமை என்ன? கதை நூல்கள், நிறைய வந்திருப்பது போல் கட்டுரை நூல்கள் வரவில்லை. இணைய தளத்தைத் திறந்தால் ஆயிரம் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன என் பார்கள். இணைய தளத்தின் வாசனையைக் கூட அறியாத குழந்தைகள்தான் தமிழ்நாட்டில் அதிகம். இணையத்தைப் பயன்படுத்துவது என்பது இங்கு ஆடம்பரச் செலவாகத்தான் இருக்கிறது. இருபது, முப்பது ரூபாய் விலைவில் நிறைய கட்டுரை நூல்கள் குழந்தைகளுக்காகத் தரப்பட வேண்டும். குழந்தைகள் கலைக்களஞ்சியம் தமிழில் உள்ளது. இதற்காக பெ.தூரன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். பத்து தொகுதிகளாக வந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. எவ்வளவோ முன்னேற்றங் களும் கண்டுபிடிப்புகளும் வந்துவிட்டன. கலைக் களஞ்சியம் புதுப்பிக்கப்பட வேண்டும். பெ.தூரன் செய்த பணியை மேலும் முன்னெடுத்துச் செல்ல ஒரு முயற்சியும் இல்லை. குழந்தைகள் மேதைகளாகி விடக்கூடாது என்பதில் நாம் விழிப்புணர்ச்சியுடன் இருக்கிறோம். அப்பனுக்கே பாடம் சொன்ன சாமி உள்ள நாடல்லவா இது?

மணவை முஸ்தபா 20 ஆண்டுகளுக்கு முன் தொகுத்தளித்த கலைக்களஞ்சியத்தைப் பற்றிக் குறிப் பிட வேண்டும். தமிழ் மீதும் குழந்தை இலக்கியத்தின் மீதும் பற்றுக் கொண்ட அவர் போன்றோரின் முயற்சிகளை ஆதரிக்கத்தான் ஆளில்லை. தனிப்பட்ட மனிதரே எவ்வளவு செய்திட முடியும்? குழந்தை களுக்காக அறிவியல் நூல்கள் நிறைய உருவாக வேண்டும். அவை மொழிபெயர்ப்பாக இருந்தாலும் பரவாயில்லை. கணினி, ஈமெயில், இணையம், விண் வெளிப்பயணம் பற்றியெல்லாம் நல்ல சிறுவர் நூல்கள் வரவேண்டும். ஈமெயிலைக் கண்டுபிடித்த சிவா அய்யாத்துரை ஒரு தமிழர். ஆனால் ஏழு வயதிலேயே அமெரிக்காவில் படித்து அங்கு வாழ்கிறவர். அவருக்கிருந்த சூழல் தமிழ்நாட்டில் இருந்தால் எத்தனையோ சிவா அய்யாத்துரைகள் இங்கும் உருவாகி இருக்கக்கூடும். மனப்பாடக் கல்வி முறையின் தீமைகளைக் குறைக்க குழந்தை இலக்கியத்தால்தான் முடியும் என்று நான் நம்பு கிறேன். ஆனால் 50 ஆண்டுகளாகக் குழந்தை இலக்கியம் புறக்கணிக்கப்பட்டுக் கிடப்பதைப் பார்க்கும்போது எந்த நம்பிக்கையும் எனக்கில்லை.

குழந்தைகளுக்குக் கதை சொல்வது எப்படி? என்ற நூல், மூத்த குழந்தை எழுத்தாளர் ரேவதி எழுதியது. சமீபத்தில் படித்தேன். பாட்டியிடம் கதை கேட்கும் பாக்கியம் இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு இல்லையே என்ற வருத்தம் மேலிட, அவர் அந்நூலை எழுதியிருக்கிறார். குழந்தைகளுக்குக் கதை சொல்லும் பொறுப்பு இன்று பெற்றோர் களிடமும் ஆசிரியர்களிடமும் வந்து விட்டதாக நான் நினைக்கிறேன். எந்தக் காலத்திலும் குழந்தைகள் கதை கேட்கத் தயாராகத்தான் இருக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்களுக்குத் தான் நேரமில்லை. கதைகளுக்கும் பஞ்சம் வந்து விட்டது. பஞ்சதந்திரக் கதைகள், தெனாலிராமன், மரியாதை ராமன் கதைகள், நாடோடிக் கதைகள், புராண இதிகாசக் கதைகள் இன்றும் இவையே உலா வருவது முகஞ் சுளிக்க வைக்கிறது. இவற்றின் முக்கியத்துவத்தைக் குறைத்துச் சொல்லவில்லை. காலத்தால் அழியா தவை அவை.

50 ஆண்டுகளுக்கு முன் குழந்தை களுக்காக சிறுகதைகள், நாவல்கள் எழுத ஒரு எழுத்தாளர் பட்டாளமே இருந்தது. அன்றுள்ள விளைச்சலையும் இன்றுள்ள கட்டாந்தரையையும், ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. கல்கி கூட சிறுவர்களுக்காக ‘சோலைமலை இளவரசி’ என்ற வரலாற்று நாவல் எழுதியிருக்கிறார். இன்று யாராவது எழுதியிருக்கிறார்களா? சமூகக் கதைகள், மாயாஜாலக் கதைகள், தேவதைக் கதைகள், துப் பறியும் கதைகள் என்று சிறுவர்களுக்காகப் பலரும் போட்டி போட்டுக்கொண்டு கதைகள் எழுதிய காலம் இருந்தது. இன்று அத்தி பூத்தாற்போல் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கிறுகிறு வானம், சுஜாதா எழுதிய பூக்குட்டி, லூர்து எஸ். ராஜ் எழுதிய தொலைந்த மணியார்டர், நான் எழுதிய நம்பிக்கை இல்லம் போன்று ஒரு சில நாவல்களே வந்துள்ளன. ஆனால் அன்று அழ.வள்ளியப்பா, வாண்டுமாமா, பூவண்ணன், ரேவதி, ஆர்வி, தங்க மணி, துமிலன், கே. ஜெயலட்சுமி, முல்லை தங்க ராஜ், தமிழ்வாணன், புவனை கலைச்செழியன், மாயன், சௌந்தர், எத்திராஜன், நெ.சி.தெய்வசிகாமணி ரத்னம், வை.கோவிந்தன், முல்லை முத்தையா, ராஜா சூடாமணி, கே.பி.நீலமணி, கி.மா.பக்தவச்சலன் பூரம், பூதலூர் முத்து, கூத்தபிரான், ரா.மாரிமுத்து, ர.திரு நாவுக்கரசு, மாயூரன், பூவை அமுதன், ராஜி, கொ.மா. கோதண்டம், ஏஜிஎஸ் மணி, பி.வி.கிரி, குழ. கதிரேசன், அகிலன் கண்ணன் என்று ஒரு பட்டாளமே குழந்தை களுக்காக எழுதியது.

இன்று யூமா.வாசுகி, வேலு சரவணன், ச.முருகபூபதி, ச.தமிழ்ச்செல்வன், கூத்தலிங்கம் என விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டும் குழந்தை இலக்கியம் என்ற தளத்தில் தீவிரமாக இயங்கி வருகின்றனர்.

ஆக, ஒரு பட்டாளமே எழுதிக் குவித்த பிறகு புதையல் போல் குழந்தை இலக்கியம் நம்மிடம் இருக்கும் என நினைப்பீர்கள், பழங்காலச் செல் வத்தை எந்த அளவு நாம் பாதுகாப்போம் என்பது தான் தெரிந்த விஷயமாச்சே, அதுவும் தமிழ்நாட்டில் வெளிவரும் நூல்கள் 80ரூ மறு பதிப்பைப் பார்ப்ப தில்லை. இலட்சக்கணக்கான மாணவர்களைக் கொண்ட தமிழ்நாட்டில் 1000 பிரதிகள் விற்கத் தலைகீழாக நிற்க வேண்டும். தரமான முறையில் குழந்தை இலக்கிய நூல்களைத் தயாரிக்கவும், மறு பதிப்பு செய்யவும் எந்தப் பதிப்பகத்திற்குத் துணிச்சல் வரும்?

நேற்று இப்படி இருந்தது என்று சொல்வதன் மூலம் தமிழில் குழந்தை இலக்கியத்தின் இன்றைய நிலை என்ன என்பதை ஜாடை மாடையாகச் சொல்லி விட்டேன்.

குழந்தை இலக்கியம் மேலும் மேலும் செழித்து வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் இருக் கிறார்கள். அவர்களையெல்லாம் ஒன்று சேர்த்து சில முயற்சிகளை (முன்னோர்களுக்கு இருந்த அர்ப் பணிப்பு உணர்வுடன்) செய்தால் போதும்.

என்ன முயற்சிகளைச் செய்வது, அதற்கென்ன வழிமுறைகள் என்பதையெல்லாம் யோசிக்க வேண்டும். அத்தகைய யோசனைகளைப் பரிமாறிக் கொள்ள உசிதமாக ஒரு மேடையாகக் குழந்தை எழுத்தாளர் வலைப்பூ (http://kulanthaieluthaalar.blogspot.in/) உதவும்.

நீரின்றி வாடும் பயிர்போல் தமிழில் குழந்தை இலக்கியத்தின் நிலை உள்ளது. வாருங்கள், காப்போம்!

Pin It